வரலாற்றில் வாழும் ஈழத்து இலக்கிய ஆளுமை எஸ்.பொ நினைவில்

“என்னை ஈழத்து ஜெயகாந்தன் என்று அழைக்காதீர்கள், ஜெயகாந்தனை வேண்டுமானால் தமிழ்நாட்டின் எஸ்.பொ என்று அழைத்துக் கொள்ளுங்கள்”

இப்படி ஒரு மிடுக்கான பேச்சு மூலம் தான் எனக்கு எழுத்தாளர் எஸ்.பொ அவர்களை நேரே சந்திக்கும் வாய்ப்பு 17 வருடங்களுக்கு முன்னர் மெல்பர்னில் ஒரு இலக்கியச் சந்திப்பின் வழியாகக் கிட்டியது.

 “எனக்குப் புகழ் மாலை சூட்டியே நான் எழுதுறதை நிப்பாட்டிப் போட வச்சுடாதேங்கோ” இதுவும் அதே மேடையில் எஸ்.பொ. பேசியது.
ஈழத்தில் இருந்த காலத்தில் எஸ்.பொ வின் எழுத்துகளில் இருந்த நெருக்கம் பின்னாளில் சிட்னியில் அவரை நேரே சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
முதன் முதலில் நேரில் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திய போது ஏதோ பல நாள் பழகிய சினேகபூர்வமான பேச்சோடு “அம்மா (எஸ்.பொ மனைவி) எப்பவும் றேடியோவும் கையுமாத் தான் இருப்பா, வீட்டை வாரும் நேரம் கிடைக்கேக்க”
என்றார். எஸ்.பொ முன்மொழிந்தது போல சக தமிழ் அவுஸ்திரேலியனாக, அவர் வாழ்ந்த காலத்தில் இயங்கிய பெருமிதத்தோடு.

எஸ்.பொ வின் மேடைப் பேச்சை மெல்பர்ன், சிட்னி இலக்கிய மேடைகள் பலவற்றில் கேட்டிருக்கிறேன். சண்டித்தனமாக எதையும் வெளிப்படையாகப் போட்டு உடைத்து விட்டுப் போய்விடுவார் அதில் உறுதியோடும் நிற்பார். இவ்விதமான ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை ஆறுமுக நாவலர் குறித்து எஸ்.பொ பேசியதே என் நினைவில் அவரை நான் சந்தித்த இறுதியான பேச்சு.

 நேற்று நினைவெழுச்சி நாளுக்குச் சென்ற போது முதலில் எதிர்ப்பட்ட புத்தகக் கடையில் இருந்தது “மகாவம்ச” எஸ்.பொ எழுதிய மொழி பெயர்ப்பு நூல்.
இருந்த அந்த ஒரு பிரதியையும் தூக்கி வைத்துக் கொண்டேன்.
இதோடு ஐந்து புத்தகங்களைத் தந்து “வித்துத்
தாங்கோ” என்று சொன்னார்,
கடைசிப் புத்தகத்தை நீங்கள் வாங்கிறியள், காசை
வாங்கத் தான் எஸ்.பொ இல்லை”
என்றார் புத்தக விற்பனைக் கூடத்தில் இருந்த நண்பர்.

எஸ்.பொ வின் நினைவுப் பகிர்வைக் கடந்த ஒரு மணி நேரமாக, நான் இயங்கும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன  வானொலியில் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். நாளை அவரது இறுதி மரியாதையில் கலந்து கொள்ள வேண்டும்.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் எஸ்.பொ அவர்களின் நினைவுப் பகிர்வை வானொலியில் தயாரிக்கும் போது கலந்து சிறப்பித்தவர்கள் ஒவ்வொருவரும் எஸ்.பொ குறித்த பன்முகப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார்கள். இன்னும் பல ஒலிப்பகிர்வுகளின் வழியே எஸ்.பொ குறித்த பதிவுகளை எதிர்காலத்திலும் கொடுக்க எண்ணம் கொண்டிருக்கும் அளவுக்கு அவரைப் பற்றிப் பேசவும், எழுதவும் நிறைய உண்டு.

எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி அவர்களின் பகிர்வு

தரவிறக்கிக் கேட்க

தரவிறக்கிக் கேட்க

ஊடகர் திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களின் பகிர்வு

தரவிறக்கிக் கேட்க

படைப்பாளி திரு.தருமன் தர்மகுலசிங்கம் அவர்களின் பகிர்வு

தரவிறக்கிக் கேட்க

எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அவர்களின் பகிர்வு

தரவிறக்கிக் கேட்க

ஊடகர் திரு.அப்துல் ஜபார் அவர்களின் பகிர்வு

தரவிறக்கிக் கேட்க

“மாயினி” குறித்து எஸ்.பொ. பேசுகிறார்…!

 
“அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது “மாயினி” நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்.” – எஸ்.பொ மாயினி குறித்து

தமிழில் முயலப்பட்ட முதல் அரசியல் நாவலான “மாயினி”யின் நாவல் அரங்கு நேற்று பரீஸ் நகரத்தில் நடைபெற்றிருந்தது. தனது “மாயினி” குறித்து ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொ என்ற எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பியிருன்தேன்.
அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.

 ஒலிப்பகிர்வைக் கேட்க

பரீஸ் நகரத்திலே 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “மாயினி” நாவல் ஆய்வரங்கிற்கு வாழ்த்துச் செய்தி போன்று இந்தப் பேச்சினை நான் அனுப்பி வைத்தேன்.

தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் என்ற உரிமைகோரலுடன் மாயினி நாவல் என்னுடைய எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவிலே சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நாவல் குறித்து சாதகமாகவும், பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று, மாயினி தான் தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் அல்ல, அதற்கு முன்னரும் அரசியல் சம்பந்தப்பட்ட நாவல்கள் தமிழில் முயலப்பட்டுள்ளன என்பது அதற்கு எதிராக முன்வைக்கப்படும் முதலாவது விமர்சனமாகும். என் உரிமைகோரலிலே ஒரு சத்தியம் உண்டு என்பதை தவிர்த்து, விமர்சிக்க வேண்டும், எதிர்க்கருத்தை முன்வைக்க வேண்டும் என்று முயலப்பட்டதாகவே அந்த விமர்சனத்தை நான் கருதுவேன். காரணம், மாயினி நாவல் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தமாக எழுந்த பிரச்சனைகளிலே தமிழ்த்தேசியம் எவ்வாறு தொலைந்தது என்ற மூலக்கருத்தினைப் பாடுபொருளாகக் கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் மாயினி ஆகும்.

அந்தப் பொறுப்பிலே பங்குபற்றிய அரசியல் நாயகர்கள் பலரைப்பற்றியும் நடுநிலமை தேடி ஆய்வு செய்வது மாயினியுடைய ஒரு நோக்கமாக இருந்தது. மாயினி ஏன் முதல் அரசியல் நாவல் என்று நான் உரிமை கோரினேன் என்றால், வரலாறு என்பது என்ன? இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்றும் நேற்றைய அரசியல் இன்றைய வரலாறு என்றும் ஒரு முகச் சுலபமான எளிமையான புரிதல் நிலைத்து வருகின்றது. மாயினி நாவல் வரலாற்றுச் சம்பவங்கள் ஊடாகச் செல்லும் பொழுது கூட அவற்றை வரலாற்றுச் சம்பவங்களாகத் தரிசிக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்கின்றது. உதாரணமாக கிறீஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் மகா வம்சத்தின் புனைவு. மகாநாம தேரர் அந்த மகாவம்சத்தை இயற்றிய பொழுது அதில் ஊடாடி, உட்புகுத்தப்பட்ட ஒரு பிராமண மேலாதிக்கத்தைப் பற்றிய புனைவு அதில் வருகிறது. அது வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. அது அரசியல் நிகழ்வாக ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகப் புனையப்படுகிறது. அதே போன்று தான் ஒளவையார் வாழ்ந்த காலத்துக்குள்ளாகவே நாங்கள் போகிறோமே ஒளிய, ஒளவையார் வாழ்ந்த ஒரு காலத்துக்குள் போகவில்லை. ஒளவையார் வாழும் காலம், அதே போன்று அப்பரும், திருஞான சம்பந்தரும் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்தினூடாக, இன்று ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாகத் தரிசிக்க்கப்படுவதனாலும் நான் மாயினி முதலாவதாகப் புனையப்பட்ட தமிழின் அரசியல் நாவல் என்று உரிமை கோர விழைந்தேன்.

அண்மைக்காலங்களிலே ஈழநாட்டிலே நடைபெறக் கூடிய இனப்போராட்டம் அல்லது மண்மீட்புப் போராட்டம் அல்லாவிட்டால் விடுதலைப் புலிகளுடைய போராட்டம் அல்லது தமிழ் இனத்தினுடைய தாயக மீட்புப் போராட்டம் என்று சொன்னால் என்ன, அல்லது விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய ஒரு பயங்கரவாதப் போராட்டத்துக்கு என்று விளங்கிக் கொண்டாலும் கூட நேரிய ஜனநாயக நீரோட்டத்துக்குள் செல்லப் போகின்றோம் என்று ஒரு கருத்தினை முன்வைத்து ஈழத்தில் நடைபெறக்கூடிய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினாலும் கூட அவையெல்லாம் அரசியல் நாவல்கள் என்று விதந்து ஏற்றுக் கொள்வதற்கு இந்தியாவில் ஒரு ஸ்தாபனம் இருக்கிறது. அந்த ஸ்தாபனம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம்.

இன்று இந்தியாவில் தமிழர் தேசியம் தொலைந்ததற்கு ஒரேயொரு காரணம் வட இந்திய இந்தி வெறியர்களுடைய எழுச்சி மட்டுமல்ல அது அரசியல் சார்ந்த ஒரு காரணம். ஆனால் அதிகார வர்க்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய பிராமண ஆதிக்கம் இன்றும் தமிழர்களுக்கு எதிரான ஒன்று எழுதப்படும் பொழுது அதையே “ஆகா! உச்சம்” என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பார்ப்பனச் சூழல் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அந்தப் பார்ப்பனச் சூழலிலே தான் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழக்கூடிய எழுத்தாளர்கள் சிலருடைய நாவல்களை இவை அரசியல் நாவல்கள் என்று பாராட்டும் ஒரு போக்கு இருக்கின்றது.

தமிழர் தேசியத்தை மீட்டெடுத்துப் பார்ப்பது தான் மாயினியினுடைய தரிசனப்பயணம். அதுமட்டுமல்லாமல் தமிழர் தேசியத்தைப் பற்றிய ஒரு பார்வையிலே சிங்கள தேசிய இனத்தின் விரோதங்களைக் கக்குவதும், அதன் மீது ஆத்திரங்களையும், வெறுப்புகளையும் கக்குவது அல்ல நடுநிலமை. சிங்கள இனத்தவர்களுடைய செயற்பாடுகளிலே ஒரு விரோதம் ஏற்படுத்தாத ஒரு அறிவு நாகரிகத்தை “மாயினி” நாவல் சோதனை பூர்வமாக, அறிவுபூர்வமாகப் பின்பற்றியிருக்கின்றது என்பது முக்கியமான ஒரு விஷயம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் இலங்கையிலே ஏற்பட்ட தமிழர் சங்காரத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டார் என்ற வரலாறுமே இதுவரை காலமும் வேதமாகப் பயிலப்பட்டு வந்தது. அதுவே தமிழர்களுடைய எழுச்சியின் பாலமாகவும் குறியீடாகவும், அரசியல் பார்வையினுடைய திருப்புமுனையாகவும் அமைந்தது என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால் இந்த பண்டாரநாயக்காவினுடைய காலத்திலே தான் தமிழர் தேசியத்தை மீண்டும் தமிழர்கள் கண்டார்கள். ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் மூலமே எங்களுடைய அடையாளத்தைக் கண்டறிதல் வேண்டும் என்ற உணர்வு பண்டாரநாயக்காவால் ஏற்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தமிழர் சமுதாயத்திலே ஏற்றத்தாழ்வுகள் உண்டு, சிறுபான்மைத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட வேண்டும், என்று தமிழ்த்தலைவர்களுக்கு உரத்துச் சொன்ன ஒரு அரசியல் தலைவனாகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அமைகின்றார். எனவே பண்டாரநாயக்காவின் இருமுகங்களையும் அதாவது சிங்கள தேசிய இனத்தினுடைய உணர்வில் தேசிய இன உணர்வாக மாற்றிய ஒரு கொடுமைக்கு முன்னுதாரணமாக விளங்கிய போதிலும் கூட தமிழர்களுடைய தேசியத்தை அவர்கள் கண்டறிவதற்கு உபகாரியாக வாழ்ந்தவரும் பண்டாரநாயக்கா என்று “மாயினி” தரிசித்து செல்கின்றது.

1983 ஆம் ஆண்டு நடந்த யூலைக் கலவரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட எழுச்சிகளும், போராட்டங்களும் பற்றி நிறையவே “மாயினி” சொல்கின்றது.

இது வரலாற்றில் கண்டறிந்த சில தகவல்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த சம்பவங்களை கடந்தகாலச் சம்பவங்களாக நோக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்க முயல்கிறது. இன்றுவரையில் தமிழர் தேசியத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தார் அமிர்தலிங்கம் என்பது பற்றி ஒரு நேர்மையான, நடுநிலமையான ஆய்வு நூல் வெளிவரவில்லை. 1983 ஆம் ஆண்டில் நடந்த அந்த யூலை கலவரத்திற்குப் பின்னரும், தமிழர் தேசியத்தை ஜனநாயக முறையில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுக்க முடியும் என்றோ அல்லது இந்திய அமைதிகாப்புப் படையினர் சிங்களவர்களால் உதைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் இந்திய தூதரகம் தமிழர்களுக்கு கொடுக்கவிருந்த உரிமைகள் குறித்து என்ன பேச்சுவார்த்தைகள் அவர் நடத்தினார் என்பதைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் இல்லை. “மாயினி” அந்தத் தகவல்களைத் தராவிட்டாலும் கூட அதற்கான சூசகங்கள் இங்கே எல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன, புதிய வரலாறுகள் அந்த இடங்களிலே நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.

“மாயினி” உண்மையிலேயே ஒரு முழுமையான எனக்குத் திருப்தி தந்த ஒரு நாவல் என்று நான் சொல்லவில்லை. “மாயினி” தமிழ் வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவலும் அல்ல. அந்த “மாயினி” நாவல் சிங்கள வாசகர்களையும், சர்வதேச வாசகர்களையும் சென்றடைதல் வேண்டும்.

இன்று ஒரு ஆண்டுகாலமாக “மாயினி” நாவலை நான் ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் புதிய நூலிலே “மாயினி” தமிழ் நாவலிலே வராத பல உண்மைகள் வருகின்றன. காரணம், மாயினி நாவல் எழுதப்பட்ட பிறகு தான் எவ்வாறு ராஜீவ் காந்தி காலத்திலே விடுதலைப்புலிகளுடைய தலைமைத்துவத்தை இராணுவ ரீதியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொல்லவேண்டும் என்ற சதிகள் நடத்தப்பட்டன என்பதைப் பற்றிய புதிய தகவல்கள் இந்திய நூலாக வெளிவந்திருக்கின்றது. அதை எழுதியவர் அக்காலத்திலே இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்தவர். இவ்வாறு புதிதாகக் கிடைக்கும் சம்பவங்களையும், அதில் சேர்க்க முனைந்துள்ளேன்.

அத்துடன் தமிழர் தேசியத்தைத் தொலைத்தது தனியே ஈழநாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வது தவறு. தமிழர் தேசியம் இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு தொலைக்கப்பட்டது

என்பதை ஒப்பு நோக்கு ரீதியில் “மாயினி” நாவலில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தமிழர் தேசியத்தைத் தொலைத்ததும் திராவிடர் கழகம் அரசியல் நோக்கிலே தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிவினை கோஷத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பது எல்லாம் அந்த தமிழர் தேசியம் தொலைந்த ஆய்விலே அக்கறைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விஷயங்கள். அதை “மாயினி” நாவலிலே தொடப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்படும் “மாயினி” நாவலிலே இந்தக் குறைபாடுகள் திருத்தி அமைக்கப்படும் என்று நம்புகின்றேன். அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது “மாயினி” நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்.

“மாயினி”யின் இலக்கிய வெற்றிகள், இலக்கிய மேன்மைகள், எனக்கு இலக்கியத்திலே அது சம்பாதித்துத் தரக்கூடிய இடம் ஆகியன பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் ஒரு அறுபது ஆண்டு காலம் தமிழ் எழுதுவதை என்னுடைய உயிரும் மூச்சுமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை, அரசியற் சிந்தனைகளாக அல்லாமல் ஒரு புதிய புனைவாக, ஒரு நாவலாக தமிழ் மக்கள் முன் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் ஒரு படைப்பாகவே மாயினி உங்களுடைய விமர்சன அரங்குக்கு எடுக்கப்படுகின்றது.

இறுதியாக பரீசில் கூடக்கூடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். என்னுடைய தமிழ் நாவலை நீங்கள் விமர்சியுங்கள். ஆனால் நீங்கள் சொல்லும் குறைபாடுகள், விமர்சனங்கள், எதிர்க்கட்டுக்கள் அனைத்தையும் தயவு செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்த தவறுகள் நிகழாமல் நீக்கி அதை கொண்டுவருவதற்கு எனக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம்

ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.
இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். 

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் போராட்டக் களத்தில் இருந்த அந்த எண்பதுகளில், எனது அண்ணன் முறையான ஒருவர் ரெலோ இயக்கத்தின் மீது மிகுந்த பற்றோடு இயங்கி வந்தவர். அப்போது தன்னுடைய வீட்டில் ஒரு ஒலிநாடாவை எடுத்து வந்து ஒலிபரப்பியபோது புதுமையாக இருந்தது. தமிழீழ விடுதலையை வேண்டிய பாடல்களின் தொகுப்பு அது.
தமிழ்த்திரையிசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு அப்போது அதைத் தாண்டிய ஜனரஞ்சக இசையாக “சின்ன மாமியே”, “சுராங்கனி” போன்ற பொப்பிசைப் பாடல்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைச் செய்தி அறிக்கையோடு வரும் ஒரு சில மெல்லிசைப் பாடல்களும் தான் அறிமுகமாகியிருந்த வேளை இந்த எழுச்சிப் பாடல்களைக் கேட்டது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஈழ விடுதலையை வலியுறுத்தும் பிரச்சாரங்களுக்காப் பொதுமக்களை அணி திரள அழைக்கும் போது எல்லா இயக்கங்களுமே பொதுவில் சினிமாவில் வந்த  எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையும் வேறு சில புரட்சிகரப் பாடல்களையுமே ஒலிபெருக்கி வழியே கொடுத்து மக்களின் கவனத்தைக் குவிக்க வைத்தார்கள்.
“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”, “ஏமாற்றாதே ஏமாறாதே”, “அச்சம் என்பது மடமையடா” போன்ற பாடல்களோடு அன்று விஜய்காந்த் நடித்த ஆரம்பகாலப் படங்களில் வந்த புரட்சிகரமான பாடல்களும், குறிப்பாக “எங்கள் தமிழினம் தூங்குவதோ”, “தோல்வி நிலையென நினைத்தால்” போன்ற பாடல்களுமே பரவலான பிரச்சாரப் பாடல்களாக அறிமுகமாகியிருந்தன.

இதன் பின்னர் ஒரு இடைவெளி.

1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு “களத்தில் கேட்கும் கானங்கள்” பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களுக்கும் முன்னர் கவிஞரின் அறிமுகமும் அதையொட்டிய அடி நாதத்தில் பாடல்களுமாக அமைந்திருக்கும்.

இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளை ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், பி,சுசீலா உள்ளிட்ட தமிழகத்து முன்னணிப் பாடகர்கள் பாடியிருந்தார்கள். “நடடா ராஜா மயிலைக் காளை நாளை விடியப் போகுது” என்று மலேசியா வாசுதேவனும், “பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே” என்ற பாடலை ஜெயச்சந்திரனும், “கண்மணியே கண்ணுறங்கு” என்று பி.சுசீலாவுமாகப் பாடிய பாடல்களோடு அந்த ஒலி நாடாவில் வந்த ஏனைய பாடல்களும் வெகுஜன அபிமானத்தைப் பெற்றுக் கொண்டன.
இன்னமும் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று வாணி ஜெயராமும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று காதலர் தம் தாயக நிலையை உணர்ந்து களமாடப் போகும் ஜோடிப் பாடலும் கூட இதில் சேர்த்தி.

அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுப்பதில் அமரர் எல்.வைத்தியநாதன் (எழாவது மனிதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்), தேவேந்திரன் (வேதம் புதிது போன்ற படங்களின் இசையமைப்பாளர் போன்றோரின் பணி வெகு சிறப்பாக அடியெடுத்துக் கொடுத்தது.

இந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு விலகிய பின்னர், ஈழப்போராட்டக் களத்திலும் முன்னர் அவ்வளவாகப் பொதுமக்களோடு அந்நியோன்யம் பாராட்டாது இருந்த போராட்ட வடிவமும் முழுமையான மக்களை ஒன்றிணைத்த போராட்ட வடிவமாக மாற்றமடைய பிரச்சாரப் பிரிவின் முயற்சிகள் தீவிரமாக அமைந்திருந்தன. இதன் முன்னோடி முயற்சிகளாக 86, 87 ஆம் ஆண்டுகளில்  எங்களூர் சந்துபொந்தெல்லாம் ஒரு சிறு வாகனத்தில் தியாகி திலீபன் சிறு ஒலிபெருக்கியோடு பிரச்சாரப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது.
விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவு மற்றும் கலை பண்பாட்டுப் பிரிவு போன்றவற்றின் களப்பணிகளுக்கு ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன.

இந்திய இராணுவம் போன கையோடு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பெரும் எடுப்பிலான இசைக்கச்சேரி நடக்கிறது. அதில் தேனிசை செல்லப்பாவும், பாடகி சுவர்ணலதாவும் (இவர் தமிழ் சினிமாவின் பிரபல பாடகி ஸ்வர்ணலதா அல்ல) பங்கேற்றுச் சிறப்பித்திருந்தார்கள்.

எந்த அடக்குமுறை வாழ்விலும் சுயாதீன முயற்சி தீவிரமடையும் என்பது ஈழத்துப் போர்க்காலப் பாடல்களுக்கும் பொருத்தமாக அமைந்தது. தொண்ணூறுகளில் மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னும் வீரியம் பெற்று எழுகின்றன. ஆனால் இம்முறை ஈழத்தின் பாடகர்களை, இசையமைப்பாளர்களை, கவிஞர்களை ஒருங்கிணைத்து  அவை இன்னொரு புதிய வடிவில் மக்களை எட்டிப் பரவலான வெகுஜன அந்தஸ்தை அடைகின்றன.

பள்ளிக்காலத்தில்  யாழ்ப்பாணத்துக்குச் சைக்கிள் வலித்து டியூஷன் சென்ரர் நோக்கிய பயணத்தில் அப்போது கஸ்தூரியார் றோட்டில் இருந்த இசையருவி என்ற ஒலிப்பதிவுக் கூடத்தைக் கடக்கும் போது  ஏதோ ஏவி.எம் இன் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டுவது போல பிரமை இருக்கும். அந்த இடத்தில் தான் இப்போது லிங்கன் கூல்பார் சற்றுத் தள்ளி இருக்கிறது.

“மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். “கரும்புலிகள்” தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்.” இப்படியாக முன்னர் எனக்களித்த பேட்டியில் அன்று எழுச்சிப் பாடல்களில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவரான வர்ண இராமேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில், அமரர் பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன்,  பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்  போன்றோருடன் மேஜர் சிட்டு போன்ற அப்போதைய போராளிகள், பின்னாளி மாவீரர்களாகிப் போனவர்களும் இணைந்து கொள்ள திரு.வர்ண இராமேஸ்வரன், திரு.பொன் சுந்தரலிங்கம்,  திரு எஸ்.ஜி.சாந்தன் போன்ற ஆண் பாடகருடன் பெண் பாடகிகளில் பார்வதி சிவபாதமும் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றுத் திகழ்ந்தனர். பின்னாளில் திருமலை சந்திரன், குட்டிக்கண்ணன் என்று இன்னும் பல்கிப் பெருகினர்.

“கடலினக்கரை போனோரே”  என்ற பாடலை அந்தக் காலத்து ஈழத்தவர்களும் சொந்தம் கொண்டாடி ரசித்தனர். அதற்குப் பின்னர் நெய்தல் நிலத்துப் பெருமையைக் கொண்டாடிய பாடல்களைத் தம் தலைமேல் சுமந்து போற்றிய தொகுப்பாக ‘ நெய்தல்” என்ற இசைத்தொகுப்பு வெளிவந்தது.

இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். “ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்”, “கடலலையே கொஞ்சம் நில்லு”, “முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா”, “‘நீலக்கடலே”, “புதிய வரலாறு” “கடலதை நாங்கள்”, “வெள்ளிநிலா விளக்கேற்றும்”,”நாம் சிந்திய குருதி”, அலையே நீயும்” என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்.

இன்றும் நினைவிருக்கிறது தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து “நெய்தல்” கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் “நெய்தல்” பாடல்கள் தான் இடம்பிடித்தன.

என்னைப் பொறுத்தவரை ” கடலினக்கரை போனோரே” என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய ” கடலலையே கொஞ்சம் நில்லு” பாடலையும் சாந்தன் பாடிய “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.

மேலே கழுகுக் கண்ணோடு சுற்றும் விமானங்களின் கண்ணில் அகப்படாமல் கொழும்புப் பயணத்துக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊரியான், கொம்படிப் பாதையால் மேடு, பள்ளம், நீர்க்குட்டை எல்லாம் தாண்டி இரவைக் கிழித்துக் கொண்டே கிளிநொச்சியால் பயணிக்கும் தனியார் பஸ்ஸில் எழுச்சிப் பாடல்கள் களை கட்டும். ஒரு விடிகாலை வேளையில் விசிலடித்துக் கொண்டே பாடும் ஒரு எழுச்சிப் பாடல் (பாடல் பெயர் மறந்து விட்டது) அந்த நேரத்தில் கொடுத்த இனிமை இன்றும் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் இனிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் வேடிக்கையான சில நிகழ்வுகளும் நடந்ததுண்டு. ஊரில் இருக்கும் சின்னன் சிறுசுகளுக்கும் எழுச்சிப் பாடல்கள் மனப்பாடம். குறிப்பாக “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனிங்களா” போன்ற மழலைக் குரலில் ஒலித்த பாடல்கள். ஒருமுறை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து வவுனியாவுக்கான பயணத்தில் தாண்டிக்குளத்தில் வைத்து இலங்கை இராணுவச் சோதனைச் சாவடி. அந்த நேரம் பயணித்தவர்களில் ஒரு இளம் தம்பதியும், ஒரு சிறுமியும். அப்போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தச் சிறுமியின் துறுதுறுப்பைக் கண்டு ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்க, அந்தப் பிள்ளை “எதிரிகளின் பாசறையைத் தேடிச் செல்கிறோம்” என்று பாடவும், நல்லவேளை அவன் ஏதோ சினிமாப்பாட்டு என்று விட்டுவிட்டான்.
 யாழ்ப்பாணத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கல்வி நோக்கில் தங்கி வாழ வரும் இளைஞர்கள்  ஒளித்து மறைத்து இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைச் சினிமாப்பாடல்கள் போலப் பதிவு பண்ணிக் கேட்ட சம்பவங்களை அனுபவித்ததுண்டு 😉

புலிகளின் குரல் வானொலி பின்னர் தன் ஒலிபரப்பின் இன்னொரு பரிமாணமாக தமிழீழ வானொலியை உருவாக்கிய பின்னர்  இந்த எழுச்சிப் பாடல்கள் நேயர் விருப்பப் பாடல்களாகக் கேட்டு மகிழவும் வாய்ப்பை வழங்கியது.

“ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்” என்று பரணி பாடுவோம் பாடல் தொகுப்பிலிருந்து ஒலிபரப்பும் பாடல் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரசித்தமானவை.

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும். எனவே மின்சாரம் இல்லாது பாடல் கேட்கவும், செய்தி அறியவும் வக்கற்றவர்களுக்கு அது திசை காட்டும்.

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இரட்டையர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுச்சிப்பாடல்கள் நாதஸ்வர இசையாகவும் வாசிக்கப்பட்டு வெளியாயின. 

“செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் தமிழ் தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்” என்று நல்லூர்த் திருவிழாவின் போது கர்நாடக இசை மேடைகளுக்கு நிகராக “நல்லை முருகன் பாடல்கள்” வெளிவந்தன.  ஈழத்துச் சனத்தின் துன்பியல் தோய்ந்த போர்க்கால வாழ்வியலை நல்லூர் முருகனுக்கு ஒப்புவித்துப் பாடிய அந்தப் பாடல்களை புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுத வர்ண இராமேஸ்வரன் பாடியிருந்தார். நல்லூர்த் திருவிழாவின்இசைக்கச்சேரியாகவும் படைத்திருந்தார்கள்.
 “எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று  புதுவை இரத்தினதுரை அண்ணா ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், “நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்” என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது “இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது” என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன்” என்று இந்தப் பாடல்களின் உருவாக்கத்தை என்னோடு பகிர்ந்த வானொலிப்பேட்டியில் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று தொடங்கும் பாடலின் முதல் அடிகளைக் கொண்டு வெளிவந்த இந்த மண் எங்களின் சொந்த மண் இசைவட்டில் இடம்பிடித்த “ஏறுது பார் கொடி ஏறுது பார்” பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றத்தின் போது பாடப்படும் பாடலாக அமைந்து வருகின்றது. அதே இசைத்தட்டில் வெளியான “விண்வரும் மேகங்கள் பாடும்” பாடல் உள்ளிட்டவை பிரசித்தமானவை.

பின்னாளில் தேனிசை செல்லப்பாவால் பாடிப் பிரபலமான “அழகான அந்தப் பனைமரம்” உள்ளிட்ட பாடல்களோடு தமிழகத்தில் இருந்து மீண்டும் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், நித்யஶ்ரீ போன்ற பாடகர்களால் பாடி அளிக்கப்பட்ட தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து வெளிவந்த  போர்க்கால எழுச்சிப் பாடல்கள்  எண்பதுகளில் இருந்த சூழலை நினைவுபடுத்துகின்றன. அறிவுமதி போன்ற தமிழகத்துக் கவிஞர்களும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இணைந்து கொள்கின்றார்கள். இவர்களில் தேனிசை செல்லப்பாவே பரவலான கவனிப்பைப்பெற்ற பாடகராக தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து விளங்கினார்.

95 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசாங்கம் இயங்கிய போது ஈழத்துத் திரைப்படங்களோடு, போராளிக் கவிஞர்கள், போராளிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள் பரவலாக இந்தப் பாடல் வெளியீட்டு முயற்சிகளில் இயங்கினர். தமிழீழ இசைக்குழு வழியாக பாடல் இசைத்தட்டுகள் வெளியாயின. சமகாலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் ஈழத்துப் போர்க்காலப் பாடல்களின் இசைத் தொகுப்புகள் அந்தந்த நாடுகளில் இருந்தும் வீரியம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்தவை அதிகம். டென்மார்க்கில் இருந்து வெளி வந்த ஒரு சில இசைத்தட்டுகளும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தவை. மலேசியத் தமிழர்களால் வெளியிடப்பட்ட ஈழ விடுதலைக்கான உணர்வு பொருந்திய பாடல்கள் தனியே குறிப்பிடவேண்டியவை. 1995 ஆம் ஆண்டிலியிருந்து 2009 இறுதிக்கட்டப் போருக்கு முன்பாக வெளியான பாடல்கள் ஆயிரத்தைத் தாண்டும். 

இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் திரைப்படங்களின் பாடல்கள் என்ற வகையிலும் எழுச்சிப் பாடல்களின் கிளை தோன்றியது. ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் போராளிகளின் பங்கு, தமிழீழத் திரைப்படப் பாடல்கள், புலம்பெயர் சூழலில் பிறந்த ஈழ தேச நேசிப்பும், எழுச்சியும் மிகுந்த பாடல்கள் போன்றவை தனியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டியவை.


வெறுமனே போர்ப் பிரச்சாரங்கள் தாங்கிய பாடல்களாக அன்றி ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன.

“மீன்மகள் பாடுகிறாள்” போன்ற பாடல்களின் வழியே தமிழீழ மண்ணின் எழில் மீதான நேசிப்பும், “அழகான அந்தப் பனைமரம்” ஆகிய பாடல்கள் ஈழத்து வாழ்வியலின் நனவிடை தோய்தலாகவும், “கண்மணியே கண்ணுறங்கு” போர்க்காலத்தில் பிறந்த குழந்தைக்குரிய தாலாட்டாகவும், “படையணி நகரும்” போர்க்களத்தில் பெண் போராளிகளின் பங்கையும், “மாவீரர் யாரோ என்றால்”, “மானம் என்றே வாழ்வெனக்கூறி மண்ணில் விழுந்தான் மாவீரன்” போன்ற பாடல்கள் சமர்க்களத்தில் களமாடி மடிந்த வீரர் பெருமையை எடுத்துரைப்பவையாகவும், “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்” போன்ற நல்லுதாரணங்கள் தொழிலாளர் சக்தியின் ஓசையாகவும், “செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்” பாடல்கள் வழியே போர்க்காலத்துப் பக்தி இசை வடிவமாகவும், “கிட்டடியில் இருக்குதடா விடுதலை”, “பட்டினி கிடந்து” ஆகிய பாடல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்பவையாகவும், “என் இனமே என் சனமே” போன்ற பாடல்களால் போராளிக்கும் சமூகத்துக்குமான உறவின் வெளிப்பாடாகவும், “பூத்தகொடி பூவிழந்து” பாடல்களின் வழியே போரின் ரணத்தைப் பதிவு செய்தும், “காகங்களே காகங்களே” இன்ன பிற பாடல்களால் சிறுவரை இணைக்கும் போர்க்கால இசைப் பாடல்களாகவும், 

“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே” வழியாக தலைவனின் மாட்சிமையையும் காட்டி நிற்கும் பாடல்களாகவும் இந்த ஈழ எழுச்சிப் பாடல்களின் அடித்தளம் வெறுமனே பிரச்சாரப் பாடல்கள் அன்றிப் பரந்து விரிந்து பல்வேறுவிதமான பின்னணியோடு அமைந்திருப்பது அவற்றின் தனித்துவத்தைப் பறைசற்றுகின்றன.
இன்னொருபுறம் தனியே மெல்லிசை என்ற கட்டுக்குள் நில்லாது சாஸ்திரிய இசையை அரவணைத்தும், பைலா போன்ற மேலைத்தேய இசைவடிவங்களைத் தொட்டும் (உதாரணம் அப்புஹாமி பெற்றெடுத்த) இந்தப் பாடல்களின் வடிவம் ஒரு கட்டுக்குள் நில்லாது அமையப்பெற்றிருக்கின்றன.
“ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடிக்க முனையும் பூனை” என்று வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் எழுதும் போது கம்பர் சொன்ன அவையடக்கம் போன்றது என்பதுகளின் இறுதி தொட்டு 2009 வரையான முப்பது ஆண்டுகளில் இயங்கிய ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைத் தொட்டுப் பேசுவது.

பல்கலைக் கழக மட்டத்தில் இன்னமும் விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு இசைப்பண்பாடு இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு.