என் இனிய மாம்பழமே….!

பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் “ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எனக்கு ஒரு கடகம் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் தந்தால் போதும்” இப்படியாக நான் சின்னப்பிள்ளையாக இருந்த காலத்தில் நினைப்பதுண்டு. அவ்வளவுக்கு மாம்பழத்தின் மேல் அலாதிப்பிரியம் எனக்கு. முக்கனிகளிலேயே முதல்வன் அல்லவா என் இனிய மாம்பழம்.

எங்கட அம்மா ஒரு ஆசிரியை என்பதால் , விடிகாலை நான்கு மணிக்கே எழும்பி காலைச் சாப்பாட்டையும் மத்தியானச் சாப்பாட்டையும் செய்யவேணும். அவருக்கு குழல் பிட்டு செய்தெல்லாம் மினக்கட இயலாது. மாவைக் குழைத்து, ரின் பால் பேணியால் கொத்திய மாத்துண்டங்களை நீற்றுப்பெட்டியில் நிரப்பி அவித்த பிட்டுத் தான் பெரும்பாலான நாட்களின் எமக்கு காலை உணவு, சிலவேளை அதுவே மதிய உணவும் கூட.
படபட வென்று பம்பரமாகப் பிட்டை அவித்து முடித்து விட்டு செய்யும் அடுத்த வேலை மாம்பழத்துண்டங்களை நறுக்கி பிட்டோடு சாப்பிட ஒப்பேற்றுவது தான் அடுத்த வேலை அவருக்கு. பள்ளிக்கூடம் போய் தந்துவிட்ட எவர்சில்வர் சாப்பாட்டுப் பெட்டியைத்திறந்தால் பிட்டை மறைத்து காட்சிதரும் அழகழகான மாம்பழத்துண்டங்கள். மாம்பழத்துண்டில் ஒரு கடி, அடுத்து தேங்காய்ப்பூ கலந்த பிட்டில் ஒரு விள்ளல் என்று மாறி மாறிச் சாப்பிடுவதே தனியின்பம். பிட்டும் மாம்பழமும் எனக்கு எப்போதுமே மாற்றீடை விரும்பாத நிரந்த ஜோடிகள்.

கறுத்தக்கொழும்பான் மாம்பழங்கள்
பட உதவி: கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்.

எங்கள் வீட்டிலேயே விலாட்டு, அம்பலவி, செம்பாட்டான், சேலம் மாமரங்கள் முன் முற்றத்தை நிறைத்திருப்பதால் அடுத்தவனிடம் கையேந்த வேண்டிய அவசியம் இருந்ததில்லை. ஆனால் கறுத்தக் கொழும்பான் மட்டும் விதிவிலக்கு. கோபால் மாமா கடையில எப்போதும் கறுத்தக் கொழும்பானுக்கு பெரும்பாலும் சபாநாயகர் அந்தஸ்து தான்.மாம்பழங்களில் சற்றும் பெரிதாகவும் மேற்பாகம் கொஞ்சம் செம்மஞ்சள் பெரும்பாகம் கடும்பச்சையானதான மிக இனிப்பான பழம் இந்தக் கறுத்தக்கொழும்பான். கொழும்பில் குடியிருந்து அவ்வப்போது யாழ்பாணத்துக்கு வருபவர்களை நாங்கள் அப்போது எதோ வானத்தில இருந்து குதிச்சவை போலப் புதினமாப் பார்த்த காலம் அது. கொழும்பாரும் கொஞ்சம் நடப்பு காட்டுவினம். கறுத்தக்கொழும்பானும் விலையும் மவுசும் உள்ள பழம் என்பதால் கொழும்பான் என்ற பெயர் ஒட்டியதோ என்னவோ?

வெள்ளைக்கொழும்பான் என்றொரு வகையுண்டு. பழுத்தாலும் தன் சட்டையின் நிறத்தை மாற்றாமல் அதே குருத்துப்பச்சை நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் தேவாமிர்தம் தான்.இந்தப்பழத்தைக் கசக்கி விட்டு, மேல் முனையில் ஒரு துளைட்டு உள்ளே தேங்க்கிக்கிடக்கும் பழ ரசத்தை உறிஞ்சி ரசிப்பது வழக்கம். தான் எவ்வளவு உயர்ந்தாலும் வெளித்தோற்றத்தை மாற்றாத மனிதருக்கு ஓர் உதாரணம் வெள்ளைக்கொழும்பான்.

அப்பா எமது வீடு ஆட்டுக்கு கஞ்சித்தண்ணி வைக்கும் போது மாம்பழத்தின் தோலும் கலந்து வைப்பார். பிடுங்கப்பட்ட காய்பதத்திலுள்ள மாங்காய்கள் அறையில் ஒரு மூலையில் வைக்கோலுக்குள் பழுப்பதற்காக ஐக்கியமாகியிருக்கும் தீட்டுப்பட்ட பெண்கள் நகராது ஒரு இடத்தில் இருப்பது போல.

விலாட்டு கொஞ்சம் தன்னடக்கமானது போல அளவில் சிறிதான,
மேற்பாகம் ஊதா கலந்த குங்கும நிறம் தடவிய உருண்டைப்பழம். காய்ப் பதத்திலே சாப்பிடலாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். விலாட்டு மரத்தில் பெரிய பிரச்சனை என்னவென்றால் இதன் மாவிலை அளவில் சிறிதாக ஒப்பீட்டளவில் இருப்பதால் மங்கல காரியங்களுக்கு ஆள் அதிகம் தலை காட்டமாட்டார்.

செம்பாட்டான் பழம் யாழ்பாணத்தில் அதிகம் புழங்கும் பழம். நார்த்தன்மை குறைந்த சப்பையான நீட்டும் பழம். செம்பாட்டான் பழத்தில் ஒரு பிரச்சனை, மாம்பழத்தை மிகவும் சீரியசாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது வாயில் ஏதோ நரிபடும், பார்த்தால் கறுப்பான சின்னச்சின்ன துகழ்கள் சூழ இந்த மாம்பழத்தில் எற்கனவே துளை போடப்பட்டு, கூட இருந்து குழி பறிக்கும் எட்டப்பன் வண்டோ புழுவோ டோரா அடித்திருக்கும். வேண்டா வெறுப்பாகப் பழத்தை எறிந்து விட்டு அடுத்த பழத்தில் கை வைக்கவேண்டியது தான்.
செம்பாட்டான் மாங்கொட்டை நீண்டு சப்பையானதாக இருக்கும். ஆரம்ப பள்ளியில் படிக்கிற காலத்தில ( ஏழு எட்டு வயசிருக்கும்) ஒடுக்கமான முகம் கொண்ட என் வகுப்பு பெண்ணைப் பார்த்து கோபமாக செம்பாட்டான் மாங்காய் என்று திட்டியது ஏன் இப்ப ஞாபகத்தில வந்து தொலைக்குது?

புழுக்கோதிய மாம்பழத்தைப் பற்றிச் சொல்லும் போது எனக்கு செங்கை ஆழியான் எழுதிய குறுங்கதைகளில் ஒன்று நினைப்புக்கு வருகிறது. பழத்தில் நல்ல பக்கத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு கெட்ட பக்கத்தை ஒதுக்குவது போலத்தான் வாழ்க்கையும். கொஞ்சம் பழுதாக இருக்கின்றதே என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் மாம்பழத்தின் சுவையை எப்படி அனுபவிக்கின்றோமோ அது போல நம்மால் சாதிக்கமுடிந்தவை, சாதித்தவை பற்றி மட்டும் திருப்திப்பட்டால் வாழ்க்கையை நல்லவிதமாக அனுபவிக்கமுடியும் என்ற சாரத்தில் அமைந்த கதை அது.

பாண்டி என்றொரு வகை மாம்பழம் இருக்கின்றது. அதை ஏழைகளின் தோழன் என்று தான் சொல்ல வேண்டும். சந்தையில் இருக்கும் மாம்பழங்களில் விலை மலிவானது அது தான். காரணம் சிறுத்த உருண்டையான , சீக்கிரமே பழுத்து அழுகும் வகை அது.

மாங்கொட்டைத் தாளம் என்ற ஒரு விளையாட்டு எங்களூரில் நாம் சின்னனாக இருக்கும் போது விளையாடுவது உண்டு. நாலு பெட்டி கீறி மாங்கொட்டையை முதல் பெட்டியில் எறிந்துவிட்டு கெந்திக் கெந்தி, கோட்டில் கால் படாமல் நான்கு பெட்டியையும் கடக்கவேண்டும், உந்த விளையாட்டுக்கு ஏற்றது இப்படியான சப்பையான மாங்கொட்டைகள் தான்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த முத்துலிங்க மாமாவின் முழு நேரத் தொழிலே மாங்கன்று வளர்த்து வியாபாரம் செய்வது. பொலித்தீன் பைகளில் நிரையாக அடுக்கிவைக்கப்பட்ட மாங்கன்றுகளை நிதமும் பராமரித்துப் பசுமைப் புரட்சியைச் சத்தமில்லாமல் செய்துவந்தார். ஒட்டுமாங்கன்றுகள் பலவும் அவரின் கைவண்ணத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிக்கனி பறிக்கப்பட்டன. ஒட்டுமாங்காய் ருசி அதிகம் என்பார்கள். ஈழத்தி எழுத்தாளர் சாந்தன் தமிழ் சிங்களக் காதலைப் பின்னணியாகக் கொண்டு சிரித்திரன் வெளியீடாக “ஒட்டுமா” என்ற நாவலையும் முன்னர் வெளிட்டவர்.

பச்சைத்தண்ணி (பச்சை தின்னி) மாங்காய் என்று ஒன்றிருக்கிறது அம்மியில் அரைத்த உப்பு மிளகாய்த்தூளைச் தேங்காய்ச் சிரட்டையில் வைத்துக் கொண்டு, காய்ப்பதமான இதை உப்புத்தூளைத் தடவிச் சாப்பிடுவதை நினைக்கும் போது இப்பவே எச்சில் தயாராக வரிந்துகட்டிக்கொண்டு வாய்க்குள் இருந்து எட்டிப்பார்க்கின்றது.

பச்சத்தண்ணி, சேலன்(ம்) மாங்காய்களைப் பிளக்கப் பயன்படுவது யாரோ ஒருவர் வீட்டு சீமெந்து மதில்களின் முனைகள். மாங்காய் அடித்த கன்றல்கள் இன்னும் அடையாளமாக மதிற்சுவரில் எஞ்சி நிற்கும்.

உலகின் 16% வீத மாம்பழ ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மட்டும் தான் போகின்றதாம். கடந்த மே மாதம் ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்துக்கு நான் போன போது ஒரு முக்கியமான பெரிய பூங்கா ஒன்றில் 300 இற்கும் அதிகமான மாம்பழங்களின் கண்காட்சி வாரம் அப்போது நடந்துகொன்டிருப்பதாக விளம்பர அட்டைகள் தொங்கின. அந்த அரிய வாய்ப்பை நேரப்பற்றாக்குறையால் நழுவவிட்டேன்.

இந்திய மாம்பழங்களைப் பற்றிச்சொல்லும் போது விடமுடியாத ஒரு அம்சம் அமரர் கல்கி எழுதிய ” ஓ மாம்பழமே” என்ற கட்டுரைத் தொகுதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் துணிந்து நின்று அவர்களின் ஆட்சியை நையாண்டி பண்ணியும், அன்றைய காலகட்ட சமூகத்தின் மீதான விமர்சனப்பார்வையையும் தன் எழுத்தில் வடித்திருக்கின்றார் கல்கி இந்நூலில். கல்கி பிரசுரம் மீள் பதிப்பாக இப்போது விற்பனையில் அந்நூலை வெளியிட்டிருப்பதால் அந்த நூலில் உள்ள எல்லாவற்றையும் சொல்லமுடியாது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளில் “ஓ மாம்பழமே” என்ற கட்டுரையே நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது. கீழைத்தேய நாடுகளில் இருந்து தான் மாம்பழத்தின் பெருமை மேலை நாடுகளுக்குச் சென்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதை வைத்தே தன் ஹாஸ்ய மற்றும் சமூகப் பார்வையை இக்கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

அதில் ” பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து மாம்பழம் சாப்பிடும் நிலைக்கு ஆளாகிவிட்டோம் ” என்றும் மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதியதாகவும் கிண்டலடித்து ” பிரிட்டிஷார் இந்தியா தேசத்தை ஏன் இழந்துவிடக்கூடாது என்பதற்கு ஒரு புதிய காரணம் ஏற்பட்டிருக்கின்றது. அதுதான் இந்திய மாம்பழம். இவ்வளவு ருசியுள்ள பழத்தைக் கொடுக்கும் தேசத்தையா சில மூட மந்திரிகளின் முழு மூடத்தினால் நாம் இழந்து விடுவது? என்று ராதர்மியர் எழுதியதாகவும் தொடரும் இக்கட்டுரையில் சேலம் ஒட்டுமாம்பழத்தின் ருசியால் மகாத்மா காந்தியே சலனப்பட்டதாகவும் தொடர்கின்றார். ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இக்கட்டுரையினூடே சொல்லப்படும் அன்றைய சமூக விமர்சனம் அழகாகப் புரியும்.

மாங்காய் பிடுங்குவதற்கு ஒரு இலாவகமான கையாளல் வேண்டும், அவசரப்பட்டுப் பிடுங்கி அது நிலத்தில் மொத்துப்பட்டால் ஒன்றுக்கும் உதவாத வெம்பல் மாங்காய் தான். நீண்ட தடி அல்லது மூங்கில் கழியை எடுத்து முனையில் கொக்கச்சத்தகம் (கேள்விக்குறி போன்ற ஆயுதம்) பூட்டி சின்னச் சாக்கு (சீனி இறக்குமதியாகும் சாக்கு) போட்டு, மாங்குலைகளை கொக்கச்சத்தகத்தால் சுற்றிவளைத்தால் பேசாலைக் கடலில மாட்டுப்பட்ட நேவிக்காறன்கள் மாதிரி சேதாரமின்றி மாங்காய்கள் கிடைக்கும். எங்கள் அம்மம்மா வீட்டின் காணியில் மாமரங்களின் சோலையே உண்டு, அவர்கள் மாங்காய் பிடுங்க ஆள் வைத்து வேலை செய்வார்கள். அவர்கள் சாக்கிற்குப் பதில் கடகம், கொக்கச்சத்தகம் பூட்டிய நீண்ட மூங்கில் கழியைப் பயன்படுத்துவார்கள். ஒருமுறை அந்தக் கொக்கத்தடியைத் தூக்கிப் பார்க்க ஆசை வந்து, பார்மான அந்தத் தடியை கஷ்டப்பட்டு நிமிர்த்த முயற்சிசெய்யும் போது பாரந்தாங்காமல் சமநிலை தவறி தடியோடு நிலத்தில் விழுந்ததற்குப் பிறகு அப்படியான முயற்சிகளின் நான் மீண்டும் இறங்கவில்லை.

கந்தசஷ்டி கடைசி நாள் சூரன்போர் அன்று எங்களூர் இணுவில் கந்தசுவாமி கோயில் களை கட்டும். சூரன் ஒவ்வொரு வேஷமாக தலை மாற்றி வருவது சூரன் போர் நிகழ்வில் தனித்துவமான காட்சி. ஓவ்வொன்றாக மாறும் சூரனில் வடிவம், ஒரு சமயம் சூரன் மரமாக மாறுவதைக் காட்டுவதற்கு சூரன் சிலையின் பின்னால் இருந்தவருக்கு மாங்கொப்பு குலைகளுடன் கையளிக்கப்படும். அந்த நிகழ்வும் தோற்கடிக்கப்பட்டு சூரன் நிர்க்கதியாக நிற்க, வீரபாகு தேவர் வெற்றிப்பெருமிதத்தில் சூரனைச் சுற்றி ஒரு வட்டமடிக்க , அந்த சமயம் பார்த்து தயாராக இருந்த கோயில் பொடியள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மடப்பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாம்பழக்கடகங்களை எடுத்துவந்து சூழ்ந்திருந்த சன சமுத்திரத்துக்குள் நாலாபக்கமும் எறிவார்கள். சனமும் இளைஞர்களை ஆவென்று பார்த்திருந்து பழங்களை எறியும் தருணம் ஒவ்வொன்றிலும், தூக்கியெறியப்படும் மாம்பழங்களைப் போல ஓடியோடி மாம்பழம் எடுப்பதில் முனைப்பாக இருப்பார்கள். என்னதான் மாம்பழம் வாங்குமளவிற்கு வசதியிருந்தாலும் இப்படிக் கோயில் பழங்களை எடுத்துக் கொண்டுபோவது அவர்களுக்கு ஒருஆத்ம திருப்தி தரும் விசயம்.

மாம்பழத்தைக் கத்தியால் தோல் சீவிப் பின் பழங்களை நறுக்கிச் சாப்பிடுவது எனக்குப் பிடிக்காத விசயம். புலம்பெயர்ந்து வந்த பின் கை நழுவிப் போன சுதந்திரங்களில் அதுவும் ஒன்று. கறுத்தக்கொழும்பானின் மேல் முனையைக் கடித்துத் துப்பிவிட்டுத் தோலைப் பல்லால் இழுத்து துயிலுருவிப் பின் அந்தத் தோற்பாகத்திலிருக்கும் எச்சமான பழச்சுவையப் பல்லல் காந்தி எடுத்து நாக்கில் அந்தப் பழ எச்சத்தைப் போட்டுச் சுவை மீட்டுவிட்டு பின்னர் எஞ்சிய பழத்தின் பெரும் பாகத்தினைச் சாப்பிட்டுப் மாம்பழக்கொட்டையை உருசிபார்த்து சுவைப்பது ஒரு அலாதி இன்பம். மாம்பழச் சுவையின் பெருமையை உணர இதுவே தலைசிறந்த வழி. அம்புலிமாமாவில் தொடங்கி ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஆனந்தவிகடன், செங்கை ஆழியான் என்று என் வாசிப்புப் பயணம் தாவியபோது வெறும் கல்லூரி நூலகங்களையும் வாசிகசாலைகளையும் மட்டும் நம்பியிருக்கமுடியாமல் என் வாசிப்பு வேகம் அந்தப் புத்தகங்களை வாங்கி வாசித்துப் பத்திரப்படுத்துவதிலும் முனைந்தது. ஒரு ஆசிரியக்குடும்பத்தில் இது சற்றே அதிகமான ஆசை, காரணம் வாங்கிக்குவிக்கும் புத்தகத்தில் எண்ணிக்கையும், அவற்றின் விலையும். அதற்கு கை கொடுக்குமாற் போல எனக்கு ஒரு யுக்தியைக் காட்டியவர் என் அம்மம்மா.

எங்களூரில் “தெரு” என்ற குறிப்பெயரோடு ஒரு சிறு சந்தை இருந்தது. தெருமுனையில் இருந்ததால் அந்தப் பெயர் வந்தது. மருதனாமடத்திலிருந்தும், சுன்னாகத்திலிருந்தும் மரக்கறிச் சாமான்களைத் தொகையாக வாங்கி வந்து சிறு இலாபம் வைத்து இந்தச் சந்தையில் விற்கப்படுவதுண்டு. என் அம்மம்மா சொன்ன யுக்தி இதுதான். எங்கள் வீட்டின் முன் இருந்த சேலன் (சேலம்) மாமரத்தின் காய்களைப் பறித்துக் கொண்டுவந்தால் தான் இந்த தெருவில் இருக்கும் வியாபாரிகளிடம் விற்றுத் தருவதாக.

நான் அப்போது இளங்கன்று தானே, சர சரவென்று சேலம் மாமரத்தில் ஏறி நான் காய்களைப் பறித்து எறியக் கீழே சாக்குப் பையுடன் காத்து நிற்கும் அம்மம்மா இலாவகமாக எறிப்படும் மாங்காய்களைத் தாங்கிப் பத்திரப்படுத்துவார். சேலம் மாங்காய் சொதி செய்வதற்கு மிகவும் நல்லதொரு காய்.இருபதில் ஆரம்பித்து ஐம்பது, நூறாக மற்றைய மாமரங்களிலும் பறித்து வளர்ச்சிகண்டது என் மாங்காய் வியாபாரம். சைக்கிளில் உரப்பையில் நிறைத்த மாங்காயுடன் தெருவுக்குப் போய் அம்மம்மாவின் பேரம் பேசலில் ஒரு காய் 1 ரூபாவிலிருந்து இலாபம் வைத்து நடந்த மாங்காய் வியாபாரத்தின் முதலீடுகள் ராணி காமிக்ஸ், மல்லிகை, கமலம் பிரசுரம், யாழ் இலக்கிய வட்ட வெளியீடுகளாக மாறின.

மாங்காய் விற்ற காலத்தில் பார்த்த முகம் தான் என் அம்மம்மாவின் நினைவில் இறுதியாகப் பதிந்திருந்த என் முகம். புலம் பெயர்ந்து வந்து நான் ஒரு ஆளாகித் திரும்பித் தாயகம் போக முன்பே அம்மம்மாவும் இறந்து போய்விட்டார். இன்றைக்கு நான் ஓவ்வொரு டொலரையும் இயன்றவரை அதன் பயன் உணர்ந்து செலவழிப்பதற்கு என் பால்ய கால மாங்காய் வியாபாரம் தான் அடிப்படை.

புலம்பெயர்ந்து நான் வாழும் நாட்டில் இப்போது வசந்தகாலப் பருவம். வசந்தகாலத்தை வரவேற்கும் அறிகுறிகளில் மாம்பழங்களின் வருகையும் ஒன்று. தலைகுனிந்து பவ்யமாக ஒரு அணியில் நின்று கூட்டுப்பிரார்த்தனையில் நிற்கும் மாணவர் கூட்டம் போல ரோட்டோரப் பழக்கடைகளில் மாம்பழங்களின் அணிவகுப்பு. பழமொன்றை வாங்கி வந்து , வீட்டில் வைத்து வெட்டப்பட்டு வாய்க்குள் போய் ருசி பார்க்கப்படுகின்றது.
“என்ன இருந்தாலும் எஙகட ஊர் மாம்பழம் போல வராது ” மெளனமாகச் சொல்லிப்பார்க்கின்றேன்.

உயரே மாமரக் கொப்புக்களூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாயச் சிதறியோடும் வெம்பல் மாங்காய்களாய் எம் சமூகம்.

(மாம்பழ வியாபாரப்படங்கள் Paddy’s Market Flemington, Sydney இல் இக்கட்டுரைக்காகப் பிரத்தியோகமாக எடுக்கப்பட்டவை)