“1999” – சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை

இன்று கனேடியா வாழ் ஈழத்தமிழர்களால் தயாரித்து இயக்கிய 1999 படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் தமிழகத்துச் சினிமாக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், எமது ஈழத்துப் படைப்புக்களைப் பொறுத்தவரை, லண்டனில் தயாரான “கனவுகள் நிஜமானால்”, கனடாவில் தயாரான “தமிழச்சி”, ஈழத்தில் எடுக்கப்பட்ட “ஆணிவேர்” வரிசையில் 1999 படமே ஈழத்துப் படைப்பாகத் திரையைத் தொட்டிருக்கிறது. இவற்றில் “ஆணிவேர்” படத்தை நான் இங்கே திரையிட அவாக் கொண்டு எதிர்கொண்ட சிரமங்களை எல்லாம் ஒரு தொடராகவே எழுதலாம். ஒரு படத்தைத் திரையிடும் மோசமான அனுபவத்தை முதன்முறையாக (கடைசியுமாகவும் என்றும் சொல்லிவைக்கலாம்)எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது “ஆணிவேர்” படத்தை இங்கே திரையிட்ட போது நான் சந்தித்த அனுபவங்கள். அதில் இருந்து நான் பெற்ற பாடம், எங்கள் மண்ணின் கதை சொல்லும் படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசுபவர்களை ஒரு எல்லைக்கு மேல் நம்பக் கூடாது என்பதுதான். 1999 படத்தைப் பேச வந்து விட்டு ஆணிவேரைப் பற்றிப் பேசுகிறாரே என்று நீங்கள் முணுமுணுக்க முன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.

1999 படத்தினை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அலோசியஸ் ஜெயச்சந்திரா திரையிடவேண்டும் என்று முனைப்புக் காட்டியபோது எனது ஆணிவேர் பாலபாடத்தை அவருக்குக் காதில் போட்டு வைத்தேன். அவருக்குத் துணையாக இங்கே சிட்னியில் இருக்கும் இந்தியத் தமிழர்களின் அமைப்பான “சிட்னி தமிழ் மன்றம்” கை கொடுத்தது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்ல வேண்டும். காரணம் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் ஈழத்தமிழருக்கு பல அமைப்புக்கள், இந்தியத் தமிழருக்குச் சில அமைப்புக்கள் என்று “என் வழி தனி வழி”யாகப் போகும் புலம் பெயர் சூழலில் இப்படியான நம்மவர் முயற்சிகளுக்கு தமிழக உறவுகளும் இணைந்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். சிட்னியில் 2 காட்சிகள் ஏற்பாடாகியிருந்தன. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிட்டியிருந்தது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களது படங்களைப் படங்களைப் பார்த்து நிரம்பிய அனுபவத்தோடு, என்னைத் தயார்படுத்திக் கொண்டே இந்தப் படத்தையும் பார்க்கத் தொடங்கினேன். காரணம், நம்மவர் தொழில்நுட்பத்தில் தம்மை விருத்தி செய்த அளவுக்குக் கதை சொல்லும் பாணியிலும், திரைக்கதை அமைப்பிலும் பல படிகளைக் கடக்கவேண்டும் என்பதை இதுநாள் வரை வெளிவந்த பல புலம்பெயர் தமிழர்களது சினிமாக்கள் உறுதிப்படுத்தியிருந்தன. குறும்படங்கள் பல சின்னத்திரை நாடகங்களோடு போட்டி போட, நம்மவர் சினிமாக்களோ அஜித், விஜய் போன்றவர்களின் ந(ர)கல் வடிவங்களாக இருக்கும் போக்கும் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து நிலவும் வழமை. ஆங்காங்கே அத்தி பூத்தாற்போல நல்ல குறும்பட முயற்சிகளும் வராமல் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் கனடா வாழ் உறவுகள் முழு நீள சினிமாக்கள் பலதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை ஒருவாரமோ இரண்டு வாரமோ கனேடியத் திரையரங்குகளை மட்டும் முத்தமிட்டு விட்டு காணாமல் போய் விடும்.

இப்படியாக இன்னொரு நம்மவர் படம் தானே என்ற ஒரு தயார்படுத்தலோடு தான் 1999 படத்துக்கும் போனேன். வெண் திரை அகலக்கால் பதிக்கப் படம் ஆரம்பமாகின்றது. எடுத்த எடுப்பிலேயே இரவு நேரத்துக் கனேடிய நகரப் பெருந்தெருக்கள் வழியே காமெரா துரத்தக் கூடவே மேற்கத்தேயப் பின்னணி இசையும் பயணிக்க முகப்பு எழுத்தோட்டம் வருகின்றது. ஆகா, ஆரம்பமே கைதேர்ந்த தொழில்நுட்ப உத்தியோடு எடுக்கப்படுகிறதே என்ற உசார் மெல்ல வந்து ஒட்டிக் கொள்ள அவநம்பிக்கை மெல்லக் கழன்று கொள்கின்றது.
படத்தின் முதற்காட்சியில் வரும் கொலையை மையப்படுத்தி நகர்கின்றது தொடர்ந்து வரும் காட்சிகள். அந்த விறுவிறுப்பும், பார்வையாளனைக் கட்டிப் போடும் கதை நேர்த்தியும் படம் முடியும் வரை நிறைந்து நிற்கின்றது. அதுதான் 1999 படத்தின் பலம்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி நான் பேசப்போவதே இல்லை, ஏனென்றால் அது இனிமேல் பார்க்கப் போகின்றவர்களுக்குச் சுவாரஸ்த்தை இழக்கச் செய்து விடும். ஆனால் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்புக்களையே பகிர்கின்றேன். ஈழத்தின் உள்நாட்டுப் போரால் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலகெங்கும் ஏதிலிகளாகச் சிதறி பரந்த ஈழத்தமிழினம், கனடாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் இந்தப் புலம்பெயர் வாழ்வு வரமா, சாபமா என்பதில் ஒரு வெட்டுமுகமே 1999 படம் சொல்லும் செய்தி. குறிப்பாக எமது அடுத்த தலைமுறையில் ஒரு சிலர் தறிகெட்டு , வன்முறை நோக்கிக் குழுக்களாகப் பிரிந்து இலக்கற்ற வாழ்வை புலம்பெயர் சூழலில் அமைத்துக் கொள்ள முற்படும் போது அதன் தொடர்பிலான அவல வாழ்வியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழல் அவர் தம் பெற்றோருக்கும், ஏன் அந்தச் சமூகத்துக்கும் கூட வந்தமைந்து பெருத்த சுமையாக மாறி, பெரும் விலை கொடுக்கும் முடிவைத் தந்து விடுகின்றது. இதுவே 1999 படத்தின் திரைக்கதை சொல்லும் சேதி.

கே.எஸ்.பாலசந்திரன் போன்ற மூத்த கலைஞர்களோடு இளைஞர்கள் பலரை முக்கிய பாத்திரங்களை ஏற்க வைத்து இயக்கியிருக்கிறார் லெனின் எம்.சிவம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வேண்டாத இடங்களில் கதையைத் திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றியே கதைக்களத்தை அமைத்திருக்கின்றார். அந்த வகையில் கதை, திரைக்கதை ஆகியவை இரண்டுமே இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றது. 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடக்கும் கதை, அதே காலகட்டத்தில் நானும் புலம்பெயர்ந்த சூழலில் வாழ்ந்த போது நடந்த விஷயங்களை மீண்டும் இரைமீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாகப் பல காட்சியமைப்புக்கள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் அவதானிக்கும் விடயங்களை வைத்து வசனங்களை அமைத்திருப்பதும் அவற்றை ஈழத்தமிழ் பேசும் பாங்கில் சமரசமில்லாது வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு, கூடவே அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தும் நடிகர்களும் சபாஷ் போட வைக்கிறார்கள். அந்தந்தப் பாத்திரங்கள் எப்படி எப்படியெல்லாம் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை மிகையில்லாமல் காட்சி அமைப்பிலும், வசன அமைப்பிலும் அடக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தினைத் தந்ததன் மூலம் புலம்பெயர் வாழ்வியலின் விரிந்த தளங்களை இம்மாதிரி முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் தரவிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.

நான் அதிகம் பிரமித்துச் சிலாகிக்கும் விடயம் A.அருள்சங்கரின் படத்தொகுப்பு. ஒவ்வொரு காட்சிகளையும் வெவ்வேறு கேணங்களில் எடுத்து அவற்றை முன்பின்னாகப் பொருத்தி அமைத்த இந்தப் பாணி புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்படி முழுமையான புதிய தொழில்நுட்ப உத்தியோடு படத்தொகுப்பை அமைத்ததை இதுவரை நான் எந்தத் தமிழ் சினிமாவிலும் பார்க்கவில்லை. இதை நான் இங்கே மிகையாகச் சொல்லி வைக்கவில்லை. 1999 படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பட்டியலிட்டால் முதலில் வருவது அருள் சங்கரின் நேர்த்தியான படத்தொகுப்பு தான்.
இந்தப் படத்தை உலகத்தரத்துக்கு நகர்த்திச் செல்வதில் முதலில் நிற்பது படத்தொகுப்புத் தான்.

ராஜ்குமார் தில்லையம்பலம் பாடல்களுக்கு இசையமைத்துப், பின்னணி இசை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தின் பின்னணி இசைக் கோர்ப்பாகட்டும், இளைஞர் குழு எடுக்கும் பரபரப்பான முடிவுகளின் காட்சி அமைப்புக்களின் பின்னால் ஒலிக்கும் இசையாகட்டும் மிகவும் சிறப்பாக, சினிமாவுக்கேற்ற இசை நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பா, மகன் உரையாடல் காட்சிகள் போன்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் பின்னால் அடக்கி வாசிக்கும் புல்லாங்குழல் ரக இசை மிகவும் அன்னியப்பட்டு தொலைக்காட்சித் தொடருக்குப் போவது போலப் பயமுறுத்துகிறது. இப்படியான காட்சிகளுக்கு இன்னும் வேறொரு பரிமாணத்தில் வித்தியாசமான இசைக்கலவையைப் பயன்படுத்தியிருக்கலாம். படத்திற்காக மொத்தம் ஆறு பாடல்கள் ஒரு தீம் இசை, எடுக்கப்பட்டாலும் இரு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கின்றன. எஸ்பி.பாலசுப்ரமணியம், கார்த்திக் குரல்களில் கேட்ட பாடல்களைப் படத்தில் பார்க்கும் போது இன்னும் இனிமை.

படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை இரவு நேரக் காட்சிகள், பாடற் காட்சிகள் போன்றவற்றில் இருந்த நேர்த்தியான கமெரக் கோணங்கள், ஒளியமைப்பு போன்றவை மற்றைய காட்சிகள் சிலதில் பொலிவிழந்து, ஒளி பெருகி சீரியலுக்குப் போவோமா என்று அடம்பிடிப்பது போல அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். நுணுக்கமாகப் பார்த்தால் சில இடங்களில் கமெரா மெல்ல ஆட்டம் கண்டிருக்கிறது. அத்தோடு குளோசப்பில் முகங்களைக் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இந்த நுணுக்கமான குறைளைத் தவிர்த்தால் தொழில்நுட்ப ரீதியில் இன்னும் மேம்பட்ட படைப்பாக இது அமைந்திருக்குக்கும்.
அட, நம்மவர் படத்தில் பாடற்காட்சியை சிரிக்க வைக்காமல் சிறக்க எடுத்திருக்கிறார்களே என நினைக்கத் தோன்றுகிறது.

படத்தில் நடித்த எந்த ஒரு நடிகருமே தம் பாத்திரத்துக்கு மிகையில்லாமலும், குறையில்லாமலும் தந்தாலும், நாயகன் அன்புவாக வந்த சுதன் மகாலிங்கம், இளைஞர் கோஷ்டித் தலைவர் குமாராக வரும் திலீபன் சோமசேகரமும் ஒரு படி சிறப்பாகச் செய்கிறார்கள். மூத்த கலைஞர் கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் வரும் காட்சியமைப்புக்கள் குறைவு என்றாலும் அங்கேயும் நிறைவு. கனடாவில் இருக்கும் குழு மோதல்களை மையப்படுத்தியதாக அமைந்தாலும் எதிர்க்குழுவை படம் முடியும் வரை காட்டாது பயணிப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருவரின் கோணத்தில் தம்மை நியாயப்படுத்தும் போது எங்கே இந்தத் தவறு நடக்கிறது என்று தர்க்க ரீதியான கேள்வி மனதில் எழுகின்றது.

“வன்னியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்திருக்கிறார்கள், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன” படத்தின் முடிவில் வானொலி ஒன்றின் குரல் மேலெழுகிறது. மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது, என்னைப் போலவே பலரும் அதை உணர்ந்திருப்பார்கள்.

படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டிப் பாராட்டுகிறது.
புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே “1999” படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்


நேற்றைய இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் “உதயன்” பத்திரிகையினை இணையத்தில் விரிக்கின்றேன், ஒவ்வொரு பக்கமாக விரியும் ஈ பேப்பரின் ஒரு பக்கம் ஒரு அதிர்ச்சியான செய்தியைப் பகிர்கின்றது. அது, நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமான ஈழத்துக் கலைஞர் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களுக்கு அஞ்சலிச் செய்தியாக அமைகின்றது.

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளரும் பாரம்பரிய சைவ வல்லுநருமான கலாபூஷ ணம் செல்லையா மெற்றாஸ்மயில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது-65. நேற்றுப் பிற்பகல் நெஞ்சு வலியால் அவஸ்தைப்பட்ட அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூ ணம் செ.மெற்றாஸ்மயில் யாழ்ப்பாணம்,தீவகம் ஆகிய கல்வி வலயங் களில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமை யாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவர்.1945 ஆம் ஆண்டு பிறந்த இவர் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சித்தியடைந்த பின்னர் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தர வகுப்புப் படித்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்றவர்.

மேலே படங்கள் : மெற்றாஸ் மயில் அவர்களின் மேடையேற்றங்கள்

பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர் கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதி லும் காத்திரமான பங்காற்றியவர்.”வேழம்படுத்த வீராங்கனை” என்ற நாட கத்தை நெறியாழ்கை செய்து பல மேடை யேற்றிய பெருமையும் இவருக்குரியது. பாரம்பரிய கலைகள் தொடர்பான பல நூல் களையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்ட மெற்றாஸ்மயில் சிறந்த நிர்வாகி என்ற பெருமையையும் பெற்றவர்.

செல்லையா மெற்றாஸ் மயில் கலைத்துறைக்கு ஆற்றிய பணிகளில் சில முத்துக்கள்

இசை நாடக நடிகனாக –

நாட்டுக்கூத்துக் கலைஞனாக விளங்கிய இவர், இசை நாடகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆவலில் 1997 ஆம் ஆண்டு இசை நாடகத்தினை மூத்த கலைஞர்களிடையே பயின்று “சத்தியவான் சாவித்திரி” என்ற இசை நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். வள்ளி திருமணம் நாடகத்தில் விருத்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார்,

நாட்டார் இசைப்பாடகனாக –

நாட்டார் பாடல்களில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான வன்னிப் பகுதி நாட்டார் பாடல்களை தொகுத்து 1980 ஆம் ஆண்டு “வன்னி வள நாட்டார் பாடல்” என்னும் நூலை வெளியிட்டார். இவரின் முயற்சியால இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ்சேவை மூலம் துறை சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு நாட்டார்பாடல்கள் நிகழ்ச்சி “நாட்டார் இசை மாலை” என இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பவனி வந்தது.

கிராமியக் கலை ஆடவல்லோனாக –

பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கரகம், காவடி, குதிரையாட்டம் போன்றவற்றைப் பயின்று ஆற்றுகை செய்திருக்கிறார். குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டில் இளங்கலைஞர் மன்றத்தில் ஆடிய ஒயிலாட்டம் நிகழ்வை விழா மலர் ஒன்றில் காணக் கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் குருசாமி அண்ணாவியாரிடம் ஒயிலாட்டம் கலையைக் கற்றவர்.

கூத்து இசை நாடகத் தயாரிப்பாளனாக –

படித்தவர்கள் மட்டத்தில் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இவர் வழங்கிய நாட்டுக் கூத்து “கண்ணகி வழக்குரை”. அதன் பின் “காத்தவராயன் கூத்து”,”வேழம்படுத்த வீராங்கனை கூத்து” வள்ளுவர் வாக்கு இசை நாடகம், சத்தியவான் சாவித்திரி இசை நாடகம், வள்ளி திருமணம் இசை நாடகம் போன்றவற்றைத் தயாரித்தார்.

கூத்து நெறியாளனாக –

வேழம் படுத்த வீராங்கனை போன்ற நாட்டுக் கூத்து இசை வடிவங்களினூடாக சிறந்த நெறியளானாக யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

நூல் எழுத்தாளனாக –

இவரின் ஐந்து முக்கிய படைப்புக்களாக, வன்னி வள நாட்டார் பாடல் (1981), ஆனையை அடக்கிய அரியாத்தை (1993), இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999), மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000), மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001) போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு இவரது இரண்டு நூல்கள் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்தியப் பரிசினையும், ஒரு நூல் மத்திய கலாச்சார அமைச்சின் கலைக்கழக சாகித்தியப் பரிசினையும் பெற்றுள்ளன.

மேலே படத்தில்: யாழ்ப்பாணம் மாதனை கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரு உரலில், ஒரே நேரத்தில் நெல்லுக் குற்றிப் பாடலைப் பாடி நெல்லுக் குத்தும் பாடலை இவர் ஆவணப்படுதியிருக்கின்றார். எனக்கு அனுப்பிய புகைப்படங்களில் மறக்காமல் இதையும் அனுப்பியிருந்தார்.

பாரம்பரியக் கலைகளின் பாதுகாவலனாக –

பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டின் குழப்பமான சூழ்நிலையிலும் வவுனியா , திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம், மன்னார், உடப்பு, புத்தளம் ஆகிய இடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று பல பாடல்களைப் பெற்று ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

இவரின் மேடையேற்றங்கள் படங்களாக

செல்லையா மெற்றாஸ்மயில் என்ற கலைஞனின் அறிமுகமும் எனக்கு உதயன் பத்திரிகை மூலம் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டியது. 2006 ஆம் ஆண்டு என் தாயகத்துக்குச் செல்கிறேன். என் யாழ்ப்பாண மண்ணில் இருந்து கொழும்பு திரும்பும் நாளுக்கு முதல் நாள் உதயன் பத்திரிகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் அங்கம் வகிக்கும் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஈழத்து நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள் பதினொன்றை இறுவட்டிலே வெளியிடுகிறார்கள் என்றும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நிகழ்வும் இந்த விழா ஏப்ரல் 16, 2006 ஆம் ஆண்டு நிகழவிருப்பதாகவும் விளம்பரம் ஒன்று தென்படுகிறது. ஆகா, எமது மண்ணின் கலைவடிவங்களைப் பேணிப்பாதுகாக்கும் இந்தப் பணியைக் காணும் வாய்ப்பைத் தவற விடுகிறோமே என்ற பெரும் கவலை அப்போது எனக்குள். அந்த நேரம் பார்த்து யாழ்ப்பாணத்துக்கு என்னைப் போலவே நீண்ட நாட்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த அபிமான வானொலி நேயரான திருமதி ஜெகந்தா பிரிதிவிராஜ் அவர்கள் என்னுடைய மொபைல் போனுக்கு எடுத்தார். என் கவலையை அவரிடம் சொன்னேன். “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதேங்கோ பிரபா, நான் அந்த சீடிக்களை உங்களுக்காக வாங்கிக் கொண்டு வருகிறேன். கூடவே உங்களின் ஈழத்துக் கலைப் படைப்புக்களை வைத்துச் செய்யும் வானொலி நிகழ்ச்சிக்காகவும் திரு செல்லையா மெற்றாஸ்மயிலைப் பேட்டி எடுத்து வருகிறேன் என்றார். அவர் சொன்னது போலவே 50 நிமிடம் திரு செல்லையா மெற்றாஸ்மயிலின் கலையுலக வாழ்வினை அழகான பேட்டியாக எடுத்ததோடு அவர் மூலமாக மேடையேற்றங்களின் படங்கள், 11 இறுவட்டுக்கள், அவரின் வாழ்க்கைப் பணியைக் கெளரவித்த விழா மலர் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்.

இறுவட்டு நிகழ்வு அழைப்பிதழ்

இறுவட்டு நிகழ்வின் புகைப்படங்கள், ஏப்ரல் 17, 2006 யாழ் உதயனில் வந்த போது

திருமதி ஜெகந்தா பிரிதிவிராஜ் அவர்கள் எனது முற்றத்து மல்லிகை வானொலி நிகழ்ச்சிக்காக திரு மெற்றாஸ் மயில் அவர்களைப் பேட்டி கண்ட அந்த 50 நிமிடத் துளிகள் இதோ:

1945 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ்மயில் என்ற படம் வந்த போது அந்தப் படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இவரது தந்தை இவருக்கு மெட்ராஸ்மயில் என்று பெயரைச் சூட்டினாராம், இது வானொலிப் பேட்டியில் அவர் சொன்னது. இவரின் இந்தப் பேட்டியைக் கொடுக்கும் போது மெட்ராஸ் மெயில் படம் குறித்த விளம்பரத்தையும் இடவேண்டும் என்று நான் தேடி எடுத்து வைத்திருந்த படத்தையும் பகிர்கின்றேன். தன்னுடைய கலையுலக வாழ்வு மட்டுமன்றி கூடவே நாட்டுப்புற, இசை நாடகங்கள் குறித்த பகிர்வாக பாடியும் பரவசம் கொண்டும் இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருக்கின்றார்.

செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் நாட்டுக்கூத்து, இசை நாடகங்களைப் பாதுகாக்கவெண்ணி வெளியிட்ட அந்த இறுவட்டுக்கள் இவை தாம்:

சம்பூர்ண அரிச்சந்திரா (இசை நாடகம்) 5 மணி நேரம்
காத்தவராயன் (சிந்து நடைக்கூத்து ) – 6 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
சத்தியவான் சாவித்திரி (இசை நாடகம்) – 3 மணி நேரம்
நந்தனார் இசை நாடகம் ( இசை நாடகம்) – 1 1/2 மணி நேரம்
சிறீ வள்ளி (இசை நாடகம்) – 1 1/2 மணி நேரம்
கோவலன் கண்ணகி (இசை நாடகம்) – 2 3/4 மணி நேரம்
சாரங்கதாரன் (இசைநாடகம்) – 2 1/2 மணி நேரம்
பூதத்தம்பி (இசை நாடகம்) – 2 3/4 மணி நேரம்
பவளக் கொடி (இசை நாடகம்) 3 1/4 மணி நேரம்
நல்ல தங்காள் ( இசை நாடகம்) – 4 மணி நேரம்
ஞான செளந்தரி ( இசை நாடகம்) – 5 1/4 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)

ஈழத்தின் இசை நாடகக் கலைஞர்கள் பலரை ஒருங்கிணைத்துச் செய்த இந்த ஒலி ஆவணப்படுத்தல் முயற்சியின் விளைவாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில்களிலும், விழாக்களிலும் விடிய விடிய அரங்கேறும் முழு நீள இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை அப்படியே முழு அளவிலாகப் பதிவு பண்ணிச் செய்த பெருமுயற்சியாக அமைந்தது. அந்த வகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ஈழத்து இசை நாடகத் துறைக்கு ஆற்றிய பணி வரலாற்றில் பதிவு பண்ணத்தக்கதாக அமைந்து விட்டது.

செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களின் கலைப்பணியைக் கெளரவித்து தங்க்கிரீடம் என்ற மலரை 2002 ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள், அதனையும் நான் பேணிப் பாதுகாக்கும் ஒரு ஆவணமாக வைத்திருக்கிறேன். அதில் வெளியான சில கருத்துரைகளை இங்கே பகிர்கின்றேன்.

மெற்றாஸ்மயில், எல்லோரும் நேசிக்கும் ஒரு கலைஞன், எல்லோரையும் நேசிக்கும் ஒரு கலைஞன். பாரம்பரியக் கலையே தன் மூச்சு, பேச்சு என்று தன் முழு வாழ்வையும் அந்த நற்பண்புக்காகவே அர்ப்பணிக்கும் ஒரு கலைப்பித்தன் என்று கூறின் அது மிகையாகாது – அருட்திரு கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார்

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்தில் கலை, பண்பாடு, பாரம்பரியங்களை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதுடன் இதற்கு தனது பாரிய பங்கினை நல்கி வருகின்றார். கலை சம்பந்தமான நீண்ட அனுபவம் கொண்ட இவர் நூல்களை வெளியிட்டு இருப்பதுடன் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏன் சமுதாயத்திற்கும் கூட சிறந்த கலைப்படைப்பாளராகத் திகழ்கிறார் – யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை

கூத்துக்களில் ஆடுவது மட்டுமன்றி, கூத்துக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது, நாட்டுப்புறக்கலைகளான பழமொழிகள் நாட்டார் பாடல்கள், இசை நாடகங்கள் போன்றவற்றைச் சேகரிப்பதிலு, அவற்றை ஆவணப்படுத்துவதிலும் இவரது பணி குறிப்பிடத்தக்கது – இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உயர் திரு க.பரமேஸ்வரன்

செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் 1992 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கால் வைத்த பின் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தை நிறுவி அதன் மூலம் 15 மூத்த கலைஞர்களை ஒரே மேடையில் அமர்த்தி கிரீடம் அணிவித்து கெளரவிக்கக் காரணமாக இருந்ததுடன், சுமார் 36 மூத்த கலைஞர்களின் வரலாற்றையும் நூல் உருவில் கொணர்ந்தார். – பொன் தர்மேந்திரன் (விழா அமைப்புக்குழுத்தலைவர்)

இவர் தனது 45 வது வயதில் துணிச்சலுடன் கூத்தினைப் பழகியதோடு, “வேழம்படுத்த வீராங்கனை” நாட்டுக்கூத்தில் வன்னி மகாராசனாக ஆடும் ஆட்டத்தைப் பார்த்த பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் “வயதுக்கு மிஞ்சிய ஆட்டம்” எனப்புகழ்ந்துரைத்தார். கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை “பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது” என்று புகழ்ந்துரைத்ததுடன் சுமார் ஏழு மேடைகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்து ரசித்திருக்கின்றர்.
1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோவலன் கூத்தை மேடையேற்றி பாண்டியரசனாக நடித்தார். இந்தக் கூத்து ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஒளிபரப்பப்பட்டது.

ஈழத்து இசை நாடக உலகில் செல்லையா மெற்றாஸ்மயிலின் இழப்பு ஒரு வெறுமையை ஏற்படுத்தியிருக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

மேலதிக தகவல் உதவி:
தங்கக்கிரீடம் விழா மலர்
உதயன் நாளிதழ்
வேம்படி இணையம்

நன்றி:
பேட்டியை எடுத்ததோடு ஆவணங்களையும், இறுவட்டுக்களையும் அன்பளித்த திருமதி.ஜெகந்தா பிரிதிவிராஜ்