கணேசபிள்ளை மாஸ்டரின் சமய வகுப்பு

வேலை முடிந்து வீடு திரும்பி குளித்து முடித்து விட்டு  சுவாமி அறையில் இருக்கும் தொட்டிலில் இலக்கியா பார்த்துக் கொண்டிருக்க நான் சாமி கும்பிடும் போது வாயில் சத்தமில்லாமல் தேவாரத்தை முணு முணுக்கும் போது அதைக் கண்டு இப்படித்தான் தான் சாமி கும்பிட வேணுமாக்கும் என்று தானும் தன் கையைக் கூப்பிக் கொண்டே வாயில் சுவிங்கம் மெல்லுவது போல இலக்கியா அசை போடுவதைக் கண்டு சிரிப்பு வரும் அப்போது சில சமயன் பள்ளித் தோழன் சாரங்கனையும் கணேசபிள்ளை மாஸ்டரையும் நினைத்துக் கொள்வேன்

சீனிப்புளியடிப் பள்ளிக் கூடத்தில் இருந்து 
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மேற்படிப்புக்குப் போன கையோட அதிபர் பஞ்சலிங்கம் மாஸ்டரும் இந்தியாவில் கல்வியியலில் சிறப்புப் படிப்பை முடித்து நாடு திரும்பிய நேரம். காலையில் தினமும் தேவார, புராணப் பாராயணத்தோடு பொது அறிவுக்கு விருந்தாக குறும் பேச்சு, நகைச்சுவை எல்லாம் மாணவர்கள் செய்ய வேண்டும் என்று அதிபர் பஞ்சலிங்கம் வலியுறுத்தினார். ஆனால் எங்களுடைய சிந்தனையோ  ஃபாதரின்ர கன்ரீனில் கிடைக்கும் றோலுக்குள் எத்தனை உருளைக்கிழங்குத் துண்டு இருக்கும் என்ற யோசனையிலேயே காலை நேரச் சிந்தனைச் சிதறல் இருக்கும். இருந்தாலும் அதிபரின் சொல் கேட்டு நல்ல பிள்ளைகளாக நடத்திக் காட்டியவர்களும் உண்டு. அப்படி ஒருவன் தான் சாரங்கன். கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஓதுவார் ஆகி விட்டான் எங்கள் கல்லூரியின் காலை நேரத் தொழுகை நேரத்துக்கு. “இடர்ர்ர்ரின்னும் தள்ளர்ர்ரினும்” என்று ஒரு இழுவை இழுக்க, எட்டுப் பாடத்துக்கும் கொண்டு வந்த கொப்பி, புத்தகங்களோடு சேர்ந்த புத்தகப் பையின் கனதி தங்காமல் கீழே புழுதி மணலில் வைக்கவும் முடியாமல் திண்டாடி, “எடேய் கெதியாப் பாடடா” என்று மனசுக்குள் கத்திக் கொண்டே கவரி மான் படத்தில் கோவமா இருந்த சிவாஜி மாதிரி கால்கள் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கும். அதுவும் தேவாரத்தின் ஒரு வரியை இரண்டு மூண்டு தரம் இழுத்து இழுத்துப் பாடும் போது சிவபெருமானே கீழே வந்துடுங்கோ என்று அண்ணாந்து பார்த்து விட்டுக் கும்பிட்டுக் கொண்டிருப்பம்.
சாரங்கன் தேவாரம் பாடி, பேச்சு எல்லாம் முடிஞ்ச கையோட, பள்ளிக்கூடத்துக்கு லேற்றா வந்த சனம், சப்பாத்து இல்லாமல் பாட்டா செருப்போட வந்த வீராதி வீரர்கள் (செருப்பைத் தூக்கிக் கொண்டு) அந்த நீண்ட மைதானத்தைச் சுற்றி ஒரு ரவுண்ட் ஓட வேணும்.
கணேசபிள்ளை மாஸ்டரிடம் நாயகன் படத்தில் கமலகாசனைப் பார்த்துக் கேட்டது மாதிரி “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்க வேண்டும் போல இருக்கும். ஏனென்றால் அவர் எந்த நேரம் எந்த மூட் இல் இருப்பார் என்று சொல்ல முடியாது. பகிடி விடுகிறது மாதிரி இருக்கும் நாங்களும் இறங்கிச் சிரித்தால் டஸ்டரால் எறிந்து விடுவார் முகத்தில் கணக்காய் சோக்கட்டித் தூள் படிந்து ஒப்பனை கொடுக்கும். இணுவில் சர்வேஸ் இவருக்கு அப்பர் சுவாமிகள் என்று பட்டப் பெயர் வச்சுட்டான். உண்மையில் லோங்க்ஸ் போட்ட அப்பர் சுவாமிகள் போலத் தான் ஆளின் உருவம் முன் வழுக்கையைச் சுற்றி அரை வட்டமாய் வெயிலில் காய்ஞ்சு போன புல்லு மாதிரி வெண் முடி, முகத்தில் பட்டை.
கணேசபிள்ளை மாஸ்டருக்கு வாக்குக் கண். அதை அருள் வாக்கு என்று பெடியளுக்குள்ள சொல்லிச் சிரிப்பம்.
அவர்  வகுப்பறையில் இருந்து இடது பக்கம் பார்த்துக் கொண்டு பாடமெடுக்கிறார் என்று நினைத்து வலது பக்க மேசைப் பக்கம் இருப்பவன் யாரும் விளையாடினால் போச்சு. இப்படித்தான் அவர் சீரியசாக சமய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க பின் வாங்குப் பக்கம் இன்னொரு மூலையில் இருந்து தன் ரலி சைக்கிளின் கீ செயினை மேலே போட்டு கீழே வர முதல் பிடிச்சு விளையாடின அருட்செல்வனை “இஞ்ச வாரும் தம்பி” என்று கூப்பிட்டு, தனக்குப் பக்கத்தில் முழங்காலில் இருக்கச் சொல்லி அந்த கீசெயினை வச்சு எறிஞ்சு விளையாடின விளையாட்டை வகுப்பு முடியும் வரையும் செய்யச் சொன்னவர். அருட்செல்வன் தன் மானச் சிங்கம், அடி வாங்காமல் இதையே செய்வம் என்று பிறக்ரிஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மேலை எறிஞ்சு கீழை பிடிச்சு மேலை எறிஞ்சு கீழை பிடிச்சு…இப்பிடி..
கணேசபிள்ளை மாஸ்டர் தண்டனை எதுவாக இருந்தாலும் வகுப்புள்ளையே கொடுத்து விட வேண்டுமென்று முடிவெடுத்ததால் பெரும் பாலான சந்தர்ப்பங்களில் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். பின்னை என்ன ஏ வகுப்பில் முழுக்க முழுக்கப் பெண் மாணவிகள், எதிர்ப்பக்கம் பி வகுப்பு கலவன்,
எங்கட ஈ வகுப்போ முழுக்க முழுக்க கிளிநொச்சி மாடுகள் மாதிரி ஒரே ஆம்பிளையள். மகேந்திரன் மாஸ்டர் மாதிரி வெளியில கொண்டு போய் அடிச்சு பொம்பிளைப் பிள்ளையள் அதைப் பார்த்தால் எவ்வளவு வெக்கக் கேடு. அதிலும் சில பெண்டுகள் முகத்து முன்னால வந்து சிரிச்சிட்டுப் போறது போல போவாளுகள்.
“பாம்பு தீண்டி இறந்த சிறுவனை உயிர்ப்பிக்க  திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் என்ன? நீ சொல்லு” – கணேசபிள்ளை மாஸ்டரின் கை என்னைத் தான் காட்டுது என்று கண்டு கொண்டேன் அவ்வ். 
முந்த நாள் திருவருட்செல்வர் படத்தில் சிவாசி கணேசன் அப்பரா வந்து இப்பிடித்தான் பாம்பு தீண்டி இறந்த சிறுவனை உயிர்ப்பிக்கப் பாடுவாரெல்லோ ஓ ஞாபகம் வந்துட்டுது  சிவாஜியும் கலக்கலா நடிச்சிருப்ப்பார் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு, கதிரையை விட்டு எழும்பி 
“நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நச்சுப் பையை வச்சது யார் சொல்லு பாம்பே” என்று ரி.எம்.செளந்தரராஜனோடு போட்டி போட்டுப் பாடிக் காட்டினேன்.
“இஞ்ச வாடா இஞ்ச வாடா” கணேசபிள்ளை மாஸ்டரின் அஞ்சு விரல்களும் சேர்ந்து மடக்கி மடக்கிக் கூப்பிட்டது. அருட்செல்வனுக்குப் பக்கத்தில் முழங்காலில் நின்றேன் வகுப்பு முடியும் வரை.
எனக்கு விதி மேல் நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் ஏ.எல் வகுப்பில் சைவப் பழமான சாரங்கன் சிறப்புப் பாடமாக புவியியல் பாடத்தை எடுக்க நானோ இந்து நாகரிகத்தை எடுத்ததும் விதி தானே? 
ஆனால் சாரங்கன் சங்கீதத்தில் கரை கண்டு விட்டான். எங்களூர் வைரவர் கோயிலின் விஜயதசமிக்கு ப்ளாஸ்ரிக் பாய் போட்டு சாரங்கனின் சங்கீதக் கச்சேரி வச்சோம். ஏ.எல் வகுப்புடன் பள்ளி வாழ்க்கை முடிவதைக் கொண்டாட ஒவ்வொரு கல்லூரியிலும் சோசல் என்ற கொண்டாட்டம் வைப்பார்கள். மற்றைய ஆண், பெண் பள்ளிக் கூடங்களுக்கும் அழைப்புப் போகும். அதிலும் பெண்கள் பாடசாலைகளில் இருந்து மரியாதை நிமித்தம் இந்த சோசல் கொண்டாட்ட அழைப்ப்ய் வந்தால் சேர்ட்டில் பிடித்து அடிபடாத குறையாக நான் போறன் நான் போறன் என்று அடிபடுவார்கள். ஆனாலும் சாரங்கனை மனமுவந்து எல்லோரும் விட்டுக் கொடுத்து அனுப்பிய பள்ளிக் கூடம் அத்தியடி மகா வித்தியாலயம். அங்கே போயும் பய புள “நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே” என்று சங்கீதக் கச்சேரி வைத்து விட்டு வந்து விட்டான். அதற்குப் பின்னால் உள்ள ஆட்டோகிராப் கதையை எழுத அனுமதி இல்லாததால் இத்தோடு நிறுத்.
காலங்கள் ஓடி விட்டது. சாரங்கன் இந்தியா சென்று சங்கீதத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து இன்று ஈழத்தின் முக்கியமானதொரு சங்கீதக் கலைஞன். இந்து நாகரிகத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்த எனக்கு அது வஞ்சகமில்லாமல் நல்ல புள்ளிகளைத் தரவும், வெளி நாட்டுக்கு வந்து பல்கலைக்கழகப் படிப்புக்கு ஏற்ற புள்ளியைத் தந்து காப்பாற்றியது. சாரங்கன் திரும்பத் திரும்பப் பாடிய தேவாரங்களைக் கேட்டுக் கேட்டு அவையெல்லாம் மனதில் ஊன்றி இப்போது சுவாமி கும்பிடும் போது அவற்றையே பாடிக் கொண்டிருக்கிறேன்.