பொன்னம்பலம் மாமாவும் மணியண்ணையும் இல்லாத ஊர்

“துன்பம் நேர்கையில் நீ யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” பொன்னம்பலம் மாமா ராகமெடுத்துப் பாடுகிறார்
“உது பாரதிதாசன் எழுதின பாட்டெல்லோ” – நான்
கொடுப்புக்குள்ள சிரிச்சுக் கொண்டு “பார்த்தியே உவன் பிரபு கண்டுபிடிச்சிட்டான்” பக்கத்தில நிற்கும் குமரனிடம் பெருமையாகக் கண் சிமிட்டி விட்டு
“யாழெடுத்து மீட்ட மாட்டாயா” என்று தொடருகிறார்.
அண்ணா கோப்பி என்று எங்களூரில் பெயர் பெற்ற தொழிலகத்தின் உரிமையாளர் நடராசா மாமா வீட்டில் பொன்னம்பலம் மாமாவும் வரும் போது நாங்கள் இளையராஜாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம், அவரோ “அமுதும் தேனும் எதற்கு” என்று சைக்கிளிலில் இருந்து இறங்கும் போதே பாடிக் கொண்டு நம்மைத் தேடி வருவார். 
இவ்வளவுக்கும் பொன்னம்பலம் மாமாவின் மகன் எங்களோடு கூடப் படிக்கிறவன். ஆனால் அந்த தகப்பன் ஸ்தானத்தையும் கடந்து எங்களோடு உறவாட பழைய பாடல்களை அஸ்திரமாகப் பாவிப்பார் பொன்னம்பலம் மாமா. அவரின் உருவத்தை நினைவுக்குக் கொண்டு வரும் போதெல்லாம் அந்தக் கருப்பு நிறத்தோலைத் தாண்டிய பிரகாசமான திவ்ய ஜோதியான
முகமும் நெற்றியில் நிரந்தரமாகத் தங்கியொருக்கும் சந்தனப் பொட்டும் தான் ஞாபகத்துக்கு வரும்.  வெளிர் நிறச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் தான் அவரின் தேசிய உடை. அவருடைய மகன் கொஞ்சம் விளையாட்டுத்தனம் மிகுந்தவன் படிப்பில் பெரிய நாட்டமில்லை. எங்களின் உயர் வகுப்புப் பரீட்சை முடிவுகள் வந்த போது பொன்னம்பலம் மாமாவைச் சந்திக்கிறோம்.
“உவன் தம்பிக்கு என்ன றிசல்ட்” – பொன்னம்பலம் மாமா
சொல்கிறோம்
“றிசல்ட் குறைஞ்சாலும் காரியமில்லை கவலைப்படாதை எண்டு சொல்லுங்கோ” என்று விட்டு எங்களைக் கடக்கிறார். இது நடந்து இருபது வருஷங்கள் கடந்து விட்டது. 
“பொன்னம்பலம் மாமா செத்துப் போனாராம்” ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பன் வழியாக வந்தது இந்தச் செய்தி.
இன்று வேலை முடிந்து ரயிலில் பயணிக்கும் போது பேஸ்புக் ஐ மேய்கிறேன். எங்கள் ஊரின் முகப்புப் பக்கத்திலிருந்து இன்னொரு மரண அறிவித்தலோடு
“அப்பன்! வாறன் ராசா” எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போகும் போது குரல் வந்த திக்கைப் பார்த்தால் மணியண்ணை தன் சைக்கிளில் என்னைக் கடந்து போய்க் கொண்டிப்பார். ஒற்றைக் கை உயர ஏந்திக் கை காட்டிக் கொண்டே போகும். எங்கள் ஊரின் கம்பீரம் என்றால் அது மணியண்ணை தான் என்று சொல்லுமளவுக்கு முறுக்கிவிட்ட மதுரை வீரன் மீசையும் கம்பீரமான தோற்றமும்
கொண்டவர். ஆனால் உருவத்துக்கும் அவருடைய குணத்துக்கும் எள்ளவும் தொடர்பில்லாத குழந்தை உள்ளம் கொண்டவர். அதனால் தான் அரைக்காற்சட்டைப் பையன்களையும் தேடிக் குசலம் விசாரிக்கும் பண்பு அவரிடமிருந்தது. ஊரிலுள்ள சின்னஞ்சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை எல்லாருக்கும் அவர் மணியண்ணை தான்.
எங்களூரின் வசதி படைத்த பெருந்தனக்காரர்களில் அவரும் ஒருவர். மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் மணிக் கோபுரத்தை அந்தக் காலத்திலேயே பகட்டாக அமைத்துக் கொடுத்தவர். இன்றைக்கும் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலைச் சுற்றி எல்லாமே மாறி விட்டாலும் அந்த மணிக்கூட்டுக் கோபுரம் மட்டும் அப்படியே நிமிர்ந்து நிற்கிறது. காலை ஆறரைப் பூசை மணி இணுவில் தாண்டி கோண்டாவில் காணக் கேட்கும். 
மடத்துவாசல் பிள்ளையாரடியின் மகோற்சவத்தின் தீர்த்தத்திருவிழாவுக்கு மணியண்ணை தான் உபயகாறர்.
மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும். 
பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள். 
வசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம். 
அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி? என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா? என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள். 
“வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்” கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பக்கத்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம். 
பக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள். 
சோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள். 
சுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், “அரோகரா! அரோகரா” எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்காற்சட்டை தெரியும்.
வானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும். 
மணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய், 
“என்ர பிள்ளையாரப்பு! எங்களையெல்லாம் காப்பாத்து” 
இனி மடத்துவாசல் பிள்ளையார் கோயில் திருவிழாவில் மணியண்ணையும் பொன்னம்பலம் மாமாவும் இருக்கமாட்டினம். 

மாட்டுப்பொங்கல் கிளப்பிய நினைவுகள்


ஒரு வெள்ளிக்கிழமை அம்மம்மா இறந்து விட்டார் என்ற செய்தி தாயகத்திலிருந்து கடல் கடந்து எனக்கு வந்திருந்தது. 
அப்போது உடனே என் நினவுக்கு வந்தது தாயகத்தில் நாம் வாழ்ந்த காலத்தில் எண்பதாம் ஆண்டுகளின் நடுக்கூறுகளில் 
அம்மம்மாவின் இருப்பு எவ்வாறு இருந்தது என்று.
எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை இரண்டு அம்மம்மாக்கள்.  ஒருவர் எமது தாயைப் பெற்றெடுத்தவர்
இன்னொருவர் அவரின் இளைய சகோதரி. இருவரையுமே அம்மம்மா என்று தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து அழைத்து வந்திருக்கிறோம். எங்கள் அம்மாவுக்கு மட்டும் அவர் குஞ்சியம்மா.
குஞ்சியம்மா வீட்டுக்கு அம்மா போகாத நாளில்லை, அத்திபூத்தாற் போல எப்போதாவது ஒருநாள் ஏதாவது ஒரு பணி நிமித்தம் அம்மா அங்கு செல்லாவிட்டால் “ஏன் பிள்ளை நேற்றுக் காணேல்ல” என்ற
உரிமையான விசாரிப்பு அம்மம்மாவிடம் இருந்து வரும் என்ற பயமும் அம்மாவிடம் இருந்தது. இந்த விசாரிப்பு எங்களையும் உள்ளடக்கியிருந்தது.  அவர்கள் வீட்டுக்கு எப்போது சென்றாலும்
“சாப்பிட்டுட்டியே” என்பது தான் அம்மம்மாவின் முதல் கேள்வியாக இருக்கும்.
சோதிப்பிள்ளை என்ற அவரின் பெயருக்கேற்ப தான் வாழ்ந்து முடித்த காலம் வரை அவரின் முகத்தில் ஒரு பொலிவு எப்போதும் இருக்கும். செய்யும் வேலைகளில் நேர்த்தி இருக்கவேண்டும் என்ற
அவரின் எதிர்பார்ப்புப் போலவே அவருடைய உடையலங்காரமும் இருந்தது. வீண் ஆடம்பரம் என்பது அவரின் செய்கையிலும் இருந்ததில்லை. 
அம்மம்மா வீட்டை ஒட்டிய வைரவர் கோயிலுக்கு வரும் அயல் வீட்டுக்காரர் சோதிப்பிள்ளை அக்காவிடமும் சுகம் விசாரிக்காமல் போகமாட்டார்கள். வரும் விருந்தாளிகளுக்குத் தேத்தண்ணி கொடுத்துச் 
சுகம் விசாரித்து விட்டுத்தான் மறுவேலை அவருக்கு.  
ஒரு பெரும் செல்வந்தரின் மனைவி என்ற இடாம்பீகம் அவரது வாழ்க்கையில் துளியும் ஒட்டியிருந்ததை எங்களால் காணமுடியவில்லை. வீட்டில் இருக்கும்
போது சமையலறையில் வேலையாட்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வேலைகளைக் கவனிப்பது என்பது ஒருபுறமிருக்க, வெயில் சாய்ந்ததும்
தன் கறுத்தக் குடையை விரித்து நிழலைப் பரப்பி அந்த நிழலில் நடை பயின்று இணுவிலில் இருந்து தாவடி முகப்பு வரை சென்று தன் இரண்டாவது மகன் வீட்டில் இருந்து அதனைச் சூழவுள்ள தம் காணிகளை மேற்பார்த்து
வருவது அவரின் இன்னொரு கடமை.  வெறுமனே காணிகளாக இல்லாது மா, பலா, வாழை எல்லாம் தலையெடுத்து அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வைத்துத் தானே மேற்பார்வை செய்து
வந்திருந்தார்.
இந்தியாவில் தீபாவளி எப்படி ஒரு பெருங் கொண்டாட்டமாக இருக்குமோ அந்த அளவுக்கு விசேஷமான முதன்மைப் பண்டிகை என்றால் ஈழத்தைப் பொறுத்தவரை அது தைப்பொங்கல் தான். தைப்பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கலும் எங்களூரில் வெகு விசேஷமாக இருக்கக் காரணம் ஊர் மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மை செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் அதிகாலை சூரியன் எழ முன்பு துயில் கலைந்து தோட்டத்துப் பயிருக்குத் தண்ணீர் இறைக்கப் போவதும், மாலை வீடு திரும்பியதும் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் ஒரு எட்டு நடை நடந்து தோட்டத்தைப் பார்த்துவிட்டு அசை போ மாட்டோடு வீடு திரும்பித்தான் மறுவேலை. எண்பதுகளின் நடுப்பகுதி வரை உழவு இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு அதிகம் இல்லாததால் ஏர் பூட்டவும், சந்தைப்படுத்தல் போக்குவரத்துக்கும் மாடு தான் உற்ற தோழன். எங்கள் அப்பாவும் ஆசிரியராகவும் தோட்டக்காரராகவும் இரட்டைச் சவாரி செய்தாலும் எங்கள் வீட்டில் ஆடு தான் அரசாண்டது. ஆடு வளர்ப்பது அப்பாவுக்கு மூன்றாவது வேலை. எங்களூர் மாடுகளுக்கு இத்தகு உயரிய பொறுப்பு இருந்ததால் மாட்டுப் பொங்கல் நேரம் அவற்றுக்கான கவனிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். வாய் பேசாத ஜீவன் என்று பேர்தான் ஆனால் மேய்ச்சலுக்குப் போன மாட்டுடனோ அல்லது வண்டி கட்டிப் போகும் மாட்டுடனோ கூடவே தன்னுடைய சொந்த இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டே வரும் மாட்டுக்காரரைக் கண்டிருக்கிறேன். இங்கே நான் பகிர்ந்திருக்கும் படங்கள் போன வருஷம் எங்களூரில் நடந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வை நண்பர் வாயிலாகப் பெற்றது.
தாவடியில் இருக்கும் வீட்டில் ஒரு கொட்டகை அமைத்து  அங்கே மாடுகளை வளர்த்து வந்தார் அம்மம்மா. மாட்டுப் பொங்கல் அன்று அந்தக் கொட்டகை வழக்கத்துக்கு மாறான பொலிவோடு இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தீர்மானம் போட்டு வைத்துவிடுவார். முதல்வேலையாக மாடுகளைக் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்தி வெளியே வளர்ந்திருக்கும் தென்னை மரங்களின் கீழ் ஆளுக்கு (மாட்டுக்கு) ஒரு தென்னை மரம் என்று ஒதுக்கிவிடுவார். அவை பசியாறி ஓய்வெடுக்க கற்றை கற்றையாக வைக்கோல்களை இறைத்து விட்டால் அவை தன்பாட்டுக்குக் காரியத்தில் இறங்கும். 
உச்ச வேகத்தில் பாயும் தண்ணீர்க் குழாயின் இறைப்பால் அந்த மாட்டுக் கொட்டகையின் இண்டு இடுக்கெல்லாம் ஒளிந்திருக்கும் குப்பைகள் ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டு வெளியே ஓடும். சாணி பூசிய நிலத்தின் உண்மைச் சாயம் வெளுக்கும். பின்னர் ஈர்க்குமாறு எடுத்து அந்த நிலமெல்லாம் ஒத்தடம் எடுக்குமாற்போல நீரை வெளித்தள்ளிக் காய வைக்கும் வேலை. மாடுகள் இதையெல்லாம் புதினமாகப் பார்த்துக் கொண்டு படுத்திருந்து அசை போடும்.
அடுத்த வேலை ஒவ்வொரு மாடாக இழுத்து வந்து ஜலக்கிரீடை பண்ண வைப்பது. நன்றாகக் குளித்த் மாடுகளின் முன் நெற்றியில் திருநீற்றை இழுத்து விட்டுப் பென்னம் பெரிய குங்குமப் பொட்டை வைத்தால் பக்திப் பழமாக நிற்கும் அந்தத் தோற்றமே அழகு.
இதற்குள் மாட்டுக் கொட்டகை ஓரளவு காய்ந்திருக்கும். வெளியே மாக்கோலம் போட்டு முந்திய நாள் தைப்பொங்கலுக்குச் செய்த அதே பாவனையில் மாட்டுப் பொங்கல் வைக்கப்படும். வாழை இலையை மாடுகளுக்கு முன்னே வைத்து பொங்கல் சம்பிரதாயபூர்வமாகப் படைக்கவும், முந்திய நாள் சுட்ட வெடியில் மீதி வைத்தவை வெடித்துத் தீர்க்கப்படும்.
ஒரு செல்வந்தரின் மனைவியாக இருந்ததோடு, படித்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், எல்லோருடனும் பேசி அவர்களைக் கவரும் வல்லமையைக் கொண்டிருந்தவர் அம்மம்மா.
அவருக்கே இயல்பான நகைச்சுவை உணர்வைப் பலதடவை எண்ணிச் சிரித்ததுண்டு. 
ஒருமுறை கொழும்பிலே இருக்கும் அவரது இல்லத்தில் மாலை வேளை தொலைக்காட்சியில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கிறோம், 
அம்மம்மாவும் தன் ஆஸ்தான சவுக்குக்கதிரையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். 
அதில் இசையமைப்பாளர் தேவா  தன் பிரபல பாடலான “நான் சொல்ல மாட்டேன் அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்” என்று பாடுகிறார். 
அம்மம்மாவுக்குச் சினம் வந்து விட்டது. 
“நீ சொல்லாட்டிப் போவன் எங்களுக்கென்ன” என்று சொல்லிவிட்டு எழும்பிப் போகிறார்.
 அம்மம்மாவின் வயதை ஒத்தவர்களுக்கு இருக்கும் தீவிரமான மனப்போக்கு இல்லாத, இயல்பாகப் பழகக் கூடிய
ஆளுமையாகவே அவர் இறுதி வரை இருந்திருக்கிறார். இந்த ஆளுமை என்பது அவருடைய வாழ் நாள் தோறும் நிரம்பியிருந்தது என்பதற்கு வாழ்நாளின் கடைசி மாதங்கள் மெய்ப்பித்திருந்தன.
அந்த நாட்களில் அவரின் நினைவு தவறி, பிள்ளைகளையும் அடையாளம் காணாத அளவுக்கு வந்த போது,  எங்களை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பார்.
திடீரென்று “நான் யார் தெரியுமா” என்று கேட்டால் “ஓ தெரியும், இப்ப கொஞ்ச முதல் சொன்னனீங்கள் எல்லோ” என்று கேட்பவரையே வெட்க வைக்கும் அளவுக்கு சாமர்த்தியமாகப் பதில்
சொல்லுவார். எங்கள் அம்மம்மா இதைப் போல ஏராளம் நினைவுகளை எங்களைச் சுமக்க வைத்து விடை பெற்றிருக்கின்றார்.
அம்மம்மாவின் பிரிவோடு எங்களின் முந்திய தலைமுறையின் ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. ஆனால் அவர் எமக்குக் காட்டிய பரிவும், வாழ்ந்து காட்டிய நெறியும் அடுத்த தலைமுறைக்கும் இட்டுச்
சொல்லும். 

எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர்

ஒரு சுபயோக சுப தினத்தில் எங்கள் பாடசாலைக்கு ஒரு கொம்பியூட்டர் வந்த செய்தியை, காலைவேளைக் கூட்டுப்பிரார்த்தனை முடிந்த கையோடு அறிவிக்கிறார் பாடசாலை அதிபர். எங்களுக்கெல்லாம் வலு சந்தோசம் இருக்காதா பின்னை. விக்ரம் படத்திலை தான் கம்பியூட்டர் எண்டால் என்னவென்ற ஒரு அடிப்படை அறிவு வந்தது. சுஜாதா அந்த நேரம் குமுதத்தில் தொடராக எழுதேக்கை எல்லாம் சதுரம் சதுரமான எழுத்துகளோட வரும்போதே அதைப் பார்த்து கொப்பியில் அச்சடித்தது போல எழுதிப்பார்க்கிறது வழக்கம். லையன்னா, ளனா எல்லாம் சதுரம் சதுரமா சின்னச் சின்ன முக்கோணமா எழுதி “இப்பிடித்தான்ரா கொம்பியூட்டர் மனுசர் சொல்லச் சொல்ல எழுதுமாம், மனுசர் என்ன கேட்டாலும் டக்கு டக்கு எண்டு சொல்லும் கொம்பியூட்டர் மூளை” என்று கூட்டாளிமாருக்குப் பீலா விட்டிருந்த நேரம், சொன்ன சாமானே எங்கட படலைக்குள் வந்தால் எப்படி இருக்கும் எங்களுக்கு.

கொம்பியூட்டருக்கு என்று ஒரு தனி அறை ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அதுவரை இன்னொரு வகுப்பறையாக இருந்த அந்த அறையில் தனி ஒரு கொம்பியூட்டர் மட்டும் தான் இனிமேல் இருக்கும். “சரி அடுத்ததென்ன கொம்பியூட்டர் பழக எல்லாருக்கு வசதி செய்து கொடுப்பினம், முதல்வேலையா அந்தச் சதுரம் சதுரமா எப்பிடித் தமிழ் எழுதுறது எண்டு கண்டு பிடிக்கவேணும்” என்று மனசுக்குள் ஓராயிரம் கற்பனைக்குதிரைகளை அவிழ்த்து விட்டோம். ஆனால் அடுத்த நாள் அதிபரிடமிருந்து இன்னொரு அறிக்கை மரண அடியாக வந்து விழுந்தது.
“பிள்ளையள் நீங்கள் விருப்பப்பட்டா கொம்பியூட்டர் படிக்கலாம் ஆனால் கணிதம், ஆங்கிலம் இரண்டுக்கும் எண்பது மார்க்ஸ் இற்கு மேலை எடுத்திருக்கோணும்” ஓராயிரம் கற்பனைக் குதிரையும் வாயால் ஊதிப் பெருப்பித்த பலூன் பொசுக்கொண்டு இறங்கின மாதிரி இருந்தது. எனக்கோ, சக கூட்டாளிமாருக்கோ கணிதம் ஆங்கிலம் இரண்டும் ஜென்ம விரோதிகள், சைவசமயம், தமிழ் இரண்டிலும் தொண்ணூறுக்கு மார்க்ஸ் இற்கு மேலை எடுத்தவை என்று ஒரு அறிக்கை வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று மனதுக்குள் புழுங்கினோம். ஆனாலும் ஏற்கனவே கணித பாட நேரத்தில் கொப்பிக்குள் களவாக ராணி காமிக்ஸ் படிக்கிற எங்களுக்கு இன்னொரு சவாலையும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் இல்லாததால் பறவாயில்லை என்று எங்களையே மனச்சமாதானம் செய்து கொண்டோம். கொம்பியூட்டர் சிலவேளை கணக்குப் போட்டு நிறுவச் சொல்லிக் கேட்குமோ என்ற மனப்பிராந்தி தான் காரணம்.

B வகுப்புக்காறங்கள் தான் நிறையப்பேர் படிப்பாங்கள் எல்லாரும் கணக்கு, இங்கிலீஷில் சுழியன்கள், பறவாயில்லை கொம்பியூட்டர் படிக்கேலேட்டியும் அதை ஒருக்கால் பார்த்தாலே போதும் என்ற நிலைக்குக் கீழிறங்கி வந்தது தீர்வுத்திட்டம். ஆனால் அதுவும் அவ்வளவு சாத்தியமில்லைப் போல. கொம்பியூட்டர் அறை எப்போதும் இறுக்கமாகப் பூட்டப்படிருந்தது. அறை வாசலில் ஒரு பெரிய கால் துடைப்பு மெத்தை போடப்பட்டு அதுக்குப் பின்னால் இரண்டாம் கட்டக் கால் துடைக்கும் துணியும் போடப்பட்டு இருந்தது. கொம்பியூட்டர் அறைக்குள்ளை போறவை கண்டிப்பாக சப்பாத்து, செருப்பை அறைக்கு அரை அடி தூரத்தில் கழற்றி வைக்கவேணும், தூசு, அழுக்கு ஒண்டும் கொம்பியூட்டருக்குள்ளை போகக்கூடாது என்ற கட்டளையாம். அதை விட, கொம்பியூட்டர் படிக்கிறவையைத் தவிர யாரும் உள் நுழைய முடியாது என்ற ஒரு தடுப்புக்காவலும் போடப்பட்டிருந்தது. மோகனதாஸ் மாஸ்டர் தான் பொறுப்பாகக் கவனிப்பார் என்று அவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

“வாரத்தில் இரண்டு நாள், ஒவ்வொரு மணி நேரம் தான் கொம்பியூட்டர் கிளாஸ் நடக்குமாம் இதுவரை கொம்பியூட்டரை எப்பிடி திறக்கிறது, மூடுறது எண்டு காட்டித்தந்திருக்கினம்” கிளாசுக்குப் போற B வகுப்புக்காறப் பெடியன் சொன்னன். ஒரு நாள் கொம்பியூட்டர் வகுப்பு நடக்கிற நேரம் அந்தப் பக்கமாய்ப் போய் எட்டிப்பார்ப்போம் என்று கூட்டாளி ஒருத்தனோட எங்கட வகுப்பறையில் இருந்து வெளிக்கிட்டாச்சு. வழி தெருவில மகேந்திரன் மாஸ்டரைக் காணக்கூடாது, கண்டால் “எங்கையடா வகுப்பு நேரத்திலை திரியிறீங்கள்” என்று சொல்லிக் கண் மண் பாராமல் கராத்தே பழகிவிடுவார். ஒரு வழியாக கொம்பியூட்டர் அறைப்பக்கம் வந்தாச்சு. ஆனால் உள்ளே வகுப்பு நடந்தாலும் அந்த அறை பூஸா தடுப்பு முகாம் போல பலத்த காவலோடு பூட்டப்பட்டிருந்தது. வெளியில ஒரு பொலிஸ்காறனைப் போடாதது தான் இல்லாத குறை கண்டியளோ. கதவு நீக்கலுக்குள்ளால (ஓட்டை) எட்டிப்பார்த்தால் சின்ன வெள்ளைப்பெட்டியைச் சுத்திப் பெடியள் நிக்கிறாங்கள். அதைத் தவிர எதுவும் தெரியவில்லை. இதுக்கு மேலையும் இந்த இடத்தில் மினக்கெட்டால் மகேந்திரன் மாஸ்டர், கராத்தே என்று பயம் தொற்றிக்கொள்ள அந்த இடத்தில் இருந்து விலகியாச்சு.

சில காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக ஊர் முழுக்க “கொம்பியூட்டர் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்” எண்டு புது நோட்டீஸ்கள், கொம்பியூட்டர் இப்ப வெளி உலகையும் சந்திக்க வந்துட்டுது தனியார் கல்வி நிறுவனங்கள் வழியாக. ஆனாலும் ஒன்றிரண்டு தான் அப்போது. முன்னை நாளிலை ஏ.எல் (பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு) எடுத்துப் போட்டு ரைப்பிங் கிளாஸ் போறம் என்று லெவலாகச் சொன்ன பெடி பெட்டையள் காலம் போய், “கொம்பியூட்டர் கிளாசுக்குப் போறன்” என்று பெருமையடித்துக் கொள்ளும் காலமாகிவிட்டது. டைப்ரைட்டர் எல்லாம் மியூசித்தில் சேர்க்கவேண்டிய வஸ்து ஆகிவிட்டன.

ஆனால் அந்தக் கொடுப்பினை இல்லாமலேயே நான் அவுஸ்திரேலியா வந்து பல்கலைக்கழகப் படிப்புக்குப் போக முன்னர் ஆறு மாதம் கொம்பியூட்டர் பழகலாம் என்று மெல்பர்னில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் படித்தேன். அப்போதெல்லாம் ப்ளொப்பி டிஸ்க் கருப்பான பெரிய கொப்பி சைசில் இருக்கும். அதை வாங்கி வச்சிருக்கிறதே ஒரு பெருமை தான். அப்போது பேர்த் நகரத்துக்கு வந்து சேர்ந்த கூட்டாளி உமாகரனும் போனில் பேசும் போது “மச்சான் பிரபு ! நான் எதையும் தாண்டிப்போடுவன் ஆனால் இந்தக் கொம்பியூட்டரைத் திறந்தால் தான் வயித்தைக் கலக்குது” என்று அநியாயத்துக்குக் கிலி கொண்டு பேச நான் ஆறுதல் கொடுத்தது இப்ப நினைவுக்கு வருகுது.

 1996 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒரு கொம்பியூட்டரை வாங்க முடிவெடுத்து என் சேமிப்புக் காசு எல்லாத்தையும் நிரப்பி இரண்டாயிரத்துச் சொச்சம் டொலருக்கு ஒரு கொம்பியூட்டர் வாங்கியாச்சு, அந்தக் காசு இப்ப ஐயாயிரம் டொலர் பெறும். என்னோடு மெல்பர்னில் அறைத்தோழனாக இருந்த கோயம்புத்தூர் பெடியன் சதீஷ், “முதல் வேலையா அந்தக் கொம்பியூட்டர் பெட்டியை சுவாமி அறைக்குக் கொண்டு போய் அங்கை வச்சுப் பிரிங்க, அப்புறமா சாமி படத்துக்கு வேண்டி, கம்பியூட்டருக்கு ஊது வத்தி காட்டிடுங்க, திருநீற்றையும் அது மேல தடவிடுங்க பிரபா” என்று திடீர் புரோகிதராக சமய விளக்கம் சொல்ல அதன் படியே நடந்தது எல்லாம். கொம்பியூட்டர் பாவிக்காத நேரம் அதைச் சுற்றி வந்த பாலித்தீன் பையினால் மூடி, போதாக்குறைக்கு இன்னொரு துண்டையும் போர்த்தி விடுவோம். அந்த நேரம் கொம்பியூட்டர் வாங்க வசதிப்படாத நண்பர்களுக்கும் எங்கள் வீட்டுக் கொம்பியூட்டர் தான் கதி. சாமம் சாமமாக இருந்து பல்கலைக்கழக அசைன்மெண்ட் செய்த கூட்டாளிமாரும் உண்டு.
மெல்ல மெல்ல இணையமும் பிடிபட ஆரம்பித்தது, அப்போது மிகச் சொற்ப தமிழ்த்தளங்கள் தான். ஈழம் செய்திச் சேவை என்று லண்டனில் இயங்கிய தமீழீழ விடுதலைப்புலிகளின் தலைமையகத்தில் இருந்து தினமும் ஸ்கான் செய்து போட்ட தமிழ்ச்செய்திகளைப் படிப்பதே அலாதிப்பிரியம், அப்போது அது இலுப்பைப்பூ அல்லவோ.

அவுஸ்திரேலியா வந்து பல வருடங்கள் கழித்து ஊருக்குப் போகிறேன். ஊர் முழுக்க இன்ரநெற் கஃபே தான், ஸ்கைப்பில் பேச, கொம்பியூட்டர் கேம் விளையாட, கொம்பியூட்டர் மூலம் வெளிநாட்டு அழைப்புக்களை ஏற்படுத்த எல்லாம் வசதி உண்டு என்று கொட்டை கொட்டையான எழுத்துகளுடன் திடீர்க் கடைகள் வந்து குமிந்து விட்டன. ஆனாலும் செருப்பைக் கழற்றிவிட்டு கடைக்கு உள்ளே நுழையவும் என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் நீக்கப்படவில்லை.

ஒருமுறை யாழ்ப்பாணம் லேடீஸ் கொலிஜ் இற்கு முன்னால இருந்த இன்ரநெற் கடையில் இப்படியானதொரு அறிவிப்பைப் பார்த்து, அவுசியில் இருந்து வாங்கிப்போன புதுக் காலணியை வெளியே கிடத்திவிட்டு அரை மணி நேரம் ஈமெயில் பார்த்து விட்டு வந்தால், அந்தக் காலணிகள் மாயம். அந்தக் கொடும் வெயிலில் வெறுங்காலோடு சைக்கிள் மிதித்து யாழ்ப்பாணம் நியூ மார்க்கெட் வந்து பாட்டாக் கடையில் செருப்பு வாங்கிப் போட்டுக் கொண்டு இணுவிலுக்குப் போனேன். இன்றைக்கு எங்கள் கிராமத்தில் கொம்பியூட்டர் இல்லாத வீடே கிடையாது. டிவிக்குப் பதிலாகப் டிவிடி படம் போட்டுப் பார்க்க வசதி, நாடகமும் யூடியூப் இலை பார்க்கலாம் எல்லோ” என்று சொல்லும் தாய்க்குலங்கள் வரை இந்தக் கொம்பியூட்டரின் பரிணாமம் பரந்து விரிந்திருக்கிறது. ஏதேனும் கஷ்டமான காரியத்துக்கு மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாலும் எண்பது வயது கந்தையா அண்ணை “உந்தக் கொம்பியூட்டரிட்டக் கேட்டுப் பாரன்” என்று ஆலோசனை சொல்லுறார்.
ஆனாலும் எனக்கு இன்று வரை புரிபடாத விடயம் “ஏன் கொம்பியூட்டர் திறந்து மூட கணிதமும் ஆங்கிலமும் படிக்கவேணும்” எண்டதுதான்.