கல்லடி வேலரின் வாழ்வில்…!

பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளை (1860 – 1944) அவர்கள்.
இவர் கந்தப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே அஞ்ச நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவரின் ஆசிரியர்கள் ” வரும் காலத்தில் இவன் பெரும் புலவனாக வருவான்” என்றனர். அவர்கள் வாக்கும் பலித்தது.

ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் ” வித்தகர்” எனப் பாராட்டப்பட்டவர்.

“சுதேச நாட்டியம்” என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து தன் சொந்த அச்சகத்திலேயே நடாத்தி வந்த இவர் எழுதிய ” யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்ற நூல் மிக அரிதாகவே கிடைக்கின்றது. கதிரமலை பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன அவர் எழுதிய நூல்களாகும்.

திரு வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூல்நிலையங்களில் மட்டுமல்ல சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலும் மக்கள் பாவனைக்காக இன்றும் பேணிக் காக்கப்படுகின்றன. எழுதுவதில் மட்டுமன்றி தமிழில் எங்கு பிழையிருப்பினும் அதைத் திருத்தம் செய்யவும் தயங்கமாட்டார். இதனால் “கண்டனத்தில் வல்லோன்” கல்லடியான் எனக்கூறி அவரின் நண்பர்கள் மகிழ்வார்களாம். கல்லடி வேலரின் வாழ்வில் இடம்பெற்ற அச்சுவையான சம்பவங்கள் இங்கே தொகுப்பாகப் பதியப்படுகின்றன.

பூங்காக்குளத்தில் மீன் பிடித்த கதை

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஓர் குளம். அதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம்மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு மாநகரசபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இக்குளத்தில் உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது” என்று பெரிய அட்டை ஒன்றில் எழுதி குளத்தருகே நின்ற மரம் ஒன்றில் அதை மாட்டியதுடன், தம் பொறுப்பைச் செவ்வனே செய்தோம் என்ற மனநிறைவில் காவலர்கள் இறுமாந்திருந்தனர்.

ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்த கல்லடி வேலர் மரத்தில் என்ன அறிவித்தல் போடப்பட்டிருக்கின்றதென்பதை அறியும் ஆவலுடன் அருகில் சென்று வாசித்தார். வேதனையுடன் “நம் தமிழை நம்மவரே கொலை செய்கிறார்களே” இவர்களுக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என யோசித்தவர் வந்த தன் காரியத்தையும் மறந்தார்.

கடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்திலுள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். விஷயம் அறிந்த காவலர்கள் ஓடோடி அவ்விடம் வந்தனர். ” ஏய்!, ஏய் ! நீ யார் படிக்காத முட்டாளா? மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா? மடத்தனமான வேலை செய்கிறாயே” என அதட்டினர்.
“அவ்வறிவித்தலைப் பார்த்தபடியால் தானே மீன்களைப் பிடிக்கின்றேன்; என்னால் முடியும்” எனச் சொல்லிவிட்டுக்கருமமே கண்ணாயினார்.

காவலர்களுக்கோ சினம் தலைக்கேறியது. தொடர்ந்து ஏசியதுடன் அவரைக் கைது செய்யவும் முயன்றனர். தான் கூறியதன் அர்த்தம் அவர்களின் மரமண்டைகளுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், அவர்கள் “மீன் பிடிக்க முடியாது என எழுதிப் போடப்பட்டிருப்பது தவறெனவும் “மீன் பிடிக்கக் கூடாது” என எழுதிப் போடும்படியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். காவலர்கள் தம் பிழையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தனர். தம் தொண்டைச் செவ்வனே செய்த திருப்தியுடன் கல்லடி வேலர் வீடு போய்ச் சேர்ந்தார்.

தட்டியுண்ணும் செட்டி

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டனத்திற்கு வல்லோன் என்பதோடு சிலேடையாகப் பேசுவதிலும் திறமை கொண்டவர். இதற்கு உதாரணமாக அவர் வாழ்வில் நடந்த கதை ஒன்று.

செல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் ஒரு தவில் வித்துவானும் கூட. கலைவாணி தன் கருணைக் கடாட்சத்தை இவர்பால் தாராளமாக வீசியதால் இந்நிலையில் இவர் திறமையாக விளங்கினார். பல கச்சேரிகள் ஓய்வின்றிச் செய்தார். இதனால் கலைச்செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் சேர்த்துக்கொண்டார் செட்டியார். ஆனால தான தருமம் செய்வது செட்டியரைப் பொறுத்தவரைக் கசப்பான காரியமாக இருந்தது.ஏழை எளியவர்களுக்கு உதவுவது வெறுப்பை ஊட்டியது. இதனால் “கலைவாணன், “தவில் மேதை” என்று புகழ்ந்த மக்கள் “கர்மி”, “உலோபி” என இகழவும் தவறவில்லை.

“தண்ட வருவோரைக் கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே” என ஓர் அட்டையை எழுதி தன்னிடம் தர்மமோ நன்கொடையோ உதவி கேட்டு வருபவர்களிடம் காட்டி அவர்களை அனுப்பிவிடுமாறு செட்டியார் தன் பணியாளரிடம் பணித்திருந்தார்.

சிறப்பு மிக்க சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்கவும் தன் உற்றார், உறவினரைப் பார்த்து வரும் ஆவலிலும் வேலுப்பிள்ளை சிங்கப்பூர் போயிருந்தார். அவர் நடாத்திய சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையை சிங்கப்பூரிலுள்ள அனேக தமிழர்கள் மாதச் சந்தா, வருடச் சந்தா எனப் பணங் கட்டி வரவழைத்துப் படித்தார்கள். இவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒருவருச காலமாகச் சந்தாவை அனுப்பவில்லை. வந்த இடத்தில் அவரிடம் பேசலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என யோசித்த பிள்ளை செட்டியார் வீட்டுக்குப் போனார்.

அழைப்பு மணியை அழுத்தினார். பணியாள் என்ன வேண்டுமென வினவினான். ” உன் எசமானரைக் காண வந்தேன்” என்றார். “அவர் இப்போ இங்கு இல்லை, உமக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டான். ” என் பத்திரிகைக்குப் பணம் வாங்க வந்தேன்” எனப் பதில் கூறினார். பணம் வாங்க வந்தேன் என்ற சொல் கேட்டதும் பணியாள் மிகவும் சுறுசுறுப்புற்றான். விரைந்து சென்றவன் வேகமாக அறிவித்தல் பலகையைக் கொண்டு வந்தான். அதைப் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துவிட்டு உடனே போய்வரும்படி பணித்தான். வாசித்தவர் மிகவும் வெட்கமும் வேதனையும் அடைந்தார். செட்டியாரின் கர்வத்தை அவர் பாணியிலேயே அடக்க எண்ணினார்.

“தட்டியுண்ணும் செட்டியிடம்
தண்டுபவர் இங்கிருந்தால்
மட்டி அவர் என்றல்லோ
மதிப்பேன் பராபரமே”

என அவர் அறிவித்தலின் அடியிலே எழுதி , ” உன் துரை வந்ததும் மறவாமல் கொடுத்துவிடு” எனக்கூறிவிட்டுப் போய்விட்டார். செட்டியார் வீடு திரும்பியதும் ” இலங்கையில் இருந்து வேலுப்பிள்ளை என்பவர் பணம் வாங்க வந்தார், அறிவித்தலைக் காண்பித்தேன்,எதோ எழுதித் தந்துவிட்டுப் போய்விட்டார்” எனக்கூறிய பணியாள் பணிவுடன் கொடுத்தான்.

வாசித்தவரின் உள்ளம் கொதித்தது. வழக்கறிஞரை வரவழைத்துக் கல்லடி வேலர் மீது மான நஷ்ட வழக்குப் போடுமாறு பணித்தார்.கல்லடி வேலர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டார். வந்த இடத்தில் இவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று இவரின்
உற்றார் உறவினர் கலங்க, எதிரி மிக்க புத்தி சாதுர்யம் மிக்கவராமே என்ற ஆவலில் மக்கள் கூட்டம் நீதிமன்றதில் வழிந்தது. செட்டியாரின் சட்டத்தரணி, தன் கட்சிக்காரரைப் பிள்ளையவர்கள் அவர் வீட்டிலேயே தட்டித் தின்னி என்று இகழ்வாக எழுதி வைத்துவிட்டதாவும், இதற்கு மானநஷ்டமாக 2000 வெள்ளிகளை செட்டியாருக்குக் கொடுப்பதுடன் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று வேண்டினார்.

கல்லடி வேலரிடம் கேட்டபோது தான் வந்த இடத்தில் இப்படியான ஓர் நிலைமை ஏற்பட்டு விட்டது, சட்டத்தரணி ஒருவரை வைத்து வழக்காடத் தன்னிடம் போதிய பணமில்லாததால் தானே தம் வழக்கில் வாதம் செய்ய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
எல்லோரையும் சுற்றிப் பார்த்துச் சிறு புன்னகையுடம் ” நீதிபதி அவர்களே ! நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா? அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு? ஏதோ நான் தகாததை எழுதிவிட்டேன் என்று என் மேல் கோபிக்கவோ, நீதிமன்றம் வரை என்னை இழுத்தடித்து தேவையற்ற சிரமம் தரவோ எக்காரணமும் இல்லையே ” என்று மிகவும் வினயமாகக் கூறினார்.

கூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கியபின் திரு. வேலுப்பிள்ளையின் விளக்கத்தைப் பரிசீலனை செய்தபின் அவர் வாதம் சரியெனவும் , அவரின் பத்திரிகைப் பணத்தையும் திரு.தர்மலிங்கம் கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தர்மலிங்கம் வெட்கித் தலை குனிந்தார்.

கதிரைக்குக் காசு

கல்லடி வேலர் ஒருமுறை கூத்துப் பார்க்க கொட்டகை ஒன்றுக்குச் சென்றார். அங்கே வாசலில்
கதிரைக்கு ஒரு குறிப்பிட்ட அணா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிப் போய் பத்துப் பேருடன் வந்தார். பத்துப் பேருக்கான கட்டணத்தைக் கட்டி உள்ளே நுழைந்து கூத்துப் பார்த்தனர். கூத்து முடிந்ததும் புலவரும் கூட வந்த 10 பேரும் தம் கதிரைகளையும் எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது ஓடி வந்த கொட்டகை உரிமையாளர்,
“ஐயா! ஏன் கதிரைகளை எடுத்துச் செல்கின்றீர்கள் எனக் கேட்கவும்;
கல்லடி வேலரும் “நீங்கள் தானே கதிரைக்கு விலை குறித்திருக்கின்றீர்கள் ” என்று வேடிக்கையாகக் கேட்டாராம்.கொட்டகை உரிமையாளரும் தன் தமிழ் குழப்பத்துக்கு வருந்தி
“நுழைவுச் சீட்டு விபரம், கதிரைக்கு இத்தனை அணா” என்று
மாற்றி விட்டாராம்.

தலைக்குச் சட்டி

கல்லடி வேலர் வாழ்ந்த ஊரில் சிறு சிறு குற்றங்கள் அவருடைய தலைமையில் பஞ்சாயத்து செய்யப்பட்டுத் தீர்க்கப்பட்டனவாம்.(பின்னர் அந்தப் பொறுப்பு அவரின் மூத்த மகன் சுப்பிரமணியத்திற்குப் போனது) பெரிய வழக்குகள் மட்டும் நகரத்தின் நீதிமன்றுக்குச்
செல்லும் போது கல்லடி வேலர் தன் புத்திசாதுர்யத்தால் சிலரை வழக்கிலிருந்து தப்ப வைத்துவிடுவாராம். ஏனெனில், அடிக்கடி பல வழக்குகளுக்கும் இவரே வந்து புத்தி சதுர்யமாக வழக்காடியும் வென்று வந்த கல்லடி வேலரைக் கண்டால் அந்த நீதிமன்றின் நீதிபதிக்குச் சிம்ம சொப்பனம் தான். ஒருநாள் நீதிபதி கல்லடி வேலரைப் பார்த்து ” இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக் கூடாது என்று சொன்னாராம். அடுத்த நாள் கல்லடி வேலர் அதே நீதிமன்றுக்கு வழக்காட வந்தார். கல்லடி வேலரின் தலையை பார்த்து ஆச்சரியம் பொங்க எல்லோரும் சிரித்தார்கள். காரணம் அவரின் தலையில் சட்டி ஒன்றைக் கவிழ்த்தவாறே நீதிமன்றுக்குள் நுளைந்தார்.
காரணம் கேட்ட நீதிபதிக்கு கல்லடி வேலன் சொன்ன பதில் “நீங்கள் தானே சொன்னீர்கள், இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக்கூடாது ” என்றாராம்.


கொண்டாடினான் ஒடியற் கூழ்

கல்லடி வேலுப்பிள்ளையின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.

சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்
புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார்.

புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.

வைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார்.

புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி,

“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி
அப்பாலே நிவிற்றிக்கொல்லை
அடைந்த அலுப்புக் கொண்டதற்கு
கல்லடியான், வண்டாரும் மாலை அணி
மற்புயற் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்”

ஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த “கொண்டாடினான் ஒடியற்கூழ்” கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;

PRABU.mp3

ஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்
வளம் நிறைந்து வாழ்ந்திருந்த
மண்விட்டுப் புலம்பெயர்ந்தோம்.
முன்னதை இழந்தோம்.

எங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்
தங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா?
சென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்
சிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்
என்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்
இன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.

ஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்
ஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.
கூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த
கூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ

ஆசுகவி கல்லடியார் வாய்திறந்தால்
நூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ
வாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி
பேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்
நெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்
ஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்
முடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.
மெல்பேர்னில் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்
கல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த
நல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து
கல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.

பாரிஸ் யோகன் பதிவில்: கோச்சி வரும் கவனம்….கொப்பரும் வருவார் கவனம்…!

கனக சிறீதரன் பதிவில்: ஆசுகவியின் இலக்கியப் பணி

பிற்குறிப்பு:

இந்தக் கட்டுரையை எழுத உசாவிய பாரிஸ் யோகன் அண்ணாவிற்கும்,
அவரின் பதிவில் கூழ் குறித்த கதையைக் கோடு காட்டிய சயந்தனுக்கும் நன்றிகள்.

மேலே இடம் பெற்ற ஆசுகவி குறித்த அறிமுகம் போன்ற கட்டுரைப் பகுதிகள் பிரான்சில் வாழும் ஒலிபரப்பாளர், எழுத்தாளர்,வண்ணை தெய்வம் அவர்கள் எழுதியும் தொகுத்தும் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட “யாழ்ப்பாணத்து மண் வாசனை” என்ற நூலில் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு நான் தாயகம் சென்ற போது அதை வாங்கியிருந்தேன். இக்கட்டுரையில் இடம்பெற்ற பெரும்பாலான பகுதிகளை மீளப் பிரசுரம் செய்யும் உரிமையைப் பெற நண்பர் மூலம் வண்ணை தெய்வம் அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்றுத் தயங்கியவாறே இதைக் கேட்டேன்.
” எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள் என்று தன் தமிழ் குறித்த தாராள சிந்தையை வெளிப்படுத்திய வண்ணை தெய்வம் அவர்களுக்கும் என் நன்றிகள்.

இலங்கைப் பாடவிதானத்தின் ஆண்டு 4 பாடப்புத்தகத்தைத் தேடிப் பெற உதவிய சிட்னி தமிழ் அறிவகம் என்ற நூலகத்துக்கும் நன்றிகள்.

இறுதியாக ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி, திருமதி ராணி தங்கராஜா அவர்கள் நான் ஆசுகவியின் கூழ்ப் பாடலைக் கேட்டு எழுத உதவினார். கூடவே கதிரைக் கதை, நீதிமன்றத்தில் நடந்த வேடிக்கை, மற்றும் தான் இயற்றிய கூழ்ப்பாடலையும் தந்ததோடு,
“தம்பி! ஒலிப்பதிவு சரியாக வந்ததே ? ” என்று கரிசனையோடு கேட்டு, இரண்டாவது முறையும் பொறுமையோடு கவி தந்தார்.
அவருக்கும் என் மேலான நன்றிகள்.

மனசினக்கரே – முதுமையின் பயணம்


முதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக
” தாத்தா ! இந்த வில்லை எங்கே வாங்கினீர்கள் என்று வினவுகிறான்.
” மகனே! இந்த வில்லை நீ விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை, முதுமைக் காலத்தில் உனக்கு இது பரிசாகவே வந்து சேரும்”
என்று அந்த இளைஞனைப் பார்த்துக் குறுநகையோடு போய்க்கொண்டிருக்கிறார் அந்த முதியவர்.

இன்னொரு காட்சி
முதியவர் ஒருவர் தன் தள்ளாத வயதில் கூனிக்குறுகி நிலத்தைப் பார்த்தவாறே மெள்ள நடந்து போகிறார்.ஒரு இளைஞன் அதைப் பார்த்து
” தாத்தா ! எதையாவது தொலைத்துவிட்டீர்களா?” என்று ஏளனமாகக் கேட்கின்றான்.
” ஆம் மகனே ! தொலைந்து விட்ட என் இளமையைத் தான் தேடுகின்றேன் ” என்று சலனமில்லாது சொல்லிவிட்டு நகர்கின்றார் அந்த முதியவர். இளைஞன் வாயடைத்து நிற்கின்றான். மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம்
வகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது. வருஷங்கள் பல கழிந்து இப்போது அவை நினைவுக்கு வரக்காரணம் அண்மையில் நான் பார்த்த மலையாளத்திரைப்படமான “மனசினக்கரே”

யாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் “மனசினக்கரே” படத்தின் அடி நாதம், மனசினக்கரே – மனதின் அந்தப் பக்கம் என்று பொருள்படும் இப்படத்தலைப்பே எவ்வளவு ரசனையாக இருக்கின்றது பார்த்தீர்களா?
தமது படங்கள் சோடை போனாலும் மலையாளச் சேட்டன்கள் வைக்கும் படத்தலைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்.

தெரிந்தோ தெரியாமலோ மலையாளப் பட இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் படங்கள் சிலதை நான் பார்த்த மலையாளப் படப்பட்டியலில் வைத்திருக்கின்றேன். தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் ஆழமான நேசத்தைக் காட்டிய “வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்”. அம்மா ஸ்தானத்தில் இருப்பவருக்கும் மகளுக்கும் உள்ள புரிதல்கள், பிரிவுகளைக் காட்டிய “அச்சுவிண்ட அம்மா” கடந்த வருஷம் கேரளத் தியேட்டரில் நான் பார்த்திருந்த “ரசதந்திரம்”. என்று வரிசையாக நான் பார்த்து வியந்த திரை இயக்கங்களுக்குச் சொந்தக்காரர் சத்தியன் அந்திக்காடு. அந்த வகையில் இந்த இயக்குனரின் படம் தானே சோடை போகாது என்று எடுத்து வந்து பார்த்து அனுபவித்த படம் ” மனசினக்கரே”.

“மனசினக்கரே” , 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பிலிம் பேரின் , சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் (ஜெயராம்), சிறந்த இசை (இளையராஜா) ஆகிய நாங்கு விருதுகளை அள்ளிய படம். இருபது வருடங்களுக்கு பின் செம்மீன் புகழ் ஷீலா மீண்டும் திரையுலகிற்கு வரக்காரணமாக இருந்த படம். (இவர் ஏற்கனவே 1975 வரை மலையாள நடிகர் பிரேம் நசீருடன் ஜோடியாக 130 படங்களில் நடித்துச் சாதனை ஒன்றும் இருக்கிறதாம்) இப்படி ஏகப்பட்ட விஷயங்களைப் இப்படத்தைப் பார்த்தபின்னர் தான் அறிந்து கொண்டேன்.
இப்படத்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.
ஒன்று பணக்கார வீட்டைச் சுற்றியது. மற்றையது சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சுற்றியது. இரண்டு புள்ளிகளாக ஆரம்பிக்கும் இந்த ஓட்டம் முடிவில் ஒன்றாகக் கலக்கின்றது.
கொச்சு திரேசா ( ஷீலா) அறுபதைக் கடந்த பெரும் பணக்காரி. கணவனை இழந்து தன் வளர்ந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கூப்பிட்டால் ஓடிவந்து கால் பிடிக்கும் வேலைக்காரியும், பெரும் பங்களாவுமாக என்னதான் பிரமாண்டமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்தாலும் அவள் இழந்து நிற்பது விலைகொடுக்கமுடியாத பாசமும் கூடவே எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களும். கிழவி ஆயிற்றே வீட்டில் ஒரு மூலையில் கிடந்து வேளா வேளைக்குச் சாப்பாடும், வீடே உலகமுமாக இருக்கலாம் தானே என்பது திரேசாவின் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு. தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.

இன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் ( இன்னசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.
மாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.
தொடர்ந்து இந்த இரண்டு குடும்பங்களிலும் வரும் வேறு வேறான சோதனைகள் , இறுதியில் மனசினை இலேசாக்கிக் காற்றில் பறக்க வைக்கும் முடிவுமாக ஒரு உணர்ச்சிக்குவியலாக இப்படம் வந்திருக்கின்றது.

ஷீலா , இருபது வருஷ ஓய்வுக்குப் பின் வந்து நடித்தாலும் , இப்படம் இவருக்கு நல்லதொரு மீள்வரவுக்கான சகல அம்சங்களையும் இவர் நடிப்பில் காட்ட உதவியிருக்கின்றது. முக்காடு போட்டுக்கொண்டு கையில் குடையுமாக அப்பாவி போல வந்தாலும், மேட்டார் சைக்கிளில் களவாக லிப்ட் கேட்டு தேவாலயம் (Church) போவது, சேர்ச்சில் பிரார்த்தனை நடக்கும் போது தன் தோழியிடம் குசுகுசுப்பது, பின் அதைச் சுட்டிக்காட்டும் பாதிரியாரிடம் ” கடவுளோடு அதிகம் அலட்டாமல் சுருக்கமாக உங்கள் பிரார்த்தனையை வைத்துக்கொள்ளுங்கள்” அவருக்கே ஆலோசனை கொடுப்பது என்று குறும்புத்தனம் காட்டுகின்றார். தன் பிள்ளைகளுக்குத் தெரியாமல் களவாக மதில் பாய்ந்து போய் ஜெயராமுடன் கிராமியச் சந்தோஷங்களை அனுபவிப்பது, கள்ளுக்குடித்து வெறியில் சாய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஜெயராமைப் பொறுத்தவரை இந்தப் படம் ஆளுக்கேற்ற அளவான சட்டை. ஒரு சாதாரண கோழி வியாபாரியாக வந்து மாடிவீட்டுப் பணக்காரப்பாட்டியின் ஓவ்வொரு எதிர்பார்ப்பையும் கேட்டறிந்து அவளுக்கு அவற்றைத் தேடிக்கொடுப்பதாகட்டும், கள்ளே கதியென்று குடித்து அழியும் தந்தையை நினைத்துப் புழுங்குவதாகட்டும், பின்னர் கெட்ட பழக்கங்களைத் திருத்தும் நிலையம் போய் அங்கு கொடுக்கும் கடுமையான பயிற்சிகளைக் கண்டு கலங்கி தன் தந்தையைத் தான் கஷ்டப்படுத்தக்கூடாது என்று திரும்பி வருவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான இவரின் நடிப்பு மனசில் உட்கார்ந்து டோரா போட்டுக்கொள்கின்றது.அப்பனும் மகனுமாகக் கள்ளடித்து ஆசையைத் தீர்ப்பது வேடிக்கை.

ஷிலாவின் மருமகனாக இளமையான பாத்திரத்தில் நெடுமுடி வேணு (இந்தியன் படத்தில் வந்த சி.பி.ஐ ஆபீசர்) கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான நடிப்பு.

கே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம். தான் ஆசையாகச் செய்த தின்பண்டத்தைத் தன் தோழியின் பிள்ளைகள் தூக்கி எறியும் போது ஏற்படும் ஏமாற்றம் தரும் முகபாவம், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையடித்துவிட்டு, பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று சொல்லி விம்மி வெடிக்கும் போது யதார்த்தம் உறைக்கின்றது.

மலையாளத்தில் இளையராஜா – இயக்குனர் பாசில் கூட்டணி தான் நல்ல பாடல்களைத் தரும் என்ற முடிவை மாற்ற இப்படமும் வழிவகுத்திருக்கின்றது. “கொச்சு கொச்சு சந்தோஷங்கள்”, “அச்சுவின்ட அம்மா”, “ரசந்தந்திரம்” வரிசையில் இதிலும் இளையராஜா – இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி. பின்னணி இசையில் வருடும் கிராமியத்துள்ளல் , சோகங்களில் கலக்கும் வயலின் ஜாலம், முத்து முத்து மழைத்துளிகள் தெறித்தாற் போல சலனமில்லாது எண்பதுகளின் இசைவிருந்தை மீண்டும் அளிக்குமாற் போல ராஜாவின் ராஜாங்கம் தான்.

“மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” கிராமியத்துள்ளல், இப்பாடலில் வரும் வரிகள் ஏறக்குறையத் தமிழிலும் புரியும். தன் இளமைக்காலத்தில் தான் பார்த்துப் பழகிய இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டுப் போகும் திரேசா 52 வருஷங்களுக்கு முன் தன் திருமணம் நடந்த தேவாலயத்தில் பழைய நினைவைப் பகிரும் போது வரும் பாடல் “மெல்லயொன்னு பாடி”. தகப்பனும் மகனும் கள்ளருந்திக் களிப்பில் மிதக்கும் போது வரும் அருமையான தாள லயத்தோடு ” செண்டைக்கொரு”, தந்தையை இழந்த சோகம் அப்பிய சூழலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அயல் திளைக்கும் போது வந்து கலக்கும் ” தங்கத்திங்கள் வானில் உருக்கும் ” (இப்பாடலை எழுதும் போது மெய்சிலிர்க்கின்றது) இப்படி ஒவ்வொரு பாடலும் காட்சியோடு ஒன்றி, உறுத்தாத எளிமையான பின்னணியில் வந்து கலந்து மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இப்பாடல்வரிகளில் ஒளிந்திருக்கும் அழகுணர்ச்சியால் மலையாளப்பாடல்களில் அர்த்தம் பொதிந்த பாடல்களைத் தமிழாக்கித் தரவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்படுகின்றது.

பாடல்களைக்கேட்க

நயன்தாராவிற்கு இதுதான் திரையுலகில் முதற்படமாம். முகப்பூச்சு இல்லாத கிராமியக் களையும் துடுக்குத் தனமான பேச்சாலும், அடவடிப் பேரம் பேசலாலும் கடைவீதியில் எல்லோரையும் அடக்கி வைக்கும் இவரைக் கண்டால் எதிர்ப்படும் மீன் வியாபாரி கூட தன் சைக்கிளைத் திருப்பி வந்த வழியே ஓடும் நிலை. ஆனால் இதே பாத்திரம் பின்னர் அடங்கிப் போய் அமைதியின் உருவமாகப் பிற்பாதியில் வருவது ஒரு முரண்பாடு.சிம்பு மட்டும் விட்டுவைத்திருந்தால் ஊர்வசிப் பட்டம் வரை முன்னேறக்கூடிய சாத்தியம் இவரின் முதற்படத்திலேயே தெரிகின்றது.ஆனால் இப்போது அரையும் குறையுமாக “வல்லவா எனை அள்ளவா” என்று நடித்துப் போகும் நயந்தாரா வேறு.

படத்தில் ஜெயராம், ஷீலா பாத்திரங்களுக்கு அடுத்து மிகவும் கனமான பாத்திரம், ஜெயராமின் தந்தையாக வரும் இன்னசென்ட் உடையது,அதை அவர் கச்சிதமாகவே செய்திருக்கின்றார். கடனுக்குக் கள் குடித்துவிட்டு அப்பாவி போல நடிப்பது, அரசியல் கூட்டத்தில் சம்மணம் கட்டி இருந்து பேச்சாளரின் ஓவ்வொரு பேச்சுக்கும் குத்தல் கதை விடுவது, தன் மகன் குடியை விடவைக்க கள்ளுக்கொட்டிலுக்குக் கொண்டு போய் போத்தலைக் காட்டியதும் ஒரு காதல் பார்வை பார்த்து முழு மூச்சாக இறங்குவது, வெறிகொண்டோடும் தன் வளர்ப்பு மாட்டின் கயிற்றில் மாட்டுப்பட்டு கத்திக்கொண்டே ஓடுவது என்று அத்தனை காட்சிகளிலும் மின்னியிருக்கிறார்.ஒரு நகைச்சுவை நடிகனுக்குக் கதையோட்டத்தோடு கூட நகரும் குணச்சித்திர பாத்திரம் கொடுத்துச் சிறப்பிப்பதைப் பல மலையாளப்படங்களில் பார்த்தாயிற்று. இன்னசென்ட் என்னமாய் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார், அவரின் முகபாவங்களை ஆச்சரியத்தோடு பார்த்துககொண்டே இருக்கலாம்.

தென்னோலைகளைக் கிழித்துப் போடுவது, மாடு வளர்ப்பு, வாழைக்குலைகளை வெட்டிச் சந்தைக்குக் கொண்டுபோவது, என்று ஊர்நினைப்பைக் கிளறும் காட்சிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வளவு தான் அள்ளிக்கொட்டியிருக்கும் பணக்குவியலில் வாழ்ந்தாலும், முதுமை தேடும் தன் ஆரம்பப்புள்ளியை நோக்கிய பால்யகால நினைவுகளும், அதை மீண்டும் அனுபவிக்கத்துடிக்கும் ஆசைகளும் விலைமதிப்பற்றவை. அதைத் தான் அழகாகக் கோடிட்டுக்காட்டுகின்றது இப்படம்.
தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் ஐஸ்பழ வானில் ஒரு குச்சி ஐஸ்கிறீம் வாங்கிச் சூப்பிக்கொண்டிருக்கும் முதியவரைக் கண்டால் இளசுகளுக்கு வேடிக்கை. “உங்க பார்! பழசு இப்பதான் சின்னப்பிள்ளை மாதிரி ஐஸ்கிறீம் சூப்புது” என்ற கிண்டல் பேச்சுகள் வேறு.

தன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,
எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”
அந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
எங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில. அப்பா, அம்மா ஊரிலோ, அல்லது ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டிலும் சுழற்சி முறையில் தங்கல். பிரான்ஸ் – கனடா – லண்டன் – சிட்னி
என்று எஞ்சிய காலங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பங்கு போடப்படும். ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பிள்ளைகளோடு இவர்கள் வாழ்க்கை நகர்த்தப்படும். இல்லாவிட்டால் ஒரே வீட்டில் பேரன் பேர்த்திகளின் காவல் தெய்வங்களாய். இனப்பிரச்சனையின் இன்னொரு சமுதாய அவலம் இது. யாரையும் நோகமுடியாது. பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களின் நியாயம் அவர்கள் பக்கம்.

உந்தப் பிக்கல் பிடுங்கல்கள் வேண்டாம், நாங்கள் ஊரிலேயே இருந்துகொள்ளுறன், அயலட்டை எங்களைச் சொந்தப்பிள்ளைகள் போல வைச்சிருக்கும்“. இது என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

“மனசினக்கரே ” திரைப்படத்தில், திரேசாக் கிழவி தன் பிள்ளைகளிடம் தான் காட்டமுடியாத பரிவினை ஏதோ ஒருவகையில் தீர்க்கத் தான் அன்பாக வளர்க்கும் மாட்டை ஜெயராமுக்குப் பிள்ளைகள் விற்றதும் களவாக அதைத் தேடிப் போய்ப் பரிவு காட்டி உணவூட்டுவது.
இதைப்பார்த்ததும் எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது. அருகே பிள்ளைகள் இல்லாத 13 வருஷங்கள் கடந்த அவரின் வாழ்வில் பிள்ளையாக இருப்பது ஆடு வளர்ப்பு.

அப்பா வளர்க்கும் ஆடுகள்

கடந்த முறையும் ஊருக்குப் போனபோது வீட்டின் பின் கோடியில் இருந்து சத்தம் கேட்டது.
” உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை? இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி” அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம், குட்டிக்கு அப்போது பேர் வைக்கவில்லை.
” அப்பா! வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு?” அங்கலாய்ப்போடு நான்.
” தம்பி! நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு” என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார்.

என் புலம்பெயர் வாழ்வில் இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்களைக் காணும் போது முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி மனசின் ஓரமாய் பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது.
முதுமை என்பது வரமா? சாபமா…..?