நிறைவான நல்லூர்ப் பயணம்
இன்றோடு என் நல்லைக் கந்தனின் மகோற்சவ காலப் பதிவுகள் ஒரு நிறைவை நாடுகின்றன. இருபத்தைந்து நாட்களுக்கு முன், எம் பெருமான் முருகக்கடவுளை நினைந்தவாறே நல்லூர்த் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பதிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மாதத்துக்கு இரண்டு பதிவுகள் இடும் எனக்கு இது அசாதாரண முயற்சியாகவே ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பதிவுக்காக எமது ஈழவரலாற்றாசிரியர்களின் நூல்களை நுகர்ந்து பொருத்தமான பதிவுகளாக்கும் போது சுமை பருத்திப் பஞ்சாய் ஆனது. அத்தோடு என் இந்தப் பதிவுப் பயணத்தில் கூடவே பயணித்து எப்போதும் ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்த நல்லூர்க்காலத்தில் என் நனவிடை தேய்தலாகப் பல பதிவுகளைத் தரவிருந்தேன். ஆனால் வரலாற்று, ஆன்மீக விடங்களோடு இயன்றளவும் உங்களை இருத்தி வைப்பதற்காக அவற்றைத் தவிர்த்து விட்டேன். அவை பிந்திய காலத்தின் பதிவுகளாக வரும்.

எனது இந்தப் பயணத்தில் உதவிய ஈழ வரலாற்றாசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், நல்லைக்கந்தன் மற்றும் நற்சிந்தனைப் பாடல்களையும், சங்கீத கதப்பிரசங்கத்தையும் வெளியிட்டுதவிய அமைப்புக்களுக்கும், யோகர் சுவாமிகளின் ஆக்கத்தை அளித்த அன்பர், மற்றும் பதிவுலக அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.


ஈழ வரலாறு குறித்த மேலதிக வாசிப்பினைத் தருமாறு தமிழகச் சகோதரர்கள் கேட்டிருந்தீர்கள். எமது சகோதர வலைப்பதிவர் ஈழநாதன் பின்னூட்ட மூலம் மேலதிக தகவல்களை அளித்திருந்தார். நன்றியோடு அந்த இணைப்பையும் கீழே தருகின்றேன்.

நல்லூர் இராசதானி: வ.ந.கிரிதரன்

நல்லைக் கந்தன் பற்றிய வரலாற்று நூலில் நான் வாசித்தபடி ஜமுனா ஏரிக்கு அண்மையில் தான் முன்னைய கோயில் இருந்தது என்றும்.தற்போதைய இடம் முஸ்லிம்கள் குடியிருந்த இடமென்றும் ஞாபகமிருக்கிறது.தவிர நல்லூர் கோவில் ஞானியொருவரின் சமாதி மேல் கட்டப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் மடாலயம் என்றே அழைக்கப்பட்டது

இதே நேரம் நல்லூரோடு யாழ்ப்பாணச் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நூலகத்திலிருந்து தொடர்புடைய நூல்களுக்கான சுட்டிகள்:

யாழ்ப்பாணச் சரித்திரம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
– PDF வடிவில்

யாழ்ப்பாண வைபவ மாலை: முதலியார் குல.சபாநாதன் – PDF வடிவில்


இதுவரை நாளும் நல்லை நகர்க் கந்தனாலயத்தின் மகோற்சவ காலப் பதிவுகளாக அணி செய்த பதிவுகளின் தொகுப்பை உங்கள் வசதிக்காக இங்கே தருகின்றேன்.

முதலாந் திருவிழா – நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்

இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.

இரண்டாந் திருவிழா – கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு
கொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,
“அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்”
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.

நல்லூர் இராசதானி – மூன்றாந் திருவிழா
இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது.

அழிவுற்ற நல்லூர் இராசதானி – நாலாந் திருவிழா
யாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார்.

நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் – ஐந்தாம் திருவிழா
நல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

யார் இந்த செண்பகப் பெருமாள்? – ஆறாந் திருவிழா
ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.

உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் – ஏழாந் திருவிழா
கி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.

போர்த்துக்கேயர் வருகை – எட்டாந் திருவிழா
கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.


சங்கிலி மன்னன் அரசாங்கம் – ஒன்பதாந் திருவிழா

பரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான்.

கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் – பத்தாந் திருவிழா
இக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.

கந்தமடாலயம் அமைந்த கதை – பதினோராந் திருவிழா
ஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார்.


குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் – பன்னிரண்டாந் திருவிழா

பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.


பிரித்தானியர் காலத்து நல்லூர் – பதின்மூன்றாந் திருவிழா

கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் “ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.


நல்லூரும் நாவலரும் – பதின்னான்காம் திருவிழா

நல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.

பொப் இசையில் மால் மருகன் – பதினைந்தாம் திருவிழா
கடந்த பதிவுகளில் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பில் வரலாற்றுப் பதிவுகள் அமைந்திருந்தன. தொடர்ந்து வரும் நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் மேலும் சில படையல்களோடு அமைய இருக்கும் இவ்விசேட பதிவுகளில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல்.

எந்நாளும் நல்லூரை வலம் வந்து….! – பதினாறாந் திருவிழா
நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். முதலில் வரும் “எந்நாளும் நல்லூரை” என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.


நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் – பதினேழாந் திருவிழா

நல்லை நகர் நாயகன் கந்தப் பெருமானின் பதினேழாந் திருவிழாவில் இரண்டு பகிர்வுகளைத் தருகின்றேன். முதலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் அருளிச் செய்த நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் இடம் பெறுகின்றது.

நல்லை நகர்க் கந்தரகவல் – பதினெட்டாந் திருவிழா
இஃது ஆறுமுக நாவலரவர்கள் தமையன்மாருளொருவரும் கதிரையத்திரை விளக்கத்திலுள்ள பல கீர்த்தனங்கள் செய்தவருமாகிய பரமானந்தப் புலவர் செய்தது

உந்தன் அருள் வேண்டுமடா முருகா – பத்தொன்பதாந் திருவிழா

பத்தொன்பதாந் திருவிழாப் பதிவில் இரண்டு நல்லை முருகன் பாடல்கள் ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றன. பாடலாசிரியர் தாயகக் கவி புதுவை இரத்தினதுரை, இசை வழங்கியவர் இசைவாணர் கண்ணன், பாடல்களைப் பாடுகின்றார் இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.

எங்கள் குருநாதன் – இருபதாந் திருவிழா
யோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.


ஈசனே நல்லூர் வாசனே – இருபத்தியோராந் திருவிழா

இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.


“சும்மா இரு” – இருபத்தியிரண்டாந் திருவிழா
இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த “நல்லூரான் திருவடியை என்ற பாடலை” இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த “சும்மா இரு” என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது.

“முருகோதயம்” சங்கீதக் கதாப் பிரசங்கம் – சப்பரத் திருவிழா

“முருகோதயம்” என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.

தேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…! – இருபத்துநான்காந் திருவிழா

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.

நல்லூரான் தீர்த்தோற்சவம் – இருபததைந்தாந் திருவிழா

இன்றைய நல்லை நகர் நாதன் தீர்த்தோற்சவ நன் நாளில் ஒரு இனிய ஈழத்து மெல்லிசையில் நல்லைக் கந்தன் பாடல் வருகின்றது. பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த “நல்லை முருகன்” பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.

விசேட பதிவுகள்

மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே….!

2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்

2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்

நல்லூரான் தீர்த்தோற்சவம்
பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த “நல்லை முருகன்” பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.

நாதம் கேட்குதடி…….நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி…..கீதம் ஒலிக்குதடி…..
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி……….
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி……….
நாதம் கேட்குதடி ……….
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி

ஒலியின் அலைகள் விரவிச் செவியில்…….
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா………ஓம் முருகா…….ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி

கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி

மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி

வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்

நாதம் கேட்குதடி…….நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி…… நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி…….நல்லூர் நாதம் கேட்குதடி….
நாதம் கேட்குதடி…… நல்லூர் நாதம் கேட்குதடி….
புகைப்படங்கள் 2005 ஆம் ஆண்டு நல்லைக் கந்தன் தீர்த்தோற்சவத்தில் எடுக்கப்பட்டவை.

படங்கள் நன்றி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
(முதற்படம் நன்றி: கெளமாரம் தளம்)

தேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…!


இத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் உறவுகள் தம் மனக்கண்ணில் எம்பெருமானின் தேரோட்ட நிகழ்வினை வரித்துக் கொண்டு இறையருள் வேண்டி இறைஞ்சினார்கள். நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்து மக்களுக்குத் தற்காலிக ஊரடங்கு நீக்கம் கிடைத்தது. எம்மவரின் ஊரடங்கு வாழ்வு நிரந்தரமாக நீக்கப்பட்டு நிரந்தர அமைதியும், அடிமைத் தளையற்ற வாழ்வுக் கிடைக்க தாயக உறவுகளும், புலம்பெயர் உயர்வுகளும் இணைந்து பிரார்த்தனையில் சங்கமித்த நாள் இது.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் சார்பில் அவுஸ்திரேலிய நேரம் காலை 7.30 மணியில் இருந்து (இலங்கை நேரம் 2.00 மணி) மதியம் 1.05 மணி வரை ஐந்தரை மணி நேரம் கடந்த நிகழ்வாக நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் கலந்த படையலைச் செய்து விட்டு, இனம் புரியாதவொரு ஆத்ம திருப்தியோடு வீடு திரும்பியிருக்கின்றேன்.

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.


காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு

Get this widget Share Track details

ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது

Get this widget Share Track details

எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய “முருக வழிபாட்டின் சிறப்பு”
க்குறித்த கருத்துப் பகிர்வு

Get this widget Share Track details

முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய “நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்” குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு

அல்லது இங்கே சொடுக்கவும்

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய “தேர்த் திருவிழாவின் சிறப்பு” என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு

அல்லது இங்கே சொடுக்கவும்

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் “நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்” என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு

அல்லது இங்கே சொடுக்கவும்நன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்

படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை
Lanka Library, மற்றும் கெளமாரம் தளம்

2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்

முன்னர் இந்த ஆண்டின் திருக்கார்த்திகைத் திருவிழாப் புகைப்படங்களைத் தந்துதவிய யாழ் நண்பர் , என் அன்பு வேண்டுகோளையேற்று அடுத்த தொகுதிப் புகைப்படங்கள் வரிசையில் நேற்று நடந்த சப்பரத்திருவிழாப் படங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். அதோ இனி படங்கள் பேசட்டும். படங்களை அனுப்பி வைத்த நண்பருக்கு அன்பு நன்றிகள் உரித்தாகுக.


2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்

முன்னர் இந்த ஆண்டின் திருக்கார்த்திகைத் திருவிழாப் புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் என் அன்பு வேண்டுகோளையேற்று அடுத்த தொகுதிப் புகைப்படங்கள் வரிசையில் நேற்று நடந்த சப்பரத்திருவிழாப் படங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். அதோ இனி படங்கள் பேசட்டும்.

“முருகோதயம்” சங்கீதக் கதாப் பிரசங்கம் – சப்பரத் திருவிழா
இன்றைய நல்லைக் கந்தன் ஆலய சப்பரத் திருவிழா நன்னாளிலே, 2005 ஆம் ஆண்டு சப்பரத் திருவிழா நிகழ்வில் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை எடுத்திருந்த புகைப்படங்களும், அத்துடன் சிறப்புச் சங்கீத கதாப்பிரசங்கம் ஒன்றையும் தருகின்றேன்.

“முருகோதயம்” என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.

பாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்

பாகம் 2 ஒலியளவு: 20 நிமி 02 செக்

பாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்

eSnips இல் கேட்க
பாகம் 1

Get this widget | Share | Track details

பாகம் 2

Get this widget | Share | Track details

பாகம் 3

Get this widget | Share | Track details


நன்றி: முருகோதயம் இசைத் தட்டை வெளியிட்ட TTN Music world, 141C Palali Road, Thirunelveli, Jaffna.
புகைப்பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை

“சும்மா இரு” – இருபத்தியிரண்டாந் திருவிழா

இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த “நல்லூரான் திருவடியை என்ற பாடலை” இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த “சும்மா இரு” என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது. இப்பதிவில் இடம்பெறும் புகைப்படங்கள் இந்த ஆண்டு இடம்பெற்ற திருக்கார்த்திகைத் திருவிழாவில் யாழில் இருக்கும் நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டதாகும்.


யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்கார சுவாமிகள் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அவருடைய கையிலே “சும்மா இரு” என்ற தமிழ் வாசகம் பச்சை குத்தியிருந்தது. பலரும் அதைப்பற்றி வியப்பாகப் பேசினார்கள். “சும்மா இரு ” என்றால், ஒருவேலையுமே செய்யாமல் இருப்பதா என்ற சந்தேகம் எல்லாலோருக்குமே! அந்த சுவாமிகள் யோகர் சுவாமிகளின் சீடர்.

யோகர் சுவாமிகள் தன்னிடம் வருபவர்களைப் பார்த்து “சும்மா இரு” என்று சொல்வது வழக்கம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையோடு அல்லது மனக்கவலையோடு தான் அவரிடம் வருவார்கள். “சும்மா இரு” என்று சுவாமிகள் சொல்வதை அவரவர் தமது மன நிலைக்கேற்ப ஏற்றுக் கொண்டு திருப்தியடைவார்கள் என்று சொல்வார்கள். “சும்மா இரு என்ற சொற்றொடர் அருணகிரி நாதரின் “கந்தர் அநுபூதியிலே” வருகின்றது.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.

என்பது பாடல். “சொல் அற” என்பது தான் “சும்மா இரு” என்பதன் விளக்கம் என்று தெரிகிறது.

யோகர் சுவாமிகள் தனது குருவான சொல்லப்பா சுவாமிகளை நினைத்துப் பாடும் பாடல் ஒன்றிலே “எண்ணம் யாவும் இறந்திட வேண்டும், என் குருபர புங்கவ சிங்கனே” என்று பாடுகிறார்.

சுவாமிகள், மனதிலே பதியும் வண்ணம் சுருங்கிய சொற்களில் ஆழமான விரிந்த கருத்துக்களைக் கூற வல்லவர். “சொல் அற” என்றால் மனதிலே யோசனைகள் இல்லாமல் , மனதை வெறுமையாக வைத்திருக்கும் நிலை” – சும்மா இருத்தல் என்பது இதுதான் போலும்.

மனதை எப்படி வெறுமையாக வைத்திருப்பது?

சமயத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும், சிந்தனையாளர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கேள்விக்குத் தான் விடை தேடியபடி இருந்திருக்கின்றார்கள். இன்றும் மனம் பற்றிப் பலரும் எழுதியும், பேசியும் வருவதைப் பார்க்கலாம். சமீபத்திலே வாழ்ந்த தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “மனம்” பற்றி நிறையவே ஆராய்ச்சி செய்திருக்கின்றார்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் மனதைப் பற்றி சுவையான கருத்தொன்றைச் சொல்லி இருக்கின்றார். அவர் மனதை ஒரு ஸ்ப்ரிங் மெத்தைக்கு ஒப்பிடுகின்றார். ஸ்ப்ரிங் மெத்தையில் ஒருவர் உட்கார்ந்தால், தற்காலிகமாக ஸ்பிரிங் கீழே அமுங்கி விடும். அவர் மெத்தையிலிருந்து எழுந்தவுடன் ஸ்பிரிங் பழையபடி மேலே வந்துவிடும். எங்களுடைய மனமும் இப்படித் தான் என்கின்றார்.

பிரார்த்தனை செய்யும் போதோ அல்லது ஒரு சத் சங்கத்திலே அமர்ந்திருக்கும் போதோ நமது எண்ணங்கள் யாவும் கட்டுக்கடங்காமல் அலைபாயத் தொடங்கிவிடும். “சிவத்தியானம் என்னும் மருந்தைச் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும்” என்று யோகர் சுவாமிகள் வழி காட்டுகின்றார்.

சிவபுராணத்திலே மணிவாசகப் பெருமானும் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று அதே கருத்தைப் பாடுகின்றார். இவ்வேளையில் “மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதத்தை” என்ற திரையிசைப்பாடல் நினைவுக்கு வருகின்றது.


எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு மனதை அலைய விடாமல் இருப்பது சுலபமல்ல. நாங்கள் ஆசாபாசங்களினால் கட்டுண்டு வாழ்கின்றோம். வயது ஏற ஏறக் கவலைகள் அதிகரிக்கின்றனவே அன்றிக் குறைவதாக இல்லை. எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்! எத்தனை பக்திப் பாடல்களைப் பாடுகின்றோம்! கேட்கிறோம்! எத்தனை பெரியோர்களின் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்கின்றோம்! ஆனால் மனமோ ஸ்ப்ரிங் மெத்தை போலத்தான் இருக்கின்றது!.

யோகர் சுவாமிகள் “சும்மா இரு” என்று சொல்லும் போது “கடமையைச் செய், உன்னுடைய வேலைகளைச் செய், ஆனால் செய்யும் போது பற்றில்லாமல் செய்” என்கிறார். பிரச்சனைகளைக் கண்டு பதற வேண்டாம். அமைதியாக இருக்கப் பழகு என்கிறார். தாமரை இலைத் தண்ணீர் போல் பற்றில்லாமல் வாழப்பழகு என்பது அவர் கருத்து. எங்களை அலைக்கழிக்கும் அகந்தை, அவா, கோபம், என்பனவற்றை நீக்கி வாழப் பழகு என்று வழிகாட்டுகின்றார். வள்ளுவரும்,
“பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.” என்கிறார்.

உகந்து மனங் குவிந்து ஒன்றுக்கும் அஞ்சாது
அகந்தை அவா வெகுளி அகற்றி – சகம் தனிலே
தாமரையிலை தண்ணீர் போல் சாராமல் சார்ந்து நற்
சேமமொடு வாழ்வாய் தெளிந்து.
(நற்சிந்தனை – சிவயோக சுவாமிகள்)

கடந்த ஆண்டு நாட்டுச் சூழ்நிலை காரணமாக நல்லை முருகன் தேரோட்டம் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு தேர்த்திருவிழாவிற்காகத் திருமுருகன் ரதத்தை வெள்ளோட்டம் விட்ட நிகழ்வு கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி நிகழ்ந்தது. அதன் படத்தையே மேலே காண்கின்றீர்கள்

நன்றி: “சும்மா இரு” என்ற ஆக்கத்தை எழுதியனுப்பிய சிட்னி வாழ் அன்பர்.
புகைப்படங்கள் உதவி: பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்

ஈசனே நல்லூர் வாசனே – இருபத்தியோராந் திருவிழா


இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.

முதலில் “ஈசனே நல்லூர் வாசனே” என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் “ஈழத்தின் சுப்புலஷ்மி” என்று சிறப்பிக்கப்பட்டாராம்.

Get this widget | Share | Track details

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா

தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனேஅடுத்து வருகின்றது “நில்லடா நிலையிலென்று சொல்லுது” என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்


நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

நல்லைக் கந்தன் மஞ்சத் திருவிழாப் படங்கள்: பெயர் குறிப்பிட விரும்பாத யாழ்ப்பாணத்து அன்பர் ஒருவர்.

எங்கள் குருநாதன் – இருபதாந் திருவிழா

என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்
அன்னை பிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்
முன்னை வினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
நன்மை தீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நாந்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். 1

தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்ததிற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்
மோத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன்
வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன். 2

என்று சிவயோக சுவாமிகள் தன் குருநாதன் செல்லப்பா சுவாமிகள் மேற் பாடுகின்றார்.

இன்று வியாழக்கிழமை குருவுக்குரிய நாளாகும், இந்த நன்னாள் நல்லைக்கந்தன் ஆலயத்தின் இருபதாந் திருவிழாவின் பதிவாக யாழ்ப்பாணத்து நல்லூத் தேரடியில் தோன்றிய குரு சீடமரபு குறித்த பதிவாக மலர்கின்றது. எனக்கு எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் சிட்னி வாழ் அன்பர் தன் தொடரும் ஆக்கத்தை எழுதியும் பொருத்தமான புகைப்படங்களையும் தந்ததோடு தயவாகத் தன் பெயரைத் தவிர்த்துவிட்டார். இந்த ஆக்கம் கடந்த ஆண்டு சிவதொண்டன் இதழிலும் வெளிவந்திருந்தது.

“Pilgrim, pilgrimage and road was but myself toward myself
and your arrival, but myself at my own door.”

யோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.

கடந்த ஆண்டு நல்லூர்த் தேர்த்திருவிழா பற்றிய வர்ணனையை வானொலியினூடாகக் கேட்டபோது “எங்கள் செல்லப்ப சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் உலாவிய நல்லூர்த் தேரடியிலிருந்து பேசுகிறேன்” என்று அந்த அறிவிப்பாளர் தனது வர்ணனையை ஆரம்பித்தார்.

வீதியிலே வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே

என்று சுவாமிகள் பாடிய பாடலையும் பாடினார். எவ்வளவு அழகான வார்த்தைகள், அத்துடன் எத்தனை பொருத்தமான ஆரம்பம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

எனது மனம் ஊரை நோக்கி ஒடியது. ஒருபுறம் நல்லூர்க் கந்தன் – அந்த முருகக் கடவுள்;; மறுபுறம் அந்த நல்லூர் தந்த சிவனடியார்கள்;; அந்தப் பரம்பரம்பரையிலே வந்த எங்கள் இனம்;; எல்லாவற்றையும் நினைக்கப் பெருமையாக இருந்தது. நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

முகத்திலே குழைந்த புன்சிரிப்பு
நெற்றியிலே திருநீற்று வெண்மை
இடுப்பிலே சுற்றுக் கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி
மார்புவரை வந்து புரளும் தாடி
தலை எல்லாம் நரைத்து வெளுத்த முடி
அமைதியையும் உயர்ந்த எண்ணத்தையும்
வந்தவரிடம் நிலவச் செய்யும் சூழ்நிலை

என்று அன்பர் ஒருவர் சிவத்தொண்டனில் எழுதியது நினைவுக்கு வந்தது.

அத்துடன் கூடவே ஒரு எண்ணமும் தோன்றியது. எங்கள் இளைய தலைமுறையினரில் எத்தனைபேருக்கு சுவாமிகளைப் பற்றித் தெரியும்? இவர்களுக்கு சுவாமிகளைப் பற்றிக் கூறுவது எங்கள் கடமை. நீங்களும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சுவாமிகள் வாழ்ந்தபோதே நாமும் வாழக் கொடுத்துவைத்தவர்கள். உங்களில் பலர் சுவாமிகளோடு நெருங்கிப் பழகிய பாக்கியசாலிகள். இந்த அநுபவங்களை எங்கள் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்வது அவசியம்.

சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)

யோகசுவாமிகளின் அன்பர் திரு.விநாசித்தம்பி அவர்களுக்குச் சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)

சுவாமிகள் சாதாரண மனிதராக வாழ்ந்தவர். காவி உடை தரியாத சன்னியாசி. “சும்மா இரு” என்று இரண்டே இரண்டு சொற்களிலே ஒரு பெரிய தத்துவத்தைக் கூறியவர். இன்று நாங்கள் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிறோம். இளையவர்களும் சரி, மூத்தவர்களும் சரி எப்பொழுதும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருக்கிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. “Tension” என்ற சொல் இன்று எமது வாழ்வில் சாதாரணமாகி விட்டது. எங்கள் பிள்ளைகளின் முகங்களில் வெளிச்சம், ஒளி இன்று இல்லை என்று சுவாமிகளே சொல்லியிருக்கிறார். “உன்னுடைய வேலையைச் செய் பதட்டப்படாதே” என்றுதான் அவர் சொல்லுகிறார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்:

குரங்கு போல் மனம் கூத்தாடுகின்றதே. இந்தக் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரியவில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்லமருந்து உன்னிடமுண்டு. சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும். அதைச் சாப்பிடும்போது அநுமானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவும் உன்னிடம் உண்டு. அது என்னவென்றால் நாவடக்கம், இச்சை அடக்கம் என்னும் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு. இதுவும் போதாது. பத்தியத்தில்தான் முற்றும் தங்கி இருக்கிறது. இது என்னவென்றால் மிதமான உணவு, மிதமான நித்திரை. மிதமான தேகப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம்.

சாதாரண சொற்களிலே ஒரு ஆழமான கருத்தைச் சொல்லிவிட்டார். இப்படித்தான் சுவாமிகளின் பாடல்களும் இருக்கின்றன. மிகவும் எழிமையான தமிழிலே ஆழமான கருத்துகளைப் பாடி இருக்கிறார்.
இந்த இலுப்பை மரத்தின் கீழ் தான் சுவாமி பல வருடங்களாக இருந்தவர். இப்பொழுது இது ஷெல் விழுந்து அழிந்து விட்டது.

பாரத புண்ணிய பூமி என்றால் எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்களுடைய நாட்டை “சிவ பூமி” என்று கூறுவது பலருக்குத் தெரியாது. அங்கேயும் ஒரு சித்தர் பரம்பரை இருந்திருக்கிறது. அந்தப் பரம்பரையைச் சேரந்தவர் எங்கள் சுவாமிகள் என்ற செய்தியை எங்கள் இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் சிறுவயதிலே கருத்துத் தெரியாமல் பாடமாக்கிய தேவார திருவாசகம், முக்கியமாக சிவபுராணம் இன்றைக்கு எங்களுக்கு விளக்கமாக இருக்கிறது. உண்மையில் எங்கள் முதுமைக்கு இவை கைகொடுக்கின்றன. அதைப் போலவே சுவாமிகளின் பாடல்களையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேணும். சிறுவயதிலே படிப்பது மனதிலே பதியும்.

சுவாமிகள் தேவார, திருவாசகத்திலே ஊறித் திளைத்தவர். திருமந்திர தத்துவத்தை அறிந்தவர். அருணகிரிநாதர், பட்டினத்தடிகள், தாயுமானவர், குமரகுருபரர், வள்ளலார் என்று எல்லோருடைய பாடல்களையும் அறிந்திருந்தார். இந்தப் பாடல்களின் சாரத்தை – essence – அவர் எளிமையான, சாதாரண தமிழிலெ எங்களுக்குத் தந்திருக்கிறார்.

இங்கே சமயம் படிப்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். சங்கீத ஆசிரியர்களும் வந்திருக்கிறீர்கள். உங்கள் கைகளிலேதான் இந்தப் பொறுப்பு இருக்கிறது. இதை நீங்கள் ஒரு தொண்டாக நினைத்துச் செய்ய வேணும். சென்ற மாதம், பூசையிலே குழந்தைகள் சுவாமிகளின் பாடல்களைப் பாடினார்கள். இன்றும் குழந்தைகள் பாடுவதைப் பார்த்தேன். இது தொடர வேணும்.

சுவாமிகளோடு நெருக்கமாக இருந்த பலர் தமது அநுபவங்களை எழுதி இருக்கிறார்கள். இன்று ஓரு அன்பரின் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றேன். உங்களிலே பலர் இந்தக் கட்டுரையை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். ஆனால், எத்தனை முறை படித்தாலும் சுவாமிகளைப் பற்றிய அநுபவங்கள் அலுக்காதவை.

அமரர் திரு வினாசித்தம்பி அவர்களின் மகள் யோகேஸ்வரி தனது தந்தையாரின் அநுபவங்களைக் கூறுகிறார். இந்தக் கட்டுரையை வாசித்தபோது, “ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே” என்ற சிவபுராண வரிகள் எனது நினைவுக்கு வந்தன. அந்தப் பெரியார் திரு வினாசித்தம்பி அவர்களை சுவாமிகள் தாமே வந்து ஆட்கொண்டார் என்று தெரிகிறது. அதற்கும் நாம் கொடுத்துவைக்க வேண்டும்.

அடுத்து, சிட்னி யோகசுவாமி மாதாந்தக் குருபூசை நிகழ்வின் ஒலிவடிவத்தைத் தருகின்றேன்.

Get this widget Share Track details

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் நாள் நான் எழுதியிருந்த ஆக்கத்தை மீள் பதிவிடுகின்றேன்.

தேரடியில் தேசிகனைக் கண்டேன்

சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.

எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது ” வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட” என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் ” நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி” என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி “அப்பூ” என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.

பிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுளைந்துவிட்டாற் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.

சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.


சித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். “பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்” என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.

ஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவற்குழியிலுருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் “ஈழத்துச் சித்தர்கள்” என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.

சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை “விசர் செல்லப்பா” என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.

கிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.

நல்லூர் தேரடி (வரைவில்)

யோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக “எப்பவோ முடிந்த காரியம்”, “ஒரு பொல்லாப்புமில்லை”, “யார் அறிவார்” போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்
“நற்சிந்தனை” ஆக நூலுருப் பெற்றது.
பழைய கொழும்புத்துறை ஆச்சிரமம்

புதுப்பிக்கப்பட கொழும்புத்துறை ஆச்சிரமம்

உலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:
http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm

சிவதொண்டன் நிலைய இணையத் தளம்
http://sivathondan.org/index.htm

கடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.


தேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.

செல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.
செல்லப்பா சுவாமிகள்

செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,
“தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து”.
இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.

நன்றி:
ஆக்கத்தை அளித்த அன்பர் மற்றும் சிவதொண்டன் மாத இதழ்

புகைப்படங்கள் உதவி:
The Saint Yoga swami & Testament of truth, By: Mrs Ratna Chelliah Navaratnam (former Director of Education) – Birth centenary memorial edition (1892 – 1972)

http://www.himalayanacademy.com/satgurus/yogaswami/

கடையிற்சுவாமியின் படம்: http://www.xlweb.com/

செல்லப்பாச் சுவாமிகளின் படம்: kataragama.org/sages/chellappa.htm

உந்தன் அருள் வேண்டுமடா முருகா – பத்தொன்பதாந் திருவிழா

பத்தொன்பதாந் திருவிழாப் பதிவில் இரண்டு நல்லை முருகன் பாடல்கள் ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றன. பாடலாசிரியர் தாயகக் கவி புதுவை இரத்தினதுரை, இசை வழங்கியவர் இசைவாணர் கண்ணன், பாடல்களைப் பாடுகின்றார் இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.

Get this widget | Share | Track details

தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா – உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா

கண் திறந்து பார்க்க வில்லை முருகா – என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா – நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா – நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா – நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா

Get this widget | Share | Track details

வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா

வேல் முருகா…அருள் தா முருகா….
வேல் முருகா…அருள் தா முருகா……..
மால் மருகா….நல்லை வாழ் முருகா…
மால் மருகா….நல்லை வாழ் முருகா…
வா முருகா….துயர் தீர் முருகா……..
மால் மருகா….நல்லை வாழ் முருகா…

நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா…….
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா…….
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா…….

(வேல் முருகா…அருள் தா முருகா….)

அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா

தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா
தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா

வேலவா நீ ஓடிவா
வேலவா நீ ஓடிவா

இருவிழி கலங்குது அருள் ஒளி பரவுது
புலிகளின் தலைமையில்
தமிழர்கள் துயர்கெட வரமெடு

நன்றி:
நல்லை முருகன் பாடல்கள் : தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்
தேரடியில் பாடல் எழுத்துப் பிரதி: சகோதரி சந்திரவதனா செல்வகுமாரன்

புகைப்படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை