உலாத்தல் – ஒரு முன்னோட்டம்


எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு” இது என்ர அம்மா என்னைப்பற்றி.

ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.
அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் நான் சென்ற கேரள விஜயம், ஒரு முழுமையான பயணதொடரை ஆக்குவதற்கான முனைப்பை எனக்குள் தூண்டியிருக்கின்றது. யதார்த்தபூர்வமான மலையாள சினிமாப் படைப்புக்களை நான் தொடர்ந்து பார்த்துவரும் போது எம் யாழ்ப்பாணத்து வாழ்வியல் தடத்தை நினைவுபடுத்தியது தான் என் இந்தக் கேரளப் பயணத்தின் தூண்டுகோல்.
நான் சென்ற நாடுகளிலும், இடங்களிலும் வித்தியாசப்பட்டு என் பிறந்தகத்துக்குச் சென்ற திருப்தியோடு இந்தப் பயண நினைவுகளை அசைபோட்ட இருக்கிறேன்.
கேரளப் பயணத் தொடர் முடிந்ததும் இன்னும் தொடரும் பல உலாத்தல்கள்.

கண்டதும், கேட்டதும், படித்ததுமாக நான் உள்வாங்கிய விடயங்களோடு தொடந்து என் சக வலைப்பூவில் உலாத்த இருக்கின்றேன்.
இதன் முகவரி:
http://www.ulaathal.blogspot.com/

நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா

நான் உங்கள் ரசிகன்

முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது. மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.
அண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே
என் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி…..

அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை.
“கிடுகு வேலி” எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன்.
ஈழநாட்டில வந்த “கிடுகுவேலி” வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.

அதோட விட்டனானே?
ஒரு கணக்கு வழக்கில்லாம செங்கை ஆழியானின் கதைகளைத் தேடி எடுத்துப் படிக்க முடிவுசெய்துகொண்டன். அப்ப என்ர வயசுக்கு மீறின கதைக்களனாகவும். எழுத்து நடையாகவும் செங்கை ஆழியானின் படைப்புக்கள் இருந்தாலும் ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு அவரின்ர எழுத்துக்களில இருந்தது.
முதல்ல இந்த வாசிப்புக்குத் தீனி போட்டது எங்கட கொக்குவில் இந்துக்கல்லூரி நூலகம். எனக்கும் அந்தக் கல்லூரி நூலகத்துக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசவேணுமெண்டால் ஒரு தனிப்பதிவே போடலாம். அதை இன்னொரு நாளைக்குச் சொல்லுறன். செங்கைஆழியானின்ர நாவல்கள் இருக்கிற அலுமாரி எதோ நான் குத்தகைகு எடுத்த மாதிரிப் போட்டுது. அவரின்ர நாவல்களின்ர முதல் பக்கத்தில என்னென்ன நாவல்கள் இது வரை வெளிவந்தன என்ற பட்டியல் இருக்கும் அதை அளவுகோலாக வச்சுத் தான் ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தேடிப் படித்தேன்.

ஒரு நாள் நூலகத்தின் புத்தகச்சுரங்கத்திலே எனக்குக் கிடத்தது ஒரு பழைய சிறுகதைத்தொகுதி. 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட “விண்ணும் மண்ணும்” எண்ட சிறுகதைத்தொகுதி தான் அது. யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தம் சிறுகதைகளால் நிரப்பியிருந் தார்கள்.பின்னாளில் அதில் எழுதிய அனைவருமே ஈழத்தின் இலக்கிய முன்னோடிகளாகத் தடம்பதிருந்தார்கள். நாவல் மூலம் எனக்கறியப்பட்ட செங்கை ஆழியான் நல்ல சிறுகதைகளையும் எழுதாமல் விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டிகொடுத்துவிட்டது அந்நூல்.

இப்பொது எனக்கு புதிதாக ஒரு பிரச்சனை.
செங்கையாழியானின் நாவல்களை மட்டுமல்ல சிறுகதைகளையும் விடக்கூடாது எண்டு முடிவெடுத்துப் பள்ளிக்கூட நூலகத்தில இருந்த மல்லிகை போன்ற சஞ்சிகைகள் பக்கம் பாய்ந்தேன்.

நூலகராக இருந்த தனபாலசிங்கம் மாஸ்டர் எனக்குப் பெரிதும் கை கொடுத்தார். அவரிப் பொறுத்தவரை நூலகத்துக்குள்ள பெடியளோட அலம்பிகொண்டிருக்காமல் புத்தகங்களோட பேசிற ஆட்களைக் கண்டால் வலு சந்தோசம். எனக்கிருந்த புத்தகத்தீனிக்கு அவர் தான் சரியான ஆளாக இருந்தார்.
நூலகம் கடந்து என் வகுப்பறைக்கு போகும்போது என்னைக் கண்டால் மனுஷன் விடமாட்டார்.
” பிரபாகர், மல்லிகை புதுசு வந்திருக்கு” என்று நூலக வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சொல்லிப்போட்டு ஏதோ ஒரு பெரிய கடமையை முடிச்ச திருப்தியில் போவார்.

வீரகேசரி பிரசுரங்கள் எண்டு செங்கை ஆழியானின் ஒருசில நாவல்கள் எனக்குக் கல்லூரி நூலகத்தில இருந்து எனக்குக் கிடைத்தன. இருந்தாலும் அப்போது எனக்கிருந்த இலக்கு இவரின் எல்லாப் புததகங்களையும் படித்து முடிக்க வேணும் எண்டு. எப்படி இது சாத்தியம் என்று நான் நினைத்தபோது ஒருநாள் அதுவும் கைகூடியது இன்னொரு சந்தர்ப்பத்தில்.

அண்ணாகோப்பிக்காறர் வீட்டுப் பெடியளோட தான் என்ர பின்னேர விளையாட்டு. ஒருநாள் இப்பிடி நான் விளையாடி முடிச்சு வரேக்க , அண்ணாகோப்பி நிறுவனத்தில வேலை செஞ்ச மேகநாதன் எண்ட மலையகப் பெடியன் வேலை முடித்துக் களைப்பாறும் தருணத்தில் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். நானும் பழக்க தோஷத்தில (?) என்ன புத்தகம் வாசிக்கிறார் என்று எட்டிப்பார்த்தபோது எனக்கோ ” கண்டேன் சீதையை” எண்டு கத்தவேணும் போல ஒரே புழுகம்.
இருக்காதே பின்னை, அவன் வாசித்துகொண்டிருந்தது செங்கை ஆழியானின் ” இரவின் முடிவு” எண்ட நாவல்.

“இஞ்சை..இஞ்சை… கெஞ்சிக்கோக்கிறன், நான் ஒருக்கா உதை வாசிச்சிட்டுத் தரட்டோ” என்று யாசித்தேன்.

அவனோ ” சேச்சே.. இது இரவல் புத்தகம் , கொடுக்கமுடியாது” என்று முரண்டு பிடித்தான். நானோ விடவில்லை.

என் விக்கிரமாதித்தத் தனத்தைப் பார்த்த அவன் ஒரு படி கீழே வந்து ” சரி சரி, புத்தகம் தரலாம்,ஆனால் பகலில நீங்க வாசிச்சிட்டு பின்னேரம் கொடுக்கவேணும்” என்ற நிபந்தனையைப் போட்டான். ஏனெண்டால் பின்னேர வேலை முடிந்து வந்து அவன் அதை வாசிக்க வேணும்.

மூண்டாம் தவணை விடுமுறை காலம் என்பதால் பெடியளோட போய் விளையாடும் நேரத்தின்ல் பகலிலை “இரவின் முடிவு” நாவலை வாசிக்கப் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு நாள் பின்னேரம் கைமாறும் புத்தகம் அடுத்த நாள் மீண்டும் என் கைக்கு வரும்.

என்னுடைய நம்பகத்தன்மையைக் கண்ட அவனும் பிரளயம், ஆச்சி பயணம் போகிறாள், காட்டாறு, யானை, ஓ அந்த அழகிய பழைய உலகம், கங்கைக்கரையோரம் , அக்கினிக்குஞ்சு என்று செங்கை ஆழியானின் நாவல்கள் ஒவ்வொன்றாகத் தந்தான். சில நாட்களில் ஒரே மூச்சாக நான் முழு நாவலையும் படித்து முடித்துக் கொடுக்கும் போது வியப்பாகப் பார்ப்பான் அவன்.
பாவம், இவனுக்கு ஏதாவது நன்றிக்கடன் செய்யவேணும் எண்டு நினைத்து என்னிடமிருந்த ராணி காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் சித்திரக்கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்வேன். நான் ஒருபக்கம் செங்கை ஆழியானின் எழுத்தில் மூழ்க மேகநாதனோ ஜேம்ஸ் பொண்ட், ஜானி போன்ற துப்பறியும் சிங்கங்களின் கையில் அகப்பட்டுவிட்டான்.

எதோ ஒரு வெறித்தனமான காரியமாக பூபாலசிங்கம், சிறீலங்கா புத்தகசாலை எண்டு ஒருகாலத்தில் அலைந்து செங்கை ஆழியானின், சிறுகதை, கதை, கட்டுரை எனத்தேடியெடுத்து வாசித்தேன், திரும்பத்திரும்பச் சிலவேளை.
ஒரு கட்டத்தில் அவரின் ஒரு சில கைக்கெட்டாத சில படைப்புக்கள் எனக்குக் கிடைக்காது, அவர் எழுதிய “பூமியின் கதை” உட்பட புவியியல் வரலாற்றுப் படைப்புக்களைப் படித்தேன். வேறெந்த எழுத்தாளனின் படைப்பையும் தொட்டுப்பார்க்க விரும்பாத காலம் அது.


இப்ப நினைச்சுப் பார்த்தாலும் என்ற இந்தச் செய்கை ஒரு வியப்பாக இருந்தாலும், இண்டைக்கும் என்னால நினைச்சுப்பார்க்க வைக்குமளவுக்கு எப்படி அவரின் படைப்பைக்கையாண்டார் எண்டதை அவரின்ர சில கதைக் கருக்கள் மூலமே சொல்லுறன்.

ஆச்சி பயணம் போகிறாள் – யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப்பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது.

யானை – ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை

ஓ அந்த அழகிய பழைய உலகம் – ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரீகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தின்னும் கதைப்புலன்.

வாடைக்காற்று – நெடுந்தீவின் புவியியற்பின்னணியில் காதலும் மீனவரின் வாழ்வியலும் கலந்த கதை (என் அடுத்த விமர்சனப்பதிவாகத்தருகிறேன்)

கிடுகுவேலி – புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப்பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக்காட்டுகின்றது.

முற்றத்து ஒற்றைப் பனை – சோளகக்காற்றில் காலம் காலமாகப் பட்டம் விட்ட, இன்னும் விட ஆசைப்படுகின்ற ஒரு முதியவரின் மனவியலைக் காட்டுகின்றது.

நடந்தாய் வாழி வழுக்கியாறு – வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலைந்த தம் மாட்டைத்தேடுபவர்களின் கதை.

கங்கைக்கரையோரம் – பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை.

கொத்தியின் காதல் – கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. சிரித்திரனில் தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது.

கடல்கோட்டை – ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம்.

தீம் தரிகிட தித்தோம் – 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக்காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்களச்சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டபட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப்பையனுக்கும் சிங்களபெண்ணுக்குமான காதற் களம் காட்டப்பட்டிருக்கும், நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.
நான் இதுவரை இப்படியான இரண்டு வேறுபட்ட களத்தோடு பயணிக்கும் வேறொரு நாவலையும் படிக்கவில்லை. செம்பியன் செல்வன் ஆசிரியராக இருந்த அமிர்தகங்கையில் தொடராக வந்தது. 1986ஆம் ஆண்டு நல்லூர்திருவிழாவின் புத்தகக்கண்காட்சியில் இதைக்கண்டபோது ஐஸ்பழம் வாங்க வைத்த காசில் இதை வாங்கினேன்.

ஈழத்தின் பல்வேறு பகைப்புலங்களைத் தன் கதைக்களங்களில் கையாண்டதோடு, பொருத்தமான சூழலையும் தேர்வுசெய்து புவியியல் ரீதியான விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் தன் படைப்பு ஊடாக சமூகப்பார்வையினையும் வரலாற்றுத்தடங்களையும் காட்டுவது இவரின் சிறப்பம்சம். ஈழத்தின் பிரதேச வழக்கியல் பற்றிய விவரணமாகவும் இவை அமைகின்றன.
இப்படி நான் முன் சொன்ன நாவல்கள் அனைத்தையுமுமே எந்த வித உசாத்துணையுமின்றி என்னால் நினைவுபடுத்தி எழுதமுடிந்ததை வைத்தே இவரின் எழுத்துக்கள் எப்படி என்னை ஆட்கொண்டன என்பது புரியும். நான் இதுவரை வாசிக்காத அவரின் படைப்புக்கள் ஒரு சிலவே, அதையும் போனமாதம் பூபாலசிங்கத்தில அள்ளிக்கொண்டு வந்திட்டன்.

1988 ஆம் ஆண்டு அநு.வை நாகராஜனின் “காட்டில் ஒரு வாரம்” என்ற சிறுவர் நாவல் வெளியீடு விழா வைத்தீஸ்வராக்கல்லூரில் நடந்தபோது செங்கை ஆழியானை முதன்முதலில் பார்தேன். அவரின் கையொப்பத்தை அந்த நிகழ்வு நிறைவுற்றபோது பெறாலாம் என்று விழா அழைப்பை நீட்டினேன்.
” காயிததில எல்லாம் கையெழுத்தை வைக்காதயும்” என்று செங்கை ஆழியானைத் தடுத்துவிட்டு
” தம்பி அந்தப் புத்தகத்கைக்குடும், அதில வைக்கட்டும்” எண்டார் பக்கத்தில் நின்ற செம்பியன் செல்வன்.
சிரித்துக்கொண்டே நான் நீட்டிய புத்தகத்தில் தன் கையெழுத்தைப் பதித்தார் செங்கை ஆழியான்.

ஒருநாள் கூட்டாளிமாரோட ரவுணுக்குப் போட்டு பிறவுண் றோட்டால வரேக்க அவரின் விட்டைக் கண்டு ” எடே, உதுதான் செங்கை ஆழியானின்ர வீடு” என்று புழுகத்தில் பின்னால் சைக்கிளில் வந்த நண்பனைப் பார்த்துக் கத்தினேன்.
கொல்லென்று பெண் ஒருத்தியின் சிரிப்புக்கேட்டது, எங்களுக்குப் பின்னால் செங்கை ஆழியானின் சைக்கிளும் கரியரில் அவர் மகளும்.

ஓ..சொல்ல மறந்துவிட்டேனே , செங்கை ஆழியானின் “கிடுகுவேலி” நாவல் வந்தபோது எனக்கு வயசு 11.

புலம்பெயர்ந்த என் வாழ்வில் இன்னும் என் புலனைக் கெடாது வைத்திருப்பது செங்கை ஆழியானின் தாயகம் தழுவிய மண்வாசனை எழுத்துக்கள் தான்.

ஆயிரக்கணக்கான மைல் தொலைவில்…..
என் தாயகத்தில் இருக்கும் எனதருமை எழுத்தாளரே!
தங்கள் படைப்புக்களை நுகர்ந்து போகும் வெறும் வாசகன் அல்ல நான்,
உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கும்
நான் உங்கள் ரசிகன்.

சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்ட சம்பவம் என்பதால் இதை நான் எழுதுகின்றேன்.
இப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை.

கடந்த மாதம் பெங்களூரிற்கு வேலைத்திட்டம் காரணமாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். இப்படியான கடந்த என் பெங்களூர்ப் பயணங்களிலும் வார இறுதிநாட்களைச் சென்னையில் தான் செலவிட்டேன். நமது சொந்த ஊருக்குப் போன அனுபவம் கிடைக்கும் என்பது முதற் காரணம்.

அது போலவே இம்முறையும் வார இறுதி நாட்களைச் சென்னையில் கழிப்பதாக உத்தேசித்துக்கொண்டேன். என்னோடு வேலைபார்க்கும் இரு சீனப்பெண்களும் சென்னையைப் பார்ப்பதற்காக என்னோடு ஊர்சுற்ற வந்தார்கள்.

சனிக்கிழமையன்று நாங்கள் ஒழுங்கு செய்த வாடகைக்கார் மூலம் மகாபலிபுரம் செல்வதாக ஏற்பாடு. காலையில் சீக்கிரமாகவே கிளம்பி எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு காரில் பயணித்தோம். வாடகைக்கார் சாரதி மது மிகவும் நட்புடன் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நடப்பு தேர்தல் நிலவரங்களையும் பகிர்ந்துகொண்டே வண்டியை ஓட்டினார்.

“சார் மகாபலிபுரத்தை நாம சீக்கிரமாவே போயிடலாம், நிறைய நேரமிருக்கு, உங்களுக்கு ஆட்சேபணை இல்லேண்ணா நாம சிதம்பரம் போய் வரலாம்” இப்படியாகப் பயண இடைவழியில் மது கேட்டார்.

எனக்கும் அது சரியாகப்பட்டது. சீனத்தோழிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நான் விளக்கியபோது சந்தோஷத்துடன் இதற்கு ஆமோதித்தார்கள். எமது பயணம் சிதம்பரம் நோக்கிப்போனது.
“மதியம் நடை சாத்துறத்துக்கு முன்னாலயே போயிடலாம் சார்” என்று சொல்லிக்கொண்டே காரின் வேகத்தைக் கூட்டினார் மது.

ஒருவழியாகச் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். கார்க் கதவைத்திறக்கும் போது தன் கைக்குழந்தையோடு “ஐயா…சாமீ! பிச்சை போடுங்கையா” என்ற ஈனசுரதுடன் ஒரு இளம் பிச்சைக்காரி.
“வரும்போது பார்க்கலாம்” என்று நான் சொல்லிக்கொண்டே நடக்கும் போது ஒருவர் பலராகி எம் நடைப் பயணத்தின் பின்னால் யாசித்துக்கொண்டே வந்தார்கள்.

பாதணிகளை ஒரு கடையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது மது சொன்னார், ” ஜாக்கிரதை சார், கண்டபடி யார்கிட்டையும் பேச்சுக்கொடுக்காதீங்க”.

நானும் மற்றய இரண்டு சீன நண்பிகளும் கோயிலை நோக்கி நகரும்போது

“சார்..சார்.. நான் கைடு சார்…” என்றவாறே நைந்துபோன வேஷ்டியும் புழுதி சாப்பிட்ட வெள்ளைச்சட்டையுமாக ஒரு முதியவர்.

“வேணாம் சார், அதெல்லாம் நாம பாத்துக்கிறோம்” இது நான்.

அவரோ விடுவதாக இல்லை, தனக்குத் தெரிந்த ஆங்கில மொழியில் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொண்டே வந்தார். எமது கவனம் அவர்பால் இல்லை என்று தெரிந்ததும் தன் வழியே திரும்பிச்சென்றார். இவையெல்லாம் நான் எதிர்பார்த்தவை தான், எனவே எனக்கு அதிகம் அவை அசெளகரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் கோயிலுக்குள் நுழைந்தபோது நடந்தது தான் இன்னும் என்னால் மறக்கமுடியாத சினத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறிவிட்டது.

கோயிற்பிரகாரங்களைச் சுற்றி வரும் போது சீனப்பெண்களுக்கு ஒவ்வொன்றாக விளக்கியவாறே தரிசனை செய்துகொண்டு வந்தேன். ஒரு பிரகாரத்திலும் இப்படி நாம் வரும் போது திடீரென ஒரு குரல், “

Madam! You have to sign this visitor book ” இப்படி ஒரு கட்டளை ஒரு அர்ச்சகரிடமிருந்து வந்தது. இவர்களை மட்டும் கேட்பதன் மர்மம் என்ன என்று மனதுக்குள் நினைத்து, சீன நண்பிகளைத் தடுத்துவிட்டு நான் என்ன அந்தப் பதிவேட்டைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் சடுதியாகக் கண்டுவிட்டேன்.
” நாங்க தரிசனம் முடிச்சாப்புறம், வந்து பதிவைப் போட்டுர்ரோம்” இப்படி நான் அந்த அர்ச்சகருக்கு பதிலளிக்கும் போது

” அதெல்லாம் முடியாது, அவுங்களை இதில எழுதச்சொல்லுங்கோ” என்ற அந்தக் குரல் வந்த திக்கைப் பார்த்தேன். இளம் அர்ச்சகர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்த திக்கில் இருந்து வந்த ஒரு அர்ச்சகரின் குரல் தான் அது.

“இல்லீங்க, நாங்க திரும்ப வந்துடறோம்” என்று சொல்லி விட்டு என்னோடு வந்த சீனப் பெண்களிடம் ஒன்றும் செய்யாமல் வாருங்கள் என்று இரகசியமாகக் கட்டளையிட்டுவிட்டுத் திரும்பும் போது

அதே இளம் அர்ச்சகர் எம்முன்னால்.

“இப்ப நீங்க இதில எழுதாமப்போனாப் பெரிய பிரச்சனையாயிடும்” என்றவாறே தன் வேட்டியை சற்றுமேலாக வரித்துக்கட்டிகொண்டே எம்மை நோக்கி வந்தார். நான் நிற்பது சரித்திரப் பிரசித்திபெற்ற கோயிலா என்று ஒருகணம் திகைத்தேன், ஆனாலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே

” எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க” என்று என்குரலில் கடுமையை ஏற்றிக்கொண்டேன்.

” இது நம்ம ஆலயத்தோட வழக்கம், ஆலய முகப்பில கூட எழுதியிருக்கு” இது அந்த ஐயர்.

நான்:சரி வாங்க பார்க்கலாம், எங்க எழுதியிருக்குன்னு

ஐயர்:அதெல்லாம் காட்டமுடியாது, இவங்க இப்ப sign பண்ணீட்டுத்தான் போகணும். “

நான்: ரொம்ப பிரச்சனை பண்ணாதீங்க அப்புறம் போலீஸ் போகவேண்டியிருக்கும். நாந்தானே சொல்றேன், வரும் போது பார்த்துக்கலாம்னு.

பக்தர்கள் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தம் தொழுகையைத் தொடர்ந்தனர்.

அந்த இளம் ஐயர் கொஞ்சம் பின்வாங்கி ” ஆலயதர்சனம் முடிஞ்சதும் இங்க வந்துடணும்” என்று உறுமிவிட்டுத் தன் சகாக்களுடன் போய் இருந்தார். அவர்கள் ஏதோ பேசிச்சிரிப்பது கேட்டது.

என்னுடன் வந்த சீனப் பெண்களுக்கு நிலைமையின் விபரீதம் விளங்கியதும் முகம் வெளிறிவிட்டது.
என்னோடு வந்த சீனபெண்களில் ஒருத்தி என்கைகளை இறுகப்பற்றி “let’s go Praba” என்றாள். வேண்டாவெறுப்பாக நான் அவர்களை அழைத்துக்கொண்டு பிரகாரச்சுற்றலில் மீண்டும் இறங்கியபோது கையை ஆட்டிக்கொண்டே ஒரு முதியவர் வந்தார். “அவுங்க அப்பிடித் தான், நீங்க ஓண்ணும் செய்யாதீங்க” என்று என்னருகில் வந்து இரகசியமாகக் கிசுகிசுத்தார்.

வரும் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் அர்ச்சகர்கள், அவர்கள் கண்களுக்கு உள்ளூர்வாசிகளைவிட எம்மைத் தான் தெரிந்தது போலும், “வாங்க சார், வந்து பிரசாதம் வாங்கிக்கோங்க” என்று எம்மை இலக்கு வைத்தார்கள்.ஆலயதரிசனத்தில் மனம் ஒன்றவில்லை.

என்னதான் நான் அந்த இளம் ஐயரோடு முரண்டு பிடித்தாலும் அந்நியப் பிரதேசத்தில் இருக்கிறோமே என்ற பய உணர்வும் வந்தது.
இருள்கவ்விய உட்பிரகாரத்தில் சுற்றிவந்த பக்தர்களைத் திரும்பத்திரும்பப் பயத்துடன் பார்த்தவாறே
நாங்கள் எவ்வளவு விரைவாகக் கடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நடையின் வேகத்தைக் கூட்டி ஆலய முகப்புப் பகுதிக்கு வந்தோம். “சார், நீங்க பணம் கட்டீட்டுப் போங்க நாம பிரசாதத்தை மெயில்ல அனுப்பிச்சுர்ரோம்” மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்ட இன்னொரு ஐயரின் குரல் அது. “இல்லீங்க, அப்புறம் வர்ரோம்” என்றவாறே சீன நண்பிகளை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியில் வந்தேன்.

வெளியில் எங்களுக்காகக் காத்திருப்பதுபோல் நின்ற ஒரு தம்பதி தங்களைத் தென்னாபிரிக்கா வாழ் இந்திய வம்சாவளி என்றும், தங்களையும் இப்படி எமக்குச்சொன்னதுபோல் செய்யச் சொன்னதாகவும் பிறகு ஆளுக்கு 100 அமெரிக்கன் டொலர் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அந்தப் பெண் கவலையுடனும் பயத்துடனும் கூறினார்.

நான் சடுதியாக அந்தப் பதிவேட்டைப் பார்த்தபோது அதில் ஆட்களின் பெயர்களும் அவர்கள் தம்கைப்பட எழுதிய பணத்தொகையும் இருந்ததை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தினேன்.
“என்ன சார், தெப்பக்குளம் பார்த்தீங்களா? எல்லாப் பிரகாரங்களும் போனீங்களா?” வாசலில் நின்ற மது கேட்டார்.

” அடப்போங்க சார்” என்றவாறே சினத்தோடு நடந்தவற்றைக்கூறினேன்.

“இப்பெல்லாம், தனியாளுங்க தான் ஆலயத்தோட நிர்வாகம், எல்லாமே தலைகீழ்” என்று செருப்புக் காவல் வைத்த கடைக்காரர் சொன்னர்.

எம்மை மனக்கிலேசத்திற்கு உட்படுத்திய அந்த இளம் அந்தணருக்கு இந்தத்திருக்குறள் சமர்ப்பணம்.
“அந்தணர் அன்போர் அறவோர் மற்றெவுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுகலான்”(எல்லா உயிரினங்கள் மேல் தயை உள்ளம், தர்மத்திலே ஈடுபாடு, விரதங்களிலே பற்று இவைகளையெல்லம் கொண்ட துறவிகளே அந்தணர்கள் எனச்சொல்லப்படுகிறார்கள்.)

தம்வாழ்க்கைச் செலவினங்களுக்காக ஆலயத்தைப் பராமரிப்பவர்கள் கோயிலை வைத்து வருமானம் பார்ப்பதில் தப்பில்லை அதற்காக இப்படியான மிரட்டல் வழிகள் ஒருபுனிதமான ஆலயத்தின் சிறப்பையும் கெடுத்து, வழிபடவருவோரிற்கும் மனச்சுமையை ஏற்படுத்தும்.

“சோழ பாண்டிய மன்னர்களால் கட்டிக்காப்பற்றப்பட்ட சிதம்பரம் ஆடல்தெய்வம் நடராஜரின் சிறப்பு மிகு ஆலயம், பொற்கூரை வேயப்பட்ட கர்ப்பக்கிருகமும் தெப்பக்குளமும் அணி செய்யச் சைவமத்தின் நிலைக்களனாக விளங்குகின்றது”

“நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.
பாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,
கண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.
வெளியில் வந்தபோது நின்ற பிச்சைக்கரர்கள் கண்ணியமானவர்களாத் தெரிந்தார்கள்.

மனநிறைவு ஏற்படாத என் சிதம்பர ஆலயதரிசனத்தைத் தாயகம் சென்று ஈடுகட்டுவது என்று நினைத்துக்கொண்டேன். திருமூலரால் சிவபூமி என்றி சிறப்பிக்கப்பட்டது நம் ஈழவளநாடு.

வடக்கே திருக்கேதீஸ்வரம், வடமேற்கே முன்னேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம்,தெற்கே பொன்னம்பலவாணேஸ்வரம், தென்மேற்கே காலிநகர்ச்சிவன்கோவில் என்று ஐந்து திக்குகளிலும் சிவ ஆலயங்களால் சூழப்பட்டது இலங்கைத்தீவு. சிறப்பாக “ஈழத்துச்சிதம்பரம்” என்று சிறப்பிக்கப்படுவது காரைநகர்ச்சிவன்கோவில்.

இம்முறை யாழ்ப்பாணம் சென்றபோது காரைநகர்ச்சிவன்கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

கொழும்பு வந்தபோது பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு எப்படியாவது போவது என்று தீர்மானித்துக்கொண்டேன். வெள்ளவத்தையில் வைத்துப் புறக்கோட்டைக்குப் போகும் பஸ்ஸில் தாவிப் புறக்கோட்டை வந்தேன். ஆட்டோ மூலம் கோயிலுக்குப் போகலாம் என்று நினைத்து ஒரு ஆட்டோவை அழைத்தேன். சாரதி ஒரு சிங்களவன் என்பதால் நான் கேட்ட “பொன்னம்பலவாணேஸ்வரம்” தெரியாது திருகத் திருக முழித்தான்.

சட்டென்று யோசனை வந்து “கொட்டகேனா சிவன் கோயில்” என்றதும் தலையாட்டிக்கொண்டே போகலாம் என்றான். நான் சொன்ன கொட்டகேனா சிவன்கோயில் பொன்னம்பலவாணேச்வரர் கோயிலாக இருக்கக்கடவது என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை ஓட்டோவும் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் தான் வந்து நின்றது. எனக்கு நினைவு தெரியாத நாளில் சிறுவயதில் நான் வந்த கோயில். இப்போது தான் இதன் கலையழகை நின்று நிதானித்து இரசிக்கமுடிந்தது. எழில் தரும் கருங்கற் சுரங்கமாக அமைதியான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முழுக்க முழுக்கக் கருங்கல் வேலைப்பாடோடு அமைந்த இவ்வாலயம் நூற்றாண்டு கடந்தும் அதே சிறப்போடு விளங்குகின்றது. 1856 இல் செங்கற் கொண்டு சேர் பொன் இராமநாதனின் தந்தையாரால் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் சேர் பொன் இராமநாதனால் 1906 ஆம் ஆண்டில் புனருத்தானத்திற்காக இடிக்கப்பட்டு 1907 – 1912 வரையான ஆண்டுகளில் முழுமையான கருங்கல் வேலைப்பாட்டோடு மீள எழுந்தது.

பாடசாலையில் எமது சித்திரவகுப்பு ஆசிரியர் மாற்கு அவர்கள் இந்தக் கருங்கல் வேலைப்பாடு கொண்ட ஆலயத்தின் சிற்பக்கலைநயத்தை விதந்து பாடம் எடுத்தது நினைவுக்கு வந்தது. ஆலயம் அன்று போல் இன்றும் தன்சிறப்புக்கெடாது பராமரிக்கப்படுகின்றது.ஆலய உள்வளாகத்தில் படம் பிடிக்க அனுமதியில்லை. படக்கமராவில் ஆலய வெளிவளாகத்தைச் படம் சுட்டுக்கொண்டேன்.

சிற்பங்களில் கை போடாதீர் என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. எந்தவித இடையூறும் இன்றி மனச்சாந்தியோடு எம்பெருமான் சன்னிதியை வலம் வந்தேன். மனதில் பாரம் சற்றுக்குறைந்தது போலத்தோன்றியது எனக்கு.

(முதற்படம் தவிர்ந்த அனைத்தும் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் எடுக்கப்பட்டவை)