மிடறினில் அடக்கி

“ஒரு மிடறு தேத்தண்ணி குடிச்சுட்டு இந்தா  ஓடியாறன்” என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைப் பிரயோகங்களில் இதுவும் ஒன்று. 

விடிகாலை நான்கு மணிக்கு எழும்பி காலைச் சாப்பாடாக பிட்டையோ இடியப்பத்தையை செய்து விட்டு மள மளவென்று மூன்று கறி (அதில் ஒன்று பால் கறி மற்றது தண்ணிப் பதமாக இன்னொன்று குழம்புக் கறி) செய்து அடுப்பில் உலை வைத்து விட்டு குளிக்கப் போய் விடுவார்.
மீண்டும் வந்து தேத்தண்ணி ஆத்தி வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுத்து விட்டு அதுவரை குடும்பத்தலைவியாக இருந்த அவர் ஆசிரியையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கும் போது
“ரீச்சர் நாங்கள் வந்திட்டம்” என்று வீட்டு வாசலில் குரல் கேட்கும். அயலில் இருக்கும் குடும்பங்களில் அம்மா படிப்பிக்கும் பாடசாலையில் படிக்கும் குழந்தைகளைப் பத்திரமாக (பவுத்திரமாக என்று நம்மூர்ப் பேச்சு வழக்கில்) கொண்டு போய், கொண்டு வருவது அம்மாவின் சமூக சேவை. 
வாசலில் கேட்கும் அந்தக் குரலுக்கான பதிலாகத் தான்
 “ஒரு மிடறு தேத்தண்ணி குடிச்சிட்டு இந்தா ஓடியாறன்” என்ற அம்மாவின் பதிலாக இருக்கும்.
இந்த மிடறு என்ற வார்த்தைப் பிரயோகத்தை நம்மில் இன்னும் எத்தனை பேர் இப்போதும் பயன்படுத்துகிறோம் என்று ஒரு சிந்தனை இன்று காலை என்னுள் எழக்காரணமாக இருந்தது சிட்னி முருகன் கோயிலின் காலைப் பூசையில் கலந்து கொண்டிருந்த போது. காலைப்பூசையின் ஒரு நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதும் போது வந்த
“இடறினும் தளரினும் எனது நோய்” என்று திருவாவடுதுறை தலத்தை நோக்கி திருஞான சம்பந்தர் அருளிச் செய்த தேவாரத்தில் வரும் இந்த மிடறு என்ற சொல் தான் சுருக் என்று மூளையில் ஏற்றியது. இந்தத் தேவாரத்தைப் பலதடவை பாடியும், கேட்டுமிருந்தாலும் இந்த மிடறு என்பது அப்போது தேவாரத்தில் ஒன்றிய ஒரு சொல்லாகவே கடந்திருக்கிறது. இது மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் வழக்கமாகக் கடந்து போகும் சங்கதிகளை நாம் ஊன்றிக் கவனிப்பதில்லை. எப்போதாவது ஒரு நாள் தான் பொறி தட்டி அதன் மீதான ஈடுபாடு இருக்கும்.
“சுறுக்கா வரேன்” என்பது வேகமாக/விரைவாக வருகிறேன் என்ற அர்த்தத்தில் ஈழத்திலுள்ள மலையகத் தமிழர் பாவிக்கும் சொலவடை. 
“டக் கெண்டு வாறன்” இது ஈழத்தின் வட பாகத்தில் இருக்கும் இளையோரால் அதிகம் பாவிக்கப்படுவது. இதுவும் முன் சொன்ன சுறுக்கு/வேகம்/ விரைவு என்பதன் தம்பி, தங்கச்சி முறையான சொல் பயன்பாடு தான்.

“டக்கென்று வருவேன்” என்ற சிறுவர் இலக்கியம் தேவகெளரி.சு என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு சேமமடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட செய்தியை விருபா புத்தகத் திரட்டு வழியாக அறிகிறேன்.
இந்த டக் என்ற வார்த்தையைப் பெரியோர் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. அதற்குப் பதிலாகத் தான் இருக்கவே இருக்கே “கெதியா” என்ற சொல்
“கெதியா வா” “கெதியா வாங்கோ” என்று ஆளாளுக்கு மரியாதை அளவுகோலை வைத்து இது வேறுபட்டுப் பயன்படுத்தப்படும்.
கொழும்பு போன்ற நகரப்பகுதிக்குப் போனதும் “டக்” மறைந்து “குயிக் (quick) ஆகிவிடும். உ-ம் “குயிக்கா வாறன்” 
மீண்டும் “மிடறு” என்ற சொல்லுக்கு வருகிறேன். இந்தச் சொல் தண்ணீர், தேநீர் போன்ற திராவகப்பதார்த்தங்களைக் கையாளும் போது தான் பொருத்தமாக உபயோகிக்கப்படுகிறது.
“ஒரு மிடறு சோறு சாப்பிட்டுட்டு வாறன்” என்பதற்குப் பதில் “ஒரு வாய் சோறு சாப்பிட்டுட்டு வாறன்” என்று தானே பாவிப்போம். “ஒரு வாய்” என்பது நீராகாரத்துக்கும், திண்மையான பதார்த்தங்களுக்கும் பயன்படுத்தப்படும் பொதுச் சொல்லாக விளங்குகிறது.
உ-ம் ஒரு வாய் சோடா குடிச்சிட்டு மிச்சத்தை உன்னட்டைத் தாறன்.
எங்கள் வீட்டில் நான் கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. கள்ளத்தீனி என்னும் இனிப்புப் பதார்த்தங்களைச் சாப்பிடத்தான் பெரு விருப்பம். சாப்பாடு சாப்பிடுவதென்றால் கள்ளம்.
அம்மா பிட்டையும் உருளைக்கிழங்குக் கறியையும் தட்டில் வைத்துக் குழைத்து விட்டு
 “இந்தாங்கோ ஒரு வாய், இந்தா இது தான் கடைசி வாய்” என்று சொல்லிச் சொல்லி எனக்குத் தீத்தி விட்டே முழுத்தட்டையும் காலி பண்ணி விடுவார். “போங்கோம்மா” என்று சிணுங்கிக் கொண்டே சாப்பிடுவேன். இது நான் அவுஸ்திரேலியா வரும் வரை நடந்த கூத்து.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் அடுத்த வேளை சாப்பாட்டை நினைத்து ஏங்கிய போதுதான் அம்மாவிடம் பிகு பண்ணியவை எழுத்தோட்டக் காட்சிகள் போலச் சுடும்.
“உங்கட அப்பா மாதிரிக் கதைக்கிறீங்கள்”
இலக்கியாவை மடியில் வைத்து நான் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் இலக்கியாவின் அம்மா இப்படிச் சொல்வார். நான்  ஊரில் புழங்கிய பேச்சு வழக்குச் சொற்களை அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாவித்து விடுவேன். இலக்கியாவின் அம்மாவுக்கே அந்தச் சொல்லெல்லாம் சில சமயம் புரியாத புதிராக இருக்கும். அஞ்சு மாச இலக்கியாவுக்கா புரியப் போகிறது 🙂
“ஒரு மிடறு குடிச்சுட்டுத் தாங்கோ” என்று இலக்கியாவின் அம்மாவும் இப்போது அடிக்கடி சொல்லப் பழகிவிட்டார். 
நம்முடைய சொந்த ஊரில் புழங்கும் அல்லது ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த இந்தச் சொற்களை மீளவும் பாவிக்கும் போது நம்பியாண்டார் நம்பி சிதம்பரம் கோயிலில் கவனிப்பாரற்றுக் கிடந்த செல்லரித்தும், அழிந்தும் அழியாதும் கிடந்த தேவாரத் திருப்பதிக ஏட்டுச் சுவடிகளை ஒவ்வொன்றாக ஆசையோடு பொறுக்கித் தடவி அவற்றைக் கண்ணீரோடு படித்த சுகத்தை மனக்கண்ணில் விரிப்பேன்.
“கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே”

வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைத் தேவரும் அசுரரும் கடைந்த போது அது கக்கிய நஞ்சின் அகோரத்தைத் தணிக்க வேண்டி தேவர்கள் முறையிட்ட போது அந்த நஞ்சை மிடறினில் குடித்து அடக்கிய சிவனே. 
இடறினும் தளரினும் பாடலில் வரும் மிடறு தொண்டை என்ற சொல்லுக்கு சம அர்த்தம் தரும். வாய்ப்பாட்டு இசையை மிடற்றிசை என்று வழங்குவதாக இன்று அறிந்தேன்.
சிட்னி முருகன் கோயில் காலைப்பூசையில் நம்பியாண்டார் நம்பி பாடியது போல அந்த “இடறினும் தளரினும்” தேவாரத்தின் பகுதியைக் காலையில் இருந்து அசை போடுகிறேன்,
“மிடறினில் அடக்கிய வேதியனே”
பதிவின் முகப்பில் இருக்கும் படம் எங்கள் வீட்டு விறகு அடுப்பு, அம்மாவின் ஆஸ்தான சமையல் கூடம்
டக்கென்று வருவேன் புத்தக அட்டை நன்றி : விருபா புத்தக விபரத்தளம்

சிவராத்திரி படக்காட்சி

எங்களூரில் சிவராத்திரி காலம் என்றால் ஒரு பக்கம் கோவில் கோவிலாகச் சாமம் சாமமாக நடக்கும் பூஜையும் கலை விழாவும் என்று பக்திபூர்வமாக ஒரு பக்கம் இருந்தால் அதற்கு எதிர்மாறான இன்னொரு பக்கமும் இருந்தது. ஒவ்வொரு சிவராத்திரியும் வரும் போது அந்த இன்னொரு பக்கம் தான் வந்து நினைவுகளைக் கிளறும்.

எண்பதுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் அவ்வளவாக எட்டிப் பார்க்காத சூழலில் ஊரிலிருக்கும் யாரோ ஓரிரு பணக்காரர் வீட்டில் இருக்கும் குட்டிப் பெட்டியில்  பாயாசம் போல புள்ளி புள்ளி வெள்ளைப் பொட்டுகளோடு அசைந்தாடும் மங்கலான காட்சியோடு ஒலி மட்டும் சத்தமாக ஒலிக்கும் தூரதர்ஷனின் “ஒலியும் ஒலியும்” காட்சியை வேலி தாண்டிய வெள்ளாடுகள் கணக்காக எட்டி நின்று பார்த்து வந்தவர்களுக்கு இந்தச் சிவராத்திரி வந்தால் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற முனைப்பில் முன்கூட்டியே இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் வீடியோ கடையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கும், வீடியோ ப்ளேயருக்கும் ஒப்பந்தம் செய்து விடுவர். 
அந்தக் காலகட்டத்தில் அதிகம் வீடியோ கடைகளும் இல்லை. யாழ்ப்பாணத்தில் “நியூ விக்ரேஸ்” தான் ஆபத் பாந்தவனாக முளைத்திருந்தது. புதுப்படங்கள் தியேட்டருக்கு வருவதும் அரிதான சூழலில், சிவராத்திரிக்குச் சேர்த்து வைத்து நாலைந்து புதுப்படங்களிம் வீடியோ கசெட்டுகளை வாங்கி, வீட்டு முற்றத்தில் மர வாங்கு போட்டு டிவியை நடுக்கொள்ள  வைத்து விடிய விடியப் படக் காட்சி நடக்கும். எம்.ஜி.ஆர் படங்களுக்கும் தனி மவுசு  இருக்கும். அதனால் சண்டைப் படங்களை நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டித் தான் போடுவார்கள். வாத்தியார் “டிஷ்யூம் டிஷ்யூம்” என்று கவர்ச்சி வில்லன் கண்ணனையோ அல்லது மொட்டைத் தலைக் குண்டனையோ அடித்து உதைக்கும் போது முத்தத்தில் இருந்து சாறக் கட்டுடன் பார்க்கும் பெடிப்பயலுகள் உணர்ச்சி வசப்பட்டு முன்னால இருக்கிறவைக்கு உதை போடுதலும் நடக்கும். விடியும் போது நாலா திசைகளிலும் அந்தச் செம்பாட்டு மண்ணிலேயே பாதி நித்திரை, முழு நித்திரையோடு தெல்லுத் தெல்லாக படம் பார்க்க வந்த சனம் கவுண்டு போய்க் கிடக்கும். தொலைக்காட்சிப் பெட்டி தன் பாட்டுக்கு ஏதோ ஒரு படத்தோடு ஓடிக் கொண்டிருக்கும். அதையும் ஏதோ விரதம் போல முழுப் படத்தையும் பார்த்துத்தான் முடிப்பேன் என்ற இலட்சியத்தோடு கொவ்வைப் பழக் கண்களோடு இருப்போரும் உண்டு.
சிவராத்திரிப் படக்காட்சி என்பது வீடுகளைத் தாண்டி வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள் என்று அந்தந்த ஊர்களில் இருக்கும் சமூக மன்றங்கள் ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ கட்டணத்தில் கிழுவந்தடி மறைத்த மைதானத்தில் ஒரு பொட்டுப் போட்டு தற்காலிக நுழைவு வாசல் அமைத்துப் படம் போட்ட காலமும் உண்டு. சில கோயில்களிலும் இந்தப் படக்காட்சிக் கூத்து இருக்கும் ஆனால் கடவுள் கோவிச்சுப் போடுவார் என்று திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் போன்ற புராணப்படங்கள் தான் போடுவினம்.

எண்பதுகளில் தியேட்டர்களுக்கு மாற்றீடாக வந்தது மினி சினிமாக்கள் என்ற முறைமை. அதுவரை இயங்கிய ஏதாவது பல சரக்குக்குக் கடையை மூடி, இருட்டாக்கி நாலு வாங்கு போட்டு டிவி, வீடியோ ப்ளேயர் வைத்தால் அது மினி சினிமா ஆகிவிடும் இது கிராமங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எங்களூரில் சயந்தா மினி சினிமா அப்போது இயங்கியது.  சிவராத்திரிக்கு விசேட மூன்று புத்தம் புதுப் பிரதிகளோடு காட்சிகள் என்று அடுத்த ஊர் மானிப்பாய் காண நோட்டீஸ் அடித்து ஒட்டுவார் சயந்தாக்காறர். நல்ல பாம்பு, யார், பேய் வீடு என்று இந்த மினிசினிமாக்காரர் போடும் படமே ஒரு தினுசாக இருக்கும்.

என்னுடைய வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்த மினி சினிமாவுக்குப் போய்ப் படம் பார்க்க வேண்டும் என்பது அப்போது ஒரு உயர்ந்த இலட்சியமாக இருந்தது. அம்மாவிடம்
என் இலட்சியத்தைச் சொன்ன போது “அங்கையெல்லாம் கண்ட காவாலியள், களுசறையள் போவினம்” என்று அம்மா கொடுத்த வெருட்டில் இலட்சியமும் கண் காணாது போய்விட்டது.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவப் பிரச்சனையோடு சயந்தா மூடுவிழாவோடு உரிமையாளரும் குடும்பத்தோடு இந்தியா போய் விட்டார். ஊருக்குப் போகும் போதெல்லாம் சயந்தா மினி சினிமா இருந்த பக்கம் என்ர கண் தானாகப் போகும். சயந்தா மினி சினிமாவில் படம் போடுவது போலவும் நான் களவாக எட்டிப் போய்ப் பார்ப்பது போலவும் இப்பவும் எனக்கு அடிக்கடி கனவு வரும்.
கொஞ்சம் வளர்ந்த காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து  சாமப்பூசை பார்த்த கையோடு அண்ணா தொழிலகம் அதிபர் வீட்டில் “ஒருவர் வாழும் ஆலயம்” படம் பார்த்தது மறக்க முடியாது. ஆலயத்துக்கு ஆலயம் ஆவன்னாவுக்கு ஆவன்னா (கிரேசி மோகன் குரலில்)
உயர் வகுப்புப் படிக்கும் காலத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் வசந்தமண்டபத்தில் இரவிரவாகக் கலை நிகழ்ச்சிகள். பெடியளாகச் சேர்ந்து “கனடா வேண்டாம்” என்று நாடகம் எல்லாம் போட்டோம். 
நாடகம் தொடங்க முன்னர் எங்களூரில் சங்கீத வித்துவான் என்று சொல்லிக் கொண்ட ஒரு ஐயா அரை மணி நேரம் தேவார பாராயணம் பாடப் போகிறேன் என்றார். இடம் கொடுத்தால் அரை மணி ஒரு மணியாகி ஒன்றரை மணியைத் தாண்டியது. இது வேலைக்கு ஆகாது என்று கூட்டத்தினர் கை தட்டிப் பார்க்க அவருக்கோ புளுகம் கூடி தன்னைப் பாராட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு சிரித்துக் கொண்டே தன் கைகளைத் தட்டியும் ராகம் இழுத்தும் இன்னும் பாடிக் கொண்டே போனார். ஒருவழியாக அவரின் கச்சேரி முடிவு கட்டப்பட்டது.
“கனடா வேண்டாம்” வெளி நாட்டுக்குப் போவதால் எவ்வளவு தூரம் கலாசாரச் சீரழிவு நடக்கிறது என்பது தான் இந்த நாடகத்தின் கருப்பொருள். நாடகத்தில் நடித்தவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கனடா, பிரான்ஸ், யு.கே என்று போய் விட்டார்கள்.  கனடா வேண்டாம் நாடகத்தில் வெள்ளைக்காரனாக நடித்த ஶ்ரீமான் அண்ணை வெளி நாட்டுக்கே போக மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு ஊரில் இருந்தவர். ஆறடி உயரம், களையான முகம், வெள்ளைக்காரனைப் போலத்தான் ஶ்ரீமான் அண்ணை.
 விதானையார் என்று சொல்லப்படும் கிராம சேவகர் பதவியும் அவரைத் தேடி வரவும் சொந்த ஊரே சுகம் என்றிருந்த ஶ்ரீமான் அண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி குழந்தைகளை விட்டு நிரந்தமாகப் பிரிந்து விட்டார்.  அவர் போனது வெளி நாட்டுக்கு அல்ல, தன் இளவயதிலேயே இதய நோய் கண்டு இறந்து  போய் விட்டார். 

ஈழத்து வில்லிசைக் கலைஞர் “கலா விநோதன்” சின்னமணி – ஓய்ந்த வில்லுப்பாட்டுக்கார்

 ஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட “சின்னமணி” ஐயா அவர்களின் இறப்புச் செய்தியை நண்பன் விசாகன் மூலம் அறிந்தேன்.

கோயில்கள் தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட இசை நாடக மரபில் வில்லுப்பாட்டு தனக்கெனத் தனியிடம் கொண்டு விளங்கி வருகின்றது.

இந்த வில்லுப்பாட்டுக் கலையானது ஆலயங்களிலே நெறிப்படுத்தப்பட்ட அனுபவம் வாய்ந்த வில்லிசைக் கலைஞர்களால் மட்டுமன்றி பள்ளிகள் தொடங்கித் தனியார் கல்வி நிலையங்கள் ஈறாக மாணவர்களும் இந்தக் கலை வடிவத்தை உள்வாங்கி வளர்த்தெடுத்து வந்தனர். எண்பதுகள் தொண்ணூறுகளிலே என் சம காலத்து மாணவருக்கு வில்லிசைக் கலையின் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் அமரர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சின்னமணி அவர்கள். புராண இதிகாசப் படைப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றை நகைச்சுவை என்ற தேன் தடவி ஆழ்ந்த இறையியல் கருத்துகளை வில்லிசையில் பாட்டும் கதையுமாகச் சொல்வதில் சின்னமணி சூரர். அது மட்டுமன்றி சமுதாய வாழ்வியல் குறித்த வில்லுப்பாட்டு நிகழ்வுகளையும் தன் பாணியில் சுவைபட வழங்கியவர். இதனாலேயே வயது வேறுபாடின்றி அவருக்கான ரசிகர் வட்டம் ஈழத்தைக் கடந்து இன்றும் இருக்கிறது.
ஈழத்தின் கலை மரபுகளின் வாழ்வியல் வடிவமாக சின்னமணி அவர்கள் விளங்குகின்றார். ஈழ மண்ணின் நினைவுகளை அசை போடும் போது தவிர்க்க முடியாது நம் எல்லோரது நினைவிலும் தங்கியிருப்பவர் இவர்.
ஈழத்தில் காலத்துக்குக் காலம்  பல வில்லுப்பாட்டுக் கலைஞர்களை உருவாக்கியிருந்தாலும் எங்கள் காலத்துக்கு முன்பிருந்தே சின்னமணி அவர்கள். நீண்ட நெடிய வில்லுப்பாட்டுக் கலை வரலாற்றின் விரூட்சமாக விளங்கியவர்.

அமரர்
சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டு இசைப்பகிர்வின் ஒரு பகுதி காணொளியாக
யாழ் சிந்து சாது கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இறுவட்டில் இருந்து

கலா விநோதன் சின்னமணி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
நன்றி: அனலை எக்ஸ்பிறஸ் http://analaiexpress.ca/

அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன்.
சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936 இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக அச்சுவேலியை தனது வாழ்பதியாக்கிக் கொண்டார்.
சின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957
இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில்
ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான
ரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக
நிகழ்வுகளில் பங்கு கொண்டார். கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய
காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும்
வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட இவர் வண்ணை.
கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் வில்லிசைத்துறையில் புகழ்பெற்றிருந்த திருப்பூங்குடி
ஆறுமுகத்துக்குப் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் நகைச்சுவையாளராகவம்
பணியாற்றிப் பின் அவரது ஆசீர்வாதத்துடன் 02.02.1968 இல் செல்வச்சந்நிதி
சந்நிதானத்தில் தான் தலைமையேற்று முதல் வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தினார்.
தான் அமைத்த வில்லிசைக் குழுவுக்குத் தனது ஆதர்சக் கலைஞராகிய கலைவாணரின்
பெயரைச் சூட்டினார்.

வில்லிசை என்றால் சின்னமணி என்னும் அளவிற்கு இவரது புகழ் உலகெங்கும்
பரவியுள்ளது. தமிழ்ப் புராண, இதிகாச, காப்பியங்களில் இருந்து சமூகம் கற்க
வேண்டிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புக்களில் மேற்கொண்டுள்ளார்.
வில்லிசையின் ஊடாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார்.
படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை
சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும்.
வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை
பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில்
இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத்
தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச்
சின்னமணியை இனங்காட்டலாம்.

சின்னமணி நா.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும்
விருதுகளும் எண்ணிலடங்காதவை. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்னன்,
வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக்
கலைஞானசோதி, பல்கலைவேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், ஜனரஞ்சக நாயகன்,
கலாவினோதன் என்பன அவற்றுட் சிலவாகும். இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான
சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கலாவினோதன் என்ற பட்டம் 30.06.2002இல்
கனடாவில் வழங்கப்பட்டதாகும். 1998 இல் இலங்கை அரசின் கலாபூஷண விருதையும்
2003 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சின்னமணியின் வாரிசுகள்
இன்று எம்மண்ணில் வில்லிசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அச்சுவேலியின்
கலை அடையாளம் சின்னமணி என்றால் மிகைப்படாது.

 ஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட “சின்னமணி” ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைட்டும்.

நன்றி:
சின்னமணி அவர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு : அனலை எக்ஸ்பிறஸ் இணையம்
 http://analaiexpress.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-2
வில்லுப்பாட்டுக் காணொளிப் பகிர்வு
Tamil Journalism