பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று


கடந்த வார வீரகேசரி வாரமலரை எடுத்துப் புரட்டாமலே ஒரு வாரம் கழிந்து விட்டது என்ற நினைப்பில் நேற்று அந்தப் பத்திரிகையை மேய்ந்தேன். கண்ணிற் பட்டது கவிஞர் எருவில் மூர்த்தியின் மரணச் செய்தி.மட்டக்களப்பு வன்னியனார் தெருவைச் சேர்ந்த பிரபல கவிஞர் எருவில் மூர்த்தி ஜனவரி 11 ஆம் திகதி இறந்ததாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கு ஜனவரி 14 ஆம் திகதி மாலை நடைபெறும் என்றும் இருந்தது. நாகப்பன் ஏரம்ப மூர்த்தி என்ற எருவில் மூர்த்தி அவர்கள் அரச எழுது வினைஞராகக் கடமையாற்றியவர். இவருக்கு சிவயோகம் என்ற மனைவியும் கயல்விழி என்ற மகளும் (தற்போது மணமுடித்து கனடாவில்) உள்ளனர்.

இவர் இலங்கை வானொலி தேசிய சேவை, ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பிரபல பாடகர்களான வனஜா சிறீனிவாசன், சத்தியமூர்த்தி, சுஜாத்தா அத்தநாயக்க, அமுதன் அண்ணாமலை, கணபதிப்பிள்ளை, எஸ். இராமச்சந்திரன், வீ முத்தழகு, ஜோசப் இராஜேந்திரன், மற்றும் பல பாடகர்களுக்கும் பாடல்கள் இயற்றியுள்ளார். மறைந்த எருவில் மூர்த்தியின் பாடல்களுக்கு திரைப்படப் புகழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.செல்வராஜா, ஆர்.முத்துசாமி, எம்.கே.ரொக்சாமி, யாழ்.கண்ணன் – நேசன் போன்றோர் இசையமைத்துள்ளனர். ( தகவல் – வீரகேசரி ஜனவரி 14, 2007)

இந்தச் செய்தியைப் படித்ததும் என் நினைவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாவியது. ஒரு வழக்கமான புதன்கிழமை மாலை ” முற்றத்து மல்லிகை” என்ற ஈழத்துக் கலைப்படைப்புக்களைத் தாங்கிய நிகழ்ச்சியைச் செய்கின்றேன். அடுத்து ஒரு பாடல் “இயற்கை அன்னையின் கலைக்கூடம்” பாடலை இயற்றியவர் இணுவில் மூர்த்தி என்று என் ஊர் நினைப்பில் தவறுதலாகச் சொல்லிப் பாடலை ஒலிபரப்புகின்றேன். ஒரு நேயரின் தொலைபேசி அழைப்பு ” அவர் இணுவில் மூர்த்தி இல்லை, எருவில் மூர்த்தி” என்று திருத்திய அப்பெண் குரல் , நான் அதுவரை அறியாத அக்கவிஞரின் சிறப்பையும் சொல்லிச் சிலாகிக்கின்றார். தவற்றுக்கான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே “முடிந்தால் எருவில் மூர்த்தியின் தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா?” என்று நான் கேட்கவும் அந்த நேயர் தருகின்றார். நவம்பர் 17 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் எருவில் மூர்த்தியை வான் அலைகளில் சந்திக்கின்றேன் இப்படி.

வணக்கம் எருவில் மூர்த்தி அவர்களே!
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் என்றும் எம் ஈழத்து நினைவுகளோடு இருக்கும் எம் உறவுகளுக்கு உங்களின் இலக்கியப் பணியின் ஆரம்பம் குறித்துச் சொல்லுங்களேன்.

நான் கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்பில் எருவில் என்ற கிராமத்தில் பிறந்தவன். அந்தக் கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 17 மைல்களுக்கு அப்பால் உள்ளது. 5 ஆம் வகுப்பு வரை அங்கே படித்தேன். பின்னர் திருகோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி கற்கச் சென்றேன். அங்கு படித்துக்கொண்டிருக்கும் போது நான் அநேகமாகப் பத்திரிகைகளில் வரும் கதை, கவிதைகளைப் படிப்பது வழ்க்கம், அப்போது எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆரவம் தோன்றியது. சிறு சிறு பாடல்களையெல்லாம் எழுதினேன். ஆனால் அவையெல்லாம் சரியான பாடல்களா , இலக்கண முறைப்படி அமைந்தனவா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனபடியால் அவைகளை நான் பிரசுரிக்க அனுப்பவில்லை. நான் 8 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது வீரகேசரியின் சிறுவர்களுக்கான பகுதியில் பூஞ்சோலை என்ற கட்டுரையை எழுதியனுப்பினேன். அது உடனே பிரசுரிக்கப்பட்டது. அதன் பின்னர் நான் 16 , 17 வயதிலே கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டேன். நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் தமிழ் மீது நிறைய ஆர்வம் இருந்தது.

இலங்கை, இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் படிப்பதில் ஆர்வமுடையவனாக இருந்தேன். எனது 18 ஆவது வயதில் எழுதுவினைஞராக உத்தியோகம் கிடைத்தது, கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்தேன். பின் 19 ஆவது வயதில் மட்டக்களப்பிற்கு மாற்றலானேன். என் 20 வயதில் பயிற்சிக்காகக் கொழும்பு சென்றிருந்தபோது கவிஞர் மஹாகவி அவர்களைச் சந்திக்கும் பெரும்பேறு கிடைத்தது. அவர் அப்போது “தேன்மொழி” என்ற பெயரில் கவிதை நூலொன்றை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் நானும் ஒரு சந்தாதாரராகித் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். தேன்மொழியில் அழகான சிறப்பான கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்குச் சுவை கொண்ட கவித்துவம் நிறந்த கவிதைகள் அவை. முக்கியமாக நாவற்குழியூர் நடராசன், கவிஞர் மஹாகவி, சில்லையூர் செல்வராசன், மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த திமிலைத் துமிலன், நீலாவணன் என்று எல்லோரும் எழுதினார்கள். இவர்களுடைய கவிதைகளைப் படிக்கும்போது நானும் எழுதுவேன், பின்னர் கிழித்தெறிந்துவிடுவேன்.

அதன் பிறகு என் 21 ஆவது வயதிலே மட்டக்களப்பில் நடந்த இனக்கலவரத்தில் என் இரண்டு கண்களும் பறிபோயின. அதாவது 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி சிங்களம் மட்டும் என்ற சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட்து. அதனை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையிலே ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. அதிலே பல அரசியல்வாதிகள் குறிப்பாக, வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், போன்றோர் கலந்துகொண்டார்கள். அவர்களையெல்லாம் காடையர்கள் தடிகளால் அடித்தும் கற்களால் எறிந்தும் பல அட்டகாசங்களைச் செய்தார்கள். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான அனர்த்தங்களும் ஏற்பட்டன.

இதன் காரணமாக இங்கே மட்டக்களப்பிற் கூட சத்தியாக்கிரகம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது எம்.பி ஆக இருந்த திரு ராசதுரை தலைமையில் இது நடைபெற்றது. மட்டக்களப்பில் கடையடைப்புக்கள் போன்றனவும் நிகழ்ந்தன. அதனால் இங்கு ஒரு சதித் திட்டம் உருவாகியது அதாவது தமிழர்களை எப்படியாவது பயமுறுத்தவேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள், மற்றும் இங்கிருந்த சிங்கள முதலாளிகள் சேர்ந்து ஒரு அனர்த்தத்தை 1956 யூன் 8 ஆம் திகதி ஏற்படுத்தினார்கள். இரவு 10.30 மணியிருக்கும் கராஜ் ஒன்றிற்கு நெருப்பைக் கொழுத்திருப்பதைக் கண்டு இளைஞர்கள் நாங்கள் சேர்ந்து அந்த நெருப்பை அணைத்துக் கொண்டிருந்த போது சிங்களவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். கராஜிற்கு எதிர்க்கடையில் வேலை பார்த்த தங்கராஜா, மற்றும் ராஜேந்திரன் (வயது 15) ஆகியோர் அங்கே கொல்லப்பட்டார்கள். 8 பேர் காயமடைந்தார்கள். 3 வயது பிள்ளை ஒன்றுக்கு சன்னம் பட்டு நல்லவேளையாகத் தப்பியது.
மற்றது நான், என் வலது கண்ணில் பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் இடது பக்கப் பின்புறமாக்ச் சென்று வலது கண்ணை முழுதாகச் சிதைத்துவிட்டது. இடது கண்ணையும் மூளையையும் தொடர்பு படுத்தும் பகுதி (Optic nerve) சிதைந்து விட்டது. எனக்கும் பார்வை போய் வேலையும் போய்விட்டது.

கொழும்புக்கு வைத்தியத்துக்காகக் கொண்டுசெல்லப்பட்டேன். அப்போதைய தொழிற்சங்கத்தலைவர் கே.சி.நித்தியானந்தம் அவர்களக் உதவி செய்தார். பின் கொழும்பிலிருந்து இந்தியா எக்மோர் hos pitalஇலும் வைத்தியம் பார்க்கப்பட்டது, பின்னர் இங்கிலாந்திலிருந்து திருகோணமலை வந்த கப்டன் Patric என்ற வைத்தியரையும் சந்தித்தேன். எதுவுமே செய்யமுடியவில்லை. எனது பார்வை நரம்புகள் செயலிழந்து பார்வை மீண்டும் கிடைக்காமல் போனது. ஆகவே நான் எனது குக்கிராமத்திலேயே தங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படியிருக்கும் போது பத்திரிகைகள், சஞ்சிகைகளை எனது சகோதரர்களும் நண்பர்களுமாக வாசித்துக் காட்டுவார்கள். அதன் மூலமாக எனக்கு இலக்கிய ஆர்வம் நிறையவே வளர்ந்து கொண்டு வந்தது. அப்பொழுது நான் பாடல்களைப் புனையத் தொடங்கினேன். முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே நா.ஏரம்ப மூர்த்தி என்ற பெயரிலேயெ சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. தன் காதலிக்கு ஒரு வண்டைத் தூது விடுகிறேன் இப்படி:

போதவிழ்ந்த புது மலர்கள் தேடி நித்தம்
பித்தனைப் போல் சுற்றுகின்றாய் பேதை வண்டே
போடுகின்றேன் கேளுனக்கு நானோர் வார்த்தை
உத்தமியாள் என் சுசியைச் சென்று நீ பார்.
கோதையவள் கன்னமதில் ரோஜா காண்பாய்
குறு நகை செய் இதழ்களிலே முல்லை காண்பாய்
போதை பெறத் தேனெதற்குபோய்ப் பார்
எந்தன் பொற்கொடியாள் புன்னகையே போதுமென்பாய்.

சுதந்திரன் அப்பொழுது தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழரசுக்கட்சியில் கொள்கைகளயும் பாடல்களைவும் அப்பத்திரிகை வெளியிட்டு வந்தது. அந்தப் பத்திரிகையில் நிறையப் பாடல்களை எழுதினேன். அனேகமாக அவை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாடல்களாக அமைந்திருந்தன.

மெல்லிசைப்பாடல்களில் உங்கள் பங்களிப்புக் குறித்து?

72 ஆம் ஆண்டிலே மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்டு வந்தன.நாவற்குழியூர் நடராசன் அவர்கள் இலங்கை வானொலியின் பணிப்பாளராக இருந்தபோது தான் மெல்லிசைப் பாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டு நானும் எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கும் ஏற்பட்டது. நான் எழுதி அனுப்பிய இரண்டு பாடல்களுமே ஒலிபரப்பப்பட்டன. அப்பொழுது வானொலி நிகழ்ச்சி அமைப்பளராக் இருந்த இரா.பதமநாதன் (பின்னாள் தினக்குரல் ஆசிரியர்) “மூர்த்தி நீர் எழுதிய பாடல்கள் அருமையாக இருக்கின்றன ” என்று அந்தப் பாடல்கள் ஒலிபரப்ப முன்னரேயே கடிதம் எழுதினார். வி,முத்தழகு பாடிய பாடல்கள் அவை.

தித்திக்கும் செந்தமிழில் சித்தம் கசிந்துருகி
நித்தமும் உனைப் பாடுவேன் – முருகா
இருளின் மத்தியில் உனைத்தேடினேன்.

என்று தொடங்கும் ஒரு பாடல்.

இந்தப் பாடல் ஒலிபரப்பாகி அடுத்த மாதத்தில் புலவர்மணி பெரியதம்பி அவர்கள் பஸ் நிலையத்தில் கண்டபோது சொன்னார். “தம்பி! உமது பாடல்கள் நன்றாக இருக்கின்றன, இன்னும் எழுதுங்கள் ” என்று. அதன் பிறகு நிறைய மெல்லிசைப் பாடல்களை எழுதினேன்.

உங்களது இலக்கியப் படைப்புகள் எதாகினும் நூல் வடிவில் வந்திருக்கின்றனவா?

இல்லை, வரவில்லை.

உங்களது இலக்கிய ஆசானாக வரித்துக்கொண்டவர்?

அப்படி ஒருவரும் இருக்கவில்லை, ஆனால் மஹாகவி அவர்கள் மட்டக்களப்பில் O.A ஆக இருந்த போது அடிக்கடி சந்திப்பார். அவரை நான் முன்னோடியாக ஏற்றுக்கொண்டவன். அதாவது துரோணர் ஏகலைவன் போல.

ஒலிப்பதிவைக் கேட்க

எருவில் மூர்த்தியின் இரண்டு மெல்லிசைப் பாடல்களைத் தருகின்றேன், இதோ கேட்டு ரசியுங்கள்.

இயற்கையின் சிறப்பைக் கவிஞர் தன் கவி வரிகளில் இப்படித் தருகின்றார்.

இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்

இயற்கை இறைவனின்……..

தாரகை சோலையில் வெண்ணிலவும் – ஒரு
தண்மலர்ச்சோலையில் பெண் நிலவும் (2)
பேரருள் கலைஞனின் கைத்திறமே – அவை
பேசவும் இனித்திடும் சித்திரமே..

இயற்கை இறைவனின்……..

வான் என்னும் மேடையில் ஒரு பாதி – அவன்
வைத்தனன் பூமியில் அதன் மீதி
ஏன் என வாழ்ந்திட மனிதா நீ
அவன் செய்தவை யாவிலும் கலைவீடு

இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்

பாடலைப் பாடியவர்கள்: முல்லைச் சகோதரிகள்
இசை: ஆர்.முத்துசாமி

பாடலைக் கேட்க

மழலையைக் கண்ட கவிஞர் மனம் இப்படிப் பாடுகின்றது.

வட்டக்கருவிழி வண்டுகளோ
உந்தன் வண்ண உடல் மலர் செண்டுகளோ
பட்டு இதழ்களில் கட்டவிழ் புன்னகை
மொட்டவிழ் முல்லையோ….. புத்தொழியோ

வட்டக்கருவிழி………

கொஞ்சும் மழலைகள் அஞ்சுகமோ
தேவன் கோயில் உமதில நெஞ்சகமோ
பிஞ்சு உடலின் மிஞ்சி வரும்
மணம் கஞ்சமென் மாமலர் தந்ததுவோ

வட்டக்கருவிழி……….

நெற்றி சுடரொளி வான் பிறையோ -எந்தன்
நெஞ்சில் நீ பெய்வதும் தேன் மழையோ
தத்தி நடந்து எனை கட்டியணைத்து – நீ
முத்தம் தரும் செயல் தான் கலையோ

பாடலைப் பாடியவர் அம்பிகா தாமோதரன்
இசை: எம். கே.ரொக்சாமி

பாடலைக் கேட்க

கவிஞர் எருவில் மூர்த்திக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
இப்பதிவு அவருக்குச் சமர்ப்பணமாகவும் அமைகின்றது.

மாட்டுவண்டிச் சவாரிகள்…!

ஜல்…..ஜல்….ஜல் என்று மாட்டு வண்டி ஒன்று றோட்டில் போகும் சத்தம் கேட்கிறது. வீட்டுக்குள்ளிருந்து அந்தச் சத்தம் கேட்டு ஓடிப்போய் வெளியே பார்க்கிறேன். இருக்க இடமே இல்லாமல் முழுமையாகக் குழை நிரப்பிய மாட்டு வண்டி ஒன்று தெருவில் நடைபயின்று போகின்றது. வெறுப்போடு உள்ளே போகின்றேன். கொஞ்ச நேரத்தில் இன்னொரு மாட்டுவண்டிச் சத்தம் வருகிறது. எட்டிப் போய்ப் பார்க்கின்றேன். மாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன். தாவடியில் இருக்கும் என் சித்தி வீடு வந்ததும் வண்டியிலிருந்து துள்ளிப் பாய்ந்து வெளியேறி, சித்தி வீட்டுக்குள் நுளைகின்றேன். கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டுத் திண்ணையில் இருந்தவாறே றோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இணுவில் பக்கமாகப் போவதற்காக ஒரு மாட்டு வண்டி வருகிறது. துள்ளிப் பாய்ந்து ஒட்டி மீண்டும் என் மாட்டுவண்டிச் சவாரி இன்பத்தை அனுபவித்துக் கொண்டே என் வீடு நோக்கிப் போகின்றேன். ” உவன் பிரபு வந்த மாதிரிக் கிடக்கு, காணேல்லை ஆளை” பின்னால் என் சித்தி பின்னாற் கதைப்பது கேட்கின்றது. குறும்பாகக் கொடுப்புக்குள்ள சிரித்துக்கொண்டு மாட்டுவண்டிச் சவாரியில் மூழ்குகின்றேன். இது என் இளமைக்காலச் சந்தோஷ நினைவுகளில் ஒன்று.

மாட்டுவண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி மாளாது, 1980 களின் நடுப்பகுதி வரை எங்களூரில் கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் மாட்டுவண்டி தான். தாவடிப் பிள்ளையார் கோயிலில் திருக்கார்த்திகை விளக்குப்பூசை எங்கள் வீட்டு உபயமாக நடைபெறும் ஒவ்வொரு வருஷமும் பூபாலசிங்கம் மாமா தன் மாட்டுவண்டியோடு அன்று காலையே வந்துவிடுவார். இணுவிலிலிருந்து கோயிலுக்குத் தேவையான சாமான் சக்கட்டுகளோடு குஞ்சுகுருமான்கள் எங்களையும் ஏற்றிக்கொண்டு மெல்ல நகரும் மாட்டுவண்டி. வண்டியின் வெளிப்புறம் காலை நீட்டி வருவதற்கான இட ஒதுக்கீட்டில் சின்னனுகள் எங்களுக்குள் பெரும் போட்டியே நடக்கும். இரவுப்பொழுது திருவிழா முடிந்ததும் பொங்கற்பானை நைவேத்தியம் சகிதம் வண்டி வீடு திரும்பும்.

பங்குனித்திங்கள் காலத்திலும் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலத்திற்கு மாட்டுவண்டிகள் புடை சூழ யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் வண்டி கட்டி வந்துபோன காலமும் என் நினைவில் இருந்து நீங்காதவை.

“கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்” என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ள, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும்.

சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் செல்லும் வழியில் இளைப்பாறி நீராகாரம் அருந்திப்போக வசதியாக முக்கிய சந்திப்புக்களில் நீர்த்தொட்டிகள் இருந்த காலமும் என் ஞாபக இடுக்குகளில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்குச் சமீபமாகவும் முனியப்பர் கோயிலடியிலும் இவை இருந்ததாக நினைப்பு.

எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்கு ஆறரைப் பூசைக்கு வண்டி கட்டி வந்து ஐயர் தந்த திருநீறையும் குங்கும சந்தனத்தையும் காளைகளின் நெற்றியில் தடவித் தன் வேலையைத் தொடங்கும் விசுவலிங்கமும், எங்கள் புகையிலைத் தோட்டத்திற்கு குழை தாக்கும் வேலைக்காகப் பூவரசம் இலை நிரவிய மாட்டுவண்டி சகிதம் தோட்டம் வரும் மாரிமுத்துவும் மாட்டுவண்டிக்காலத்தின் சில சாட்சியங்கள். 80 களின் நடுப்பகுதியில் இருந்து நவீனத்தின் ஆக்கிரமிப்பில் லாண்ட்மாஸ்டர் என்ற பதிலீடு மாட்டுவண்டிக்காலத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியாக வந்து இப்போது முழு அளவில் ஆக்கிரமித்துவிட்டது என்றே சொல்லலாம். விசுவலிங்கமும் காலைப்பூசைக்குத் தன் லாண்ட் மாஸ்டரில் வரத்தொடங்கிவிட்டான். மாடுகளின் நெற்றியில் தடவிய நீறும் சந்தனமும் லாண்ட் மாஸ்டரின் எஞ்சினில் இப்போது.

எங்களூர்த் தெருக்களில் ஜல் ஜல் என்று கழுத்துமணியெழுப்பி குழம்பொலிகள் சந்தம் சேர்த்த மாட்டுவண்டிகளுக்குப் பதில் லாண்ட் மாஸ்டரின் கர்ணகொடூரச் சத்தம். அடுத்த தலைமுறைக்கு மாட்டுவண்டிகள் காட்சிப் பொருளாகும் காலம் நெருங்கிவிட்டது.

இந்த நேரத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்படும் மாடுகள் தருவிக்கப்பட்ட வரலாற்றையும் சொல்லவேண்டும். வடக்கன் மாடுகள் என்றவகை மாடுகளே இதற்கெனத் தனித்துவமான பாவனையில் இருந்தவை. வடக்கன் மாடுகள் என்ற பதம் வரக்காரணம் ஈழத்தின் வடக்கே உள்ள இந்தியாவிலிருந்து தான் இவை முன்னர் தருவிக்கப்பட்டவை. இது பற்றி மேலதிக விபரங்களை நான் தேடியபோது சிட்னியில் தற்போது வாழும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இ.சிவகுரு தாத்தா தந்த தகவல்களின் படி 1940 களின் தான் சின்னப்பையனாக இருந்த காலப் பகுதியில் பெரியோர்கள் சொன்ன கூற்றுப் படி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காங்கேசன் துறை போன்ற இறங்கு துறைகள் ஈழத்தின் பாரிய துறைமுகங்களாக விளங்கியவையாம். இந்த இறங்குதுறைகளுக்கே 40 களுக்கு முந்திய காலகட்டத்தில் இப்படியான தமிழ்நாட்டிலிருந்து மாடு தருவிக்கும் முறைமை இருந்ததாகச் சொல்லுகின்றார்.

சலங்கு என்ற பாய்மரக்கப்பல்கள் உதவியுடன் ஈடுபட்ட இந்த இறக்குமதி வர்த்தகம் வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில், இறக்குமதியாகும் பொருட்களோடு ஊர்காவற்துறைத் துறைமுகத்தில் பாதுகாப்புக்காகக் கட்டிவிடும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இப்படி ஊர்காவற்துறைக்கு மாற்றலாகும் முறைமை “ஒதுக்கான இடம்” தேடிப் போவது என்று சொல்லப்பட்டுவந்தது.

தில்லைச்சிவனின் “அந்தக் காலக்கதைகள்” என்ற நூலை தட்டிப்பார்த்தேன். 1928 ஆம் ஆண்டு சரவணை என்ற தீவுப்பகுதியில் பிறந்த அவரின் பிள்ளைப்பிராய நினைவுப் பதிவாக இருக்கும் அந்நூலில் இப்படிக் கூறுகின்றார்.

“அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டுவந்த இரண்டு வடக்கன்மாட்டுகாளைகள். ஊர்காவற்துறையில் உள்ள மாட்டுகாலைக்கு இந்தியாவில் இருந்து கப்பலில் இருந்து வந்து இறங்கி நின்றவை அவை. அண்ணாமலை மாடுகள், வெள்ளை வெளேரென்ற நிறம். நன்கு கொழுத்ததும் தளதளவென்ற மினுமினுப்பும் கொண்டவை. ஈ இருந்தால் வழுக்கி விழுந்து விடக்கூடிய வழுவழுப்புள்ள காளைகளின் கொம்புகளோ, நீண்டுயர்ந்து கூடு போன்றவை..” அந்தக்காலத்த்தில் ஒரு ஆயிரம் ரூபாவுக்கு முன் பின்னாக விலை கொடுத்து எனது பாட்டனர் வாங்கிக் கொண்டு வந்தார், இப்படி நீண்டு செல்கின்றது அந்த நினைவுப்பகிர்வு.

வரதரின் மலரும் நினைவுகளில் கூட இதையே இப்படிச் சொல்கின்றார்.
அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள “திருவண்ணாமலை” என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும். “உரு” என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் அந்த மாடுகள் இந்தியாவில் ஏற்றப்பட்டு இங்கே ஊர்காவற்துறையில் இறக்கப்படும். இப்படி மாடு வரும், காலத்தில், அவ்ற்றை வாங்குவோரும், தரகர்களும், சும்மா விடுப்புப்பார்க்க வருபவர்களுமாக ஊர்காவற்துறை திருவிழாக்காலம் போலக் களை கட்டிவிடும்.

வட தமிழீழத்தித்திற்கு ஒரு மகாகவி (உருத்திரமூர்த்தி) போல தென் தமிழீழத்தில் கவிப் பணி ஆற்றிய சிறப்பு மிக்க கவிஞர் நீலாவணன் (சின்னத்துரை). நீலாவணனின் கவியாழத்தின் விசாலத்தைப் பகிர எனக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். எனவே அவரின் கவிப் படையலில் தோன்றிய முத்து “ஓ வண்டிக்காரா” கவிதையையும் அது ஈழத்து மெல்லிசைப் பாடலாக எப்படி மாறியது என்பதையும் செவியில் நனைக்க இங்கே தருகின்றேன். இந்த மூலக்கவி ஈழநாடு பத்திரிகையில் 21.06.1965 ஆம் ஆண்டு வெளிவந்தது.

கவி வரிகளைப் பாருங்கள் எவ்வளவு அழகுணர்ச்சி தென்படுகின்றது. என் மழலைப் பருவத்தின் இலங்கை வானொலி அனுபங்களில் மெல்லிசைப் பாடலாக வந்த இந்தப் பாடல் காலம் கடந்தும் அதே சுவை குன்றாது என் ரசனையில் பதிவாகி இருக்கின்றது. கண்ணன் – நேசம் என்ற புகழ் பூத்த ஈழத்து இரட்டையர்களின் இசையும், மா. சத்தியமூர்த்தியின் குரலும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது. பாடலில் கலந்து வியாபித்திருக்கும் புல்லாங்குழல் போன்ற தேர்ந்தெடுத்த வாத்தியங்கள் பாடலைச் சேதாராம் பண்ணாமல் நம் தாயகத்துக் கிராமியச் சூழ்நிலைக்கு மனதைத் தாவவிடுகின்றன.

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! – ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா….

பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே – ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

பாடலைக் கேட்க

1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு “களத்தில் கேட்கும் கானங்கள்” பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது.

இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளைத் தமிழகப் பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்கின்றார்கள். ஒரு மாட்டு வண்டிக்காரன் பயன்படுத்தக்கூடிய எளிமையான சொல்லாடலும், அன்றைய காலகட்டத்தின் அவன் கொண்டிருந்த மனப்பாங்கையும், தன் மாட்டுடன் பேசிக்கொண்டே பயணிப்பதாக அழகாகத் தன் கவி வரிகளில் அடக்குகின்றார் புதுவையார்.

தமிழீழத்தின் தன்மானமுள்ள வண்டிக்காரன் விடுதலைப்புலிகளின் வீரத்தையும் தீரத்தையும் வியந்து பயணவெளிப்பாதையில் பாடுகிறான் இப்படி:

நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவப்புக்காளை நாளை விடியப்போகுது (2)

பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்
பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்

நடடா ராசா….

ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லிப்பாடும்
இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லிப்பேசும் (2)

நீலமேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்துப் போகும் (2)
நீங்கள் வெற்றி சூட வேண்டும் என்று வாழ்த்துக்கூறும்
என்றும் வாழ வாழ்த்தும்…..

நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவப்புக்காளை நாளை விடியப்போகுது

ஊரில் எங்கும் புலியைத் தேடி ஊர்வலங்கள் வாரும்
கூரை எங்கும் குண்டு போட்டுப் பாரும் (2)
போரில் எங்கள் புலிகள் செய்த புதுமை கேட்டுப் பாரும்
புலரும் காலை தலைவன் மீது பரணி ஒன்று பாடும்
தரணி எங்கும் கேட்கும்…….

நடடா ராசா……..

காடு மேடு வீதியெங்கும் கண்விழித்துக் கொள்வார்
காற்றில் கூட எங்கள் வீரர் கண்ணிவெடிகள் வைப்பார்

போற்றி போற்றி பிள்ளையாரே
புலிகள் வாழ வேண்டும் (2)

பேய்கள் ஓடிப் போக வேண்டும்
புலிகள் ஆள வேண்டும்
நாங்கள் வாழ வேண்டும்…….

பாடலைக் கேட்க

அதாவது நம் தேசத்தின் வரலாற்றுச் சூழ்நிலைக்கேற்ப இந்த மாட்டுவண்டிப் பயணம் எப்படியான கவியைப் புனைய வைத்திருக்கின்றது என்பதற்காகவே இந்த இரண்டு பாடல்களைத் தந்திருக்கின்றேன். இரண்டு வேறுபட்ட காலப்பகுதியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம், தான் சந்திக்கும் பாதிப்பையே இலக்கியமாகப் பெருமளவில் வடிக்கின்றது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
அதே மாட்டு வண்டி, அதே பாதை ஆனால் சூழ்நிலையும் தான் எதிர் நோக்கும் வாழ்க்கை தான் பாடலாகின்றது.

ஓ வண்டிக்காரா பாடலின் எழுத்து வடிவம் அனுமதி பெற்று மீள் பதிப்பிக்கப்படுகின்றது.
நன்றி: neelaavanan.com