சிவலிங்க மாமா

உங்களூரில் ஒருவர் இருப்பார், அவர் ஊரிலுள்ள எல்லாப் பிரச்சனையையும் தன் பிரச்சனையாகத் தலையில் சுமந்து தீர்க்க முற்படுவார். ஏன் வீதியில் ஏதாவது சண்டை கூடினாலோ முதல் ஆளாகக் களத்தில் இறங்கி விடுவார், விடுப்புப் பார்க்க அல்ல அந்த வீதிச் சண்டையைக் கலைத்து விட்டு ஆட்களை அவரவர் பாட்டில் போக வைத்து விடுவார்.

இது அடுத்தவன் பிரச்சனை நமக்கென்ன வம்பு என்று ஒதுங்கியிருக்க மாட்டார் இல்லையா? இதைப் படிக்கும் போது உங்களூரில் இருந்த, இருக்கின்ற அப்படியொரு மனிதரை நினைவுபடுத்த முடிந்தால் அவர் தான் எங்களூரில் இருந்த சிவலிங்க மாமாவும்.
“இஞ்சருங்கோ உங்களுக்கேன் மற்றவேன்ர பிரச்சனை அவையவை தங்கட பாட்டைப் பாப்பினம் தானே” என்று மீனாட்சி அன்ரி சிணுங்குவா.
“நீ சும்மா இருப்பா” என்று சொல்லிக் கொண்டே கிப்ஸ் மார்க் சாரத்துடன் வெளியே வரும் போது அவரின் ஒரு கையில் சேர்ட் தொங்கிக் கொண்டிருக்கும். கேற்றைத் தாண்டுவதற்குள் முழுக்கையும் இறங்கி பட்டனையும் பூட்டி விட்டு குடும்பச் சண்டையை விலக்குத் தீர்க்கப் போய் விடுவார்.
எனது அம்மாவின் சிறிய தந்தை பெரும் செல்வந்தர். அவர் கட்டியாண்ட வீட்டை விட்டு  எண்பத்தஞ்சில் கொழும்புப் பக்கம் போய் விட்டார்கள். அந்த வீட்டைச் சுமக்கும் பொறுப்பு எங்களுக்கு வந்தது என்பதை விட எங்கட அம்மாவுக்கு வந்தது. “தேப்பன் இல்லாத எங்களை குஞ்சி ஐயா தானே வளத்து ஆளாக்கினவர்” என்பது அம்மாவின் நியாயம். அம்மாவின் இரண்டு சகோதரிகள், கடைக்குட்டித் தம்பி, அம்மம்மா எல்லோரோடும் நிர்க்கதியாக இருந்த குடும்பத்தைக் கரை சேர்த்தது அம்மம்மாவின் இந்தக் குஞ்சி ஐயா.
இணுவிலில் அந்த வீடு மைசூர் மகாராசாவின் குட்டி அரண்மனை போல இருந்தது. வெளிநாட்டில் இருந்து நாளையிலேயே புதுப் புதுக் காரெல்லாம் இறக்குமதியாகி அந்த வீட்டுக்கு வரும். எங்களூரில் முதன் முதலாக டிவி வந்ததும் அந்த வீட்டில் தான். அப்ப்பேர்ப்பட்ட வீடு அது. ஆனால் அந்த வீடு இன்னும் பல அனுபவங்களைச் சுமக்கக் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.
அந்தப் பெரிய வீட்டில் நாங்கள் குடி புகுந்த சில மாதங்களிலேயே தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் (T.E.A) கதவைத் தட்டியது. 
“இருக்கிறதிலியே பெரிய வீடு உங்கட வீடு தான். ரவுணை விட்டுத் தள்ளி இருக்குது. பாதுகாப்புக் காரணங்களால ஒரு பெரிய ஆளை இங்க கொஞ்ச நாளைக்கு வச்சிருக்கப் போறம், உங்கட வீட்டை எங்களுக்குத் தர வேணும்” தமிழீழ இராணுவத்தின் உள்ளூர்ப் பிரதிநிதி அம்மாவிடம் வந்த நோக்கத்தைச் சொன்னார்.
“ஐயோ தம்பி குஞ்சி ஐயாவுக்கு வாக்குக் கொடுத்திட்டன் செத்தாலும் இந்த வீட்டை விட்டு வர மாட்டன்” இது அம்மா.
வழக்கத்துக்கு மாறாக வாகனம் ஒன்று வீட்டின் முன்னால் இருக்கிறது, ஏதோ சலசலப்பும் கேட்குது என்று ஊகித்து விட்டு அதற்குள் சிவலிங்க மாமாவும் வந்து விட்டார்.
“தங்கச்சி கொஞ்சம் பொறு” என்று அம்மாவை அமைதிப்படுத்தி விட்டு
“தம்பியவை உவள் பாவம் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து விட்டாள், உது பெரிய வீடு தானே உவை நாலு பேரும் (அம்மா, அப்பா, சின்ன அண்ணன், நான்) வீட்டின்ர பின்பக்கம் இருக்கட்டும் நீங்கள் முன்னறைகளைப் பாவியுங்கோ கொஞ்ச நாளைக்குத் தானே தேவை எண்டு சொன்னனியள்” என்று அவர்கள் பக்கமே கோல் ஐப் போட்டார் சிவலிங்க மாமா. 
என்ன கூத்து என்று தெரிந்தும் தெரியாத பருவத்தில் அப்போது நான். அவர்கள் சொன்ன பெரிய ஆள் வருவதற்கு முதல் நாளே வீட்டின் ஒழுங்கை ஈறாக சென்றி போட்டுப் பலப்ப்படுத்தினார்கள். பெரிய ஆள் உண்மையிலேயே பனையடி உயரம், கட்டுமஸ்தான ஆள் எங்களோடு பேச்சு வார்த்தை இல்லை. கொஞ்சக் காலத்தில் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். அங்கே பலித்தது சிவலிங்க மாமாவின் சமயோசிதம். அவர்கள் சொன்ன அந்தப் பெரிய ஆள் “தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்” என்ற தமிழீழ இராணுவத்தின் தலைவர் என்பது விபரம் தெரிந்த நாளிலே நான் அறிந்து கொண்டது.
அத்தோடு கதை முடிந்து விடவில்லை ஈபிஆர்எல்எஃப் காரர்கள் கதவைத் தட்டினார்கள். துவக்கோடு நிண்ட பெடியளைக் கண்டு சிவலிங்க மாமா விழுந்தடித்து ஓடி வந்தார். அவர்களின் பல்லவியும் “கொஞ்ச நாளைக்கு வீடு வேணும்” என்றிருந்தது. ஆனால் வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற இறுக்கமான கட்டளையோடு.
அம்மா அழுது குழறியும் விடவில்லை. சிவலிங்க மாமா எவ்வளவோ சொல்லியும் இயக்கக்காறர் விடுவதாயில்லை. 
“தங்கச்சி நீங்கள் எங்கையும் போக வேண்டாம் எங்கட வீட்டில வந்திருங்கோ கொஞ்ச நாளையில விட்டுடுவம் எண்டு தானே சொல்லுகினம்” என்று சிவலிங்க மாமா சொல்லவும் சிவலிங்க மாமா வீடு ஒரே மதில், பக்கத்து வீடு என்பதால்அரைகுறை மனசோடு வெளியேறினோம். 
அப்ப நான் சின்னப்பிள்ளை, ஈபிஆர்எல்எப் இல் இருந்து அந்த வீட்டுக்கு வந்த அண்ணைமார் ஆசையாகக் கூப்பிட்டு துவக்கை எல்லாம் தொட்டுப் பார்க்கத் தருவினம். றிவோல்வரைத் தூக்க முடியாமல் தூக்கிப் பார்த்திருக்கிறேன். இயக்கம் எண்டால் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் என்ற நினைப்பே மாறியிருந்தது. இதையெல்லாம் தனியாக எழுதினால் ஒரு முழு நீள நாவல் எழுதுமளவுக்குச் சரக்கு இருக்கு.
ஒரு நாள் சாமம் சிவலிங்க மாமா வீட்டில் நாங்கள் படுத்திருக்கிறம். சிவலிங்க மாமா தட்டியெழுப்பி 
ஜன்னல் பக்கம் கூட்டிக் கொண்டு போனார். வீட்டுக்குள் லைற் போடாமல் தெரு விளக்கில் தெரிவதைப் பார்க்கிறோம். நாங்கள் இருந்த வீட்டில் இருந்து
இயக்கக்காரர் வாகனம் போய் வருகிறது. இம்முறை கொஞ்சம் அதிகமான போக்குவரத்து. அடுத்த நாள் எங்களிடம் வீடு கையளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் தான் தெரியவந்தது அங்கு மறைத்து வைத்த ஏராளம் நகைகள் காலி என்று.
தலைமையகத்துக்குப் புகார் கொடுத்ததால் 
 கூலிங் க்ளாசுடன் வாட்ட சாட்டமான ஒருத்தர் வந்து “எங்கட தோழர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டினம் அம்மா” என்ற அவர் தான் பின்னாளில் ஜன நாயகக் கட்சி ஒன்றை உருவாக்கி இன்றும் இயங்கும் “அரசியல்”வாதி.  நகை நட்டுடன் இந்தியா நோக்கிப் பயணித்த வள்ளம் நடுக்கடலில் நடுக்கடலில் தாண்டு தோழர்கள் இறந்தது பல்லாண்டுகளுக்குப் பிறகு தினமுரசில் அற்புதன் எழுதிய “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” தொடரில் இணுவில் தொழிலதிபர் வீட்டுக் கதையோடு சொல்லப்பட்டிருக்கிறது.
இந்திய இராணுவம் காலத்தில் என் சின்ன அண்ணரை ஆர்மிக்காரர் பிடித்துக் கொண்டு போன போது உடைந்திருந்த அப்பா, அம்மாவைத் தேற்றி மீண்டும் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் சிவலிங்க மாமா. பசி, பட்டினி, பொருள் தட்டுப்பாடு நேரமது. சிவலிங்க மாமாவின் ஆறு பிள்ளைகளோடு இன்னொரு பிள்ளையாக எனக்குச் சோற்றுக் கவளம் தருவார் மீனாட்சி அன்ரி. 
“வாத்தியார் கவலைப்படாதேங்கோ அவன் கெதியா வருவான்” என்று அப்பாவுக்கு ஆறுதல் கொடுத்துக் கொண்டு பராக்குக் காட்டி பேச்சுக் கச்சேரிக்கு இழுத்துப் போவார் சிவலிங்க மாமா. இன்னொரு பக்கம் என் சின்ன அண்ணனை விடுவிப்பதற்கு அவர் ஓடிக் கொண்டிருந்தார்.
ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் மற்றவர் கஷ்ட நஷ்டங்களில் இவ்வளவு தூரம் பாரமெடுக்கும் மனிதர் சிவலிங்க மாமா அளவுக்கு நான் கண்டதில்லை. அதற்காகத் தான் எங்கள் குடும்பத்தின் கதையிலும் சில பக்கங்களைச் சொன்னேன்.
தொண்ணூறுகளில் சிவலிங்க மாமா வீட்டு அல்லது மீனாட்சி அன்ரி வீட்டு வெளி விறாந்தையே கதியென்று  நானும் நண்பர் குழாமும் இருப்போம். மீனாட்சி அன்ரிக்கும்  பொழுது போக ஆள் வேண்டும். அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தால் இரவு ஒன்பதையும் தாண்டியிருக்கும், சிவலிங்க மாமாவும் வந்திருந்து கதைத்துப் பார்த்து விட்டு 
“சரி சரி இனி நாளைக்குக் கதைக்கலாம்” என்று சொல்லும் வரைக்கும் அது நீளும். 
எப்போவாவது தப்பித் தவறி அங்கு போகாவிட்டால் போச்சு. “ஏன் என்ன கோவமோ? மீனாட்சி தேடுறாள் வந்து தலையைக் காட்டீட்டுப் போங்கோ” என்பார் எனக்கும் நண்பர்களுக்கும்.
சிவலிங்க மாமா ஒரு எளிய மனிதர். காலையில் குளித்து முழுகி வைரவர் கோயிலுக்குப் போய் விட்டு ரவுணுக்குப் போய் விடுவார். மாலை வேலையால் திரும்பியதும் 
சிவகாமி அம்மன் கோயிலடியில் இருக்கும் தன் 
 தாய் வீட்டுப் பக்கம் போய், கோயிலையும் கண்டு விட்டுத் திரும்புவார். பின்னர் இராச நாயகம் சித்தப்பா வீட்டில் குட்டி அரட்டைக் கச்சேரி அத்தோடு அவரின் பொழுது போய் விடும். பின் வளவில் இருக்கும் பனையால் இறக்கிய கள்ளில் எப்பவாவது இருந்திட்டு  கொஞ்சம் எடுத்துக் கொடுத்து விட்டுப் போவான் மாணிக்கன். 
பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சிலலிங்க மாமா காட்டியது தனித்துவம். சம்பந்தப்பட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு பின்னர் தனித்தனியாகக் கூப்பிட்டு “நீ ஏன்ரா இப்பிடிச் செய்தனீ” என்று திருத்துவார்.
ஊர்ப்பாசம் என்பது அங்கு வாழ்ந்து பழகிய மனிதர்கள் மீதானது, வெறும் காணித் துண்டுக்குள் எழுத முடியாத பந்தமது. அப்படியொருவர் தான் சிவலிங்க மாமா.
சுவாமியார்ர மேள் மீனாட்சி அன்ரி உலகம் தெரியாதவர். சிவலிங்க மாமா தான் அவருக்கு எல்லாமே.
“மீனாட்சி எனக்கு முந்தியே நீ போய் விட வேணும் தனியாக இருந்து நீ சமாளிக்க மாட்டாய்” என்பாராம் சிவலிங்க மாமா. ஆனால் அவர் அவசரப்பட்டு விட்டார்.
சிவலிங்க மாமா செத்துப் போய் இன்றோடு ஐந்து வருடங்கள். ஒவ்வொரு முறை தாயகப் பயணத்திலும் மீனாட்சி அன்ரி வீட்டைக் கடக்கும் போது
“என்ன பிரபு பறையாமல் போறாய்?” என்று சிவலிங்க மாமா கூப்பிடுவது போல எனக்கிருக்கும்.

தமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் மறைந்தார்

ஈழத்தமிழினத்தின் விடிவுக்கான போராட்டம், தமிழ் சார்ந்த உணர்வு இந்த இரண்டிலும் விட்டுக் கொடாத வெறியர் அவர். 
தொண்ணூறுகளில் நான் மெல்பர்னில் வாழ்க்கைப்பட்ட போது வைத்திய கலாநிதி சத்தியநாதன் அவர்களின் தமிழ் சார்ந்த செயற்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன்.
அவரின் வைத்திய நிலையத்துக்குப் போய் மருத்துவ ஆலோசனை கேட்கப் போனால் முதல் வேலையாகத் திருக்குறள் ஒன்றைக் கேட்பார் அவ்வளவு தூரம் அவரின் தமிழ்ப் பற்று இருந்தது.
புகழ் வெளிச்சம் பட விரும்பாதவர் அதனால் அவர் தன்னலம் கடந்து செய்த பல தெரியாமல் போயின.
மெல்பர்ன் வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழ் நூலகம் வேண்டுமெனத் தொண்ணூறுகளில் சலியாது முயற்சித்தவர்.
ஈழத் தமிழருக்கான விடிவில் உலகத் தமிழரின் பங்களிப்பில் வைத்திய கலாநிதி சத்தியநாதன் மறக்கப்பட முடியாதவர். அவரின் பரந்த செயற்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு அவரின் இழப்பின் வலி புரியும். 
அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
Rajeevan AR அண்ணாவின் பின்னூட்டத்தில் இருந்து வைத்திய கலாநிதி பொன்.சத்திய நாதன் குறித்த விரிவான பகிர்வு
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள்
பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.
படம் உதவி Aran Mylvaganam