டொமினிக் ஜீவா

“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்” டொமினிக் ஜீவா அவர்கள் சொன்ன இந்தக் கருத்து வாழ்வியலில் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்திருக்கிறது. 
ஈழ மண்ணில் பிறந்து இருபது முளைக்கையில் நான் புலம்பெயர்ந்து விட்டாலும் இன்றும் என் தாயக நினைவுகளில் மறக்கமுடியாதவை எங்கள் மண்ணில் விளைந்த முக்கியமான எழுத்தாளர் சிலரை  அவர்கள் பரபரப்பாக இயங்கிய காலகட்டத்திலேயே கண்டிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்பது தான். 
ஆதர்ஷ எழுத்தாளர் செங்கை ஆழியானின் எழுத்துகளைத் தேடித் தேடிப் படித்த காலத்தில் அப்போது அவருடைய பல சிறுகதைகளின் ஊற்றுக் கண்ணாய்த் திகழ்ந்த மல்லிகை சஞ்சிகை என் வாசிப்பனுபவத்தின் புதிய பக்கங்களைத் திறந்து விட்டது. எழுத்தாளர் சுதாராஜ் அண்ணர், மேமன் கவி உள்ளிட்ட பல ஈழத்து எழுத்தாளர்கள் எனக்கும் அறிமுகமானது மல்லிகையால் தான். அப்போது மல்லிகையின் கடைசி நான்கு பக்கங்களில் வெளியாகும் ஜீவாவின் பதில்களை முதலில் படித்து விட்டுத்தான் மற்றைய பக்கங்களைப் புரட்டுவேன்.
ஒவ்வொரு மல்லிகை இதழும் ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் (எந்த வித மொழி பேதமில்லாது) முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக அறிந்து கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர். பின்னர் மல்லிகை சஞ்சிகையின் புத்தக வெளியீடான “மல்லிகைப் பந்தல்” வழியாக “மல்லிகை முகங்கள்” என்ற தொகுப்பாக வெளிவந்த போது அதை வாங்கி “ஈழத்து முற்றம்” என்ற எனது வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சியில் இந்த ஆளுமைகளை குறித்த புத்தகத்தை மேற்கோள் காட்டிப் பகிர்ந்திருக்கிறேன்.
கொக்குவில் இந்துக் கல்லூரி நூலகத்தில் டொமினிக் ஜீவா எழுதிய “தண்ணீரும் கண்ணீரும்” சிறுகதைத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது அதுவரை என் வாசிப்பனுபவத்தில் கிட்டியிரார இருண்மை உலகைக் காட்டியது.
அதையே டொமினிக் ஜீவா இப்படிக் கேள்வியெழுப்புகிறார்
“சமூகத்தின் நன்மைக்காக, ஆரோக்கியத்துக்காக, அதன் முன்னேற்றத்துக்காகத் தங்களை அர்ப்பணித்து உழைத்துப் பிழைத்து வரும் பாமர மக்களின் ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், வாழ்க்கை முறைகள், அனுபவங்கள் எல்லாம் சரித்திர, வரலாறு அடைப்புக் குறிகளுக்குள் அடங்க முடியாதவைகளா? – ஏன்? ….என்ன காரணம்?
1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட்ட் 15 ஆம் திகதி ஈழத்து இலக்கிய வரலாற்றின் மறக்க முடியாத நாள். இந்த நாளில் தான் “மல்லிகை” என்ற சஞ்சிகையை டொமினிக் ஜீவா பிரசவித்தார். இந்த சஞ்சிகை ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் நீண்ட நெடிய வாழ்வைக் கொண்டது. 
இந்த ஆண்டையும் தொட்டிருந்தால் அது பொன் விழாக் கண்டிருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் “மல்லிகை” தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது இன்றும் ஈழத்து இலக்கியத்தை நேசிப்போரின் மனதில் ஒரு மனச் சுமையாக இருக்கிறது. 
தன்னுடைய மல்லிகை இதழின் பிரதிகளை ஆரம்ப நாட்களில் ஒரு நாள் சுமந்து கொண்டு போகையில் சாதித் தடிப்புக் கொண்ட இளைஞன் அதை வாங்கி நின்ற இடத்திலேயே கிழிதெறிந்த நிகழ்வு கூட ஜீவாவின் இத்தனை ஆண்டு கால, 400 இதழ்களைக் கொண்டு வர அவரின் மனதில் கிளர்ந்த ஓர்மத்தின் வெளிப்பாடோ என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால் ஒவ்வொரு மல்லிகை சஞ்சிகை வெளிவரும் போதும் டொமினிக் ஜீவா என்ற அந்தத் தனிமனிதன் சந்திக்கும் சவால்கள் எத்தகையது என்பதை அனுபவ ரீதியாகவும் கண்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணம் சிவன் கோயிலடி தாண்டினால் ஶ்ரீலங்கா அச்சகம், ஶ்ரீ சுப்ரமணிய புத்தகசாலை, வரதரின் கலைவாணி அச்சகம் எல்லாம் சூழ்ந்த ஒரு பகுதி. அந்தப் பெரு வீதியை ஊடறுத்துப் போகும் ஒரு சந்தின் முனையில் மல்லிகை காரியாலயம் என்ற பெயர்ப் பலகையைக் கண்டு என் சைக்கிளைத் திருப்பினேன் ஒரு நாள். 
ஒரு குடில் போன்ற கடையுள் வயதான ஒருவர் அச்சுக் கோர்த்துக் கொண்டு இருக்கிறார். எட்டிப் போய் 
“ஜீவா சேர் ஐப் பார்க்கலாமோ” என்று கேட்க அவர் கையைக் காட்டினார்.
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை, பளீர் வெள்ளை நேஷனல் சேர்ட்டும், வேட்டியுமாக என்னை ஏறெடுத்துப் பார்த்தார் ஜீவா.
“சேர் நான் உங்கட கதைகள் படிச்சிருக்கிறன், மல்லிகையை விடாமல் படிக்கிறனான்” அந்தக் காற்சட்டைப் பையனை அவர் சினேக பூர்வமாகப் பார்த்து விட்டுப் பழைய இதழ்கள், கிட்டத்தட்ட 10 வருடத்துக்கு முந்தியது அவற்றைத் தந்தார். வாங்கிக் கொண்டு மற்றைய பக்கம் திரும்பினால் பல்கலைக் கழக மாணவர் சிலர் அவரின் மல்லிகை இதழ்களைத் தேடித் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். அதுதான் டொமினிக் ஜீவா அவர்களுடன் என் முதல் சந்திப்பு.
டொமினிக் ஜீவா அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்ததன் பின்னர் போர் உச்சம் கொண்ட காலத்திலும் இரட்டை றூல் கொப்பித் தாளிலும் மல்லிகை வந்ததது.
அதன் பின் நான் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் மீண்டும் தாயகத்துக்குப் போன போது கொழும்பு, ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்த மல்லிகை காரியாலயத்துக்குப் போனேன். யாழ்ப்பாணத்தில் சலூன் முகப்போடு இருந்த அதே அடையாளச் சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது. மேல் மாடிக்குப் போனால் ஜீவா அவர்கள் எதிர்ப்படுகிறார்.
இம்முறை எழுத்தாளர் முருகபூபதி அண்ணருடைய நட்பின் வழியாக என்னை அறிமுகப்படுத்துகிறேன்.
“பூபதி எப்பிடி இருக்கிறார்” என்று விட்டு என்னைப் பற்றியும் கேட்டறிந்து கொள்கிறார்.
 முன்னர் யாழ்ப்பாணத்தில் கண்ட அச்சுக் கோர்ப்பவரைக் காணவில்லை. “இவ எழுத்தாளர் ஜஶ்ரீகாந்தனுடைய மகள்” கூடவே இன்னோரு பெண்ணும் என்று ஜீவா அறிமுகப்படுத்துகிறார். கணினித் தட்டச்சு வேலைகளுக்கு மல்லிகை மாறியிருந்தது.
ஜீவா இன்னொரு அறையில் இல்லையில்லை “மல்லிகைப் பந்தலில்” குவிக்கப்பட்டிருந்த மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைக் காட்டுகிறார். டொமினிக் ஜீவா எழுதிப் பதிப்ப்பித்த்தில் என்னிடம் இல்லாதவறையும், செங்கை ஆழியான் தொகுத்த “மல்லிகை சிறுகதைகள்” நூலையும் வாங்கி விட்டு விடை பெற்றேன்.
இன்னுமொரு ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது அதுதான் இன்று வரை டொமினிக் ஜீவாவின் மேல் எனக்கு இன்னும் ஒரு படி மரியாதையையும் நேசத்த்தையும் இன்று வரை கொடுத்தது. அது கடைசிப் பந்தியில்.
இன்று டொமினிக் ஜீவாவின் 89 வயது பூர்த்தி என்ற செய்தியை நேற்று அன்புக்குரிய மேமன் கவி அவர்கள் பகிர்ந்த போது உடனேயே எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி

வைத்து விட்டு

“எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” என்ற டொமினிக் ஜீவா எழுதிய தன் சுய வரலாற்று நூலில் மூழ்கிப் போனேன். மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினோரு மணி வரை ஜீவா என்னோடு உரையாடிக் கொண்டிருப்பது போன்ற பிரமையில் அந்தப் பக்கங்கள் என்னைப் புரட்டின.
வாசித்து முடித்ததும் “டொமினிக் ஜீவா ஒரு தனிமனிதனல்ல சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம்” என்று எனக்குள்ளும் சொல்லிக் கொண்டேன்.
 நான் டொமினிக் ஜீவாவை முதன் முதலில் சந்தித்த அந்த நாளில் பல்கலைக்கழக மாணவர் சிலர் அவரது சஞ்சிகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றேனல்லவா அதையே ஜீவா இப்படியான ஆதங்கத்தோடு பதிவு செய்கிறார்,
“எனது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியான “தண்ணீரும் கண்ணீரும்” தொகுப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏக்கு உப பாட நூலாக வைக்கப்பட்டது.
இன்று வரை எனக்கொரு ஆதங்கம் கலந்த ஆச்சரியம் இந்த மண்ணில் உள்ள எந்தப் பல்கலைக்கழகமுமே என்னை அழைத்து, எனது இலக்கிய அனுபவங்களைப் பற்றியோ தமது மாணவர்களுடன் கருத்துப் பரிமாறல் செய்ய இதுவரை அழைப்பு விடுத்ததில்லை. அது சம்பந்தமான ஆரம்ப முயற்சிகளைக் கூடச் செய்ததுமில்லை, தொடர்பு கொண்டதுமில்லை” இப்படியாகத் தொடர்கிறார்.
யாழ்ப்பாணத்துக் கல்விச் சமூகம் சாதியம் என்ற கறையானால் காலத்துக் காலம் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதுவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவாவுக்கு முதுமாமணி என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் விநோதப் போக்கை நிரூபித்துக் கொண்டது. கலை இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து பிழன்றது. டொமினிக் ஜீவாவுக்கு மட்டுமல்ல பல்கலைக்கழகப் பின்னணி கொண்ட பேராசான் சிவத்தம்பியைக் கூட அது மேலெழாதவாறு பார்த்துக் கொண்டது.
டொமினிக் ஜீவா தன் பிறப்பில் இருந்து ஒரு இலக்கியக் காரனாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக் குரலாகத் தன்னை ஆக்கிக் கொண்ட வாழ்வியல் அனுபவங்களே “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களுமே கனதியான சிறுகதைகள் போன்று அமைந்திருக்கின்றன. இந்தச் சம்பவ அடுக்குகளின் பின்னால் பொதுவாக அமைந்திருப்பது ஒன்றே தான் அது, சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படித் தான் போராட வேண்டும் என்று புகட்டி பாடம்.
“அச்சுத் தாளின் ஊடாக எனது அநுபவப் பயணம்” என்பது இதன் தொடர்ச்சியாக, டொமினிக் ஜீவாவின் வாழ்வியலைப் பதிவாகிய நூல்.
“ஏன்ரா எங்க வந்து எங்கட உயிரை வாங்குறீங்க?…போய்ச் சிரையுங்கோவன்ரா!” என்று பள்ளிப் பராயத்தில் இவருக்குக் கிட்டிய சாதிய அடையாள வசவோடு ஆரம்பிக்கிறது முதல் பகுதி.
யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிகாரியாக இருந்த டொமினிக் என்ற வெள்ளைக்காரரின் ஞாபகார்த்தமாக இவருக்குக் கிட்டிய பெயர், அதற்குப் பின் கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் பா.ஜீவானந்தம் அவர்களிடம் கொண்ட தொடர்பு இதன் வழியான ஏகலைவப் பக்தியால் ராஜகோபாலன் மாஸ்டர் இவரை ஜீவா என்றழைத்தது , ஜோசப் டொமினிக் ஆனது டொமினிக் ஜீவா என்று இவற்றுக்கெல்லாம் பின்னால் இருந்த சுவையான தன் வரலாற்று நினைவுகளை மீட்டிப் பார்க்கிறார்.
கூத்துக் கலைஞர்களை ஆதரித்த இவரின் தந்தை ஜோசப்பு குடியால் சீரழிந்தது, தன்னுடைய தாய் மரியம்மாவின் வளர்ப்பில் கிட்டிய நெறிமுறையும், இள வயதிலேயே கத்தரிக்கோல் தூக்கிச் சிகையலங்காரக் கலைஞராக வர வேண்டிய நிலையையும் சொல்கிறார்.
அந்தக் காலத்தில் செழித்து விளங்கிய நாட்டுக் கூத்துகளைச் சின்னனாக இருந்த போது தேடி ரசிக்கக் காரணமான எல்லிப் போலை ஆச்சி, தன் சலூனில் பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்ட பூபூன் செல்லையா பின்னாளில் சொல்லிப் பகிர்ந்த நாட்டுக்கூத்து வரலாற்றுப் பதிவுகள், கூத்துப் பார்த்த கதைகள், பூந்தான் ஜோசப்புவைத் தொட்ட கதை  வழியாக ஒரு காலத்தில் நிலவிய நாட்டுக்கூத்துப் பாரம்பரியத்தைப் பதிவாக்குகிறார் இந்த நூலில். இவை வெகு சுவாரஸ்யமான நனவிடை தோய்தல்கள். இதை வைத்தே அழகான சினிமா எடுக்கலாம். இங்கேயும் விஸ்வநாததாஸ் என்ற நாடக மேதை அவரது சாதியப் பின்புலத்தால் எதிர் கொண்ட சவால்களையும் பபூன் செல்லையா வழியாகப் பதிவாக்குகிறார்.
இரண்டாவது உலக யுத்த காலத்தில் உள் நாட்டு அகதிகளாக யாழ் நகரப் பகுதியில் இருந்து அல்லைப்பிட்டிக்குப் போன கதையும் ஒரு அத்தியாயத்தில் பேசப்படுகிறது. இது நானறியாத ஒரு புது விடயம். 
அது போலவே அமெரிக்கன் மா (கோதுமை மா)வை பசைக்கு மட்டுமே பயப்படுத்தலாம் என்று அக்காலத்தவர் எண்ணி வாழ்ந்த நிலை.
யாழ்ப்பாணத்தில் நிலவிய, நிலவுகின்ற சாதியத் தீண்டாமை ஒவ்வொரு புதுப் புது அனுபவங்களை இவருக்குக் கற்றுத் தர, இன்னொரு பக்கம் 1944 ஆம் ஆண்டில் வில்லூன்றி மயாயனத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணின் பிணத்தை எரித்ததற்காக உயர் சாதியால் கிளப்பிய வன்முறையால் முதலி சின்னத்தம்பி என்பவர் இறந்ததன் வழியாகப் பிறந்த துப்பாக்கிக் கலாசாரம் இவையெல்லாம் டொமினிக் ஜீவாவைப் பேனா தூக்கிய சமூகப் போராளி ஆக்குகின்றது.
தோழர் கார்த்திகேசன் தன் ஆசிரியப் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி
 வந்த போது அவரது நட்பும் கிடைக்கிறது. நாடறிந்த மேடைப் பேச்சாளன் ஆகிறார் ஒரு விழாவில்.

பருத்தித்துறைப் பகுதியில் வதிரி என்ற கிராமத்தில் திரு கா.சூரன் விளைவித்த சமுதாய மாற்றம், “தேவராளிச் சமூகம்” என்று சிவத்தம்பியால் சிறப்பிக்கப்பட்ட பின்புலமும் பதிவாகியிருக்கிறது.

டொமினிக் ஜீவா, டானியல், எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் முறையே புரட்சி மோகன், புரட்சி தாசன், புரட்சிப் பித்தனென்றும் புனை பெயரில் இயங்கியது, எஸ்.பொ வுடனான முரண்பாடு, யாழ் நூலக அழிவோடு எழுதுமட்டுவாளில் தாழ்த்தப்பட்ட சமூகக் குழந்தைகளின் புத்தகம், கொப்பியை 
எரித்ததை ஒப்பிட்டுப் பேசிய டானியல் என்று அந்தக் காலகட்டத்துச் சர்ச்சைகளையும் வரலாற்றில் பதிந்திருக்கிறார். இங்கே இந்த எழுத்தாளர்கள் புரட்சியைத் தம் புனைபெயராகச் சூடிக் கொண்டதைப் படித்த கணம் “செங்கை ஆழியான்” என்ற தனது புனைபெயருக்குப் பின்னால் இருந்த சிவப்புச் சிந்தனை குறித்து செங்கை ஆழியான் என்ற க.குணராசா சேர் எனது வானொலிப் பேட்டியில் பேசியது நினைவுக்கு வந்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால்
ஜீவாவைப் பொது வெளியில் சமுதாயப் போராளியாக்கியது தோழர் கார்த்திகேசனே, இந்த கார்த்திகேசனின் மாணவர்களில் ஒருவர் க.குணராசா அவர்கள். 
சரஸ்வதி இதழாசிரியர் விஜய பாஸ்கரனுடனான தொடர்பும் பங்களிப்பும், சுதந்திரன் பத்திரிகையில், எழுத்துப் பணி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடு, ஏ.ஜே.கனகரட்ணவின் நட்பு என்று இலக்கியக்காரர் டொமினிக் ஜீவாவின் வரலாறு பேசுகிறது.

தனது சலூனில் வைத்து தடித்த சாதிமான் ஒருவருக்குப் ஜீவா புகட்டிய பாடத்தை நினைத்து நினைத்துச் சிரித்தேன்.

ஆறுமுக நாவலர் பெற்றுத் தர விரும்பாத சமூக விடுதலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பெற்றுத் தர முனைந்த அக்கால கட்டத்து சீர்திருத்தவாதிகளையும் மறவாது நினைவு கூர்கிறார். இதெல்லாம் ஒரு எழுத்தாளனின் சுய வரலாற்றுப் பதிவினூடே கிட்டும் யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியின் பதிவுகள்.

“சலூன் தொழிலாகிய நான், அந்தச் சவரச் சாலையைச் சர்வகலாசாலையாக நினைத்தேன், மதித்தேன்.படித்தேன், இயங்கினேன்”  என்று தன் “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத ஓவியம்” என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் ஒப்புபுவிக்கிறார் டொமினிக் ஜீவா.
டொமினிக் ஜீவாவுடனான என்னுடைய மூன்றாவது சந்திப்பு நடந்தது,  என் திருமண நாளுக்கு முந்திய இரண்டு நாட்கள் முன்பு. பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து அதன் உரிமையாளர்களில் ஒருவர் நண்பர் ஶ்ரீதரசிங் அவர்களுடன் ஜீவா பேசிக் கொண்டிருப்பதைக் 
கண்டேன். குசலம் விசாரித்து விட்டு என் கல்யாண அழைப்பிதழை நீட்டுகிறேன். வாங்கிப் பார்த்தவரின் கண்ணில் திருமண நிகழ்வு “தாஜ் சமுத்திரா” ஹோட்டலில் நடப்பது குத்திட்டு நின்றது.
“ஐயோடா தம்பி சனம் எவ்வளவு கஷ்டப்படுகுது ஏன் இந்த வீண் பகட்டு” என்று நொந்து கொண்டார்.  அப்போதே தெரிந்து விட்டது என் கல்யாண நிகழ்வுக்கு வர மாட்டார் என்று. ஆனால் அந்த இடத்திலேயே என்னை ஆசீர்வதித்து வழியனுப்பினார். அது தான் ஜீவா மேல் நான் அனுபவ ரீதியாக மரியாதை கொள்ள வைத்த நிகழ்வு.
சிகை அலங்காரம் செய்பவர் என்றால் காலில் செருப்புப் போடக் கூடாது, பகட்டான உடை போடக்கூடாது என்ற மரபை உடைத்தெறிந்தவர் (அந்த நிகழ்வு நடந்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார்)
வெள்ளை நேஷனல் சட்டையும், வேட்டியுமாகப் பகட்டாக நின்ற ஜீவா எத்தனை ஆண்டுகள் கழித்தும் தன் எளிமையை மாற்றவில்லை. “மல்லிகை” என்ற சஞ்சிகையை எழுப்பி நாடளாவிய எழுத்தாளர்களை அரவணைத்து எழுத வைத்து உயர்ந்தாலும் அவரின் வாழ்க்கை இன்னமும் எளிமையையே சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுதான் ஜீவா.
நம்மிடையே வாழும் இந்தச் சமதர்மப் போராளி ஒடுக்கப்பட்ட மானுடருக்காகக் குரல் கொடுக்கும் மூத்த குடி.
எங்கள் டொமினிக் ஜீவா வாழிய பல்லாண்டு.
“மல்லிகை” ஜீவா பேசுகிறார் ஒளிப் பேட்டி வழியாக (தயாரிப்பு எம்.எம்.அனஸ்)

https://www.youtube.com/watch?v=cQZKsbqLepo

மல்லிகை இதழ்கள் நூலகம் ஆவணக் காப்பகத்தில்

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88

மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் நூலகம் ஆவணக் காப்பகத்தில்

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

தேநீரில் புன்னகை ☕️

“தேத்தண்ணி எண்டால் கடுஞ்சாயத்தோட கனக்கச் சீனி போட்டு இருக்கோணும்” என்பார் என் அம்மா. அதிகாலை நான்கு மணிக்கே காலை, மதியச் சாப்பாட்டை அரக்கப் பரக்கச் செய்து விட்டு தன் ஆசிரியப் பணியாற்ற பாடசாலைக்குப் போவதற்கு முன் சாப்பிடுவாரோ இல்லையோ
ஒரு மிடறு தேநீரைக் குடித்து விட்டுத் தான் கிளம்புவார். கந்தபுராணக் கலாசார பூமியில் பிறந்த அவருக்கு 365 நாளில் ஏகப்பட்ட விரதங்கள் வரிசை கட்டி நிற்பதும் இந்த உணவு துறப்புக்கு ஒரு காரணம்.
அம்மம்மா ஒரு படி மேல். தன் வீட்டில் மட்டுமல்ல வேறு உற்றார், உறவினர் வீடுகளுக்கும் சென்றால் “தேத்தண்ணி போட்டால் நல்லாச் சுடச் சுடப் போடு பிள்ளை” என்று விட்டு, தேநீர் பரிமாறப்படும் போது “இன்னொரு ஏதனம் தா பிள்ளை” என்று கேட்பார். ஏதனம் என்றால் பாத்திரம் என்று பொருள். ஆனால் அவரின் இடம், பொருள்.ஏவல் அறிந்து இன்னொரு பேணி (தேநீர்க் குவளை) யோடு தேநீர் வரும். 
இரண்டையும் வாங்கி விட்டு ஒரு இழுப்பு இழுப்பார் பாருங்கோ ஆற்றங்கரைக் காற்றுக்கு வேட்டி காயப் போடுவது போல அவ்வளவு நீளமாக அந்தப் பால் தேத்தண்ணியின் இழுவை ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்குப் போகும்.
நன்றாக இழுத்து ஆத்திய பால் தேத்தண்ணி தன் முடிவிடத்தில் (பேணி) கரையெல்லாம் நுரை தள்ளத் தள்ளத் துள்ளிக் கொண்டிருக்கும். 
தேநீரை வாங்கி ஆற அமரக் குடிப்பது ஒரு கலை.
அந்தக் காலத்தவர் இந்த விஷயத்திலும் தம் தனித்துவத்தைக் காட்டுவர். 
நுரை தள்ளும் பால் தேத்தண்ணியைக் குடிக்கும் போது அம்மம்மாவின் வாய்ப் பக்கமெல்லாம் நுரை படிந்திருக்கும். “அம்மம்மாவுக்கு மீசை முளைச்சிருக்குடா” என்றால் கொக்கட்டம் விட்டுச் சிரித்து விட்டு இருந்த இருப்பிலேயே தன் சேலைத் தலைப்பால் வாயைத் துடைத்துக் கொள்வார்.
வெற்றலை குதப்பிய வாய் என்றால் இந்தத் தேநீர்ச் சடங்குக்கு முன்னர் “பளிச்சு பளிச்சு” வாய் கொப்பளிப்பு நடக்கும்.
தமிழக விஜயத்தில் தான் இவ்வாறு பொது இடத்தில் தேநீரை ஆத்திக் குடிப்பதைக் கண்டிருக்கிறேன். மலேசியாவில் பொதித்தீன் பையுக்குள் நிரப்பிக் கொண்டு போன கதையும் உண்டு.
செப்பிலே செய்த மூக்குப் பேணியில் வெறுந்தேத்தண்ணி குடிக்கும் போது அந்த செப்பின் சுவையும் சேர்ந்த கலவை இருக்கும். கேரளத்தில் கட்டஞ்சாயா.
எனக்கு காலை எழுந்ததும் நல்ல பாட்டுக் கேட்பது போலத் தான் நல்ல தேநீர் குடிப்பதும். சம உரிமை கொண்ட நாட்டில் வாழ்வதால் நாலு மணிக்கெல்லாம் எழும்பி இலக்கியா அம்மாவைத் தேநீர் போடக் கேட்க முடியாது. ஏனென்றால் இருவருமே அரக்கப் பரக்க காலை ஆறரை மணிக்கே வீதியில் சகடையை (கார்) கொண்டு போனால் தான் வேலைக்குத் தக்க நேரத்தில் போகலாம். நானும் அடுப்படிக்குப் போகக் கூடாது என்பது கல்யாணம் கட்டின நாளில் இருந்து இலக்கியாவின் அம்மாவின் அன்புக் கட்டளை. 
நான் வேலை செய்யும் நகரப் பகுதியின் நல்ல தேநீரைக் கொடுக்கும் நல்ல மனசுக்காரனைத் தேடுவது என்பது உதித் நாராயணனிடன் திருப்புகழைப் பாடச் சொல்லிக் கேட்பதற்கு நிகரானது. புதிதாக ஒரு பகுதிக்கு வேலைக்குச் சேர்ந்தால் என் முதல் வேலை அங்குள்ள பகுதிகளின் தேநீர்க் கடைகளுக்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கடை என்று ஒதுக்கித் தேநீரைச் சுவைத்துப் பார்ப்பது. 
முடிவில் எனது நாவுக்கு உருசி கொடுக்கும் தேநீர்க் கடைக்காரன் தான் ஆத்ம நண்பன் ஆகி விடுவான்.
தேநீரைப் போடுவதற்கும் கை ராசி வேண்டும். அது இருப்பதைக் கொண்டு கலப்பதல்ல. மனம் வைத்துக் கொடுப்பது. எனது காலைத் தேநீர் பாழ் என்றால் மதியம் வரை கெட்டது தான் நடக்கப் போகுதோ என்று சொல்லும் என் மனம்.
இவ்வளவுக்கும் நாளொன்றுக்கு அதிக பட்சம் 3 குவளை தேநீர் தான் குடிப்பேன். ஆஸி நாட்டவருக்குக் காலைத் தேநீர் போதை மாதிரி.
தமக்கு விருப்பமான கடைகளில் வரிசை கட்டி நிற்பார்கள். சராசரியாக இரண்டு மில்லியன் ஆஸி நாட்டவர் தினமும் கடைகளில் தேநீர் வாங்கிப் பருகுகின்றனராம். வேலைத் தளத்தில் கட்டுக்கடங்காத அழுத்தம் வந்தால் தேநீர்க் கடை தான் பலருக்குத் தியான மண்டபம்.
காலையில் வெறும் வயிற்றில் Latte குடிப்பது (இரண்டு கரண்டி சீனி) சிவபாதவிருதையர் மகன் ஞானப் பால் குடிப்பது போல. அந்த முதல் சொட்டு வாயில் படுவது தான் நல்ல சகுனமா என்று சொல்லும். 
“பொச்சடுச்சுக் குடிப்பது” என்பார்கள் நம்மூரில்.
ஒவ்வொரு மிடறும் தொண்டைக்குள் போவதற்கு முன் நாக்கில் நீச்சலடிக்கும் இலெளகீக சுகம் அது.
எனக்குப் பிடித்த தேநீர்க் கடைக்காரரைக் கண்டு பிடித்து “நண்பேன்டா” என்று மனசுக்குள் சொல்வேன். ஆனால் சில காலத்துக்குப் பின் தேநீர்க் கடைக்காரருக்குப் பக்கத்தில் வாட்ட சாட்டமான ஒருத்தரைக் கண்டால் “துரோகி” என்று உள் மனது கத்தும். காரணம், கடை கை மாறப் போகிறது. கடையை வாங்கப் போறவரோ, அவரது உதவியாளரோ என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற தேநீரைக் கொடுக்க மாட்டாரே என்ற கவலை. அந்தக் கவலை பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டு விடும். நானும் என் பிரிய Latte தேடி புதுக் கடை தேடி ஓட வேண்டும்.
இவ்வளவும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த நான்கு மாதங்களாகத் தேடிப் பிடித்த ஒரு தேநீர்க் கடைக்காரர் இன்று முதல் எதிரியாகி விட்டார். அவ்வ்வ் அவரின் கடையை இன்னொருவர் வாங்குவதற்கு அச்சாரம் நடக்கிறது.
சரி சரி தேநீரில் புன்னகை புராணமாகிப் புலம்பலாவதை விட அதற்கும் ஒரு நல்ல பாடலைப் போட்டுச் சமாதானம் கொள்வோம்  ???
உங்களில் எத்தனை பேர் பெண் பார்க்கும் போது தேநீர் குடித்தீர்கள்? ?
“சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி”
 http://www.youtube.com/watch?v=t09r97wbLMg&sns=tw 
இந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு

பவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன் அவர்கள்

ஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார்.
ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் “ஞானம்” என்ற சஞ்சிகையைக் கடந்த 17 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.

வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க
 http://radio.kanapraba.com/interview/Gnanasekaran.mp3

தி.ஞானசேகரன் அவர்களின் படைப்புகளை ஈழத்து நூலகம் இணையத்தில் வாசிக்க

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF.

தி. ஞானசேகரன் பற்றிய குறிப்புகள்
 • ஈழத்து இலக்கிய உலகில் ஐம்பத்திரண்டு வருடங்களாக இயங்கி வருபவர்.
 • 1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி து. தியாகராசா ஐயர் – பாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ். மண்ணில் பிறந்தார்.
 • யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.  
 பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A.) பட்டம் பெற்றவர்.
 • வைத்தியராக நீண்டகாலம் மலையகத்தில் பணிபுரிந்தவர்.
 • இதுவரை இவரது பதினைந்து நூல்கள் வெளியாகி உள்ளன.
 • இவரது முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது.  இதுவரை இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.  
 • இவற்றுள் அல்சேஷனும்  ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (B.A.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது.
 • இவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘பரதேசி” என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
 • இவர் எழுதிய நாவல்களாக புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவை வெளிவந்துள்ளன. 
 • இவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை.  
 • லயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன.
 • குருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு,  த​லெனயகட என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.
 • குருதிமலை நாவல் 1992-1993 காலப்பகுதியில் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுமாணி (M.A.) பட்டப்படிப்புக்குப் பாடநூலாக அமைந்துள்ளது. 
 • இவரது பயண நூல்களாக அவுஸ்திரேலிய பயணக்கதை, வடஇந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன.  ஐரோப்பிய பயண இலக்கியம் அச்சில் உள்ளது.
 • 2000 ஆம் ஆண்டுமுதல், கடந்த பதனேழு ஆண்டுகளாக ‘ஞானம்” என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.  
இச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த ஈழத்துப் போர் இலக்கியம் மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.
ஞானம் சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து B.A., M.A., Mphil, PhD ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவுசெய்துள்ளனர்.

 • ஞானம் பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார்.  இதுவரை 40 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.
 • ஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.
 • சர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகள் சிலவற்றில் அரங்கத் தலைமை வகித்துள்ளார்.
 • இலங்கை அரசின் கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.