இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் – தலையில் இருந்து தலைநகரம் வரை

இணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது. அதற்குப் பிறகு பல வருஷங்களுக்குப் பின் இந்தத் தேர்முட்டிப் படியில் அமர்ந்திருக்கின்றேன் கூட இருந்த நண்பர்களைத் தொலைத்து விட்டு. தூரத்தில் அலுமினியத் தகடால் மூடப்பட்ட ஒரு குப்பைத்தொட்டித் தேடி வரும் ஆடும், குட்டியும் கண்ணிற் பட்டது. கமராவை எடுத்துக் கிளிக்கினேன். குப்பைத் தொட்டிக்குக் கிட்ட வந்த ஆடு அலுமினியத் தகட்டைக் காலால் விஜய்காந்த் ஸ்ரைலில் உதைந்து விட்டுக் குப்பைக்குள் முகம் விட்டதைப் பார்க்க வேணுமே 😉 யாழ்ப்பாணத்து ஆடுகள் புத்திசாலிகள். தூரத்தே மோட்டார் சைக்கிளில் சுபாங்கனும் நிருஜாவும் வருவது தெரிந்தது.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் போன போது சகவலைப்பதிவர் கறுப்பியைத் தான் சந்திக்க முடிந்தது. அந்த நேரம் சுபாங்கனும் யாழில் இருந்தார் என்பதை நான் கொழும்பு வந்து சிட்னிக்கு விமானம் ஏறியபின் தான் தெரிந்தது. இப்போதெல்லாம் காலையில் இருந்து மாலை வரை நான் செய்யும் காரியங்கள் ட்விட்டரில் பதிவாகிவிடுவதால் சகோதரன் சுபாங்கன் நான் யாழ் வந்ததும் சந்திப்போமா என்றார். அந்த நேரம் நிருஜாவும் வேலை விடயமாக யாழ் வந்ததால் இருவரையும் ஒரே நாளில் சந்திக்க முடிவானது. கொக்குவில் இந்து தேர் முட்டியில் அமர்ந்தவாறே ஊர்க்கதைகளையும், பதிவுலகம் பற்றியும் ஆசை தீர ஒரு மணி நேரம் பேசினோம்.


(நிரூஜா, நான், சுபாங்கன்)

சுபாங்கன் இன்னும் பல்கலைக்கழகப் படிப்பில் இருக்கும் மாணவன்,தரங்கம் (http://subankan.blogspot.com/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். கடந்த நல்லூர்த் திருவிழாக்காலத்தில் இவர் எடுத்த கலை நயம் மிக்க புகைப்படங்களுக்கு நான் அடிமை. அமைதியாகவும், பண்பாகவும் பேசும் நல்ல பிள்ளை இவர். ட்விட்டரில் @subankan என்ற ஐடியில் அவ்வப்போது உள்ளேன் ஐயா என்பார்.

நிரூஜா என்றதும் ஏதோ சிம்ரன் ரேஞ்சுக்கு ஒரு குமர்ப்பெட்டையை நினைத்துக் கற்பனை வளர்த்துக் கொண்டால் கறுப்பி என்ற பெயரில் டெரர் பாண்டியாக இருக்கும் நண்பர் போல உங்கள் ஆசை எல்லாம் மண்ணாப் போக. நிரூஜா என்ற புனைப்பெயருக்குள் அவர் ஒரு வசீகரமான ஆண் செவ்வானச் சிதறல்கள்…( http://www.suwadi.org/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் என்பதோடு @nirujah என்ற ட்விட்டர் ஐடியில் வந்தும் கலக்குபவர். தகவல் தொழில் நுட்பத்தில் லண்டனில் மேற்படிப்புப் படித்தாலும் நாடு திரும்பி (வந்தி கவனிக்க) சேவை ஆற்றுபவர்.இவரிடம் இலங்கையின் தகவல் தொழில் நுட்பத்துறையின் இன்றைய நிலை குறித்து நிறைய அறிந்து கொண்டேன்.

பின்னர் தேனீர் அருந்துவோமா என்று பக்கத்தில் இருக்கும் தேனீர்க் கடையைக் குறி வைத்துக் கேட்டால் நிரூஜா கூல்பார் போகலாமே என்று கேட்டார். சரி அவரின் ஆசையை விட்டுவைப்பானேன் என்று பரணி கூல்பார் சென்று றோல்ஸ், பிளேன் ரீ, குளிர்பானம் உண்டு எம் சந்திப்பை இனிதே நிறைவு செய்தோம். லுமாலாவில் வெளிக்கிட்டு தாவடி வரை வந்த பின்னர் தான் என் மொபைல் போனைத் தவறவிட்டது தெரிந்து மீண்டும் பரணி கூல்பாருக்குச் சென்றதும் கோயில் தேர் முட்டிப் படிக்கட்டில் அது பத்திரமாக இருந்ததும் நிரூஜாவும், சுபாங்கனும் அறியாதவை.

தென் கொரியாவிற்குப் பணி நிமித்தம் சென்று வலையுலகில் சும்மா கொஞ்ச நேரம் http://koculan.blogspot.com/ என்ற வலைப்பதிவை ஆரம்பித்து பங்காளியாகி என்னோடு நண்பரானவர் பின்னர் தாயகம் போன பின்னர் தன் வலைப்பதிவை நட்டாற்றில் விட்டதால் என்னிடம் வாங்கிக்கட்டியவர். நான் யாழ்ப்பாணம் வந்ததை அறியத்தந்ததும் தான் எழுத முடியாத சூழலை முதலில் சொல்லிவிட்டுத் தான் சந்திப்பைத் தொடர்ந்தார். இப்போது யாழ்ப்பாணத்தின் பிரதேச செயலகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் இவரை ஒரு வேலை நாளில் சந்தித்துப் பேசினேன். இலங்கை நிர்வாக சேவை தொடர்பாக தற்போதைய நடைமுறை குறித்து இவரிடம் இருந்து நிறைய அறிந்து கொண்டேன். அதிக நேரம் எடுக்காது மீண்டும் சந்திப்போம் என்று அவசரமாக விடைபெற்றேன். கையில் கமரா இருந்தும் அவரோடு ஒரு படம் எடுக்க நினைப்பு வராததால் என்னையே நான் திட்டித்தீர்த்தேன் பின்னர்.

சமீபகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வலையுலகத்தைக் கலக்கும் சகோதரன் மதி சுதாவைச் (http://mathisutha.blogspot.com/) சந்திக்கும் வாய்ப்புத் தவறிவிட்டது, அடுத்தமுறை இவரைத் தான் முதலில் சந்திக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

(சண்முகனோடு நான்)

வலையுலகத்தை விட இப்போதெல்லாம் ட்விட்டர் வழியாக நிறைய நட்புக்களும், சொந்தங்களும் கிட்டுகின்றன. அப்படி வந்து வாய்த்தவர் தான் அருமைத்தம்பி சண்முகன். @shanmugan10 என்ற ட்விட்டர் ஐடி வழி இவரைச் சந்திக்கலாம். இவரும் இன்னும் மாணவப்பருவத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்கின்றார். சிட்னியில் இருந்து யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரெலியா, கண்டி என்று நான் போகும் இடமெல்லாம் இவரும் வெற்றி எஃப் எம் வாயிலாக எனக்கும் பாட்டுக் கேட்டுக் குஷிப்படுத்துவார். கொழும்பு வந்ததும் சந்திக்கலாமா என்றார். பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலின் முகப்புத் திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புக்களைப் பேசினோம். நான் லுமாலாவில் சைட் அடிக்கக் கிளம்பிய காலத்தில் பிறந்த பையன் இவர். இந்தச் சின்ன வயதில் தாயகம் மீது இவர் கொண்ட நேசம் கண்டு உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தேன். எமது சந்திப்பு முடிந்ததும் கனத்த மனதோடு தான் வீடு திரும்பினேன், இவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அப்போது.

(நான், நடுவில் மருதமூரான், இடமிருந்து வலம் சேரன் கிருஷ்)

ட்விட்டர், வலையுலகம் வழியாக இணையும் உறவுகளோடு ஃபேஸ்புக் வழியாகக் கிட்டியவர் நண்பர் சேரன் கிருஷ். எனது கம்போடிய உலாத்தல் பதிவுகள் தான் என்னை இவருக்கு அறிமுகப்படுத்தி நட்பாக்கியது. நான் கொழும்பில் இருக்கும் போது பயணப்பதிவுகளை ஆரம்பித்தது கண்டு நாட்டில் இருந்தால் சந்திக்கலாமா என்றார். சேரன் கிருஷ் ஐயும் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலுக்கு அழைத்தேன் ஒரு நாட் காலைப் பொழுதில். அன்று சங்கடஹர சதுர்த்தி. சேரன் கிருஷ் பேரைப் பார்த்தால் ஆர்ப்பாட்டமான ஆளாக இருப்பார் என்று மனக்கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் மிகவும் அமைதியானவர் http://cherankrish.blogspot.com என்ற வலைப்பதிவு வைத்திருந்தாலும் அதிகம் எழுதாமல் மற்றவர்களை நிறையப்படிப்பவர் என்று இவரோடு பேசும் போது உணர்ந்து கொண்டேன். நாங்கள் இருவரும் மட்டும் தான் சந்திக்கப்போகிறோம் என்று நினைத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பர் மருதமூரானும் வந்து இணைந்து கொண்டார். மருதமூரான் http://maruthamuraan.blogspot.com/ என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். இலங்கையின் அரசியல் விமர்சனங்களைத் தன் ஊடகவியலாளர் பார்வையோடு நேரில் பேசும் போதும்
சொல்பவர். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டில் ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும் போது இடையில் ஒரு அம்மா வந்து சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து கொடுத்தார்.
“கொஞ்சமாப் போடுங்கோ அம்மா” இது மருதமூரான்
“கொஞ்சமாக் கேட்டால் கடவுள் கொஞ்சம் தான் தருவார்” இது அந்த அம்மா
சேரன் கிருஷ் ஐயும் மருதமூரானையும் சந்தித்த அந்த முதற் சந்திப்பும் அம்மா கொடுத்த சர்க்கரைப் பொங்கல் போல.

“அவன் இவன்” படத்தின் பிரீமியர் ஷோ கொன்கோட் தியேட்டரில் ஓடுதாம், வாழ்நாளில் முதற்தடவையாக பிரீமியர் ஷோவைப் பார்த்து ஜென்மசாபல்யம் அடைய எண்ணி கொன்கோட் இற்கு வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்குப் போனேன். பல்கனிக்குப் போகும் கியூவில் காத்திருந்தால் தியேட்டருக்கு உள்ளே இருந்து “அங்கை பார் கானா பிரபா” கேற்றுக்குள்ளால் குரல் வந்த திசையைப் பார்த்தால் அங்கிருந்து முன் அறிமுகம் இல்லாத ஒருவர். “நான் தான் அனுதினன்” என்று வந்த அவரோடு கூடவே நம்ம நிரூஜாவும். என் முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டு பேசிய அனுதினனோடு இன்னொரு சந்திப்புக் கிடைத்தால் நிறையப் பேச வேணும். ஆடுகளம் என்ற பெயரில் எழுதிவரும் அவரின் வலைப்பதிவு http://anuthinan0.blogspot.com/.

மூத்த ஊடகவியலாளர் சகோதரர் எழில்வேந்தன் அவர்களை ஒவ்வொரு பயணத்திலும் சந்திப்பது வழக்கம். இந்தமுறை அவர் தனது விடுமுறை நாளிலும் 2 மணி நேரத்துக்கு மேல் ஒதுக்கி என்னைத் தன் காரில் அழைத்துக் கொண்டு ஒரு தேனீர் விருந்தகம் சென்று இலக்கியம், நாட்டு நடப்பு எல்லாம் பேசி நிறைவான சந்திப்பை முடித்தோம். எழில் அண்ணா தனது தந்தையும் ஈழத்தின் மூத்த படைப்பாளியுமான கவிஞர் நீலாவணனின் படைப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

(பின்னே விமல் முன்னே லோஷன்)
சிட்னியில் தொடங்கி கொழும்பு, நுவரேலியா எல்லாம் பயணிக்கும் போதும் வெற்றி எஃப் எம் காதுக்குள் கூடவே வந்தது. குறுகிய காலத்தில் இலங்கையின் முன்னணி வானொலிகளில் ஒன்றாக இந்த வானொலி உயர்ந்திருக்கின்றது. இதற்குப் பின்னால் வானொலியின் இயக்குனராக விளங்கும் வாமலோஷன் என்ற லோஷனின் கடின உழைப்பும் அவருக்கு வாய்த்த நல்லதொரு வானொலிக் குழுமமும் தான். லோஷன் வானொலித்துறையில் தசாப்தம் கடந்து வெற்றிகரமாக இயங்கிவருபவர், வலையுலகிலும் இவரின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கலாம் http://loshan-loshan.blogspot.com/

வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமன்றி “எம்மால் முடியும்” என்ற சமூகப்பணி மூலமும் இந்த வானொலி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. வெற்றி எஃப் எம் இணைய முகவரி http://www.vettri.lk/

லோஷனின் வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி எஃப் எம் நிலையக் கலையகம் செல்கின்றேன். அந்தக் கலையகத்தில் சுறுசுறுப்பாய் தேனீக்கள் போல உழைத்துக் கொண்டு தகவல்களைத் திரட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளுக்கான தயார்படுத்தல்களைச் செய்துகொண்டிருக்கின்றது இளைஞர் பட்டாளம் ஒன்று. கூடவே வெற்றி தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவும் இயங்குகின்றது. நேரடி அஞ்சல் பகிரப்படும் நிகழ்ச்சிக் கலையகம் சென்றால் நண்பர் விமல் பகல் பந்தி செய்து கொண்டிருக்கின்றார். கூடவே ஒரு பயிற்சி அறிவிப்பாளினி இருக்கின்றார். அங்கே சில நிமிடத்துளிகளைச் செலவழித்தவாறே நேரடி நிகழ்ச்சி நடைபெறும் அனுபவத்தை ரசிக்கின்றேன். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதை முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்குவது என்பது ஒரு பெரும் வரம்.

மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை

சின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், “முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்”என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம். எந்தவித ஆடம்பரமும் தரிக்காத நிலையில் கம்போடியாவில் கண்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்திய நிலையில் இருந்த கோயில்களின் முகப்புப் போல இருந்தது. கோபுர வாயில் அடைக்கப்பட்டிருக்கின்றது. அருகே போகும் குருக்கள் வளவுக்குள்ளால் கோயிலின் உள்ளே நுழைகின்றோம்.

சோழ அரசன் திஸ்ஸ உக்கிரசிங்கனின் மகள் மாருதப்புரவீகவல்லி, கலைக்கோட்டு முனிவரின் சாபத்தினால் முகத்தில் ஏற்பட்ட குதிரை முகம் போன்ற விகாரம் நீங்க கீரிமலைத் தீர்த்தம் நீராட வந்தபோது முருகனுக்குக் கோயில் ஒன்று அமைத்தாள். சோழ இளவரசி தங்கியிருந்ததைக் கேள்விப்பட்ட ஈழத்தின் கதிரமலையை ஆட்சி செய்த உக்கிரசிங்கன் அவளைக் கவர்ந்து சென்று மணம் புரிந்தான். பின்னர் மாருதப்புரவீகவல்லியின் வேண்டுகோளுக்கிணங்க அவன் அந்த முருகன் ஆலயத்தை இந்தியாவில் இருந்து விக்கிரகங்களைத் தருவித்துக் கட்டினான். இவ்வாறு கந்தனின் விக்கிரகங்களைத் தருவித்த இடமே காங்கேசன் துறை எனவும், மாருதப்புரவீகவல்லி தெய்வீக அருளால் தன் குதிரை முகம் நீங்கப்பெற்ற இடம் மாவிட்டபுரம் (மா = குதிரை ) எனவும் அழைக்கப்பட்டது. கீரிமலை, காங்கேசன்துறை, மாவிட்டபுரம் உள்ளடங்கலான இடத்தைக் கோயிற்கடவை என்று அழைப்பார்கள். (தல வரலாற்றுக்குறிப்புக்கள் உசாவ உதவியது: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்)


ஆலயம் அமைதியில் திளைக்கின்றது. ஆலயத்தைச் சுற்றி நாம் வலம் வர, பித்துக்குளி முருகதாஸ் பாடத்தொடங்குகின்றார். முருகனைத் தவிர வேறெதையும் நினைக்கமுடியாமல் கட்டிப் போடுகின்றது. உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளிப் பிரகாரத்தைச் சுற்றுகிறோம். அங்கே உருக்குலைந்த நிலையில் தேர் ஒன்று நிற்கின்றது. தென்னிலங்கையில் இருந்து வரும் “வானரங்கள்” இந்தத் தேரின் எஞ்சிய மரச்செதுக்குச் சிற்பங்களைப் பிடுங்கிக் கொண்டு போகின்றார்களாம், ஐயர் நொந்து கொண்டார். ஊருக்கு ஒரு திடீர்க் கோயில் என்று புதுசுபுதுசாக வந்து பவிசு காட்டிக்கொண்டருக்க, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் இன்னமும் திருத்தி அமைக்கப்படாத நிலையில் சோபை இழந்து நிற்கின்றது.“நிலாவரைக் கிணறு பார்ப்போமா” என்றவாறே சின்னராசா அண்ணர் ஓரமாக ஆட்டோவை நிறுத்த எதிரே நிலாவரைக் கிணறு என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. யாழ்ப்பாணத்தில் என்றுமே வற்றாத கிணறு என்று சிறப்பைப் பெற்றது இந்த நிலாவரைக் கிணறு. அயற்கிராமங்களில் பயிர்ச்செய்கைக்காக இந்தக் கிணற்றில் இருந்து நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது ஒருகாலம். கிணற்றை அண்டி எதிரே இராணுவ அரண் ஒன்றும், பனக்கட்டிக் குட்டானை விற்பனை செய்யும் சிங்களவர் ஒருவரையும் காணலாம்.

நிலாவரைப் பகுதியில் இராணுவம் விஜய் நடித்த சிவகாசி படம் போடுதாம், இங்கேயும் விஜய் அவ்வ்வ்என் வாழ்நாளில் முதற்தடவையாக வடமராட்சியின் பருத்தித்துறைப் பக்கம் போகும் த்ரில் ஓடு பயணிக்கிறேன். நீண்டதொரு வெட்டவெளி அது வல்லை வெளி என்று பிரகடனப்படுத்துகின்றது. எத்தனை எத்தனை சரித்திரங்களை இந்த வல்லைவெளி கண்டிருக்கும் இன்று தான் இதனை நான் காணுகின்றேன். பரந்த வெளியில் ஒரு சந்திப்பில் பிள்ளையார் குடியிருக்கின்றார். “முறிகண்டிப்பிள்ளையார் போல பிரசித்தி பெற்றவர் இவர், வந்து கும்பிடுங்கோ” சின்னராசா அண்ணர் ஆட்டோவை நிறுத்தி விட்டுச் செல்லப் பின்னே நாங்கள்.

அரசமரத்தைக் கண்டால் இரவோடிரவாகப் புத்தரைக் கொண்டு வந்து நட்டுவிட்டுப் போகும் கூத்து நடக்கின்றது. அதுவும் கடந்த இரண்டு வருஷமாகவே இந்த வேலை வெகு மும்முரமாக நடக்கின்றது. புத்தர் இப்போதெல்லாம் ஆக்கிரமிப்பின் சின்னமாக மாறிவிட்டதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இனவாதத்தின் மூலம் நாட்டு மக்களைத் தெருவுக்குக் கொண்டு வந்தவர்கள் புத்தரையும் நடுறோட்டுக்குக் கொண்டு வந்தது தான் அவலத்தின் உச்சம். பல இடங்களில், தகுந்த பராமரிப்பு இன்றிக் கைவிடப்பட்ட நிலையில் அரசமரத்தில் தீவிர நிஷ்டையில் இருக்கிறார்கள் புத்தர்கள். இதில் வேடிக்கையான சில விஷயங்களையும் அறிந்து கொண்டேன். இப்போதெல்லாம் நம் தாயகத்தில் எங்காவது அரசமரம் தப்பித்தவறித் தென்பட்டால் புத்தர் வருகைக்கு முன் ஒரு வைரவரை நட்டு விடுவார்கள் விண்ணர்கள். ஒரு இராணுவக் காவலரண் பக்கமாக இருந்த அரசமரப் புத்தர், அந்த இராணுவக் காவலரண் அகற்றப்பட்டதும் மாயமானார். பின்னர் அந்த அரச மரத்துக்குக் கீழ் பிள்ளையார் வீற்றிருக்கின்றார். இதெல்லாம் அங்கே கண்டதும் கேட்டதும்.

காங்கேசன்துறை வீதி என்பதை ஜம்புகோல படுன வீதி என்று தமிழில் பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டதையும் கண்டேன். (அதாவது சிங்களவருக்கு ஜம்புகோளப்பட்டுன என்றால் தான் காங்கேசன் துறை)


நெல்லியடியில் மகாத்மா தியேட்டர் அழிந்த நிலையில் இருக்கின்றது. அங்கே ஆட்டோவைத் தரித்துப் பேப்பர் கடையில் நாளிதழ்களை வாங்கிக் கொண்டே சூழவும் படங்கள் எடுத்தவாறே கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். இந்த றோட்டுப் பக்கம் இருக்கிற எல்லாக் கடைகளுமே முந்தி மகாத்மா தியேட்டர் முதலாளியினுடையது தான். இப்ப கடைகளை விற்றுவிட்டார்கள். தியேட்டரை மட்டும் விற்கமாட்டோம் ஞாபகமாக இருக்கட்டும் என்று முதலாளியின் பிள்ளைகள் சொல்லிவிட்டார்களாம். அந்த வாரிசுகளும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர். தியேட்டரின் சுவரில் விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் நிதர்சனம் தயாரிப்பில் உருவான கேசவராஜனின் படம் ஓடிய சுவடு இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றது 🙁

வடமராட்சிப் பகுதியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான வல்லிபுரக்கோயில் வந்து சேர்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வள்ளி நாச்சி என்ற பரதவர் குலப் பெண் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை அவளது வலையில் சக்கரம் ஒன்று சிக்கியதாகவும் அந்த சக்கரமே மூலஸ்தானத்தில் வைத்து வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்ற அதே வேளை விஷ்ணுவின் மச்ச அவதாரத்துடன் தொடர்புபடுத்தியும் ஆலய வரலாற்றைச் சான்று பகிர்கின்றது கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற ஈழத்துக் கோயில்களின் தரிசனம் தாங்கும் நூல்

ஆலயம் அன்று ஏதோ ஒரு விழாவை முன்னிட்டு சனக்கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. கோயிலில் நின்ற பக்தர் ஒருவரைக் கேட்டேன்.
“என்ன திருவிழா அண்ணை”
“என்னண்டு தெரியேல்லை” சேஃப்டிக்காகச் சொன்னாரோ தெரியேல்லை 😉


கோயிலுக்குள் புகைப்பட, ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு போவது தடை என்ற அறிவிப்பு மிரட்டியது. கோயிலுக்குள் சென்று ஆண்டவனை மறந்து ஊர் உளவாரம் எல்லாம் அலசி ஆராயும் “பக்தர்கள்” இருக்கும் வேளை இந்தப் புகை, ஒளிப்படக் கருவிகளால் ஆண்டவனுக்கு எப்படிச் சினம் உண்டாகும் என்பது என் நூறு மில்லியன் டொலர், யூரோ, கேள்வி.

அருச்சனைச் சீட்டு, பழத்தட்டுடன் நீலப்பட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்தேன். “தட்சணை கொடுங்கோ” என்று ஐயராகவே முன்வந்து கேட்டது புதுமையாக இருந்தது. ஆலயத்தின் மணற்பரப்பில் கால்களை அளைந்தவாறே வெளிப்பிரகாரத்தில் நடந்தேன். நேரம் ஆகிவிட்டது.

காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்


“சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ”
எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.
லண்டனில் இருந்து வந்த அண்ணனுடன், சின்னராசா அண்ணரின் ஆட்டோவில் காங்கேசன்துறை வீதியால் பயணிக்கிறோம். வழியில் வலப்பக்கம் நான் ஆரம்ப வகுப்புப் படித்த சீனிப்புளியடி இணுவில் அமெரிக்கன் மிஷன் (இப்ப இணுவில் மத்திய கல்லூரி) , ஆங்கிலேயர் கட்டி யாழ்ப்பாணத்துக்கே பெருமை தரும் இணுவில் மக்லியேட் மருத்துவமனை எல்லாத்தையும் கண்டு கொண்டு பயணிக்கிறோம். இணுவில் மக்லியேட் மருத்துவமனையின் பிரசவப்பிரிவு அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் எல்லாத்திசைகளில் இருந்தும் மக்கள் வந்து மகப்பேறு பார்த்த பெருமை மிகு மருத்துவமனை. இப்பவும் “தம்பி! எந்த ஊர்?” என்று என்னிடம் கேட்டால் “இணுவில்” என்றதும் உடனே “நான் இணுவில் ஹொஸ்பிற்றலில் தான் பிறந்தனான்” என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.

இணுவில் காலிங்கன் தியேட்டர் , லங்கா சீமெண்ட் இன் களஞ்சியமாகக் காட்சியளிக்கின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெருந்தியேட்டர்களில் ஓடி, இரண்டாவது சுற்றில் காண்பிக்கப்படும் படங்கள் காலிங்கன் தியேட்டருக்கு வருவதுண்டாம். அந்தத் தியேட்டர் எங்கள் ஊரில் இருந்தாலும் தனியே படம் பார்க்கும் வயசு வந்த காலத்தில் காலிங்கன் தியேட்டர் அகதி முகாமாகத் தான் மாறியிருந்தது. சின்ன வயசில் அமெரிக்கன் மிஷனில் நான் படிக்கும் போது காலிங்கன் தியேட்டர் பக்கமிருந்து வரும் என் கூட்டாளிமார் கை நிறைய படச்சுருளின் துண்டங்களைக் கொண்டு வருவதுண்டு. ஆசையாக எடுத்து அந்த ஒற்றை றீலைப் பார்த்தால் தீபம் படத்தில் சிவாசியும் சுயாதாவும் சிரிச்சுக் கொண்டு நிக்கிற கோலம் தெரியும்.

காங்கேசன் துறை வீதியை ஒட்டிய இருமருங்கும் செம்பாட்டு மண் பரவிய தோட்டக்காணிகள், அந்தக் காலம் என்றால் இரண்டு பக்கமும் வெங்காயச் செய்கையும் புகையிலைத் தோட்டமுமாக ஒரே கல்யாணக் களை இருக்கும். இப்போது அந்தச் செம்பாட்டுக் காணிகளுக்குள்ளும் சீமெந்துக் கட்டிடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
“இப்ப பயிர் செய்ய ஆர் இருக்கினம் தம்பி? வெளிநாட்டுக் காசில சனம் சொகுசா வாழ விரும்புது” சின்ராசா அண்ணர் என் மனக்கணக்குக்குப் பதில் சொன்னார்.
அது ஒருபக்க நியாயம் என்றாலும், போர்க்காலத்திலும் வீறாப்புடன் பயிர் விளைவித்ததும் உண்டு, அந்தத் தலைமுறை ஓய்விடுக்க, அந்தப் பணியைச் சிக்கெனப் பற்றித் தொடர அடுத்த தலைமுறை இல்லாத வெற்றிடம் தான் மிக முக்கிய காரணம். ஒன்றில் அவன் போராடச் சென்று தன்னை மாய்த்திருப்பான், இல்லையெனில் ஊராடித் தூரதேசம் சென்று தன்னைத் தொலைத்திருப்பான். இப்போது தாயகத்தில் இளம் தலைமுறை என்பது வெறுமையாக்கப்பட்ட பாலைவனமாக அங்கொன்றும் இங்கொன்றுமான கூட்டமாகத் தான் இருக்கின்றது.

சுண்ணாகம், மல்லாகம் தாண்டி வந்து விட்டோம். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் பக்கமாகப் போகாமல் ஒரு குச்சுப்பாதையால் ஆட்டோவை விட்டார் சின்னராசா அண்ணை. இரண்டு பக்கமும் பற்றைக் காடுகள், காடுகளுக்குள் வீடுகள் அல்லது வீடுகளுக்குள் காடுகள். மாவிட்டபுரப் பக்கமாக உள்ள பாதையை அளந்தது ஆட்டோ. இவையெல்லாம் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின்னர் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த ஆண்டின் ஆரம்பம் வரை, அதாவது 21 வருஷங்கள் முழுமையாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இலங்கை இராணுவம் மட்டுமே நிலை கொண்டிருந்த பகுதி. இப்போது தான் மெல்ல மெல்ல மிதிவெடிகள் அகற்றப்பட்டு மக்களின் மீள் குடியேற்றங்களுக்காகக் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்படுகின்றன. இன்னும் சில பகுதிகளில் நீண்ட சிவப்பு நாடாக்களில் “மிதிவெடி அபாயம்” தொங்கிக் கொண்டிருக்கின்றது. மிதிவெடி அகற்றும் குழு ஒன்று கொட்டகை அமைத்திருந்தது. இதையெல்லாம் கடந்து போனோம்.


ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரும் மாவிட்டபுரம் பகுதி, 1990 இல் இருந்தே தன் நிலபுலங்களைத் தொலைத்து விட்டு இணுவில் வாசியாக மாறிவிட்டவர்.
“தம்பி! அங்கை பாரும் அந்தக் புதருக்குள்ள தான் என்ர தங்கச்சி வீடு, பின்னால என்ர வீடு இருக்கு”
சின்னராசா அண்ணர் காட்டிய பக்கம் பார்த்தால் ஒரே பச்சைப் பசேலென்ற புதர் மண்டிய மரங்களின் நெருக்கம் தான் தெரிந்தது.
“ஓமானில நான் உழைச்சுக் கட்டின வீடு, அந்த நாளேலையே பெரிய இராணி வீடு மாதிரி இருக்கும், இப்ப எல்லாம் உருக்குலஞ்சு இருக்கு. காணியைத் திருத்தவே பல லட்சம் வேணும்” என்றார் சின்னராசா அண்ணை. இதையெல்லாம் வெட்டித் திருத்த ஏலாது, எல்லாத்தையும் மிதித்து, அள்ளிப் போட மிஷின் பொருத்திய பார ஊர்தி தான் உதவும் என்று நினைத்துக் கொண்டேன்.
“ஒரு பரப்புக் காணி திருத்த எட்டாயிரம் ரூவா கேக்குறாங்கள், அரசாங்கம் வீடு கட்டப் பாதிக் காசு குடுக்குது” சின்னராசா அண்ணர் தொடர்ந்தார்.
“அப்ப இந்தியாவும் ஏதோ கட்டிக்குடுக்கிறதா சொன்னதே?” அவரின் வாயைப் புடுங்கினேன்.

“சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதையும், உலகவங்கியின்ர காசு தான் இப்ப இதுக்கெல்லாம் உதவுது, இந்தியன் கவுன்மென்ற் பேப்பரிலை போடுறதுக்கு மட்டும் தான் வீடு கட்டிக் கொடுக்கிறதா அறிவிக்கும் அவ்வளவு தான்”.

இப்போது இந்தப் பகுதிகளில் மக்கள் மெல்ல மெல்லக் குடியேற ஆரம்பிக்கிறார்கள். 21 வருஷங்களாக இங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் மற்றைய பகுதிகளில் இயங்கிய பாடசாலைகள் மீளவும் தம் இருப்பை நோக்கி நகர்ந்திருக்கின்றன. மாதங்கள் பல கடந்த நிலையில் மக்களின் மீள் குடியேற்றம் என்பதும் மிகவும் மந்த கதியில் தான் இருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள். மீளவும் காணி, வீட்டைத் திருத்த எதிர் கொள்ளும் பெருஞ் செலவினம் என்று ஒதுங்கிக் கொள்வோர் ஒருபக்கம், குடும்பமாக வெளிநாடு சென்றோர் ஒருபக்கம் அல்லது குடும்பமாகப் பரலோகம் சென்றோர் ஒருபக்கம் என்ற நிலை. இப்படியான வெறுங்காணிகளை அப்படியே விட்டுவைத்தால் இவையும் ஸ்வாகா ஆகிவிடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

“அங்கை பாரும் கூத்தை” சின்னராசா அண்ணர் கைகாட்டிய தொலைவில் பாரிய அகழியாக சுண்ணாம்புக்கல் தோண்டப்பட்ட சுவடுகள் காங்கேசன் துறைப்பக்கம் தென்பட்டது. ஒருகாலத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை யாழ்ப்பாணத்தில் இயங்கிய போது இப்படிச் சுண்ணாம்புக்கல்லை அகழ்ந்தெடுக்கும் வேலைகள் இருந்தது. பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயங்காத நிலை வந்த போது தென்னிலங்கையின் அதிபுத்திசாலி அரசு இங்கிருந்து அகழப்படும் சுண்ணாம்புக்கற்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பி அங்கே உள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தியதாகச் சொல்வதுண்டு. இப்போது கேட்க நாதியில்லாத நிலையில் இந்தியாவால் இந்த மண் வளம் சுறண்டப்பட்டு நாடுகடத்தப்படுகிறதாம். இந்த விபரீதத்தின் விலை எதிர்காலத்தில் மிகப்பயங்கரமானது. காங்கேசன் துறைய அண்டிய கடல் நீர் மெல்ல மெல்ல உள்வாங்கப்பட்டு, பழிவாங்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்ந்த பிரதேசம் எல்லாம் நீராய் மாறும் நிலை உருவாகப்போகின்றது. யார் இதைக் கேட்பது? யாரிடம் இதைச் சொல்வது?

கீரிமலைக்கு வந்தாச்சு. மணி ஆறேமுக்காலைக் காட்டியது. நான், அண்ணன், சின்னராசா அண்ணை இவர்களைத் தவிர ஒரு குருவி இல்லை. முன்னால் ஒரு ஆமிக்காறன். எங்களை அவன் அளவெடுத்துப் பார்க்க, கீரிமலைக் கேணிப்பக்கமாக நடக்கின்றோம். இப்போது எங்களுக்குப் பின்னால் கண்காணிக்க இன்னொரு ஆமிக்காறன். கேணிக்குள் கொஞ்சப்பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருகாலத்தில் கீரிமலை பஸ் என்று இலங்கைப் போக்குவரத்துக் கழகத்தின் சிவப்பு பஸ் சனி, ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களில் இருந்து சனத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கீரிமலையில் வந்து கொட்டும். சனம் எல்லாம் குழந்தைகளாக மாறிக் கேணிப் பக்கம் ஓடுவதும் கடலில் பாய்வதுமாக ஒரே கொண்டாட்டம் தான். அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு இருந்த நீச்சல் குளியல்களில் ஒன்று கீரிமலை மற்றது கசூரினா கடற்கரை. கீரிமலையில் குளித்து விட்டு மண்டபத்தில் வறுத்த கச்சானைக் கொறித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். கூவில் பனங்கள்ளுத் தேடிப் போகும் இன்னொரு பகுதி.

“அந்தா அந்த பொந்துக்குள்ளை ஓடிப் போய் ஒளிச்சிடுவார் எங்கட அப்பா” அண்ணன் காட்டிய திசை கீரிமலைக் கேணிக்குள் இருக்கும் ஒரு பகுதி.
“இந்தக் கேணிக்குள்ள நல்ல நீர் ஊத்தும் இருக்கு” இது சின்னராசா அண்ணை”

“எங்கட அப்பா தன்ர இடுப்புப்பக்கமா முன்னுக்கு இருத்தி நீச்சல் பழக்கிக் காட்டுவார்” அண்ணன் பழைய நினைவில் மூழ்கிப்போனார்.

கீரிமலை, சுற்றுலாப்பயணிகளுக்கான ஸ்தலமாக மட்டுமன்றி இறந்தவர்களுக்குப் பிதிர்க்கடன் தீர்க்கும் பெரும் தலமாகவும் விளங்கிவருகின்றது. எங்கள் ஊரில் இறந்த ஒருவரின் பிதிர்க்கடன் தீர்க்கவெண்ணிக் கீரிமலை புறப்பட்டு சுனாமியால் ஐந்து பேர் காவு வாங்கப்பட்ட செய்தியும் உண்டு.

ஆமிக்குளியல்

சாவகாசமாக நாங்கள் கீரிமலைக் கேணியையும், கடற்கரையையும் படமெடுத்துக் கொண்டிருக்க எங்களுக்கு முன்னால் குளித்த ஈர உடம்புடன் ஒருத்தர் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார்.
“நான் 1990 ஆம் ஆண்டு இந்தப் பகுதிக்கு இராணுவப் படையுடன் வந்தவன், இடையில் சில வருஷங்கள் வேறு பகுதிகளுக்கும் போய் இருக்கின்றேன். ஆனால் இந்தப் பகுதியில் மட்டும் 14 வருஷங்கள் கடமையில் இருந்திருக்கின்றேன்” என்று சொன்ன அந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி இப்போது Lieutenant தரத்தில் இருப்பதாகச் சொல்லி, “உள்ளே நீச்சல் அடிப்பவர்கள் எல்லோருமே இராணுவத்தினர் தான்” என்றவாறே எங்களை விசாரித்து விட்டு அனுப்பினார்.

அங்கிருந்து நகர்ந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் செல்கிறோம்.

ஜமத்த முனிவர் தன் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்ய முடிவு செய்து அதைச் சிறப்பாக நடத்தித் தரும்படி தன் குருநாதர் பிருகு முனிவரிடம் கேட்டார். சிரார்த்த தினத்தன்று எதிர்பாராதவாறு வியாசமுனிவர் ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குப் போனார். ஆசாரியார்களில் முதன்மையான வியாசமுனிவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டுமே என்று ஜமத்த முனிவர் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார். சிரார்த்தம் தாமதமாகியது. சீடன் தன்னை அழைத்துச் செல்ல வராததைக் கண்ட பிருகு முனிவர் கீரி உருவம் எடுத்து ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குள் புகுந்தார். அங்கு தன்னிலும் உயர்ந்த வியாச முனிவர் இருப்பதைக் கண்டார். சிரார்த்தத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பதார்த்தங்கள் அனைத்தையும் கீரிமுகத்தில் இருந்த பிருகு முனிவர் எச்சில்படுத்திய பின் “இனி உனக்குக் கீரி முகம் உண்டாகட்டும்” என்று ஜமத்த முனிவரைச் சபித்தார். பின்னர் கோபம் தணிந்த நிலையில் கீரிமலையில் உள்ள வாவியில் மூழ்கித் தம்பேஸ்வரப் பெருமானை வழிபட்டால் உன் கீரிமுகம் நீங்கும்” என்று சாப விமோசனம் கொடுத்தார். பிதிர்க்கடனுக்கான உணவுப்பதார்த்தங்கள் எச்சில்படுத்தப்பட்ட நிலை கண்ட வியாசரும் ஜமத்த முனிவருக்கு “உனது குலம் இனி இல்லாமல் போகும்” என்று சாபமிட அவர் கீரி முகம் கொண்ட முனியாக அதாவது நகுல (கீரி) முனியாக மாறிப்போனார். (வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் நூலில் இருந்து)
ஈழத்தின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகக் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் போற்றப்படுகின்றது.
நாம் சென்றிருந்த வேளை கோயில் பூட்டப்பட்டிருந்ததால் ஆலயத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.

மேலே இருக்கும் படம் என்ன சொல்லுது என்று க்ளிக்கிப் பாருங்கள்

கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சூழவும் உள்ள ஆலயப்பகுதி இன்னும் இடிபாடுகளுடன் இருக்கின்றது. அமைதியான அந்தச் சூழலைக் கால் அளந்து விட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை நோக்கிப் பயணிக்கின்றோம்

யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்

“தம்பி! நீர் இன்னாற்ற மேன் தானே”
ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.

“பிரபு அண்ணை” இன்னொரு குரல் வரும் திசையைப் பார்க்கிறேன். என்னைக் கடந்து போகிறது எனது நண்பன் ஒருவனின் தம்பியின் குரல். சிரித்தவாறே கையைக் காட்டி விட்டு நடக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் பழமையைப் பேணும் அம்சங்களில் யாழ்ப்பாணத்து றோட்டுகளுக்கும் தனி இடம் உண்டு. எக்காலத்திலும் , எக்கேடு கெட்டாலும் பழைய தார்ச்சுவடு மாறாதவை. முன்னர் ‘சிரித்திரன்’ சஞ்சிகையில் வந்த கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகின்றது. கொழும்பில் இருந்து வந்த ஒருவர் பெருமையாக “கொழும்பு றோட்டில் எல்லாம் சோறு வைத்துச் சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம்”
பதிலுக்கு யாழ்ப்பாணத்தவர் “இது என்ன பெருமை, எங்கள் ஊர் றோட்டில் சோறு போட்டு , சொதியும் நிரப்பித் தின்னலாம்” என்பார். குண்டும் குழியுமான யாழ்ப்பாணத்து றோட்டுக்களைப் பற்றி அவர் சிலேடையாகச் சொன்னது அது.

றோட்டுப் போடுகிறேன் பேர்வழி என்று தார்ச்சாலைகளின் குழிகளை மட்டும் குறிவைத்து நிரப்பி மூடுகிறார்கள், அது அடுத்த மாரிமழையோடு வெள்ளத்தில் சங்கமமாகிவிடும். ஒருநாள் காரை நகர்வீதியால் பயணிக்கவேண்டி இருந்தது. திருஷ்டிக்கழிப்பாக நீண்ட கார்பெட் வீதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்துத் தெருக்களை இப்போது கன ரக வாகனங்களில் இருந்து ஓட்டோக்கள் வரை நிரப்பி வைத்திருக்கின்றன. முன்னரெல்லாம் லுமாலா சைக்கிளே போதும் என்றிருந்த பெண்களும் வெளிநாட்டுப்பணம் மகிமையில் சிறு ரக மோட்டார் சைக்கிளில் பவனி வருவது சர்வசாதாரணம். ஏ/எல் எடுத்துவிட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்குமா என்று ஏங்கும் மாணவ சமூகம் கூட இப்போது மோட்டார் சவாரியில் தான் பெரும்பாலும். இதே பருவத்தில் இருந்தபோது ஒரு சைக்கிள் வாங்க முன்னர் நான் போராடியதை நினைத்துப் பார்த்தேன். வாடகைக்கார் என்றால் இன்னமும் மொறிஸ் மைனரும், A40க்களும் தான் தனிக்காட்டு ராஜாக்கள்.

குண்டும் குழியுமான பாதைகளின் கரைப்பகுதியை அண்டி மினி பஸ்களும் வளைந்து நெளிந்து டிஸ்கோ ஆட்டம் காட்டி ஓடுகின்றன. யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந்துறைக்குமான அரச பஸ் சேவை இலக்கம் 769 மற்றைய சேவைகளை விட எப்போதும் இலாபம் தரக்கூடியதாக அன்றும் இன்றும் இருந்தாலும் அந்த றோட்டால் வந்தால் குடலை உருவி மாலையாகப் போட்டு விடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு தனியார் மினிபஸ் மூலம் ஒருமுறை பயணம் மேற்கொள்ளுவோம் என்றெண்ணி கோண்டாவிலில் பஸ் பிடிக்கிறேன். கிட்டதட்ட 18 வருஷங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் ஒரு பஸ் பயணம் என்ற த்ரில் வேறு.

“அண்ணை அங்க ஒரு இடைவெளி இருக்கு அதுக்குள்ளை போங்கோ” என்னை ஏற்கனவே நெரிசலில் அல்லாடிக்கொண்டிருக்கும் மினிபஸ் உள்ளே நெட்டித்தள்ளுகிறார் பஸ் நடத்துனர். உள்ளே ஒரே ஒரு காலை வைக்கக்கூடிய நிலையில் சலங்கை ஒலி கமலஹாசனாக மாறி தகிட ததிமி தகிட ததிமி தம்தானா நிலையில் நான், தாவடிச்சந்தியில் நான்கு பேர் ஏறுகிறார்கள்/அல்லது ஏற முனைகிறார்கள். “அண்ணை பொம்பிளை ஆட்கள் ஏறினம் ஒருக்கால் இறங்கி வழிவிடுங்கோவன்” என்னையும் பக்கத்தில் நின்றவரையும் குறிவைக்கிறார் நடத்துனர். உள்ளே எந்த வித ஆசுவாசமும் இன்றி எண்பதுகளில் வந்த இளையராஜாவை ரசித்துக் கொண்டிருக்கிறார் பஸ் ஓட்டுனர். நாலுபேர் இறங்கி நாலு பேரை ஏற்றி விட்டு இப்போது புட்போர்ட் இல் பயணிக்கிறோம். கொக்குவில் சந்தியில் மூன்றுபேரைக் கண்டதும் இன்னொரு புதையலைக் கண்ட ஆசையில் நடத்துனர் “அண்ணை கோல்ட் ஓன்” என்று நிறுத்த, பஸ்ஸுக்குக்கு காத்திருந்த கூட்டம் “இல்லைப் பறவாயில்லை அடுத்த பஸ்ஸில் வாறம்” என்று ஜாகா வாங்க தப்பினோம் என்று தாவுகிறோம். நடத்துனரை வழியில் விட்டுவிட்டு பஸ் பாய்கிறது. துரத்தி ஓடிவந்து புட்போர்ட் இல் ஒற்றைக்கால் பதித்து நடுவிரல்களில் இருக்கும் பண நோட்டுகளைச் சரி பண்ணியவாறே
உள்ளே தலை நீட்டிப் பயணிகளிடம் கறந்துகொண்டே,” அம்மா பின்னாலை போங்கோ, அக்கா அந்த ஓடைக்குள்ளை தள்ளி நில்லுங்கோவன்” என்கிறான், எனக்குத் தெரியும் இவன் பாவி நாச்சிமார் கோயிலடியில் இன்னொரு கூட்டத்தை ஏற்றத்தான் இப்பவே திட்டம் தீட்டுகிறான். “அண்ணை முன்னுக்காத் தள்ளுங்கோவன்” என் முதுகில் நெட்டித்தள்ளுகிறான்.எரிச்சலும் கோபமும் வர “அண்ணை இனி எங்க தள்ளுறது” என்றவாறே புறக்கணிப்பு அரசியலில் இறங்கினேன். பைசாக்கோபுரம் சாய்ந்தவாறே நகர்வது போல நிரம்பி வழிந்த பயணிகளால் அழுதுகொண்டே பயணிக்கிறது பஸ். இந்த பஸ்ஸை உருவாக்கிய ஜப்பான்காரன் கண்டால் பெருமையாக இருக்கும் 75 பேர் பயணிக்கும் பஸ்ஸில் 200 பேரை ஏற்றி பஸ்கம்பனிக்கே பெருமை கொடுக்கிறார்கள் இந்த மினிபஸ்காரர். இந்த நிலை மினிபஸ் யாழ்ப்பாணத்தில் வந்த கல் தோன்றி முன் தோன்றாக்காலத்தில் இருந்து இருக்கிறது. மூட்டுவலி, மசாஜ் போன்ற நோய் நொடிகளுக்கு இந்த பஸ் பயணம் அருமருந்தாக அமையும் வண்ணம் உடம்பை எல்லாப்ப்பாகத்தில் இருந்தும் நெருக்கும் சிலவேளை நொருக்கும். அடுத்தமுறை காய்ஞ்சோண்டி இலைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் இந்த நடத்துனரைப் பழிவாங்கலாமா என்று நினைத்தேன்

யாழ்ப்பாணத்தில் இருந்து அரச சேவை பஸ்கள் இப்போது கண்டி, ஹற்றன் உட்பட நாட்டின் மற்றைய பாகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. இடமாற்றம் கண்ட ஆசிரியர்கள் போன்ற அரச உத்தியோகத்ததுருக்கு இது பெரும் உதவியாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயிலைக் கொண்டுவருவதற்கான வேலைகள் இறக்கவிடப்பட்டிருக்கின்றன. இதுவரை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை பயணிக்கும் இந்த ரயில்சேவை 1990 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இயங்காமல் இருக்கின்றன. தண்டவாளக்கட்டைகள் பதுங்கு குழிகளுக்குப் போர்க்காலத்தில் பயன்பட, ரயில் நிலையங்கள் அகதிகளுக்கான புகலிடங்களாக மாறி விட்டன. இந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த ரயில்சேவை வரப்போகின்றது என்றால் அதற்குச் சவாலாக ஒரு செய்தி காதில் அடிபடுகின்றது. இந்த ரயில்ப்பாதைகளைக்கான உதவியை இந்தியாவும், சீனாவும் நான் முந்தி நீ முந்தி செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாம். “ஆகா உதவி செய்ய இப்படியும் போட்டியா” என்று ஆவென்று வாய் பிளக்காதீர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஆப்படிக்கும் சில திட்டங்களைக் கண்டேன் அதுபற்றிப் பின்னர் சொல்வேன்.

எனது ஊர்ச்சுற்றலுக்கு ஒரு சைக்கிள் தேவை என்று கருதி யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த மினிபஸ் இல் இருந்து வின்சர் தியேட்டர் பக்கம் இறங்கி, வெங்கடேஸவரா சைக்கிள் வாணிப நிலையம் செல்கிறேன். புது லுமாலா , கழுவி சேர்விஸ் பண்ணித்தர 12 ஆயிரம் ரூபாயாம். நாளை தரலாம் என்றார்கள். பணத்தைக் கட்டிவிட்டு வந்தேன்.

ஆயிரத்து ஐநூறு ரூபா மாதச்சம்பளத்தில் சேமிப்புக்கணக்கு, வீட்டுச் செலவுக்கணக்கு எல்லாம் போக மிச்சமிருக்கும் பணத்தில் ஆயிரம் கணக்குப் போட்டு வாழ்ந்த ஒரு வாத்தியார் வீட்டுப்பிள்ளை நான். அந்தக் காலத்தில் நான் ஏஷியா சைக்கிள் ஒன்றைப் புதுசாக வாங்கிவிடவேண்டும் என்பது பொல்லாதவன் படத்தில் தனுஷ் கண்ட மோட்டார் சைக்கிள் கனவை விடப்பெரியது. இதை வச்சு “ஒரு சைக்கிளின் கதை” என்றெல்லாம் அந்தக் காலத்தில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது என் சொந்த சம்பாத்தியத்தில் , தாயகத்தில் 21 வருஷம் கழித்து நிறைவேறியிருக்கின்றது இந்தக் காலம் கடந்த கனவு. இடைப்பட்ட காலத்தில் என் புலம்பெயர் வாழ்வில் இரண்டு புதுக்காரைக் கூட வாங்கி விட்டேன். அதில் கிடைக்காத திருப்தி இதில் கிடைத்தது மாதிரி.

சைக்கிள் கடையில் காத்துபோன சைக்கிள் ஒன்று

அடுத்த நாள் முதல் லுமாலாவில் சுற்றத்தொடங்கினேன். நீண்ட தூரப்பயணங்களுக்கு மட்டும் ஆட்டோப் பயணம். அப்படி ஒரு நீண்ட தூரப் பயணத்தை நான் சந்தித்தபோது…..

விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்

கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன். வழக்கமாக ஒரு 10 நாட்களுக்குள் என் பயணத்தை முடித்துக் கொள்பவன் முதன்முறையாக 3 வாரங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு எங்களூர்ப்பிள்ளையார் கோயில் திருவிழாக்காண ஏற்பாடுகளைச் செய்கின்றேன். அப்போதுதான் வழக்கத்துக்கு மாறாகப் புதிய ஒரு நடைமுறையைப் பின்பற்றவேண்டி வந்தது.

அது யாழ்ப்பாணத்துக்குப் போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் M.O.D clearance எனப்படும் இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொண்டு செல்லவேண்டும் என்பது. வெளிநாட்டுக்குப் போனகாலத்தில் இருந்தே என் சுயத்தை இழக்கவேண்டிய அவஸ்தையோடு காலத்தை நகர்த்திவரும் எனக்கு , நான் பிறந்த மண் எனக்கு இனி அந்நியதேசம் என்று முகத்தில் அடிப்பது போல இருந்தது இந்த விஷயம். யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வருஷங்களுக்கு முன் கொழும்புக்கு நகர்ந்த போதும் இப்படியான ஒரு சூழ்நிலை இருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக யாழ்ப்பாணம் இருந்தபோது வயசுக்கட்டுப்பாட்டுக்காரன் என்ற எல்லைக்குள் இருந்ததால் புலிகளின் அனுமதியைப் பெற ஒருவரைப் பிணையாக வைத்து ஊர் கடக்க வேண்டி இருந்தது.

நீண்ட வருஷப் பயணங்களுக்குப் பின்னர் இப்போது இந்த ரூபத்தில். கன்பராவில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலயத்தின் இணைப்பக்கம் சென்று இராணுவ அனுமதிப்பத்திரத்தைத் தரவிறக்கி அதை நிரப்பி, என் பாஸ்போர்ட் பிரதியோடு ஸ்கான் பண்ணி மீண்டும் இராணுவ அனுமதிக்கான மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுகிறேன். இரண்டு நாளில் அனுமதியை பஃக்ஸ் மூலம் அனுப்புகிறார்கள். இருந்தாலும் ஓமந்தைச் சாவடியில் வைத்து இது மூலப்பிரதி அல்ல என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் காலிமுகத்திடலில் உள்ள இராணுவ அமைச்சகத்துக்குச் சென்று மூலப்பிரதியைக் கேட்டு வாங்கி வந்தேன்.
என் பாஸ்போர்ட்டோடு ஒட்டிக்கொண்ட காதலியாகக் கூடவே பயணித்தது இந்த இராணுவ அனுமதிப் பத்திரம். போர்ச்சூழல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படியான நெருக்கடிகளோ நடைமுறைகளோ வரும்போது நம்மவர்கள் சளைக்காது சைக்கிள் கேப்பில் கிடாய் வெட்டுவார்கள். இந்த நடைமுறையையும் ஒரு கூட்டம் வகையாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு முழு நேரத் தொழிலாகச் செய்கிறது என்ற உண்மையைப் பின்னர் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் யாழ்ப்பாணத்துக்குப் புறப்படப்போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தமது விபரத்தையும் பாஸ்போர்ட் பிரதியையும் இந்தத் திடீர் வியாபாரிகளிடம் கொடுத்தால் அவர்களே முகவர்களாகச் செயற்பட்டு இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொடுப்பார்களாம். இதொன்றும் சும்மா பிரைவேட் லிமிட்டெட் இன் சேவை அல்ல, எனக்குத் தெரிந்த உறவினர் இந்தமாதிரி முகவர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்து நான்கு பேருக்கான அனுமதியைப் பெற முடிந்ததாம். இது ஆரம்ப கட்டம் என்பதால் விலை குறைவு, காலைப்போக்கில் முகவர்கள் விலைவாசி ஏற்றங்களுக்கு ஏற்ப இந்தக் கட்டணத்தை அதிகரிக்கலாம் 😉

இந்த நேரத்தில் ஒரு விஷயம், இந்த M.O.D clearance ஐ யாழ்ப்பாணம் போவதற்கு மட்டுமே என்று நினைத்துக் கிழித்துப் போட்டுவிடாதீர்கள். கொழும்பு திரும்பும் போதும் இந்த அனுமதியைக் காட்டித் தான் உள் நுழைய முடியும்.

சரி, அடுத்தது என்ன? யாழ்ப்பாணப்பயணத்துக்கான தகுந்த தனியார் பஸ்ஸைத் தேடவேண்டும். இரவு 7.30 இற்குக் கொழும்பில் இருந்து புறப்படும் பஸ் காலை 6.30 மணிக்குத் தான் யாழ் மண்ணை வந்தடையும். உங்கள் கஷ்டகாலத்துக்கு ஒரு லவுட்ஸ்பீக்கர் பஸ்காரனிடம் அகப்பட்டால் காலை யாழ்ப்பாணம் வந்ததும் காது கிழிந்து ஹலோ சொல்லும். அவ்வளவுக்குச் சத்தமாகப் படங்களைப் போட்டு உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். குளிரூட்டப்பட்ட பஸ்கள் என்று சொல்வதால் இறைச்சியைப் பதனிடும் கடும் குளிர் அளவுக்கு உயர் குளிர் எல்லையில் வைத்துவிடுவார்கள். “ஏஸிக்குக் காசு குடுத்தனாங்கள் எல்லோ? கொஞ்சம் உண்டெனப் போடுமன்” என்று சனங்கள் கேட்குமோ என்னவோ. ஒவ்வொரு முறைப் பயணத்திலும் ஒரு குளிருக்கு உகந்த கம்பளி உடையோடு நான் பயணிப்பது வழக்கம். கடந்த வருஷத்தின் மோசமான அனுபவத்தில் இந்த முறை தகுந்த பஸ்ஸைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயற்பட்டேன். Avro என்ற பஸ் சேவை நான்கு புதிய சொகுசு பஸ்களை எடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். எனவே அந்த பஸ்ஸிலேயே பயணிக்க முடிவு செய்து பதிவு செய்து கொண்டேன்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் சேவை அருமையாக இருந்தது, இரவு 10 மணிக்கெல்லாம் சமர்த்தாக டிவியை நிறுத்திவிட்டார்கள். ஏஸியும் அளவாகப் போட்டார்கள். ஆனால் யாழில் இருந்து திரும்பி வந்த பஸ்ஸில் இதற்குப் பரிகாரமாகப் பயங்கரமாகப் பழிவாங்கிவிட்டார்கள். இளைய தலைவலி விஜய் இன் உலகத்தரப்படங்கள் போக்கிரி, சுக்கிரன், சுறாவை அலறவைக்கும் சத்தத்தில் போட்டு மவனே இனி வருவியா என்று மிரட்டுமளவுக்குப் பண்ணிவிட்டார்கள். கொழும்பில் இருந்து யாழ்போன பயணம் இனிதாக அமைந்தாலும் பக்கத்தில் ஒரு சனீஸ்வரன் உட்கார்ந்து ஊரெல்லாம் ஃப்ரீ கோலில் அழைத்துச் சத்தமாகப் பேசிக்கொண்டு வந்தார்.

கிட்டத்தட்ட எட்டுப்பேரின் நித்திரையைக் கலைத்துக் கடலை போட்டிருப்பார் இந்த மனுஷர். கூடவே ஒரு அழைப்பில் “எடியே என்னைத் தெரியேல்லையே” என்று திரும்பத்திரும்பக் கேட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பின் தான் “சொறி றோங் நம்பர் போல” என்று சொல்லிக் கொண்டு அடுத்த கடலைக்குத் தயாரானர் இந்த விக்கிரமாதித்தன்.

பஸ் பயணத்தில் ஓமந்தை இராணுவச்சாவடி கடந்து முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் தரிக்கின்றது. கை, கால், முகம் அலம்பிப் பிள்ளையாரைச் சந்திக்கச் செல்கிறேன். செருப்பில்லாத வெறுங்காலோடு குருமணற் துகள்கள் கிசுகிசுக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு பிள்ளையாரை நேருக்கு நேர் சந்திக்கின்றேன். அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு
“யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்” அந்தச் சத்தம் வந்த திசையைப் பார்க்கின்றேன். பயணி ஒருத்தரின் செல்போனின் ரிங் டோன் தான் அது. ரொம்ப முக்கியம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பஸ்ஸில் ஏறுகிறேன். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறது மனசு.