“எரியும் நினைவுகள்” உருவான கதை

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது “எரியும் நினைவுகள்” வழியே வரும் சாட்சியங்கள்.

தன் உறவுகளையும், ஊரையும் தொலைத்த அதே வகையான சோகத்தைத் தான் ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த நூலகத்தை இழந்த தவிப்பாகவும் தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றான். அந்த சாட்சியங்களே இந்த ஆவணப்படத்தின் கூட்டில் நின்று சாட்சியம் பகிர்கின்றன. தாம் சேர்த்து வைத்த அசையும், அசையா என்று எல்லாச் செல்வங்களையும் ஒரே நொடியில் தொலைக்கும் வாழ்க்கை தான் அன்றிலிருந்து இன்று வரை ஈழத்தமிழனுக்கு வாய்த்திருக்கின்றது. வெறும் வாய்வழியே சொல்லப்படும் சோகவரலாறுகள் தான் இன்று எமக்கான வரலாற்று ஆதாரங்கள். அந்தச் சோக வரலாறுகளில் ஒன்றான யாழ் பொது நூலகம் எரிப்பையும் அந்தக் காலகட்டத்தில் தம் உயிராகவும், ஊனாகவும் இதைப் பேசத் தொடங்குகின்றார்கள். “எரியும் நினைவுகள்” அவற்றை ஒளி வழி ஆவணப்படுத்துகின்றது.

கடந்த வாரம் தான் இந்த ஆவணப்படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. இந்த “எரியும் நினைவுகள்” ஆர்ப்பரிக்கும் சிந்தனைகளோடும், உணர்ச்சி வசப்படும் பேச்சுக்களோடும் அல்லாமல் மெதுவாக ஆனால் வீரியமாக அந்த அறிவுசால் ஆலமரம் வீழ்ந்த கதையைச் சொல்லி நிற்கின்றது. பொதுசனத்தொடர்பூடாகங்களில் நம் ஈழத்தவர் அதிக முனைப்புக் காட்டி வரும் வேளை ஆவணப்பட முயற்சிகள் மிக மிகக்குறைவாகவே இருக்கின்றது. நம் இருண்ட சோக வரலாறுகள் ஒளி ஆவணப்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலைமுறையும் தம்முள்ளே இவற்றைப் புதைத்து வைத்து அவை தொலைந்து போனதாகிவிடும். அந்த வகையில் “எரியும் நினைவுகள்” என்னும் இந்த ஆவணப்படம் உண்மையிலேயே நல்லதொரு விதையாக விழுந்திருக்கிறது.

இந்த ஆவணப்படத்திற்கான முழுமையான தரவுகளும், சாட்சியங்களும் சொந்த மண்ணில் இருந்தும், சிறீலங்காத் தலைநகரில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை பிற்தயாரிப்பு முயற்சிகள் திரைத்துறைத் தொழில்நுட்பம் சிறப்பானதொரு இடத்தில் இருக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யாழ் நகரின் அன்றைய மேயர் ராஜா விஸ்வநாதன் 1981 ஆம் ஆண்டு நூலக எரிப்பு நடந்த பின்னர் வெளியிட்ட கருத்து வீடியோ, இந்த நூலக எரிப்பை முதலில் கண்ணுற்ற யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தகைநிலைப் பேராசியர் சிவத்தம்பி போன்ற கல்வியாளர்கள், நூகலர்கள், நூலகத்து வாசகர்கள் என்று பலரின் நினைவுக்கதவுகளை இந்த ஆவணப்படம் திறந்திருக்கிறது. நிகரி திரைப்பட வட்டம் சார்பில் தயாரிக்கப்பட்டு சி.சோமிதரனின் இயக்கத்திலும், தமிழகத்தின் தேர்ந்தெடுத்த திரைத் தொழில்நுட்பவியலாளர்களின் கூட்டிலும் இந்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் பேசும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆவணப்படத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கும், இந்த ஆவணப்படத்தைப் வாங்குவதற்கும்

http://burningmemories.org/

அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இவ் ஆவணப்பட இயக்குனர் செல்வன் சி.சோமிதரனை வானலை வழி சந்தித்திருந்தேன்.

ஊடகவியலாளரும், எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனருமான செல்வன் சோமிதரன் சொல்லும் ” எரியும் நினைவுகள்” உருவான கதை

வணக்கம் சோமிதரன், நீங்கள் இலங்கையிலே இருந்த காலத்தில் ஊடகவியலாளராக உங்களை உருவாக்கிக் கொண்டீர்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது எரியும் நினைவுகள் என்கின்றஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். முதலில் உங்களுக்கு இந்த ஊடகத்துறையில் உங்களை வளப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி சொல்லுங்களேன்?

இலங்கை வானொலியிகள் மீதான ஈர்ப்பு தான் எனக்கு இந்த ஊடகத்துறையில் வரவேண்டும் என்கிறவிருப்பை உருவாக்கியது என்பேன். ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு கணிதத்துறை மாணவன். உயர்தர வகுப்புபடித்ததன் பிறகு கொழும்பில் இருந்த காலகட்டங்களில் இலங்கை வானொலியின் நெருக்கம், அவ்வானொலியின் நாடகங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு, இலங்கை வானொலியின் நாளைய சந்ததி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு இவையெல்லாமே இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளர் என்னும் இடத்தை நோக்கி எடுத்துச் சென்றது. நான் ஊடகத்துறையில் வந்தபொழுது பின்னாலுள்ள சமூகம் பற்றிய பார்வை வராத காலகட்டம் என்று சொல்லலாம்.

அதற்குப் பிறகு வானொலியில் இருந்து பத்திரிகைத் துறைக்கு வரவேண்டிய நிலமை வந்தது. ஏனெனில் வானொலியில் இருந்தோ, ஸ்ரூடியோவுக்குள் இருந்தோ எதையும் செய்யமுடியாத நிலமை. ஏனெனில் இலங்கை வானொலி வந்து ஒரு இருபது வருஷங்களுக்கு

முன்னாலையோ, அல்லது பதினைந்து வருஷங்களுக்கு முன்னாலையோ இருந்த நிலமையில் இருக்கவில்லை. நான் சின்ன வயசில் கேட்ட இலங்கை வானொலி இப்போது இல்லாமல் போச்சு.

இந்த மாதிரிச் சூழலில் நான் பத்திரிகைத் துறைக்குள் வந்தேன்.பத்திரிகைத் துறைக்குள் வந்த பிறகு தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு மறைந்த ஊடகவியலாளர் சிவராமினால் உருவாக்கப்பட்ட North eastern Herald என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றியிருந்தேன். திரு தராக்கி சிவராம் மற்றும் திரு சிவநாயகம் இருவருடனும் சேர்ந்து அந்தப் பத்திரிகையில் பணியற்றியிருந்தேன். அது ஒரு பெரிய கொடுப்பினையாக இருந்தது என்றே சொல்வேன்.நிறைய விஷயங்களை அதன் மூலம் சமாதான காலத்திலே, நிறையச் செய்திகளை, போர், அரசியல் என்பதற்கு அப்பாற்பட்டு தமிழர்களுடைய அபிவிருத்தி தொடர்பாக, எங்களுடைய வளங்கள், பண்பாடு தொடர்பாக, எங்களுக்குள் இருக்கக்கூடிய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதக்கூடிய வாய்ப்பை எனக்கு அது உருவாக்கியது.அந்தத் தொடர்ச்சி காரணமாக எனக்கு பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

நீங்கள் ஊடகத்துறையில் இருந்த காலகட்டத்தில் இருந்த ஊடகச் சூழல் எப்படி இருந்தது?

அதாவது 2002 ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தின் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்வதற்காகப் போகின்றேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில், ஆனால் வளர்ந்தது முழுமையாக மட்டக்களப்பில். அதாவது தொண்ணூறுகளின் முழுமையான காலகட்டத்தில் என் வளர்ப்பு மட்டக்களப்பிலேயே இருந்தது. திரும்பவும் நான் 2002 ஆம் ஆண்டு யாழ் போகின்றேன். அதாவது A9 பாதை திறந்த காலகட்டத்தில் முதற்தொகுதி பயணிகளோடு போய் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு நாலைந்து மாதத்தில் மீண்டும் கொழும்புக்கு வந்துவிட்டேன். இந்தக் காலப்பகுதி எல்லாமே சமாதான காலப்பகுதி தான். சுதந்திரமாக நாங்கள் வேலை செய்யக் கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலும் இருக்கவில்லை. எனவே நிறையத் தகவல்களையும், செய்திகளையும் நாங்கள் சொல்லக் கூடியதாகவும் இருந்தது. அதன் பின்னால் 2004 இல் நிலமை மோசமடையத் தொடங்கியது. அதாவது கிழக்குப் பகுதியில் முற்றுமுழுதாகப் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலமை வந்தது. பிறகு ஏப்ரல் 28 ஆம் திகதி, 2005 இல் தராக்கி சிவராம் அவர்கள் கொல்லப்பட்டார். எனவே 2005 இற்குப் பிறகு எல்லோருக்குமே தெரிந்த விடயமாக இந்த ஊடக அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

உங்களுடைய ஆரம்பம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று வானொலி பின்னர் பத்திரிகைத்துறை என்று மாறி தற்போது இன்னொரு ஊடக வடிவம் அதாவது ஆவணப்படங்களை எடுக்கும் முனைப்பு என்று தற்போது மாறியிருக்கின்றது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை ஏராளமான குறும்படங்கள் வந்திருக்கின்றன. அந்த முயற்சிகள் தாயகத்திலும், புலம்பெயர்ந்த சூழலிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஆவணப்பட முயற்சிகள் என்பது மிக மிக அரிதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் உங்களுக்கு இந்த ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு எப்படி வந்தது?

நான் முதலில் North eastern Herald இல் வேலை செய்த காலப்பகுதியில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை மையப்படுத்தி பி.பி.சி அந்தக் கட்டுரைகளுக்கு அமைவாக ஆவணப்படங்களை எடுத்தது. அதன் பொருட்டு அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் அதன் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு Visual Media வில் நுளைந்து அதன் மூலம் நிறையச் செய்யலாம் என்று என் மனதில் பட ஆரம்பித்தது. இந்தக் காலப்பகுதியில் நண்பர் சரிநிகர் சிவகுமார் அவர்கள் சொன்னார் நாங்கள் அடுத்தகட்டமாக Visual ஆக ஏதாவது செய்வோம் என்றார். இப்படியாக இலங்கையில் தொலைக்காட்சிப் படமோ அல்லது ஒரு ஆவணப்படமோ செய்வோம் என்று நாம் தீர்மானித்தோம். ஏனெனில் Visual revolution என்ற ஒன்று வந்திட்டுது.அச்சூடகத்துறையில் இருந்து Visual Media வின் ஆக்கிரமிப்பு இப்போது பரவலாக இருந்து வருகிறது. அத்தோடு அந்த ஊடகமும் மிகவும் இலகுவாக்கப்பட்டு, எமது கைக்கு அண்மையதாக வந்து விட்டது. ஆகவே இந்த ஊடகத்தை நான் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் நான் சென்னையில் லயோலா கல்லூரியில் Media Visual Communication கல்வி கற்றேன். எனவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள்

Visual Media வை கையில் எடுக்கவேண்டும் என்ற நிலமை உருவாயிற்று. அதிலும் குறிப்பாக ஆவணப்படங்களை எடுக்கவேண்டும் என்ர முடிவை எடுத்தோம்.

இதைப்பற்றி விரிவாகப் பேச ஆசைப்படுகின்றேன். சாதாரணமாக எங்களுக்கு வந்து படம், சினிமா, பிலிம் என்று பல்வகையாகச் சொல்லப்படுவது எங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தப்படுகின்றது என்றால் சாதாரணமாக தமிழகத்தில் இருந்து வரும் வியாபாரத்தனமான படங்களைத் தான் தமிழர்கள் நிறைய அனுபவிக்கின்றோம். அதிலும் குறிப்பாக் ஈழத்தமிழர்களுக்கு இந்தப் போர்ச்சூழலில் வேறு எந்தப் பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத சூழலில் எமக்கு கிடைக்கக்கூடிய ஒரே பொழுதுபோக்காக இருப்பது இந்த தமிழ் சினிமா. சதா சர்வகாலமும் தமிழ்சினிமாவை போட்டு போட்டு படமென்றால் தமிழ் சினிமா என்ற நிலமையில் இருந்து வந்தோம். இந்தச் சூழலில் அதற்கு மாற்றான ஒரு ஊடகத்தைத் தேடிக்கொண்டுவரவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் நாங்கள் ஆவணப்படங்களைத் தெரிவு செய்தோம். ஏனெனில் ஆவணப்படத்திற்கும், குறும்படத்திற்கும் வித்தியாசம் தெரியாத நிறையப் பேர் இருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ச்சூழலில் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழகத்திலும் இந்த ஆவணப்படம் வளர்ச்சி பெற்று வருவதாக இருக்கின்றதே தவிர முற்றாக வளர்ச்சி பெற்ற ஒன்றாக ஆவணப்படம் என்பது இருக்கவில்லை.

அதாவது இந்த ஊடகத்தில் நாம் கடக்கவேண்டிய படிகள் பல உள்ளன, இதற்கு முன் மாதிரியாக பல ஆவணப்படங்கள் வெளிவரவேண்டும். அந்தவகையில் நீங்கள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்த அனர்த்தம் தாங்கிய ஆவணப்படமாக இந்த எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். இந்த ஆவணப்படம் உருவான பின்னணியைச் சொல்லுங்களேன்?

நான் முன்னர் சொன்னது போல நானும் சிவகுமாரும் 2004 இல் தீர்மானித்ததன் அடிப்படையில் இங்கே, இலங்கையிலே நிறைய ஆவணப்படங்களை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். ஏனெனில் தமிழ்சினிமாவுக்கு நிகராக ஒரு சினிமாவை எடுப்பது என்பது சாத்தியமற்ற விடயம். எங்களுக்கு இருந்த குறுகிய வசதிகளைப் பயன்படுத்தி எங்களிடம் இருக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவேண்டுமென்ற தேவை இருந்தது. எனெனில் எங்கட தமிழ்ச்சமூகத்தின் பெரிய குறைபாடு என்னவென்றால் நாங்கள் எதையுமே ஆவணப்படுத்துவதில்லை. இந்தச் சூழலில் நாங்கள் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த விடயம் யாழ்ப்பாண பொது நூலகம். ஏனெனில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 27 வருஷமாயிற்று. இந்த இனப்போரின் முக்கியமான ஒரு விடயமாக இந்த யாழ் நூலக எரிப்பே இருக்கின்றது. இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த நூலகம் எப்போது எரிக்கப்பட்டது போன்ற விபரங்களே தெரியாது. எங்களைப் போன்ற அடுத்த சந்ததி எரிக்கப்பட்ட இந்த நூலகத்தின் சாம்பலில் பிறந்து, தவழ்ந்து , வளர்ந்து, நாடுகள் தேசங்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைமுறை. எனவே இந்தத் தலைமுறைக்கு வந்து எமக்கு முன்னான ஒரு தலைமுறை வந்து எவ்வளவு செளகரியமாக இருந்தது, எவ்வளவு வளங்களோடு இருந்தது, எவ்வளவு தன்னிறைவாக இருந்தது, பின்னர் அவையெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது. எப்படித் திட்டமிடப்பட்டு ஒரு இனவாதத்தினால் அழிக்கப்பட்டது என்பதைச் சொல்லவேண்டிய தேவை இருந்தது. அதனுடைய மிகச்சிறந்த குறியீடாக இந்த யாழ்ப்பாண நூலகம் விளங்குகின்றது.

நான் பிறந்து சரியாக 19 ஆம் நாள் இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. மே 31, 1981 ஆம் ஆண்டு இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. அந்தச் சம்பவத்தின் பின்னர் தான் போர் உக்கிரமடைகின்றது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான ஆயுதப்போராட்டக் குழுக்கள் வருகின்றன. 83 இலே திரும்பவும் கலவரம் நடக்கின்றது. அதன் பின்னர் முழுமையாக ஆயுதப் போராட்டம் வெடிக்கின்றது.

இந்த 27 வருஷகால வரலாற்றை நூலகத்தை வைத்து பதிவுசெய்யவேண்டும் என்பதற்காக நூலகத்தினை ஆவணப்படமாக்கும் முயற்சியை நாங்கள் 2005 இல் ஆரம்பித்தோம். ஆனால் ஒரு ஆவணப்படம் என்பது மிகச்சாதாராண விடயம் அல்ல. அதற்கான வளங்கள், நிதித்தேவைகள் நிறைய இருந்தன. எனவே 2005 இலேயே அதை ஆரம்பிக்க முடியாமல் போயிற்று. 2006 ஆம் ஆண்டில் நூலகம் எரிக்கப்பட்ட 25 வருஷத்தில் நாங்கள் படப்பிடிப்புக்குத் தயாரானோம். 2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கான A9 பாதை மூடுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரை படப்பிடிப்பை நடத்தியிருந்தோம். யாழ்ப்பாணத்தில் அப்போது படப்பிடிப்பை நடத்துவது மிகச்சிரமமாக இருந்த சூழலாக இருந்தது. நான் இந்தப் படப்பிடிப்புக்கு யாழ்ப்பாணத்திற்கு யாரையுமே கொண்டுபோக முடியாத சூழலில் சந்திரன் என்கிற கார் ஓட்டுனரோடு மட்டுமே இருந்து எடுக்கவேண்டியிருந்தது. ஊடகவியலாளர்கள் பிஸ்கட் பெட்டிக்குள் கமராவை மறைத்துக் கொண்டுபோன காலம் அது.

இந்த யாழ்நூலகம் குறித்த ஆவணப்படம் குறித்த தேடல்கள் மேற்கொண்டபோது அந்தத் தேடல்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அங்கேயே அமைந்திருந்தனவா அல்லது கொழும்பிலும் மேலதிக தேடல்களை மேற்கொண்டிருந்தீர்களா?

உண்மையைச் சொல்லப்போனால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எதுவும் இருக்கவில்லை. யாழ்ப்பாண நூலகத்தில் கூட எந்தவிதமான ஆவணமும் இல்லை. ஏனெனில் சேர்த்துவைத்ததெல்லாமே காலம் காலமாக நடந்த குண்டுத்தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் எல்லாமே அழிந்து போயிற்று. எனவே யாழ்ப்பாணத்து மக்களிடமும் எதுவுமே இல்லை. எல்லோருமே ஒரு பெரும் இடப்பெயர்வைச் சந்தித்துத் திரும்பி வந்த சமூகம் அது. எனவே அங்கே வந்து எந்தப் பெரிய ஆவணமும் இல்லை. பழைய புகைப்படங்கள் கூட இல்லாத சூழல்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் நூலகம் தொடர்பானவர்களின் பேட்டிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. கொழும்பில் இருக்கும் இலங்கைத் தேசிய நூலகத்தில் பழைய பத்திரிகைகளை எடுக்கக்கூடியதாக இருந்தது. அதுவும் சிரமமான விடயம் தான். இலங்கை தேசிய நூலகம், இலங்கை தேசிய சுவடிகள் கூடம் போன்ற இடங்களுக்குச் சென்று இலஙகை இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை எடுப்பது மிகச்சிரமமான விடயம் தான். ஆனாலும் தேசிய நூலகத்தில் இருந்த அந்தக் காலத்தில் வந்த கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளின் பேட்டிகள், செய்திகள் எல்லாவற்றையும் எடுத்திருந்தோம். இதைத்தவிர வெளிநாட்டில் வாழ்வோர், தமிழகத்தில் இருப்போர் என்று பல்வேறு

யாழ் நூலகம் தொடர்பில் என்னென்ன தகவல்கள் இருக்குமோ அவற்றையெல்லாம் கடந்த மூன்று வருடமாகச் சேகரித்தோம். அதில் முதன்மையானது க.சி.குலரத்தினம் அவர்கள் எழுதிய “யாழ்ப்பாண நூலகம் ஓர் ஆவணம்” என்னும் புத்தகம். அந்தப் புத்தகம் தான் யாழ்ப்பாண நூலகம் குறித்த முழுக்கதையையுமே எனக்கு தீர்மானிக்க உதவியது.

தவிர யாழ்ப்பாண நூலகம் சார்ந்த ஆட்கள், அந்தக் காலப்பகுதியில் இருந்த மக்கள் இவர்களிடமும் தகவல்களைப் பெற்றேன். இப்படியாக கடந்த மூன்று வருடகாலமாக நிறையத் தேடிப் பெற்றுக்கொண்டோம். இன்னும் பலரிடமும் நிறையத்தகவல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படம் மூலம் நீங்கள் சொல்ல நினைப்பது என்ன? இந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் என்று நீங்கள் யாரைத் தீர்மானித்திருக்கின்றீர்கள்?

குறிப்பாக சில ஆவணப்படங்களுக்கு ஒருவகையான பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஆவணப்படத்தினுடைய பார்வையாளர்கள் பல்வேறு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள்.ஒன்று வந்து இந்த நூலகத்தின் எரிவு காலப்பகுதிக்கு முன்னர் நூலகத்தோடு மிகப்பரிச்சயமாக ஊடாடிய மக்கள், நூலகத்தை இழந்து நிற்பவர்கள். இன்னொன்று இந்த நூலகம் இருந்தது பற்றியும், அந்த நூலகம் குறித்த நேரடி அனுபவமும் இல்லாத எங்களுடைய தலைமுறையினர். இந்த இரண்டு தலைமுறையும் எங்கள் மத்தியில் இருப்பவர்கள். இன்னொன்று புலம்பெயர்ந்த எமது தமிழ் மண்ணை அறியாத இன்னொரு தலைமுறை. இப்படி எமது சமூகத்தின் எல்லாத் தலைமுறைக்கும் இது போய்ச்சேரவேண்டும் என்பதே எம் நோக்கம். இந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தாலும் எமது தமிழ்ச்சமூகத்தினுடைய அடையாளமாக இருக்கின்றது. எனவே இந்த அடையாளம் குறித்து எல்லாத் தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே முக்கியமாக எமது தமிழ்ச்சமூகத்துக்குப் போக வேண்டும்.

இரண்டாவது வந்து இந்தத் தமிழ்ச்சமூகத்துக்கு வெளியில் இருக்கக்கூடியவர்கள். இந்த ஆவணப்படம் நான்கு மொழிகளில் வந்திருக்கின்றது. தமிழ் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் என்று. எங்களுடைய சமூகத்தின் பிரச்சனைய மற்றைய சமூகத்திற்கு தெளிவு படுத்தக்கூடிய தேவையும் இருக்கின்றது. இலங்கையில் நடந்த மிக மோசமான ஒரு வன்முறையை மற்றைய சமூகத்திற்கு சொல்லவேண்டிய தேவையாக இருக்கிறது. எனவே இந்த ஆவணப்படம் எங்கட சமூகத்துக்கும் சொல்லும் அதே வேளை எங்கட சமூகத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கும் இந்தச் சேதியைச் சொல்கின்றது.

இந்த நூலகம் சம்பந்தப்பட்ட மற்றும் வெளியாட்கள் என்று இந்த ஆவணப்படத்திற்கு யார் யாரெல்லாம் பயன்பட்டார்கள்?

இந்த நூலகத்தின் ஊழியர்களாக இருந்தவர்கள், இந்த நூலகம் எரிக்கப்படும் போது இருந்த நூலகர், அதற்குப் பிறகு வந்த சில நூலகர்கள் மற்றது இலங்கை அரச தரப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தவிர 1981 ஆம் ஆண்டிலும் 2006 இலும் யாழ் மாநகர ஆணையாளராக இருந்த திரு சி.வி.கே.சிவஞானம் அவர்கள், முதன் முதலில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர் அவர் தான். இப்படிப் பல்வேறுபட்டவர்கள். பழைய வீடியோ படங்களின் பகுதிகள், அதாவது 1981 ஆம் ஆண்டு யாழ் மாநகர முதல்வராக இருந்த திரு விஸ்வநாதன் அவர்கள் அப்போது கொடுத்திருந்த பேட்டி, மற்றும் பழைய வீடியோ காட்சிகள் என்று எல்லாமே சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அதாவது 49 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கான தயாரிப்பைச் செய்ய உங்களுக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள், அதாவது தகவல்களைத் திரட்டல், பின்னர் முறையாக ஒழுங்குபடுத்தல், பொருளாதார ரீதியாக இந்தத் திட்டத்திற்கு வலுப்படுத்தி இந்த முயற்சியில் இறங்குவது என்பதற்காக இவ்வளவு காலமும் பிடித்திருக்கிறது இல்லையா?

பொருளாதார ரீதியில் எங்கள் சமூகத்தில் வலுவான எந்த அமைப்புக்களும் கிடையாது. மற்றது அது பற்றிய கரிசனையும் எங்கள் மத்தியில் கிடையாது. எங்களிடம் இருக்கும் வளர்ச்சி, வாய்ப்புக்கள் இவையெல்லாம் நிறைய விடயங்களை ஆவணப்படுத்த முடியும். 27 வருஷத்துக்குப் பிறகு ஒரு விஷயத்தை ஆவணப்படுத்தவேண்டுமென்றோ, இந்த யாழ்ப்பாண நூலகத்தை மட்டும் தான் ஆவணப்படுத்த முடிஞ்சது என்பது மிகத்துரதிஷ்டவசமான ஒரு விஷயமாகும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக முன்னர் சமாதான காலத்தில் மிக அதிகமான விடயங்களை நாம் ஆவணப்படுத்தியிருக்க முடியும். ஆனால் நாம் செய்யவில்லை. ஆவணப்படுத்தல் ஊடாகத் தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கவும் இல்லை. இந்தக் காலப்பகுதியில் எங்கள் சொந்த முயற்சியாகவே, வேறு வேலைகள் மூலம் கிடைத்த பணத்தைப் போட்டு செய்யவேண்டிய நெருக்கடியான நிலமை இருந்தது. சிலர் கொடுத்த சிறு பண உதவிகள் இப்படியானவற்றின் மூலமே இதக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது.

இப்பேட்டியின் நிறைவாக நீங்கள் நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?

நான் சொல்ல விரும்புவது இது தான், நாங்கள் காலம் காலமாக எதையும் ஆவணப்படுத்தாமல் இருப்பதென்பது எங்களுக்கு பெரிய சாபக்கேடான விடயம். எனக்கு இந்த ஆவணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பு தென்றியது 2005 இல் கோவா திரைப்பட விழாவுக்கு சென்ற போது அங்கே ஒரு மணிப்பூர்காரர் இருந்தார். அவர் தன் மணிப்பூர் பற்றிய பிரச்சனையைச் சொல்வதற்கு அவரிடம் ஒரு ஆவணப்படம் இருக்கு. ஆனால் அப்போது என் நாட்டின் பிரச்சனையைச் சொல்ல ஒரு ஆவணப்படமும் என்னிடம் இருக்கவில்லை.

எனவே குறைந்த பட்சம் ஏதாவது ஒரு ஆவணப்படம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனையும் கூட. எங்களுக்கு எங்கள் பிரச்சனையைச் சொல்வதற்கான ஆவணப்படம் வேண்டும். சரியான ஊடகம் அதுவாகத் தான் இருக்கும். ஒரு ஆவணப்படம் எல்லா மொழிகளையும், நாடுகளையும், வரையறைகளையும் எங்கெங்கு தாக்கம் செலுத்தவேண்டுமோ அதைச் சரியான முறையில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக ஆவணப்படங்கள் இருக்கும். எங்கள் பிரச்சனை குறித்தும், மக்களுடைய அவலங்கள் குறித்தும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மூலம் பதிவு செய்ய்யப்படவேண்டும் என்பதே என்பதே என் விருப்பம்.

சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!

தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது பிறந்த இடமான தெல்லிப்பழையில் இன்று நடைபெற்று தெல்லிப்பழை கட்டுப்பிட்டி மயானத்தில் தகனக் கிரிகைகள் நடைபெற்றிருந்தது.

ஈழத்தில் பிறந்த எவருமே தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஆன்மீகச் செம்மலைத் தெரியாமல் வாழ்ந்திருக்க முடியாது. அவரது சொற்பொழிவுகளும், சைவ சமயப் பாடநூல்களிலும், ஆன்மீக இதழ்களிலும் கொடுத்த அவர் தம் கட்டுரைகளும் இன்னும் என்னைப் போன்ற பலர் நெஞ்சில் பசுமரத்தாணியாய் இருக்கும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து “தாயான இறைவன்” என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.

இன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்பு அஞ்சலி நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் பங்கேற்று அஞ்சலிப் பகிர்வை வழங்கியோர்:

* ஆன்மீகப் பேச்சாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்,

* அபயகரம் ஆதரவற்றோர் உதவி அமைப்பின் நிறுவனர் திரு சிவானந்தன்,

* யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ்,

* சிட்னி வாழ் சைவத்தமிழ் அறிஞர் திரு.திருநந்தகுமார்,

* கம்பவாரிதி இ.ஜெயராஜ்,

* ஈழத்தமிழர் கழகம் அமைப்பின் தலைவர், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்

* வானொலி மாமா திரு மகேசன் அவர்கள்

* திருநெறிச்செல்வர், சிவத்தமிழ்ச்செல்வியின் வழிகாட்டலில் ஆன்மீக, அறப்பணி ஆற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்கள்

அந்த நிகழ்ச்சியின் ஒலித் தொகுப்பைக் கேட்க (அளவு: 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 31 செக்கன்)

தரவிறக்கிக் கேட்க

யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நிகழ்வின் தொகுப்பும், அஞ்சலிப்பகிர்வும்

மேளச்சமா…!

“மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது” இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.

மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.

கடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று “ல” வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் “அப்பன்”, “சொல்லு ராசா” எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை “மணி” அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.

தீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.

வசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.

அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி? என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா? என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.“வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்” கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.

பக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.

சோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.

சுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், “அரோகரா! அரோகரா” எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

வானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.

மணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,

“என்ர பிள்ளையாரப்பு! எங்களையெல்லாம் காப்பாத்து”000000000000000000000000000000000000000000000

கடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.ஒலி வடிவில் கேட்க