வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது “மடத்துவாசல் பிள்ளையாரடி” தளத்தில் இட்டு வருகின்றேன். நான் வலை பதிய வந்த காலத்து நினைவுகளைக் கடந்த ஆண்டு நிறைவுப் பதிவில் நினைவு மீட்டியிருந்தேன்.

நான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டில் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன. 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போன போது எழுத்தாளர் வரதரைச் சந்தித்து அவரை ஒலி ஆவணப் பேட்டி காண இணக்க வைத்து விட்டால் நாடு தலைகீழாய்ப் போய் அந்தக் காரியம் கைகூடாமல் தள்ளிப் போய் கடந்த ஆண்டு டிசம்பரில் சிக்கன் குன்யாவால் வரதர் அவர்கள் நிரந்தரமாகவே தொடர்பற்றுப் போனது தான் என் இரண்டாம் ஆண்டு பதிவுகளுக்கு முதல் பதிவான சோகமும் ஆயிற்று.

துரித கதியில் காலம் தாழ்த்தாது ஆவணப்பணியை என்னால் முடிந்த அளவு திரட்ட எண்ணி, திரு.கே.எஸ்.பாலசந்திரன், திரு.தாஸீசியஸ், திரு.பாலமனோகரன், பேராசிரியர் சிவத்தம்பி என்று இயன்றவரை நம்மவர்களைக் குறித்த விபரங்களைப் பதிவாக்கினேன். கூடவே மறைந்த திரு. எருவில் மூர்த்தி, கல்லடி வேலுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், எல்.வைத்யநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்றோர் குறித்தும் பதிவுகளை ஆக்கி வைத்தேன்.

நல்லைக்கந்தன் ஆலயத்தின் 25 நாள் மகோற்சவ காலத்தில் 25 நாளும் பதிவுகளை இட்டேன். கூடவே என் நனைவிடை தோய்தலோடு, நல்ல மலையாள சினிமாக்களும் பட்டியலில் இடம் பிடித்தது.

தினக்குரல், வீரகேசரியின் மெட்ரோ பத்திரிகை, ஈழத்தின் புது வரவு “இருக்கிறம்” சஞ்சிகை, ஈழமுரசு, ஒரு பேப்பர், உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் இப்பதிவுகள் இடம்பிடித்ததோடு ஈழத்தின் நெடியதொரு பாரம்பரியமிக்க “மல்லிகை” சஞ்சிகையில் திரு. மேமன் கவி எனது வலைப்பதிவு குறித்த அவர் கருத்தும் யாழ்ப்பாணத்து வாசிகசாலைகள் என்ற ஆக்கமும் வெளிவந்திருந்தது. அத்தோடு கனடாவில் இருந்து ஜெப்ரி வழங்கும் “கலசம்” என்ற கணினி நிகழ்ச்சியிலும் என் வலைப்பதிவு குறித்த அறிமுகத்தையும் வழங்கியிருந்தார். இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்வதை விட என் எழுத்துக்கான அங்கீகாரமாகச் சொல்லிப் பெருமிதமடைகின்றேன். “இருக்கிறம்” சஞ்சிகை தொடர்ந்தும் என் படைப்புக்களை வெளியிட்டு உற்சாகம் தருகின்றது. ஆனால் என்னுடன் எந்த விதமான தொடர்பாடலும் இன்றி சில தளங்களில் ( ஐரோப்பாவில் இயங்கும் ஒரு தமிழ் சங்கம் உட்பட) இப்பதிவுகளை தமது சொந்தப் பதிவாக தமது தளத்தில் இட்டிருப்பது குறித்து மிகவும் கவலையடைகின்றேன். கட்டற்ற வலைப்பதிவில் சங்கடங்களில் இதுவும் ஒன்று.

என் பதிவுகளில் ஒன்றான “அண்ணை றைற்” என்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் தனி நடிப்பு ஒலி மற்றும் எழுத்துப் பதிவு தான் அதிகம் பார்க்கப்பட்ட பின்னூட்டப்பட்ட பதிவு. அத்துடன் “அண்ணை றைற்” நாடகம் உட்பட்ட தனி நடிப்பு நாடகங்கள் இந்த ஆண்டு முதன் முதலில் இறுவட்டாகவும் வந்தது ரசிகனாக எனக்கு உரிமையோடு உவப்பை அளிக்கின்றது.


மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் 😉
தற்போது தனியாக ஒரு தளமாக கானா பிரபா பக்கங்கள் என்ற திரட்டியையும் ஆரம்பித்திருக்கின்றேன்.

இன்றுவரை என் மனதின் ஓரமாய் வலிக்கும் இழப்பு , கடந்த மாதம் விமானக் குண்டு வீச்சினால் வீரச்சாவடைந்த போராளி மிகுதனின் இழப்பு. ஓராண்டுக்கும் மேலாக என் வலைப்பதிவின் வாசகனாக இருந்து அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் தந்தவன் சொல்லாமல் போய் விட்டான். மிகுதன் என்ற போராளி இறந்ததாக செய்தி வந்ததும் அவனுக்கு மின்னஞ்சல் போட்டு சுகம் விசாரித்தேன், அவனா என்று. இன்று வரை எனக்குப் பதில் இல்லை. வெளியே சிரித்து உள்ளுக்குள் அழும் வேஷதாரி வாழ்க்கை தான் நமக்கு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வலையுலக அரசியல், எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது, எத்தனை தரம் பின்னூட்ட வேண்டும் என்று கட்டளை போடும் வலையுலக நாட்டாமைகளையும், புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்:
வலைப்பதிவில் ஒரு வருஷம்

2007 ஆம் ஆண்டில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது

வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது

ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.

வரதரின் படைப்புலகம்

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும்.

மாட்டுவண்டிச் சவாரிகள்…!

மாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன்.

பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று

எருவில் மூர்த்தி” என்று திருத்திய அப்பெண் குரல் , நான் அதுவரை அறியாத அக்கவிஞரின் சிறப்பையும் சொல்லிச் சிலாகிக்கின்றார். தவற்றுக்கான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே “முடிந்தால் எருவில் மூர்த்தியின் தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா?” என்று நான் கேட்கவும் அந்த நேயர் தருகின்றார். நவம்பர் 17 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் எருவில் மூர்த்தியை வான் அலைகளில் சந்திக்கின்றேன் இப்படி.

யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.

நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்

ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.

காற்றின் மொழி…..!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

“அண்ணை றைற்”

தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன்.

மனசினக்கரே – முதுமையின் பயணம்

தன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,
“எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”
அந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
எங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில.

கல்லடி வேலரின் வாழ்வில்…!

ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் ” வித்தகர்” எனப் பாராட்ட “கல்லடி வேலரின் வாழ்விலே” இடம்பெற்ற சில நிகழ்வுகள்.

மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்

ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு நினைவில்

போன வருஷம் 2006 தமிழ்ப் புதுவருசம் பிறக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில். யுத்த நிறுத்தம் குற்றுயிராக இருந்த, நெருக்கடி நிலை மெல்ல மெல்லத் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு வருசம் ஆகிய இன்றைய புத்தாண்டுப் பொழுதில் முழுமையாகவே சீர் கெட்ட நிலையில் எம் தேசம். பாதை துண்டிக்கப்பட்டு பாலைவன வாழ்க்கையில் எம்மக்கள்.
கடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் சோகமாகவும் மனசை அப்பிக்கொள்கின்றது.

உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்

பலுங்கு என்றால் ஆங்கிலத்தில் crystal. தற்போது வேகமாக அதிகரித்து வரும் நுகர்வுப் போக்கு, அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் மத்திய தர அல்லது கீழ்த்தட்டு மக்களின் இயல்பு வாழ்வை எப்படிச் சீரழிக்கின்றது என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் சேதி.

எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்

தன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.

அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.

தாசீசியஸ் பேசுகிறார்…!

ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில் இடம்பெற்றது. இந்த வேளையில், ‘தமிழ்நாதம்” இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின் ஒலி மற்றும் எழுத்து வடிவம் கொண்ட பதிவு.

யாழ்ப்பாணத்துச் சமையல்

குளித்து முடித்துக் குசினிக்குள் போகின்றேன், சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன. சோற்றுடன் கொஞ்சமாக மட்டும் இறாலைப் போட்டுச் சாப்பிடுகின்றேன்.

“ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது” இது என் அம்மா.

“என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை”.

விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்

உங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை? “
என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
“விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்” என்று.வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.

விபுலாநந்த விலாசம்

ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அடிகளாரின் பன்முகப் பணி குறித்த தொகுப்பு இது.

பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!

கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்” முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டை முன்னிட்டு அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.

நிறைவான நல்லூர்ப் பயணம்

ஈழத்தின் நல்லைக் கந்தன் ஆலயத்தின் இருபத்தைந்து நாள் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு நாளும் இடுகையிட்டு அமைந்த வரலாற்று, ஆன்மீக, இசையின்பம் கலந்த பதிவுகளின் தொகுப்பு. நாளாந்த வேலைப்பழுவின் மத்தியில் என்னுடைய சக்திக்கு மீறிய விடயமாக இருந்தாலும் எம்பெருமான் அருளால் கைகூடிய பதிவுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அன்பர்களுக்கும் நன்றியறிதல் என்றும் உண்டு.

நிலக்கிளி” தந்த அ.பாலமனோகரன்

திரு.அ.பாலமனோகரன் அவர்கள் ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை ஒலி மற்றும் எழுத்து வடிவில் பகிரும் பதிவு.

பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்

ஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு “முற்றத்து மல்லிகை” என்றும் பின்னர் இப்போது படைக்கும் “ஈழத்து முற்றம்” போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.

தீவாளி வருஷங்கள்….!

தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.

எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார். பேராசிரியரின் பவள விழாவினையொட்டி துறைசார் அறிஞர்களையும் , அவரிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் தயாரித்த ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி, எழுத்து வடிவுடன் கூடிய பதிவாக அமைகின்றது.