“அண்ணை றைற்”

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு பகுதியூடாகச் செல்லும் பஸ்களும் அவற்றின் இலக்கத்தைத் தாங்கி நிறைவுத் தரிப்பிடப் பெயர் கொண்டு நிற்க, அவற்றின் பக்கத்தில் நிற்கும் அந்தந்த பஸ் கண்டக்ரர்கள் ஆட்களைக் கூவிக் கூவி அழைக்கின்றார்கள். ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி சுற்றுப் போய் மீண்டும் வரலாம் என்ற அல்ப ஆசை என் அடிமனத்தில் அப்போது தோன்றினாலும் அடக்கிக்கொண்டு, கையிலிருந்த போன புகைப்படக்கருவி மூலம் அக்காட்சியை ஒளிப்படமாக அடக்குகின்றேன்.
எம்மூரில் ஒவ்வொரு தொழிலையும் தம் தம் எல்லைகளுக்கு உட்பட்டு அவற்றை அனுபவித்துச் செய்பவர்களை காய்கறிக்கடைக்காரர், கமக்காரரிலிருந்து பஸ் ஓட்டுனர்கள் வரை நாம் தரிசித்திருக்கிறோம். நான் புலம் பெயரமுன்னர் கிளாலிப் பயணம் ஊடாக வவுனியா வரும் பயணத்தில் மினிபஸ் பயணமும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. வாகன ஓட்டுனர் தன் பங்கிற்குப் பாடல் தெரிவில் ஈடுபட (பெரும்பாலும் நெய்தல், உதயம் போன்ற எழுச்சிப் பாடல்கள் அப்போது) , துணையாகப் பணச்சேகரிப்பில் ஒருவரும், இன்னொரு இளைஞர் (கைத்தடி!) பயணிகளின் பொதிகளை இறக்கும் உதவியாளனாகவும் இருப்பார்கள். பயணிக்கும் வயசாளிகளைச் சீண்டிப்பார்ப்ப்பது. ஏதோ நகைச்சுவை ஒன்றை விவேக் ரேஞ்சிற்குச் சொல்லிவிட்டு இளம் பெண்களை ஓரக்கண்ணால் எறிந்து, அவர்கள் தனது நகைச்சுவைக்கு எந்தவிதமான முக பாவத்தைக் காட்டினார்கள் என்று உறுதிப்படுத்துவது, வாகனச்சாரதி தவிர்ந்த மற்ற இரண்டு பேரின் உப வேலை. அதைப் பற்றி சொல்ல இன்னொரு பதிவு வேண்டும்.

தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன். நானறிந்த வரை ” அண்ணை றைற்’ என்ற இந்தத் தனி நடிப்பு எழுத்துப் பிரதியாக முன்னர் வரவில்லை. எழுத்துப் பிரதியாக நான் இதை அளிக்கக் காரணம், இந்தப் படைப்பின் பிரதேச வழக்கை மற்றைய ஈழத்துப் பிரதேச வாசிகள், மற்றும் தமிழக நண்பர்கள் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அமைந்திருக்கும் இப்படைப்பு மூலம் சில பிரதேச வழக்குச் சொற்களையும் நீங்கள் கண்டுணர ஒரு வாய்ப்பு. தமிழக நண்பர்களுக்கு மட்டும் ஒரு செய்தி, இந்த கே.எஸ்.பாலச்சந்திரனின் படைப்பான “வாத்தியார் வீட்டில்” நாடக ஒலிச்சித்திரம் தான் நடிகர் கமலஹாசனுக்கு தெனாலி படக் குரல் ஒத்திகைக்குப் பயன்பட்டது.

நான் எதேச்சையாக இலங்கை வானொலியின் பண்பட்ட கலைஞர் லண்டன் கந்தையா புகழ் சானா என்ற சண்முக நாதனின் நினைவு மலர் மற்றும் பரியாரி பரமர் உரைச்சித்திரம் தாங்கிய நூலைப் புரட்டியபோது, கே.எஸ்.பாலச்சந்திரன் அந்நூலில் வழங்கிய நினைவுக்குறிப்பில் இப்படிச் சொல்கின்றார்.
“தனிப்பாத்திரங்களை நகைச்சுவையாக அறிமுகம் செய்யும் வகையிலே, “பரியாரி பரமர்” போன்ற நடைச்சித்திரங்களை சானா’ அவர்கள் எழுதியிருக்கின்றார். மிகவும் சுவையான இந்தக் காலப்பதிவுகள் நூல் வடிவில் கொண்டுவரப்படல் வேண்டும்”
இதைத் தான் “அண்ணை றைற்” மூலம் ஒரு அணிலாக என் பங்களிப்பைச் செய்திருக்கின்றேன் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு.

” அண்ணை றைற்” தனி நடிப்பு, எழுபதுகளில் ஆரம்பித்து எண்பதுகளின் நடுப்பகுதி வரை பாடசாலைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் ஒரு சிறப்பானதொரு படையலாகக் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் பெருவாரியான ரசிகர் வட்டத்தை அவருக்கு வளர்த்துவிட்டது. சென்ற பதிவில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி நான் எழுதியதை வாசித்துப் பின்னூட்டம் மட்டுமல்ல தனிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் மூலமும் பல நண்பர்கள் அதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஒரு நண்பர் சின்னப் பிள்ளையாக மாறி ரொம்பவே அதைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னொருவர் அடிக்கடி கோயில் திருவிழாக்களின் தணணீர்ப்பந்தல்களில் ஒலிபெருக்கியில் பாடல்கள் தவழவேண்டிய வேளைகளில் “அண்ணை றைற்” ஐத் திரும்பத்திரும்பப் போட்டதை நினைவுபடுத்தினார். “அண்ணை றைற்” கேட்டுக்கொண்டே தண்ணீர்ப் பந்தலில் சக்கரைத் தண்ணீரை மெது மெதுவாகக் குடித்ததை மறக்கமுடியுமா?

ஒரு பஸ் கொண்டக்ரர் தான் சந்திக்கும் மனிதர்களின் (தன்னையும் கூட) குணாதிசயங்களை நகைச்சுவையாகச் சொல்வதினூடே நம் தாயகத்து வெள்ளாந்தி மனிதரிகளின் சுபாவங்கள் எங்கோ கேட்ட, பார்த்த விஷயமாக இருக்கிறேதே என்று யோசித்தால், அது நமக்கும் நேர்ந்த அனுபவம் என்று தானாகவே உணரலாம். அதாவது நமது அன்றாட அசட்டுத் தனமான அல்லது வேடிக்கையான செயல்களை மற்றவர்கள் இன்னொருவரைக் குறிப்பொருளாகக் காட்டிச் சொல்லும் போது நமக்கு அது நகைச்சுவையாக இருக்கின்றது.

ஒரு பஸ்ஸில் வந்து போகும் பாத்திரங்கள் ஒன்றையும் தவறவிடாது அனைவரையும் இவர் விட்டுவைக்கவில்லை. கிழவியாகட்டும் , இளம் பெண்ணோ , இளம் பையனோவாகட்டும் அவர்களில் குரலாகவும் மாற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் நடித்திருப்பது இந்தத் தனி நடிப்பின் மகுடம். சரி இனி உங்களிடமேயே விட்டுவிடுகின்றேன். ஒலியைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

உங்கள் அபிமானத்துக்குரிய கலைஞர், தனிநடிப்புப் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் வழங்கும் “அண்ணை றைற்”

ஒலி வடிவில் கேட்க

நெல்லியடி, அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர்,
நீர்வேலி கோப்பாய், யாழ்ப்பாணம் எல்லாம் ஏறு
அண்ணை கொஞ்சம் பின்னாலை எடுத்து விடுங்கோண்ணை.

அண்ணை றைற் அண்ணை றைற்

அவசரப்படாதேங்கோ எல்லாரையும் ஏத்திக்கொண்டுதான் போவன்
ஒருத்தரையும் விட்டுட்டுப் போக மாட்டன்.

தம்பீ ஏன் அந்தப் பொம்பிளைப்பிள்ளையளுக்கை நுளையிறீர்
கொஞ்சம் இஞ்சாலை வாருமன்.
நீர் என்ன அக்கா தங்கச்சியோட கூடப் பிறக்கேல்லையே?
நீர் என்னும் சரியான ஹொட்டல்லை சாப்பிடேல்லை போல கிடக்கு
கொஞ்சம் இஞ்சாலை அரக்கி நில்லும்.

ஆச்சீ!! பொடியனுக்கு எத்தினை வயசு?
இருவத்தஞ்சு வயசிருக்கும், புட்போல் விளையார்ற வயசில
இடுப்பிலை வச்சுக்கொண்டு நாரி முறிய முறிய நிக்கிறாய்
டிக்கற் எடுக்கவேணும் எண்ட பயமோ
இறக்கிவிடணை பெடியனை
(ஆச்சி தனக்குள்) அறுவான்
என்ன சொன்னீ? அறுவானோ? பார்த்தியே? முன்னாலை போணை.

தம்பீ அதிலை என்ன எழுதியிருக்கு தெரியுமே?
புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது, ஆஆ
ஆரோ காதல் விலக்கப்பட்டுள்ளது எண்டு மாத்திப்போட்டு போட்டான்
முந்தியிருந்தது புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது.
நீரென்ன சிமெந்து பக்ட்றி புகை போக்கி மாதிரி
புக்கு புக்கெண்டு விட்டுக்கொண்டிருக்கிறீர்?
யன்னலுக்குள்ளால இறியும் கொள்ளிக்கட்டையை
இல்லையெண்டால் நான் உம்மை எறிஞ்சுபோட்டு போடுவன் யன்னலுக்குள்ளாலை.

இந்தக்காலத்துப் பெடியள் பாருங்கோ வலு பொல்லாதவங்கள்
கண்டபடி கொழுவக்கூடாது
அண்டைக்கு இப்பிடித்தான் பாருங்கோ ஒருதனோடை கொழுவிப் போட்டு நான் வந்து ஸ்ரைலா
வந்து புட்போர்ட்டிலை நிண்டனான்.
அவன் இறங்கிப் போகேக்கை எட்டிக் குட்டிப் போட்டு ஓடீட்டான்
அண்டையில இருந்து பாருங்கோ கொழுவிற நாட்கள்ள
புட்போட்டிலை நிக்கிறதில்லை, புட்போட்டிலை நிக்கவேணுமெண்டால் நான் கொழுவிறதில்லை
வலு அவதானம்.

அண்ணை எடுங்கோண்ணை, அண்ணை றைற்…..

ஒருத்தரும் புட்போட்டிலை நிக்கக்கூடாது,
எல்லாரும் உள்ளுக்கை ஏறுங்கோ அல்லாட்டா இறங்கோணும்
ஒருத்தரும் புட்போட்டிலை நிக்கவிடமாட்டன் இண்டைக்கு
முந்திப் பாருங்கோ இப்பிடிப் புட்போட்டில கனபேர் நிண்டால்
ஒரு வேலை செய்யிறனான் இப்ப செய்யிறதில்லை
முந்திக் கனபேர் புட்போட்டிலை நிண்டால்
ஒரு வேலை செய்யிறனான் என்னண்டாப் பாருங்கோ
எல்லாரும் உள்ளுக்கை ஏறவேணும் இல்லாட்டா இறங்கவேணும்
இல்லாட்டா பஸ் போகாது எண்டு சொல்லிப் போட்டு
நான் கீழ… நிலத்தில இறங்கி நிக்கிறனான்
இப்ப அப்பிடிச் செய்றேல்லை
அண்டைக்கு இப்பிடித் தான் பாருங்கோ கனபேர் புட்போட்டிலை நிண்டாங்கள்,
நான் சொல்லி அலுத்துப் போய் கீழ இற்ங்கி நிலத்தில நிண்டண்
உள்ளுக்கை நிண்ட படுபாவி ஆரோ மணி அடிச்சு விட்டுட்டான்
மணியண்ணருக்குத் தெரியாது நான் கீழை இறங்கி நிண்ட விஷயம்
ரண்டரைக் கட்டை தூரம் துரத்து துரத்தெண்டு துரத்திப் போய்
ஒண்டரைக் கட்டை தூரம் ரக்சியில போயெல்லே பஸ்ஸைப் பிடிச்சனான்.
அண்டையில இருந்து உந்த விளையாட்டு விர்றேல்லை.

அப்பூ! அந்தக் கொட்டனை விட்டுட்டுப் போணை,
அது பத்திரமா நிற்கும், விழாது.
ஏதோ தூண் பிடிச்ச மாதிரி இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறீர்.
தம்பீ! முன்னாலை இருக்கிற அய்யாவோட கோபமே? ஒட்டப் பயப்பிர்றீர்.
தள்ளி முன்னுக்கு கிட்டக் கிட்ட நில்லுங்கோ.

நான் சொன்னால் நம்ப மாட்டியள் முன்னால இரண்டு பேர் நிக்கினம்
என்ன கதைக்கினம் எண்டு பாருங்கோ
வீட்டில சொல்லிப் போட்டுவாறது பள்ளிக்கூடத்துக்குப் போறன்
படிக்கப் போறன் டியூசனுக்குப் போறன் எண்டு, என்ன கதைக்கினம் எண்டு பாருங்கோ
பெண்குரல் : “இஞ்சருங்கோ அண்டைக்கு வாறன் எண்டு சொல்லிப் போட்டுப் பிறகேன் வரேல்லை”
ஆண்: நான் எப்பிடி வாறது? நான் வரேக்கை உங்கட கொப்பர் கொட்டனோட நிக்கிறார்.
நான் பயத்திலை விட்டுட்டு ஓடியந்துட்டன்
பெண்குரல்: என்ன சொன்னாலும் உங்களுக்கு என்னிலை விருப்பமில்லை என்ன?

தம்பீ கொஞ்சம் முன்னாலை அரக்கி நில்லும்,
தங்கச்சி கொஞ்சம் இஞ்சாலை அரக்கி வாணை.
அண்ணை கொஞ்சம் இறுக்கிப் பிடியண்ணை,
இது வலு ஆபத்தா வரும் போல கிடக்கு.

உதார் மணியடிச்சது?
அப்பூ ! உதென்ன குடை கொழுவுற கம்பியெண்டு இனைச்சீரே?
மணியடிக்கிற கம்பீல குடையைக் கொழுவிப்போட்டு தொங்கிப்பிடிச்சுக்கொண்டு நிக்கிறார்
கழட்டும் காணும் குடையை
என்னது மான் மார்க் குடையோ?ஓம் மான் மார்க் குடை
எ எ என்ன என்ன என்ன? ஒழுகாதோ?
இப்ப மணியடிக்கிற கம்பீல குடையைக் கொழுவிப் போட்டு
மான் மார்க் குடை ஒழுகாது எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறீர்
கழட்டும் காணும் குடையை.

அண்ணை எடுங்கோண்ணை……அண்ணை றைற்

தம்பீ! தாறன் பொறுமன் அந்தரிக்கிறீர்
பொறுமன் ஒரு அஞ்சியேத்து மிச்சக்காசுக்கு
அண்ணை அண்ணையெண்டிருக்கிறீர்
உங்களுக்குத் தான் சொல்லுறன் ரகசியம்
ஆராவது மிச்சகாசு தாங்களாக் கேட்டாலொழிய, நான் குடுக்க மாட்டன்
அப்பிடியும் மிச்சக்காசு கொடுக்கிறதுக்கு ஒரு வழி இருக்குப் பாருங்கோ என்னட்டை.
அண்ணையண்ணை மிச்சக்காசு…..அண்ணையண்ணை மிச்சக்காசு எண்டு சுறண்டு சுறண்டெண்டு சுறண்டி
என்ர யூனிபோர்ம் கிழிஞ்சு, யூனிபோர்முக்கை இருக்கிற சேர்ட்டுக் கிழிஞ்சு, சேர்ட்டுக்கை இருக்கிற பெனியன் கிழிஞ்சு உடம்பில சுறண்டுமட்டும்
நான் திரும்பியும் பார்க்கமாட்டன்.
அப்பிடியும் மிச்சக்காசு கேட்கிறவங்கள் இருக்கிறாங்கள் பாருங்கோ.
தப்பித் தவறி அப்பிடி மிச்சக்காசு என்னட்டைக் கேட்டினமெண்டால்
பத்துரூவா தந்திட்டு ரண்டு ரூபா போக
எட்டு ரூபா காசு மிச்சம் குடுக்கவேணுமெண்டால் ஒரு வேலை செய்வன்
இருவத்தாஞ்சு அம்பேசம் குத்தியாக் குடுத்திடுவன்
அவர் கை நிறையக் காசை வாங்கிக் கொண்டு
மேலையும் பிடிக்கமாட்டார், கீழையும் பிடிக்க மாட்டார்
கையில கிளிக்குஞ்சு பொத்திப் பிடிச்சது மாதிரிப் பொத்திப் பிடிச்சுக்கொண்டு நிற்பார்.
எப்படா இறங்குவம், இறங்கிக் இந்தக் கையை விரிச்சுக்
காசை எண்ணுவம் எண்டு காத்துக் கொண்டு நிற்பார்.
நான் மணியடிப்பன், மணியண்ணன் அடுத்த கோல்டிலை தான்
பஸ்ஸைக் கொண்டுபோய் நிற்பாட்டுவார்.

இறங்கி, நிலத்தில காலை ஊண்டிக் ,கையை விரிச்சு எண்ணிப்பாப்பார்,
ரண்டு மூண்டு ரூபாய் குறைஞ்சிருக்கும். பஸ் பறந்திருக்கும்.
எனி உந்த பஸ்ஸைத் துரத்திக்கொண்டு நான் ரக்சி பிடிச்சுக்கொண்டு
போறதோண்டு என்னைத் திட்டித் திட்டி வீட்டை போயிடுவார்.

இன்னுமொரு புதினம் பாருங்கோ.
பஸ்ஸுக்குள்ள தங்கச்சிமார் கனபேர் இருந்தால்
தம்பிமார் மிச்சம் கேளாயினம்.
இருபத்தைஞ்சு அம்பேசம் மிச்சம் கேளாயினம் வெட்கத்திலை.
தூர இருந்துகொண்டு மெல்லிசாக் கையைக் காட்டிக் கொண்டே கேட்பினம்
” அண்ணோய், ருவன்றி பைப் சென்ற்ஸ்”
” அண்ணோய், ருவன்றி பைப் சென்ற்ஸ்”
நான் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டன்.

உதார் மணியடிச்சது?
ஆறு பேர் இறங்கிறதுக்கு ஆறு தரம் மணியடிக்கிறீரே?
டாங்க் டாங்க் டாங்க் எண்டு
ஆறு தரம் அடிச்சால் பஸ் நிக்காது காணும்.
நிண்டு நிண்டு போகும்.
கண்டறியாத ஒரு மீசையோட முழுசிறீர்.

அண்ணை எடுங்கோண்ணை……அண்ணை றைற்

தம்பி கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவன்.
எல்லாரும் கொஞ்சம் முன்னுக்குப் போங்கோவன்.
உங்களுக்குச் சொன்னா என்னப் பாருங்கோ
இந்த உலகத்திலை எல்லாரும் முன்னுக்குப் போகவேணுமெண்டு
நினைக்கிற ஒரெயொரு சீவன் நான் தான்.

அண்ணை கோல்ட் ஓன்.

அண்டைக்கு இப்பிடித் தான் ஒருத்தர் இன்ரவியூவுக்குப்
போகவெண்டு என்ர பஸ்ஸில வந்தார்.
படுபாவிக்கு ரை கட்டத் தெரியேல்லை.
ஆராவது தெரிஞ்சாளைக் கேட்டுக் கட்டியிருக்கலாம்.
இவன் தானே ரை கட்டிப் பழகியிருக்கிறான், சுருகு தளமாக் கட்டி.
சுருகுதளமாக் கட்டிக்கொண்டு இவர் வலு ஸ்ரைலா வந்து நிண்டார் பஸ்ஸுக்குள்ள.
பக்கத்திலை ஒரு கட்டைக் கிழவன் நிண்டது.
மணியண்ணன் மாடொன்றைக் கண்டுட்டுச் சடன் பிறேக் போட
பக்கத்திலை நிண்ட கட்டைக் கிழவன் பார்த்திருக்கு
எல்லா பாறிலயும் ஒவ்வொருதனும் தொங்கீனம்
நான் பிடிக்க ஒரு பாறில்லையே எண்டு ஏங்கின கிழவன்
இவற்றை ரைடயைக் கண்டிட்டுது.
பாஞ்செட்டி ரையைப் பிடிக்க சுருகுதளம் இறுகு அவர் இப்பிடி நிக்கிறார் மேலை.
எமலோகத்துக்கு இன்ரவியூவுக்குப் போக ஆயித்தம்.
நான் பக்கத்திலை இருந்த மனிசனிட்ட நல்ல காலம்
சின்ன வில்லுகத்தியொண்டு இருந்த படியால் டக்கெண்டு வேண்டி ரையை அறுத்திருக்காவிட்டால் அவர் மேலை எமலோகத்துக்குப் போய் இன்ரவியூவுக்கு நிண்டிருப்பார்.

அண்டைக்கொரு பெடியன் கைநிறையப் புத்தகத்தோட வந்து பஸ்ஸுக்க நிண்டான்.
நான் கேட்டன், “தம்பி எப்பிடி நீர் நல்ல கெட்டிக்காரனோ” எண்டு”.
ஓம் எண்டு சொன்னான்.
நான் உடன கேட்டன், சரித்திரத்தில ஒரு கேள்வி.
தம்பீ? கண்டி மன்னன், கடைசி மன்னன் விக்கிரமராசசிங்கனுக்கு கடைசியில ஏற்பட்ட கதி என்ன?
டக்கெண்டு நான் கேட்டன்.
பொடியனும் உடன டக்கெண்டு மறுமொழி சொல்லிப்போட்டான்.
பொடியன் உடன சொன்னான்.
“அதோ கதி தான் ” எண்டு.
பெடியள் வலு விண்ணன்கள்.

மணியண்ணர் ஓடுரார் பாருங்கோ ஓட்டம், என்ன
மணியண்ணனுக்கு சந்தோஷம் வரவேணும் பாருங்கோ
சந்தோஷம் எப்பிடி வரவேணும் எண்டு கேட்கிறியள்?
தலை நிறையப் பூ வச்சு, சாந்துப் பொட்டுக் கம கமக்க
காஞ்சிபுரம் சாறி சர சரக்க மணியண்ணையின்ரை சீற்றுக்குப் பின்னால்
சீற்றில வந்து இருக்க வேணும்.
மணியண்ணன் சாடையாக் கண்ணாடியைத் துடைச்சுப் போட்டு
ஒரு பார்வை பார்த்துப் போட்டு ஓடுவார் பாருங்கோ ஓட்டம்.

அண்டைக்கு இப்பிடித் தான் பாருங்கோ
ஒரு சந்தோஷம் வந்து மணியண்ணற்ற சீற்றுக்குப் பின்னால இருந்திது.
மணியண்ணர் கண்ணடியில பார்த்துப் போட்டு ஒட்டினார் பாருங்கோ ஓட்டம்
றோட்டில சனம் சாதியில்லை.
ஞாயிற்றுக்கிழமை இல்லை, நல்ல வேர்க்கிங் டே.
றோட்டில சனம் சாதியில்லை.
சைக்கிள்ள வந்த வேலாயுதச் சட்டம்பியார்
சைக்கிளைக் கானுக்கிள்ள போட்டுட்டு
மதிலாலை ஏறிக்குதிச்சிட்டார். அந்தளவு ஓட்டம்
மாலி சந்தையடியில வரேக்க பாருங்கோ
மாடொண்டு குறுக்கை வந்துது
மணியண்ணர் வெட்டினார் ஒரு வெட்டு
பஸ் எங்கை நிண்டது தெரியுமே?
பக்கத்து பாண் பேக்கரிக்கை நிக்குது.
மணியண்ணரைக் காணேல்லை.
“ஐயோ மணியண்ணை,
இருபது இருபத்தஞ்சு வருசம் என்னோட வேலைசெய்த மணியண்ணை
எங்கையண்ணை போட்டியள்” எண்டு நான்
கத்தி, விசிலடிச்சுக் கூக்காட்டிப் போட்டுப் பார்க்கிறன்.
மணியண்ணன் பேக்கரிக் கூரேல்லை நிண்டு ரற்றா காட்டுறார்.
நான் எங்கை இருந்தனான் எண்டு கேக்கேல்லை?
பெரியாஸ்பத்திரியில வேலை செய்யிற பெரிய சைஸ் நேர்சம்மா
ஒராள் இருந்தவ, அவோன்ர மடியில பத்திரமா பக்குவமா இருந்தன்.

அண்ணை கோல்ட் ஓன்.

யாழ்ப்பாணம் வந்ததும் தெரியேல்லை. நான் கதைச்சுக் கொண்டு நிண்டிட்டன்.
அண்ணை கொஞ்சம் பின்னாலை அடிச்சு விடுங்கோண்ணை
நான் ஒருக்கா ரைம் கீப்பரிட்டை போட்டுவாறன்.

அண்ணை றைற்…..அண்ணை றைற்….. அண்ணை கோல்ட் ஓன்.

காற்றின் மொழி…..!

காற்றின் மொழி ஒலியா…..இசையா……?
பூவின் மொழி நிறமா….மணமா….?
கடலின் மொழி அலையா…நுரையா….?
காதல் மொழி விழியா….இதழா……?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

இன்று அலுவலகம் முடிந்து காரில் வீடு திரும்பும் போது கேட்டுக்கொண்டு வந்த மொழி திரைப்படப்பாடல் தான் அது. சில கண்ணீர்த்துளிகள் என்னையறியாமலேயே என் கண்களில் கருக்கட்டுகின்றன. Black ஹிந்தித் திரைப்பட அனுபவத்திற்குப் பின் என் உணர்வுகளைக் கண்ணீர்ச் சாட்சியமாக்கியது இப்பாடல்.

காரில் பயணிக்கும் போது தென்படுகின்றன நாளைய காதலர் தினத்துக் கொண்டாட்டத்திற்கான பூச்செண்டு விற்பனை நிலையங்கள். பெற்றோல் போடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் போகின்றேன். கட்டணம் செலுத்தும் கியூவின் ஓரமாக தண்ணீர் நிரப்பிய வாளிகளில் பூச்செண்டுகள். ஒன்றைத் தாவி எடுக்கின்றேன். எனக்கு முன்னே நின்ற வெள்ளையர் திரும்பிப் பார்த்து முறுவலித்துவிட்டு ஏதோ யோசனை தோன்றியது போல தானும் ஒன்றை எடுத்துக்கொள்கின்றார். அன்பைக் காட்டக் கூட எடுத்துக்காட்டுகள் தேவை போலும். கியூ மெதுவாக நகருகின்றது. காரில் அமர்ந்து வீதிப்படுக்கையில் சக்கரங்கள் ஏறி அமர்ந்து நகர, மீண்டும்….மீண்டும் அதே பாடலை ஒலிக்கவிடுகின்றேன். எனக்குள் ஆயிரம் சிந்தனைகள்.

காதலர் தினத்தை நாம் வாழும் நாட்டில் கொண்டாடுமாற் போலக் கொண்டாட என் சொந்த நாடும் அந்த நிலையில் இல்லை. காதலனைக் கைப்பிடித்து சிங்களப் படைகளின் பாலியல் பலாத்காரத்தினால் அழிந்து போன கன்னியர் கதைகள் பல . வேலிப் பொட்டுக்குள்ளால் கடிதம் எறிந்து போராட்டம் பல கண்டு தான் விரும்பியவளைக் கைப்பிடித்து இன்று பூஸாவில் தடுப்புக் கைதியாகவோ அல்லது செம்மணி போல புதை குழிகளுதொலைந்து போன காளையர்கள் க்குள் புதைந்தவர்களும், சொந்த நாடு தொலைத்து ரஷ்ய எல்லைகளுக்குள் பனிக்காடுகளுக்குள் தொலைந்து போனவர்களுமாக கதை பலவுண்டு. என்னுடைய வாழ்வில் இப்படிச் சந்தித்தவர்களை நினைத்துப் பார்த்தேன். எழுத முடியவில்லை…….

வெளிநாடு வரும் வரை என்னோடு சைக்கிள் பாரில் நான் அமர, ஏசியா சைக்கிளை வலித்துக்கொண்டு கோயிலடிப்பக்கம் கொண்டு போகும் போது தன் காதல் அனுபவங்களை மீட்கும் நண்பன் சுதா நினைவுக்கு வந்தான். அவனும் இப்போது உயிரோடு இல்லை.

வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகரின் இசை கலந்து, சுஜாதா மற்றும் பால்ராம் இரு தனித்தனிப்பாடல்களாகப் பாடியிருக்கின்றார்கள்.அழகிய தீயே, பொன்னியின் செல்வன் போன்ற ரசனை மிகு திரைப்படங்களைத் தந்த இயக்குனர் ராதாமோகனின் படமிது. தன் நண்பன் மற்றும் இப்படத்தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்போகும் ஓப்பற்ற பரிசு என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். வாய்பேசமுடியாப் பெண்ணாக ஜோதிகா நடித்த இறுதிப்படம் கூட.
மொழி படம் பற்றிய காட்சித்தளம்: http://www.mozhithefilm.com/

பால்ராம் பாடும் போது இது குரலா வெண்கல ஒலியா என்று வேறுபடுத்த முடியாவிதத்தில் இசைக்கருவிகளில் ஒன்றாகக் கலந்து பாடலின் உணர்வுபூர்வமான வரிகளை மெய்ப்பிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது பாருங்கள் உள்ளத்து உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வலிமை கொண்ட இசையும் வரிகளும் அற்புதமாக அமைந்திருக்கின்றன.

பால்ராமின் குரலில் கேட்க

சுஜாதாவின் குரலில் கேட்க

காதலர் தினம் வெறும் காதலருக்கு மட்டும் தானா? நாம் நேசிக்கும் அனைவரையும் நினைத்துப் பார்க்கவும் ஒருமுறை இதைப் பொருத்திக் கொள்ளலாமே?

அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று என்பார்கள். அன்பு கொடுக்கக் கொடுக்கக் குறையாதது.
அன்னை தெரேசா ஒருமுறை தன் தொண்டுப்பணிக்காக பணம் சேர்க்க ஒரு செல்வந்தரை நாடுகின்றார். செல்வந்தரோ கண்டபடி ஏசி இவரை விரட்டப்பார்க்கின்றார்.
தெரேசாவோ பொறுமையாக
” நீங்கள் வாங்கிய திட்டை நான் எடுத்துக் கொள்கின்றேன்”, நான் நேசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று சொல்கின்றார். செல்வந்தர் வெட்கித் தலை குனிந்து பணத்தினை எடுத்துக் கொடுக்கின்றார்.
நாம் வருஷா வருஷம் தேர்த் திருவிழாவிற்கு மருதடிப்பிள்ளையார் கோயிலுக்குப் போய்விட்டு வரும் வழியில் இருக்கும் அந்தோணியார் கோயிலுக்கும் சென்று தரிசிப்பது வழக்கம். தன் கைகளை விரித்து அகலமாக் அன்னை மரியாள் பரிவோடு அழைக்கும் கோலம், மதம் என்னும் மாயை கடந்து தானே ஆலயத்தில் உள்ளே இழுக்கும். தேவாலயத்தின் முகப்பின் பெரிய கேற்றில் எழுதியிருக்கும் இப்படி.

” இதய தாகம் இருப்போர் வருக”

தன் பால்யத்திலேயே பார்வை தொலைத்துப் பேச்சும் இழந்த ஹெலன் கெல்லர், தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து படிப்பும் திறமையும் வளர்த்து தன் நிலை மற்றவருக்கும் வரக்கூடாது என்று வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் விளங்கினார். இன்று ஹெலன் கெல்லர் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற பணிகள் இன்னும் தொடர்கின்றன.

பிரபல ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீது வெளிநாடு ஒன்றிற்குச் சுற்றுப்பயணம் சென்றவேளை ஒரு சமயம் வேற்றுமொழிப் படமொன்றைப் பார்க்கின்றார். எத்தனையோ போராட்டத்தின் மத்தியில் நாளாந்த சீவியத்தைக் கழிக்கும் ஒருவனின் வாழ்க்கை பற்றியதான கதை அப்படத்தின் மையக்கரு. அதில் சொல்லப்படும் படிப்பினைகள் ஹமீதின் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டுபண்ணுகின்றது. உலகில் எத்தனை வகையான மனிதர்கள், எத்தனை வகையான வாழ்க்கை முறைகள், எத்தனையோ வாழ்க்கைப் போராட்டங்கள், ஆனால் நாமோ ஒரளவு எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்தாலும் எத்தனையோ காழ்ப்புணர்வுகளும், முரண்பாடுகளும் என்று இவர் மனதில் சிந்தனையோட்டம் ஓடுகின்றது. தாயகம் திரும்புகின்றார்.

ஒரு சந்தர்ப்பத்தில் கோபங்காரணமாக முப்பது வருடங்களாக பேச்சு வார்த்தை ஏதுமின்றி இருந்த தன் பால்ய கால நண்பனின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ பெற்று அவனைத் தொலைபேசியில் அழைக்கின்றார். ஹமீதுவால் பேசமுடியவில்லை, அழ ஆரம்பிக்கின்றார். நண்பனின் நிலையும் அதுவே. இருவருக்குள்ளும் கனன்று கொண்டிருந்த நெடு நாள் குரோதம் கண்ணீரால் கரைகின்றது. பழைய நட்பு மீண்டும் பூக்கின்றது. விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் பெற்றுத் தரும் லாபங்களே தனி.

அடுத்த வருஷக் காதலர் தினத்திற்குள்ளாகவாவது என்னால் மனமுடைந்து தொலைந்து போன நட்பு யாராவது இருந்தால் தேடிக் கண்டு கை கோர்க்கப் போகின்றேன். நீங்கள் எப்படி…?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்

ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.

நான் சிறுவனாக அந்தக் காலகட்டத்தில் அவரின் கலையுலக செயற்பாட்டின் ஆழ அகலம் முழுதுமாகத் தெரியாவிட்டாலும் நடந்து கொண்டே பள்ளி செல்லும் போது பக்கத்தில் வரும் பள்ளித் தோழன் ரூபனை உலுப்பி ” உங்கை பாரும், அண்ணை றைட் பாலச்சந்திரன்” என்று விழிகள் விரிய ஒரு சினிமா உலகப் பிரபலத்தைப் பார்க்கும் அதே பிரமிப்போடு பார்ப்பேன். ஒரு முறை எங்கள் மடத்துவாசல் பிள்ளையாரடி உற்சவகாலத்தில் பார்த்த “அண்ணை றைட்” நாடகம் தான் கே.எஸ்,பாலச்சந்திரன் அவர்களை அடையாளப்படுத்தியிருந்தது. கடந்த வருடம் மின்னஞ்சல் தொடர்பில் அவர் கிடைத்தபோது இப்படிச் சொன்னார்.

//Dear Kana praba,
Lot of people around Inuvil, Kondavil, Thavadi and Kokuvil remember me with my orange scooter(Bajaj) as I was travelling to Jaffna. I was working at Income Tax office in Jaffna during 1981 – 1983, until I got transferred back toColombo. My days in Inuvil was very happy and peaceful. My family left Inuvil in 1990. When Sengai Aliyan visited Canada few years back, I gave those stills from Vadai Katru, which he has published in his book. I’ve Vaadai katru in NTSC video and U-matic format. I hope to release them very soon.

Anbudan
K.S.Balachandran//

அதே காலகட்டத்தில் பி.விக்னேஸ்வரன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இருந்தபோது வாரத்தில் அரைமணி நேரப் பகுதிகளாக வழங்கிய “நாடு போற்ற வாழ்க” படத்தைப் பார்த்து பாலச்சந்திரனின் வில்லத்தனமான நடிப்பை ரசித்திருந்தேன். கவர்ச்சிகரமான தோற்றமும் , குரலும் இவர் மீதான ஈர்ப்புக்கு ஒரு காரணம் என்றால் மிகையாகாது. “வாடைக்காற்று”, “நாடு போற்ற வாழ்க”, “நான் உங்கள் தோழன்”, “அவள் ஒரு ஜீவ நதி” போன்ற படங்கள் இவரின் ஈழத்து சினிமா உலகின் பங்களிப்புக்கள்.


என் இளம்பிராயத்திலேயே இந்தக் கலைஞனைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பின்னர் தூர இருந்தாலும் இவரின் ஓவ்வொரு படைப்பையும் தேடி நுகரவைத்தது. தொண்ணூறுகளில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், இவர் தடுப்புக்காவலில் பல மாதங்கள் இருந்ததை அறிந்து வேதனையோடு, இந்தக் கலைஞன் வாழ்வில் விடிவு வராதா என்று மனதுக்குள் புழுங்கிய நாட்களையும் மறக்கமுடியாது.

1995 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் வெள்ளைப் புறாவைக் காட்டிச் சமாதான வேடம் பூண்ட வேளை என் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம். என் நண்பர் குழாமிலேயே நான் மட்டுமே வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க வேண்டிய நிலை வந்தது. கூடவே வந்த நட்பு வட்டத்தைத் தொலைக்கின்றேன். மனதுக்குள் அழுகின்றேன். அப்போது….

வெள்ளவத்தையில் உள்ள முத்துக்கருப்பன் செட்டியார் நகை மாளிகைக்கு மேலே இருந்த என் தங்கும் அறைக்கு நேரெதிரே இருந்தது Finaaz Music Corner. (இப்போதும் அது அதேயிடத்தில் இருக்கிறது, ஒவ்வொரு முறை தாயகம் போகும் போதும் மறக்காமல் அங்கே செல்வேன்).

பயணம் செல்ல ஒரே ஒரு நாள் தான் பாக்கி. Finaaz Music Corner செல்கின்றேன். கே.எஸ். பாலச்சந்திரனின் வாத்தியார் வீட்டில் நாடகப் பேழைகளின் மூன்று பாகங்களும் . (தெனாலி படத்துக்கு கமலஹாசனின் ஈழத்துப் பேச்சுப் பயிற்சிக்கு உதவிய அதே ஒலி நாடாக்கள்) , இவரின் தனி நடிப்பு ( அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரிலே) மற்றும் சக ஈழத்துக் கலைஞர்களோடு வழங்கிய நகைச்சுவைப் படையல்கள் (சிதம்பர ரகசியம், சவாலுக்கு சவால்) இவற்றைக் கொண்ட ஒலிப்பேழை ஆகியவற்றை அள்ளியெடுத்துக்கொண்டேன்.

அந்த ஒலிப்பேழைகளோடு புலம் பெயர்ந்தேன். அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் என் பகல் வேளைப் படிப்பு முடிந்து மாலை வீடு திரும்பித் தனியறையில் அடைபட்ட காலங்களில் வோக்மென்னில் (walkman) இந்த ஒலிப்போழைகள் ஒவ்வொன்றாகச் செருகிக் காதில் தமிழ் கேட்காத குறையைத் தீர்த்துக் கொண்டேன். நண்பர் வட்டத்தோடு பேசித்தீர்த்த அதே உணர்வோடு தூங்கப் போவேன்.

பின்னர் காலவோட்டத்தில் நட்பு வட்டத்திலும் வானொலியுடாகவும் தமிழ்த் தொடர்பு மீண்டாலும் என் புலம் பெயர்வாழ்வில் எனக்கு உயிர்கொடுத்து அந்நியப்படாமல் வைத்திருந்தத பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்களை மறவேன் நான்.

அந்த நன்றிக்கடனோ என்னவோ, பத்திரிகையோ இணைத்திலோ அறிந்து கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் கலையுலகில் 25 ஆண்டு நிறைவைப் போற்றி எனது முற்றத்து மல்லிகை வானொலி நிகழ்ச்சியில் ஒரு செவ்வியைக் கண்டிருந்தேன். (அந்த ஒலிப்பதிவையும் பின்னர் தருகின்றேன். )
மாதங்கள் கடந்தன. வாடைக்காற்று நாவல் மற்றும் திரைப்படம் குறித்த பதிவொன்றை தமிழ்மண நட்சத்திர வாரத்துக்காக எழுதியிருந்தேன். ஒரு நாள் ஒரு மடல் வந்தது. இப்படி.

//Dear Kana Piraba,

I’m that Balachandran from the movie “Vaadai Katru” presently living in Canada.
I was living in Inuvil for 14 years closer to Kalingan Theatre.
As I’m unable to write in Tamil using Unicode, I could’nt do any feed back on “Vaadai Katru” in your page. Anyhow thanks for your interest in Sengai Aliyan and his novels.

Anbudan
K.S.Balachandran//

K.S.Balachandran said … (January 17, 2007 4:46 AM) :
கானப்பிரபா,வாடைக்காற்று நாவலைப் பற்றி கூறப்போய் ஈழத்து திரைப்படங்களைப்பற்றிய பல தகவல்கள் வருவதற்கு களம் அமைத்திருக்கிறீர்கள்.//

என் புழுகத்துக்குச் சொல்லவும் வேண்டுமா? இருக்காதா பின்னை. எட்ட நின்று போற்றும் ஒரு கலைஞன் என் பதிவினை வாசித்துக் கருத்துச் சொன்னதுதான் அதற்கான ஒரே காரணம்.

ஆனால் முன்னரே அவரை வானொலியில் பேட்டிகண்டது நான் தான் என்பது அப்போது தெரிந்திருகவில்லை. என்னுடைய வாடைக்காற்று கட்டுரைத் தன் பிரத்தியோகப் பக்கத்திலும் சேர்த்துச் சிறப்புச் செய்தார்.
என் பங்கிற்கு பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்களைப் பலரும் கேட்கும் விதத்தில் அவ்வப்போது ஒலி வடிவில் தரவிருக்கின்றேன்.

அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரிலே, கோணர் சீற் கோபாலபிள்ளை, சிதம்பர ரகசியம், சவாலுக்குச் சவால், வாத்தியார் வீட்டில் (அனைத்துத் தொகுதிகளும்), கிராமத்துக்கனவுகள் போன்றவை தான் அவை.

அதற்கான அனுமதியை மின்னஞ்சல் மூலம் பாலச்சந்திரன் அவர்க்ள் தந்தது அவரின் பெருந்தன்மையில் வெளிப்பாடு.

இவர் போன்ற நம் ஈழத்துக் கலைஞர்கள் அண்டைத் தமிழகத்தில் பிறந்திருந்தால் இன்னும் வெளிச்சம் போடப்பட்டிருப்பார்களோ என்ற ஆதங்கமும் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.

அவற்றின் எழுத்துப் பிரதியாகவும் தட்டச்சு செய்து சமகாலத்தில் தரவேண்டும் என்பதால் நாள் எடுக்கின்றது. முதலில் “அண்ணை றைற்” வருவார்.

என் பதிவை முடிக்கும் போது ஒரேயொரு மனக்குறை என் மனதில் உழன்றுகொண்டிருந்தது. அதையும் சொல்லிவிடுகின்றேன்.
என் பத்துவயது காலத்தில் கண்ட அழகான குறும்பு தொனித்த முகத்தோடு இருந்த அந்தக் கலைஞன் இன்று இளமை தொலைத்து தாடி நிரப்பி ஏதோ சோகத்தைப் புதைத்து வைத்தது போல மூப்பின் வெளிப்பாடாக இருப்பதைக் காண மனம் ஒப்பவில்லை.

பாலச்சந்திரன் அண்ணாவின் இளமை திரும்பவேண்டும் , அவரின் இன்னும் பல கல கல கலைப்படைப்புகளின் மூலம் தான் அது முடியும்.

கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் வலைப்பக்கங்கள் இதோ:

http://actorksbalachandran.blogspot.com/

http://balachandran02.blogspot.com/

இணையம் வழி அவரின் குறும்படங்கள் மற்றும் படைப்புக்கள்
தாகம் -குறும்படம்

உயிரே உயிரே – குறும்படம்

மனமே மற்றும் காற்று – அறிமுக விழாத் துளி

மனமே மற்றும் காற்று – அறிமுக விழாத் துளி 2

வை.ரி.லிங்கம் ஷோ

தனி நடிப்பு வீடியோ

ஆரம் நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல் ஒளி

தமிழ் தகவல் விருது

வாடைக்காற்று குறித்த என் பதிவு

http://www.vaasal.kanapraba.com/?p=4786

யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதாவது 91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில் இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள் வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

ஐஸ்கிறீம் என்ற பெயர் காணாமற் போய்க் குளிர்களி என்று மாறியதும், விறகு காலை போய் மர அரிவு ஆலையாக மாறியதும், துர்க்கா என்ரபிறைசஸ் மறைந்து கொற்றவை கால்நடைத்தீனி வாணிபம் என்று மாற்றம் பெற்றதுமாக நிறைய மாற்றங்கள். அப்போது ஒரு வேடிக்கைப் பார்வையோடு எள்ளிநகையாடியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த மாற்றமே அங்கே வாழும் சமூகத்தின் புழக்கத்தில் அதிகம் வந்துகலந்துவிட்டதை அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து இப்போது புலம் பெயர்ந்திருப்பவர்களால் நன்கு உணரமுடியும். எப்போதும் நல்ல விஷயங்கள் ஆரம்பத்தில் கசக்கத்தான் செய்யும், காலம் கடந்து நீண்ட நோக்கில் பார்க்கும் போது அதன் அறுவடை செழுமையாக இருக்கும். இதைத் தான் நேற்றுக்கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கும் போது என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.

செந்தமிழ்ச் செல்வர் சு. சிறீ கந்தராஜாவின் “தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்” என்ற அந்த நூல் வெளியீடு விழாவில் திரு. தேவராஜா அவர்கள் ஆய்வுரை பகிர்ந்தபோது “தமிழோடு 25 வீத சமஸ்கிருதம் கலந்து மலையாளமாகியும், 50 வீத சமஸ்கிருதக்கலப்பில் தெலுங்காகியும், 75 வீதக்கலப்பில் கன்னடமாகியும்” தமிழ்மொழி கிளைமொழிகளாகித் தன் அடையாளத்தைத் தொலைத்துக்கொண்டு போவதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த நூலில் கூட நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார், “1100 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை கன்னடமொழி தமிழாகவே இருந்தது. 900 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது கி.பி. 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்கு மொழி தமிழாகவே இருந்தது. 700 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 13 ஆம் நூற்றாண்டு வரை மலையாளம் தமிழாகவே இருந்தது”.

கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் தமிழிலிருந்து தோன்றாமல் விட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவிலே இருக்ககூடிய தமிழனின் தொகை 21 கோடி என்கின்றார்.

ஓவ்வொரு முறை என் தாயகத்துக்கோ தமிழ்நாட்டுக்கோ செல்லும் போதோ நான் வாங்க நினைப்பது ஒரு தமிழ் அகராதி. ஆனால் புத்தகத்தின் கனம் தடைபோட்டுவிடும். அடுத்தமுறை போகும் போது ஒரு தமிழ் அகராதியை வாங்கிக் கடல் அஞ்சல் மூலமாவது அனுப்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்குக் கிடைத்தது “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி”.

தமிழ்மண் பதிப்பகம் சென்னை, மற்றும் சேமமடு பதிப்பகம் கொழும்பு ஆகிய பதிப்பாளர்களால் மே 14, 2006 ஆம் ஆண்டு மீள்வெளியிடப்பட்ட இப்புத்தகம் மெல்பன் தமிழ்ச்சங்கத்தால் அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கையெட்டும் தூரத்தில் கிடைக்கும் கனியை விடலாமோ? உடனே வாங்கிவிட்டேன்.
புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.
சந்திரசேகரப் பண்டிதர், மற்றும் சரவணமுத்துப் பிள்ளை ஆகியோரை ஆசிரியராகக் கொண்ட இந்நூல் கனதியான அட்டையோடு 486 பக்கங்களோடு வெளிவந்திருக்கிறது. பின் அட்டையில் இருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “பதிப்பரசர் எங்கள் படை” என்ற கவிதை மூலம் இந்நூலை மீள்பதிப்பாகக் கொண்டுவந்த கோ.இளவழகனை விதந்து பாடுகின்றார்.
நூலை விரிக்கின்றேன்.
அளவையம்பதி தமிழ்ப்புலவன் வேலுப்பிள்ளை குமாரன் கனகசபாப்பிள்ளையின் சிறப்புப் பாயிரம் முதலில் அணி செய்கின்றது. அந்த நேரிசையாசிரியப்பாவை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சந்தக்கவி இராமசாமியால் சீர்கள் பிரிக்கப்பட்டு இப்பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து உடுவைநகர் முத்துக்குமாரசுவாமி சிதம்பரப்பிள்ளையின் இருபத்து நான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமைகின்றது.
முதற்பதிப்பின் முன்னுரையில் (1842 ஆம் ஆண்டு) அமெரிக்கன் அச்சகத்தாரால் இப்படித் தொடர்கின்றது. “தமிழ்மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்ட இவ்வகராதி தமிழுலகின் முன்னர் சமர்ப்பிக்கப்படுகின்றது. அவ்வகராதியில் 58,500 சொற்கள் உள்ளன. அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களை விட நான்கு மடங்கு சொற்கள்”.

மீளப்பதிப்பில் வாழ்த்துரை வழங்கிய தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்றில் ” அகராதி என்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டு வழி வந்ததாகும். தமிழ்மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறையினுள் அகராதியில் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாகச் சொற்கள் தொகுதிகளாத் தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள், கடலுக்குக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை ஒரு பொருளுக்கான பல பெயர்கள் (Synonyms) எனவே கொள்ளவேண்டும்.

தமிழ்மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாகத் தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டுவருவதற்கு மேலை நாட்டு மரபு வழி வந்த அகராதி முறைமையக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரின் சதுரகராதி) புரட்டஸ்தாந்தக் கிறீஸ்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோசப் நைற் பற்றி பேராயர் செபநேசன் சந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் மெதடிஸ்ட மிஷன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து செயற்பட்டார் என்பது முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல் தான் ஆறுமுக நாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். ” என்று கூறிச் செல்கின்றார்.

அணிந்துரை வழங்கிய பேராயர் கலாநிதி.எஸ்.ஜெபநேசனின் குறிப்பில்”யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிமாரின் இன்னொரு பங்களிப்பினை ஆராயப் புகுவோம். மூன்று மிஷன் சங்கங்களையும் சேர்ந்த ஆரம்பகால் மிஷன் தொண்டர்கள் ஒரு தமிழ்-ஆங்கில அகராதி இல்லாத குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான பணியை மேற்கொண்டனர்.

1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய ஜோசப் நைற் என்பார் தமது பணியைத் தொடங்கிய நேரத்திலிருந்தே ஒரு பாரிய தமிழ் அகராதிகான தரவுகளைத் திரட்டத்தொடங்கினார். கொழுமைச் சேர்ந்த காபிரியேல் திசேரா (இவர் தமிழும் ஆங்கிலமும் அறிந்த தமிழர்), உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகரப் பண்டிதர், இருபாலையை சேர்ந்த சேனாதிராய முதலியார், லெஸ்லியல் மிஷன் போசிவர் உட்பட பல அறிஞர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார். துரதிஷ்டவசமாக ஜோசப் நைற் தமது வேலை பூர்த்தியாகு முன்னரேயே இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

உடுவிலில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரியாகிய லீவை ஸ்போல்டிங் என்பார் ஜோசப் நைற் அவர்களின் நண்பராகவிருந்த காரணத்தால் மறைந்த ஜோசப் நைற் திரட்டியவற்றைப் பெற்று , சாமுவேல் ஹற்சின்ஸ் என்ற மிஷனரி மூலமாக 1842 ஆம் ஆண்டு அச்சுவாகனமேற்றினார். ”

உடுவிலில் இருந்த பெண்கள் பாடசாலை மாணவிகள் இந்நூலுக்கான படியெடுக்கும் பணியைப் பாடசாலை முடிந்த பின்னரும் தொடங்கும் முன்னரும் செய்தனர்.

யாழ்ப்பாண அகராதி என்பதால் யாழ்ப்பாணத்தமிழுக்கான அகராதி இது என்று நினைப்பது தவறு. ஆனாலும் யாழ்ப்பணத்துத் தமிழ்ச்சொற்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பொன்னத்துப் பெட்டி – தாலி, கூறை வைத்துக்கொண்டு போம் பெட்டி, கசட்டைத் தயிர் -ஆடை நீக்கின தயிர் போன்றன அவற்றுட் சில என்கின்றார் அறிமுகவுரை வழங்கிய பா.ரா.சுப்பிரமணியன்.

இந்நூல் மானிப்பாய் அகராதி என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை தமிழ்த்தென்றல் என்பவரிடம் மூலநூலைப்பெற்று விடுபட்ட 100 பக்கங்களைப் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்று மீள் உருவாக்கம் செய்யப்பட்டதாகப் பதிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்த அகராதி நாற்பது டொலர் பெறுமதி என்றாலும் நூலில் பொதிந்திருக்கும் வரலாற்றுக் குறிப்புக்களுக்கும், தமிழ் அகராதிச் சொல் விளக்கத்துக்கும் எவ்வளவு கொடுத்தாலும் தகும்.