Month: December 2015
வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்
டிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.
“விஜயா அக்கா கதைக்கிறன்” என்ற குரல் இனிக் கேளாது
“அருண் விஜயராணி அக்காவுக்குக் கடுமையாம், எந்த நேரமும் அவர் நம்மை விட்டுப் பிரியலாமாம்”
செய்தியை
நண்பர் எடுத்து வந்த போதே கடவுளே இதையும் அவ கடந்து வர வேண்டும் என்று
மனசுக்குள் வேண்டிக் கொண்டேன். இன்று மாலை அவர் நம்மை விட்டுப் பிரிந்த
செய்தி கேட்டு இந்த நிமிஷம் இதை எழுதிக் கொண்டிருக்கும் வரை இதையெல்லாம்
மாயமோ என்ற நிலையில் இறுகிப் போயிருக்கிறேன். இதே நிலை தான்
கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்த போதும்.
இலக்கிய
உலகில் பேரிழப்பு என்ற வார்த்தைகளில் சம்பிரதாயம் இல்லை. அவுஸ்திரேலிய
மண்ணின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர் என்ற
இலட்சணத்தை வெறுமனே இந்த ஒற்றை வார்த்தைகளால் கடக்க முடியாது.
மெல்பர்னில்
நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய நிகழ்வொன்றுக்குப்
போயிருந்தேன். அந்த நிகழ்வில் ஓவியர் அமரர் திரு.செல்லத்துரை அவர்களது
ஓவியக் கண்காட்சியும் இருந்தது. சிவயோக சுவாமிகளின் திருவுருவத்தை வரைந்த
வகையில் அவரின் தனித்துவமான ஒரு ஈழத்து ஓவியர். அவரின் மகள் தான்
எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
அதன்
பின் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தினை சிலாகித்து நான்
வானொலியில் பகிர்ந்த போது என்னைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பு, இந்தப்
படம் Sense and Sensibility
இன் தழுவல் என்ற செய்தியோடு இந்தப் படம் குறித்த மாறுபட்ட விமர்சனப்
பார்வையை முன்வைத்தார் ஒரு பெண்மணி. வானொலியை இப்போது தான் கேட்க
ஆரம்பித்திருக்கிறேன் என்ற செய்தியோடு வந்த அவர் வேறு யாருமல்ல அருண்
விஜயராணியே தான்.
அதன் பின்னர் வானொலியில் நான் வழங்கும் நிகழ்ச்சிகள்
ஒவ்வொன்றுக்கு அவரது விமர்சனமும், பாராட்டுதல்களும் வரத் தொடங்கின.
தொலைபேசியில் வாரம் ஒருமுறை அவரின் அழைப்போ என் அழைப்போ இருக்கும்.
இலங்கை
வானொலியின் தன் எழுத்துப் பிரதிகள் பலவற்றை வழங்கிச் சிறப்பித்தவர்,
அவுஸ்திரேலியாவின் விரல் விட்டு எண்ணத்தகு எழுத்தாளர்களில் ஒருவர்.
குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்ன என்பதை அதன் வரையறைகளோடு வாழ்விலும்
எழுத்திலும் பதித்தவர். என்னுடைய வானொலிப்படைப்புகள் பலவற்றுக்குத்
தன்னுடைய ஆக்கங்களை எழுதி அனுப்பி வைத்து உரமேற்றி வைத்த போது அந்த நிலை
எனக்கு வானொலிப் படைப்புலகில் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக நினைத்துக்
கொண்டேன்.
தமிழ் சினிமாப் பாடல்களை ஒரு குறிப்பிட்ட காலத்தில்
நின்று கொண்டு பார்க்காமல் இன்றைய பாடல்கள் வரை துறை போகத் தெரிந்தவர்.
எழுத்தாளர் நிலையில் இருந்து ஜனரஞ்சக சினிமா உலகைப் பார்ப்பதெல்லாம்
கெளரவக் குறைச்சலாக இருக்கும் எழுத்தாளர்களில் இவரின் இன்னொரு முகம்
தனித்துவமாக அடையாளப்படுத்தியது. “தங்கமான எங்கள் ஊர்” என்ற ஈழத்து ஊர்கள்
பற்றிய பகிர்வில் தன் பிறந்தகமான உரும்பராயைப் பற்றி எழுதி அனுப்பி
வைத்தார். இன்னும் எத்தனையோ ஆக்கங்கள் தமிழ் இலக்கியங்களோடு தமிழ்த்
திரையிசைப் பாடல்களை ஒப்புவமை செய்து பகிர்ப்பட்ட கட்டுரைகள் எல்லாம் அவர்
கைப்பட எழுதி எனக்கு அனுப்பியவை இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஒருமுறை இதை
நான் சொன்ன போது வியந்து போய் “அட இதையெல்லாம் எறிஞ்சிருப்பீங்கள் என்று
நினைத்தேன் வீட்டில ஒரு பெரிய பரண் இருக்கும் போல” என்று சிரித்துக் கொண்டே
சொன்னார்.
நள தமயந்தி படத்தின் மூலக்கதை அவருடைய சிறுகதையில் இருந்து உரிமை பெறாமல் எடுத்தாளப்பட்டதைச் சிரிப்போடு கடந்து போனார்.
முனியப்பதாசன் கதைகள் தொடங்கி ஒரு குவியல் புத்தகங்களை அனுப்பிவிட்டுச் சொன்னார் “பிரபா இது உங்களிடம் இருக்க வேண்டியவை” என்று.
“அக்கம்
பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை ஏன் சொல்லு ராசா” என்ற உன்னால்
முடியும் தம்பி படப் பாடலை அடிக்கடி கேட்பார். அவருக்காக அல்ல இறந்து போன
அவரின் அப்பாவுக்காக. அவ்வளவு நேசம் அவர் மேல். தந்தையாரைப் பற்றிப் பேசும்
போதெல்லாம் உடைந்து அழுது விடுவார்.
தனது வானொலிப் படைப்புகள் ஒலி வடிவில் இறுவட்டாக வரவேண்டும் என்பது தான் இறுதி வரை அவரின் நிறைவேறாத ஆசை.
நல்ல
இலக்கியம், நல்ல சினிமா என்று எங்கள் வாராந்த சம்பாஷணைகள் இருந்து ஒரு
நிலையில் எனக்கு உடன்பிறவாச் சகோதரி என்ற நிலைக்கு மாறினார். எனது திருமண
அழைப்பிதழை முதன் முதலில் கொடுத்தது அவருக்குத் தான். இதை நான் சொன்னபோது
அவர் அப்போது நெகிழ்ந்த கணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போது
சொன்னேன் நான்
“அருண் அண்ணா எவ்வளவு தூரம் உங்கள் இலக்கிய
முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உங்களோடு மனமொத்த கணவராக
இருக்கிறாரோ அதே போன்ற ஆசீர்வாதம் தான் என் மண வாழ்க்கைக்கும் இருக்க
வேண்டும் அக்கா”
திருமணத்தின் பின் முதலில் ஒரு குழந்தையைத்
தத்தெடுத்து எங்களோடு வளர்க்க வேண்டும் என்று நான் சொன்ன போது அவர்
சொன்னார், “முதலில் உங்களுக்கு ஒரு குழந்தைச் செல்வம் கிடைக்கட்டும் பிரபா
அதுக்குப் பிறகு இதை நீங்கள் செய்யுங்கள்”.
எங்களுக்கு நீண்ட
வருடங்களாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாத போது எனக்காகக் கந்த சஷ்டி விரதம்
பிடித்தார். தன்னுடைய சிகிச்சைக்காக இந்தியா போன போது எனக்காக மாங்காடு
அம்மனிடம் நேர்த்தி வைத்தார்.
இலக்கியா பிறந்த போது எங்கள் அளவுக்குச்
சந்தோஷப்பட்டிருப்பார் விஜயராணி அக்கா என்பதை மறுமுனைத் தொலைபேசியில்
அவரின் குரலில் தொனித்த நெகிழ்வில் உணர்ந்தேன்.
கடந்த எனது இந்தியப்
பயணத்தில் அவர் மாங்காடு அம்மனிடம் எங்கள் குழந்தைப் பாக்கியத்துக்கான
நேர்த்தி வைத்ததைச் செய்து முடித்ததையும் நிறைவோடு ஏற்றுக் கொண்டார்.
“ஏன் பிரபா எடுக்கேல்லை அக்காவோட கோவமோ?” என்று கேட்கும் அளவுக்கு அருண் விஜயராணி அக்காவின் உரிமையான நேசம் இருந்தது.
என்னைக் கட்டுப்படுத்தி, நல்வழிப்படுத்தியவர்களில் அருண் விஜயராணி அக்காவின் பங்கு பெரும் பங்கு.
எங்களுக்குப்
பிடித்தமானவர்கள் ஏன் திடீரென்று செத்துப் போய் விடுகிறார்கள் என்ற
கேள்வியை என் மனச்சாட்சி அழுது கொண்டே மீண்டும் கேட்கிறது. சொல்வதற்கு
என்னிடம் பதில் இல்லை 🙁
விக்கிபீடியாவில் அருண் விஜயராணி அவர்கள் குறித்த பகிர்வு
அருண் விஜயராணி (16 மார்ச் 1954 – 13 டிசம்பர் 2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர்.
பொருளடக்கம்
வாழ்க்கைக் குறிப்பு
அருண் விஜயராணி யாழ்ப்பாணம் உரும்பிராயைப்
பிறப்பிடமாகக் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகளிலும் இங்கிலாந்திலும் சில
காலம் வசித்திருக்கும் அருண். விஜயராணி 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்
வசித்து வந்தார். இவரது தந்தையார் பிரபல ஓவியர் செல்லத்துரை. விஜயராணி
செல்லத்துரை என்ற பெயரிலேயே இவரது ஆக்கங்கள் முன்பு வெளியாகின. அருணகிரி
என்பவரை மணந்ததன் பின்னர், அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வந்தார்.
இலக்கிய உலகில்
1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் “அவன் வரும்வரை” என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது “விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்” என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.
இலங்கை வானொலியில் சிறுகதைகள், சிந்தனைக்கட்டுரைகள், இசையும் கதையும்,
நாடகங்கள், தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன.
”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன” என்ற இவரது வானொலி நாடகம், துணை என்ற
பெயரில் ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக பி. விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.
அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலி, இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய
சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன்
வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
விருதுகள்
மெல்பன் தமிழ்ச்சங்கம் இவரது பணிகளைப்பாராட்டி 2005 ஆம் ஆண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
வெளிவந்த நூல்கள்
- கன்னிகா தானங்கள் (சிறுகதைத் தொகுதி) தமிழ்ப்புத்தகாலயம், 1990, சென்னை
தமிழ்முரசு அவுஸ்திரேலியா இணைய சஞ்சிகையில் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய பகிர்வு
திரும்பிப்பார்க்கின்றேன். அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் முருகபூபதி
விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக்
கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது.
அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை… வேற ஏதேன் கோளாறோ தெரியாது.
இவ வரவே மாட்டா….. பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே…?
தடவித் தடவி வாசிக்கிற பாட்டிக்கு நீங்கள் இந்த உதவியை எண்டாலும் செய்து குடுங்கோ “
விவியன் நமசிவாயம் அவர்களிடமிருந்து ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதப்பட்டது. அந்தப்பெண்தான் விசாலாட்சிப்பாட்டி தொடரை எழுதியவர்.
இளம் யுவதி. அவர்தான் அன்றைய விஜயராணி செல்வத்துரை, இன்றைய படைப்பாளி அருண். விஜயராணி.
இவரது விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியது.
அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார்.
ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள்.
ஒலிபரப்பாளர்களின் குரல் வளம். வானொலிகள் இருந்த அனைத்து தமிழ் – முஸ்லிம் இல்லங்களிலும் காலை முதல் இரவு வரையில் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சிகளின் பெயர்ப்பட்டியலே நீளமானது.
இசையும் கதையும்,
மாதர் மற்றும் கிராம சஞ்சிகை,
இளைஞர்களுக்கான சங்கநாதம், சிறுவர்களுக்கான சிறுவர்மலர். இவற்றில் ஏராளமான நாடக எழுத்தாளர்கள்,
வானொலி கதாசிரியர்கள், சிறுவர் இலக்கியம் , சிறுவர் நாடகம்,
நேயர் கடிதம் எழுதுபர்கள் அறிமுகமானார்கள். அவ்வாறு வானொலி நேயர்களுக்கு அறிமுகமாகியவர் விஜயராணி.
விஜயராணி மெல்பனிலிருந்து அந்த வசந்தகாலத்தை நினைத்து நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.
குறமகள் வள்ளிநாயகி, இ.நாகராஜன், கனகசெந்தி நாதன் ஆகியோர் இணைந்து எழுதிய மத்தாப்பு புதினத்தை படித்திருந்த அவர், அதுபோன்றதொரு தொடரை வீரகேசரி வாரவெளியீட்டிலும் வெளியிட விரும்பினார்.
இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் பற்றி முன்பொரு தடவை எழுதியிருக்கின்றேன்.
ஒப்புநோக்கும் (Proof Reading) பொழுதே படித்திருந்தேன். அக்கால கட்டத்தில் நாளைய சூரியன் வாசகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றிருந்தமைக்குக்காரணம் அந்தக்கதையின் கருப்பொருள்.
ஹிப்பிக் கோலத்தில் அலையும் ஒரு பாத்திரம் பற்றிய கதை. ஈழத்து இலக்கியத்தில் அதனை பெண் எழுத்தாளர்கள் எழுதியமையினால் துணிகர முயற்சி என்றும் சில விமர்சகர்கள் சொன்னார்கள்.
நாடகங்களை கேட்டிருக்கின்றேன். வீரகேசரி, மல்லிகையில் அவருடைய கதைகளை வாசித்திருக்கின்றேன்.
ஆனால் சந்திக்கக்கிடைக்கவில்லை.
வானொலியிலும் அவரது படைப்புகள் ஒலிபரப்பாகவில்லை.
ஒருநாள் ” எழுத்தாளர் விஜயராணி செல்வத்துரையை உமக்குத் தெரியுமா ….?” – என்று கேட்டார்.
அவர் தனது தங்கை என்றார் ரவீந்திரன்.
தங்கை தற்பொழுது லண்டனில் இருப்பதாகவும் விரைவில் மெல்பனுக்கு குடும்பத்துடன் வந்துவிடுவார் என்றும் அவர் சொன்னார்.
சி. ஏ.
மண்டபத்தில் நடந்தபொழுது லண்டனிலிருந்து வருகை தந்திருந்த அருண். விஜயராணியையும், ரவீந்திரன் அழைத்து வந்திருந்தார். அன்றுதான் அவரை முதல் முதலில் சந்தித்தேன்.
அவர்பற்றிய பதிவை எற்கனவே எழுதியிருக்கின்றேன்.
அண்ணன்மாரின் பிள்ளைகள் நடன, இசை அரங்கேற்றம் கண்டவர்கள்.
சட்டத்தரணி ரவீந்திரன் கலை,
இலக்கிய ஆர்வலர்.
அத்துடன் லண்டனில் தமிழ் தகவல் நிலையம்,
இலங்கையில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் கந்தசாமியுடன் இணைந்து பல சமூகப்பணிகளை மேற்கொண்டவர்.
டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடத்தியபொழுது அருண். விஜயராணியும் உரையாற்றினார். சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும் வருகைதந்து உரையாற்றினார். இருவரும் அவுஸ்திரேலியாவில் ஏறிய முதல் மேடையாக அந்த இலக்கிய நிகழ்வு அமைந்தது.
வீரகேசரி வாரவெளியீட்டில் அந்த நிகழ்வு பற்றிய கட்டுரையையும் பின்னர் எழுதியிருந்தார்.
அதில் தனது சிறுகதைகள் இருப்பதாகவும் அதனை சென்னை தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனிடம் சேர்ப்பித்து அச்சிடுவதற்கு வழிவகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
சி. ஏ. மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது. இலங்கை வானொலியின் முன்னாள் தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் வருகைதந்து வாழ்த்துரை வழங்கியபொழுது அருண். விஜயராணியின் வானொலி நிகழ்ச்சிப்பங்களிப்புகளை நினைவுபடுத்தினார்.
எஸ்.பொன்னுத்துரை, மாத்தளை சோமு இலங்கையிலிருந்து பொன். ராஜகோபால், சுடர் இதழ் ஆசிரியராகவிருந்த கனகசிங்கம் (பொன்னரி)
மெல்பனிலிருந்து ரேணுகா தனஸ்கந்தா, முருகபூபதி குவின்ஸ்லாந்திலிருந்து வானொலிக் கலைஞர் சண்முகநாதன் வாசுதேவன் ஆகியோர் எழுதிய குறிப்புகளையும் தொகுத்திருந்த சிறிய பிரசுரமும் அன்றையதினம் வெளியிடப்பட்டது.
1990 தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் கலாசார செயலாளராக அவர் அங்கம் வகித்ததுடன் சங்கத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிட்னி – மெல்பன் குவின்ஸ்லாந்து தமிழ் வானொலிகளிலும் இவருடைய பல படைப்புகள் ஒலிபரப்பாயின. கவியரசு கண்ணதாசனின் திரைப்படப்பாடல்களில் இழையோடிய தத்துவக்கருத்துக்களையும், சமூகம்,
மொழி, பெண்கள் தொடர்பான சிந்தனைகளையும் தொகுத்து தொடர்ச்சியாக உரைச்சித்திரங்களை எழுதி வான் அலைகளில் பரப்பினார்.
தங்கபாண்டியன் தாம் விரிவுரையாளராக பணியாற்றிய சென்னை இராணி மேரி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கொன்றில் விமர்சித்திருக்கிறார்.
கன்னிகா தானங்கள் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளை கனடாவில் வதியும் சியாமளா நவரத்தினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆயினும் ஆங்கில வெளியீடு வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடிக்கிறது.
முனியப்பதாசனை ஈழத்து இலக்கிய உலகம் மறந்திருந்த வேளையில், அவரை நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக அந்த நூல் அமைந்தது.
அதிலும் அருண்.
விஜயராணியின் ஒரு அத்தியாயம் இடம்பெற்றது.