தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் “செம்மீன்”.
தகழி சிவசங்கரம்பிள்ளை, மலையாள இலக்கிய உலகில் நல்ல பல படைப்புக்களை அளித்தவர், 1929 இல் சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு இவர் அறிமுகமாகிப் பின்னர் நாவல்கள் பலவற்றையும் அளித்தவர். அதில் ஒன்று தான் செம்மீன் என்ற 1956 ஆம் ஆண்டில் இவர் எழுதிய நாவல். இந்நாவல் பின்னர் ராமு கரியத் இன் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்தது. ஜனாதிபதியின் தங்கப்பதக்கததைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சிறப்பையும் இப்படம் தட்டிக்கொண்டது.
கதை இதுதான், செம்மங்குஞ்சு என்ற எழை முதியவனுக்கு உள்ள ஆசை சொந்தமாக ஒரு படகும் வலையும் வைத்திருக்க வேண்டும் என்று. அவனின் அந்த ஆசைக்கு உதவுகிறான் பரிக்குட்டி என்ற இளம் முஸ்லிம் வியாபாரி, ஆனால் செம்மங்குஞ்சு பிடிக்கும் மீன்களைத் தனக்கே விற்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு, செம்மங்குஞ்சுவும் அதற்கு உடன்படுகின்றான்.
இதற்கிடையில் செம்மங்குஞ்சுவின் மகள் கருத்தம்மாவிற்கும் பரிக்குட்டி என்ற அந்த இளைஞனுக்கும் காதல் வருகின்றது. கருத்தம்மாவின் தாய்க்கு இது தெரிந்தும் தமது வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்று எச்சரிக்கின்றாள். அதுபோலவே நிகழ்வுகளும் நடக்கின்றன. செம்மங்குஞ்சு தான் உறுதியளித்தது போல் நடவாமல் தான் பிடித்த மீன்களை பரிக்குட்டிக்கு விற்காமல் வேறு ஆட்களுக்கு விற்கின்றான். பரிக்குட்டி இதனால் நஷ்டமடைகின்றான். பரிக்குட்டி கருத்தம்மா காதல் பல சோதனைகளைச் சந்திக்கின்றது. செம்மங்குஞ்சு ஊருக்குப் புதிய வருகையான அனாதை பழனியை கருத்தம்மாவிற்கு மணம் முடித்து வைக்கிறார்கள். தன் காதலியை இழந்த துயரமும், வியாபாரத்தில் பணமுடையும் கொள்ளும் பரிக்குட்டி நலிந்து போகின்றான்.
கருத்தம்மாவின் தாய் நோயில் விழுந்து மரணத்தைத் தழுவுகின்றாள். தனிக்குடித்தனம் போன கருத்தம்மா தன் கணவனோடே இருந்து நல்ல மனைவியாகப் பணிவிடை செய்கின்றாள். இதனால் தன் பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாக விலகி வாழ வேண்டிய நிலை அவளுக்கு.
இருந்தாலும் பரிக்குட்டி-கருத்தம்மாவின் காதலைப் பற்றி மீண்டும் பேசிக் கருத்தம்மாவின் கணவன் பழனியை வம்பிழுக்கின்றது அந்த மீனவ சமுதாயம். ஊர் என்ன சொன்னாலும் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளாது அன்பாக இருக்கும் பழனி ஒரு சந்தர்ப்பத்தில் நிலை தவறி கருத்தம்மா மீது தன் சந்தேகப் பார்வையைக் கொள்கின்றான். தன் காதலையும் பிறந்தகத்தையும் இழந்து தன் கணவனே எதிர்காலம் என்றிருந்த கருத்தம்மா இதனால் துவண்டு விடுகின்றாள்.
நீண்ட நாளின் பின் வந்த எதிர்பாராத பரிக்குட்டி கருத்தம்மா சந்திப்பு மீண்டும் அவர்களின் காதலைப் புதுப்பித்து, அந்தச் சந்தோஷ தருணம் அவர்களின் மரணமாக விடைகொடுக்கின்றது. இறப்பில் ஒன்று சேர்கிறார்கள் அவர்கள். அதே தருணம் கடலுக்குச் சென்ற பழனி சுறா மீனுக்குத் தன்னைக் காவு கொடுக்கின்றான்.
பரிக்குட்டியாக மது (தர்மதுரை படத்தில் ரஜனியின் தந்தையாக வந்தவர்), பழனியாகச் சத்யன் (மிகவும் பிரபலமான நடிகர் விபத்தில் இறந்துவிட்டார்), கருத்தம்மாவாக ஷீலா ( சந்திரமுகி பட வில்லி.. ஹிம் எப்படியிருந்த ஷீலா) என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் குழு. இப்படம் விருதுக்குப் பொருத்தமானது என்பதோடு மட்டும் நின்று விடாது மலையாளம் கடந்து மற்றய மொழி ரசிகர்களையும் கவர்ந்ததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.முக்கியமாக ஒரு நல்ல கதையும் அதன் இயல்பு கெடாமல் எடுக்கத் தெரிந்த தொழில்நுட்பக் குழுவும் இதன் முதற்படி. தகுந்த நடிகர் தேர்வு அடுத்தது.
காதலின் வீழ்ந்து கருத்தமாவைத் தேடுவதாகட்டும், இழந்த காதலை நினைத்து மருகுவதாகட்டும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சஞ்சலப்படுவதாகட்டும் பரிக்குட்டி பாத்திரமான மது இந்தப் பாத்திரப்படைப்பை இயல்பாகவே செய்திருக்கிறார்.
ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து தன் எல்லைக்குட்பட்ட விதத்தில் காதல் பருவத்தில் நடப்பதும், தன் ஆசைகளை அடகு வைத்துவிட்டு முன்பின் முகம் தெரியாதவனைக்கரம் பிடித்து அவன் மனம் கோணாமல் நடப்பதும், ஒரு கட்டததில் தான் இவ்வளவு தியாகம் செய்தும் கணவன் புரிந்துகொள்ளவில்லையே என்று புழுங்கி ” நான் இன்னும் பரிக்குட்டியைத் தான் நேசிக்கிறேன் ” என்று ஆற்றாமையோடு வெடிப்பதும் என்று ஷீலாவும் தன் பங்கை விடவில்லை.
கடலோரக்கிராமியப் பின்னணியில் யதார்த்தமான கதைகளத்திற்கு மார்க்கஸ் பாட்லி, யூ.ராஜகோபாலின் ஒளிப்பதிவும் துணைபுரிந்திருக்கிறது.
“கடலினக்கரை போனோரே”, “மானச மயிலே வரு” போன்ற பாடல்காட்சிகளில் சூரியன் விழுங்கிய மாலைக் காட்சியும், நிலாவொளி பரப்பும் பின்னிரவுக் காட்சிகளும் கூடைகளில் நிறைந்திருக்கும் மீன் குவியல்களும், கடற் குருமன் மேடுகளும் நல்ல எடுத்துக்காட்டு.
ஒரு நல்ல நாவலை எடுக்கும் போது எழுத்தில் வடிக்கும் நுட்பமான மனித உணர்வுகளையெல்லாம் காட்சியாகக்காட்டமுடியாது என்பதற்கு இப்படமும் ஒரு சான்று. தகழி சிவசங்கர பிள்ளையின் நாவலைப் படிக்காவிட்டாலும் எழுத்தில் பலமடங்கு உணர்வு பூர்வமான நிகழ்வுகள் இருந்திருக்கும் என்பதைப் படம் பார்க்கும் போது உணரமுடிகின்றது. சில காட்சிகள் அதன் யதார்த்த நிலையை இழந்து எனோ தானோ என்று வரும் போது தான் இப்படி எண்ண முடிகின்றது.
செம்மீன் படத்தின் பெரிய பலம் அல்லது அசுரபலம் இசையமைப்பு. சலீல் சவுத்ரியின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் வெகு நேர்த்தி. இப்படத்தை நான் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல், ஆனாலும் “மானச மயிலே வரு” என்ற பாடல் இன்னும் என் காதை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது.
சங்கராபரணம் போல செம்மீன் திரைப்படமும் திரும்பத் திரும்பப் பார்க்கும் ரசிக வலைக்குள் விழுந்ததிற்கு வயலார் ராமவர்மாவின் பாடல் வரிகளில் ” கடலினக்கரை போனோரே” என்ற பாடலும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். இன்று தனியார் தொலைக்காட்சிகளில் நல்ல பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பப் போட்டுச் சாவடிப்பதும், நாம் விரும்பியபோது வீசீடி, டீவீடியிலும் பார்க்கமுடியாத நிலை அன்றைய காலத்து ரசிகருக்கு இல்லாத நிலையில் அவன் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கே சென்று பாடலைக் கேட்பதற்காகவே படம் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலும் இப்படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது.
நடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் ” கடலினக்கரை போனோரே” என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள் அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர் கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.
அடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் “கடலினக்கரை போனோரே…. காணாப் பொன்னினு போனோரே…”
செம்மீனையும், கடற்புரத்தையும், “கடலினக்கரை போனோரே” பாடலைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கும் போது விடமுடியாத இன்னொரு நினைவும் ஒண்டும் இருக்குது. தொண்ணூறாம் ஆண்டுகளின் ஆரம்பகாலத்தில நமது தமிழீழ இசைக்கலைஞர்களின் பாடற்தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த காலமது. இசையருவி எண்ட ஒலிப்பதிவுக்கூடமும் கஸ்தூரியார் றேட்டில நிறுவப்பட்டு பாடல் ஒலிப்பதிவுகளும் நடந்தன.அப்பிடி வந்த ஒரு பாடற் தொகுப்புத்தான் ‘ நெய்தல்”.
இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். “ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்”, “கடலலையே கொஞ்சம் நில்லு”, “முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா”, “‘நீலக்கடலே”, “புதிய வரலாறு” “கடலதை நாங்கள்”, “வெள்ளிநிலா விளக்கேற்றும்”,”நாம் சிந்திய குருதி”, அலையே நீயும்” என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்,
இண்டைக்கும் நினைவிருக்கு தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து “நெய்தல்” கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் “நெய்தல்” பாடல்கள் தான் இடம்பிடித்தன.
என்னைப் பொறுத்தவரை ” கடலினக்கரை போனோரே” என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய ” கடலலையே கொஞ்சம் நில்லு” பாடலையும் சாந்தன் பாடிய “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.