நாவலர் றோட், நல்லூரில் இருக்கு நூதனசாலை

யாழ்ப்பாண உலாத்தலில் எமது நூதனசாலைக்கும் ஒரு எட்டுப் போய் அங்கேயிருக்கும் அரும்பொருட்களைக் காண்பதோடு கமராவில் அள்ளிவரலாம் என்ற நோக்கில் ஒரு நாட்காலை நல்லூர் நோக்கிப் பயணப்பட்டேன். நல்லூரில் நாவலர் றோட்டில் இந்த நூதனசாலை இருக்கு என்பது மட்டும் தெளிவாகத் தெரியும். ஏனென்றால் முன்பும் ஒரு தடவை இந்த இடத்துக்கு வந்திருக்கின்றேன். ஆனால் பலவருஷங்கள் கழிந்த நிலையில் நாவலர் றோட்டின் தார் வீதியைத் தவிர எல்லாம் மாறியிருக்கும் நிலையில் என் பஞ்சகல்யாணி லுமாலா சைக்கிள் தன் பாட்டில் பயணிக்க நானோ வீதியின் இருமருங்கையும் கண்களால் அளந்தேன். இப்படியே நல்லூர் தாண்டி ,கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாண முகப்பு வரைக்கும் நாவலர் வீதி வந்து விட்டது ஆனால் நூதனசாலை தான் என் கண்ணில் படவில்லை. இடையில் எங்கோ என் கண்களில் இருந்து விலகிவிட்டது போல. மீண்டும் றோட்டின் மறு அந்தத்தில் இருந்து நல்லூர் நோக்கிய நாவலர் றோட்டை நோக்கி மெல்ல நடை பழகியது லுமாலா சைக்கிள்.

வழியில் பருத்திப்புடவையோடு வயதான அம்மா, எட்டி என் சைக்கிளை அவருக்கு முன்னால் கொண்டுபோய்
“அம்மா! நூதனசாலை எந்தப்பக்கம் தெரியுமோ”
“என்ன மேனை அது?”
“மியூசியம் அம்மா மியூசியம்”
“எனக்குத் தெரியாது மேனை” கையை விரிச்சுக் கொண்டே தன் நடையைக் கட்டினார் அவர்.

கால்களுக்கு குழாய்க்காற்சட்டை அணிந்த இன்னொரு நாற்பதுகளின் ஒருவர் தன் வீட்டுக்கு முன்னால் நின்றார்.
“அண்ணை! இந்த நூதனசாலை, மியூசியம் இந்த றோட்டில தானாம் தெரியுமோ”
“எனக்குத் தெரியாது தம்பி நாங்கள் இடம்பெயர்ந்த சனம் இந்த ஊர் அவ்வளவு விளப்பமில்லை”

இனி நானே ஒரு கை பார்த்து விடுவோம் என்று வீதியின் வலப்பக்கமாகக் கண்களை வைத்துக் கொண்டு பயணித்தேன். ஆகா அதோ வந்து விட்டது நாவலர் கலாச்சார மண்டபம், இந்தக் கலாச்சார மண்டபத்துக்குப் பின்னால் தானே அந்த நூதனசாலை என் தலைக்கு மேலாய் கொசுவர்த்திச் சுருளாய் இந்த இடத்திற்கு வந்த பழைய நினைவுகள் துளிர்க்க உள்ளே போகிறேன்.

இந்த நாவலர் மணிமண்டபத்திற்கு நான் கடைசியாக வந்தது 90 ஆம் ஆண்டு. அப்போது எங்கள் லைப்ரரி சேர் தனபாலசிங்கம் தான் என்னை இழுத்து வந்தார். அந்த நாள், தமிழகத்தின் சுபமங்களா ஆசிரியராக இருந்த எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன் ஈழத்துக்கு வந்து இந்த மண்டபத்தில் தான் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார். நாவலர் மண்டபமே முட்டி வழிஞ்சது அப்போது. கோமலின் பேச்சு முடிந்ததும் கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள். மேடைக்குப் நின்ற லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
“ஏறும் ஏறும்” என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.
ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். “திரைப்படங்கள் சமூக நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட “ஒரு இந்தியக் கனவு”, “தண்ணீர் தண்ணீர்” கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே” என்று ஏதோ ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர். அந்த நினைவுகள் மீண்டும் கிளறுப்பட்டுத் தணிய என் சைக்கிளை இளைப்பாற்ற ஒரு மர நிழலில் நிறுத்தி விட்டு நாவலர் மணி மண்டபத்துக்குப் பின்னால் போகின்றேன். அங்கே தானே இருக்கு எமது நூதனசாலை.

எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாக, கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை இல்லையில்லை நூதனமான அறை இதுதான். உள்ளே போகிறேன்.
அங்கே இரண்டு பெண்களும் ஒரு வயதானவரும் மேசை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நுழைவுக் கட்டணம் ஏதாவது கட்டிப் போவதுதானே எல்லா நூதனசாலைகளிலும் வழக்கம் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்,
“கட்டணம் எவ்வளவு”
“அப்படி எதுவும் ஒன்றுமில்லை, உள்ளே போய் வடிவாப் பாருங்கோ” சிரித்தவாறே ஒரு பெண் சொல்கிறார்.

உள்ளே ஏற்கனவே வந்து குழுமிய தென்னிலங்கை சிங்களவர்கள் ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டியாகப் பார்த்துத் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டே போகின்றார்கள். ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டிகளிலும் ஏனோ தானோவென்று உட்கார்ந்திருக்கின்றன பண்டையகாலத்தில் மவுசுடன் இருந்த செல்வங்கள். பல பெட்டகங்களில் எந்தவிதமான குறிப்புக்களும் இல்லை. இருக்கும் சில பெட்டகங்களில் இருக்கும் குறிப்புக்களும் ஒற்றைவார்த்தையில் இது சங்கு, இது சட்டி என்று சொல்கின்றன். இவையெல்லாம் எப்போது யாரால் எந்தக்காலகட்டத்தில் பயன்ப்படுத்தப்பட்டன என்று எந்தவிதமான தகவல்களும் இல்லை. என்னைச் சுற்றி அந்த அறையில் எந்தத் தமிழரும் பார்வையாளராக வரவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தாங்களாகவே ஊகித்து ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துக் கூட வந்தவர்களோடு அவற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகிறார்கள் வந்திருக்கும் தென்னிலங்கையர். ஒரு கண்ணாடிப்பெட்டகம் முன்னால் நின்று இந்தப் பொருள் என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு பெண் குரல். ஒரு சிங்களப்பெண்மணி சிங்களத்தில் எனக்கு ஏதோ விளங்கப்படுத்துகிறார் என்பது மட்டும் தெரிகிறது. மதராசப்பட்டணம் படத்தில் வெள்ளைக்காரிக்கு முன்னால் நிற்கும் ஆர்யா போல ஏதோ அவரை ஆமோதித்துச் சமாளிக்கிறேன். நானும் அவர்களைப் போல வந்த ஒரு தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணி என்று நினைத்து விட்டார் போல.

ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டகங்களையும் கமராவில் சிறைப்படுத்திக் கொண்டு மெல்ல நகர்ந்தேன். உள்ளே சுற்றுச் சுற்றி மீளவும் முகப்பு இடத்துக்கு வருகிறேன். மேசையில் இருக்கும் பெண்களும் அந்த வயதானவரும் ஏதோ ஒரு கண்ணாடிப்பெட்டகத்தில் இருக்கும் பொருளுக்குரிய பெயரை எழுத முனைந்து கொண்டிருந்தார்கள். கையில் பேனையும் ஒரு துண்டுப் பேப்பரும்.

சங்கிலியனின் வீரவாள் மழுங்கியது போல நூதனசாலைக்குப் போய் விட்டு வெளியேறும் போது என் மனநிலை. அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளில் ஒரு ஐம்பது வருஷம் பழமையான கல்லைக் கண்டாலே சுற்றவரை கொங்கிறீற் போட்டு இது என்னமாதிரியான கல், இதன் முக்கியத்துவம் என்ன என்னுமளவுக்கு அவர்களது வரலாற்றுச் சுவடுகளைத் தேடிப் பேணிப் பாதுகாக்கின்றார்கள். நமது சமூகமோ நல்ல நிலையில் இருக்கும் கோயிலை இடித்து நான்கு ஐந்து அடுக்குகளைக் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துவதிலும் இருக்கும் முனைப்பு இப்படியான அரும்பெரும் வரலாற்றுச் சுவடுகளில் காட்டுவதில்லையே. இந்த ஆண்டு நல்லூர்த் திருவிழாவுக்கு பல அடுக்குகள் கொண்ட பக்தர்கள் செருப்பு வைக்கும் பீடங்களை விழுந்தடித்துச் செய்யும் நிலையில் இருக்கும் யாழ் மாநகராட்சி சபை, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த நூதனசாலையை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு மாற்றலாமே, கூடவே இங்கே இருக்கும் அரும்பொருட்களுக்கு முறையான தெளிவான வரலாற்றுக் குறிப்புக்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூடப் பொறிக்கலாமே? ஏதோ காயலான்கடைச் சரக்கு மாதிரி உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று எச்சங்களைக் காண தென்னிலங்கை யாத்திரிகர்கள் படையெடுத்து வரும் போது, “இங்கே பாருங்கள் இப்படியெல்லாம் ஆண்ட சமூகம் இது” என்று காட்டக் கூட ஒரு முன்மாதிரியாக இவற்றை முறையாகப் பயன்படுத்தலாமே?

எஞ்சிய எம் வரலாற்று எச்சங்கள் கையேந்துகின்றன இன்றைய அரசியல் அநாதைகளான நம் தமிழரைப் போல…..

படங்களைப் பெரிதாகப் பார்க்க அந்தந்தப் படங்களை அழுத்தவும்


மேலே இருக்கும் கற்குவியல் டைனோசர் போன்ற மிருகத்தின் சிலைவடிவமாம்
ஒருகாலத்தில் மூதாதயரை அடக்கிய பீரங்கிகள்


மட்பாண்ட் அச்சு
கைவிலங்காகப் பயன்பட்டது


நீதிமன்றத்தில் பாவிக்கப்பட்ட குடைதாங்கி

பாண்டி விளையாடும் குண்டு


யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் மூன்று


மதில் மேல் பூனை(க்காதல்)

ஆரம்ப வகுப்பில் எனக்கு ABCD யில் இருந்து Role play வரைக்கும் ஆங்கிலத்தைப் புகட்டிய ஆசிரியை உடுவிலில் இருக்கிறா. அதுவும் எங்களுக்கெல்லாம் இங்கிலீஷ் படிப்பிக்க எவ்வளவு கெட்டித்தனம் வேணும். சொல்ல மறந்திட்டன் அவவின் பெறாமகன் தான் இவர். அவவை இந்த முறையாவது சந்திச்சுக் கதைக்க வேணும் எண்டு கங்கணங்கட்டிக் கொண்டு உடுவில் மகளிர் பாடசாலைக்குப் பக்கத்து ஒழுங்கை என்று என் அம்மா சொன்ன ஒரே ஒரு குறிப்பு மட்டும் இருக்க லுமாலா லேடீஸ் பைக்கை வலித்தேன். எல்லாப் பக்கத்தாலும் விசாரிச்சால் அவரைத் தெரியவில்லை. ஜி.எஸ் (கிராம சேவகர்) வீட்டை கேட்டுப் பாருங்கோ என்று ஒருவர் வழிகாட்டினார். ஆனால் ஜி.எஸ் வீட்டில் நின்ற நாய் “மவனே, கால் வச்சே எலும்பிருக்கும் தசை இருக்காது” என்று பல்லை இளித்துக் கொண்டு உறுமிக் கொண்டே துரத்த ஆயத்தமானது. ரீச்சரை இந்த முறையும் பார்க்க முடியாத துர்பாக்கியத்தை நினைத்து வெதும்பிக் கொண்டே உடுவில் மகளிர் பாடசாலைச் சுவரைப் பார்க்கிறேன்.

“உன் பெயர் என்ன?
இன்னும் ஒருமணி அகவில்லையா?
ஒரு மணிக்கு வரச்சொன்னி
ங்க
என்னைக் காக்க வைத்து விட்டு
வரவில்லை”

இப்படி ஒரு பெடிப்பிள்ளை சோக்கட்டியால் சுவரில் எழுதியிருக்கிறார். இவன் பாவி எழுதின குறிப்பிலேயே இரண்டு எழுத்துப் பிழை இருக்கு. எதுவாக இருந்தாலும் மொபைல்போன் யுகத்திலும் பழமையைப் பேணும் இந்தத் தம்பியின் கனவு கைகூடவேணும் பாருங்கோ.

தரேலாது செய்யிறதைச் செய் பாப்பம்

சண்டை ஒருவழியா ஓய்ஞ்சாலும் ஓய்ஞ்சுது இப்பவெல்லாம் புதுப்புது நாட்டாமையள் கிளம்பியிருக்கினம் என்று அன்னம்மாக்கா புலம்பும் அளவுக்கு நிலமை மோசம். அப்படி ஒரு நாட்டாமையின் கதை தான் இது. ஆமிக்காறருக்கு வேலை இல்லை சந்திக்குச் சந்தி “டெங்குவை ஒழிக்க நாம் கை கோர்ப்போம்” என்று இராணுவ அறிவித்தல் பலகையில் எழுதுவது மாத்திரமன்றி மதகுப்பக்கம் இருக்கும் நெருஞ்சி முள் பத்தைகளை வெட்டிக் களையெடுப்பதும் மருந்தடிப்பதுமாக “ஒப்பரேஷன் டெங்கு” நடவடிக்கை என்று சொல்லுமளவுக்கு அவை ஒருபக்கத்தால் இயங்க, இன்னொரு பக்கத்தால் நான் சொன்ன நாட்டாமைக்காரரும் வெளிக்கிட்டினம். அவை தான் சின்னக்குஞ்சி ஐயா சொல்லுமாற் போல “ஊத்தை இஞ்சுப்பெற்றர்”. யாரடா அவையள் என்று மலைக்காதேங்கோ, ஊரில் சுகாதார அதிகாரிகளை “ஊத்தை இஞ்சுப்பெற்றர்” என்று அழைப்பதே ஒரு தனி சுகம்.

“வீடுகளில் இருக்கும் பற்றைகளை ஒழித்துக் கட்டவும், தண்ணீர் தேங்கியிருக்கும் பாத்திரங்களை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்யவும் இதன் மூலம் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை ஒழிப்போம், மீறினால் 50,000 ரூபா அபராதம்” என்று சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணத்தின் ஊர் நெடுகச் சொல்லி அலுத்துப் போய் அடுத்த கட்டமாக ஒவ்வொரு வீடு வீடாகப் போய்ப் பார்த்து வந்தவை. அப்படித்தான் எங்கட வீட்டுக்குப் பக்கமா இருக்கும் என் நண்பன் ஒருத்தனின் வீட்டுக்குப் போனவை. மண் குடிசை, நாலஞ்சு கோழிகள். சுத்தும் முத்தும் பார்த்தவைக்கு ஆப்பு வைக்க ஏதுவாக ஒரு சமாச்சாரம் கிட்டியது. சருவச்சட்டிக்குள் தண்ணீர், தண்ணீருக்குள் புழுக்கள்.
“இதென்ன காணும் புழுவெல்லாம் நெளியிது” – சுகாதார அதிகாரி
“அது பாருங்கோ கோழிக்கு வச்ச தண்ணி, எப்பிடியோ புழுக்கள் வந்துட்டுது” – இது என் நண்பனின் மனைவி
“இப்பவே எழுதுறன் அபராதம்” – இது கூடப்போன இன்னொரு சுகாதார அதிகாரி
“என்னட்டைக் காசு வாங்கிப்போடுவியோ நீ, எழுது பார்ப்பம் ஆனா ஒரு சல்லிக்காசு தரேலாது செய்யிறதைச் செய்” மண் வாரித் தூற்ற ஏதுவாக நின்று கொண்டு நண்பனின் மனைவி
“ஐயா உவள் விசரியின்ர கதையை விடுங்கோ, மன்னிச்சுக்கொள்ளுங்கோ ஐயா, தயவு செய்து எழுதிப்போடாதேங்கோ” நண்பன் ஏறக்குறைய காலில் விழாத குறையாக.
சுகாதார அதிகாரிகள் தண்டப்பண ரசீதை எழுதிக் கொடுத்துவிட்டு நகர்கிறார்கள். இதற்குப் பிறகு விதானையாரின் கடிதம், ஜே.பி (சமாதான நீதவான்) கடிதம் எல்லாம் எழுதி அனுப்பித் தான் தண்டம் தணிந்தது 😉

1820 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட உடுவில் தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம்

மணியம் காரம் சுண்டல் பாருங்க 😉

“செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல பெண்ணொருத்தி” பாட்டுப் போட்டுக் கொண்டு ஐஸ்பழ வான்

காத்து வாங்கும் சின்னக்கடை
எல்லாப்பக்கத்தாலும் கொடியேறினாலும் ஏறிச்சு கடலுணவுகளுக்குக்கான கிராக்கி யாழ்ப்பாணத்தில் வெகுவாகக் குறைந்து விட்டது. சின்னக்கடைப்பக்கம் போனால் நண்டு, மீன் எல்லாம் விசிலடிச்சுக் கொண்டு ஹாயாக இருக்கினமாம், வாங்க ஆளில்லை. மேலே படத்தில் இருப்பது மீன் வண்டிக்காரர் உடுவில் பக்கமாக வந்த போது.

எங்கட ஊர் ரியூட்டறி

முன்னர் அருட்செல்வம் மாஸ்டர் வீடு பதிவில் எங்கள் ஊர் ரியூசன் சென்றரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்த முறை மீண்டும் அங்கே ஒரு வலம் வந்தேன் கமரா ஆசை ஆசையாக அடுத்த தலைமுறையைத் தன் கண்ணில் வாங்கிக் கொண்டது.

காதல் பாடமும் எடுத்த வகுப்பு 😉

எங்களுக்கு க.பொ.த சாதாரண வகுப்பு வரை தமிழும், பின்னர் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் இந்து நாகரீகமும் படிப்பித்த பாலா சேர் பாடம் நடத்த வரவும் நான் போகவும் கணக்காய் இருக்கு .
“எட பிரபு! அப்பிடியே இருக்கிறான்ரா இவன்” மகிழ்ச்சி பொங்க என் கைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்.


நான் எழுதிய “கம்போடியா – இந்தியத் தொன்மங்களைத் தேடி” நூலைக் கொடுத்து விட்டு
“சேர், நீங்கள் அப்ப எங்களுக்குப் படிப்பிச்ச அறிவை வச்சுக் கொண்டு நான் கம்போடியா போய் எழுதின நூல் இது”.
ஆச்சரியமும் பெருமிதமும் கலக்க என்னைக் கட்டியணைக்கிறார்.
“என்னட்டைப் படிச்ச பிள்ளை இப்படி புத்தகம் எழுதுவதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு” என்னைக் கட்டியணைத்தார் அப்போது. எனக்கு லேசாகக் கண்களில் துளிர்க்க
“எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் “

செல்வச்சந்நிதி முருகனைச் சந்தித்தேன்

அரிவரியில் சமயபாடத்தில் இருந்து என் க.பொ.த உயர்தரவகுப்பில் இந்து நாகரீகத்தை ஒரு பாடமாக எடுத்தது வரை செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் பற்றிப் படித்தும் கேள்விப்பட்டும், ஏன் எமது யாழ்ப்பாணத்து மண்ணில் இருந்தும் கூட என் வாழ்நாளில் சென்றிராத கோயில் இது. நான் இந்த ஆலயத்துக்கு இத்தனை ஆண்டுகாலமாகப் போகாததற்குக் காரணம் “ஷெல்”வச் சந்நிதியாக இருந்ததே ஆகும். இம்முறை என் தாயகப்பயணத்தில் கண்டிப்பாகச் செல்வச் சந்நிதியானைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். கூடவே செல்வச் சந்நிதி ஆலயத்தின் மகோற்சவ காலம் கூட இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு ஓட்டோவைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்கிறேன். இணுவிலில் இருந்து செல்வச் சந்நிதி ஆலயம் சென்று திரும்ப 1100 ரூபா என்கிறார் ஓட்டோ நண்பர்.

அந்த இனிய நாளும் வந்தது. காலை ஏழுமணிக்கு நம் பயணம் ஆரம்பமாகியது.
இணுவில் ஆஸ்பத்திரி எல்லாம் கடந்து, உரும்பிராய்ப் பக்கமாகச் செல்லும் வீதியால் போகின்றது ஓட்டோ. இரண்டு மருங்கிலும் தோட்டங்கள் தோட்டங்கள் தோட்டங்கள் தான். செம்பாட்டு மண்ணின் தலையில்.

பச்சை நிற தலையலங்கர ஸ்லேட்களைச் செருகியது போல பசுமை பூத்திருக்கின்றன தோட்டக் காணிகள். நடு நடுவே அந்தத் தோட்டக்காரர்கள் பாவிக்கும் பூச்சி மருந்துகள், பசளை வகைகளுக்கான விளம்பரங்களும் கூட சிறு பலகைகளில் நட்டு முளைத்திருக்கின்றன. நீர்வேலி கடந்து அச்சுவேலிப் பக்கமாகப் பயணிகிறது ஓட்டோ.
“தம்பி! அச்சுவேலிப் பெட்டையள் நல்ல வடிவானவை அத்தோட படிப்பிலும் சூரிகள் பெரும்பாலும் இவையள் வேலை செய்வது கவுண்மெண்ற் உத்தியோகத்திலை தான்” என்று ஓட்டோக்காரர் தன் ஓட்டோகிராப் காலத்தை நினைவு படுத்தினார். அச்சுவேலிக்காரர் இதை வாசிச்சா மனசுக்குள் சந்தோசப்படுங்கோ 😉

கொஞ்சத் தூரம் போனதும் பாதையின் இரு பக்கமும் பெரும் வாய்க்கால் இருந்த சுவடு தெரிகின்றது. “இந்த வாய்க்காலால் தான் முன்னை நாளேல்லை என்றுமே வற்றாது இருக்கும் நிலாவரைக் கிணறு மூலம் தோட்டக் காணிகளுக்கு நீர் பாய்ச்சுவது வழக்கம், அறுந்து போன சண்டை தொடங்கினதும் எல்லாம் போச்சு” என்று ஓட்டோக்காரர் புலம்பினார்.

நிலாவரைக்கிணறு என்று பெரிய பெயர்ப்பலகை தெரிகிறது, அந்தக் கிணற்றைச் சுற்றி இராணுவத் தடுப்புச் சுவர்கள் போடப்பட்டு இராணுவத்தினர் நிற்கின்றார்கள் என்பதால் கிணற்றைப் பார்க்கும் ஆசையை என் மனக்கிணற்றுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். நம் பயணம் தொடர்கிறது உடம்பெல்லாம் புண்ணான குண்டு குழிகளால் ஆன றோட்டில் குலுங்கிக் குலுங்கி ஆட்டம் போட்டுப் பயணிக்கிறது ஓட்டோ.
“இப்ப தான் கன வருஷத்துக்குப் பிறகு தொண்டமானாறுப் பாலப்பக்கமாக உள்ள வீதியை ஆமி திறந்திருக்கு. இதுக்கு முதல் வல்லை வெளியால் தான் வரவேணும்” என்று ஓட்டோக்காரர் சொல்லவும் முன்னே பொலிஸாரின் ஒரு சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்படுகிறது. எங்கே போகிறோம் எத்தனை பேர் என்ற விபரங்களை ஓட்டோக்காரரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டதும் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகிறது. தொன்டமானாறுப் பாலத்தைக் கடக்கிறோம். வழியெங்கும் இராணுவத் தடுப்பரண்கள். தூரத்தே சந்நிதியிதான் கோபுரம் தெரிகிறது.கோயிலை அண்மித்ததற்கு சமிக்ஞையாக ஓட்டோ மெல்லத் தன் ஓட்டத்தை நிறுத்தி நிதானிக்க இறங்கி நடக்கிறேன் கூடவே அப்பாவும் அம்மாவும். சந்நிதிக் கோயிலின் தீர்த்தக்கரையாக தொண்டமானாறு அகலத் தன் வாயைத் திறந்து நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. கேணிப் படிகளைக் கடந்து நீரில் கால் அலம்பலாம் அதை விட அந்த விசேஷம் அங்கேயே தீர்த்தமாடி மகிழலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் தீர்த்தமாடுவோம் என்று நினைத்து ஆலயக் கிணற்றில் கால் அலம்பச் செல்கிறேன். “தம்பி என்ன கால் கழுவவோ” என்று வாஞ்சையோடு ஒரு பக்தர் கேட்டு அள்ளிய கிணற்றுத் தண்ணீரைத் தான் பாவிக்காமல் என் கால்களுக்குப் பாய்ச்சுகிறார். நன்றிப் பெருக்கோடு கோயிலை நோக்கி விரைகிறேன்.

இது நாள் வரை புகைப்படங்களில் பார்த்த அதே பழமையும் எளிமையும் தவழும் ஆலயமாகச் செல்வச் சந்நிதி ஆலயம் திகழ்கின்றது. மகோற்சவ காலம் என்ற மேலதிக பகட்டுமில்லாத அநியாயத்துக்கும் அமைதி தவழும் உறைவிடமாக இருக்கின்றது.


மருதர் கதிர்காமர் என்ற மீனவரிடம் சிறுவனாக வந்து அருள்புரிந்த முருகப்பெருமான் தொண்டமானாறு ஆற்றங்கரையில் இருந்த பூவரசமரத்தடியில் ஆலயம் அமைத்து வழிபடுக என்ற கட்டளைப் பிரகாரம் தானே பூசகராக மாறி இந்தத் திருத்தலத்தை எழுப்பி வழிபட்டது வரலாறு. ஈழத்தில் இரண்டு கோயில்களில் மட்டுமே வாயை வெள்லைத் துணியால் கட்டி வழிபடும் வழக்கம் உண்டு. ஒன்று கதிர்காமத்தில், அங்கே வேடுவ மரபில் வந்த கப்புறாளைகள் பூசகராம இருந்து இறைபணி ஆற்றவும், செல்வச் சந்நிதியில் மருதர் கதிர்காமர் என்பவரின் மீனவ மரபில் வந்தோர் “கப்பூகர்” என்று இதே மாதிரியான வாய் கட்டிப் பூசை செய்யும் வழிபாட்டை நடாத்துகின்றார்கள்.

வடமராட்சிப்பகுதியில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் அரிதாகவே இருக்கின்ற காரணத்தினாலோ என்னவோ, காவடியாட்டம், பால்காவடி மற்றும் கோயிலின் மேளம் எல்லாமே மேலே இருக்கும் மேளக்காரர் வாசிக்கும் மிருதங்க வடிவிலான தோல் வாத்தியமே பாவிக்கப்படுகின்றது.

கோயிலைச் சுற்றி வந்து வழிபாடு நடத்திப் பின் ஆலயத்திண்ணையில் அமர்கின்றேன்.கோயில் மணியை ஒரு பக்தை இழுத்து அடிக்க பறை முழங்க பக்தர்களின் அரோகரா ஒலி விண்ணை எட்டுகிறது. பூசை ஆரம்பமாகிச் சுவாமி வீதிவலம் வருகின்றார்.

நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் எனவும் மாவிட்டபுரம் கந்தனை அபிஷேகக் கந்தன் எனவும் சிறப்பிப்பது போலச் செல்வச் சந்நிதிக் கந்தனை அன்னதானக் கந்தன் என்று சிறப்பித்து மகிழ்வர்.காரணம் நிதமும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு முகம் கோணாது அமுதும் அன்னமும் படைத்து வரும் மரபு தொன்று தொட்டு நிலவி வருகின்றது. நான் காலையில் சென்று மதியத்துக்கு முன்னதாகவே கிளம்பி விட்டதால் அந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை. அன்னதானத்தில் பலாச்சுளைளையும் இடுவார்கள் என்பது இனிப்பான கொசுறுச் செய்தி.

உள்ளூரில் இருக்கும் வைரவர் கோயில்கள் முதல் கிடுகுக் கொட்டிலில் இருந்த கோயில்கள் எல்லாம் டொலர்களாலும் யூரோக்களாலும் மாடமாளிகைகளாக எழுந்தருளி நிற்கையில் பழமையும் எளிமையும் கொண்டு அருள் பாலிக்கும் செல்வ சந்நிதியான் என் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றான். இந்தப் பதிவைப் போடும் இன்றைய நாள் செல்வச் சந்நிதி முருகன் ரதமேறித் தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தேர்த்திருவிழா நாள் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வச் சந்நிதி ஆலயம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள

செல்வச் சந்நிதி முருகனைச் சந்தித்த நிறைவில் திரும்புகிறேன் வீடு நோக்கி.

இடையராய் வந்து கதிர்காமரை இரட்சித்த முகமொன்று
கதிர்காமம் தன்னில் பூசைமுறை காண அழைத்த முகமொன்று
கதிரமலைக் கொடியேற்றச் சென்றமுகமொன்று
களைத்துத் துவையல் உண்ண ஓடிவந்த முகமொன்று
அடியார்க்கு அன்னதானம் அளிக்கும் முகமொன்று
புண்ணியனார் சமாதி கண்ட பூவரச மரத்தருகே –
கோயில் கொண்டு வீற்றிருந்த முகமொன்று
ஆறுமுகமமாகி வள்ளி தெய்வமங்கையுடன்
வேலாகி நிற்க அடியவர்களும் தேவர்களும்
அகமகிழ்ந்து வாழும் செல்வச் சந்நிதி வேலவா சரணம்மட்டக்களப்பில் இருந்து வந்து இங்கேயே தங்கியிருக்கும் சன்னியாசி ஒருவர்


ஆலயத்துக்குக் காவடியாட்டம் போட்டு வரும் சிறுவர்


கோயிலின் அதிகாரபூர்வ மேளம் இதுதான், கூடவே வாசிப்பவரும்மெய்ப்பொருள் தேடும் ஆடுகள் 😉

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் இரண்டு

எனது முந்திய பதிவில் “தயவு செய்து பாதணிகளோடு உட் செல்லாதீர்” என்று இன்ரநெற் கபே போன்ற இடங்களில் போட்டிருந்ததாகச் சொல்லியிருந்தேன். பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் “நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்” அவ்வ்வ் :-((((

வெள்ளைக்கார்ட் வெள்ளாளர்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலுக்குப் போய் விட்டு கே.கே.எஸ் றோட்டில் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மருதனார்மடம் இராமனாதன் கல்லூரியில் இருந்து சாரி சாரியாக செம்பாட்டு மண் பரவிய உடுபிடவைகள் அணிந்து ஒரு ஐம்பது பேருக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் அடங்கலாகப் பயணிக்கிறார்கள். “எங்கே போய் விட்டு இவர்கள் போகிறார்கள்” என்று ஆட்டோக்காரரின் வாயைக் கிளறுகிறேன். இவர்கள் வருமானம் குறைந்த சனம், வெள்ளைக்கார்ட்டுக்கு நிவாரணக்காசு வாங்குபவர்கள். வெளிநாடுகள் செய்யும் நிதியுதவியை இங்கேயுள்ள விதானைமார் (கிராமசேவகர்) இப்படியான சனத்துக்குக் கொடுக்கும் போது சும்மா கொடுத்தோம் என்றிராமல் ஏதாவது தோட்ட வேலையைச் செய்ய வைத்துக் கொடுப்பார்கள்” என்று சொல்லிய அவர் “இந்தச் சட்டம் எல்லாம் தாழ்த்தப்பட்ட சனத்துக்குத் தான் தம்பி, எனக்குத் தெரிய எத்தனையோ வெள்ளாம் ஆட்கள் இந்த வெள்ளைக்கார்ட் நிவாரணம் எடுக்கிறவை ஆனால் விதானையாரை தங்கட அணைவுக்குள்ள வச்சிருக்கினம் என்பதால ஓசியில் அவைக்குப் பணம் கிடைக்கும்” என்று பெருமினார். அந்த நேரம் சாதி ஒழிப்புப் போராளி எழுத்தாளர் டானியல் என் நினைவுக்கு வந்தது தவிர்க்க முடியாது இருந்தது.

எங்கட ஊர் லக்சறி கார் வகைகள் இவை தான். வெளிநாடுகளில் இந்தக் காரெல்லாம் லட்சக்கணக்கான டொலர் பெறுமே 😉

யாழ் நிலம் வேணும் பராசக்தி யாழ் நிலம் வேணும்

யாழ்ப்பாணத்துக்கு ஆயுட்காப்புறுதி நிறுவனங்கள் முதல் லொட்டு லொசுக்குக் கடைகள் எல்லாம் சமீபகாலமாக முற்றுகையிடுக்கின்றன. கஸ்தூரியார் வீதி போன்ற பிரதான வீதிகளின் கட்டிடங்களின் அடுக்குகள் மூன்று, நான்கு என உயருகின்றன. இடிபாடான கடைகளின் சொந்தக்காரை “நாளை நமதே” பாட்டுப் பாடி சேர்ந்த சகோதரங்கள் மாதிரி தேடிப்பிடிக்கிறார்கள். ஒரு வர்த்தகர் என் காதில் போட்ட சமாச்சாரம் இது, யாழ்ப்பாணத்தில் இருந்த தன் கடையை 35 லட்சத்துக்கு விற்க இருந்தாராம் ஒருவர். இப்போது அந்தக் கடையை தென்னிலங்கையின் ஒரு பெரும் வர்த்தக நிறுவனம் வருஷம் 18 லட்சத்துக்கு வாடகைக்குக் கேட்டிருக்கிறதாம் என்றால் பாருங்களேன்.

படத்தில் வின்சர் தியேட்டருக்குப் பக்கமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கடைத்தொகுதி ஒன்று

இந்த நிலையில் தமது வீடுகளை 30 லட்சத்துக்கும் குறைவாக விற்று விட்டு தப்பினோம் பிழைச்சோம் என்று கொழும்பில் அடுக்குமாடியில் முதலிட்டுக் கொண்டவர்களும் வெளிநாட்டில் தமது வீட்டின் மோர்ட்கேசுக்குப் போட்டவர்களும் நாடு திரும்பி மூக்காலும் வாயாலும் அழுகின்ற நிலமையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.

மருதனார்மடச் சந்தைக் காட்சி

வெளிநாடுகளில் shopping mall எனப்படும் கடைவளாகங்கள் ஒவ்வொரு நகரிலும் இருப்பது தவிர்க்க முடியாதது, யாழ் நகரச் சந்தைப்பகுதி நெருக்கடி நிறைந்த பகுதியாக மாறும் போது அதைச் சூழவுள்ள பகுதிகள் மெல்ல மெல்ல நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கீழேயுள்ள படத்தில் இருப்பது நாவலர் றோட்டில் உள்ள லக்சன் பிளாசா

நாம வேற வீட்ல பிறந்திருக்கலாம்டா

அழகன் படத்தில் மம்முட்டிக்கு நிறையக் குழந்தைகள், அவரின் கண்டிப்பினால் மனம் வெதும்பி ஒரு பையன் சொல்லுவான் “நாம வேற வீட்ல பிறந்திருக்கலாம்டா” இதே மாதிரியான ஒரு உரையாடலை சமீபத்தில் கேட்டேன். தற்போது தமிழில் ஆடி கழிந்து ஆவணி பிறந்திருக்கிறது, ஏகப்பட்ட கல்யாண வீடுகள், சாமத்தியச் சடங்குகள், குடிபுகுர்தல்கள் இவற்றை விட நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவங்கள் இவற்றையும் விட சின்னச் சின்னக் கோயில்களுக்கும் மகோற்சவங்கள் களைகட்டுகின்றன. இதனால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புலம்பெயர் தமிழர்கள் படையெடுக்கிறார்கள். நமது சமூகத்தில் புதிதாக முளைத்திருக்கும் சாதி “பொறின் சனம்”. இதனைக் கவனித்த, இவ்வளவு நாளும் போர்க்காலத்தில் எல்லாம் தன் நிலத்தை விட்டு அகலாத சிறீமான் பொதுஜனம் ஒன்று மடத்துவாசல் பிள்ளையாரடியில் வைத்து இப்படிச் சொன்னது தன் நண்பரிடம் “டோய் மச்சான்! வெளிநாட்டுச் சனம் நிறைஞ்சு போச்சு இப்ப , பேசாம நாங்கள் இந்த இடத்தை விட்டு இடம்பெயரவேணுமடாப்பா”

அடுத்த கோள் மூட்டலில் செல்வச் சந்நிதியானுடன் சந்திக்கிறேன்…;-)

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் ஒன்று


யாழ்ப்பாணம் என்னை வரவேற்கிறது

மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் என் தாயகப் பயணம் இந்த மாதம் கைகூடியிருக்கின்றது. கொழும்பில் இறங்கி அடுத்த நாளே அம்பாள் எக்ஸ்பிரஸில் ஏறி சொந்த ஊர் நோக்கிப் பயணிக்கிறேன். இப்போதெல்லாம் கொழும்பு யாழ் விமான சேவையை ஏன் ஏது என்று கேட்பாரில்லை. தினகரன் சொகுசு பஸ் தொடங்கி, அம்பாள், ரிப்ரொப் என்று ஏகப்பட்ட பஸ் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப் பயணிக்கின்றன. ஒரு வழிக் கட்டணம் 1100 ரூபா, சாய்மானமாகப் படுக்கும் வகையான சொகுசு இருக்கைகள், இரவிரவாக டிவிடியில் ஓடும் படங்கள் என்று நேரம் போவதே தெரியாமல் இரவு 7.30 க்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை 7 மணிக்கு இணுவிலில் இறக்கி விடுகிறது அம்பாள் எக்ஸ்பிரஸ். அந்த இரவுப்பொழுதில் சிரித்து மகிழட்டுமே என்று ரஜினி நடித்த “அதியசப் பிறவி” படத்தைப் போடுகிறார் நடத்துனர். “அண்ணை இதை விடப் பழைய படம் கிடைக்கேல்லையோ”
என்று தன் மூக்கில் பாற்கடலைக் கடைந்தவாறே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய பெரிசு சொல்கிறது. பொது இடத்தில் மூக்கைத் தோண்டுபவனைத் தண்டிக்க ஒரு “அந்நியன்” வரவேணும் பாருங்கோ. அந்தப் பெருசுவின் சொற்பிரகாரம் நடத்துனர் நூற்றுச் சொச்சம் முறை போட்டுத் தேய்ந்த “உன்னை நினைத்து” படத்தைப் போடுகிறது. கொடுமையடா சாமி என்று அதைப் பார்த்துக் கொண்டே கண்களைச் செருகுகிறேன். அனுராதபுரத்தில் முஸ்லிம் கடை என்ற சாப்பாட்டுக்கடையில் நிறுத்தப்பட்டு சில நிமிடங்கள் இரவு உணவுக்காகவும் சிரமப்பரிகாரத்துக்காகவும் வசதி செய்யப்படுகின்றது.

ஓமந்தையில் இராணுவச் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்படுகின்றது. இலங்கைத் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்போருக்கு இராணுவ மரியாதையாக பஸ்ஸுக்குள் வைத்தே பார்த்து விட்டு விட்டு விடுகிறார்கள். வெளிநாட்டு பாஸ்போர்ட் என்றால் இறக்கி இராணுவப் பதிவேட்டில் பாஸ்போர்ட் விபரங்களைக் குறித்து விட்டுக் கொடுக்கின்றார்கள். வெளி நாட்டுப் பாஸ்போர்டில் யாழ்ப்பாணம் பிறந்த இடம் என்றால் சிக்கல் இல்லை. வேறு இடங்கள் குறிப்பிட்டிருந்தால் பயணத்துக்கு முன்னதாக கொழும்பில் பொலிஸ் கிளியரன்ஸ் எடுத்துத் தான் பயணிக்க வேண்டும் என்பது ஐந்து மாதக் குழந்தைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். ஒருகாலத்தில் இலங்கைத் தேசிய அடையாள அட்டையைக் கிடப்பில் போட்ட புலம்பெயர் வாழ் சிங்கங்கள் தூசு தட்டி அதை எடுத்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தொடர்ந்து ஓடும் ஓட்டம் முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் வந்து மிதக்கிறது. அந்த அதிகாலை இருட்டிலும் லவுட்ஸ்பீக்கருக்குள் இருந்து செளந்தரராஜன் பிள்ளையார் பெருமை பற்றிப் பாடுகிறார். கால் கழுவி, பிள்ளையாரை வணங்கி விட்டு, சூடான நெஸ்கபேயை வாங்கிக் குடித்துக் கொண்டே பஸ்ஸில் ஏற நடந்தால் பாலைப்பழ சீசன் ஆரம்பமாகி விட்டது என்பதைக் கட்டியம் கூறுகிறது குவித்து விட்ட பாலைப்பழ வியாபாரம் அதுவரை தனிக்காட்டு ராசாவாக இருந்த கச்சான் வியாபாரத்துக்குப் போட்டியாக..

வீட்டின் முன்னால் வந்து பஸ் இறக்குகிறது. புதுமையோடும் பெருமிதத்தோடும் என் ஊர்ப்புதினங்களை மனசுக்குள் செருகிக்கொண்டே பயணிக்கிறேன் ஊர் முழுக்க

சோடாபோத்தலைக் கண்டால் காலைத் தூக்காத நாய்கள்

முன்பு எப்போதும் பார்த்திராவண்ணம் ஒரு புதுமையையைப் பலவீடுகளின் முன் கேற்றில் கண்டேன். அது என்னவென்றால் கேற்றின் (gate) அடியில் இரண்டு பெரிய கோக் அல்லது பெப்சி வகையறா போத்தல்ககளில் கலர் நிறத்தில் கரைத்த நீரை நிரப்பி கட்டித் தூக்கிவிடப்பட்டிருக்கின்றன. என்ன காரணம் என்று நானும் யோசிச்சுக் களைச்சுப் போய் மாமி வீடு போனபோது மச்சாளிடம் கேட்டேன். “வழமையா கேற்றைக் கண்டால் நாய்கள் மூத்திரம் பெஞ்சு அசிங்கம் செய்வதோடல்லாமல் கேற்றும் கறள் பிடிச்சுடும் , எனவே யாரோ சொன்னார்களாம் உப்பிடி போத்தல்களைக் கட்டினால் நாயள் அண்டாது எண்டு, உண்மை தான் இதைக் கட்டினதுக்குப் பின்னர் நாய்கள் மூத்திரம் பெய்வதில்லை” என்று ஒரு புதுச் சூத்திரம் ஒன்றைச் சொன்னார். நாய்களுக்கு வந்த கஷ்டகாலத்தை நினைத்து மனதில் பொருமினேன்.

தயவு செய்து செருப்பைக் கழற்றி விட்டு வரவும்

நெற் கபே, ஸ்ரூடியோ உள்ளிட்ட பெரும்பாலான கடைகளின் வெளியே உள்ள படிகளில் தான் செருப்பு ஜோடிகள் இருக்கும். சில கடைகளில் பெரிய ஸ்ரிக்கரில் “தயவு செய்து செருப்பைக் கழற்றி விட்டு வரவும்” என்று ஒட்டியிருப்பார்கள். அதையும் தாண்டி உள்ளே வருவது உங்கள் சாமர்த்தியம். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் 2007 இல் நான் யாழ் சென்றபோது யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு முன்பாக இருந்த (ஏனப்பா அவ்வளவு தூரம் போனனீர் எனாறு குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது) நெற் கபேயில் இப்படித் தான் செருப்பை வெளியே கழற்றி விட்டு இணையத்தில் உலாவி விட்டு வெளியே வந்தால் யாரோ ஒரு மகராசன் என் ஞாபகமாக அவரிடமேயே இருக்கட்டுமே என்று நினைத்தோ என்னவோ என் புது செருப்பு ஜோடியைச் சுட்டு விட்டார். வெறுங்காலுடன் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் இன்னொரு ஜோடி வாங்கிப் போட்டு வந்தேன். அந்தக் கொடுமையான அனுபவம் காரணமாக ஒவ்வொரு நெற் கபேக்குள் போக முன்னர் “செருப்போட வரலாமோ” என்று கேட்டு விட்டு அதற்குச் சம்மதித்தால் தான் உள்ளே போகிறேன்.
ஏனப்பா செருப்பில இருக்கிற வைரஸ் கணினிகுள் போய்விடுமோ என்று குறுக்(கால போன )கேள்வி கேட்காதீர், தற்குக் காரணம் செய்யும் தொழிலே தெய்வமாம். அப்ப செருப்புக் கடைகாரன் காலைக் கழற்றி விட்டு வா என்பானோ?

முகம் பார்த்துக் கதைக்க 2 ரூபா

என்னதான் வீடுகளுக்கும் இன்ரநெற் தொடர்பு கிடைக்குமளவுக்கு வசதி வந்தாலும் நெற் கபேக்கள் இன்னும் கொண்டாட்டமாகத் தான் இயங்கி வருகின்றன. அதற்குப் பல காரணங்களைப் பட்டியல் போடலாம். ஒன்று என் கண்ணில் பட்டது, பிரவுசரில் முன் பார்த்த தளங்களைப் பார்த்தால் ஷகீலா ரேஞ்சுக்கு ஷொக் அடிக்குது 😉 யாரோ ஒரு மகராசன் ஈழத்துத் தமிழில் செக்ஸ் தளம் ஒன்று கூட நடத்துமளவுக்கு முன்னேற்றம். இதை விட அதிகம் ஈர்க்கும் விஷயம் வீடியோ கேம்ஸ். பக்கத்து இருக்கைகள் எல்லாமே முள்ளிவாய்க்கால் ரகத்துக்கு போர்ப்படைக்கலங்களின் சத்தம் காதைப் பிளக்க வைக்கும். முகம் பார்த்துக் கதைக்க ( அதான் பாருங்கோ video chat) ஒரு நிமிடத்துக்கு 2 ரூபா என்ற ரீதியில் நெற் கபேக்களில் விலைப்பட்டியல் இருக்கும்.

இதுதான் கண்ணு ஒறிஜினல் றேடியோஸ்பதி 😉

உள்ள(தையு)ம் கவர் கள்வர்கள்

யாழ்ப்பாணத்தில் எந்தத் தொழிலில் பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால் பிச்சுவா பக்கிரியே முதலிடம் பெறுவார். அந்தளவுக்கு வீச்சருவாளோடு கோஷ்டி கானம் பாடிக் கிளம்பி விடுகிறார்கள் இரவில் தொழிலை ஆரம்பிக்கும் கள்வர்கள். முன்பெல்லாம் வெருட்டலோடு நின்று விடும் களவு இப்போது ரத்தம் பார்க்காமல் நகரமாட்டார்கள் என்பதற்கு யாழின் தினசரி நாளிதழ்கள் உதயன், வலம்புரி ஒவ்வொரு நாளும் சாட்சியம் பகிரும். இதைத் தவிரப் பகல் நேரத்தில் கோயில் திருவிழாக்களில் படு பயங்கரமான பிஸினெஸ் தாலிக் கொடி வகையறாக்களில் இருந்து ஆரம்பிக்கும். திருவிழாக்கால லவுட்ஸ்பீக்கர் தேவாரம் , திருவாசகத்தோடு “தயவு செய்து தாலியைப் பத்திரமாப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்று கெஞ்சிக் கேட்கும்.

எனது கைலாய வாகனம் லுமாலா லேடிஸ் சைக்கிளைக் கொண்டு போகும் இடமெல்லாம் பூட்டிப் பத்திரமாக வைத்து விட்டுத் தான் நகர்வேன். இருந்தாலும் பத்திரமாப் பார்த்துக் கொள்ளுங்கோ என்பினம் யாழ்வாசி நண்பர்கள். ஏன்ராப்பா பூட்டுத் தான் போட்டிருக்கே” என்றால் “டோய்! இப்பவெல்லாம் பூட்டோடையே சைக்கிளைக் களவெடுக்கிறது தான் பசன் (fashion)” என்று அடிவயித்தில் மலத்தியன் அடித்தான் ஒரு நண்பன்.

றீலோட் பண்ணித் தாங்கோ

டயலொக் தொடங்கி Mobitel வகையறா வரை ஏகப்பட்ட கைத்தொலைபேசி நிறுவனங்கள் இருந்தாலும் பெரும்பான்மை நுகர்வோர் சமூகம் prepaid card ஐயே தஞ்சமெனக் கொள்கின்றது.பாண் விற்கும் பெட்டிக்கடைகளில் இருந்து இந்த றீலோட் பண்ணும் வசதி இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டில் இருந்து போவோர் இலங்கைத் தேசிய அடையாள அட்டையைக் கையோடு கொண்டு போகாவிட்டால் அவர்களது பாஸ்போர்ட் உடன் டயலொக் போன்ற நிறுவனங்களின் கிளைகளில் மட்டுமே புதிதாக சிம் கார்டைக் கொள்வனவு செய்யலாம் என்பதை மறக்காதீர்.

இன்னும் கோள் மூட்டுவேன்……;-)

3 idiots போதித்த பாடம்


“என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்”

“எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி”

அன்று எனது பொருளியல் ஆசான் வரதராஜன் சொன்னது மூளையின் எங்கே ஒரு மூலையில் ஒளிந்திருந்தது, அந்த ஞாபகக்கிணற்றில் நேற்றுக் கல்லறெந்து கலைத்தது 3 idiots.

3 idiots என்ற ஹிந்திப் படம் வந்து ஏழு மாதங்கள் ஓடிவிட்டாலும் (23 December 2009)இப்போது தான் அந்தப் படத்தின் மூலப்பிரதிகள் டிவிடிக்களாக வந்திருக்கின்றன. ஒவ்வொரு மாசமும் குறைந்தது 2 , 3 முறையாவது கடைக்காரரிடம் “3 idiots வந்துட்டுதா” என்று கேட்டு வைப்பது வழக்கமாக இருந்தது. படத்தின் மூலக்கதையின் ஒரு வரி செய்தியைத் தவிர வெறெதையும் இது நாள் வரை இணையத்திலோ அச்சூடகத்திலோ படிப்பதைத் தவிர்த்து விட்டிருந்தேன். இவ்வளவுக்கும் 3 idiots சொல்லும் சேதி தான் என்ன?

இப்போது இருக்கும் இந்தியக் கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும், ஒரு மாணவனது சுய சிந்தனைகளுக்கும் அவனது ஆற்றல்களுக்குமான களமாக அவனால் சுதந்திரமானமுறையில் தன் விருப்பான துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை வளர்ப்பதற்கும், வெறுமனே ஆண்டாண்டுகாலமாக விளைவித்த ஆராய்ச்சிகளின் பேப்பர் குவியல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளைத் துறையில் மாற்றம் ஏற்படுத்தி செயல்முறைக் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படம் சொல்லும் சாராம்சம். இவ்வளவையும் சொல்லிவிட்டு இது இந்திக் கல்வி அமைப்பில் மட்டும் தான் இருக்கிறது என்றால் உங்களாலோ என்னாலோ நம்பவா முடியும்? நமது இலங்கையின் பாடத்திட்டமும் கல்வி அமைப்பும் கூட இதே லட்சணத்தில் தானே இருக்கின்றது.

3 idiots படத்தில் வரும் ரஞ்சோ என்ற ஷியாமளதால் சன்சட்(அமீர்கான்), பரான் குரேஷி (மாதவன்),ராஜீ ராஸ்ரோகி (ஷர்மான் ஜோஷி) ஆகிய மூன்று முட்டாள் (!) கல்லூரி நண்பர்கள், சாத்தூர் ராமலிங்கம் (ஓமி வைத்யா) என்ற புத்தகப்பூச்சி மாணவன், வீரு சாஸ்த்ரபோதி (பொமான் இரானி) என்ற இவர்களின் கல்லூரி முதல்வர் ஆகிய பாத்திரங்கள் தான் படத்தின் மூலப்பாத்திரங்களாக, குறித்த கதையை நகர்த்திச் செல்பவர்களாக மட்டுமன்றி இவர்கள் தான் நமது இலங்கை, இந்தியக் கல்வி அமைப்பின் குறியீடுகளாகவும் இருக்கின்றார்கள்.

ராஞ்சோ (அமீர்கான்) என்ற மாணவன் கட்டுக்கட்டாய் அடுக்கியிருக்கும் புத்தக மலைகள் தான் ஒவ்வொரு மாணவனின் சுயசிந்தனைக்கும் தடையாக இருக்க்கின்றன, இந்தக் கல்விமுறையை அறவே ஒழித்து ஒரு மாணவனின் தேடல்களுக்குக்கும் அவனது திறமைக்கும் வடிகாலாய் இந்தக் கல்வி அமைப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ராஜீவோ (ஷர்மான் ஜோஷி) படுத்த படுக்கையாய் இருக்கும் அப்பா, சுற்றிக்கொள்ள ஒரே சீலையோடு இருக்கும் தாய், தங்கச்சியின் கல்யாணம் இவற்றுக்கெல்லாம் தான் படிக்கும் படிப்புத் தான் கைகொடுக்கும், அந்தப் படிப்பை எப்படிப் படித்தால் தான் என்ன என்ற ரீதியில் சாம்பிராணிப்புகையும் ஊதுவத்தியுமாக கடவுளர் படங்களுக்கு புகை பாய்ச்சிக்கொண்டிருப்பவன். அடுத்தவன் பரான் குரேஷி (மாதவன்) புகைப்படக்கலையைத் தன் உயிராய் நேசிப்பவன், ஆனால் தன்னை ஒரு என்சினியர் ஆக்கி அழகுபார்க்கத் துடிக்கும் தன் தந்தையின் தீரா ஆசைக்குப் பலிகடாவாகத் தன்னை உள்ளாக்கியவன். இந்த மூன்று துருவங்களும் சேரும் போது கண்டிப்பாக ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரிடம் நல்ல பேர் எடுக்கத் துடிப்பதும், தானே முதல் மாணவனாக வர வேண்டும் என்ற வெறியோடு பாடப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கரைத்துக் குடித்து (அந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றன என்பதைக் கூடத் தன் சுய சிந்தனையில் ஏற்றி வைக்காத) வகையறா மாணவன் சாத்தூர் ராமலிங்கம் (ஓமி வைத்யா). இவர்கள் மாணவ சமுதாயத்தின் நான்கு குறியீடுகளாக இருக்கும் போது, இந்தப் புள்ளிகளோடு இன்னொருவராக, எந்தவிதமான மாற்றத்தையும், சுய அறிவின் வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் கல்வி அமைப்பின் பிரதிநிதியாக, மாணவர்களால் வைரஸ் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்ட கண்டிப்பான கல்லூரி முதல்வர் வீரு சாஸ்த்ரபோதி (பொமான் இரானி). இவர்களை இணைத்து 3 idiots பாடம் எடுக்கிறது.


இந்திய சினிமாவின் செழுமையான சினிமாக்களின் பட்டியலில் தவிர்க்கமுடியாத படங்களாக Lagaan, Rang De Basanti, Taare Zameen Par இந்த மூன்று படங்களோடு இப்போது 3 Idiots படமும் சேர்ந்து கொள்ளும். இதில் கெளரவப்படக்கூடிய விஷயம் இந்த நான்கு படங்களுமே ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அமீர்கானின் பங்களிப்போடு வந்தவை, ஆச்சரியமான விஷயம் எந்த விதமான ஹீரோயிசங்களும் வாந்தி வருமளவுக்கு மசாலாவும் திணிக்காத கலைப்படைப்புக்கள். 3 Idiots படத்தில், நிஜத்தில் 45 வயதான அமீர்கானை ஒரு கல்லூரி மாணவனாக எல்லோராலும் ஏற்க முடிவதே அவரின் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. உடனே நீங்கள் எங்கள் சரத்குமார் கூட காற்சட்டையும் டை அணிந்த சேர்ட்டும் போட்டுக்கொண்டு நமீதாவுடன் மீயா மீயா என்று பாடினவர் என்றெல்லாம் எதிர்க்கேள்வி கேட்கக் கூடாது. இந்தப் படத்தின் உருவாக்கம் குறித்த டிவிடியில் பார்த்தால் அமீர்கான் எவ்வளவு தூரம் தனக்குள் ஒரு பாடம் நடத்தி 25 வருஷங்களைக் குறைத்துக் குறித்த பாத்திரங்களாக மாறி இருக்கின்றார் என்பதைப் பார்க்கும் போது இந்த அற்புதமான கலைஞனின் சினிமா குறித்த நேசம் நெகிழ வைக்கின்றது. படம் ஆரம்பிப்பதில் இருந்து முடியும் வரை இயக்குனர் சொல்ல வந்த செய்தியின் குறியீடாகவே இவர் பயணிக்கின்றார். கல்வி அமைப்பின் கோணல்பக்கங்களையும், ஓட்டைகளையும் தன் புத்திசாலித்தனமான செய்கைகளால் உணர்த்தும் போதும், முட்டாள் பட்டம் கட்டி ஓரம் கட்டினாலும் தன்னை நிரூபிக்கும் போதும் படம் பார்க்கும் போது ரசிக்க முடிகின்றதென்றால் படம் முடிந்ததும் உறைக்க வைக்கின்றது. Aal Izz Well என்று சொல்லிக் கொண்டே வாழ்க்கையை விளையாட்டாக எடுக்கும் இந்தப் பாத்திரத்திற்கும் பின்னும் ஒரு சோகம் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது என்பதை இறுதியில் காட்டும் வரை தெரியாத வகையில் நடிப்பதாகட்டும், தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் போது கொட்டும் மழையைக் கடந்து தன் முகத்தில் காட்டும் போதும் எந்தவிதமான ஹீரோயிச ஒளியையும் தன்னில் பாய்ச்சாதவாறு படத்தில் பயணிக்கும் சகபயணிகளோடு தானும் ஒருவராகப் பயணித்து நிறைவான தன் நடிப்பை வழங்கி நிற்கின்றார்.


மாதவனுக்கு தமிழ்ப்படங்களில் ஆட்டம் போட்டுக் காசு பண்ணுவதை விட ஹிந்தியில் இந்தப் படம் போலவும் Rang De Basanti போலவும் படம் பண்ணினால் காசு மட்டுமல்ல மாதவன் என்ற நடிகனின் இருப்பும் உலகிற்குத் தெரியவரும். ரஞ்சோ (அமீர்கான்)வின் செயற்பாட்டில் ஈர்க்கப்பட்டு அவனின் நண்பனாக மாறுவது, அவனுக்காகவே இறுதி வரை தோள் கொடுப்பது இவையெல்லாம் வெகு இயல்பாக வெளிப்படும் வேளை, கம்பஸ் இண்டர்வியூவைப் புறக்கணித்து நான் விரும்பிய புகைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நான் உயரவேண்டும், இன்சினியராக வந்தால் காசு நிறையும் ஆனால் நான் புகைப்படக் கலைஞராக வந்தால் என் மனசு நிறையும் என்று சொல்லியவாறே தன் தந்தையிடன் இறஞ்சியவாறே இவர் அழும் காட்சி, தம் தமிழ் சமூகத்துப் பெற்றோரின் கண்களையும் கசிய வைக்கும். 3 Idiots இன் துணைப்பாத்திரமான வரும் மாதவனின் பங்களிப்பு மாற்றுக் கலைஞனை நினைக்காத அளவுக்கு நேர்த்தியானது.


இவர்களோடு வரும் ஷர்மான் ஜோஷி, வழக்கமான லூசுத்தனமான சேஷ்டைகளும் இரட்டை அர்த்த ஜோக்குகளும் கொண்ட சினிமா பார்முலா இல்லாத இன்னொரு இயல்பான பாத்திரம். தன் வறிய குடும்பத்தைக் காப்பாற்றத் தன்னை இந்த வெற்றுக்கல்வி முறையில் மூழ்கிவிடலாமா அல்லது ரஞ்சோ (அமீர்கான்)வின் நட்பா என்று முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதியாகிப் பின்னர் கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முனைவதும் கூட நம் வாழ்வின் நிதர்சனமான பாத்திரங்களில் ஒன்றேன்.


சதா புத்தகப் பூச்சியாக வலம் வந்து, நானே முதலாம் இடம் பெறுவேன் என்ற வெறியோடு தன் சிந்தனா சக்தியை சில நூறு பக்கப் புத்தகங்களை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் சாத்தூர் ராமலிங்கம் என்ற பாத்திரத்தில் நடித்த ஓமி வைத்யா போன்ற நபர்கள் தமது பிள்ளைகளை வெருட்டி உருட்டி முதலாம் வாங்கில் உட்கார வைத்து டாக்டராகவோ இஞ்சியினராகவோ களிமண் பொம்மைகளாக மாற்றும் நமது சமுதாயத்துப் பெற்றோர்களின் நதிமூலமாக,


நடைமுறைக் கல்விமுறையில் இருக்கும் முரணை எல்லாம் பார்க்கக் கூடாது, வந்தோமா படித்தோமா பட்டம் பெற்றோமா என்று போய்க் கொண்டே இருக்க வேண்டும். எதிர்க்கேள்வி கேட்பவனுக்கொ,சுயமாகச் சிந்திப்பவனுக்கோ எல்லாம் இங்கே இடமில்லை என்ற ரீதியில் ஒரு சராசரி கல்லூரி முதல்வரின் பிரதிபிம்பமாக வரும் பொமான் இரானி உங்கள் கல்லூரிப் பருவத்து ஆசிரியரையோ முதல்வரையோ தானாகப் பொருத்திப் பார்க்க வைக்காவிட்டால் நீங்கள் அதிஷ்டசாலி என்றே அர்த்தம். இந்த நடிகர் பொமான் இரானியின் உடல் மொழியை வைத்தே ஒரு ஆய்வுப்பட்டம் சமர்ப்பிக்கலாம்

இப்படியான பாத்திரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் காணலாம் என்பது நிதர்சனமான வலி நிறைந்த உண்மை.


3 Idiots இந்தப் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி, ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்த கல்வி அமைப்பின் ஓட்டைகளை முன்னாபாய் எம்.பி.பி.எஸ் மூலம் காட்டியவர். இந்தப் படம் இந்த இயக்குனர் எவ்வளவு தூரம் தன்னுடைய சிந்தனையைச் சுதந்திரமான முறையில் திரையுலகின் முக்கிய ஆளுமைகளோடு கொண்டுவர முடிந்திருக்கின்றது என்பதைப் பலமாக நிரூபிக்கும் காட்சியமைப்புக்கள் படம் முழுதும் விரவிக்கிடக்கின்றன. கல்லூரி முதல்வரின் மகள் பிரசவ வேதனையால் துடிக்கும் போது வெள்ளக்காடாய் நிறைந்திருக்கும் வீதி தடைப்பட்டிருக்க, மூன்று முட்டாள் மாணவர்களின் அந்த நேரத்துச் சமயோசிதமான செயற்பாடுகள்தான் ஒரு வாழ்க்கையையே காப்பாற்றும் என்ற காட்சியில் சற்று மிகைப்படுத்தல் இருந்தாலும் அந்தக் காட்சியின் மூலம் அனுபவப்படிப்பே வாழ்க்கையைக் காப்பாற்றும், ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்னும் இயக்குனரின் முத்திரை பதிவாகி நிற்கின்றது. கடைசிக்காட்சியில் ராஞ்சோ என்ன ஆனான் என்ன எதிர்ப்பார்ப்போடு அவர்கள் பயணிக்கும் போது பரபரப்பு நம்மிலும் தொற்றிக் கொள்கின்றது. ராஞ்சோ தன் சிந்தனைகளை நிரூபித்தானா என்பதை யதார்த்த பூர்வமாகக் காட்டுவது இயக்குனரின் திறமைக்கு இன்னொரு சான்று.

தான் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுத்து வாழ முடியாத சூழல், குதிரை ஓடுதல் என்ற ஆள்மாறாட்டம் மூலம் கல்வித்துறையின் ஓட்டைகளைக் காட்டுவது, எதையும் நடைமுறை உலகோடு பொருந்திப் பார்த்து கல்வித்துறையில் சீர்திருத்தத்தை விரும்பாத இலாகா இவையெல்லாம் 3 idiots காட்டும் நிஜங்கள்.

தன் பிள்ளை டொக்டராக, இன்சினியராக வர வேண்டும் என்ற எமது சந்ததியின் சுய இச்சைகள் அடுத்த சந்ததிக்கும் நிதானமாகக் கையளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வியாதி இப்போது புலம்பெயர்ந்த நம் சமூகத்திலும் புலம்பெயராத சிந்தனையாக ஒவ்வொரு பெற்றோர் மனங்களிலும் ஆணிவேராக இருக்கின்றது. எமது சுய இச்சைகளுக்கும், கெளரவத்துக்கும், பெருமைக்குமான அடையாளங்களாக பிள்ளைகளைக் களிமண் பொம்மைகளாகச் செய்து அழகு பார்க்கின்றோம். ரியூசன், ரியூசனுக்கு இன்னொரு ரியூசன் என்றெல்லாம் ஒவ்வொரு வார இறுதிகளை நிரப்ப, கூடவே சங்கீதம், நடனம், கீபோர்ட், நீச்சல், ஓட்டம் என்று இன்னொரு பட்டியலும் இருக்கின்றது. வெளிநாட்டுக் கல்விச்சூழல் தான் விரும்பிய துறையில் தன்னை மேம்படுத்தவே, வளர்க்கவோ எந்த விதமான தடைகளையும் விதிக்காத நிலையில் புலம்பெயரா நம்மவர் சிந்தனை தான் இங்கே பெரும் மலையாக முன்னே நிற்கின்றது.

முன்னர் படித்து வியந்த, சிவசங்கரி எழுதிய “அப்பா” என்ற நூலை மீளவும் பிரித்துப் பார்க்கின்றேன். அந்த நூல் 3 idiots இல் வரும் ராஞ்சோ என்ற மாணவன் போல வாழ்ந்து காட்டிய ஒரு நிஜத்தின் கதை சொல்கின்றது. அவர் வேறுயாருமல்ல, கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு என்னும் பிறவி விஞ்ஞானி பற்றியது. கோயம்புத்தூரில் வாழ்ந்த ஜி.டி நாயுடு எப்படியெல்லாம் தன் சுய சிந்தனையை விசாலப்படுத்தி அனுபவபூர்வமான உண்மைகளோடு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை எல்லாம் உருவாக்கினார் என்பதை தமிழராகிய எம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? 1985 ஆம் வருஷம் “அப்பா” என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் “இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது?”
இந்த நூலை ஜி.டி.நாயுடுவோடு பழகவர்கள், சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருஷ முனைப்பில் எழுதிய சிவசங்கரி இப்படிச் சொல்கின்றார், “தொழிலதிபர், படிக்காத மேதை, உலகம் புகழும் விஞ்ஞானி என்று அவரைக் குறிப்பட்டவர்களில் பலரும் சின்னப் புன்னகையோடு eccentric மனிதர் என்றும் சொன்னது ஏன் என்று விடாமல் யோசனை பண்ணிய போது தவறு திரு.நாயுடு மேல் அல்ல: அவர் 30 வருஷங்கள் முன்னதாகப் பிறந்து விட்டது தான் குற்றம். Mr.Naidu was 30 year ahead of his-time என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்த நிறைவோடு புத்தகத்தை முடிக்கின்றேன். “அப்பா” ஓவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளின் பூஜை அறையில் கூட இருக்க வேண்டிய நூல்.

“என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்”

“எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி”

1991 ஆம் ஆண்டுகளில் ஒரு பொருளியல் மாணவனாக, யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் இருந்த பொருளியல் கல்லூரியின் ஒரு கிடுகுக் கொட்டிலுக்குள் மாணவர்களோடு மாணவர்களாகக் குழுமி இருந்த இருந்த எனக்கும் சேர்த்து பொருளியல் கற்பித்த வரதராஜன் மாஸ்டர் முதல் நாள் வகுப்பில் சொன்னவை அவை. அந்த முதல் நாள் வகுப்பையே கடைசி நாளாகக் கணித்து வேறு பொருளியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டவர்களுக்கும், வரதராஜன் மாஸ்டரின் வகுப்புக்கும் போய் இன்னொரு பொருளியல் ஆசிரியரைப் பரீட்சை நோக்கத்துக்காத் தேடிகொண்டோருக்கும் அந்த முதல் நாள் வரதராஜன் சேர் சொன்னது தான் தூண்டுகோலாக இருந்ததென்றால் கடைசிவரை வரதராஜன் மாஸ்டரோடு மட்டும் பயணப்பட்டவர்களில் நானும் சேர்ந்து கொண்டேன். எங்கள் வகுப்பு மட்டுமல்ல அதற்கு முன்பும் பின்பும் ஏன் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிடுகுக் கொட்டிலில் பாடம் நடத்தும் வரதராஜன் சேர் இதைத் தான் சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும்.

அன்று என் வகுப்பறையின் எங்கோ ஒரு மூலையில் இருந்து, தன் சுயத்தைத் தேடி எங்கோ போய்த் தொலைந்து காணாமல் போன யாரோ ஒரு சகபாடியைத் தேடுகின்றேன், ராஞ்ஜோவின் நண்பர்கள் போல…….

free as the wind was he
like a soaring kite was he
where did he go…lets find him
we were led by the path we took
while he carved a path of his own
stumbling, rising,care free walked he
we fretted about the morrow
hi simply reveled in today
living each moment to he fullest

where did he come from…..
he touched our hearts and vanished….
where did he go….let’s find him
in scorching sun,
he was like a patch of shade….
in an endless desert, like an oasis….
on a bruised heart,
like soothing balm was he
afraid, we stayed confined in the well,
fearless, he frolicked in the river
never hesitating to swim against the ride

he wandered lonesome a a cloud
…yet he was our dearest friend
where did he go… let’s find him