அந்த நவராத்திரி நாட்கள்

“சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி…..சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி” இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயலட்டை வீடுகளில் சின்னனுகள் கத்திக் கத்திப் பாடமாக்கும் சத்தம் கேட்பது தான் நவராத்திரி வருவதற்கான முன்னோட்டம். ஒவ்வொரு ஆண்டு நவராத்திரிக்கும் முன் சொன்ன அடிகள் மாறாது பேச்சுப் போட்டி மனப்பாடம் இருக்கும் . அந்த சின்னப்பிள்ளைப் பருவத்தில் சுவாமிப் படத்துக்குச் சகலகலாவல்லி மாலை பாடினால் அவல் சுண்டல், கெளபி கிடைக்கும் என்பது தான் நவரத்திரி பற்றித் தெரிந்த ஒரே இலக்கணம் எமக்கு. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களுக்கான பண்டிகை என்றாலும் “சரஸ்வதி பூசை” என்ற பொதுப் பெயரிலேயே இதனை அழைத்தது எம்மவர்கள் கல்விக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தாலோ என்னவோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.

சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த அரிச்சுவடி ஏடுகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். ( இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)

இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி முருகன் கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)

ஒரு விஜயதசமி நாளில் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சோமாஸ்கந்தக் குருக்களிடம் என் அப்பாவும் அம்மாவும் அருச்சனை செய்து தம்பி வாத்தியார் என் கை விரலைப் பற்றிப் பரப்பியிருந்த நெற்குவியலைத் துழாவி ஆனா எழுத அடியெடுத்துக்கொடுத்தது சின்னதாக இன்னும் என் ஞாபகத்திரையில். ( குழப்படி செய்யாம ஆனா எழுதினா, கோவால் மாமா கடையில ஸ்ரார் ரொபி வாங்கித்தருவேன் – இது என் அம்மா). பின்னர் தம்பி வாத்தியார் தந்த அந்த ஆனா ஆவன்னா ஏட்டுச் சுவடி எமது சுவாமி அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அச்சு பதியாமல் ஆணியால் எழுதியது போல் அந்த எழுத்துக்கள் இருக்கின்றன.

பாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும். சிட்னி முருகன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் சிலை

பள்ளிக்கூடங்கள் தொடங்கி ஊர்க் குறிச்சி வைரவர் கோயில் வரைக்கும் சரஸ்வதி பூசைக் காலத்துக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். எங்கள் அயல் வைரவர் கோயிலில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்றுப்பக்க வீடுகளுக்கும், வசதி குறைந்த குடும்பங்களை ஒன்றாக இணைத்து ஒருபூசையுமாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு நாளும் அவல், சுண்டல் கெளபி என்று விதவிதமான பண்டங்கள், சில குடும்பங்கள் தங்கள் பவிசை (வெளிநாட்டுக் காசு) நைவேத்தியத்தில் காட்டுவார்கள். அவர்களில் படையலில் மோதகத்துக்குள் கற்கண்டும் கடிபடும்.

கார்த்திகேசு அண்ணற்றை பெடிச்சியளும் , அங்கால சிவலிங்க மாமா, திருச்செல்வண்ணையின்ர பெடிச்சியளும் தான் வைரவர் கோயிலின் ஆஸ்தான சகலகலா வல்லி மாலைப் பாட்டுக்காறர். கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க “சகலகலா வல்லியே” என்று முந்திக்கொண்டே எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம். அவல் தின்னவேண்டும் என்ற அவா வேறு:-)விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்). (சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் வீற்றிருக்கும் லட்சுமி, துர்க்கா, சரஸ்வதி விக்கிரகங்கள்(இடமிருந்து வலம்) )

சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே “வாணி விழா” என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். இணுவில் கந்தசுவாமி கோயில் முன் றோட்டில இருந்த வாணி கல்வி நிலையம் என்ற ரியூட்டறி நிர்வாகி பாலா ஒவ்வொரு வாணி விழாவிற்கும் அருணா கோஷ்டி மெல்லிசைக் குழுவைக் கொண்டு வருவார்.

” எட உங்கற்றா பாலசுப்பிறமணியம் போலப் பாடுறான்” என்று அவர்களை வாய்பிளக்கப் பார்த்த காலம் அது. பாலா வெளிநாடு போன கையோட வாணி கல்வி நிலையம் எவரெஸ்ட் என்று மாறவும் அருணா கோஷ்டிக்கும் ஆப்பு.

என்னதான் சொல்லுங்கோ, அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா சோக்கானது எண்டு தான் சொல்லவேணும். ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.

ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. “விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா” என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து “என்னடா உடுப்பிது” என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.

அடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு

படித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.

பெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா ” எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.

எங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு “விதுரன் கதை” நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.

பெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு ” அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் ” என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.

O/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.

பள்ளிக்கூடங்களிப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இறுதியில் பெரிய வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கு போட்டு விஜயதசமி நாளைக் கொண்டாடுவார்கள். மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் அரைச் சாறி (Half Saree)கட்டுவதும் இந்த நாட்களில் தான். ரவிச்சந்திரனுடன் எமது வகுப்புப் பூசைக்காக ஈச்சம் பத்தை தேடியலைந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு காலம்.

எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது. எமது பாடசாலையின் மூன்றாம் மாடி சரஸ்வதி பூசைக்கான இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மாடிக்குப் போகும் இரண்டாம் மாடிப் படியோரமாக எமது வகுப்பு இருந்தது. காலையில் இரண்டுபாட ஆசிரியர்கள் லீவு. எம்மைத் தட்டிக்கேட்க ஆளில்லை. நானும் மஞ்சவனப்பதி கோயிலடி ராசனும் (இப்ப இவன் கனடாவிலையாம்) , வளர்மதி ரெக்ஸ்ரைல்ஸ் மதியாபரணத்தின்ர பெடியன் விக்கியும் ஒரு வாங்கினைப் ஒரமாகப் போட்டு வாற போற பொம்பிளைப் பிள்ளைகளை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம்.(வயசுக்கோளாறு). வழக்கம் போல ராசனின் வாய் சும்மா இருக்காமல் ஒருத்தியைப் பார்த்துக் கிண்டல் அடித்ததும் அவள் பழிப்புக் காட்டிக்கொண்டே விறுவிறுவென்று மாடிப் படியில் ஏறவும், முதல் நால் மழைவெள்ளம் தேங்கிய படிக்கட்டில் வழுக்கி அவள் விழவும், வெள்ளை சட்டை காக்கிச் சட்டையாகத் தொப்பமானதும், விழுந்தடித்துக்கொண்டே வாங்கினை உள்ளே போட்டு எதுவும் தெரியாதது மாதிரி இருந்ததும் கூட மறக்கமுடியுமா? (இது குறித்துப் புலனாய்ந்த மகேந்திரன் மாஸ்டரிடம் நாம் டோஸ் வாங்கியது மானப் பிரச்சனை கருதித் தணிக்கை செய்யப்படுகின்றது).

அதே ஆண்டு எங்கள் வகுப்பு லோகேந்திரன் ஆட்கள் நாடகம் போட்டார்கள். (சமூக நாடகமாம்) லோகேந்திரன் போட்ட பெண் வேடத்திற்கு எதிராக இதுவரை மானநஷ்டவழக்கு எதுவும் வரவில்லை. அந்த நேரம் சினிமாப் பாட்டுக்கள் பொதுமேடைகளில் ஒதுக்கப்பட்ட காலம் அது. விஜயதசமி மேடையில் “தென்னக்கீற்றில் தென்றல் வந்து மோதும் ” என்ற எழுச்சிப் பாடலை ராஜசேகரும் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து இறக்குமதி செய்த பெண்ணுமாகப் புன்முறுவலோடு பாடவும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கோகுலகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டுப் பாடல் முடியும் போது மேடையில் ஏறி ராஜசேகருக்கு மாலை போட்டதும் (செட்டப்போ தெரியேல்லை)

“இறங்குங்கடா மேடையை விட்டு” என்று உறுமியவாறே மகேந்திரன் மாஸ்டர் வந்ததும், அந்த விஜயதசமி நாட்களின் இறுதி அத்தியாயமாக அமைந்து விட்டது.

இவ்வாக்கம் Friday, September 29, 2006 அன்று பதியப்பட்டு,இரண்டு வருஷங்களின் பின் இன்று மீள் இடப்படுகின்றது.

மூலவிடுகையைப் பின்னூட்டங்களுடன் காண

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்

காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே!

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்

குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே!

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்

தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று

காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே!

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்

நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்

தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்

கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே!

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி

கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்

கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்

தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே!

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல

நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்

செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே!

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை

கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே!

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்

பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்

கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே!

சகலகலாவல்லி மாலை பாடல்கள் உதவி: தமிழ்மொழி.காம்

ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்

எங்களின் கானமூர்த்தி என்னும் நாதஸ்வர மேதை கடந்த புதன் கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவர். ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி – வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.

எங்கள் ஊரவர் என்பதால் இன்னும் அதிகப்படியாக வி.கே.கானமூர்த்தி அவர்களை காணவும் அவரின் நாதஸ்வர வாசிப்பைக் காது குளிரக் கேட்கவும் பல்லாயிரம் தடவை எனக்கும் வாய்த்தது நான் புலம்பெயரும் வரை. கானமூர்த்தி அவர்களின் கடைசிமகன் சந்திரசேகர் என் சகபாடியும் கூட.

வெற்றிலை, சுண்ணாம்பு கொடுத்த செஞ்சிவப்பு வாயும், குங்குமப் பொட்டும், அலங்கார வேலைப்பாடு பதித்த அங்கவஸ்திரத்தைத் தோளில் சாய்த்து இவர் கோயிலுக்கு வரும் மிடுக்கே அழகு. எந்த நேரமும் சிரிப்பை தவழவிடும் எடுப்பான முகலட்சணம் இவருக்கு ஆயுளுக்கும் ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம்.

அமைதியாக வந்து உட்கார்ந்து வாயில் நாதசுரத்தின் பொருத்தியை வைத்து சுருதி சரி பார்த்து விட்டு இந்த சகோதரர்கள் நாதஸ்வர கானம் எழுப்ப ஆரம்பித்தால் , இவர்களின் திறந்த மேனியில் அலைபாயும் பதக்கம் பொருத்திய வடச்சங்கிலிகள் இசைந்து ஆட, அந்த நாதஸ்வர வாசிப்பு ஓயும் போது தேன் மழையில் முக்கிக் குளித்த பரவசத்தோடு ரசிகர்கள் திளைப்பார்கள்.மேலே: எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா 2007 இல் எடுக்கப்பட்ட படம். இதில் நாதஸ்வரக் கலைஞர்கள் வரிசையில் நான்காவதாக நிற்கின்றார் அமரர் வி.கே.கானமூர்த்தி அவர்கள்

மேளச்சமாவினைப் பருகும் ஆவலோடு ஊர் ஊராகப் பெருந்திருவிழாக்களைத் தேடிச் சென்று இசையின்பம் தேடும் ரசிகர்கள் வி.கே.கானமூர்த்தி – வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களுக்காவும் நாடி ஓடிச் செல்வது காலம் காலமாக நம் ஈழத்தில் நிலவும் வழக்கில் ஒன்று.

இனி நான் ஊருக்குப் போகும் போது தொலைந்து போனவைகளில் கானமூர்த்தி அவர்களின் தரிசனமும் இருக்கப்போகின்றது என்று தட்டச்சுப் போதே பெரும் மூச்சு வந்து முன் நிற்கின்றது.

அந்த இறவாக் கலைஞன் மீண்டும் எம் மண்ணில் பிறக்கவேண்டும் என்ற பேராசையோடு

என் நினைவுகளின் ஓரமாக இவரை இருத்தி வைக்கின்றேன்.

தொடர்புபட்ட இடுகை: மேளச்சமா

நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாதஸ்வர இசைக்கலைஞர் வி.கே.கானமூர்த்தி அவர்களுக்கான இசை அஞ்சலியை வழங்கியிருந்தோம்.

அதில் தற்போது நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனின் மறைவின் பின்னர் ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதம நாதஸ்வரக் கலைஞராகவும், வி.கே.கானமூர்த்தியின் மருமகனாகவும், இறுதிக் காலத்தில் கூடவே நாதஸ்வர இசையை கானமூர்த்தி அவர்களோடு வாசித்த பேறும் பெற்ற திரு பாலமுருகன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வும்,

சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம நாதஸ்வர வித்துவானாகவும், விகே.கானமூர்த்தி அவர்களின் உறவினராகவும் விழங்கும் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கும் நினைவுப் பகிர்வும்

வி.கே.கானமூர்த்தி பஞ்சமூர்த்தி இரட்டையர்கள் வழங்கும் நாதஸ்வர வாசிப்பின் பின்னணி கலந்து ஒலித்தொகுப்பாக வருகின்றது. இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தவர் எமது அன்பு அறிவிப்பாளர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.

ஒலி வடிவில் கேட்க

மூங்கில் பூக்கள் – குணசீலன் – கூடெவிடே


“டேய் குணசீலன்!
எருமை….எருமை….
இஞ்சை வாடா எருமை”

பலமான குரலை எழுப்பித் தன் வாயை நறுவியவாறே கிட்டு மாஸ்டர் தன்னுடையை சமூகக்கல்விப் பாடத்தில் ஒட்டாமல் வேறு உலகத்திற்குத் தன் மனத்தை ஏற்றிவிட்டு தாடையில் கையூன்றி யோசித்துக் கொண்டிருந்த குணசீலனை அழைத்து, தன் சமூகக் கல்விப் புத்தகத்தாலேயே நாலைந்து அடி விட்டு விட்டு அவனைத் துரத்துகின்றார். முகத்தில் ஒரு அசட்டுத் தனத்தை வரவழைத்துக் கொண்டே குணசீலன் தன் வாங்கில் போய் அமர்கின்றான். கொக்குவில் இந்துக்கல்லூரியில் “E” வகுப்பு மாணவர் என்றாலே பொம்பிளைப் பிள்ளைகளோடு சேர்ந்து கலவன் வகுப்பு படிக்கும் “B” வகுப்பு மாணவர்களில இருந்து எல்லோருக்குமே ஒரு இளப்பம் தான் எப்போதும். அதுவும் குணசீலன் போன்ற மாணவர்கள் “E” வகுப்பின் முன்னோடிகளாக இருப்பதும் தொடர்ந்து தன் தரத்தைத் தக்க வைக்கும் செயல். கொக்குவில் இந்துவில் நான் சேர்ந்து ஆறாம் ஆண்டில் இருந்து பத்தாம் ஆண்டு வரை ஒரே வகுப்பில் என்னோடு சேர்ந்து ஈ ஓட்டியவன் இந்தக் குணசீலன். இவனுக்கு எங்கள் வகுப்பின் எல்லாப் பாடங்களும் எடுக்கும் ஆசிரியர்களோடு ஏதோ வகையில் எட்டாப் பொருத்தமோ என்னவோ அவர்களின் அடி வாங்காமல் அவன் தப்புவதில்லை. “களவு செய்யோணும், ஆனா பிடிபடக்கூடாது” இது எங்கட பொலிசி. ஆனா குணசீலனைப் பொறுத்தவரை குழப்படியைத் த வீரமாகவே கொஞ்சம் வெளிப்படையாகவே செய்து விடுவது தான் அவன் குணம். ஓவ்வொரு வகுப்பும் ஏற ஏற அதே ஈ வகுப்பு மாணவர்களோடே படிக்க வேண்டிய நிர்ப்பந்தம். எனவே அவனின் நட்பும் என்னோடு கூடவே வந்தது. ஒன்பதாம் ஆண்டில் படிக்கும் போது தான் “கிட்டு” மாஸ்டர் என்று செல்லமாக அழைத்த மாஸ்டர் வகுப்பாசிரியராக வருகின்றார். குணசீலன் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்பது இன்னும் அவருக்கு உரிமை எடுக்க வசதியாகப் போனது.

“டேய் மணியம்! (குணசீலனின் தந்தை பெயர் அது), இந்த முறையும் உனக்கு மார்க்ஸ் எடுக்க விருப்பமில்லைப் போல” பல்லை நறுவியவாறே பாடங்களுக்கான புள்ளிப் பெறுபேறு பதிந்துள்ள றிப்போர்ட்டை எறியாமல் எறிகிறார் கிட்டு மாஸ்டர்.

கடைசியாக அவனோடு நான் பழகிய நாள் இன்றைக்கும் நினைப்பிருக்கு. எண்பத்தேழாம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதிப் படையாக வந்த நேரம் அது. சண்டைகள் எதுவும் அப்போது ஆரம்பிக்கவில்லை. என்னதான் குணசீலன் குழப்படி என்றாலும் உள்ளுக்குள் பயம் கலந்த பாதுகாப்பான குளப்படிக்காரராக இருந்த என்னை அவனுக்கு பிடித்ததில் வியப்பில்லை. காரணம் இரண்டு பேருக்கும் பொதுவான ஒற்றுமை போரடிக்கும் பாட நேரத்தில் ராணி காமிஸ் வாசிப்பது. பெரிய இங்கிலீஷ் பாடப் புத்தகத்துக்குள்ளை 007 ஜேம்ஸ் பொண்ட் படிப்பதில் இருக்கும் த்ரில் வேறு என்னத்திலை இருக்கு. எனக்கோ காமிக்ஸ் புத்தகங்கள் வந்தவுடனேயே விலைகொடுத்து வாங்கிப் படிக்கவேணும். குணசீலனுக்கோ தன்னிடம் இருக்கும் ஏதாவது பொருளை லஞ்சமாகத் தந்து அதை என்னிடம் வாங்கிப் படிக்கவேணும். அப்படி எனக்கு கிடைச்ச பொருள் தான் சாய்பாபாவின் படம் போட்ட வட்ட வடிவமான, பின்னால் காந்தம் பொருத்திய ஒரு பொருள் அது. அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கு. புத்தகங்களை மளமளவென்று படித்து விட்டு, என் கையில் சாய்பாபா ஸ்டிக்கரைத் தந்து விட்டு தன் அடுத்த குளப்படியைத் தொடர்ந்தான்.

“இஞ்சை ஒருக்கால் வாரும் தம்பி, ஏன் பாடம் நடத்திற நேரத்தில் கன்ரீன் பக்கம் போனனீர்” ஹெட்மாஸ்டர் குணசீலனை அன்பாக அழைத்து அவனுடைய கைகளையே வாங்கி அவன் கன்னத்திலேயே திரும்ப அடிக்க வைத்து
“ஓடும், இனிமேல் இப்படி ஏதும் செய்யாமல் இரும்” என்று உறுக்கி விட்டு அனுப்புகின்றார். இரண்டு கன்னங்களும் செயற்கையாகச் சிவக்க அதே அசட்டுச் சிரிப்புடன் வாங்கில் வந்து உட்கார்கின்றான் குணசீலன்.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888

மலையாளத் திரைப்படங்களில் இருந்து கதையை எடுத்து காலா காலமாக தமிழ் சினிமாக்கள் பல மீள் வடிவம் பெற்று வருகின்றன. கேரளத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரின் படைப்புக்களும் மலையாள சினிமாவாகின்றன. ஆனால் தமிழ் நாவல் ஏதாவது மலையாளத்தில் படமாகியிருக்கின்றதா என்ற என் தேடலின் முடிவில் கிடைத்ததே வாஸந்தி எழுதிய “மூங்கில் பூக்கள்” நாவல்.

“நான் மீஜோராமில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கின்றேன். மீஜோக்களுடன் நெருங்கிப் பழக முயன்றிருக்கின்றேன். இந்திய வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் எல்லாப் பழங்குடி மக்களிடையேயும் உள்ள பிரச்சனைகள் பொதுவானவை. அவர்களது பிரச்சனைகளுக்கெல்லாம் மிக ஆழமான காரணங்கள் உண்டு. அவறறையெல்லாம் விவாதிப்பதோ அலசுவதோ என் நோக்கமுமில்லை- அதற்கு அவசியமுமில்லை” என்று தன் முன்னுரையைக் கொடுத்து எழுதியிருக்கின்றார் வாஸந்தி.

தஞ்சாவூரில் பிறந்து தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து பின் இராணுவத்தில் வேலை பார்க்கும் தன் ஒரே அண்ணனோடு மீஜோரம் வந்துவிட்டவள் ஷீலா. அண்ணனும் மலேரியாவால் செத்துப் போக தன்னந்தனியனாக ஆசிரியையாக மீஜோராமில் வாழும் ஷீலாவின் ஒரே நட்பு ராஜீவ் என்னும் அண்ணனின் சகபாடி. அவனும் தமிழன் தான். தன் உறவுகளைத் தொலைத்து மொழி தெரியாத பிரதேசத்தில் வாழ்க்கைப்பட்ட அவளுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இந்த ராஜீவ். இது நட்பா காதலா, நட்பென்றால் இவ்வளவு நெருக்கம் எதற்கு என்று குழப்பத்தோடு தொடரும் பந்தம் ராஜீவ் ஷீலாவுடையது.

மீஜோராம் பழங்குடிகள் வெளியாட்கள் தம்மூரூக்கு வந்தால் பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள், பயங்கரமானவர்கள் என்றதொரு எண்ணம் நிலவும் அவ்வேளை ஷீலாவின் வகுப்பில் சேர்கின்றான் சுங்கா என்னும் பையன். அவன் வெறு யாருமல்ல மீஜோக்களே பயப்படும் அண்டர்கிரவுண்ட் பயங்கரவாதி லால் கங்காவின் மகன்.ஒரு பயங்கரவாதியின் மகன், அதுவும் தாயை துர்மரணத்தில் பறிகொடுத்த சுங்காவை அரவணைத்து அன்பு பாராட்டுகின்றாள் ஷீலா. ஷீலா டீச்சரின் தூய நட்பின் தன் தாயைக் காண்கின்றான் சுங்கா.

மீஜோ இனப் பெண் பணத்துக்காக எதையும் செய்வார்கள், இவர்களைப் போகப் பொருளாக்கலாம் என்று வாழும் ராஜீவின் சுயரூபம், சுங்காவால் ஷீலாவுக்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. ராஜீவுக்கும் இந்த ஷீலா டீச்சர் சுங்காவின் களங்கமில்லா நட்பில் சந்தேகம் வருகின்றது. அதைத் தொடர்ந்து வரும் அனர்த்தங்கள், ஷீலா எடுக்கும் முடிவு என்ற கதைப்பின்னலோடு போகின்றது மூங்கில் பூக்கள். ஒரு சிறு நாவலே என்றாலும் வாசித்து முடித்த பின்னரும் ஒட்டிக் கொள்ளும் மீஜோராம் மானிலத்து கதைக்களமும், ஷீலா டீச்சர் சுங்காவின் நட்பும், அவர்களின் உரையாடலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றது. அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தினை இன்னும் அடக்கிப் பார்க்க நினைக்கும் மனிதர்கள். நூலாசிரியர் சொல்வது போல் “மக்களின் பார்வையும் கண்ணோட்டமும், சிந்தனையும் மாறவேண்டும்” என்ற தொனியில் பழங்குடி மக்கள் சமுதாயத்தின் ஒருமுகத்தை இந்த நாவல் காட்டுகின்றது.

நாவலின் இறுதியில் பயங்கரவாதியும் சுங்காவின் தந்தையுமான லால் கங்காவின் ஆள் ஷீலா டீச்சரிடம் சொல்லும் வசனம் வருகின்றது இப்படி

“சுங்கா பிரியம் வைத்த ஒரே ஒரு ஆள் நீங்கள் தான். தன்னால் சாதிக்கமுடியாததை நீங்கள் சாதித்தீர்கள் என்று அவருக்குத் தெரியும்…..”

“உலகத்தின் எந்த மூலையிலும் மிக விசித்திரமானது மனிதனின் மனசு தான் என்று உணர்கையில் கண்களில் நீர் நிறைந்தது.

இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன் (தன்மத்ரா, காழ்ச்சா திரைப்படங்களைத் தந்த பிளெஸ்ஸியின் குருவும் கூட) இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத்தில் “கூடெவிடே 9In Search of a Nest)” என்ற பெயரில் படமாக்கியிருக்கின்றார். இந்தப் படத்தில் மம்முட்டி, சுஹாசினி மற்றும் அறிமுக நாயகனாக மீசையில்லாத ரஹ்மான் ஆகியோரும் நடித்திருக்கின்றார்கள். நாவலை வாசித்த கணம் இப்படத்தினையும் எடுத்துப் பார்க்கவேண்டும். இப்படத்தில் நாவலை எப்படிப் படமாக்கியிருக்கின்றார்கள் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஆகஸ்ட் 1981 இல் வெளிவந்த இந்த நாவல் 1983 இல் வெளியாகியிருக்கின்றது.

நாவல் திரைப்படமானபோது மீஜோராம் மானிலத்துக்கு பதில் ஊட்டி மலைவாசஸ்தலம் கதைக்களமாகின்றது. அத்தோடு ஒரு பழங்குடி இனப்பயங்கரவாதியாக நாவலில் சித்தரித்த விடலைப் பையன் இங்கே எம்.பி சேவியர் புத்தூரனின் மகனாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றான்.
இந்தப் படத்தில் ஊட்டிப் பள்ளி ஆசிரியையாக சுஹாசினியும் அவரின் அண்ணனின் நண்பனாக மம்முட்டியும், ஆசிரியரின் அன்பைப் பெற்று நல் மாணவன் ரவியாக ரஹ்மானும் நடித்திருக்கின்றார்கள். நாவலின் ஆரம்பமே அநாதையாக வாழும் டீச்சராக காட்டினாலும் திரைப்படமாக எடுத்தபோது அண்ணன் பாத்திரமும் இருந்து பின் இறப்பதாகக் காட்டுகின்றார்கள். மூங்கில் பூக்கள் நாவலின் சிறப்பே அது கொண்டிருந்த மீஜோராம் பகுதிக் கதைக்களன், அதைச் சுற்றிய பழங்குடிகளின் வாழ்வியில். அது கூடெவிடே படத்தில் பிரதிபலிக்காதது பெரும் குறை. இந்த நாவலை அப்படியே படமாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாகப் பேசப்பட்டிருக்கும். மம்முட்டி கொடூரனாக மாறுவதும் கூட இப்போது இப்படத்தைப் பார்க்கும் போது நெருடலாக இருக்கின்றது, ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவரின் இப்பாத்திரத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். சுஹாசினிக்கு அந்தக் காலகட்டத்தில் கிடைத்த மிகச்சிறப்பான பாத்திரங்களில் இப்படமும் ஒன்று என்பதை அழுத்தமாக நிரூபிக்கின்றது இப்படம். மிகவும் கச்சிதமான தேர்வாக அவர் பாத்திரம் இருக்கின்றது. அறிமுக நாயகனாக பள்ளிப்பையனாக வரும் ரஹ்மானுக்கும் கூட இப்படம் நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கின்றது.

ஆனாலும் இப்படத்தினை எடுத்த அளவில் சிறப்பாக எடுத்ததனால் கேரள அரசின் சிறந்த திரைப்படம், சிறந்த கதை, சிறந்த இயக்கம் ஆகிய விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்தது.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888

87 ஆம் ஆண்டு நாட்டில் கொஞ்ச நாள் இருந்த அமைதியும் கலைந்து போர் மேகங்கள் மீண்டும் சூழ ஆரம்பித்தது. கடும் யுத்தகாலம், இடப்பெயர்வு, மரணங்கள், தொலைதல்கள் என்று இன்னொரு சுற்று ஆரம்பம். பள்ளிக்கூடங்களும் திறக்கப்படாது அகதிமுகாம்களாகி நாலைந்து மாதங்கள் இருக்கும். பல மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிக்குப் போன போது ஷெல்லடி பட்டு இறந்த சடலங்களை மயானத்துக்குப் போய் அடக்கம் செய்ய வழியற்று விளையாட்டு மைதானத்தின் ஒரு பக்கத்திலேயே அடக்கம் செய்த மண் திட்டியும், காற் சப்பாத்தினையே பதம்பார்க்கும் பரந்து விரவியிருந்த முட் பற்றைகள் கண்ட மைதானமும், மழை ஒழுக்கில் நெய்ந்து போன புத்தகங்களின் கிழிசல் துண்டுகளும், விறகுக்காக உடைத்துப் போடப்பட்ட மேசை கதிரைகளின் எச்சங்களும் இருக்க,

குலசேகரம் மாஸ்டரின் வழிகாட்டலில் ஒவ்வொரு பக்கமாக பள்ளிக்கூடத்தின் பக்கங்களை மீண்டும் துடைத்தெடுக்கும் போது

“எங்க இவன் குணசீலன்” கல்வியங்காட்டில் இருந்து வந்து படிக்கும் ரமேஷிடம் கேட்கிறேன்.
“அவன் இயக்கத்துக்குப் போய் கன நாளாச்சு”

குணசீலன் இல்லாமல் எங்கள் எஞ்சிய பள்ளி வாழ்க்கை கழிந்தது. குணசீலன் குறித்து அந்தக் காலகட்டத்தில் அதிகம் எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

ஒரு சில மாதங்கள் கழித்து அவன் மாவீரனாய் போன செய்தி மட்டும் கிடைத்தது. அதுவும் எங்கள் பள்ளிக்கூட மதிலில் இரவோடு இரவாக ஒட்டியிருந்த குணசீலனின் வீரமரணம் குறித்த நோட்டீஸ் தான் அதையும் சொல்லியது. குழப்படிகார குணசீலன் நாட்டுக்காக உயிர்கொடுத்த தியாகி என்ற பெருமையோடு போய்ச் சேர்ந்தான்.

இன்றும் குணசீலனின் குழப்படிகளையும், அவன் தந்த சின்னச் சின்னப் பரிசுகளையும் என் நினைவின் பெட்டகத்தில் அகற்றாமல் அடிக்கடி அவனை நினைத்துப் பார்த்து என் மனத்திரையின் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன், என் இறப்பு வரை இது தொடரும்.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888
“மூங்கில் பூக்கள்
இயல்பாக வெகுளித்தனமாகப் பூக்கும் மூங்கில்கள்.
எத்தனைப் பெரிய பஞ்சத்துக்கு அவை காரணமாகிப் போகின்றன!

பஞ்சத்துக்குப் பூக்கள் காரணமா?
அவைகளைத் தின்னும் எலிகள் அல்லவா காரணம்?” – ஷீலா டீச்சர்

“இவையெல்லாம் இயற்கை ஏற்படுத்தும் பஞ்சங்கள், மிஸ்.
மனுஷனால் ஏற்படும் பஞ்சம் தான் ரொம்ப ஆபத்தானது” – சுங்கா
வாஸந்தி எழுதிய “மூங்கில் பூக்கள்” நாவலின் 117 ஆம் பக்கம்