வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்

இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து பதின்மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.
எப்பேர்ப்பட்ட வரம் இது. 
இறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.
இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.
ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.
இதுவரை “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”, மற்றும் “பாலித் தீவு – இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.
இதுவரை பதிப்பித்த நூல்களை விரைவில் Amazon Kindle நூலுருவாக்கும் பணியில் உள்ளேன். அத்தோடு தமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள்,  படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன். 
எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக 
மடத்துவாசல் பிள்ளையாரடி http://www.kanapraba.blogspot.com
அல்லது
www.madathuvaasal.com
என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
http://www.radiospathy.com/
எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
http://ulaathal.blogspot.com.au/
இவை தவிர
காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி 
http://videospathy.blogspot.com.au/
 ஈழத்து முற்றம் 
http://eelamlife.blogspot.com.au/
என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்
http://eelamlife.blogspot.com.au/
அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/
என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.
ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற “அனுமதி பெறாது பிரசுரிக்கும்” புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன். 
இதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.
தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
05.12.2017

எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு ?

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈழத்தில் தீபாவளி என்றால் புதுச்சட்டை போட்டுக் கொண்டு கொண்டாடுவதைத் தாண்டி, வீடுகளில் தீபம் ஏற்றும் மரபு இருந்ததில்லை. ஆனால் கார்த்திகைத் தீபம் என்ற விளக்கீடு வருகுதென்றால் ஒரு சில வாரங்களுக்கு முன்பே உள்ளூர்க் கடைக்காரர் தம் வாசல் படியைத் தாண்டிக் கடகங்களில் மண் தீபச் சுட்டிகளைக் குவித்து விடுவர். விளக்கீடு வரப் போகுதென்று கட்டியம் கூறும் அது.

வீடுகளின் முகப்பு வீதியில் இருக்கும் கல், புல் பூண்டு எல்லாம் அகற்றப்படும் உழவாரப் பணியை ஒவ்வொரு வீட்டாரும் தொடங்கி விடுவர். அதுவரை குடிகொண்டிருந்த முள் பற்றைகள் எல்லாம் காலியாகிப் பளிச்சென்று மின்னும். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின் வளவில் வாழைத் தோட்டமும் முற்றத்தில் பப்பாளி மரமும் இருக்கும். வாழைக் குலையை ஈன்ற பெரும் வாழை இந்த விளக்கீட்டுக்காகக் குறி வைக்கப்படும். ஒரு வாழை மரத்தைத் தறித்து அதன் தலைப் பகுதியை நறுக்கிக் கிடத்தி விட்டு இரண்டாக்கினால் இரண்டு வாழைக் குற்றிகள், இரண்டு வீட்டுக்கு உதவும். இரண்டாக்கிய வாழையின் மேலே கத்தியால் குவியமாகக் கோதி விட்டிருக்கும். 

பாதி வெட்டப்பட்ட வாழைக் குட்டியைக் கொண்டு போய் வீட்டுக்கு நேர் வெளியே  உள்ள வீதியில் பறித்த குழியில் நட்டு அதனுள் பப்பாளிக்காயை வைத்து எள் எண்ணெய் எரிப்பது போலவும் விளக்கேற்றுவார்கள். இன்னுஞ் சிலர் கொப்பரைத் தேங்காயை வாழைக் குற்றிக்கு மேல் நட்டும் எரிப்பர்.  அந்த வீதியின் இரு மருங்கும் வாழைக் குற்றிகளின் தலையில் தீச் சட்டி பவனி போலக் காட்சி தரும். வாழைக் குற்றியைச் சூழவும் சோடனை போல மரத் துண்டுகளைச் செருகி அதன் மேல் சுட்டி விளக்கையும் வைப்பர்.

கிழுவந்தடிகளை அளவாக வெட்டி, தோய்த்துலர்ந்த 
பழைய வேட்டியைக் கிழித்து தேங்காய் எண்ணெய் தோய்த்து ஒவ்வொரு தடிகளிலும் பந்தம் கட்டி வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின் வளவின் ஒவ்வொரு திக்கிலும், தோட்டத்திலும் இந்தத் தீப்பந்தங்களை நடுவதும் மரபு. 
வீட்டில் இருக்கும் ஆம்பிளைகள் வாழைக் குட்டித் தீபத்துக்குப் பொறுப்பு என்றால், பெண்கள் இந்தக் கிழுவந்தடிப் பந்த வேலையைப் பங்கிட்டுச் செய்வர். என்னுடைய அம்மாவுக்குப் பின் வளவில் இவற்றை நட்டு வைக்காவிட்டால் பொச்சம் தீராது. கடுமையான போர்க்காலங்களில் கூட வெளிச்சத்தைக் கண்டு ஹெலியில் வந்து குண்டு போடுவார்கள் என்ற பயமில்லாது சனம் தம் சடங்கைச் செய்தது.

தாவடிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை விளக்குப் பூசை எங்கள் அப்பாவின் பரம்பரைப் பூசை. அப்பாவின் தங்கையின் கணவர் பூபாலசிங்கம் மாமா இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியில் இருந்து வெள்ளணவே மாட்டு வண்டி கட்டி வீட்டுக்கு வந்து பொருள், பண்டங்கள், பொங்கல் பானை, இளநீர்க் குலைகள் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு, சின்னப் பெடியள் எங்களையும் வண்டியின் ஒரு கரையில் இருத்தி “ஏ இந்தா இந்தா” என்று மாட்டை வழி நடத்திப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு போவார். 

கோயிலின் முன் பக்கம் பாழ் பட்ட பனைக் குற்றி ஒன்று நிமிர்த்தி வைக்கப்பட்டு அதன் மேல் தென்னோலை,
பனையோலை எல்லாம் செருகி ஒரு சூரனைப் போல நிற்கும். நவராத்திரிக்கு வாழையை நட்டு மகிடாசுரன் என்று அதை உருவகப்படுத்தி வாழை வெட்டு நடத்துவது போல இந்தக் கார்த்திகை விளக்கீடு அன்று சுவாமி வெளி வீதி வருகையில் ஓலை கட்டிய பனையைக் கொளுத்தியதும் சொக்கப்பனை கொழுந்து விட்டெரியும். சுவாமி பின் வீதிப் பக்கம் போனதும். எரிந்து தணிந்த அந்த மரத் துண்டையும், ஓலைத் துண்டையும் இழுத்துக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் போடுவது சிறுவருக்கு ஒரு கொண்டாட்டம் போல.

சாமம் தொட வீடு திரும்பும் போது கொண்டு போன பொருட்கள் எல்லாம் சர்க்கரைப் பொங்கலாகவும், வடை, மோதகங்களாகவும் மாறி மாட்டு வண்டியில் திரும்ப வீடு வரும். வீட்டுக்கு வந்து எல்லோரும் பரிமாறி உண்டு மகிழ்வோம்.

விளக்கீட்டுக்கு வீடு வீடாக எரிந்து கொண்டிருக்கும் வாழைக் குற்றிகளைப் பார்க்கிறேன் பேர்வழி என்று படலைப் பக்கம் நிற்கும் தன்னுடைய ஆளைப் பார்ப்பதற்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு வாலிபக் குருத்துகள் கிளம்பி விடுவர். சாமத்தில் சைக்கிளில் வரும் விடலைப் பெடியள் கூட்டம் வாழைக் குற்றியைக் காலால் தள்ளி விழுத்தி விட்டுப் போகும் சேட்டையும் நடக்கும். கார்த்திகைத் தீபம் கோயிலில் ஒரு நாள், வீட்டில் ஒரு நாள் என்று பங்கிட்டுக் கொண்டாடி முடிந்ததும் விற்பனை ஆகாத தீபச் சுட்டிக் கடகங்களைக் களஞ்சிய அறைக்குள் கொண்டு போய் வைத்து விடுவர் கடைக்காரர், அடுத்த விளக்கீடு வரும் வரைக்கும்.

படங்கள் நன்றி : கடகம் & தமிழ் வின் இணையத் தளங்கள்

கானா பிரபா
03.12.17