சென்றிப் பெடியன் தவாண்ணை

யாழ்ப்பாணம் ரவுணுக்கை சைக்கிள் கடை வச்சிருந்த வேலாயுதம் மாமாவுக்கு பெரிய வீடு, வளவு. ஊருக்குள்ளை ஒரு பெரிய அரண்மனை மாதிரியிருக்கும். எண்பத்தேழில இந்தியன் ஆமி வந்த கையோட வேலாயுதம் மாமா குடும்பம் கொழும்புக்குப் போய் அப்பிடியே கனடாவுக்குப் போயிட்டினம். 
சண்டை மூண்ட பிறகு இந்தியன் ஆமி காம்ப் ஆக வேலாயுதம் மாமா வீடு இருந்தது. 
இந்தியன் ஆமிக்காறர் போன கையோட பூட்டிக் கிடந்த வீட்டை இயக்கக்காறர் எடுத்திட்டினம். ஆனால் இயக்கப் பெடியள் அங்கே நிரந்தரமாகத் தங்குவதில்லை. இருந்திட்டு எப்பவாவது  ட்றக்கில குவியலா வருவினம். ரெண்டு மூண்டு நாளிலை ஆக்களைக் காணேலாது. வெளி மாவட்டத்தில இருந்து சண்டைக்காக வாற பெடியள் எண்டு கந்தையா அண்ணை ஒருமுறை அப்பாவின் காதில் குசுகுசுத்தது கேட்டது. 
வேலாயுதம் மாமா வீட்டில் ஒருத்தர் மட்டும் அங்கே நிரந்தரமாகத் தங்கியிருப்பார். அவர் தான் தவாண்ணை.
எங்கட ஊர்ச் சனத்துக்குத் தான் அவர் சென்றிப் பெடியன் ஆனால் எனக்கு அவர் “தவண்ணை”
வேலாயுதம் மாமா வீட்டு வளவை மூடிக் கட்டிய பென்னம் பெரிய மதிலுக்கு மேல் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார் தவாண்ணை. கையில துவக்கு, இடுப்பைச் சுற்றிய சாரத்தை இறுக்கியிருக்கும் பெல்ட் கிரனேட் குண்டு பொருத்த வாகாக இருக்கும்.
ஒல்லி உடம்பெண்டாலும் கறுத்த புறூஸ்லீ மாதிரி இருப்பார் அவர்.
தவா அண்ணையோடு எப்படி எனக்குப் பழக்கம் வந்தது எண்டு யோசித்துப் பார்க்கிறேன். வேலாயுதம் மாமா வீட்டு வளவுக்குள்ள இருந்த வயிரவர் கோயில் எங்கட ஊர்ச் சனத்துக்குப் பொதுச் சொத்து மாதிரி. அப்பிடித்தான் நானும் கோயில் கும்பிடப் போற சாக்கில இயக்கப் பெடியளை விடுப்புப் பார்க்கப் போவேன். 
சாந்தன் அண்ணா என்னை விட ஐந்து வயது மூத்தவர். வேலாயுதம் மாமா வீட்டுக் காணியோட ஒட்டின ஒரே மதில்காறர். ஊர்க்காறரைக் கண்டால் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாத தவா அண்ணைக்கு ஏனோ என்னிலும் சாந்தன் அண்ணையிலும் ஒரு நேசத்தை வைத்துக் கொண்டிருந்தார். சினேகமாகச் சிரித்து விட்டுக் கடந்த காலம் போய். சாந்தன் அண்ணா வீட்டு விசேசங்களில் செய்யும் சாப்பாடு முதற் கொண்டு வைரவர் கோயில் புக்கை வரைக்கும் வாழையிலையில மடிச்சிக் கொண்டு போய் தவா அண்ணரோடு பங்கிட்டுச் சாப்பிடும் அளவுக்குப் பழக்கம் பிடித்து விட்டோம். பின்னேரம் ஆனால் மதிலில் இருந்து அலட்டிக் கொண்டிருப்பம்.
இந்த மூன்று பேர் கூட்டணியில் தவா அண்ணரை விட இரண்டு வயது இளையவர் சாந்தன் அண்ணா என்பதால் அவர்களுடைய கதைக்குள்ள நான் அதிகம் தலையிட மாட்டன். கேட்டுக் கொண்டிருப்பன்.
ஒரு நாள் சுப்பையா அண்ணை கண்டு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். 
“எடேய் இயக்கப் பெடியனோட உங்களுக்கென்னடா சினேகிதம் அவன் பாவி மடியில கட்டியிருக்கிற குண்டு வெடிச்சுக் கிடிச்சுப் போனால் என்ன செய்வியள்? என்று வெருட்டிப் பார்த்தார். சுப்பையா அண்ணை கவலைப்படுவதிலும் நியாயம் இருந்தது. இந்தியன் ஆமி வர முந்தின காலத்தில ஒருமுறை  சுதுமலைத் தோட்டத்தில இலங்கை ஆமி ஹெலியை இறக்கி நோட்டம் பார்த்தவன். அந்த நாள் தொட்டு எங்கட ஊர் முச்சந்தியில இரவு நேரம் இயக்கப் பெடியள் மாறி மாறி சென்றியில் நிப்பினம். 
“நானொரு சென்றி தாவடிச் சென்றி
 பாதை தெரியவில்லை இந்த ஊரும் புரியவில்லை” எண்டு எங்கட ஊர் அண்ணைமார் “நானொரு சிந்து காவடிச் சிந்து“ சினிமாப்பாட்டை மாத்திப் பாடும் அளவுக்கு முச்சந்திச் சென்றிக்காறர் பிரபலமாகீட்டினம்.
அந்த முச்சந்தியில தான் வெட்டின சுரக்காய்க்குக் குங்குமம் போட்டு கழிப்புக் கழிக்கிறது. செத்த வீட்டு எட்டுச் சாப்பாடெல்லாம் அதில் தான் போடுறது. அந்தச் சந்தியைக் கடக்கும் போதே பயத்தில அங்காலை திரும்பிப் பார்த்துக் கொண்டு போகுமளவுக்குப் பயமான ஏரியா அது. ஆனால் இயக்கக்காறர் சென்றி போட்டதில இருந்து எல்லாருக்கும் பயம் தெளிஞ்சுட்டுது. கள்ளர் காடையர் கூட இரவில இனி வராயினம் என்று ஊர்ச்சனத்துக்குப் பெரும் ஆறுதல். 
ஆனால் ஒருநாள் இரவு நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது. படார் என்ற சத்தம் கேட்டு ஊர் நாயெல்லாம் வாள் வாளெண்டு குலைக்குது. சனம் அரக்கப் பரக்க வீதிக்கு வந்துட்டுது. முச்சந்திப் பக்கமிருந்து தான் அந்தச் சத்தம் வந்தது. காவலுக்கு நின்ற இயக்க அண்ணையின் கிரனேட் க்ளிப் கழண்டு குண்டு வெடிச்சு ஆள் அந்த இடத்திலேயே பலியாம் ஊர்ச்சனத்துக்கு மெல்லக் கதை பரவி விட்டது. சுப்பையா அண்ணை முதற் கொண்டு ஊர்ச்சனமெல்லாம் இயக்கத்தைப் பய பக்தியோட பார்க்கத் தொடங்கி விட்டுது.
“தவாண்ணை உந்த கிரனேட் கிளிப் தவறுதலாக்
கழண்டால் என்ன செய்வியள்?” 
“அது வெடிச்சுச் செத்துப் போவன் ஆனால் சண்டையில சாகேல்லை எண்ட கவலை இருக்கும்” என்று சொல்லும் போது தவா அண்ணையை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். முற்றிக் கிடந்த பப்பாக் காயைக் கத்தியால் செதுக்கி கிரனைட் மாதிரிச் செஞ்சு தந்தார். பறித்திருந்த குருமணல் திட்டியில் அதை மாறி மாறி எறிந்து, தெறித்துப் பாயும் மண்ணைப் பார்த்துக் கை தட்டி ஆமிக் காம்புக்குக் குண்டு போட்டாச்சு என்று கை தட்டிச் சிரிப்போம்.
தவாண்ணை இயக்கத்தில் சேர்ந்த கதையைச் சிரித்துச் சிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் சாந்தன் அண்ணையிடம். நான் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். தன்னுடைய ஊர் கிளிநொச்சியாம். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இயக்கக்காறரைக் கண்டதும் இவருக்கும் இயக்கத்துக்குச் சேர வேண்டும், யூனிஃபோர்ம் போட வேணும்,  துவக்குத் தூக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சண்டைக்குப் போகப் பயம். ஏன் காயப்பட்டு இறந்தவர்களைக் கண்டால் அதை விடப் பயப்பிடுவாராம்.
இயக்கக் காம்புக்குப் போய் அங்குள்ள பெரியாளிடம்
 “நான் இயக்கத்தில சேர ஆசை ஆனால் அரசியல் துறையில் சேர ஆசை” என்று சொல்லியிருக்கிறார். தவாண்ணையின் நினைப்பு அரசியல் துறையில் இருந்தால் சண்டை பிடிக்கத் தேவையிராது என்று அவராகவே எடுத்த தீர்மானம் அது.
“வாரும் தம்பி தாராளமா அரசியல்துறையில் இறங்கலாம்” என்று கொடுப்புக்குள்ளை சிரித்துக் கொண்டே வரவேற்றாராம் இயக்கத்தின் பெரியாள்.
தவாண்ணைக்குக் கொடுத்த முதல் பொறுப்பு  சண்டையில காயப்பட்ட போராளிகளைப் பராமரிப்பது. அதுவரை காணாத காட்சியெல்லாம் கண்டாராம். 
ஒரு பக்கம் இடுப்புக்குக் கீழை ஒண்டுமே இல்லாமல் போர்வையைப் போர்த்துக் கொண்டு அனத்திக் கொண்டிருக்கும் போராளி, கண் பக்கம் கட்டுப் போட்டு கொண்டு “ஐயோ அம்மா வலிக்குது” என்று கத்திக் கொண்டிருக்கும் இன்னொருவர், கையோ, காலோ இழந்து சுய நினைவின்றிப் படுத்திருக்கும் ஒரு கூட்டம், இவர்களையெல்லாம் கடந்து போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பக்கம் வந்தால், கலங்கிய கண்களோடு அவர்களில் இலையான் மொய்க்காது பனையோலை விசிறியால் வீசிக் கொண்டிருக்கும் முந்த நாள் போருக்குப் போனவர்கள். இவர்களோடு இருந்து இரவிரவிரவாகப் பணிவிடை செய்தாராம். விடியக்காத்தால வந்த பொறுப்பாளரரின் போய்த் தவண்ணை கேட்டாராம் “அண்ணை எப்ப பயிற்சி தொடங்குது?” என்று. முந்திய இரவு தவாண்ணைக்கு மன ரீதியான பயிற்சியைக் கொடுத்து விட்டது. மணலாறு காணச் சண்டைக்குப் போகும் அளவுக்குத் தவாண்ணை தேறி விட்டார். அடிக்கடி வெவ்வேறு கள முனைக்குத் தேவைப்படும்போது கூப்பிடுவார்களாம்.
சாந்தன் அண்ணை ஓ எல் எடுத்த கையோட ஜேர்மனிக்குப் போய் விட்டார். தவாண்ணைக்குப் பேச்சுத் துணை நான் மட்டுமே.
“உங்களுக்கு வெளிநாடு போற ஆசை வரேல்லையோ தவாண்ணை”
“எனக்கிருக்கிற ஒரே ஆசை நான் சந்திக்கிற கடைசிச் சண்டைக்கு முன்னம் தலைவருக்குப் பக்கத்தில நிக்கோணும்” தவாண்ணையின் கறுத்த முகத்தில் ரோச் லைற் அடிச்ச மாதிரி மின்னியது அதைச் சொல்லும் போது.
பிள்ளையாரடி கொடியேறி விட்டுது. ஒவ்வொரு நாளும் திருவிழா போற சாக்கில கச்சானும், தும்பு முட்டாசும் சாப்பிடலாம் என்று நாக்கு சப்புக் கொட்டியது. பாதி சாப்பிட்டுக் குறைந்த கச்சான் சரையைக் கொண்டு வந்து தவாண்ணையிடம் கொடுத்தால் ஒன்றை உடைத்துக் கோதை வீசி விட்டு உள் பருப்பை ஆமிக்காறனைப் பார்ப்பது போலப் பார்த்துட்டு 
“என்ன இருந்தாலும் எங்கட வன்னிக் கச்சான் மாதிரி வராது, கொப்பேக்கடுவ மாதிரிக் கொழுத்ததுகள்” என்பார்.
பிள்ளையார் கோயில் தேருக்குத் தவாண்ணையைக் கொண்டு போய்க் காட்டுவம் என்று எனக்கு உள்ளூர ஆசை. கடும் கடவுள் பக்தி அவருக்கு. ஆனால் வருவாரோ மாட்டாரோ என்று சந்தேகம்.
தேர் அண்டு கேப்பம் என்று காத்திருந்தேன். சப்பறத் திருவிழாவுக்கு வெளிக்கிட்டுக் கொண்டு தவாண்ணையிடம் போனேன். வேலாயுதம் மாமா வீட்டில் ஒரு ட்றக் நிற்கிறது. இயக்க ஆட்கள் வந்தால் நான் தவா அண்ணையைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி விடுவேன். நான் வந்துட்டுப் போறதைத் தவாண்ணை கண்டுட்டார்.
“தம்பி இஞ்ச வாரும்” என்று ஆசையாகக் கூப்பிட்டார். தயங்கித் தயங்கிப் போனேன். மற்றைய போராளிகளைப் போலத் தவாண்ணையும் யூனிஃபோர்ம் போட்டிருக்கிறார். 
“நான் அடிபாட்டுக்குப் போறன், வந்தால் சந்திப்பம் என்ன” தவண்ணை.
“அப்ப நாளைக்குத் தேருக்கும் கூட்டிக் கொண்டு போவம் எண்டு நினைச்சன்….” நான்
பொக்கற்றுக்குள்ள கையை விட்டு  இருந்த பத்து ரூபாத் தாளை எடுத்து என் கைக்குள் திணிக்கிறார்.
“தவாண்ணையை நினைச்சு தும்பு முட்டாசும், கச்சானும்
வாங்கிச் சாப்பிடும், கண்ட கண்ட இனிப்புச் சாப்பிடாதையும் வயித்துக்குள்ள பூச்சி வரும்” தவாண்ணையின் கதை ஒண்டும் என்ர மூளைக்குள்ள ஏறுதில்லை. அவரைக் கோயில் திருவிழாவுக்குக் கொண்டு போகேல்லை என்ற ஏமாற்றம் தான் நிக்குது.
வேலாயுதம் மாமா வீடு பூட்டிக் கிடக்குது. 
அடுத்த நாள், அடுத்த நாள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறன். பிள்ளையார் கோயில் தேரடிப் பொங்கலும் வந்துட்டுது.
கோயிலுக்குப் போய் விட்டு வீடு திரும்பும் போது வேலாயுதம் மாமா வீட்டுச் சுவர் முழுக்க நோட்டீஸ் ஒட்டியிருக்கு. எட்டிப் போய் அரை இருட்டில் பார்த்தால்
தொப்பியோட தவாண்ணையின் படம். 
மேஜர் செம்பருதி (தவச்செல்வன்) கோட்டை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச் சாவடைந்தார்.
அரசியல் துறை – யாழ்ப்பாணம் என்று போஸ்டரில் எழுதியிருக்கு. தவாண்ணையும் நானும் குந்தியிருக்கிற மதில் பக்கம் போய்ப் பார்த்தேன். நோட்டீஸ் எதுவுமில்லாமல் வெறுமையாகக் கிடக்குது.
? ஈழப் போரில் தம் இன்னுயிர் ஈய்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் இச் சிறுகதை சமர்ப்பணம்
கானா பிரபா
24.11.2017

ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை – எம்.எஸ்.கோபாலரத்தினம்

ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்கை செய்தே எழுத வேண்டிய நிலை இருக்கிறது. ஒரு சில விதிவிலக்குகள் இருப்பினும் இதுவே நடைமுறை யதார்த்தம்.
ஈழத்தின் போர்க்கால வரலாற்றில் கள முனையில் நின்று போரிட்டவர்களுக்குச் சமமாகப் பேனா பிடித்து எழுதியவர்கள் இயங்கியிருக்கிறார்கள். பாலியல் சித்திரவதையிலிருந்து துப்பாக்கி வன்முறை வழியாகக் காவெடுக்கப்பட்ட வகையில் ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர்களே உலக அரங்கில் போர்க்குற்றங்கள் வழியாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு இவர்களில் பலர் இருந்திருந்தால் போர்ப் பயங்கரவாத நடவடிக்கைகள் பலதும் வரலாற்று ஆவணங்களாக மெய்த்தன்மையோடு பகிரப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் கூட ஒரு வட இந்திய எழுத்தாளரோ அல்லது இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு இயங்க வல்ல தமிழகத்து ஆங்கில ஊடகவியலாளர்களோ அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளோ எழுதிய நூல்களையே மேற்கோள் காட்ட வேண்டிய நிலையில் ஈழத்துப் போரியல் வாழ்வில் வரலாற்றுப் பக்கங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தில் பேசப்படாத பக்கங்களில் ஒரு சில பக்கங்களை நிரப்பும் நூலாக அமையும் வகையில் மிக முக்கியமானதொரு ஆவணமாகத் திகழ்கின்றது. யோசித்துப் பாருங்கள் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழப் பகுதியில் தனி நபர் துஷ்பிரயோகம், படுகொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை என்று எவ்வளவு பல இன்னல்களை அனுபவித்திருக்கிறது அந்த உலகம். ஆனால் அந்தக் கால கட்டத்திலும், அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் இந்தத் துன்பியல் வரலாறுகள் முறையாகப் பதியப்படவில்லை. இந்த நிலையில் தான் ஏற்கனவே சந்தித்த உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொண்டு, 1989 இல் தமிழக ஏடான ஜூனியர் விகடனில் “கோபு” என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் ஒரு தொடர் எழுதத் தொடங்குகிறார். அதுதான் இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை”.

ஆறு தசாப்தங்களாகப் பத்திரிகையாளராக வாழ்ந்தவர் எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்கள். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்
“1987 ஒக்ரோபர் முதல் 1990 பெப்ரவரி வரை இலங்கையிலிருந்த அமைதிப்படை பற்றி வாத விவாதங்கள் நிறைய உண்டு. வரலாற்றின் தவிர்க்க முடியாத குருதிக் குலைவுகளில் ஒன்றாக அது அமைந்து விட்டது.
இன்று ஒரு தசாப்தத்தின் பின் மீளத் திரும்பிப் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தில் (இலங்கையின் இனக் குழும நெருக்கடி) இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வகிபாகம் உண்டு என்பது புறக்கணிக்கப்படக் கூடாத உண்மை என்பது புலனாக்கப்பட்டுள்ளது. இதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்” (27.07.2000) என்கிறார்.

எம்.எஸ்.ஜி (கோபாலரத்தினம்) வீரகேசரியில் தொடங்கி ஈழ நாடு, ஈழ முரசு, காலைக் கதிரி, செய்திக் கதிர், ஈழ நாதம், தினக் கதிர் (மட்டக்களப்பு), சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர்.
இவரின் அரை நூற்றாண்டுப் பணிக்காக 2004 ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனால் தேசிய சின்னம் பொறித்த தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். ஶ்ரீ ரங்கன் என்ற பெயரில் சிறுகதைகளில் எழுதியதோடு எம்.எம்.ஜி, பாலரத்தினம், ஊர் சுற்றி ஆகிய பெயர்களில் பத்திரிகைப் பணியாற்ரியிருக்கிறார். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை, அந்த உயிர் தானா உயிர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.
மேலும் இவரின் ஊடகப் பணியின் ஆரம்பம் தொட்டு விலாவாரியான தகவல்களை உதயன் நாளேட்டின் உதவி ஆசிரியராக இருந்த சி.பெருமாள் பகிர்ந்திருக்கிறார்.

ஈழ முரசு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை நானும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 62 நாட்கள் சிறையில் இருந்த போது யான் பெற்ற அனுபவம், அங்கு கண்டு கேட்டுப் பெற்றவைகளையே எழுதியிருக்கிறேன் என்று நூலாசிரியர் எம்.எஸ்.கோபாலரத்தினம் குறிப்பிடுகிறார்.
1988 இல் ஜூனியர் விகடனில் தொடராக வந்த போதும் பலதும் விடுபட்டதால் விடுபட்டதையும் சேர்த்து நூலுருவாக்க 1990 இல் முயன்று 2007 ஆம் ஆண்டே சாத்தியப்பட்டிருக்கிறது. அந்த இன்னல்களை எல்லாம் தன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். “எனது முடிவில்லாப் பயணத்தில்” (பாரிஸ் ஈழநாடு குக நாதன் முன்னர் நூலாக்கியது) கட்டுரைத் தொடரையும் மீள் பதிக்க வேண்டும் என்ற அவாவையும் குறிப்பிடுகின்றார்.

1987 ஒக்ரோபர் 10 ஆம் ஆண்டு ஈழ முரசு பத்திரிகை அலுவலகம் இந்தியப் படையால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதிலிருந்து நூலின் பக்கங்கள் விரிகின்றன. தானும், பத்திரிகைக் காரியாலயத்தில் பணி புரிந்தோரும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு பத்திரிகைக்காரர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று இராணுவ மேலதிகாரிக்கும் சிப்பாய்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைச் சம்பவங்களுனூடு காட்டுகிறார்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரும் தறுவாயில் இடம் பெயர்ந்தும் ஈழ முரசு பத்திரிகையை வெளிக் கொணர்ந்த அனுபவங்கள், பட்டினிப் போராட்டம் என்பவற்றைத் தன் அனுபவங்களூடாகப் பகிர்கிறார்.

தீபாவளித் தினத்தில் இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில்  எழுபதுக்கு மேற்பட்ட நோயாளிகள், வைத்தியப் பணியாளர்கள், வைத்தியர்கள் உட்படக் கொல்லபட்ட சம்பவங்கள், தாய், தகப்பனைக் கொன்று விட்டு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு இரையாக்கிக் கிணற்றில் போட்டது, மூதாட்டிகளைக் கூடத் தம் பாலியல் இச்சைகளுக்குத் தப்பாமல் பயன்படுத்தியது எல்லாம் நூலில் பதிவாகியிருக்கிறது.

கோட்டைச் சிறைக்குள் ஊத்தைத் தட்டில் உப்பு, புளி இல்லாத சாப்பாடு, சிப்பாய் மனம் இரங்கினால் மல ஜலம் கழிக்கும் உரிமை இந்த அனுபவங்களோடு தான் இவரின் முதல் நாளில் இருந்து தொடங்குகிறது சிறை வாசம். காலை உணவு பூரியைக் கையால் வாங்கி சாப்பிடும் தட்டில் தேநீரை உறுஞ்ச வேண்டுமாம்.
கடும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டோர் மன ஜலம் கழித்த பாத்திரத்தைத் தாமே கழுவிப் பாவிக்க வேண்டும்.
“அடிக்காதேங்கோ ஐயா அடிக்காதேங்கோ ஐயா” என்று அழுதழுது கதறும் இளைஞர்களைப் பற்றிய எழுத்துகள் என் வீட்டில் நான் நேரடியாகக் கேட்டது இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட என் அண்ணன் வழியாக.

சார்ஜண்ட் ராம்பால் “நீ எல்.ரீ.ரீ.ஈ யா?” என்று கேட்டுக் கேட்டு அப்பாவி இளைஞர்களுக்கு அலுமீனியத் தடியால் கொடுக்கும் அடிகளும், தனக்கு வயிற்றுப் போக்கு வந்த போதும் கருணையின்றிக் கிடைத்த ஸ்பெஷல் மண்டிப் போன தேயிலைச் சாயத்தையும் பற்றியும் சொல்கிறார்.
இதே வேளை கோர்ப்பரல் குப்தா என்ற உயர் அதிகாரி சார்ஜண்ட் தடுத்து வைக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்திக் கொடுமைப்படுத்திய நடவடிக்கைகளில் விசனம் கொண்டு முரண்பட்ட சம்பவங்களையும் விபரிக்கிறார்.

“மதராசித் தமிழனும் யாழ்ப்பாணத் தமிழனும் சேர்ந்து இந்திய இராணுவத்தைத் தாக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே எல்.ரீ.ரீ.ஈ” என்ற சார்ஜண்ட் ராம்பாலின் போக்கோடு இயங்கிய இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளாலேயே தமிழ் மக்கள் இவர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழக்க வைத்தது என்ற உண்மையைச் சொல்லி வைக்கிறார்.
இவர்களைக் கைது செய்தால் மட்டும் போதாது கொன்று போட வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனராம் இந்திய இராணுவச் சிறையில் இருந்த இந்த அப்பாவிகளைப் பார்க்க விசேட விருந்தினராக வந்த சிங்கள இராணுவ அதிகாரி.

புலிகளால் செயலிழக்கப்பட்ட இயக்கங்களின் கூட்டு த்றீ ஸ்டார் போன்ற கூட்டு இயக்கங்களாலேயே இந்த அப்பாவி இளைஞர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு புலிகளுக்கு உதவினார்கள் ஆகவே இவர்களும் புலிகள் என்று சித்திரவதைக்கு ஆளானார்கள். ஆணுறுப்பில் கத்தியால் கீறித் துன்புறுத்தும் அளவு எல்லையோடு இந்த வன்முறைகள் நிகழ்ந்ததாகச் சாட்சியம் பகிர்கிறார்.

விசாரணை என்ற பெயரில் கண்கள் கட்டப்பட்டு, எல்லோருடைய கைகளும் பிணைக்கப்பட்டு முள்ளு நிலத்தில் ஓட விட்டு அடி கொடுக்கும் போது சிங்களச் சிப்பாய்களதும், ஹிந்தி வீரர்களதும் சிரிப்பொலிகளும் கலக்குமாம்.

கோட்டையில் இருந்து பலாலித் தளத்துக்கு மாற்றப்பட்ட பின் சந்தித்த மாறுபட்ட அனுபவங்களையும் எழுதிச் செல்கிறார், அங்கேயும் கோட்டையில் சந்தித்த குப்தா போன்ற நல்லவர் மேஜர் நாயரால் சித்திரவதைகளில் இருந்து காப்பாற்றப்பட்டது உட்பட.

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகும் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பத்திரிரிகையார்களால் இந்த நிகழ்வுகள் பதிவாக்கப்படும் போது, “இரண்டு பத்திரிகை நிறுவனங்களை எமது மண்ணில் தகர்த்து விட்டு உங்கள் பத்திரிகையாளர்களை அழைத்து வருகிறீர்களே” சக பத்திரிகைக்காரர் சர்வேந்திரா பொருமுவாராம்.

பருத்தித்துறை வைத்தியர் லலித் குமாரின் உண்ணாவிரதப் போராட்டம் வழியாக விடுதலையான நினைவுகளும், மேஜர் ஹரிகிரத் சிங் பத்திரிகையாளர்களான தங்களை மீண்டும் பத்திரிகை நடத்தித் தமக்குச் சார்பான செய்திகளை வெளியிட வைத்த முயற்சிகளும் பகிரப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு நண்பகல் உணவைத் தியாகம் செய்து அஞ்சலி செலுத்தினாராம் நண்பர்களோடு.
இதைப் பார்த்து விட்டு “அந்தப் …..ஆலே தானே இந்தப் பிரச்சனை” என்று தமிழ்ச் சிப்பாய் சொன்னாராம்.

சந்தேச செய்தி நிறுவனத்தை நடத்தியவரும் Saturday Review பிரதம ஆசிரியருமான காமினி நவரத்தின எடுத்த பகீரதப் பிரயத்தனங்களால் தன் விடுதலை கை கூடி வர எடுத்த நடவடிக்கைகளைக் கடிதத்தோடு பகிர்கிறார்.

தமிழ் தெரியாத இந்தியச் சிப்பாய்கள் முன்பு “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடலை “தமிழீழமே தீர்வு என்று சொல்லுவோம்” என்று வல்வெட்டித் துறை இளைஞர் முகாமில் நடந்த தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் பாடியதை அப்படியே வரிகளோடு சொல்கிறார்.

“உங்கள் விடுதலைக்கு ராஜீவ் காந்தி எந்த விதமான தலையீட்டையும் செய்ய முடியாது”

“எல்.ரீ.ரீ.ஐ இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தான் போவோம் ஶ்ரீலங்கா ஆமி எதிர்த்தால் அவர்களோடும் சண்டை போடுவோம்”

“சீக்கிரம் பிரபாகரன் எங்களுடன் வந்து விடுவார்”

30 வருடங்களுக்கு முன் இந்திய இராணுவ அதிகாரிகளால் சொல்லப்பட்ட மேற் சொன்ன கூற்றுகள்  பிற்காலத்தில் நடைமுறையில் சந்தித்த வரலாறுகளோடு உரசுகின்றன.

இந்த நூலில் குறிப்பிட்ட சித்திரவதைக்குப் புகழ் பெற்ற இராணுவ அதிகாரி சர்மாவின் நடவடிக்கைகளை நேரடி அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எங்களூர் மருதனார் மடத்திலேயே அவரின் கட்டுப்பாட்டில் இருந்த சித்திரவதை முகாம் இருந்தது.

தன்னுடன் இருந்த சக அப்பாவிகளின் பின்னணிகளையும் இணைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் எம்.எஸ்.கோபாலரத்தினம்.

இந்திய அமைதிப்படையின் நடவடிக்கையால் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஜ்ந்த நூலை ஆசிரியர் சமர்ப்பித்திருக்கிறார்.

நேற்று நம்மை விட்டு மறைந்த எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் நினைவுகளோடு புத்தகத்தைக் கையிலெடுத்தேன். பல நாட்களாகத் தேடிய புத்தகம் சிட்னியின் மளிகைக் கடையொன்றில் சீண்டப்படாதிருந்தது கண்டு அப்போது வாங்கியது.

ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் முப்பது ஆண்டுகளை வேதனையோடு நினைவுகூரும் இந்த வேளை இவற்றுக்கெல்லாம் நேரடிச் சாட்சியாக விளங்கிய கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் பிரிவுக்கு நாம் செய்யக் கூடிய கைமாறு இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலை மீள் பதிப்பித்துப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சென்றடைய வைக்க வேண்டும். அத்தோடு இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உட்பட வேண்டிய தேவை இருக்கிறது.

“பேனா ஒரு வலிமை மிக்க ஆயுதம் என்கிறார்கள். உண்மை தான்! அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே! அதைப் பறித்து விட்டு அவன் கைகளைப் பிணைத்து விட்டால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” – கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம்

ஐயா உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ?

கானா பிரபா
16.11.2017

“என்ரை அப்பு வந்துட்டானோ”

பாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடித்து விட்டுச் சந்தோசக் கூக்குரல் எழுப்புவார் இருந்த இடத்தில் இருந்து.
சைக்கிளை ஸ்ராண்டில் வளைய விட்டு ஆச்சி வீட்டுத் திண்ணையில் நாலு படி ஏற வேண்டும். பழங்காலத்துச் சுண்ணாம்புக் காறல் திண்ணை வீடு அது. ஒரேயொரு அறை தான், அதுவே சாமி அறை, பண்டக சாலை, நகை நட்டு, உடு பிடவை வைக்கும்இடம் எல்லாமுமே. வெளித் திண்ணையில் தான் ஆச்சியின் சீவியம் முழுக்க. கூடவே பெரிய மாமியும். பிரிந்திருக்கும் தனியே ஒரு மண் குடிசைக்குள் தான் சமையல், சாப்பாடு எல்லாம்.
அந்தச் சின்னத் திண்ணை வீட்டின் அத்திவாரமே ஒரு மனிசர் அளவு உயரம். படிகளில் ஏறும் போதே மேலேயிருந்து ஆச்சி இரண்டு கைகளையும் விரல்களை உள்ளிளுத்து அந்தரப்பட்டு நீட்டுவார் கெதியாக வரச் சொல்லி.
ஒரு கிழுவந்தடிக்குச் சீலை சுத்தியது போலத் தான் ஆச்சியின் உருவம். கூன் முதுகு. பொன்மனச் செல்வியின் கதையைச் சமய பாடத்தில் படித்த போது அது என்ரை ஆச்சி என்றே நினைவில் பதித்திருந்தேன்.
ஆச்சியின் காது தோடுகளால் ஈய்ந்து போய் பெரிய ஓட்டை போட்டிருக்கும். அதில் தொங்கியிருக்கும் கல்லு வச்ச தோட்டைத் தொடும் சாக்கில் ஆச்சியின் காதை நைசாகப் பிழிந்து பார்த்தால் என்ன என்று ஆசை வரும். பச்சைச் சீத்தைச் சேலையும் வெள்ளை ப்ளவுசும் தான் ஆச்சியின் சீருடை.
“என்ரை அப்பு வந்துட்டானோ” என்று வாஞ்சையாக அழைந்து என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பார். அவரின் தோல் நைந்த பொலித்தீன் பை போல இருக்கும். பழுப்புப் பச்சையாய் வீங்கிப் புடைத்த நரம்புகள் அந்தத் தோலை மீறிக் கோடாய் இருக்கும். 
“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார்.
நான் ஆச்சிக்கேற்ற கதைகளை மட்டும் வடித்துச் சொல்வேன். ஆசையாகக் கேட்பார்.
கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும்
“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார். அவவுக்கு நான் சொல்லும் கதையில் ஆர்வமில்லை என்னோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சொன்ன கதையைச் சொல்லுவேன். புதிதாய்க் கேட்பது போலக் கேட்பார் திரும்பவும்.
ஆச்சியின் குச்சிக் கைகள் வலிமையாக என் கைகளைக் களையாதவாறு இறுகிப் பிடித்தபடி இருக்கும். கதை கேட்டுக் கொண்டிருப்பவர் கண்ணிரண்டிலும் பொல பொலவென்று கண்ணீர் பெருக்கெடுத்தோடும். 
“என்ரை பத்திரகாளி ஆச்சி என்ரை பிள்ளையைக் கவனமாப் பாத்துக் கொள்” என்று தாவடிப் பத்திரகாளி அம்மன் கோயில் பக்கம் பார்த்துச் சொல்லி விட்டு என் கைகளைக் களைந்து அந்தப் பக்கம் கை கூப்பித் தொழுவார். சேலைத் தலைப்பில் கண்ணிரண்டையும் ஒற்றுவார். பிறகு என்ரை கையைப் பிடிச்சுக் கொஞ்சுவார்.  புறங்கையை எடுத்து மணந்து கொஞ்சி விட்டு மீண்டும் கையை இறுக்கிப் பிடித்திருப்பார்.
குழந்தைப் பிள்ளையின் கையில் அகப்பட்ட பாவைப் பிள்ளை போல நான். மேல் வகுப்புப் படிக்கும் வயதிலும் இதே கதை தான்.
“ஏன் குஞ்சு மெலிஞ்சு போனாய் கொம்மாட்டைச் சொல்லி முட்டை அடிச்சுக் குடி” ஆச்சியிடம் நான் போகும் போதெல்லாம் என் எடை குறைந்து விடும்.
அம்மாவின் பக்கம் இணுவில், அப்பாவின் பக்கம் தாவடி. 
இரண்டுமே பதினைந்து இருபது நிமிடச் சைக்கிள் ஓட்டத்தில் இருக்கும் பக்கத்துப் பக்கத்து ஊர்.
இணுவில்காறர் “தவமணி ரீச்சரின் மேன் எல்லோ” என்று கேட்பார்கள். தாவடிக்கார் “திருப்பதி ஆச்சியின்ர பேரனெல்லோ” என்பார்கள். ஆச்சியின் முகவெட்டாம் எனக்கு. அப்பா தன் தாயை ஆச்சி என்று கூப்பிடுவது போல அவரே எங்களுக்கும் ஆச்சி. ஆச்சி தன் கணவரை அப்பு என்பார். அப்பாவும் அப்பு என்றே கூப்பிடுவார். ஆச்சிக்கு நாங்களெல்லாம் “அப்பு”
அப்பு செத்துப் போறதுக்கு நாலு வருஷம் முன்பே நான் பிறந்து விட்டாலும் ஆச்சி நினைத்துக் கொண்டிருக்கிறா அப்பு தான் திரும்பவும் பிறந்திருக்கிறார் என்று.
அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். வெவ்வேறு பாடசாலைகள். அப்பா தன்னுடன் என்னைக் கூட்டிக் கொண்டு வந்து ஆச்சி வீட்டில் விடுவார். பக்கத்து வீடு கனகமாமி அப்பாவின் இன்னொரு சகோதரி. ஆச்சி வீட்டில் தான் என் குழந்தைப் பராயம் கழிந்தது.
அதனால் ஆச்சிக்குத் தான் வளர்த்த பிள்ளை நான்
என்ற பெருமை.
“பிரபு!  ஆச்சி செத்துப் போனாவாம்”  
ரவுணில் உள்ள ரியூஷன் சென்ரருக்குப் போய் வந்து சைக்கிளை நிறுத்த முன்பே பக்கத்து வீட்டு அன்ரியின் குரல்.  வீடு பூட்டியிருந்தது அப்பா, அம்மா போயிருப்பினம். அப்படியே ஆச்சி வீட்டுக்குச் சைக்கிளை மிதித்தேன். படலைக்குப் பக்கமாக “ஆச்சீ ஆச்சீ” என்று அழுகுரல்கள் தான் கேக்குது. என்னை ஆசையாக அழைக்கும் ஆச்சி மூச்சுப் பேச்சில்லாமல் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறா. ஆச்சியோட தினமும் மல்லாடும் பெரிய மாமி அழுது அரற்றிக் கொண்டிருக்கிறா. ஏன் ஆச்சி என்னை விட்டுப் போனனீ?
“பேரப் பிள்ளையள் வரிசையா வாங்கோ” பூபாலசிங்கம் மாமா கூப்பிடுகிறார். மாமிமாரின் பிள்ளைகள் போகினம். நானோ ஒளிக்க இடம் தேடினேன். குணம் மாமி கண்டு விட்டார். 
“இஞ்சை வா அப்பன் நீ ஆச்சி ஆசையா வளத்த பேரனெல்லே” போய் நெய்ப் பந்தம் பிடி ராசா”
“இல்லை எனக்கு ஆச்சியைப் பாக்கப் பயமா இருக்கு மாமி” 
குணம் மாமி கொற இழுவையில் இழுத்துக் கொண்டு போய் ஆச்சியின் தலைப் பக்கம் நிறுத்தினார்.
ஆச்சியைக் குளிப்பாட்டிப் புதுச் சீலை எல்லாம் போட்டுக் கதிரையில் இருத்தியிருக்கு. நெய்ப் பந்தத்தை என் கையில் திணிக்கிறார்கள். ஆச்சியைச் சுத்திக் கொண்டு வரும் போது அவவோட ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியது தான் ஞாபகத்துக்கு வருகுது.
ஆச்சியைக் கடைக் கண்ணால் பார்த்தேன் கண்ணை இறுக மூடியிருந்தா.
ஆச்சி செத்து இருபத்தஞ்சு வருசம் கழிச்சு ஆச்சி சாகேக்கை வராத அழுகை நேற்று வந்தது. ஆச்சியை நினைத்து அழுதேன். அதற்குக் காரணம் நேற்றுத்தான் பேஸ்புக் பட்டியலில் கண்ணுற்று நண்பர் ஆக்கிய அன்பு உறவு மகிவனியின் இந்தக் கவிதை.