நான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்

என்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்பவர் பெருமதிப்புக்குரிய அப்துல் ஜபார் அவர்கள்.

இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற வேறுபாடுகளை அப்துல் ஜாபர் ஐயா போன்ற மிகச் சிலரே களைந்து தமிழர் என்ற பொதுமையோடு இயங்குகிறார்கள். அவர் மேடையில் மட்டுமே நடித்திருக்கிறார்.
அறுபது ஆண்டுகளைக் கடந்த ஊடகப் பணி, அதைத் தாண்டி மனித நேயராக எம் தமிழ் உறவுகளின் சுதந்தர வேட்கையை தன் உணர்வாகக் கொண்டு இயங்குபவர்.
வாராந்தம் இந்தியக் கண்ணோட்டம் என்ற தொகுப்பை இரு தசாப்தங்களைக் கடந்து புலம்பெயர் வானொலிகளுக்காக ஆரம்பத்தில் இருந்த அதே துடிப்போடு கொடுப்பவர். 
இஸ்லாமியப் பெருமக்களின் புனித நோன்பு காலச் சிறப்புப் பகிர்வு, அரசியல் கருத்தாடல், தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் காலத்தில் நேரடிப் பகிர்வுகள் என்று புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் வானொலிகளுக்கான அவரின் பங்களிப்பாக நீண்ட காலம் தொட்டு வழங்கி வருகிறார். ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம் IBC தொலைக்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் இவருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவித்தது. இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு அப்துல் ஜபார் அவர்கள் குறித்த அறிமுகமாக இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டிய அவரின் ஊடகத் துறை அனுபவம் நீண்டது.
இவரது ஊடகப் பயணத்தில் முதல் பகுதி இலங்கை வானொலியில் தொடங்குகிறது.  அங்கே பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்புடன் நாடக நடிப்பும் சேர்கிறது.

பின்னர் இந்திய வானொலி வழியாக  அழகு தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் தனி முத்திரை பதிக்கிறார்.
இன்று உலகத் தமிழ் வானொலிகளில் அவர் பங்களிப்புத் தொடர்கிறது.
நாற்பதுகளிலே தமிழகத்தில் இருந்து வாணிபம் செய்யும் நோக்கில் அப்துல் ஜபார் அவர்களின் தந்தையார் இலங்கைக்கு வருகிறார். சிறுவனாக இருந்த அப்துல் ஜபார் வீட்டில் ஒற்றைப் பையன் எனவே அவரையும் தன்னுடனேயே அழைத்து வருகிறார் அவர் தந்தை. 
கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அப்துல் ஜபாருக்குக் கிட்டுகிறது.
அப்போது வானொலி உலகின் ஆளுமை சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் பார்வை இவர் மேல் விழுகிறது. கூடவே வானொலி மாமா சரவணமுத்து, சானா சண்முகநாதன் போன்ற மூத்த ஆளுமைகளும் அப்துல் ஜபார் அவர்களின் ஊடக ஆசான்களாகும் பாக்கியம் அவருக்குக் கிட்டுகிறது.
சானா சண்முக நாதன் அவர்கள் அப்துல் ஜபாருக்கு ஒருமுறை கொடுத்த உபதேசம் திருப்பு முனையாக அமைகிறது. தொடர்ந்து 14 ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள், நாடகங்கள் வழியாக திறன் வாய்ந்த் ஊடகராக இயங்கும் வேளை சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய திரும்புகிறார்.
பின்னர் தான் எடுத்த தொழில் முயற்சிகள், இந்திய வானொலியில் பணியாற்ற வேண்டி வேண்டிய முயற்சிகளைத் தொடர்கிறார்.
அப்போது அவருக்குக் கிட்டும் கிரிக்கெட் வர்ணணையாளர் வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார், தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தனக்குக் கொடுத்த மறக்க முடியாத பாராட்டு எந்த சந்தர்ப்பத்தில் இவருக்குக் கிட்டியது
இவையெல்லாவற்றையும் திரட்டிய அனுபவத் திரட்டாக  திரு.அப்துல் ஜபாரிடம் நேற்று முன் தினம் ஒரு வானொலிப் பேட்டியைச் செய்திருந்தேன். அவரின் அனுபவங்கள் நீண்டவை தம் சுயவரலாற்றைப் பதியும் எண்ணமிருப்பதாக அவர் சொன்னதை நான் ஊக்குவித்தேன். செய்வேன் என்று உறுதியளித்திருக்கிறார்.
“நான் சாத்தான் குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்” என்று தொலைபேசி வழியாகக் குரல் கொடுத்தவர் சிட்னியில் என் நேரெதிரே அமர்ந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்தது என் வாழ் 
நாள் பாக்கியம்.
தொடர்ந்து அப்துல் ஜபார் அவர்களின் பேட்டியை ஒலி வடிவில் தருகிறேன்.

 http://radio.kanapraba.com/interview/AbdulJabbar.mp3