காவலூர் ராசதுரை – ஈழத்து ஊடகத்துறை அடையாளம் ஒன்று உதிர்ந்தது

ஈழத்து
இலக்கிய மற்றும் ஊடகத்துறை அடையாளங்களில் ஒருவராக விளங்கிய காவலூர்
எஸ்.இராசதுரை அவர்கள் காலமாகிவிட்டார் என்ற  செய்தி சிலமணி நேரங்களுக்கு
முன்னர் கிட்டியபோது வெறுமனே “மனவருத்தம் அளிக்கும் செய்தி” என்று
வார்த்தைகளை உதிர்க்க முடியாத அளவுக்கு கவலையை ஏற்படுத்தி நிற்கிறது.
காவலூர் ராசதுரை அவர்கள் ஈழம் நன்கறிந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், விளம்பர நிறுவன நிர்வாகி, சிறுகதை, கட்டுரைப்படைப்பாளி ஆவார்.
என்னுடைய வானொலிப் பணியின் ஆரம்ப காலத்தில் 2000 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இவர் சிட்னிக்குத் தன் பிள்ளைகளைப் பார்க்கும் நோக்கில் வந்தபோது குறுகிய வானொலிப் பேட்டி ஒன்று எடுத்திருந்தேன். அப்போது “பொன்மணி” என்ற ஈழத்துத் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்ற அடையாளமே அவர் குறித்த அறிமுகமாக வெகுவாக என்னிடம் இருந்திருந்தது. பொன்மணி திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா இவர். பொன்மணி திரைப்படம் பல்வேறு விதமான விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தாலும் இந்தப் படம் செய்த ஒரு பெரும் பணி, படத்தில் நடித்த கலைஞர்களில் ஈழத்தின் அறிவுசால் மட்டத்தில் பெரிதும் போற்றப்படும்பேராசிரியர் சிவஞானசுந்தரம் (நந்தி), பேராசிரியை சித்ரலேகா மெளனகுரு உள்ளிட்டோர் நடித்த படம் அதுமட்டுமன்றி ஈழத்து வாழ்வியலின் ஆவணப்படமாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது.
 ஒலிப்பதிவு செய்யப்படாமல் நேரடியாக வானலையில் வந்த அந்தப்  பேட்டியின் போது “ஐயா” என்று நான் அவரை விளித்துக் கேள்விகளை ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் “என்னை ஐயா என்று கூப்பிடாதேங்கோ” என்று சங்கோஜப்பட்டார். எனக்கு அப்போது கொஞ்சம் கிலேசமாகவும் இருந்தது. ஒரு மூத்த ஆளுமைக்கான கெளரவ அடையாளமாகவே “ஐயா” என்ற பதத்தைப் பாவித்தேன். ஆனால் பின்னாளில் அவர் சிட்னியில் நிரந்தரமாகத் தங்கி நட்புப் பூண்டிருந்த காலத்தில் தான் அவரை முழுமையாக அறிந்து கொண்டு தெளிந்தேன்.  காவலூர் ராசதுரை அவர்கள் விளம்பதுறை குறித்த நீண்ட நெடிய அனுபவம் மிக்கவர்.  ஆனால் தன்னளவில் வீண் விளம்பரங்கள் ஒட்டாமல் பார்த்துக் கொண்ட அடக்கமான ஆளுமை அவர்.

“விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூலை எழுதியவர். ஈழத்தமிழ்ப் பதிப்புலகில் மட்டுமன்றி தமிழகத்திலும் கூட விளம்பரத்துறை குறித்த விரிவான எழுத்துகள் தமிழில் வந்ததில்லை. அந்த வகையில் குறித்த இந்த நூலை நான் படிக்கும் போது இவரின் பன்முகப்பட்ட அனுபவத்தை வியந்தவாறே படித்தேன்.

பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும் இந்த்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல அதன் சூட்சுமங்களையும் உணர்ந்து தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்தச் சிலருள் காவலூர் ராசதுரையும் ஒருவர். பத்திரிகைத் துறையாகட்டும், சிறுகதை, நாவல், இலக்கிய, விமர்சனமாகட்டும் ஒலிபரப்புத் துறையாகட்டும் ஏன் விளம்பரத்துறையாகட்டும் எதிலுமே தன் கைவரிசையைக் காட்டு வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை மெய்ப்பித்து வருபவர் காவலூர் ராசதுரை.


1978 இல் வானொலி உத்தியோகத்திலிருந்து விடுபட்டு தனிப்பட்ட முறையில் விளம்பரத் தாபனம் ஒன்றை நிறுவினார்.குறுகிய காலத்த்ல் முன்னணி விளம்பர நிறுவனங்களுடன் போட்டி போட்டு சர்வதேச நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூட விளம்பரப் பிரதிநிதி நிறுவனமாக வசீகரமாக அதனை நடத்து வருகிறார். (வீ.ஏ.திருஞானசுந்தரம் தினகரன் வாரமஞ்சரி ஏப்ரல் 13, 1986.)


110 பக்கங்களுடன், பத்திரிகை விளம்பரத்தின் பூர்வீகம், அமெரிக்க விளம்பரத்துறையின் ஆரம்பம், விளம்பர முகவர்களின் உதயம், விளம்பரத்தின் ஆற்றலும் ஆற்றாமையும், விளம்பரத்தைத் திட்டமிடல், சந்தை நிலை பற்றிய ஆய்வு, விளம்பர ஊடகங்களைத் தெரிவு செய்தல், விளம்பரத்தை அமைக்கும் முறைமை, விளம்பர வாசகத்தின் கட்டுக்கோப்பு, விளம்பரத்தின் வடிவமைப்பு, அச்சு ஊடகத்துக்கென விளம்பரம் அமைத்தல், இலங்கையில் விளம்பரத்துறையின் வரலாறு, இலங்கையில் வானொலி விளம்பரத் துறையின் வரலாறு, வானொலி விளம்பரங்கள், விளம்பர அறிவிப்பாளர்களின் தகைமைகள், வர்த்தக ஒலிபரப்பின் வீச்சும் சொல்வாக்கும், தொலைக்காட்சி விளம்பரங்கள், விளம்பரமும் சாதியமும், விளம்பரமும் பெண்ணியல் வாதமும், விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன் ஆகிய தலைப்புக்களில் ஒக்டோபர் 2001 வெளியிடப்பட்டது. வசீகர அட்வேட்டைசிங் வெளியிட்டது.


குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைக் கோவை), வீடு யாருக்கு (குறுநாவல்), ஒரு வகை உறவு (சிறுகதைக் கோவை) போன்ற நூல்களையும் இவர் ஆக்கியளித்தார். (
மேற்கோளின் பத்திகள் நன்றி: காவலூர் ராசதுரை அவர்கள் எழுதிய “விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்”

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இவரின் மறைவினையொட்டி நான் பணிபுரியும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களிடமிருந்து நினைவுப் பகிர்வைத் தற்போது எடுத்துக் கொண்டேன். இதோ அதன் ஒலிவடிவம்

Download பண்ணிக் கேட்க
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை  ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச்  சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார். ஏனெனில் இந்த விஷயம் தெரிந்தால் ராசதுரை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரியும். ஆனால் கலைஞர்களும் படைப்பாளிகளும் அவர்தம் வாழும் காலத்தில் கெளரவிக்கப்படவேண்டும் என்ற முனைப்போடு செயற்படும் திரு முருகபூபதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக அமைந்தது இந்த நிகழ்வு. பெருமதிப்புக்குரிய கவிஞர் அம்பி, மூத்த கலைஞர் திரு சிசு நாகேந்திரன், ஓவியர் ஞானம்,  இலங்கை ஒலிபரப்புத்துறை முன்னை நாள் பணிப்பாளர் திருமதி ஞானம் இரத்தினம், எழுத்தாளர் கலாநிதி ஆ.கந்தராசா, கவிஞர் திரு.செ.பாஸ்கரன், டாக்டர் பாரதி ஆகியோர் பங்கேற்று இந்த இலக்கியச் சந்திப்பையும் காவலூர் ராசதுரை அவர்களின் 75 வது பிறந்த நாள் கெளரவிப்பையும் பூரணத்துவப்படுத்தினார்கள்.

அந்த நிகழ்வில் பேசிய திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் காவலுர் ராசதுரை அவர்கள் இலங்கை வானொலியில் கொடுத்த பங்களிப்பின் அறியப்படாத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கலைக்கோலம் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக இவர் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இன்னொரு அறியாத தகவல் இலங்கை வானொலிக்கே தனித்துவமான “செய்தியின் பின்னணியில்” என்ற சமகால நாட்டு நடப்பு அலசல் நிகழ்ச்சியைக் கொண்டு வந்தவரும் காவலூர் ராசதுரை அவர்களே என்ற செய்தியை அப்போது சொல்லியிருந்தார்.

காவலூர் ராசதுரை அவர்களின் படைப்பான “காலங்கள்” அப்போது ரூபவாஹினியில் வந்த காலகட்டத்தையும் மறக்க முடியாது.  தோட்டத்தொழிலாளர் வாழ்வியலை இந்த நாடகம் பிரதிபலித்திருந்தது.

 

 எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி அவர்கள் நிகழ்வைத் தலைமை தாங்கிப் பேசிய போது

 திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் திரு.காவலூர் ராசதுரை அவர்கள்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்த போது

 கவிஞர் அம்பி அவர்கள் ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது

 கலாநிதி ஆ.கந்தராசா ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது

 ஓவியர் ஞானம் அவர்கள் ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது


 காவலூர் எஸ்.ராசதுரை அவர்களின் 75வது பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாடிய போது

அந்த நிகழ்வின் காணொளி சிறுதுளியாக வீடியோவில் பகிர்கிறேன். இந்தக் காணொளியில் அமரர் ராசதுரை, எழுத்தாளர் முருகபூபதி, திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் இடம்பெறுகின்றார்கள்.

ஒக்டோபர் 7, 2007 ஆம் ஆண்டு சிட்னியில் இயங்கும் தமிழ் முழக்கம் வானொலியின் 15 வது ஆண்டு நிறைவு நிகழ்வில்  ஆம் ஆண்டு ஈழத்தின் புகழ் பூத்த நாடகக் கலைஞர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் அவர்களது
“அண்ணை றைற்” என்னும் தனி நடிப்பு நாடகங்களின் தொகுதியை ஒலிவட்டை வெளியிட எண்ணினேன். அதற்குப் பொருத்தமானவர் திரு காவலூர் ராசதுரை அவர்களே என்று கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணரிடம் தெரிவித்த போது அவர் தொலைபேசி வழியாகக் காட்டிய குதூகலம் இன்னும் நினைப்பில் இருக்கிறது. அவ்வளவு தூரம் தான் வானொலியில் பணிபுரிந்த காலகட்டத்தில் காவலூர் ராசதுரை அவர்களின் மேல் பெரு மரியாதை வைத்திருந்தார். கே.எஸ்.பாலச்சந்திரனின் ஆரம்பகால நாடக வாழ்வியிலில் திரு
காவலூர் இராசதுரை அவர்களின் ஊக்குவிப்பும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது
என்று பாலா அண்ணர் அப்போது சொல்லியிருந்தார்.

“அண்ணை றைற்” தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டை பிரபல எழுத்தாளரும், இலங்கை
வானொலியின் முன்னை நாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திரு காவலூர்
இராசதுரை அவர்கள் வெளியிட, வானொலி மாமா திரு.மகேசன் அவர்கள் பெற்றுக்
கொண்டார்.

 என்னளவில்  இந்த இரண்டு நிகழ்வுகளையும் இன்றும் நான் நினைத்துத் திருப்தியடையும் ஒரு பணியாகவே இதைப் பார்க்கிறேன்.

சிட்னியில்
எனது வீட்டில் இருந்து ஒரு சில நிமிட நடை தூர நெருக்கம் மட்டுமல்ல காவலூர்
இராசதுரை அங்கிள் என்று நான் தொலைபேசியிலும் நேரிலும் பேசும் போது
பல்லாண்டு காலப் பந்தம் கொண்டவர் போல அந்த ஒரு சில வருடப் பழக்கத்தோடே
என்னுடன் நட்புணர்வு பேணி வந்தவர்.

அவர்

வாத நோயினால் முழுமையாகப் பாதிக்கப்பட முன்னர் கடைசியாக Parramatta என்ற
நகரில் எதேச்சையாகச் சந்தித்தேன். “அங்கிள் ஒரு நிமிஷம், என்றுவிட்டு
ஓடிப்போய் காருக்குள் இருந்த என்னுடைய “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை
நோக்கி” என்ற நூலை எடுத்து வந்து ஆசையோடு அவர் கையில் திணித்தேன். அப்போது
அவரைப் பீடித்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை உணரமுடிந்தது. “என்னால முந்தியப்
போல தொடர்ச்சியாகப் பேசமுடியாது” என்று இழுத்து இழுத்துப் பேசினார்.
“அங்கிள் உடம்பைக் கவனமாப் பார்த்துக் கொள்ளுங்கோ என்று விடைகொடுத்தேன்.
உடல் நலம் தேறிய பின்னர் அவரை வைத்து ஒரு நெடிய வானொலிப் பேட்டி செய்து
அவரின் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவாக்க வேண்டும் என்ற அவா அப்போது
இருந்தது. அவரும் செய்யலாம் என்றே சொல்லியிருந்தார். அந்த வாய்ப்பும் கிட்டாமல் போயிற்று. 

ராசதுரை அங்கிள்! உங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பேன், உங்களின் நினைவுகள் எம்மை விட்டு மறையாது நிலைத்திருக்கும். 

காவலூர் ராசதுரை அவர்களின் நூல்களைப் படிக்க http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

மொரீஷியஸ் நாட்டுத் தமிழர் வாழ்வியல் – மொரீஷியஸ் தமிழறிஞர் பேராசிரியர் உமாதேவி அழகிரி பேசுகிறார்

“மொரீஷியஸ் அரசு
தமிழை மூன்றாம் இடத்துக்கு மாற்றி நோட்டுகளை அச்சிட்டார்கள். ஆனால் காலா,
காலமாக நிலவிவரும் நடைமுறையை மாற்றக் கூடாது, இது வரலாற்றைக்
களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்களைத் தெரிவித்ததோடு அங்குள்ள
தமிழர்களோடு மொரீஷியஸ் பூர்வீகப் பிரஜைகளும் போராடினார்கள். இதன் விளைவாக,
அச்சிட்ட அத்தனை பண நோட்டுகளையும் முடக்கிவிட்டு, வழமை போல பழைய முறையில்
பண நோட்டுகளை தமிழை இரண்டாம் இடத்தில் வருமாறு செய்து அச்சிட்டு
வெளியிட்டிருக்கிறார்கள்” – பேராசிரியர் உமாதேவி அழகிரி

மொரீசியஸ் நாட்டிலிருந்து  சிட்னி முருகன் சைவ நெறி மாநாட்டிற்கு வந்திருந்த திருமதி உமா தேவி அழகிரி அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. மொரீசியஸ் நாட்டில் தமிழர் வாழ்வு , இந்து மதத்தின் பரம்பல், என பல் வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் பேரா. உமாதேவி. குறிப்பாக இன்றைய தலைமுறைத் தமிழராக அங்கு பிறந்து வாழும் அவர் தன்னுடைய பேட்டி முழுதும் சுத்தமான தமிழில் பேசியது பெரும் வியப்பை அளித்தது. 
பேட்டியின் முழுமையான ஒலிவடிவத்தைக் கேட்க

பேரா. உமாதேவி அழகிரியின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் எழுத்தில் 

கானா பிரபா- குங்குமப் பொட்டோடும், காஞ்சிபுரம் பட்டுச் சேலையோடும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது…… 
உமா – ரொம்ப மகிழ்ச்சி நான் முதன் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறேன்  இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு.நான் மொரீசியசில் பிறந்திருந்தாலும் கூட  ,  சென்னைதான் எனக்குப் பிடிக்கும்.  அதனால் அடிக்கடி நான் சென்று வருவேன். மொரீசியஸ் தீவில் சுமார் 70,000 தமிழர்கள் இருக்கிறார்கள். மொத்த சனத்தொகையில் 8 விழுக்காட்டினர் தமிழர்கள்.  இந்தியப் பெருங்கடலின் சின்ன தீவு தான் மொரீசியஸ். எரிமலையில் இருந்து உருவான  இந்த தீவு. இயற்கை வளம் கொண்டதாக இருக்கிறது.  பல்லின மக்களும்  இங்கு வாழ்ந்தாலும்  சுமார்   275 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது  தமிழகத்தின் திருநெல்வேலி, தஞ்சாவூர், சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து மூன்று கட்டங்களாக இங்கு தமிழர்கள் குடியேறினார்கள்.
கானா பிரபா –  உங்கள் குடும்பத்தினர் எந்த ஊரில் இருந்து வந்தார்கள்? 

உமா – எனது கொள்ளுப்பாட்டி சித்தூரில் இருந்து வந்தார்கள். பாட்டியை  புகைப்படத்தில் நான் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல உழைப்பாளி மட்டுமல்ல தமிழ் பண்பாட்டை பேணியவர்கள்.

கானா பிரபா –  நீங்கள் மூன்றாம் தலைமுறை ஆனால் தூய தமிழில் அழகாக உரையாடுகின்றீர்கள். இங்கே புகலிடச் சூழலில் இரண்டாம் தலைமுறையே  தமிழ் கலாசாரத்தை பேண சிரமப்படுகிறோம். உங்கள் கணவரின் குடும்பம் பற்றி?

உமா –  கணவரின் குடும்பம் மதுரையிலிருந்து வந்தவர்கள். அக்காலத்தில் சிப்பாய்களாக வந்து பின்னர் இங்கு வணிகத்தில் ஈடுபட்டார்கள்.  அவர்கள் நான்காம் தலைமுறையாக இருக்கிறார்கள். அவர்கள் பேசும் தமிழ் வேறு விதமாக இருந்தது.   நமது முன்னோர்கள் மூன்று கட்டங்களாக இங்கு வந்தார்கள். வெவ்வேறு நிலப்பகுதிகளில் இருந்து வந்ததால் தமிழை பல விதமாக பேசுவார்கள். நான் இது பற்றி ஆய்வு செய்து நிறைய தாள்கள் தயாரித்திருக்கிறேன் சாதாரண தமிழ் பெயர்கள் எப்படி பிரெஞ்சு பெயராக மாறியது.மொழி எப்படி மாறுகிறது என்பது பற்றி எல்லாம் விரிவாக இந்த ஆய்வுகள்  நீண்டுகொண்டிருக்கிறது.


கானா பிரபா –  சுத்தமான தமிழில் பேசுறீங்க, மொரிசீயசில் தமிழ் கல்வி எப்படி உள்ளது?

உமா –  பாட்டியும், அம்மாவும்,  கொச்சை தமிழில் பேசுவார்கள்.  நம் வீட்டில் தமிழ் பேசவேண்டும் என்பது என் பாட்டியின் கண்டிப்பான கட்டுப்பாடுகளில் ஒன்று. தமிழை என்
வீட்டில் இருந்தே நான் துவங்கினேன். மொரீசியஸ் நாட்டைப் பொருத்தவரை
கிர்யோல் மொழி தாய் மொழியாக இருந்தாலும் கூட தமிழையும் மொரீசியஸ் அரசு
வளர்க்கிறது . அங்குள்ள பள்ளிகளில் தமிழை கற்பிக்கிறார்கள்.  மேசை என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொண்டாலும் கூட அதை பல விதமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.  ‘’வரிசை வரிசையாக மேசையாம்”  என்ற பாடலை கற்பித்து மேசை, தோசை, காசை என்ற அழகான ஒலிச் சொற்களோடு  கற்றுக் கொடுக்கிறார்கள். தொடக்க நிலையில் வாரத்தில் 50 மணி  நேரம் வரை  தமிழ் படிக்கலாம்.  பின்னர் நாட்டளவில் தேர்வு வைப்பார்கள். என்று பல நிலைகளில் இயங்கி வருகிறோம்.


கானா பிரபா –  பாடசாலையைத் தாண்டி  தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொள்கிறார்களா?

 உமா
– அரசின் ஆதரவில் பள்ளிகளில் தமிழ் உள்ளது. மாலை பள்ளிகளும் அங்கு
உள்ளது.ஆனால் தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் பேசுகிறார்களா என்றால்
வருத்தம்தான்.  கிரியோல் மொழி அங்குள்ள தாய்மொழி என்பதால் அதை பேசுகிறார்கள். தமிழ் பேசுவதை பரவலாக்க 2008 -ம் ஆண்டில் ‘தமிழ் பேசுவோர் ஒன்றியம்” துவங்கப்பட்டது. தமிழ் பேசுவதை ஊக்கு விக்க துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அணுகினால் தமிழ் பேச அவர்கள் ஊக்கம் கொடுப்பார்கள்.


கானா பிரபா –  மொரீசியஸ் நாட்டு பண நோட்டில் ஒரு தமிழர்  முகம் உள்ளது அது யார்?
உமா
– இது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மொரீசியஸ் வளர்ச்சிக்கு தமிழர்கள் அளித்த
கொடையை அவர்கள் மறுக்கவில்லை.அரங்கநாதன் சீனிவாசன் என்கிற மூத்த தமிழ்
தலைவரின் படம் அது அவர் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக உழைத்தவர்.

மொரீஷியஸ்
நாட்டுப் பணத்தில் தமிழ் இரண்டாம் மொழியாக இருந்து வருகின்றது. ஆனால்
சமீபகாலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மொரீஷியஸ் அரசு
தமிழை மூன்றாம் இடத்துக்கு மாற்றி நோட்டுகளை அச்சிட்டார்கள். ஆனால் காலா,
காலமாக நிலவிவரும் நடைமுறையை மாற்றக் கூடாது, இது வரலாற்றைக்
களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்களைத் தெரிவித்ததோடு அங்குள்ள
தமிழர்களோடு மொரீஷியஸ் பூர்வீகப் பிரஜைகளும் போராடினார்கள். இதன் விளைவாக,
அச்சிட்ட அத்தனை பண நோட்டுகளையும் முடக்கிவிட்டு, வழமை போல பழைய முறையில்
பண நோட்டுகளை தமிழை இரண்டாம் இடத்தில் வருமாறு செய்து அச்சிட்டு
வெளியிட்டிருக்கிறார்கள்.
கானா பிரபா –   மொரீஷியஸ் நாட்டில் நிலவும் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகள் என்ன?
உமா –  தைபூச  காவடி, மகாசிவராத்திரி, தீபாவளி, போன்ற பண்டிகைகள் அங்கு கொண்டாடப்படுகின்றன.  அதுவும் தை பூச காவடி என்பது மிகச்சிறப்பான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.அந்நாளில் அங்கு பொது விடுமுறை என்பதால்  பல்லின மக்களும் தை பூச காவடி எடுப்பார்கள். கிறிஸ்தவர்கள் கூட காவடி தூக்குவார்கள்.
கானா பிரபா –  உங்கள் பணிகளில் நீங்கள் பெருமைப்படும் விஷயம் என்ன?
உமா – மொரீஷியஸ் தமிழச்சி என்ற  வகையில் இந்த தலைமுறையினருக்கு தமிழ் கற்றுக் கொடுக்க விரும்புவதையே நான் பெருமையாக நினைக்கிறேன்.  அங்குள்ள பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்குகிறேன். இன்னொரு பக்கம் மொரிசியஸ் தமிழர்களின் வரலாற்றை, மொழியை,பண்பாட்டு நகர்வை ஆய்வு செய்து ஆவணப்படுத்துகிறேன் இதுதான் நான் பெருமைப்படும் விஷயம்.

மேற்கண்ட பேட்டியை ஒலிவடிவில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும், எழுத்துப் பதிப்பை தமிழ் அவுஸ்திரேலியன் சஞ்சிகைக்காகவும் பகிர்ந்து கொண்டேன்.