எங்க ஊரு காவல்காரங்கள்


அகிரா குரொசவா ஜப்பானிய சினிமாவில மட்டுமில்ல, உலகளாவிய சினிமா அரங்கிலும்அறியப்பட்ட ஒரு தலை சிறந்த இயக்குனர். ( புண்ணியவான் தமிழ் நாட்டில பிறந்திருந்தால் புரட்சி இயக்குனர் பட்டமும் எதாவது சந்துக்குள்ள இருக்கிற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் குடுத்திருக்கும்)
சில காட்சிப்படுத்தல்களை சினிமாவின் மூலம் இன்னும் அழகாகக் காட்டமுடியும். குறிப்பிட்ட நிமிடங்களே ஓடக்கூடிய சினிமாவை நச்சென்று காட்டக்கூடிய காட்சியமைப்பின் மூலம் சொல்ல வந்த விஷயத்தின்ர ஆழத்தைக் காட்டமுடியும். இதை கமரா உத்தி மற்றும் திரைக்கதை அமைப்பு மூலம் சாத்தியப்படுத்தலாம். ஒரு மேடை நாடகத்தில் இருந்து சினிமா வேறு படுவது இதில் தான். ( இயக்குனர் விசு சினிமாவையே மேடை நாடகம் ஆக்கிய பெருமைக்குரியவர்).

பக்கம் பக்கமாகப் பேசக்கூடிய காட்சிவடிவத்தைக் சில நிமிட கமராக் கோணம் மூலமும் கமராவினுடைய மிகச்சரியான இயக்கம் மூலமும் காட்சிப்படுத்தலை சினிமாவுக்குள்ள புகுத்தியவர் தான் இந்த அகிரா. இன்றைய மணிரத்னம் படங்கள் இவரின்ர உத்தியத் தான் எடுத்து அதிக அளவில் பயன்படுத்துகின்றார். (அகிராவை போன்ற முன்னோடிகளைத் தெரியாத சாமான்யன்கள் தமிழ்நாட்டுப் படங்களை அடிக்கடி ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்வான்கள்)

இந்த உத்தியின் ஒரு வடிவத்தை சின்ன உதாரணம் மூலம் சொல்லுறன்.
வில்லன் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதாக காட்சி என்றால் அதை உருவகப்படுத்த ஒரு புள்ளி மானை ஒரு சிறுத்தை கோரமாகக் கடித்து உண்பது திரையில் வரும்.
இது ஒரு சாதாரண உதாரணம். இது போல் பல உத்திகளைக் அறிமுகப் படுத்திய புண்ணியவான் இந்த அகிரா. 1990 ஆம் ஆண்டில இவருக்கு சிறப்பு ஓஸ்கார் விருதும் கிடைச்சது.

அண்மையில் அகிராவின் “Seven Samurai” (Shichinin no samurai, 1954 Japan 200mins) என்ற படம் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது.சமுராய் என்பதற்கு ஜப்பானிய மொழியில் “போர் வீரன்” என்றும் விளக்கம் வரும்.

1954ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் 16ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் நகரும் கதை இதுதான். ஜப்பானிய விவசாயக் கிராமம் ஒன்று வழிபறிக் கொள்ளையர்களின் தொடர்ச்சியான சூறையாடல்களால் தவிக்கின்றது. தமது உடைமைகளையும், பயிர்ச்செய்கைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கும் அந்த விவசாயிகள் இனியும் இது தொடர்கதையாகக் கூடாது என்று முடிவு எடுத்து ஊர்ப் பெரியவரைச் சந்திக்கிறார்கள். இவரின் ஆலோசனைப்படி (Find hungry samurai) சமுராய் அதாவது காவல் வீரர்களை அமர்த்திக்காவல் காப்பது என்று முடிவு செய்யப்பட்டு தகுந்த தலைவனைத் தேடுகின்றார்கள். மிகுந்த சிரமங்களின் பின் தலைவன் ஒருவனைக் தேர்ந்தெடுத்து அவனோடு ஏழு பேராக இணைந்து அந்த ஊரைக் காப்பாற்றக் கொள்ளையர்களைத் துரத்தியடிப்பது தான் கதை.

சாதாரண மசாலா சாயம் தோய்ந்த கதைக் கருவாக இருந்தாலும் 50 களில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்து அகிரா நன்றாகவே இயக்கியிருக்கிறார். இப்ப்டத்தைப் பார்க்க முன் அந்தக் கால கட்டத் தொழில்நுட்பத்தை மனதில் வைத்திக்கொண்டு தான் ரசிக்கவேண்டும்.

ஊரைக்காவல் காக்கும் சமுராய்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நல்ல சாப்பாடு மட்டுமே. இப்படத்தின் முதல் பாகம் கொள்ளையர்களால் ஊர் மக்கள் படும் தொல்லையும், தகுந்த சமுராயைத் தேடுவதிலுமாகக் கழிகின்றது.
அடுத்த பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுராய்களின் தலைவன் தன் வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, தாக்குதல் நடவடிக்கைகள் என்று கழிகின்றது.
ஊர்மக்களுக்கும் சமுராய் வீரர்களுக்கும் உள்ள இடைவெளியும் அந்த இடைவெளி, என்ன தான் கொள்ளைக்காரர்களைக் கொன்று சமுராய் வீரர்களை இழந்தாலும் தொடர்கின்றது. படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த சமுராய் வீரர்களின் புதைகுழிகளில் அசைந்தாடும் தம் கொடியைப் பார்த்த வண்ணம் சமுராய்களிள் தலைவன் சொல்வான். ” இந்த ஊர் விவசாயிகள் இப்போது வென்று விட்டார்கள் நாம் தோற்று விட்டோம் என்று. ( அவன் சொல்லும் தோல்வி, இந்த ஊர்மக்கள் சமுராய்களோடு நட்புப்பாராட்டாததைக் குறிக்கின்றது). நெஞ்சம் கனக்கும் முடிவு அது.

ஆரம்பத்தில் கூறியது போன்று அகிராவின் திறமையான இயக்கத்தை காட்டப் பல காட்சிகள் உள்ளன. எந்த இடத்தில் காட்சியை மையப்படுத்த வேண்டும், பொருத்தமான இசை எங்கே வரவேண்டும் போன்ற சந்தர்ப்பங்களும், ஒரு சாதாரண ஜப்பானியக் கிராமம் ஒன்று அதன் இயல்புகெடாமல் காட்டப் படுவது மற்றும் சண்டைக் காட்சிகளின் வீரியத்தை வெளிப் படுத்த கமராவை எப்படிக் கையாள வேண்டும் என்றும் இப் படம் பாடம் எடுக்கின்றது.

படத்தின் ஆரம்பக்காட்சியமைப்பு இவ்வாறு உள்ளது.
கொள்ளையர்கள் ஊருக்கு வருவதைக் கிராமவாசி ஒருவன் காண்கின்றான். தொடர்ந்து வரும் காட்சிகளில் திரளானோர் கூடி நின்று என்ன செய்வது என்று கூடிப் பேசுவது தொலை தூரக் காட்சியமைப்பாகவும் (long shot)
தொடந்து காட்சி மாறி இரண்டு மூன்று பேர் கூடிப் நின்று பேசுவது அண்மித்த காட்சியாகவும் ( close shot) திடீரென மிக நெருக்கமான காட்சிபடுத்தலாக ஒருவனை மையப்படுத்திக் (close up) கமரா நகரும் போது “இதற்கு ஒரே வழி இந்தக் கொள்ளையர்களைக் கொல்வது” என்று அவன் சொல்வதுமாக அமைகின்றது. இதைப் போல எந்தத் சூழ்நிலைக்கு எந்த முறையில் கமராவின் கோணத்தை அமைப்பது என்று பல காட்சிகளைக் காட்டலாம்.

1954 venice film festival இல் silvar lion மற்றும் கலையமைப்பு & அரங்க அமைப்புக்காகவும், உடையலங்காரத்திற்காகவும் இரண்டு ஒஸ்கார் விருதையும் எடுத்தது மட்டுமன்றி திரைப்படம் எடுக்கும் கலாரசிகர்களுக்கு இன்றும் பால பாடமாகத் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் இன்னும் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்தப் படம் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்ததோடு
பசுபிக் பிராந்திய நாடுகளில் ஜப்பான் மேற்கொண்ட முற்றுகை,நேச நாடுகள் அணியின்ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாடு அதைத் தொடர்ந்த யுத்த முன்னெடுப்புகள் இதனால் சிதைந்த இந்த நாடு தன் பண்பாட்டு விழுமியங்களையும் தேசப் பற்றையும் மீண்டும் தூக்கி நிறுத்த எழுந்த படைப்பாகவும் திரையுலக வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றது.
சிதைந்து போன தன் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வரு குடிமகனும் சமுராயாக மாறவேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இப்படத்தைப் பார்க்கலாம்.
அதனாலோ என்னவோ இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமது ஈழப் போராட்டத்தின் தொடரும் வரலாறும் நினைவில் வந்து மறைகின்றது.
குறிப்பாக சமுராய் வீரர்கள் முதலில் தம்மை அடையாளப் படுத்தக் கொடியொன்றைத் தயார்படுத்துவது, களத்தில் பயிற்சி எடுப்பது, எதிரியைத் தேடிச் சென்று வலிந்திழுத்துத் தாக்குவது, கரந்தடிப் ப்டைத் தாக்குதல் என அவை எம் களச் சூழலையும் நினைவுபடுத்துகின்றன.
இந்த நேரத்தில எனக்கு ஞாபகத்துக்கு வந்த இரண்டு சம்பவங்களையும் சொல்லுறன்.
86 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈழத்தில எல்லா இயக்கக்களும் களத்தில் இருந்த நேரம் அது.
எங்கட அயலூர் தாவடியில் சிவராசா வீட்டுக்குப் பக்கத்தில தமிழ் ஈழ இராணுவத்தின்ர முகாம் இருந்தது. இலங்கை அரசாங்கத்தின்ர விமானம் இந்த முகாமைக் குறிபார்த்த குண்டு பக்கத்துத் தோட்டதில நின்று விளையாடிய இருண்டு பாலகரைப் பரிதாபமக் கொன்று தன் பசியை அடக்கியது. ஈழ வரலாற்றில முதல் தடவையா போட்ட விமானக் குண்டு அது தான். முதல் கோணம் முற்றும் கோணல் போல இவன்கள் போட்ட குண்டுகள் எப்போதுமே பொது சனத்தைத் தான் பதம் பார்க்கும்.

இந்தக் காலப் பகுதியில தாவடிச் சுடலைப் பக்கமாக தோட்ட வெளிப்பக்கமும் துரை வீதி முடக்கில இராசநாயகம் அண்ணையின் பவர் லூம் பக்கமாவும் கிறனேற் குண்டுடன் போராளிகள் ஊரைக் இரவிரவாக் காவல் காத்த காலம் உண்டு. ஒருமுறை மானிப்பாய் பக்கம் ஹெலி ஒன்று இறங்கிப்போனதும் ஒரு காரணம்.

ஒருநாள் காலை துரைவீதி முடக்கில இரவில் சென்றிக்கு நின்ற போராளி தவறுதலாகக் கிறனேற்றின் கிளிப் கழன்று அந்த இடத்திலேயே இறந்தது இன்றும் மனச இறுக்குது.

இன்னொரு சம்பவம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரேமதாசா காலத்தில யுத்தம் ஆரம்பமான நேரம். ஊரில் மின்சாரம் இருந்தது. சுன்னாகம் மின்வழங்கியில இருந்து அயலூர்களுக்கு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் சில விஷமிகள் ஊரில் இருக்கும் உபமின்வழங்கிகளில் இருக்கும் ஒயிலைத் திருடுவதற்காக அவற்றை உடைத்துத் திடுடி விடுவார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக மின் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
இதைத்தடுக்க வேண்டும் என்றால் இரவில் வீதிவலம் வந்து இந்த மின்வழங்கிகளைக் காவல் காபபது என்று எங்களூர் கோயிலடியில் கூடும் பெடியன்கள் முடிவு செய்தார்கள். விழிப்புக் குழுவாக ஒவ்வோர் இரவும் ஊர் மக்களின் வீட்டில் மின்சாரம் வருவதற்காகத் தாங்கள் விழித்திருந்து காத்தார்கள். இதற்கு அவர்களுக்கு கிடைப்பது சுழற்சி முறையில் வீடுகளில் இருந்து சூடான தேத்தண்ணியும் வடையும் தான்.
கொஞ்சக் காலம் கழிந்த பின் சுன்னாகம் மின்வழங்கி நிலையம் இலங்கை அரசாங்கதின்ர குண்டுகள் முற்றாகத் தாக்கியபின் உப மின்வழங்கிகளும் செயல் இழந்தன. கோயிலடி நண்பர்களின் விழிப்புக் குழுவுக்கும் வேலையில்லாமல் போனது.

இந்த இரண்டு சம்பவங்களை இப்போது நினைத்தால் பெருமிதம் தான் வருகுது. ஊர் வாழத் தன்னை அர்ப்பணிக்கும் எங்கட சகோதரர்களின் அந்த செயற்பாடு தான் இன்னும் அந்த மண்ணை ஈரப்படுத்துது.

பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்

போன கிழமை பல்லின மக்களுக்கானதொலைக்காட்சி ஒண்டில அதிகாலை ஒரு மணிக்கு பிரபல இயக்குனர் சத்யஜித் ரேயின் “பதேர் பாஞ்சாலி” என்ற படம் போடுவதாகச் செய்தி கிடைச்சது.

பொதுவா இந்த தொலைக்காட்சியை இரவு பத்து மணிக்குப் பின்னால பார்ப்பது அறிஞ்சால் மெல்பனில இருக்கிற என்ர கூட்டாளி தாஸ் கொடுப்புக்குள்ள சிரிப்பான். ஏனெண்டால் பத்து மணிக்கு மேல அவங்கள் போடுற படங்கள் மொழி வித்தியாசமில்லாம வெளிப்படையான பாலியல் காட்சிகளை வாரி இறைக்கும். இந்தமாதிரி விசயத்தில பிரென்சு படம் என்றாலும் சீனப் படம் என்றாலும் அவங்கட கொள்கை ஒண்டு தான்.

இருந்தாலும் அத்தி பூத்தப் போல இப்பிடி ” பதேர் பாஞ்சாலி” போலப் படங்களும் வருவதுண்டு.
நீண்ட நாளாத் தமிழ்ப் பலசரக்கு கடையள்ள “மெட்டி ஒலி”, ” அண்ணாமலை” இத்தியாதி கசற் மலைகளுக்க தேடினாலும் கிடைக்காத இப்பிடியான படங்களைப் பார்க்க இதுதான் சந்தர்ப்பம் எண்டு, படத்தைப் பதிவு பண்ணி அடுத்த நாள் பார்க்க முடிஞ்சுது. சரி இனிப் படம் எப்பிடி எண்டு பார்ப்பம்.

1955 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி” வங்காள மொழியில் வந்தது. பாட்டு, சண்டை, குழு நடனம் அல்லது குலுக்கல் டான்ஸ் போன்ற சராசரி இந்திய மசாலா சினிமாச் சமையலுக்குத் தேவையான ஒரு ஐட்டமும் இதில கிடையாது ( அடச் சீ, இவ்வளவும் இல்லாமப் படம் பாக்கோணுமோ எண்டு தாஸ் முணுமுணுப்பது போல ஒரு பிரமை). படம் 115 நிமிசம் கறுப்பு வெள்ளையில ஓடுது.
பதேர் பாஞ்சாலி என்பதன் தமிழ் விளக்கம் ” சின்னஞ் சிறு வீதியின் பாட்டு” (Song of the Little Road)
சரி, இனி இப்படத்தின் கதையைச் சொல்லுறன்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சூழலில் ஒரு மிகப் பின் தங்கிய பெங்காலிக்கிராமம்.
அந்தக் கிராமத்தில் வாழும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம், குடும்பத்தலைவன் ஹரிகர் , அவன் மனைவி சர்பஜயா, மூத்த மகள் துர்கா, இளையவன் அபு, இவர்களின் வறுமை வருமானத்திலும் பங்கு போடும் ஹரிகரின் வயதான சகோதரி. இவர்களின் ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ர்புகள், ஏமாற்றங்கள் தான் கதைக் கருவை ஆக்கிரமிக்கிறது.

தன் கணவன் ஹரிகரின் அப்பாவித்தனத்தால், ஏமாற்றப்பட்டு தம் சொத்தை இழக்கும் இயலாமை,
ஏமாற்றிய குடும்பம் வைத்திருக்கும் தம் காணியில் மகள் துர்கா கொய்யாப்பழம் திருடுவதும், வீட்டுக்காரி வந்து கூச்சலிடும் போது மகளுக்காகப் பரிந்து பேசுவது, பின் அவள் போனதும் துர்க்காவைத் தண்டிப்பது, கணவன் வந்ததும் தம் இயலாமையை நொந்து கொள்வது என்று சர்பஜா பாத்திரத்தில் வரும் கருணா பனர்ஜி ஒரு சராசரி இந்திய அல்லது ஈழத்துக் குடும்பத்தலைவியை நினைவு படுத்துகிறார். குடும்பத்தலைவன் ஹரிகர் இந்தக்குடும்பத்தை விட்டு அடிக்கடி வேலைதேடி நாட் கணக்கில் அலையும் போது தான் ஒருத்தியாக அவள் போராடுவதும் வெகு இயல்பு.

கொய்யாப் பழம் திருடுவது, தாயிடம் எவ்வளவு ஏச்சும், அடியும் வாங்கினாலும் தன் பால்யப் பருவத்துக்கே உரிய ஆசைகளை அடக்க முடியாத துர்க்கா பாத்திரம். திருடிய கொய்யாப்பழத்தை அப்படியே தன் முதிய மாமியாரிடம் (அப்பாவின் சகோதரி) கொடுப்பதும், மாமியார் தன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டுப் போகும் போது கையில் பிடித்துக்கூட்டி வருவது, ரயிலைக் காட்டும் படி கேட்ட தன் தம்பியின் கைபிடித்து நெல் வயல் வெளியே கொண்டு காட்டுவது என்று அவளின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.

பிபூதி பூஷன் பானர்ஜி இன் மூலக்கதையும், ரவி ஷங்கரின் இசையும் படத்திற்கு மிகப்பலம்.
செல்வந்த வீட்டில் களவான முத்து மாலையைத் துர்கா தான் திருடினாள் என்று பழிச்சொல் வரும் போது அவளுக்காக நாமும் பரிந்து பேசத் தோன்றுகின்றது. ஆனால் அவள் இறந்த பின்னர் அவள் தம்பி அபு தற்செயலாகக் காணுவதும், பின் யாரும் பார்க்காமல் இருக்க அதை நீரோடையில் வீசுகின்றான்.
அந்தக் காட்சி காட்டப்படும் போது, முத்து மாலை பொத்தென விழுவதும், சிறிய சலசலப்பின் பின் சலனமற்றுத் தோன்றும் நீரோடை ஒரு அழகான கவிதை

.இந்தப் படத்தைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனைக்கு வந்தது. நல்ல படைப்பாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் பரிமாணங்களைச் செயற்கை இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். தோல்விகண்டவர்கள் பலர் மிதமிஞ்சிய செயற்கையைக் கொடுத்து அடையாளம் இழந்து போனார்கள்.
ஆக, தன் படைப்பில சுயத்தை இழப்பவன் தன் முகவரிய இழக்கிறான்.

எல்லாம் இழந்து தனிமரமாக இருக்கும் குடும்பத்தலைவியும், மகன் அபுவும் வேலை தேடி உழைத்த பணத்துடன் வரும் கணவன் வந்ததும் ஊரைவிட்டு போக முடிவெடுக்கும் போது தான் ஒதுங்கி இருந்த அயலவர்கள் உதவுவதுபோல வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வந்த துன்பச் சறுக்கல்களோடு பெனாரஸ் நகர் நோக்கி புதிய வாழ்க்கை ஒன்றுக்காக அவர்களின் கட்டி வண்டி பயணிக்கின்றது.

விமர்சனத்தின் இறுதிக்கு வரும் முன்னர் இன்னொரு பாத்திரத்தையும் பார்ப்போம்.
அது படத்தில் வரும் வயதான கிழவி (துர்காவின் தகப்பனின் சகோதரி) ஊனமான கண்ணுடன் இடுக்குப் பார்வை பார்த்துக்கொண்டே தன் தம்பி வீட்டில் களவெடுத்துத் தின்பதும், தம்பியின் மனைவியின் வசவுகளைக் கேட்டுப் பழிப்புக்காட்டுவதும், கோபித்துக்கொண்டு அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு வீட்டில் அடைக்கலம் போகும் போது ” கொஞ்ச நாளைக்குத்தான்” என்று இரஞ்சுவதும் மிக இயல்பு. சண்டி பாலா தேவி என்ற முதுபெரும் நடிகை சிறப்பாகவே அதைச் செய்திருக்கிறார்.

தம்பியின் மனைவி துரத்திய போதும் அவர்களுக்குப் பிள்ளை பிறந்த போது தன் வைராக்கியத்தையும், அவமானத்தையும் மூட்டை கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல், மீண்டும் வந்து குழந்தையை கொஞ்சுவதும், தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் நைந்து போன சேலையைப் போல கேட்பாரற்று காட்டில் இறப்பதும் நம் இதயத்தை ஊசியால் குத்துவது போல…
தமது அந்திம காலத்தில் சொந்தங்களை இறுகப் பற்றி வாழ நினைக்கும் முதுமையும்
அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளாத சமுதாயமும் ஒரு சக்கரம் போல. அதே நிலை இவர்களுக்கும் இவர்களின் முதுமையின் விளிம்பில் வருவது தவிர்க்க முடியாத உலக நியதி.

இந்தப் படத்தில் வரும் வறட்டு வைராக்கியம் உள்ள அந்தக் கிழவிப் பாத்திரத்தைப் பார்த்த போது என் பெரிய மாமியின் குணாதிசயம் நினைவுக்கு வந்தது.
என்ர அப்பாவின் மூத்த சகோதரியான அவர் நான்கு இளைய சகோதரிகளின் வாழ்வுக்காக அப்புவுடன் சேர்ந்து தன் இளமையில் இருந்தே தோட்ட வேலைகளிலும், வறுமையின் போராட்டத்திலும் பங்கு போட்டவர். தன்ர திருமண வாழ்விலையும் குறுகிய கால அனுபவம் தான் அவவுக்குக் கிடைச்சது. மல்லிகைப் பூ வாசனைய விட அவர் அதிகம் மணந்தது எங்கட தோட்டத்தான் கோடா போட்ட புகையிலையாத் தான் இருக்கும். அவவின்ர வயதில முக்கால்வாசிப் பாகம் ஆச்சியைக் (அவரின் அம்மா)
கவனிப்பதிலேயே கழிந்தது. இப்படியான தொடர்ச்சியான போராட்டமும், வாழ்வின்ர நெருக்கடிகளும் அவரை ஒரு போர்க்குணம் மிக்க மனுசியாக மாற்றி விட்டது.
நான் ஊரில் இருந்த காலத்தில ஆச்சி வீட்டை போக இலேசான பயம் எப்பொழுதும் அடி மனசில இருக்கும். தப்பித் தவறி ஏதாவது என் சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களைச் செய்தால் போதும், ” இனி இஞ்ச ஒருத்தரும் வரத்தேவேல்லை” என்று தொடங்கி வார்த்தைகள் அனல் பறக்கும். தடுக்க வரும் ஆச்சிக்கும் ” ஆச்சி நீ சும்மா இரணை” என்று தொடங்கி சரமாரியான சொல் கணைகள் வந்து விழும். என்ர அப்பாவுடன் இடைக்கிடை அவருக்கு வரும் கோபதாபங்களிலும் பலிகடா நாங்கள் தான். ஆக மொத்ததில் என்ர இளமைப் பிராயத்து மன விம்பத்தில ஒரு பயங்கரமான இடம் அவருக்கு இருந்தது.

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. ஆச்சியும் போய்விட்டா.
கொழும்பில் இருந்த 2 வருசங்களையும் புலம் பெயர்வில் 10 வருசங்களையும் தின்றுவிட்ட காலங்களையும் கடந்து இந்த ஆண்டு ஊருக்குப் போனேன். பெரியமாமி எப்படி இருப்பா, இப்பவும் அப்பிடியா என்று மனதுக்குள்ள நினைச்சுக்கொண்டு ஏஷியா பைக்கை தாவடியை நோக்கி மிதித்தேன்.

ஆச்சி வீடுப் படலையைத் திறந்தேன்.

“என்ர அப்பு வந்திட்டானோ” என்று ஒரு குரல் கேட்டது.
எட்டிப் பார்த்தேன். காலம் கொடுத்த பரிசான வில் போன்ற கூன் முதுகுடன் என் பெரியமாமியே தான்.
அவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து வரவா என்று கேட்பது போல இருந்தது.
என்ர கன்னத்தைத் தடவி ஒரு குழந்தையைப் போல அழகு பார்த்தார்.
என்னை அந்த மண் திண்ணையில் இருத்தி, தளர்ந்த அவரின் நரம்பு விழுந்த கை என்கையைப் இறுகப் பிடித்துக் கொண்டது. என்ர வெளிநாட்டுப் புதினங்களை கேட்கும் பாவனையில் தன் பாவனையை ஏற்படுத்திக்கொண்டார். என் உள் மனதுக்குத் தெரியும் அவர் என்னுடைய புதினங்களை கேட்பதை விட என் அருகாமை தான் அவருக்குத் தேவைப்பட்டது.
” போட்டு வாறன் பெரிய மாமி” என்ற போது ” ஓமப்பு, நல்லா இரு மேனை”என்று அவரின் உதடும் ” போகாதை” என்பது போல அவரின் மனம் சொல்லுவதைக் கண்ணும் வெளிப்படுத்தியது.

முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.

வாழ்க்கைப் பயணம் என்பது ஒரு பதேர் பாஞ்சாலி, அதாவது எங்கட எண்ணங்கள் போட்ட சின்னஞ்சிறு பாதையில் வரும் பாட்டு அது.

தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கைய தொடர்ந்து இடம்பெயர்ந்தவர்களில் தேவராசா அண்ணர் குடும்பமும் ஒன்று. எங்களூர் கார்த்திகேசு அண்ணர் மகள் கலியாணம் கட்டி கனடா போனவுடன் அவவுக்கு சீதனமாக் கிடைச்ச வீடு வெறுமையாக கிடக்கவும் அதில் குடியேறினார்கள் தேவராசா அண்ணர் குடும்பம். அவருக்கு மூண்டு பிள்ளைகள், மூத்தவள் படிப்பில் படுசுட்டி, எங்களூர் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் அவள் சேர்ந்த நாள் முதல் படிப்பிலும் பேச்சுப் போட்டிகளிலும் அவள் தான் முதலிடம். தன் தாயின் முன்னால் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கு பயிற்சி எடுப்பது இப்போதும் என்ர காதில கேட்குது.

இரண்டாவது பிள்ளை லாவண்யன் அவனுக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் எங்கட வைரவர் கோயில் பூசைக்கு பின்னேரம் ஆயத்தமாகும் போது அவன் தான் கூடமாட ஒத்தாசை செய்வது வழக்கம். கூட்டுவதில இருந்து தண்ணீர் கொன்டுவருவது, என்னோடு சேர்ந்து பஜனை பாடுவது எண்டு அவன் பங்கை செய்வான்.
அவர்களில் கடைக்குட்டி சரியான வெக்கறை, அப்போது அவளுக்கு மூண்டு வயது இருக்கும் மதிலுக்கு பின்னால ஒளிச்சிருந்து தன்ர அண்ணன் என்னோடு வைரவர் கோயில் பூசை செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பாள். கிட்டவந்து எங்களோட சேர்ந்து தானும் இணைய அவளுக்கு விருப்பம் இருப்பதை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.

தாய்க்காறி குளிப்பட்டும் போது சோப்பு நுரை கண்ணில பட்டு அவள் கத்தும் கத்து ஊரையே கூட்டிவிடும்.
தேவராசா அண்ணையும் அவருடைய மனைவியும் சண்டை பிடிச்சு ஒரு நாள் அறியன்.
பிழைப்புக்காக சைக்கிள் திருத்தும் கடை வச்சிருந்தார்.

இலங்கை ஆமி 95ஆம் ஆண்டு பிளேனால குண்டு போடேக்க அவர்கள் வீட்டுக்க தான் பதுங்கி இருந்தவையாம். குண்டு இலக்காக இவர்கள் வீட்ட தான் பதம் பார்த்தது. முழுக்குடும்பமும் அழிஞ்சு போச்சு.

2005 மார்ச் கடைசியில பத்து வருடம் கழிச்சு ஊருக்கு போனேன்.
தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.
அதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கி பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.
” பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே” எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.

வணக்கம்! வாருங்கோ…!


கானா பிரபாவின் “மடத்து வாசல் பிள்ளையாரடி” தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.
பதின்ம வயதுகளின் விளிம்பில்
இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ