சோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் ?

முகம் தெரியாது நம்மோடு கூடப் பழகியவர்களின் பிரிவு கூட வலிக்கும் என்பதைப் போதித்தது இணைய உலகம். அப்படியானதொரு வலியோடு தான் நேற்று இறப்பெய்திய “சோழியான்” என்று இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட ஆளுமை ராஜன் முருகவேள் அண்ணாவின் பிரிவை உணர்கிறேன். ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். அவரின் அரைவாசி வாழ்க்கையில் புலம் பெயர் மண்ணின் எழுத்தாளராகவே பல உள்ளங்களைச் சம்பாதித்திருக்கிறார். 56 வயசெல்லாம் வாழ் நாள் கடனைக் கழிப்பதற்கு ஒரு வயசா என்று தான் இந்தச் செய்தியை அறிந்த போது நொந்து என் மனசுக்குள் நான் பேசிக் கொண்டது.
சாவதற்கு முன் தன் தாயகத்துக்குப் போய்க் கொண்டாடி விட்டு வந்திருக்கிறார். அந்தப் பயணத்தில் அவர் மனசின் ஏதோவொரு மூலையில் இருந்து இந்தப் பொல்லாத சாவின் சமிக்ஞை கேட்டியிருக்குமோ என்று நான் ஐயப்படுகிறேன். அவரின் ஆத்மா நனவிடை தோய்தலோடு தன் இறுதித் தாயகப் பயணத்தோடு எப்போதோ ஆத்ம சாந்தியடைந்திருக்கக் கூடும். வாழ்வில் அபிலாசைகளைத் தின்று தீர்த்த பிறகு எஞ்சுவது வெற்றுடல் தானே?
இணையக் கருத்தாடலில் ஆரம்ப காலத்து நண்பர்களில் சோழியனும் ஒருவர். யாழ் இணையம் வழியாகவே அவரின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. இணைய வலைப்பதிவுகளில் முன்னோடி வலைப்பதிவராகவும் அவர் அறியப்படுகிறார்.
தமிழமுதம் என்ற இணைய சஞ்சிகையை அவர் நடத்திய போது ஏராளம் ஈழத்துப் பாடல்களின் ஒலிக்களஞ்சியத்தைத் திரட்டித் தந்த முன்னோடி.
அத்தோடு Blogger இல் “ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ” http://thodarkathai.blogspot.com.au என்ற தொடரை 13 வருடங்களுக்கு முன்னர் கொடுத்தவர். அந்தக் காலத்தில் இம்மாதிரி இணையத் தொடர்கள் முன்னோடி முயற்சிகள். கூடவே தமிழமுதம் என்ற வலைப்பதிவு http://tamilamutham-germany.blogspot.com.au/
சுழிபுரத்தில் பிறந்த அவரின் வாழ்வியல் குறிப்புகள் விக்கிப்பீடியா இணையத்தில் கிடைக்கின்றது.
https://ta.m.wikipedia.org/wiki/இராஜன்_முருகவேல்
சோழியான் அண்ணனோடு நேரடியாகப் பேசியது இல்லை. ஆரம்ப காலத்தில் chat இல் அடிக்கடி பேசினோம். என்னோடு வேடிக்கையாக chat பண்ணுவார், சிரிப்பு மூட்டுவார்.
இன்றைய ஃபேஸ்புக் யுகத்திலும் அவரின் கருத்துகளைப் படிப்பேன். முரண் நின்றதில்லை. இணைய உலகில் ஈழப் போராட்டத்தின் சரிவுக்குப் பிறகு நிறம் மாறிய பலரைப் பார்த்து வேதனையோடு கடந்திருக்கிறேன். ஆனால் இவர் தன் சுயத்தை இழக்காத, நிறம் மாறா மனிதர்.
“கறுப்பு யூலை 1983” கலவரத்தின் நேரடிச் சாட்சியமாக இவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை என் மடத்துவாசல் வலைப்பதிவில் அப்போது பகிர்ந்து கொண்டேன். என் எழுத்து சாராத இன்னொருவர் பகிர்வு என்று முதன் முறையாகப் பகிர்ந்த அந்த எழுத்தைச் சமகாலத்தில் தமிழ் நாதத்திலும் பகிர்ந்தோம். அப்போது அந்த அனுபவப் பகிர்வு பரவலான தாக்கத்தைக் கொண்டு வந்தது. இனப்படுகொலைகளின் நேரடிச் சாட்சியங்கள் வழியே நேர்மையான பகிர்வுகள் எழுதப்பட உந்துதல் ஆனது.
சோழியான் அண்ணாவின் மறைவில் அந்தப் பகிர்வை நினைத்துப் பார்க்கிறேன்.
http://www.madathuvaasal.com/2006/07/83.html
போய் வாருங்கள் சோழியான் அண்ணா….

தமிழ்க் கடல் நெல்லை கண்ணனை வானலையில் சந்தித்த போது

Your browser does not support the audio element.

தமிழ்க் கடல் நெல்லை கண்ணனை வானலையில் சந்தித்த போது

தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின் தமிழ் மீது கொண்ட காதலும், அதன் பால் அவருக்கிருக்கும் ஆழ்ந்த புலமையும் தமிழுலகு அறியும்.

வரும் சனிக்கிழமை 19 ஆம் திகதி சிட்னியில் 
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கியச் சந்திப்புக்காக முதல் தடவையாக ஆஸி மண்ணை மிதிக்கவிருக்கிறார்.

நெல்லை கண்ணன் அவர்களின் உரைகளைக் கேட்கும் போது பல நூறு புத்தகங்களை ஒரு சேரப் படித்த திருப்தியும், ஞானமும் கிட்டுவதை உணர்ந்திருக்கிறேன்.
அவர் சின்னத்திரை வழியே “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற களம் வழியாக ஏராளம் இளையோரைத் தமிழைப் பிழையறவும், நெறிபடவும் பேச வழிகாட்டிச் சிறப்பித்திருக்கிறார். ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு நிகரான வெற்றியை இந்த நிகழ்ச்சி கொடுத்ததே பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் அவர் வீற்றிருப்பதைப் பறை சாற்றியது.

நெல்லை கண்ணன் அவர்களை ஒரு தடவை சந்தித்துப் பேசினாலேயே போதும் என்றிருந்த எனக்கு அவரோடு சிறப்புப் பேட்டி எடுக்கும் பேறு கிட்டியது. சிட்னியில் நிகழவிருக்கும் இலக்கியச் சந்திப்புக்கான வரவேற்புப் பேட்டியை நெல்லை கண்ணன் ஐயா குறித்த வாழ்வியல் பின்புலம் சார்ந்த பேட்டியாக அமைத்துக் கொண்டேன். இருபது வருடத்தைத் தொடும் வானொலி ஊடகப் பணியில் மிகவும் மனம் விட்டுப் பேசக் கூடிய ஒரு ஆளுமையோடு இயல்பாக அமைந்த பேட்டியாக விளங்கியது சிறப்பு.

இந்தப் பேட்டியில் நெல்லைக் கண்ணனுக்குத் தமிழைப் போதித்த நல்லாசான், பேச்சு மன்றத்தில் வல்லமையோடு பேச வைத்த வழிகாட்டி பற்றியும்,

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி, பாதுகாப்பை மையப்படுத்தி எடுத்த முயற்சி குறித்தும்,

இன்று ஊடக உலகில் எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் கடை விரித்திருக்கிறதோ அவ்வளவுக்கு மொழிச் சிதைவும் ஆங்கிலக் கலப்பும் மேவியிருக்கிறது அந்தப் போக்கைப் பற்றியும்,

சின்னத்திரை ஊடகத்தில் அவருக்குக் கிட்டிய வாய்ப்பு, தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ள முடியாமல் எதிர் நோக்கிய சவால் குறித்தும்,

நெல்லை கண்ணன் அவர்களின் இலக்கியப் பணொ குறித்தும், குறிப்பாக அவருடைய மகன் சுகாவின் “தாயார் சந்நிதி” நூலுக்கு முன்னோடியாக அமைந்த “குறுக்குத்துறை ரகசியங்கள்” , திரு நாவுக்கரசரின் தேவாரங்களில் விடிகாலை வரை மூழ்கி அதன் வழி எழுந்த “திக்கனைத்தும் சடை வீசி”, “வடிவுடைக் காந்திமதியே”, கவிஞர் பழநி பாரதியின் வேண்டுகோளின் நிமித்தம் எழுதிய “பழம் பாடல் புதுக் கவிதை நூல்” கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்” போன்றதொரு பாணியில் எழுதிய நூல் பற்றியும், கம்பனை முன்னுறித்தி எழுதப்ப போகும் நூல் குறித்தும்,

தமிழையும் சைவத்தையும்  இரு கண்களாகப் போற்றி இயங்கும் அவர் சைவ சமயத்துக்கு நிகழ்ந்த இழிகேட்டை  எதிர்த்து மதுரை ஆதீனத்துக்கு எதிராகக் களத்தில் போராடிய அனுபவம்,

இங்கே ஆஸ்திரேலியாவில் பல்கலைக் கழகப் புகுமுகப் பரீட்சை வரை தமிழை ஒரு பாடமாக எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளே ஆர்வத்தோடு தமிழைக் கற்று வருகிறார்கள். அவர்களுக்கு நெல்லைக் கண்ணன் வழங்கிய அறிவுரை

இப்படியாக இந்தப் பேட்டி அமைந்திருந்தது.

நெல்லை கண்ணன் அவர்கள் இந்தப் பேட்டியின் வழியாகத் திருக்குறளையும், திருவாசகத்தையும் தமிழர்களது முக்கியமான நூல்களாகப் போற்றிக் கற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறார்.

சிட்னி வாழ் தமிழர்களே!
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் நிகழ்வில் நெல்லை கண்ணன் அவர்களது வருகையைச் சிறப்பிக்க நீங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் வழியாக இங்கு வாழும் தமிழர்கள் புலம் பெயர் சூழலிலும் தமிழின் பால் எவ்வளவு தூரம் பற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட வழி செய்யும். இளையோர் முதல் முதியோர் வரை நெல்லை கண்ணன் வழங்கும் தமிழ் இன்பம் சுவைக்கத் திரள்வோம்.

நெல்லை கண்ணன் அவர்களின் பேட்டியைக் கேட்க

எங்க போகுது எங்கட நாடு

“எங்க போகுது எங்கட நாடு”

யாழ் மதீசனின் “அதிர்ச்சி” தந்த பாட்டு

துறை தேர்ந்த இசைக் கலைஞர் காட்டாறு மாதிரி அவர், தான் கற்ற வித்தையின் அடியாழம் வரை சென்று சேரும் துடிப்போடு இயங்குபவர். 
ஒரு நல்ல இசை இயக்குநருக்கோ தன்னுடைய இசைத் திறனைத் தாண்டிய தகமை தேவையாய் இருக்கிறது. தான் எடுத்துக் கொண்ட படைப்பைச் சனங்களிடம் கொடுக்கும் போது அதை எந்த நிறத்தில் கொடுக்க வேண்டும், அதன் உள்ளடக்கத்தின் சாரம் எப்படித் தான் எடுத்துக் கொண்ட கருவுக்கு நியாயம் விளைவிக்கும் வண்ணம் அமைய வேண்டும் போன்ற அடிப்படைகளில் கவனம் செலுத்தினாலேயே ஒரு படைப்பின் வெற்றியின் பாதி இலக்கு முன் கூட்டியே நிர்ணயமாகி விடுகிறது. அந்த வகையில் யாழ்ப்பாண மண்ணின் மைந்தன், சகோதரன் மதீசன் திறன் படைத்த இசை இயக்குநருக்குரிய இலட்சணங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் “அதிர்ச்சி” என்ற தனிப்பாடலைக் கேட்ட போது உணர்ந்தேன்.
போருக்குப் பின்னான ஈழ சமூகத்தில் நிகழும் கலாசார மாற்றம் என்பது கலாசார அதிர்ச்சியாகவே வெளி உலகத்தாரால் நோக்கப்படுகிறது. ஆனால் அங்கு நிகழும் பண்பாட்டு மாற்றத்தில் நல்லது எது தீயது எது என்ற விசாரங்களைத் தாண்டி மேம்போக்காக் கல்லெறியும் சமூகத்தை நோக்கி நீட்டிப் பிடிக்கும் பூமராங் தான் இந்த “அதிர்ச்சி” பாடலின் உட்பொருள்.
பூமராங் என்ற பதத்தை நான் இங்கே உபயோகப்படுத்தியதன் காரணம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற நோக்கில், இந்தப் பாடல் வழி நெடுக எடுத்துக் காட்டும் சமூகப் பிறழ்வுகளோடு ஈற்றில் தன் சமூகத்தில் நடக்கும் நல்லதையும் சீர்தூக்கிப் பார், அங்குமிங்கும் நடக்கும் சமூகச் சீர்கேட்டை ஒட்டு மொத்த மக்களின் வாழ்வியலின் அறுவடையாகக் பார்க்காதே என்ற தன் வழி நியாயத்தோடு எறிந்ததையே திரும்ப வாங்கும் உத்தி கையாளப்படுகிறது. அதனால் இந்த “அதிர்ச்சி” பாடல் பிரசாரக் கூக்குரல் என்ற அந்தஸ்தை இழந்து விட்ட சிறப்பைப் பெறுகிறது.
இசையமைப்பாளர் மதீசன் தானே எழுதித் தயாரித்து இசையமைத்ததோடு அங்குசனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடலின் குரல் பங்காளிகள் யார் என்றே அறியாமல் தான் கேட்டேன் முதலில். மூன்று விதமான குரல் வடிவங்கள். ஒன்று கட்டியக்காரன் போலவும் இன்னுமிரண்டு குரல்கள் விமர்சன ரீதியாகப் பேசவும் பயன்படும் பாங்கில் இயங்கியிருக்க, நானோ மூன்று பேர் பாடியிருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இருவரும் வெகு கச்சிதமாக அந்த மூன்று வடிவங்களிலும் துணை போயிருப்பது வெகு சிறப்பு. 
மதீசனின் தேவை உணர்ந்து இயங்கியிருக்கும் அங்குசனுக்கும் விசேடமான பாராட்டுகள்.
அந்த வகையில் பாடலைத் தூக்கி நிறுத்துகிறது குரல் தேர்வு.
வரிகளோடு இழையும் மதீசனின் இசையமைப்பைப் பற்றித் தனியாக என்ன சொல்ல வேண்டும்? முதல் பந்தியில் சொன்னது போல இந்தப் படைப்புக்கு எந்த விதமான இசையுணர்வைப் பிரதிபலிக்க வேண்டுமோ அதைத் தான் செய்திருக்கிறார்.
தேவையான அளவு பாடல் வரிகள், யாழ்ப்பாணத்து மொழியாடல் இவை வெகு சிறப்பு.
எனக்குக் குறையாகப் பட்டது பாடலின் தலைப்பு “அதிர்ச்சி”. இது மொட்டையாக அமைந்திருக்கிறது. பாடலில் பயன்படுத்தப்பட்ட பேச்சு வழக்கின் ஒரு நீண்ட சொற் தொடரைத் தலைப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். 
உதாரணமாக “எங்கை போகுது எங்கட நாடு” என்ற வரிகளே நிறைவாக இருந்திருக்கும்.
“அதிர்ச்சி” என்ற தலைப்பைப் பார்த்தே எனக்கு எதுக்கு வீண் வம்பு என்று ஒதுங்கிப் போக நாம் ஏதுவாக இருக்கக் கூடாதல்லவா?
அத்தோடு இந்தப் பாடல் காணொளி வடிவம் பெறுவதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது இசைக் கோப்பு.
ஈழத்துச் சமூகத்தின் இன்றைய வாழ்வியலை ஒரு சில சீர்கேடுகளை வைத்துச் சாயம் பூசக் கூடாது என்று எழுந்த இம்மாதிரியான படைப்புகள் தான் அங்கு நல்ல சிந்தனையும், தெளிவும், ஆற்றலும் மிக்க இளைய சமுதாயம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் பிரதிபலிப்பு.
மதீசனுக்கு வாழ்த்துகள்
பாடலைக் கேளுங்கள் பகிருங்கள்