ராஜராஜசோழன் – சீர்காழியாரின் நிழலும் மறைந்தது

இன்றைய எனது காலை எடுத்த எடுப்பிலேயே இரண்டு மரணச் செய்திகளைச் சந்தித்தது.
ஒருவர் சமூக வலைத்தளத்தில் உறவாடிய நண்பர் சுதாகர் மறைவு. அந்தச் செய்தியை அறிந்த கணமே உறைந்து போய் அவரின் பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைப் பார்த்துக் கொண்டு போனேன். தன் ஒன்பது வயது நிரம்பிய செல்வ மகளைக் கொண்டாடும் தந்தையின் பூரிப்பில் பகிர்ந்த இடுகையில் கண்கள் குத்திட்டு நின்றன. இந்தக் குழந்தையை விட்டுப் போக அவ்வளவு என்ன அவசரம்? இனி அது உம் அரவணைப்பு இல்லாமல் என்ன செய்யும் ஐயா என்ற கோபத்தோடு மனதுக்குள் அழுதேன்.
மலேசிய மண்ணின் மைந்தர் பாடகர் ராஜராஜசோழனை 2008 இல் ஈழத்தமிழ்ச் சங்கம் நடத்திய இசை நிகழ்வுக்காக நேரடியாகச் 
சந்திக்கவும் வானொலிப் பேட்டியெடுக்கவும் அப்போது வாய்ப்புக் கிட்டியது எனக்கு.  ஆனால் அதற்கு முன் பல்லாண்டுகளாகவே அவரைப் பற்றி அறிந்து பெருமை கொண்டிருக்கிறேன்.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டு அவர் குரலைத் தன்னுள் இறக்கி இது நாள் வரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தவர். 
ஒரு கலைஞனின் குரலைப் பிரதியெடுப்பது வேறு அது எந்த மிமிக்ரி வல்லுநரும் செய்து காட்டக் கூடிய சாமர்த்தியம். ஆனால் அந்தக் கலைஞனைப் போற்றி வாழும் ஒரு இசைத் தொண்டராக வாழ்பவரைக் காணுதல் அரிது. அந்த வகையில் தலையாயவர் சீர்காழி கோவிந்தராஜனின் சீடர் ராஜராஜசோழன். 
ஈழத்துப் பதியான சுட்டிபுரம் கோவில் நோக்கிச் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அந்த மண்ணில் பாடிய அதே பாடலைப் பாடுமாறு தான் மேற்குலக நாடு ஒன்றுக்குப் போன போது ஒரு ரசிகர் வேண்டிக் கொண்டதாகவும், மூலப் பாடலைத் தேடியெடுத்துப் பெற்று ஒரே நாளில் அதைப் பாடிப் பயிற்சியெடுத்து அந்த மண்ணின் மேடையில் பாடியதையும் சிட்னி வந்த போது சொல்லியிருந்தார். சிட்னி இசை நிகழ்விலும் அதைப் பாடினார். அந்த மேடையில் பாடியதை நண்பர் பப்பு பதிவு செய்து அப்போது எனக்கு அனுப்பியும் வைத்தார்.
அந்தப் பாடல் யூடியூபிலும் காண https://www.youtube.com/watch?v=qJINBkjstTg
T.M.செளந்தராஜன் குரலைப் பிரதிபலித்தவர்கள் சென்ற ஆண்டு மறைந்த பாடகர் கிருஷ்ணமூர்த்தி https://www.facebook.com/kana.praba/posts/10209216360791432 மற்றும் நம் ஈழத்துக் கலைஞர் சகோதரர் என்.ரகுநாதன். அது போல் சீர்காழி கோவிந்தராஜனுக்கான குரலாக இது நாள் வரை இருந்த ராஜராஜசோழன் நேற்று மறைந்து விட்டார்.
ராஜராஜசோழன் அவர்களை ஒன்பது வருடத்துக்கு முன் நடத்திய வானொலிப் பேட்டியின் போது 
தன் மண்ணில் மெல்ல மெல்லத் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்து போகும் அவலத்தைச் சொல்லி நொந்தவர். இவர் போல் கலைஞர்கள் அதை வாழ வைப்பார்கள் என்றிருந்த நினைப்புக்கு இதுவொரு அவலச் செய்தியே.
மரணம் என்பது கொடுங்கனவு அது உயிர்ப்போடு இருக்கும் நினைவுகளை அசைத்துப் பார்க்கிறது.
சமரசம் உலாவும் இடம் தேடிப் போன ராஜராஜசோழன் குரலில் அவர் நினைவுகளைக் கிளப்பும் பாட்டு இது https://youtu.be/Ocb_nhmZDjk
தேவன் கோயில் மணியோசையாய் https://youtu.be/GgNJhvxSmJk ஒலித்த குரல் ஓய்ந்தது.
ராஜராஜசோழனோடு சகோதரன் யோகா தினேஷ் தீபம் தொலைக்காட்சியில் கண்ட பேட்டி  https://www.youtube.com/watch?v=7cyxuSoh-_0&sns=tw