காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ

என்னதான் தொழில்நுட்ப மாயைகள் புதிது புதிதாய் வந்து விழுந்தாலும் வானொலி என்ற ஊடகம் எல்லாவற்றுக்கும் சளைக்காமல் நின்று பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. வானொலி கேட்பதில் உள்ள சுகம், ஏதாவது வேலையைப் பார்த்துக் கொண்டே அதுபாட்டி ஓடிக்கொண்டே இருக்கும். காதலா காதலா படத்தில் கமல் பாடுமாற் போல “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” என்ற இந்தச் சுகானுபவம் தொல்லைக்காட்சியில் கிட்டாது தானே. பிடித்தமான எழுத்தாளரின் நாவலொன்றைப் புரட்டிப்படிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்களை நாமே கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் சுகம் வானொலியில் ஏதோ ஒரு பாடலைக் கேட்கும் போது, அதுவும் பார்க்காத படமாக இருக்கும் பட்சத்தில் மனக்குதிரை அப்படியே ஒரு காட்சியோட்டத்தைப் பாடலோடு ஓட்ட ஆரம்பிக்கும். இந்தளவு தூரம் ஈடுபாட்டோடு கேட்கும் ஒரு பாடலை கண்ணுக்கு முன்னால் மரத்தை எழெட்டுத் தரம் சுத்தி தாய்லாந்திலோ அமெரிக்காவிலோ தாவிப் போகும் காட்சி அமைப்பில் பொருத்தினாலும் அவ்வளவு தூரம் இருக்காது. அது தான் வானொலியின் மகத்துவம். அதுவும் ஒரு தேர்ந்ததொரு அறிவிப்பாளர் கையில் நல்ல பாடல்கள் கிடைப்பது தேர்ந்தெடுத்த ஓவியன் கையில் கிட்டும் தூரிகை மாதிரி. பாடல்களை அறிவுக்கும் பாங்கும், எந்தப் பாடலை எந்த நேரம் கொடுக்க வேண்டும் என்பது கூட அறிவிப்பாளனுக்குப் புரியா விட்டால் அந்தப் பாவம் நேயர்களைத் பதம் பார்க்கும். எத்தனை
ஆயிரம் பாடல்களைச் சீடிக்களிலும் காஸெட்டுக்களிலும் நிரப்பியிருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் த்ரில்லாக வந்து பாயும் பாடலைக் கேட்கும் அனுபவமே தனிதான். பாடலை ஒலிபரப்பும் போது சட்டென்று வெட்டி விடுவது போலத் துண்டாடுவது செவிட்டில் பளாரென அறைவது போலத் துண்டாடுவதுடுவது உயிர்க்கொலைக்குச் சமானமானது என்று நினைப்பதுண்டு. அறிவிப்பாளர் கையில் இருக்கும் ஒலிக்கட்டுப்பாட்டுக் கருவியில் (control Panel) உள்ள ஒலிக்கட்டுப்பாட்டு முள்ளை மெல்ல மெல்ல மெதுவாகக் குறைத்து முடிக்கும் போது தான் அந்தப் பாடலை முழுமையாக ஒலிபரப்பாது விட்டதற்கானக் கொஞ்ச நஞ்சப் பாவமன்னிப்புக் கிடைப்பதற்குச் சமானமானது.

வானொலி கேட்கும் அனுபவம் என்பது தொட்டிலில் இருந்து என் சுடுகாடு வரை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும் போல. என் பதின்ம வயசுக்காலம் வரையான வானொலி கேட்பு அனுபவங்களை முன்னர் ஆகாச வாணியும் விவித் பாரதியும்….! என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது கட்ட அனுபவத்தில் நானும் ஒரு ஒலிபரப்பாளனாக, நிகழ்ச்சித்தயாரிப்பாளனாகவும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் கடந்த ஒலிபரப்பு அனுபவங்கள் சுகமும் சவாலும் நிறைந்த கலவையாகத் தான் பயணிக்கிறது. அது ஒருபுறமிருக்க, வானொலி நேயராகத் தொடரும் பயணத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தான் இங்கே சொல்ல வந்துள்ளேன். அதுதான் இணையவானொலிகள் என்றதொரு பரிமாணம்.

இணைய வானொலிப்பரப்பில் கனேடிய வானொலிகளில் இருந்து அவுஸ்திரேலிய வானொலிவரை அண்டமெங்கும் வியாபித்திருக்கும் வானொலிகள் இணைய ஊடகத்தைப் பயன்படுத்தித் தம் அடுத்த பரிமாணத்துக்கு வந்துவிட்டன. வானொலிகள் என்ற மட்டில் இல்லாது இணைத்துக்கான தனித்துவமான ஒலிபரப்புக்கள் என்ற ரீதியில் 24 மணி நேரப்பாடல் ஒலிபரப்புக்களும் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இணையத்தளத்தை விரித்து வைத்துவிட்டு அதில் இருக்கும் இணைய வானொலிக்கான சுட்டியைக் கிளிக்கி அங்கேயே கேட்கவேண்டிய நிர்ப்பந்தம். அதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் இலங்கையின் சக்தி எஃப் எம் போன்ற வானொலிகள் ஒலிபரப்பாகும் போது அறிவிப்பாளரும் , பாடல்களும் அடிக்கடி விக்கல் எடுத்தும் மெளனித்தும் பயணிக்கும் சீரற்ற சேவையாக இருக்கும். ஒருபாடல் விக்கி விக்கி பத்து நிமிடத்துக்கு மேலாகப் பயணிக்கும். அந்தக்காலமெல்லாம் இப்போது மலையேறியாச்சு. மேம்பட்ட ஒலித்தரத்தோடும் சீரான ஒலிபரப்பாகவும் இணைய வானொலிகள் மாறிவிட்ட அதே நே ரம் இன்னொரு தொழில் நுட்பத்தையும் கச்சிதமாகப் பயன்படுத்தி விட்டன. கம்பியூட்டருக்கு முன்னால் கொட்டாவி விட்டுக்கொண்டே குந்தி இருந்து பாட்டுக் கேட்க வேண்டுமா, இல்லவே இல்லை. கம்பியூட்டருக்கே வேலை கொடுக்காத கம்பியில்லாத் தொழில் நுட்பம் வந்து விட்டது. அது தான் இந்த wifi யுகத்தின் மகத்துவம். இன்று என் விட்டில் ஒரு Sagem ip radio இருக்கிறது. அந்த வானொலியை வீட்டில் எந்த மூலையில் வைத்தும் கம்பியூட்டரோடு அண்ட விடாமலும் கேட்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. எல்லா நாடுகளில் இருந்தும் இணையம் வழி ஒலிபரப்பாகும் வானொலிகளில் ஏறக்குறைய 99% வீதமானவை இந்த வானொலியில் கிட்டுகின்றன. விடுபட்ட வானொலிக்காரர் குறித்த wifi radio நிறுவனத்தின் இணையத்தளத்தை அணுகி வேண்டுகோள் வைத்தால் உடனேயே அந்த வானொலியையும் சேர்ப்பித்து விடுகிறார்கள். ஒரு ரிமோட் ஐ வைத்துக் கொண்டு கனடா, சிங்கை, இலங்கை என்று தாவும் வாய்ப்பை இந்த wifi radio கொடுத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். புதிதாக என்னென்ன வானொலிகள் சேர்ந்திருக்கின்றன என்பதை ஸ்கான் பண்ணி favourite இல் பொருத்தும் வாய்ப்பும் இதன் மூலம் கிட்டியிருக்கிறது.

சரி வீட்டுக்குள் வானொலி கேட்கும் அனுபவம் இன்னொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறதே அடுத்தது என்ன? றோட்டில் நடக்கும் போதும் ரயிலில் பயணிக்கும் போதும் கூட வானொலி கேட்க வகையுண்டா? என்ற நினைப்புக்கும் இன்பத் தேனாக வந்தது ஐபோனின் வரவு. ஏற்கனவே உள்ள செல்போன்களில் இணைய வானொலி என்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தாலும், ஐபோனின் வருகைக்குப் பின் பாட்காஸ்ட் என்ற தனி நபர்களின் ஒலிப்பகிர்வுகளோடு, இணைய வானொலிக்கான செயலிகளும் (applications) வந்திருக்கின்றன. iPhone Apps இல் இலவசமாக இறக்கக் கூடிய இந்த செயலிக்களில் Tandora , Minnal Radio , போன்ற வானொலித் திரட்டிகளில் இலங்கையின் சக்தி எஃப் எம், வெற்றி எஃப் எம் ஈறாக 24 தமிழ் வானொலிச் சேவைகள் கிட்டுகின்ற அதே நே ரத்தில் வானொலி நிலையங்கள் தமக்கான தனித்துவமான செயலிகளையும் உருவாக்கியிருக்கின்றன. அந்த வகையில் மலேசியாவின் பண்பலை வரிசையான THR ராகா THR Raaga , சிங்கப்பூர் ஒலி சார்ந்த வானொலிக் குடும்பம் சார்ந்த 13 வானொலிகளை இணைத்து MeRadio என்றும் வந்திருப்பதும் உண்மையிலேயே இதெல்லாம் கனவா நனவா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் பேசிக்கொண்டிருக்கும் அறிவிப்பாளரின் குரலில் ஐபோனின் வழியே காதுக்குள் கேட்டுக் கொண்டே சிட்னி ரயிலில் பயணிப்ப்போம் என்றெல்லாம் கனவு கண்டிருப்போமா என்ன?

இணைய வானொலிகளில் தமிழ்ச்சேவை செய்து வரும் வானொலிகள் பல இன்னும் இந்த செல்பேசியூடான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டவரை THR ராகாவின் ஒலிபரப்பின் ஒலித்துல்லியம் மகா அருமை. சிங்கப்பூர் வானொலியையும் முதலிடத்தில் சேர்த்துக் கொள்வேன் ஆனால் இடையிடையே வரும் மக்கரை சரிசெய்து கொண்டால்.

இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.

காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே… 😉

“இராவண்ணன்” படைத்த சுஜித் ஜி

“வான்மீகி வரைந்த இராமாயணத்தால்
ஆரியன் இராமன் ஆண்டவனானான்
அயலவன் வாலி குரங்கானான் – என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்துக்கு நான் இராவண்ணன்”

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர்களில் அடுத்த தலைமுறையினரில் கலை மீதான நேசம் கொண்டோர் குறும்பட முயற்சிகள், இசை, நடனம், திரைப்படம் என்று பல முயற்சிகளில் பாரம்பரியமான அணுகுமுறைகளில் இருந்து விலகி புதுவிதமான பரிமாணத்தோடு தம்மை அடையாளப்படுத்த முனைகின்றனர். இதன் வழி வெற்றியும் அடைகின்றார்கள். கடந்த ஆண்டு நான் வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட 1999 திரைப்படம் கூட புதுமையான கோணத்தில் சொல்ல வந்த கருத்தைக் காட்டும் திறமையை எவ்வளவு தூரம் தம் சினிமா வெளிப்பாடுகளில் நம்மவர்கள் வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்றதொரு உதாரண வெளிப்பாடாக அமைந்தது. அந்த வகையில் நீண்ட நாட்களாக அவதானித்து வரும் ஒரு கலைஞர் நண்பர் சுஜித் ஜி. பாடகராக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, நடிகராக என்று பன்முகம் கொண்டவர் இவர். அதிலும் குறிப்பாக ராப் இசைப்பாடல்களைப் பல வருஷங்களாகப் புலம் பெயர் சூழலில் இருந்தவாறே நம்மவரின் அனுபவ வெளிப்பாடுகளாகக் காட்டி வருகின்றார். இதுநாள் வரை சுஜித் ஜி வழங்கிய பாடல்கள் பலவற்றைக் கேட்டிருக்கின்றேன், அவற்றில் எல்லாம் மிகச்சிறந்த தரமும் உழைப்பும் நிரம்பியிருக்கும்.

கடந்த தைப்பொங்கல் தினமன்று தனது புதிய ஆல்பமான “இராவண்ணன்” என்ற இசைத்தொகுப்பை வெளியிட்ட அவரை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கின்றேன்.


Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்

வணக்கம் சுஜித்

வணக்கம் பிரபா

புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது தமிழ் மக்களிடையே பல்வேறு விதமான கலை வெளிப்பாடுகளை காட்டி தனித்துவமாக இருக்கும் எமது இளைய சமுதாயத்தினர் மத்தியிலே நீங்களும் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகர் இசையமைப்பாளர் அந்தவகையிலே உங்கள் இசைத்துறையின் ஆரம்பம் எப்படி இருந்தது?

உண்மையிலே நான் இந்த தொழில்நுட்ப ரீதியிலான இசையமைப்பாளன் என்றல்ல, ஆரம்ப காலத்திலே பாடல்களை எழுதிக்கொடுக்கின்ற பழக்கத்தை உடைய ஒரு ஆள். ஆனால் அப்படி எழுதிக்கொடுக்கப்பட்ட பாடல்கள் எதுவுமே இறுவட்டில் வராத பட்சத்தில் கொஞ்சம் விரக்தியடைந்து அதைவிட வேறு சினிமாப்பாடல்கள் சிலவற்றை கேட்டபோது இதைவிட நாம் எழுதலாமே ஆனால் ஏன் எங்களுடைய பாடல்கள் வெளிவருவதில்லை என்ற ஒரு ஆதங்கமும், நானே ஏதாவது செய்யவேண்டும் ஒரு கட்டாயத்திற்கு என்னை உட்படுத்தியது. அந்த ஒரு நேரத்திலே எனக்கு பாடல் படிக்க தெரியாது அதாவது சங்கீதம் சரியாக அதாவது சுருதியோடு பாடல் படிக்க தெரியாது என்ற காரணத்தினால் தான் தான் “ரப்” பகுதிக்கு போனால் நல்லம் எண்டும், ஆரம்பகாலத்திலே “ரப்” பாடல்களை நாங்கள் கேட்டு அதாவது சினிமாவிலே வந்த ஓரிரு “ரப்” பாடல்களை கேட்டு ஆசைப்பட்டபடியால் அந்த craze இலே வந்து பிறகு அப்படியே ரப்பராகவும் பின்னர் பல பல வேறு வேறு வடிவங்களிலேயும் அறியப்பட்டிருக்கிறேன்.

“ரப்” இசை வடிவம் என்பது தொண்ணூறுகளுக்கு பிறகுதான் எமது தாயகத்திலே இப்போது பரவலாக இசைத்தட்டுக்களாகவும் வெளிவருகின்றன. உங்களுடைய முயற்சியை பொறுத்தவரையில் நீங்கள் இந்த “ரப்” இசை வட்டுக்களை தாயகத்திலிருந்து வெளியேறி புலம்பெயர் வாழ்வில் தான் அதனை ஆரம்பித்திருந்தீர்களா?

ஆம் ஆம், எப்படியென்று சொன்னால் அன்று வந்த சினிமாவில் ஓரிரு பாடல்கள், அந்த பேட்டை ராப் என்கின்ற காதலனிலே ஒரு பாடல், ஜெண்டில்மென் இல் கிட்டதட்ட அந்த ரைப்பான சிக்குபுக்கு ரயிலே என்ற பாடல். என்று ஒரு சில பாடல்கள் இருந்தன. நான் அங்கு (தாயகத்தில்) இருக்கும் போது ஒரு இசையமைப்பாளனாக, அல்லது ஒரு மற்ற அதாவது மெட்டுக்களோடு எப்படிச்சொல்வது மெலடி ரைப் சோங் என்று சொல்வார்களே, மெட்டுக்களோடு இருக்கிற அந்த பாடல்களின் இசையமைப்பாளராக வரவேணும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இங்கு வந்து இந்த பிரச்சினைகள் காரணமாக அது பற்றிய பெரிய அளவான அறிவு இல்லாதபடியினால் இங்கே வந்து இப்படியான துறைக்குள் வரவேண்டியாதாப் போச்சு.

நீங்கள் அந்தவகையில் உங்களுடைய முதல் முயற்சியை எப்போது வெளியிட்டீர்கள்? அதைப்பற்றி சொல்லுங்களேன்.

2005ஆம் ஆண்டு சிங்கிள்ஷ் என்று ஒரு குறுவட்டை வெளியிட்டிருந்தேன். அதில் 14 பாடல்கள் உள்ளடங்கியிருந்தது. அதுவும் இப்படித்தன் வழமையாக நான் பாடல் எழுதிக்கொடுத்துக்கொண்டிருக்கிற சந்தோஷ் அவரிடம்தான் அந்த பாடலுக்கு உதவி செய்தார். முதல் பாடல் கொஞ்சம் நில் என்ற ஒரு பாடல். அந்த பாடலில் அனேகமாக இரண்டாவது பந்தியில் எண்டு நினைக்கிறேன். ஈழத்தில் பிறந்து இடர்கள் பட்டு வந்தேன், பல துன்பங்களை பற்றி சொல்லி இறுதியாக சந்தோஷோடு இசையமைத்துக்கொண்டு இருக்கிறேன் பாடல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறேன் என்று அந்த பாடல்களில் எனது சுயவிளக்கம் ஒன்று சொல்லப்பட்டிருக்கும் கொஞ்சம் நில் என்ற சிங்கிள்ஸ் என்ற பாடலில். அதுதான் எனது முதல் பாடல்.

அதாவது எண்பதுகளின் இறுதிப்பகுதிகளிலே பூபாளம் என்கின்ற தமிழ் ரெகே லண்டனிலே வெளியிடப்பட்டு புலம்பெயர் இளைஞர்களுடைய மனநிலை அவர்களுடைய பாங்கைவைத்து பாடல்கள் வெளிவந்திருந்தன. உங்களுடைய பாடல்களை பொறுத்தவரையில் உங்களுடைய ஆரம்ப முயற்ச்சிக்கு எப்படியான ஆதரவை வழங்கியிருந்தார்கள்?

ஆரம்பத்தில் எனக்கு ஆதரவு இருக்கவில்லை. எதிர்த்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் பூபாளம் என்பது ஒரு வித்தியாசமான தமிழ் ரெகெ என்று வரும்போதே அது ஒரு நகைச்சுவையாகத்தான் பாடல்கள் அமைந்திருந்தது. ஆச்சி ஓடிவாருங்கோ அவனில சாப்பிட்டு நாக்கு செத்து போயிட்டுது அந்தமாதிரியானதுவும் சுதுமலைப்பெடியன் சுதியான மாப்பிள்ளை இன்னொரு பிரச்சினை தலையில முடியில்ல” இப்படி நகைச்சுவையாக இருந்தபடியால் இயல்பாக மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “எண்ட மிஸ்ஸிஸ் வேலைக்கு போறா காசு கனக்க ஏர்ன் பண்ணி வாறா” இப்படியெல்லம் அதில் வரும். நான் வந்த காலத்தில “ரப்” என்பது மேற்கில ஆகவும் மோசமாக இருந்த காலம். Gangster rap, rugs, Girls இந்தமாதிரியான தலைப்புகளுக்குள் அவர்களுடைய பாடல்கள் இருக்கும் அப்படியானதைத்தான் கூட இளைஞர்கள் விரும்பினார்கள். அப்ப நாங்களும் இதுக்குள்ள ரப் எண்டு வந்தவுடன் நாங்களும் இந்தமாதிரி கறுப்பு இன மக்கள் போல கையை அசைத்துக்கொண்டு தொடங்கப்போகிறோம் அல்லது தேவையில்லாத ஒரு பிரச்சினையை எங்கட சமுதாயத்திற்குள் ஏற்படுத்தப்போகிறோம் என்பது ஒருபக்கம் அதைவிட எங்களுக்கு சினிமாவைத்தவிர எங்களுக்கு வேறு ஒண்டுமே தெரியாது என்கிற படியால் அதாவது ஈழத்தமிழர்களுக்கு எல்லாம் நாங்கள் இந்தியாவில் இருந்து அதாவது தமிழ்நாட்டில் இருந்து கலை எண்டு வருகின்ற போது பாரிய அளவில் தமிழ்நாட்டை நம்பி இருக்கிறபடியினால் இது ஒரு வேறு விதமாக அவர்களுக்கு இருந்தது. சொல்லுவார்கள் “Fear to the unknown” அதாவது தெரியாத ஒண்டுக்காக பயந்துகொண்டுப்போம் எண்டு. இது என்ன புதுசா ஒண்டு வந்திருக்கு, இவன் என்ன விசரன் மாதிரி செய்யிறான் எண்டு நேரடியாகவே கனபேர் இதை எனக்கு எதிர்த்தார்கள் ஏன் இப்பவும் சிலர் என்னுடைய சில விடுதலைக்கு சம்பந்தமான பாடல்களை பார்க்கிறபோது அவர்கள் அதை என்ன இது இப்படியெல்லாம் கிட்டத்தட்ட அவமானப்படுத்து கிறார்கள் என்கிற மாதிரியான போக்கு சிலருக்கு இன்னும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் அது பயங்கரமாக இருந்தது. பிறகு அது மாறிவிட்டது. இப்ப சிறிய அளவிலான ஆக்கள் அப்படியான ஏண்ணத்தில் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்படியான இசை வடிவத்திற்கு எமது பிரச்சினையை கலந்து கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்படி உதித்தது? அதாவது வித்தியாசமாக கொடுக்கும் போது ஒரு கவனத்தை ஈர்க்கும் என்கின்ற காரணத்தினாலா?

நான் கவனத்தை ஈர்க்கும் எண்டு என்னுடைய பாடல்களை செய்யவில்லை. ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகையிலே நான் ஆசிரியர் குழுவிலே இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு பத்திரிகையாளனாக. கனபேருக்கு நான் என்ன பெயரில் எழுதினேன் எண்டு தெரியாது. நான் சொல்வதில்லை. கொஞ்சம் பிரச்சினைக்குரிய விசயங்களை எழுதிக்கொண்டிருப்பதால் அதாவது இங்கத்தைய குழு மோதல்கள் பற்றியெல்லம் எழுதியிருந்தேன். அதைவிட சமூக அக்கறை கொண்ட பல விசயங்களை எழுதிக்கொண்டிருப்பேன். நாங்கள் இங்கே வந்து தெடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். பிள்ளைகளை பார்க்கமாட்டோம் பிள்ளைகளுக்கு காசு மட்டும் கொடுத்து நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் எண்டு நினைப்போம் பிள்ளைகளுக்கான நேரங்கள் இருப்பதில்லை அதாவது quality of time, quantity of time. எண்டு சொல்ல்வார்கள். அதாவது தரமான நேரமா அல்லது பெரிய அளவிலான நேரமா? எண்டு அப்படி பல விசயங்களை நான் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போ அப்படி எழுதிக்கொண்டிருந்த எனக்கு இங்காலுப்பக்கம் பாடல்களை எழுதிக்கொண்டு திடீரெண்டு ரப் எண்டு வரும் போது இந்த விசயத்தை நான் ரப் மூலமாக அதாவது பாடல்களுக்கூடாக சொல்ல முயன்றேன். அதற்கு பிறகு அந்த பகுதியில் இருந்து விலகி வருகின்ற நேரம் வரும் போது அங்கு செய்த அவ்வளவு வேலையையும் இன்று பாடல்களுக்கூடாக செய்துவருகிறேன். அவ்வளவுதான் மற்றம்படி கவன ஈர்ப்பு எண்டு இல்லை. ஏனென்றால் இராவணனிலே கோழை என்றோரு பாடல் வருகிறது. அந்த பாடல் வந்து பெண்களை பற்றி பிழையாக பேசி சந்தோசப்படுகிற அல்லது தாங்கள் வெற்றி கொண்டவர்களாக நினைத்துக்கொள்கிற ஆண்களை பற்றிய பாடல். அதாவது ஒருவர் என்னிடம் கேட்டார் பொம்பிளைப்பிள்ளைகளை ராகெத் பண்ணி அவர்களிடம் நல்ல பெயர் எடுக்கத்தான் இப்படி பாட்டு வச்சிருக்கிறாய் எண்டு. அதே அல்பத்திலே (இராவணன்) கடவுள் என்றொரு பாடல் இருக்கிறது. அந்தப்பாடலில் நான் சொல்கிறேன் அன்புதான் கடவுள் என்று. நீ கேட்டதெல்லம் கிடைக்காது, உன்ர கடவுள் முழுவதும் குடுக்காது, பணத்தை தெய்வம் மதிக்காதே, உன் பகட்டும் அதற்கு பிடிக்காதே என்று நேரிலே அடிப்பன். கடவுளை கூட நம்பிறவர்கள் ஆண்களை விட பெண்கள். கோயில் குளம் விரதம் எல்லம் பிடிப்பவர்கள் பெண்கள்தான். அனால் அவர்களுக்கு இந்த பாடல்களை கேட்கும் போது கொஞ்சம் கோவமாக இருக்கலாம் சில நேரங்களில். அதிலே சில வசனங்கள் வரும். ஐஸ் வைக்கிறார் தீபம் காட்டி என்று. அதாவது எங்களுக்கு உண்மையிலே ஒரு விசயம் கிடைக்க வேணும் எண்டு ஒரு காரணத்திற்காக கிட்டத்தட்ட டீல் மேக்கிங் மாதிரித்தான். நான் விரதம் பிடிப்பேன் நீ இதைச்செய். நான் விரதம் பிடிப்பேன் நீ செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் விரதம் பிடிக்கிறேன் என்கிறது வேற, அவர ஆமி விட்டால் நான் விரதம் பிடிப்பேன். பிரச்சினையில இருந்து வெளியில வந்தா நான் விரதம் பிடிப்பேன். டீலிலதான் போகிறது எல்லாம். அவையப்பற்றி எழுதியிருப்பன். கவனைஈர்ப்பு எண்டு சொல்லி பிரச்சினையான கவனைஈர்ப்பு அது இப்படியான விசயத்தை சொல்லுவது. கவனைஈர்ப்பு என்றதற்கு அப்பால சமுதாய அக்கறை ஒன்று இருக்க வேண்டும் என்பது எனது நேக்கமாக இருக்கிறது.

இப்போது நீங்கள் இராவண்ணன் என்றொரு இசைவட்டை நீங்கள் வெளியிட இருக்கிறீர்கள் அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

வெளியிட்டுவிட்டேன். தைத்திருநாளில்த்தான் இதனை வெளியிடப்பட்டது. இளையத்திற்கூடாகத்தான் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. எங்களுடைய இறுவெட்டை வெளியிடு விநியோகம் செய்யும் அளவுக்கு நாங்கள் இன்னும் வளரவில்லை. அதாவது இந்திய சினிமாப்பாடல்கள் என்று சொன்னால் இயல்பாகவே எல்லோருக்கும் தெரியும் எப்படியோ ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு மேலே இருக்கும் என்று. ஆனால் எங்களுடைய பாடல்கள் என்கின்ற போது அப்படியிருக்குமா என்கின்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. அந்தளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறோம். ஐந்தாறுபேர் அல்லது 20 பேர் இருக்கலாம் தரமான ஆக்கள் எண்டு. அல்லது பிரச்சினை இல்லாத இவர்கள் நம்பி வாங்கலாம் என்று இருந்தாலும் அது எத்தனை பேருக்கு தெரியும் எண்டு தெரியாது. என்னை தெரிந்தவர்களுக்கு பிரச்சினையில்லை, சிலபேர் என்னுடைய facebook page இலே எழுதுகிறார்கள். முதல் தடவையாக நான் பாடல் கேட்காமலேயே காசு குடுத்து வாங்குகின்ற முதல் அல்பம் இதுதான் எண்டு. அதற்கு காரணம் அவர்கள் என்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கை. அதால்தான் நாங்கள் இணையதளத்தின் ஊடாக முதலில் விற்பனை செய்கிறோம். சீடி என்பது இங்கு அதாவது எங்களுடைய பிரதேசங்களான லண்டனை சுற்றி ஏதாவது செய்யலாம். வெளியில் செய்வது என்பது கஷ்டமான வேலை. அதேவேளை கடையில் குடுத்தால் அப்படியே இருக்கும். வேற்று அல்லது வெள்ளைக்காரர்களைப்போல இந்த புரோமோஷன் மாக்கட்டிங் என்று பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது. அந்தளவிற்கு நாங்கள் இன்னும் வளரவில்லை. இதைவிட அதில் (இராவணன்) 15 பாடல்கள் இருக்கிறது. அதில் இராவணன் வரலாற்று பாடல் என்று சொல்வதா அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. கொமர்சியல் பாடல் இல்லை. அதாவது ஜனரஞ்சக்அமான பாடல் இல்லை. அது கிட்டத்தட்ட ஆரிய தமிழ் சம்பந்தமான பாடலாகத்தான் இருக்கும். அதாவது இராவண்ணன் என்ற பெயரை நான் வைக்கும் போதே சிலர் கேட்டார்கள், ஏன் இராவணன் எண்டு பெயர் வைக்கின்றீர்கள் எண்டு. முதலில ராவணன் எண்டு வைக்கேக்க அதற்கிடையில் மணிரத்தினத்தின் படம் வந்திட்டுது ராவணன் எண்டு. அட என்ன இந்தஆள் இப்படிச்செய்திட்டுது எண்டு ஏனெண்டா இந்த ப்ரெஜெக்ட் தொடங்கி 2 வருடங்களுக்கு மேலே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர். அப்ப இராவணன் எண்டு வைக்கவும் எனக்கு விருப்பமில்லை. சிலர் இராமாயணம் எண்டு இருக்கிறதால் தானே இராவணன் எண்டு பெயர் வைக்கிறாய் எண்டு. அதால என்ன செய்யலாம் எண்டு கதைத்துகொண்டிக்கும் போது ஒருஆள் சொன்னர் இராவண்ணன் எண்டு வைக்கலாம் ஏனெண்டா கறுப்பு ஆக்கள்தான் தமிழர்கள் திராவிடர்கள். சில இடங்களில் அப்படியான பெயரும் சில இடங்களில் பயன்பட்டிருக்கு எண்டு சொன்னார். அப்ப நான் அது ஒரு நல்ல விசயம் எண்டு “இராவண்ணன்” எண்டு பெயரை வைத்துதேன். அந்த பாடலும் ஆரியத்திட்டத்திற்கு அடிக்கணும் ஆப்பு, செந்தமிழ் வீரம் நீ மறப்பது தப்பு எண்டு போய்க்கொண்டிருக்கும். அதைவிட தைத்திருநாள் அதை வெளியிடவேண்டும் என்றும் ஏனெனில் தமிழர் திருநாள் ஆரம்பத்திற்கு ஏற்றது. ஏனெனில் இராவணனை நான் ஒரு கதாநாயகனாக பார்க்கிறேன். இவ்வளவு நாளாக இராமாயணத்திலே இராவணனை கூடாதவனாக நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோம். இலக்கியத்திலேயும் இராவணனை கெட்டவனாகத்தான் சொல்லித்தந்திருக்கிறார்கள். அவன் பக்க நியாயத்தை சொல்லதில்லை. ஈழத்தமிழர்களாகிய நாங்களே இராவணனை பிழையாகத்தான் பார்க்கிறோம். ஆனால் பாரதிதாசன் அங்கிருந்தே வீணை வேந்தன், அன்று அந்த லங்கையை ஆண்ட மறத்தமிழன் எல்லா திசைகளிலும் புகழ் கொண்டேன் என்று அவரே படித்திருக்கிறார். ஆரம்பத்தில் எனக்கு இந்த இராவணன் பிரச்சினை வந்தது ஒரு தீபாவளியில்தான். ஒரு இந்திய சகோதரன் என்னிடம் கேட்டர், ஏன் நீங்கள் தீபாவளியை கொண்டாடுகிறீர்கள் எண்டு. நான் அதுக்கு நரகாசூரர் விளக்கம் எல்லாம் சொல்லும் போது எனக்கே கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது. அந்த கதையை சொல்லும் போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது எங்கட கதை இப்படி இருக்குது எண்டு. ஆனால் ஆவர் அதனை சட்டை செய்யவில்லை. அவர் இவன் ஏதொ கதைக்கிறான் என சிரித்துவிட்டு போய்விட்டார். எனக்கு அவனில ஒரு சந்தேகம், இவன் ஏன் இதை என்னிடம் கேட்டவன் எண்டுட்டு கூகிள் பண்ணி பார்க்கும் போது ஒரு இடத்தில் ஒரு படம் ஒன்று அதாவது தீபவளிக்கு அவர்கள் ஒரு பொம்மை ஒன்றை வைத்து எரிக்கிறார்கள். அந்த பொம்மைக்கு பத்து தலைகள் இருக்கிறது. அதாவது அவர்கள் தீபாவளியை இராவணனை கொளுத்தித்தான் கொண்டாடுகிறார்கள். நான் நினைக்கிறேன் ஹேராம் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும் எண்டு நினைக்கிறேன். எங்களுடைய ஆக்கள் இப்பவெல்லம் ஹிந்தி பாடல்களை கேட்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இங்கி ஆங்கிலப்பாடல்களை கேட்கிறவர்கள் அடுத்து ஹிந்திப்பாடல்களை கேட்டால் அது கொஞ்சம் தரமானதாக நினைக்கிறார்கள். கடைசியில அதுக்குள்ளாலையும் இராவணன் கெட்டவனாகி விடுவான் என்பதற்காகத்தான் இராவண்ணான் என பெயர் வைத்தது. பிறகு இராவணனுக்கு ஒரு பாட்டும் வைத்து அதை விட சமூக அக்கறை எண்டு சொல்லி காசு கடவுள் என்னை மறந்து கலை என கொஞ்சப்பாடல்கள் இந்த அல்பத்திலே இருக்கிறது. அதைவிட இரண்டு மூன்று காதல் பாடல்கள் இருக்கின்றன.

இந்த இசைத்தட்டை (இராவண்ணன்) வாங்க விரும்பிகிறவர்கள் எந்த இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

அவர்கள் என்னுடைய இணையத்தளமான http://sujeethg.me/ செல்லலாம். paypal மூலமாகத்தான் வாங்கக்கூடிய மாதிரியாகத்தான் தற்போது இருக்கிறது. 3.99 பவுண்டுகளுக்கு விற்பனையாகின்றது.

இப்படியான முயற்சிக்கு நீங்கள் அதிகம் செலவளித்திருப்பீர்கள் ஆனால் இந்த இசைத்தட்டுக்கு வைத்திருக்கின்ற விலை என்பது குறைவாகத்தான் இருக்கிறது இல்லையா?

ஆமாம், குறைவுதான் கிட்டத்தட்ட ஆயிரம் பவுண்சுகளுக்கு மேலே இதற்கு செலவளித்திருக்கிறேன். ஆனால் நான் எங்களுடைய ஆக்களுக்கு free கேட்டு பழகியபடியால் ( சிரிக்கிறார்). அதனால் ஆன ஆக்களிடம் போய் சேரவேண்டும் என் நினைக்கிறேன். சில விசயங்கள் அதாவது இராவண்ணன் பாடல்கள் போய்சேர்ந்தால் இது ஒரு வித்திஉஆசமான எண்ணத்தை உருவாக்கும் கடவுள் என்ற பாடல் ஒரு வித்தியாசமான எண்ணத்தை உருவாக்கும். கொஞ்சம் கூடிய விலைக்கு விற்றால் நிறைய பேருக்கு போய்ச்சேராது. கருத்து போய் சேரவேண்டும். எழுத்தளனாக இருந்தாலோ அல்லது சாதாரணமாக எந்த துறையில் இருப்பவருக்கும் அவர் சொல்லுகிற விடயம் மக்களிடையே போய் சேரவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு நான் அதிகளவான விலையை பொட்டுவிட்டால் மக்களுக்கிடையே போகாது. அதானால் தான் டொனேஷன் என்று பெயர் இட்டுள்ளேன், அதாவது அவர்களே தீர்மானிக்கட்டும் என்று. பிறகு இங்கு ஒரு பிரச்சினை வந்தது இங்கு (இலண்டன்) நாங்கள் சிடி விற்க இயலாமல் போய்விடும். சிலர் சீடி கேட்பார்கள் அதனால் சீடி விக்கிற கடையில கொடுத்து விட்டு ஷீரோக்கி கொடுத்தால் 1பி யையும் கொடுத்தி பாட்டு எடுத்துட்டு போவாங்கள் சீடி அப்படியே அதிலேயே இருக்கும். அப்படியான பிரச்சினை வந்தது. அப்போது நான் நினைத்தேன் 4 பவுண்ஸ்சுக்கு கொடுப்போம் எண்டு. சிலர் 5 பவுண்ஸ்சுக்கு கொடுப்போம் எண்டு சொன்னார்கள் எனக்கு அதில அவ்வள்வு உடன்பாடு இருக்கவில்லை. 4 பவுண்ஸ் காணும் என நினைத்தென். இவ்வளவு காலம் வெளியிட்ட எந்த சீடியாலையும் எனக்கு வருமானம் வரவில்லை. போட்ட காசு எப்பவுமே வந்ததில்லை. இந்த பக்கத்தை காசு அல்லௌ பொருளாதாரத்துக்கன பக்கமாக நான் பாக்கவில்லை. எனது பொருளாதாரம் எனது வேலை எண்டு வேற பக்கமாக வைத்துக்கொள்வோம். இதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டேன். இதனால் எனக்கு இலகுவாக எதை எடுத்தலும் செய்யலாம். காசு எண்டு எடுத்தால் நான் ஜனரஞ்சகமான பாடல்களை உதாரணமாக அடிமேல் அடி அல்பத்தில் வருகின்ற Tooting பக்கம் மாதிரி பத்து பாடல்களை அடித்து விட்டால் நானும் இளைஞர்கள் மத்தியில் பயங்கரமான பிரபல்யம் அடைந்துவிடுவேன் காசும் எனக்கு பயங்கரமாக வரும். அது எனக்கு நோக்கமாக இல்லை. அதனால் தான் ஆக்களிடம் சேரவேண்டும். சொல்கின்ற விசயங்கள் அவர்களிடம் போய் சேர வேண்டும். ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வேண்டும். நான் சிந்திப்பதை விட அவர்கள் வேறு வேறு கோணத்தில் எல்லம் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அதனால் இதை ஒரு சமூக எண்ணமாகத்தான் நான் பார்க்கிறேன்.

இதுவரை உங்களுடை எத்தனை அல்பங்களை வெளியிட்டிருக்கிறீர்கள்?

2005இல் சிங்கிள்ஸ், 2007இல் அடிமேல் அடி, 2010இல் அணையாது என்று சொல்லி ஏற்கனவே வெளியிட்ட எமது விடுதலை சம்பந்தப்பட்ட 12 பாடலகளை எடுத்து ஒரு சீடியாக, முள்ளிவாய்க்காலில் இருக்கின்ற மக்களுக்காக என்று இங்கு இருக்கின்ற தமிழ் அமைப்புகளிடம் கொடுத்திருந்தேன். அதைவிட இப்போது இராவண்ணன்.

எங்களுடைய மக்களுக்கு உங்களுடைய இப்படியான இசையார்வத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

(யோசிக்கின்றார்) நான் என்னுடைய அனுபத்தைதான் சொல்ல முடியும். அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற அளவுக்கு நான் இல்லை. அதாவது நான் செய்கின்ற விடயங்கள் என்னப்பொறுத்த வரையில் ஒரு alternative அதாவது ஒரு மாற்றான கலைஞனாகத்தான் பார்க்கிறேன். அதாவது சினிமாவாக அல்லது ஜனரஞ்சகமான என்று சொல்லிக்கொண்டு அல்லது consumer culture என்று சொல்வார்கள் அதாவது நுகர்வேர் கலாச்சாரம். விற்கிறதுக்கு ஏற்றமாதிரியான பொருட்களை செய்யாமல் அதற்கு எதிராக நல்ல பொருட்களை செய்ய வேண்டும். பயனுள்ள விடயங்கள்ஐ செய்ய வேண்டும் என நினைகிற மனிதன். அது சம்மந்தமாகத்தான் நான் இதிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அப்படியானவர்கள் தான் எங்களுடைய சமுதாயத்திற்கு தேவை என்று நினைக்கிறேன். விற்பதற்கும் அல்லது ஜனரஞ்சகமக பாடல்களை அடிப்பதற்கு எல்லோராலும் முடியும். எப்பவுமே செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எவ்வளவோ பேருக்கு திறமை இருந்தும் சமூக அக்கறை சமூகத்தை பற்றிய விளக்கங்கள் இருந்தும் அவர்கள் தங்களுடைய புலமையை காட்டிக்கொள்வதற்காகத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் பேசும் போது சொல்வார்கள் அப்படி பாடல்களை அடித்துவிட்டால் யாருமே கேட்கமாட்டர்கள் என்று. அதையும் ஒரு பக்கத்தில் செய்துகொண்டிருந்தால் சமூகம் சம்பந்தமானதும் செய்யவேண்டும். ஏனென்றால் என்றில்லாமல் சமூக அளவிலும் நாங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றும் ஒரளவுக்கு நாங்கள் வளர வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். ஏனென்றால் எங்களுடைய பிரச்சினை என்பது எங்களை பல விடயங்களை விட்டு விட்டு தனியே ஒரு பக்கத்திற்கு எங்களை கொண்டு போய் விட்டது. எங்களுடைய அவதானம் முழுக்க இந்த போராட்டதின் மேல் இருந்த படியினால், ஆனால் அது முக்கியம் அதில் எந்த கேள்விக்குமே இடம் இல்லை. ஆனால் மற்ற பக்கத்தில் நாம் வளரவில்லை. எங்களது மனத்தை அல்லது ஆன்மானை பல விடயங்களில் எமது சிந்தனை ஓட்டங்களை செலுத்தினால் எங்களுடய போரட்டம் பாரிய பார்வையாக இருக்கும். தனியே ஒன்றில் என்று இல்லாமல். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இப்படியேல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

நிச்சயமாக அந்த வகையிலே சுஜித் உங்களுடைய இந்த புது முயற்ச்சி இராவண்ணன் என்ற இசைவட்டு நிச்சயமாக இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் எமது அவா. அதுமட்டுமன்றி தொடர்ந்து வரும் உங்களுடைய படைப்புக்களை எமது மக்களால் போற்றப்படவேண்டும் அவற்றை விலை கொடுத்து வாங்கி உங்களுடைய உழைப்புக்கு ஒரு மதிப்பை கொடுக்க வேண்டும் என்பது தான் எமது அவா. அதற்கு எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

நண்றி பிரபா. எனக்கு இந்த வாய்ப்பை தந்தமைக்கும் என்னைமாதிரியான இளைஞர்களையும் எங்களுடைய கலைஞர்களையும் வளர்க்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு நன்றி, உங்கள் வானொலிக்கும் நன்றி. கேட்டுக்கொண்டிருக்கும் அனைத்து நேயர்களுக்கும் பிந்திய தைத்திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்

மிக்க நன்றி சுஜித்

பேட்டியை எழுத்துருவில் தொகுக்க உதவிய நண்பர் இரா.பிரஜீவ் இற்கு என் அன்பான நன்றிகள்நன்றிகள்

சுஜித் ஜி இன் சில படைப்புக்கள்

இராவண்ணன் புதிய ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல் வீடியோவாக

பாகை ஆல்பம்

விடுதலை பாடல்

வெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்

பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம்.
“தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு,பொஙகல்திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும், இது சித்திர வகுப்பு. இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும்.
தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும்.

பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத்து பழை ரின்பால் பேணியை அவற்றின் மேல் வைத்து விட்டு குருமணலை அந்தப் பேணியில் நிறைத்துவிட்டு பொங்கலை வேகவைப்பது போல கல் இடுக்குகளில் வாய் வைத்து ஊதுவது போலப் பாவனை செய்வோம். இதுதான் தைப்பொங்கல் விளையாட்டு.

என்ர அம்மாவும் சீனிபுளியடியில ரீச்சரா இருந்தவ. பள்ளிக்கூடம் முடிஞ்சு எங்கடவீட்டுக்கு அயலில் இருக்கும் பிள்ளையளையும் என்னையும் கூட்டிக்கொண்டு வீடுதிரும்புவது அவரின்ர வழக்கம். கிட்டத்தட்ட முப்பது நிமிட நடைபயணம்.
விசுக்கு விசுக்கெண்டு அம்மாவும் மற்ற ரீச்சர்மாரும் கதைச்சுக்கொண்டு நடந்துகொண்டு போகவும் பின்னால் நானும் கூட்டாளிமாரும் கே கே எஸ் றோட்டின்ர ரண்டு பக்கமும் விடுப்பு பார்த்துகொண்டே போவோம். தைப்பொங்கல் சீசனில கடைநெடுக மண் பானையளும் அலுமினியப் பாத்திரங்களும் அடுக்கிவச்சிருக்கும்.
கோபால் மாமாவின் கடைப்பக்கம் நெருங்கும் போது எங்கட கண்கள் தானா விரியும்.
ஊரில் இருக்கின்ற கடையளுக்க அவற்ற கடைதான் பென்னான் பெரியது, புதுக்கடையும் கூட.
ஒரு பக்கம் கரும்புக்கட்டுகள், இன்னொரு பக்கம் மண் மற்றும் அலுமினியப்பாத்திரங்கள், ஓலையால் செய்த கொட்டப் பெட்டிகள் நிறைஞ்சிருக்கும்.

ஆனா என்ர கண் போறது வேற இடத்தில,

வட்டப்பெட்டி, சரவெடி, மத்தாப்பு, பூந்திரி (கை மத்தாப்பு),ஈக்கில் வாணம் (ஈர்க்கு வாணம்), அட்டை வாணம் (சக்கர வாணம்), வெடிப்புத்தகம் என்று சம்பியன், ஜம்போ, யானை, அலுமான் (ஹனுமான் வெடியை இப்பிடித்தான் அழைப்போம்) என வகை வகையான தயாரிப்புகளில கலர் கலரா ஒருபக்கம் குவிஞ்சிருக்கும். கோபால் மாமா ” எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போ” என்று சொல்லுவது போல ஒரு பிரமை வரும் அந்த நேரத்தில.
அவரின் கடை வரும்போது நடைவேகம் தானாகக் குறைந்து விடுப்புப் பார்க்கும் எங்களை
” கெதியா வாங்கோ பிள்ளையள்” என்று உறுக்கல் கொடுத்துவிட்டு அம்மா எட்டி நடக்கும் போது
“என்ன தங்கச்சி, பொங்கலுக்கு ஒண்டும் வாங்கேல்லையே” எண்டு கடைக்குள்ள இருந்து குரல் கொடுப்பார் கோபால் மாமா.
” இல்லையண்ணை, பிறகு உவர அனுப்பிவிடுகிறன்” என்று அம்மா சொன்னாலும் அவர் விடமாட்டார்.

” சாமான்கள் தீரமுன் கொண்டுபோ பிள்ளை” எண்டு சொல்லிப் பார்சல் போட ஆரம்பித்துவிடுவார்.
என்ர கண் பூந்திரிப்பக்கம் போவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு இரண்டு பக்கற் சம்பியன் பூந்திரிப் பெட்டியையும் பார்சலில் போடுவார். மணிபேர்சைத் திறந்து கொண்டிருக்கும் அம்மாவின் கையைச் சுறண்டி அட்டை வாணம் பக்கம் காட்டுவேன். யாரும் பார்க்காதவாறு என்ர கையில ஒரு கிள்ளுக்கொடுத்து விட்டு “பேசாம இரு அப்பா வாங்கிக்கொண்டு வருவார்” என்று சன்னமாகச் சொல்லிவிட்டுக் கடையிலிருந்து நகருவார்.

பொங்கலுக்கு முதல் நாள் அப்பா தாவடிசுந்தரலிங்கம் கடையிலிருந்து ஒரு சம்பியன் வட்டப் பெட்டி வெடியும் அஞ்சாறு அட்டை வாணமும், ரண்டு பூந்திரிப் பக்கற்ரும் வாங்கிவருவார்.
அண்ணனுக்குத் தான் வெடிப்பெட்டி. நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க அலுமான், சம்பியன் வெடியளத் தொடவே பயம். (பின்னாளில ஆமியின்ர ஷெல், குண்டுகளுக்குப் பிறகு பழகிபோச்சு)
யானைப் படம் போட்ட வெடியளும் உண்டு. அந்த் வெடிகளில ஒரு பக்கற்றில அம்பது வெடி இருந்தால் பத்து வெடி தேர்றதே அபூர்வம். யானை வெடிகள் பெரும்பாலும் புடுக் எண்ட சத்ததோட நூந்து போகும்.
வெடிக்காத அந்த வெடியளை எடுத்து அவற்றின் கழுத்தை நெரித்திருக்கும் நூல்கட்டை அவிட்டுவிட்டு நூந்துபோன திரியை மேல எழுப்பீட்டு திரியில நெருப்ப வைத்தால் மத்தாப்பு போல அழகாகச் சீறிவிட்டு தன்ர சாவைத்தழுவிக்கொள்ளும்.
ஒரு பத்துப் பதினஞ்சு வயசுப் பொம்பிளைப் பிள்ளையின்ர குடும்பி போலச் சணல் கயிறைத் திரித்து இலேசாகத் தணல் வைத்தால் கனநேரம் அது அணையாமல் இருக்கும். அதுதான் வெடிகளுக்கும் பற்றவைக்கும் நெருப்பாக இருக்கும்.

திலகப்பெரியம்மாவின்ர பெடியள் வெடிகொழுத்துறதில விண்ணர்கள்.
கிழுவந்தடியில 100 சரவெடியைக் கட்டிவிட்டு அடிநுனியில் இருக்கும் வெடியில் நெருப்பை வைத்தால் பட படவெண்டு வெடித்துக்கொண்டே போகும்.
அவையின்ர வீட்டில செல்வராசா எண்டு வேலைகாரப் பெடியன் ஒருவன் இருந்தவன்.
தான் பெரிய சாதனை வீரன் எண்டு நினைச்சுக் கொண்டு ஒரு அலுமான் வெடியை எடுத்து அதன் அடிகட்டையை இரண்டு விரலுக்குள்ள வச்சு வெடிப்பான். படுத்திருக்கும் ஊர் நாய்களுக்கு மேல் அட்டை வாணத்தைக் கொழுத்திப்போடுவான். வள் வள் என்று பெருங்குரல் எடுத்து செல்வராசாவைத் திட்டிதீர்த்தவண்ணம் அவை ஓடி மறையும்.

எங்களூரைப் பொறுத்தவரையில் தீபாவளி வருசப்பிறப்பை விட தைப்பொங்கல் தான் விசேசம்.
வானம் பார்த்த பூமியாக விவசாயக்கிராமங்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் ஆக்கிரமிப்புச் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்கள் தைபொங்கலைத்தான் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதுகினம்.

பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார்.
பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்.
அட்டைவாணத்தைக் கொழுத்திவிட்டு நிலத்தில இலாவகமாகச் சுழற்றிவிடுவார்.
சுழன்று சுழன்று ஓடிக் கொண்டு வண்ணசக்கர ஒளியைக் கக்கிகொண்டே தொலைவில் போய்க் கருகி ஓய்ந்துவிடும்.
நிலத்தில் ஒரு டப்பாவை வைத்து விட்டு ஈர்க்கு வாணத்தை எடுத்து அதன் மேல் சாய்வாக வைத்து நெருப்பை அவர் பற்றவைக்கும் போது வானத்தில் சென்று வெடித்து பூத்தூவ வேண்டியது தன் விதியை நொந்தபடி தரை மட்டத்தில் சாய்வாக விருக்கென்று சென்று வெடிக்கும்.
றேட்டில போற வாற சைக்கிள்காரற்றை திட்டு வசவுகள் தான் இதற்காக அவருக்குக்கிடைக்கும் கெளரவ விருதுகள். ஒருமுறை அவர் ஏறிந்த சக்கரவாணம் படுத்திருந்த ஒரு கிழவியின் மேல் விழுந்து ” ஐயோ அம்மா” என்று அந்தக் கிழவி தைப்பொஙகல் முதல் நாள் இருட்டுகுள்ள ஓடினது இப்பவும் நினைவிருக்கு.

திருஞானசம்பந்தரின் கதையை “ஞானக்குழந்தை” எண்டபெயரில் படமா எடுத்து ரவுணில இருக்கும் லிடோ தியேட்டரில வந்த நேரம் அது. சம்பந்தருக்குக் கடவுள் வந்து காட்சி கொடுத்தது போல எனக்கும் முன்னால் கடவுள் வந்தா நான் நிறையப் பூந்திரியும், அட்டைவாணமும் கேட்பேன் என்று சின்னப் பிள்ளையா இருக்கேக்க நினைப்பேன்.

ஒருமுறை இலங்கை அரசாங்கம் வெடிகளை எங்கட பிரதேசத்திற்கு அனுப்பத் தடை செய்துவிட்டது. திலகமாமியின்ர பெடியன் சுரேஸ் ஒரு பழைய லொறியின்ர சீற்பாகம் ஒண்டை நீண்ட துண்டாக வெட்டி எனக்கொன்று அவனுகொன்றாக வைத்துக் கொண்டான். அதைத்தூக்கி நிலத்தில் அடிக்கும் போது படார் என்று வெடிபோல் சத்தம் எழுப்பும். அதுதான் எங்களின் தற்காலிக வெடி.
இலங்கை அரசாங்கம் இந்ததடையை நிரந்தரம் ஆக்கியபோது வெடிவரத்து முற்றாக இல்லாமல் போனது.
ஒரு விளையாட்டுத்துப்பாக்கியை வாங்கி அதில் பொட்டுவெடி என்று சொல்லப்படும் வெடிறேலைப் பொருத்தி வெடிப்போம். அந்தத் துப்பாக்கி பழுதானால் அந்த வெடி றோலை ஒரு கொங்கிறீற் கல் மேல் வைத்துவிட்டு இன்னொரு கல்லால் ஓங்கி அடிக்கும் போது இதேபோல வெடியெழுப்பும்.

பொங்கல் அடுப்பு செய்வதும் ஒரு கலை.பொங்கல் ஆரம்பிப்பதற்கு ஒரு கிழமைக்கு முந்தியே செம்பாட்டு மண்ணிலை தண்ணீரைக் கலந்து நல்லாக் குழைத்து அலுமினிய வாளியில அந்தக் குழைத்த மண்ணைப் போட்டு இறுக்கி விட்டு சுத்தமான தரையில கொஞ்சம் குருமணலைப் பரவி விட்டு அப்பிடியே கவிட்டு விட்டால் அது கூம்பு வடிவில காய்ஞ்சு இறுகிவரும்.பொங்கலுக்கு ஒரு சில தினம் முன்னுக்கு சாணி கரைச்சு அந்த அடுப்புக்களின் மேல தடவித் திருநீறையும் தடவிவிடுவார்கள். பல குடும்பங்களுக்குப் பொதுவில் இந்த அடுப்புக்கள் செய்து பரிமாறப்பபடும்.

பொங்கல் நாள் வந்துவிட்டால் விடிய நாலு மணிக்கே எழுந்து ஆயத்தஙகளைத் தொடங்கிவிடுவோம்.

அரிசி இடிக்கும் உலக்கை, கோதுமை மாவை (சிலர் அரிசி மா, தினை மா பயன்படுத்துவார்கள்) எடுத்துக்கொண்டு நடு முற்றத்துக்குப் போய் கூட்டித் தெளித்த அந்த முற்றத்தில் உலக்கையை நீட்டிவைத்து மாவை அதன் மேல் தூவிச் சதுரவடிவப்பெட்டியாகக் கோலம் அமைப்போம். அதன் நடுவில் தான் பொங்கல் வேலை ஆரம்பிக்கும்.
சூரியன் வருவதற்கு முன்பு பொங்கிவிட்டுக் கணக்காச் சூரியன் வரும்போது வெடியைக் கொழுத்திப்போட்டு வாழையிலையில் கற்பூரத்தைக்காட்டிப் படைப்போம்.

முந்தின காலத்தில மண்பானைகள் தான் பொங்குவதற்கு அதிகம் பயன்படும். ஆனால் காலவோட்டத்தில அலுமினியப்பானை இதை ஓவர்ரேக் பண்ணிவிட்டுது.மண்பானையில் பொங்கும் போது பானை உடைந்தால் அபசகுணம் என்பார்கள்.
ஒருமுறை எங்கள் வீடுப் பானை பொங்கும் போது சிறிய ஒட்டை ஏற்பட்டு பொங்கும் போதே தண்ணீர் இலேசாகப் பெருகத் தொடங்கியது. வாழைபழத்தையும் கோதுமைமாவையும் பிசைந்து இலாவகமாக அந்த ஓட்டையை அடைத்துவிட்டார் அப்பா.
பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.
காகங்களுக்கும் படையல் இருக்கும், ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவஙகள் விட்டால் தானே.

நான்கு வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவினை மீள் இடுகையாகத் தருகின்றேன்.

1.1.11 – “கத தொடருன்னு”


“அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா…ஒரு காரியம் இல்லாத கதைகளா….”

1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன். இன்றைய நாளை ஏதோ ஒரு வகையில் மனதுக்கு அமைதியையும் நிறைவையும் உண்டுபண்ணும் விஷயங்களைத் தேடித் தேடி நுகர்கின்றேன். ஏனென்றால் இந்த நாள் வெறும் இன்னொரு நாள் அல்ல இன்னொரு ஆண்டுக்கான விடியலின் தொடக்கமாகப் பார்க்கின்றேன். இது இன்று நேற்றல்ல ஓவ்வொரு ஆண்டும் தொடர்கின்றது. ஆனால் சவால்களும், சோதனைகளும், சந்தர்ப்பங்களும் வழக்கம் போல முந்திய ஆண்டுகளைப் போலத் தொடரும் என்ற உணர்வும் வழக்கம் போல இந்த ஆண்டின் தொடக்கம், இன்றைய நாளிலும் மனதின் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

“கத தொடருன்னு” மலையாளப்படத்தின் படத்தின் டிவிடியை வாங்கி வைத்திருந்து சில வாரங்கள் கழிந்த நிலையில் இன்றைய நாளில் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உந்தித் தள்ள, முழுமையாகப் பார்த்து முடித்துவிடுகின்றேன். அதீத சோகமோ, உச்ச பட்ச சந்தோஷமோ அதன் ஊமை மொழிகளுக்குப் பாஷையாக நான் தேடிக்கொள்வது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். எண்பதுகளில் அவர் கொடுத்த அந்தப் பொக்கிஷங்களை இருபது வருஷங்கள் கழித்தும் என் உணர்வுகளின் மொழியாய்ப் பொருத்திப் பார்க்கின்றேன். இன்றைய நாள் இந்த விசேஷ நாளில் அவரின் இசையில் சமீபத்தில் வெளிவந்த “கத தொடருன்னு” ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்பதும் ஒரு காரணம். இன்னொன்று சத்யன் அந்திக்காடு.

ஒரு சாதாரண கதைத் துணுக்கை எடுத்துக் கொண்டு அசாதாரணமான தாக்கத்தை உண்டு பண்ணும் வித்தை தெரிந்தவர் சத்யன் அந்திக்காடு. அதை “கத தொடருன்னு” மீள நிரூபிக்கின்றது. சத்யன் அந்திக்காடுவின் ஏறக்குறைய எல்லாப் படங்களையும் பார்த்து ஆய்வுப்பட்டம் எழுதும் அளவுக்கும் இவரின் படங்கள் ஒவ்வொன்றுமே என் மனதில் ஆரவாரமில்லாத ஆக்கிரமிப்பை உண்டுபண்ணியவை.
சாட்சியமாக நான் முன்னர் பகிர்ந்த இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி. சத்யன் அந்திக்காடுவுக்கு “கத தொடருன்னு” 50 வது படம். அவரின் தற்போதைய செல்வாக்குக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து ஒரு சூப்பர் டூப்பர் மசாலாச் சரக்கைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் 50 வது படம் என்பதற்காக அவர் சமரசம் எதுவும் செய்துகொள்ளவில்லை. அதுவே அவரின் பலம். வழக்கம் போலத் தன் கதைக்கு நாயகனாக ஜெயராமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

டாக்டருக்குப் படிக்கும் வித்யாலட்சுமி நம்பியார் (மம்தா மோகன்தாஸ்) தன் காதலன் ஷாநவாஸ் (ஆஷிப் அலி) என்ற இசைக்கலைஞனை மதம் மீறிய காதலாக இரண்டு பக்க எதிர்ப்புக்களோடும் கைப்பிடிக்கும் போது நினைத்திருக்கமாட்டாள் தொடர்ந்து வரும் சவால்களை. ஆனால் அந்தச் சவால்கள் அவளுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டுகின்றது பிறேமன் (ஜெயராம்) என்ற ஆட்டோ ட்ரைவர் மூலம். கோட்டையில் இருந்து குப்பத்துக்குப் போகும் அவள் வாழ்க்கையில் புதிய பல கதவுகள் திறக்கின்றன.

“அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா..ஒரு காரியம் இல்லாத கதைகளா….” தன் பிள்ளையால் கைவிடப்பட்டுக் குப்பத்தில் ஒதுங்கிப்போன லாசர் (இன்னசெண்ட்) சொல்லும் வரிகள் அவை. அனுபவிக்கும் போது துன்பம் தரக்கூடிய நிகழ்வுகள் பின்னாளில் வெறுங்கதை என்ற மட்டில் ஆகிவிடுகின்றன. யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையில் எத்தனையோ சவால்களையும், சோதனைகளையும் சந்திக்கும் போது அவை அந்தக் கணம் தற்கொலைப்பாறையில் நின்று இடமா வலமா போவது என்று தீர்மானிக்கும் கணங்களாக இருக்கும். ஆனால் வழியா இல்லை?

தன் ஒவ்வொரு படத்துக்கும் தேர்ந்தெடுத்த நடிகர்களை வைத்துப் படம் பண்ணும் சத்யன் அந்திக்காடு இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸை ஏன் தேர்ந்தெடுத்தார்?இவரும் கவர்ச்சி அலையில் மூழ்கிவிட்டாரோ என்ற என் நினைப்பை அடியோடு மாற்றிவிட்டது மம்தாவின் நடிப்பு. திசையறியா அபலையாக அவர் நடிக்கும் ஒவ்வொரு ப்ரேமும் மம்தாவுக்குப் பெரும் தீனி. ஜெயராம் பற்றி நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சத்யன் அந்திக்காடுவோடு அவர் சேர்ந்தால் அது ஒரு படி மேலதிக போனஸாக இருக்கும். சதா சாத்திரக்காரனையும், நாள் கோள் நட்சத்திரங்களையும் பார்த்துத் தன்னைச் சமாதானப்படுத்தும் பிறேமன் என்னும் ஆட்டோக்காரராக ஜெயராம், படத்தில் இவரை ஒன்றும் ஏகபோக உரிமை கொண்ட நாயகனாகக் காட்டாமல் கச்சிதமாக இருக்கிறது இவரின் பாத்திரப்படைப்பு. சைக்கிளில் திரிந்து லாட்டரி விற்கும் இன்னசெண்ட், வெளியே அனல் பறக்கும் கோபத்தையும் உள்ளே பூச்செண்டையும் வைத்திருக்கும் நடிப்பில் மல்லிகா என்ற லஷ்மிப்ரியா, ஒவ்வொரு கட்சியும் கூட்டம் போடும் போதும் குப்பத்து ஆட்களுக்கு அந்தந்தக் கட்சிகளின் சீருடையை மாற்றிக் கூட்டம் சேர்த்துக் காசு பண்ணும் மம்முக்கோயா, எப்போதோ குற்றவாளியாக இருந்து பின்னர் போலீஸ் ஒவ்வொரு முறை கள்ளக் கேஸ் போதும் ஆஜராகும் பாத்திரம், வழக்கம் போல் சின்னப் பாத்திரமாக இருந்தாலும் பெரிதாகக் கவனிக்க வைக்கும் கே.பி.ஏ.சி.லலிதா என்று ஒவ்வொரு பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றார் சத்யன் அந்திக்காடு.

இசைஞானி இளையராஜாவுச் சமீப வருஷங்களில் கிடைத்த நல்லதொரு கூட்டு சத்யன் அந்திக்காடுவினுடையது. “யாரோ பாடுன்னுதூரே”

என்ற பாடலும் அந்தப் பாடலின் அடிநாதமாய் ஒலிக்கும் இசையும் படம் பூராகவும் சந்தோஷப்பூரிப்பிலும், சோகக் கணங்களிலும் ஜாலம் செய்கின்றது. கடலோரக்கவிதைகள் படத்தில் வரும் “அடி ஆத்தாடி” பாடலின் ஆரம்ப அடிகளை ஒரு காட்சியில் இசைக்குழு ஒன்று மீட்டும் அந்த நேரம் அப்பப்பா எனக்கு ஏற்படுத்திய அந்த உணர்வைப் பொருத்திப்ப்பார்க்கச் சொற்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

1.1.11 நாள் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வானொலியில் நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். இணையப்பரப்பில் கிடைத்த நல்ல பல ஆளுமைகளை வானொலி வழியாகச் சந்தித்த கணங்களை இன்னும் மகிழ்வோடு நினைத்துப் பார்க்கின்றேன். 2010 ஆம் ஆண்டை விடை கொடுக்கும் நாளில் அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் பார்வையாய் வானொலித் தொகுப்புக்களைப் பகிரத் தகுந்தவர்களைத் தேடியபோது கிட்டியவர்கள், 2010 இல் தமிழ் எழுத்துத்துறை – எழுத்தாளர் பா.ரா என்ற பா.ராகவன், 2010 இல் இந்தியா – பெங்களூர் அரவிந்தன், 2010 இல் உலகம் – TBCD என்ற அரவிந்த், 2010 இல் தமிழ் சினிமா – கேபிள் சங்கர் இவர்கள் எல்லோருமே குறித்த தமது விடயதானங்களில் வெகு சிறப்பான பகிர்வுகளைக் கொடுத்திருந்தார்கள். நான் நினைக்கின்றேன்
இணைய ஊடகத்தையும் வானொலி ஊடகத்தையும் இணைத்து இந்த மாதிரியான தோரணையில் ஆண்டுப்பகிர்வைக் கொடுப்பது இதுவே முதல் முறை. அதற்காக என்னோடு தோள் நின்ற அவர்களையும் நன்றி மறவாமல் பதிவு செய்கின்றேன்.

2010 இல் இழப்புக்கள் என்ற வகையில் நான் நேசித்த இசைக்குயில் பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா , இசையமைப்பாளர் சந்திரபோஸ் ,
“முகத்தார்” என்ற எஸ்.ஜேசுரட்ணம் ஆகியோரின் மறைவு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணிய அதே அளவுக்கு இயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப் பேட்டி அதீத திருப்தியையும் மன நிறைவையும் கொடுத்திருக்கின்றது. பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தோஷங்களைச் சொல்லும் அளவுக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத் துயரங்கள், சவால்கள் பல தனிப்பட்ட ரீதியில் கிட்டினாலும் அவற்றைச் சொல்லும் அளவுக்கு மனம் பக்குவப்படவில்லை என்ற என் நினைப்புக்கு இணையாக பாண்டியராஜன் சொன்னதைத் தான் சொல்ல வேண்டும் “இந்த நேரத்தில் என்ன சந்தோஷம் கிட்டுதோ அதை ரசிக்கணும் ருசிக்கணும்”

“அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா
…ஒரு காரியம் இல்லாத கதைகளா….”
கதை 1.1.11 இற்குப் பின்னும் தொடரும்…