அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் மதிப்புக்குரிய திரு கந்தையா.நீலகண்டன் காலம்

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக மூத்த சட்டவாளர், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு.கந்தையா நீலகண்டன் அவர்களைக் கலையகத்தில் சந்தித்து

உரையாடிய போது அவர் பகிர்ந்து கொள்டவைகளின் எழுத்துப் பகிர்வை நேற்று எம்மை விட்டு நீங்கிய அன்னாரின் நினைவில் இங்கு தருகிறேன்.

மலேசியாவில் பிறந்த திரு கந்தையா நீலகண்டனுடன் தன் சகோதர்களையும் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கில் அவரது தந்தையார் தன் வேலையில் இருந்து விலகிக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயருகிறார்கள்.

ஆரம்பத்தில் கரணவாய் தெற்கு மகாவித்தியாலயம் பின்னர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் ஆகிய பாடசாலைகளிலும் பயின்ற இவர் தன் உயர் கல்வியை

யாழ் இந்துக் கல்லூரியில் படித்து முடித்தார்.

தன்னுடைய 23 வது வயதிலே சட்டத்தரணியாகத் தேர்ச்சி பெற்று நீலகண்டன் & நீலகண்டன் சட்டத்தரணி நிறுவனத்தைக் கொண்டு நடத்தினார்.

அகில இலங்கை இந்து மாமன்றம் சைவ சமயத்தின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பெரியோர்களால்

1955 தோற்றம் பெற்றது. இந்த அமைப்புக்கெனத் தலைநகர் கொழும்பில் காணி ஒன்றும் அரசாங்கத்தால்

1958 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தாலும்

1990 வரை கட்டடம் ஏதுமில்லாதிருந்தது. அன்றைய

தலைவர் மறைந்த திரு.பாலசுப்ரமணியம், செயலாளர் திரு கந்தையா நீலகண்டன் மற்றும் திரு கைலாசபிள்ளை, திரு.பவதிராஜா ஆகியோரின் பெரு முயற்சியில் கட்டடம் ஒன்று நிறுவி முடிக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்து மாமன்றக் கட்டடம் அப்போது சொல்லெணாத் துயரோடு கதி கலங்கி நின்ற தமிழ் மக்களின் வேதனைத் துயர் துடைக்க, கட்டிட வருமானம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்துவதென முடிவு செய்தார்கள்.

இரத்மலானை இந்துக்கல்லூரியில் வன்னியிலிருந்து வந்த 150 பிள்ளைகளுக்கு விடுதி வசதி ஏற்படுத்த இது ஏதுவாக இருந்தது. கலாநிதி வேலாயுதபிள்ளை இந்த முயற்சிக்குப் பெரிதும் துணை நின்று செயற்பட்டவர்.

இந்து மாமன்றத்தின் சின்னம் எதைக் குறிக்கிறதோ அந்தச் சின்னத்தின் தோற்றப்பாடான இறைவனின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதே இந்து மாமன்றத்தின் நோக்காகக் கொண்டிருக்க வேண்டுமென்று செயற்பட்டார்கள்.

தொண்ணூறுகளில் தமிழ் அரசியல் தலைமை துணிவுடன் செயற்படாத காலத்திலும் இந்து மக்களின் குரலாக இந்து மாமன்றமே இயங்கிக் குரல் கொடுத்திருக்கிறது.

சுனாமி, வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் வந்த போதும் அந்தப் பணி நீண்டது.

2005 ஜனவரி 1 அன்று சன்னிதி மடத்தில் சுனாமியில் காவு கொண்ட உறவுகளுக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்த போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட

இராமகிருஷ்ண மடத் தலைவர் சொன்னார்

“உங்களை ஆண்டவன் உயிரோடு விட்டு வைத்திருப்பதற்குக் காரணமே ஏதிலிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே” என்று.

அந்த வகையில் மனித நேயம் நிதியம் வழியாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் எம் உறவுகள் வழியாகப் பல்வேறு அறப்பணிகள் செய்ய முடிகிறது.

திருக்கோபுரம் எழுப்புவது மட்டுமல்ல உண்மையான சைவ நெறிச் செயற்பாடு அதைத் தாண்டிய மனித நேய முயற்சிகளில் கை கொடுக்க வேண்டும். இந்து மாமன்றம்

இந்து ஒளி காலாண்டு இதழை 18 வருடம் கடந்து வெளியிடுகிறது. வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் எழுதிய “இந்து சமய சிந்தனைகள்” தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

2005 ஆண்டு இந்து மாமன்றத்தின் பொன்விழா மகாநாட்டில் 48 அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

மலையகம், மட்டக்களப்பு என்று இந்து மாமன்றத்தின் பணி விரிந்தது.

2014 இல் மட்டக்களப்பில் நாவலர் விழாவும் யாழில் விபுலானந்தர் விழாவும் நடத்தியிருந்தார்கள். இதற்கு திரு.யோகீஸ்வரன் எம்.பி இன் வழி நடத்துதலே முக்கியமாக அமைந்தது.

இன்றைய காலகட்டத்தில் இந்து மாமன்றம் இளைஞர்களுக்காக சிவதொண்டர் அணியை உருவாக்கி மன்றங்களிலும், கல்லூரிகளிலும் அவர்காலை இயங்க வைத்தது.

சைவ வித்தகர் என்ற பயிற்சி நெறியை

இலவசமாக நல்லூரில் வழங்கி வருகிறார்கள். எம்மிடையே ஆறுமுக நாவலர், தங்கம்மா அப்பச்க்குட்டி வழியில் ஆறு திருமுகன் போல

பல ஆறுதிருமுருகன் ஐயா போல் பலர் தேவை என்ற ஆதங்கத்தையும் பகிர்ந்தார்.

கீரிமலை கேணிக்கருக்கில் 16 அறைகள் கொண்ட மடத்தை ஆறு.திருமுருகன் அவர்கள் அமைத்ததை நினைவு கூர்ந்து மெச்சினார்.

இடம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் 38 நலன்புரி நிலையங்கள் குறிப்பாக மாதகலில் இருக்கிறார்கள். இவர்களுக்கான உணவு வசதியை ஏற்படுத்தியதோடு

World Food Programme இற்கு விண்ணபித்து உதவி கோரியிருக்கிறார்கள். திரு விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு முதல்வராக வருவதற்கு எங்கள் மன்றத்தின் பங்களிப்பு இருந்தது என்று குறிப்பிட்டார்

இன்று எமக்கான பலமான அரசியல் சக்தி இல்லை. எல்லாத் தமிழர் ஒருமையோடு இயங்கவேண்டும்.

எங்கள் மக்களை கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தைக் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வன்னி மாணவர்கள் உடு துணியில் இருந்து கஷ்டப்பட்ட போது பல்கலைக்கழகம் 2000 ரூபாவே வழங்க முடியும் என்ற போது திரு ஆறு திருமுருகன் செயற்பாட்டில் லண்டன் ஶ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தின் மனித நேயப் பணியாக

270 மாணவருக்கு ஒவ்வொருக்கும் 10000 ரூபா கிடைக்க வழி செய்யப்பட்டது. 60 மடிக்கணனிகள் லண்டனில் இருந்து அன்பர் ஒருவரால் அன்பளிக்கப்பட்டது.

போரின் பின் இளம் மாணவர்கள் இராணுவத்தால்

கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட போது அந்த 275 மாணவர்களையும் கொழும்பு அழைத்து வந்து “இதை முகாம் என்று சொல்லாதீர் விடுதி என்று சொல்லுங்கள்” என்று சொல்லி அவர்களுக்குக் கல்வி வசதி ஏற்படுத்தினார்கள்.

மண் சரிவால் மலையகம் எதிர்கொண்ட இழப்புகளில் இருந்து காக்க உதவியிருக்கிறார்கள்.

அகில இலங்கை இந்துமாமன்ற வைர விழா 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

http://www.hinducongress.lk/tamil/ இல் இம்மன்றத்தின் செயற்பாடுகள் உள்ளன.

இந்து மக்களுக்கு கையேடு கிரியைகளுக்கான விளக்கம் மற்றும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிட்டார்களாம்.

இந்து கலாசாரத்துறை அமைச்சு என்று தனியான அமைச்சு இப்போது இல்லை பெளத்த மதம் போல ஏனய சமயங்களான எங்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை என்றார்.

திருக்கேதீஸ்வரம் மாமல்லபுரச் சிற்பிகளின் உதவியோடு 360 மில்லியன் செலவில் இந்திய அரசாங்கம் உதவியோடு 100 கொள் கலங்கள் தருவித்துத் திருப்பணி நடக்கிறது.

இலங்கையின் இந்துத் தலங்கள் வரைபடம் குறித்த வரைபடம் உருவாக்கப்படும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர் எம் தாயக உறவுகளின்

கல்வி வளர்ச்சியால் உதவ வேண்டும்,

வட மாகாணத்தில் தொழில் நுட்பக் கல்லூரி வர வேண்டும், வெளி நாட்டு வர்த்தக பொருளாதார முயற்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தையும் சொல்லி வைத்தார்.

பேட்டியைக் கேட்க

கானா பிரபா

19.02.18

???இங்கேயும் ஒரு காதல் கதை (சிறுகதை) ❤️❤️❤️

“என்ன சுகந்தி பேசாமல் இருக்கிறீர்?”

“இல்லை அத்தான் உங்களைச் சந்திச்சு எவ்வளவு காலம் இருக்கும்… எதையுமே கதைக்கப் பிடிக்கேல்லை உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறதே போதும் எனக்கு அது போதும்”

“நீர் அத்தான் எண்டு கூப்பிடேக்கை சிரிப்பாக இருக்கும் ஆனால் என்னவள் என்ற உரிமையை எனக்கு இன்னும் அழுத்தமாக உள்ளுக்குள்ள சொல்லிக் கொள்ளும் அது”

“ஊர் உலகத்துத் தான் நீங்கள் கண்ணன், ஆனால் உங்களை நான் காதலிக்கத் தொடங்கின நாளில் இருந்து அத்தான் தான், வெளியில் உங்களை நான் பேர் சொல்லி அழைக்கும் போது மனசுக்குள்ள அத்தான் என்று சொல்லித் தான் முடிப்பன்”

“உமக்கு ஞாபகம் இருக்குதா பள்ளிக்கூடம் முடிஞ்ச கையோட அதே யூனிபோர்மோட இப்பிடித் தானே உங்கட வீட்டு நாவல் மரத்தில நான் ஒரு பக்கம் நீர் ஒரு பக்கம் இருந்து கொண்டு நாவல் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு கதை பேசினதை?”

“எப்படியத்தான் அதையெல்லாம் மறக்கேலும் அப்பாவின்ர ஷேவிங் ப்ளேட் எடுத்து மரத்தில ‘சுகந்தி’ என்று நீங்கள் எழுத நான் பதிலுக்கு ‘கண்ணன்’ என்று எழுத, யார் வடிவாக எழுதினது என்றெல்லாம் எங்களுக்குள் போட்டி வைத்தோமே ஹாஹா”

“தேவராசா மாமா, அதான் உங்கட அப்பா வந்து என்ன திருக்கேதீஸ்வரப் பக்கம் இருக்கிற குரங்குகள் மாதிரி மரத்தில குந்திக் கொண்டிருக்கிறியள் இறங்குங்கோ கெதியா எண்டு சொல்லும் வரைக்கும் அதில தானே இருப்பம் என்ன, ஹும் அந்த நாவல் மரமும் பட்டுப் போயிருக்கும் என்ன…”

“எனக்கு அதையெல்லாம் நினைச்சால் அழுகை அழுகையா வரும் நான் சாமத்தியப்பட்ட கையோட உங்கட அம்மா தானே தடுத்தவ இனிமேல் இரண்டு பேரும் இப்பிடித் தனியா எல்லாம் மரம் வழிய ஏறக் கூடக் கூடாதெண்டு அப்ப தானே ஒரு நாள் நீங்கள் வந்து என்னைக் காதலிக்கிறதாச் சொன்னீங்கள்?”

“ஓம் சுகந்தி பக்கத்துப் பக்கத்து வீடென்றாலும் உம்மோட நான் பழகினதுக்கு வேறை அர்த்தமெல்லாம்

என்னால கற்பிக்க முடியேல்லை ஆனால் நீர் பெரிய பிள்ளை ஆனதோட வீட்டுக்காறர் மறிச்ச பிறகு தான் என் வாழ்நாளில் உம்மை விட்டு வாழேலாது என்று உணர்ந்தது, சொல்லப் போனால் பள்ளிக்கூடக் காதல் படலை வரைக்கும் என்பினம் ஆனால் என்ர மனசுக்கு அப்பவே தெரியும் வாழ்ந்தால் உம்மோட தான் எண்டு, அந்தக் கடிதத்தை என்ன செய்தனீர் பிறகு?”

“என் பிரியமுள்ள சுகந்திக்கு!

நான் உம்மை விரும்புகிறேன்

உமக்கும் என்னிலை விருப்பமிருக்கும் தானே?

அன்புடன்

கண்ணன்

இப்பிடித் தானே ஒற்றை றூல் பேப்பரில் எழுதி மடிச்சுப் போட்டு என்ர சாமத்தியச் சடங்குக் கொண்டாட்ட மேடையில் தந்தனீங்கள் நானும் ஏதோ என்வலப்பில காசு அன்பளிப்புத் தாறார் என்று நினைச்சன் ஹாஹா”

“உண்மையா அப்பிடியே நினைச்சனீர்?”

“இல்லையத்தான் நான் சும்மா சொன்னனான், எனக்கும் உங்களில அப்ப விருப்பமிருந்தது அதனால் தான் அந்த என்வலப்பைக் கையுக்குள்ளையே வச்சிருந்து இரவு வாசிச்சனான் இடம் பெயர்ந்து போகேக்கையும் அது என்னோட தான் இருந்தது இப்பவும் எங்காவது இருக்கும், நான் அதைத் திரும்பத் திரும்ப வாசிச்சுப் பாடமாக்கிப் போட்டன்.

சொல்லப் போனால் நீங்களோ நானோ எங்களுடைய உடல் இச்சைகளுக்காக விரும்பவில்லை, இல்லாவிட்டால் எத்தனை சந்தர்ப்பமெல்லாம் வாய்த்தது அப்போது,

நான் ஓ எல் எக்சாம் எடுக்கிற நேரமெல்லாம் உங்களைத் துணையாக விட்டுட்டு எங்கட

வீட்டுக்காரர் திருவிழா நேரமெல்லாம் கோயில் குளமெண்டு வெளிக்கிட்டுடுவினம் நீங்கள் வெளி விறாந்தையில் குந்தியிருந்து வோக்மனைப் போட்டுட்டு இளையராஜாவோட ஐக்கியமாகி விடுவியள் என்ன”

“சிரிக்காதையும் சுகந்தி, உமக்கு நான் வோக்மன் கேக்கிறது தான் அப்போது தெரிஞ்சிருக்கும் ஆனால் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்று ஜேசுதாஸ் பாட்டேக்கை உம்மட முகத்தைக் கற்பனை பண்ணிக் கொண்டு தான் இருப்பன். அதுவும் நீர் சுமங்கலி பூசைக்குக் கண்ணுக்கு ஐப்றோ போட்டு, தொங்கட்டாம் தோடு மாத்தி, நீட்டுத் தலைமயிரைப் பின்னிக் கட்டி கனகாம்பரப் பூமாலையைச் செருகிக் கொண்டு, ஹாவ் சாறியோட

வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு போகேக்கை எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்னவள் எவ்வளவு இலட்சணமானவள் என்று.

‘அம்மன் கோயில் தேரழகு ஆயிரத்தில் ஓரழகு நாணமுள்ள பெண்ணழகு நான் விரும்பும் பெண்ணழகு’”

“அது சரி பாட ஆரம்பிச்சிட்டார் எங்கட பாட்டுக்காரன் போங்கோ எனக்கு வெக்கமா இருக்கு”

“இல்லை சுகந்தி உண்மையாத் தான் சொல்லுறன் பிள்ளையார் கதை முடிஞ்ச அன்று சூரன் போருக்கு மாவிளக்குப் போட்டுட்டு இரவு வீட்ட வந்து தரேக்கை அப்ப தானே ஐ லவ் யூ சொன்னனீர்”

மூன்று வருஷமாக நீர் எனக்குப் பதிலொண்டும் சொல்லாமல் இருக்கேக்கை எவ்வளவு தவிப்பா இருந்தது எனக்கு அந்த மாவிளக்கின் வாசம் இன்னும் என் நாசியில் இருக்குது”

“அத்தான் அப்ப எனக்கு எப்பிடிச் சொல்றதெண்டு தெரியேல்லை.

ஆனால் சண்டை மூண்ட பிறகு எல்லாரும் வெளிநாடு கிளிநாடு என்று ஓடேக்கை உங்கட அப்பா சபாரத்தினம் மாமாவும் ஒருக்கால் சொன்னவர் தானே உவனை எப்பிடியாவது கனடா கினடா எங்காவது அனுப்பிப் போடுவம் எண்டு அதுக்குப் பிறகு தான் எனக்குப் பயம் தொட்டுட்டுது”

“நீர் ஓம் சொல்லாட்டியும் நான் விட்டிருக்க மாட்டன் நான்”

“போங்கோ பெரிய பயில்வான் தான் ஹிஹி

உங்கட வீட்டு மாமரத்தில எங்கட வீட்டுப் பக்கம் பார்க்கிற மாதிரி ஸ்பீக்கரைப் போட்டு சின்னத்தம்பி படப் பாட்டெல்லாம் போட்ட ஆளெல்லோ நீங்கள் விட்டா ஒரு றெக்கோர்டிங் பார் தொடங்கியிருப்பியள், அதுவும் அந்த ‘உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது’ பாட்டை கசற் தேயத் தேயப் போட்டிருப்பீங்கள் அப்ப”

“பக்கத்து வீட்டுக்காரரா இருந்தும் காயிதம் கொடுத்துக் காதலிச்சது நாங்களாத் தான் இருப்பம் என்ன சுகந்தி”

“ஓம் கோயிலடியில் வச்சு என்ர லுமாலாச் சைக்கிள் பின் கரியர்ல நீங்கள் காயிதத்தை வச்சதைக் கண்டி வேலாயுதம் மாமாவின்ர மூத்த பெடியன் சுந்தர் பெரிய பிரச்சனையைக் கிளப்பினவன்,

அவன் எத்தனை பொம்பிளைப் பிள்ளையளைக் காதலிச்சு ஏமாத்தினவன், சொந்த மாமா மகன் எண்ட உரிமை மட்டும் இருந்தால் போதுமே? அவன் என்னை ஏற இறங்கப் பாக்கும் விதமே அருவெருப்பா இருக்கும்”

“கோயிலடிப் பெடியளோட நான் இருக்கேக்கை வந்து உம்மோட ஒரு கதை இருக்கு வாரும் எண்டு அவன் கதைச்ச விதம் பெடியளுக்குப் பிடிக்கேல்லை அவனைச் சைக்கிளால தள்ளி விழுத்திப் போட்டுக் கலைச்சுப் போட்டான்கள் நான் பின்னாலை போய் மன்னிப்பெல்லாம் கேட்டுப் பார்த்தன் ‘நீர் எங்கட வீட்டுப் பெண்ணில கண் வச்சிருக்கிறீரோ அதையும் ஒருக்கால் பார்ப்பம்’ எண்டுட்டுப் போய் விட்டான்”

“தனியா இருக்கேக்கை என்னட்டையும் வந்து சொன்னவன்

‘கண்ணனை நம்பாதை அவனுக்கு வேம்படிப் பிள்ளையோட தொடர்பிருக்கு’ என்று, எனக்குத் தெரியும் தானே உங்களைப் பற்றிக் கண்ணனத்தான்”

.”சுகந்தி….சுகந்தி? இப்ப ஏன் அழுகை?”

“அத்தான்…: அந்த நாளை இன்னும் என்னால மறக்கேலாது. உங்களுக்குப் பிடிச்ச பாசிப்பயறு அவிச்சுத் தேங்காய்த் துவையல், சீனி போட்டுச் செய்ததை நான் எடுத்துக் கொண்டு வந்தனானன் உங்கட வீட்டுக்கு”

“நீர் எங்கட அம்மாட்டைக் குடுக்க, அம்மாவும் அதைப் போட்டுத் தந்தவ. ஒரு விள்ளலை நான் வாயில் போடேக்கை தானே ஆமிக்காறர் வீட்டுக்குள்ளை வந்தவங்கள்…”

“சாரத்தோட நின்ற உங்களை விசாரிக்க வேணும் எண்டு கொண்டு போனவங்கள் உங்கட அம்மா அவங்கட காலில விழுந்து கொஞ்சிக் கேட்டவ ஒருத்தன் பூட்ஸ் காலால் உதைஞ்சவன் அதைக் கண்ட உடனை நான் பின் கதவால் ஓடி எங்கட அப்பாவைக் கூட்டி வருவம்என்று ஓடினேன் ஆனால் அதுக்குள்ள அவங்கள் உங்களைக் கொண்டு போயிட்டாங்கள்

அன்றைக்கு நான் கதவைப் பூட்டீட்டு அழுத அழுகை இருக்கே இன்றைக்கு நான் இப்ப அழுவது போலத்தான் அத்தான்”

“ஹும்”

“உங்கட அம்மா இன்னமும் நீங்கள் வருவியள் என்று போகாத கோயில் இல்லை போடாத மனு இல்லை. ஊர்ச் சாத்திரிமாரில் இருந்து ஒருத்தர் விடேல்லை எல்லாரும் நீங்கள் ஏதோ மறைவான இடத்தில இருக்கிறதாச் சொல்லிக் கொண்டிருக்கினம் அந்த நம்பிக்கையில 22 வருஷத்தைக் கடத்தி விட்டுட்டா, தன்ர ஒரே மகனை ஆமி கொண்டு போயிட்டுது என்று ஏங்கி ஏங்கி வருத்தம் வந்தே மாமா செத்துப் போனார்”

“ம்..ஹ்ம்”

“உங்களை நான் காதலிக்கிற விஷயம் எங்கட அம்மாவுக்குச் சாடை மாடையா முன்னமே தெரிஞ்சிருக்க வேணும் ஆனால் காட்டிக் கொள்ளாமல் இருந்தவ, நீங்கள் மூண்டு வருஷம் கழிச்சும் வராமல் போன பிறகு தான் கல்யாணப் பேச்சைத் தொடங்கினவ

‘பிள்ளை! கண்ணன் இனியும் வருவான் எண்டு நம்புறியோ? எனக்கந்த நம்பிக்கை இல்லை பேசமல் வேலாயுதம் மாமன்ர மகன் சுந்தரைக் கல்யாணம் கட்டன் அவனும் இப்ப கனடாவில செற்றில் ஆயிட்டான்’ என்று சொல்லிப் பார்த்தவ”

“நீர் அவனைக் கட்டியிருக்கலாம் தானே”

“அத்தான் இது தானா என்னிலை நீங்கள் வச்ச நம்பிக்கை? ஆனால் நான் அப்பிடில்லை.

இயக்கத்தில சேர்ந்து போராளியாகினாப் பிறகும் உங்கட நினைவில தான் இருந்தனான்.

என்ர காதல் கைகூடவில்லை என்று நான் இயக்கத்துக்குப் போகேல்லை அது நான் என்ர நாட்டுக்குச் செய்ய வேண்டியிருந்தது.

என்றைக்காவது உங்களை நான் சந்திப்பன் அப்ப இரண்டு பேரும் கலியாணம் கட்டுவம் என்று….அந்த நம்பிக்கை இரண்டாயிரத்து ஒன்பது இறுதிக் கட்டப் போர் வரை இருந்தது…..

ஏன் நான் சாகும் வரை இருந்தது கண்ணத்தான்”

“சுகந்தி….சுகந்தி…நினைச்சுப் பாரும்,

எனக்கும் உமக்கும் கல்யாணம் நடந்திருந்தால் ஒரு சின்னக் கண்ணனும், ஒரு சின்ன சுகந்தியும் எங்கட வாரிசுகளாக நாவல் மரமேறிப் பேசி விளையாடிக் கொண்டிருப்பினம் என்ன….?

“அத்தான் அழாதேங்கோ கண்ணத்தான் அழாதேங்கோ எனக்கும் அழுகை வருகுது”

அந்த மயானத்தில் எழுந்த அருவமான ஓலத்தை மீறி யாழ்ப்பாணத்துச் சோளகக் காற்றின் வேகம் எழுந்து மரங்களை அசைத்து அதே போன்றொரு ஓலத்தை இன்னும் வலுவாக மேலெழுப்பியது. காற்றழுத்தத்தால் மரக் கொப்புகள் எழுப்பிய அசைவில் சுடலைக் குருவிகள் எழுந்து பறந்தோடுகின்றன. அந்த மயானத்தில் எழும் அழுகுரல்களை இனங்கண்டு பேச யாருமில்லை.

எங்கோ திரிந்து பறந்து வந்த சுடர் ஒளி பத்திரிகையின் கிழிந்த துண்டொன்றில்

“செம்மணிப் படுகொலைகள் 22 வருட நினைவு கொண்டாடப்பட்டது

இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்கவேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்புக் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள், யுவதிகள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.

செம்மணியில் 300இலிருந்து 400 வரை இளைஞர்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள்.

‘என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்டமுடியும்’” என்று 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருஷாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.”

அந்தப் பத்திரிகைத் துண்டு மயான வெளியைக் கடந்து காற்றில் திசை வழியே அலைக்கழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தன் மகன் கண்ணனை தேடிக் கொண்டிருக்கும் தாயைத் தேடுகிறதோ அது…

கானா பிரபா

12.02.18

வழித்துணை (சிறுகதை)

சிட்னியின் பரபரப்பான காலை வேளை என்பதைக் காட்டுகிறது விசுக்கி விசுக்கிப் போகும் ஒவ்வொருவரினதும் வேக நடை. வேலைக்குப் போகும் கூட்டத்தோடு, டிசம்பர் தொடங்கி ஜனவரி ஈறாக விடுமுறைக் கழிப்பில் இருந்து மீண்டு இன்று தொடங்கும் பள்ளிக்கூட மாணவரும் சேர்ந்து கொள்ள, ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மஞ்சள் கோட்டுக்கு இந்தப் பக்கமாக நில் என்ற அறிவிப்பு எழுத்துகளையும் காலால் மிதித்துக் கொண்டு சனம் முன்னே கடந்து போகிறது.

காலை 7.17 க்கு North Sydney செல்லும் ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கணக்காக அதே ரயிலைப் பிடிப்பதால் அதன் ஐந்தாம் பெட்டியின் கதவு எங்கே திறக்கும் என்ற கணிப்புத் தப்பாமல் காத்து நிற்பேன். என்னைப் போலவே ஒவ்வொரு பெட்டியிலும் ஏறத் தனித் தனிக் கூட்டம் நிற்கும். இதோ அவன் வந்து விட்டான், கூடவே தாயும் தாயின் கையில் ஒரு கைக்குழந்தையும். அந்த சீனப் பையனும் North Sydney இல் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்.

பள்ளிச் சீருடையும் இரண்டு கைகளிலும் பிணைத்த புத்தகப் பையும், தொப்பியும் போட்டுக் கொண்டு சிலுப்பிக் கொண்டே அதே இடத்துக்கு வருவான் தன் தாயுடன்.

ஒவ்வொரு நாளும் மகனைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்புவாள் போல.

கைகளை அகல விரித்து அவன் ஆயிரம் கதைகள் பேச, தாய்க்காரியோ கதை கேட்டுக் கொண்டே அவனின் தலையை வருடிக் கொண்டே இருப்பாள். சில நேரத்தில் தாயை இறுக அணைத்துத் தன் பாசத்தை வெளிப்படுத்துவான். அவளும் அவன் தலையை மோந்து பார்க்குமாற் போல முத்தமிட்டுத் தடவுவாள்.

சில சமயம் பொட்டலத்தைப் பிரித்து ஏதாவதொன்றைத் தின்னக் கொடுப்பாள். அவனும் வாய்க்குள் அள்ளிப் போட்டு அவதி அவதியாகச் சாப்பிடுவான்.

ரயிலில் இருந்து எதிரே இருக்கும் இவர்களின் பாச விளையாட்டைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு

புத்தகம் வாசித்துக் கொண்டு வருவேன்.

இவனின் வயதில் தான் நானும் தான் எத்தனை திருவிளையாடல்களைச் செய்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு கள்ளத் தீனி வேணும் எனக்கு. புளூட்டோ, குளுக்கோ ரச என்று ஆச்சி கடையில் இருக்கிறதில் தொடங்கி, வீட்டில் அம்மாவை அரியண்டப்படுத்தி ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாகச் செய்து தர வேண்டும் என்று போராட்டம் தான்.

“உனக்கு வாய் முழுக்கச் சூத்தைப் பல்லு வரப் போகுது கக்காக்குள்ள புழுவெல்லாம் வரும் பார்” என்று அதட்டியெல்லாம் பார்ப்பார் அம்மா.

சில சமயம் என்னுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். வீட்டின் பின் பக்கம் இருக்கும் ரீவி அன்ரனா பைப்பில் வழுக்கி வழுக்கி ஏறிப் போய் வீட்டுக் கூரைக்குப் பக்கமாக இருக்கும் சீமெந்து அடுக்கில் ஒளித்து இருப்பேன்.

“தம்பீ தம்பீ இஞ்சை வாடா உளுத்தங்களி கிண்டி வச்சிருக்கிறன்” என்று அம்மா புரட்டாசிச் சனிக் காகத்தைக் கூப்பிடுவது போல என்னைத் தேடித் தேடிக் கூப்பிடுவார். அவரின் கண் படாமல் மெல்ல அந்த அன்ரனா பைப்பால் இறங்கி வருவேன். அம்மாவைக் கொஞ்ச நேரமாவது வெருட்டியாச்சு என்ற குரூர மகிழ்ச்சி உள்ளுக்குள் இருக்கும்.

அவனுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்திருக்க வேண்டும். ஆனாலும் வழக்கம் போலத் தாயின் ஒரு கையைப் பற்றிக் கொண்டே இருந்தான். என்னடா இது 7.17 க்கு வர வேண்டிய ரயிலைக் காணவில்லையே என்ற யோசனை எழ, ரயில் நிலைய அறிவிப்பும் அதை உறுதிப்படுத்தி இன்று பத்து நிமிடம் தாமதமாகத் தான் ரயில் வரும் என்று உரக்கக் கத்தியது. அடுத்த பயணத்துக்குச் சேரும் பயணிகளும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறார்கள்.

தன் மகனுக்குத் திரும்பத் திரும்ப ஏதோ உபதேசித்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய் அவனும் தலையாட்டிக் கொண்டே இருக்கிறான். குருவிக் குஞ்சொன்று தன்

முள் மயிர்த் தலையோடு எட்டியெட்டிப் பார்ப்பதைப் போல துணியில் போர்த்தித் தன் தாயின் கதகதப்போடு இருந்த அந்தக் குழந்தையும் அடிக்கடி எழும்பி நோட்டம் விட்டு விட்டுக் கையால் முகத்தைப் பிசைந்து விட்டுத் தூங்குகிறது.

கடவுளே சீற் கிடைக்குமோ என்று உள்ளுக்குள் பதை பதைப்பு. இதோ ஆடியாடி வருகிறது பத்து நிமிடம் தாமதித்த அந்த ரயில். இன்னும் விரைவாக அவள் தன் மகனுக்குச் சொல்லிச் சொல்லி, முதுகை அழுத்தி விட்டு வழியனுப்பி விடுகிறாள். குதித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போய் சீற் பிடிக்கிறான்.

ஓ இன்று தன் மகனுக்குத் துணையாக வர முடியாத காரணத்தால் தான் அவனுக்கு உபதேசங்கள் நடத்தியிருக்கிறாள் போல. பிரச்சனையில்லை இது நேராக North Sydney போகும் ரயில். பராக்குப் பாராமல் கவனமாக இருந்தால் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடுவான். எனக்கும் ஒரு தனி இருக்கை கிடைத்தது. தாயில்லாமல் தனியாக வருவதாலோ என்னமோ அவனின் முகம் வழக்கமாக இருக்கும் பொலிவிழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் கடக்கும் போது எட்டியெட்டிப் பார்த்தான்.

அப்போது தான் அந்த அறிவிப்பு வருகிறது ரயிலின் நடத்துநர் ஒலிபெருக்கியிலிருந்து.

“இன்றைய ரயில் தாமதமாகக் கிளம்பியதால் Redfern ரயில் நிலையத்தில் இடை நிறுத்தப்படுகிறது, வேறு வழித்தடம் செல்வோர் இங்கு இடம் மாறிச் செல்லவும்”.

கேட்டதுமே எரிச்சலோடு முன் இருக்கைத் தலைகள் ஆட்டி விட்டுப் பெருமூச்சை விடத் தொடங்கி விட்டன. இன்னும் பதினைந்து நிமிடத்தில் Redfern வந்து விடும். அது சிட்னி நகர மைய ரயில் நிலையத்துக்கு அடுத்த நிலையில் இருப்பது. பல்வேறு வழித்தடங்களுக்குப் போகவிருப்போர் இங்கு தான் இறங்கி வேறொரு ரயிலைப் பிடிக்க வேண்டும். இருந்தாலும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எந்தத் திக்கில் போய் எந்த ரயிலைப் பிடிப்பது என்று கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும் இந்த இடம் அதிகம் பழக்கப்படாதவருக்கு.

அந்தப் பையன் முகத்தைப் பார்க்கிறேன். அடுத்து என்ன செய்வது என்ற பதற்றம் வந்து விட்டது போல, பேயறைந்தது போல இருக்கிறான்.

முதன் முதலாக ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இருந்து கொக்குவிலுக்குப் போகிறேன். அதுவரை அயலட்டை ஆட்களோடு கூட்டமாக ஊர்ப் பள்ளிக்கூடம் போய் வந்த எனக்கு உள்ளூர ஒரு துணிச்சலும் ஏறி விட்டது. கொக்குவில் என்றால் ரவுண் பக்கம் தானே இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் அப்பா சைக்கிள் வாங்கித் தருவார். ரவுணுக்குத் தனியாகக் கூடப் போய் வருவேனே, பூபாலசிங்கத்தில ராணி காமிக்ஸ் எல்லாம் அள்ளலாம். தீசனிடம் இரவல் கேட்டுக் கெஞ்சத் தேவை இல்லை என்ற பேராசை தான் அப்போது முளைத்தது.

கொக்குவில் பள்ளிக்கூடத்துக்கு வழித்துணையாகப் பக்கத்து வீட்டு மோகன் அண்ணர் வாய்த்தார். அவரும் இதே பள்ளிக்கூடத்தில் ஓ எல் படிக்கிறார்.

அவரின் சைக்கிள் பாரில் எனக்கு இடம் கிடைத்தது. போக வர அவர் தான் உதவி. சுழட்டியடிக்கும் எதிர்க்காற்றில் வலித்து வலித்து ஓடுவார். என்னோடை கதை பேச்சுவார்த்தை இருக்காது. இளையராஜாவின் பாட்டு ஏதேனும் முணு முணுப்பார். நந்தாவிலடியில் இன்னும் காற்றுப் பலமாக வீசும் போது சீற்றில் இருந்து எழும்பித் தொங்கித் தொங்கிச் சைக்கிளை வலிப்பார்.

கே.கே.எஸ் றோட்டால் நேராகப் போய் வரலாம் என்பதால் எனக்கும் இடம் பிடிபட்டுட்டுது என்று நினைத்தேன் அந்த நாள் வரும் வரைக்கும்.

“தம்பி இண்டைக்கு பிறிபெக்ட் ஆட்கள் கூட்டம் இருக்கு அது முடிய எப்பிடியும் ஆறு மணி ஆகி விடும். நீர் நேரா நடந்து போவீர் தானே” என்று மோகன் அண்ணா சொல்ல உள்ளுக்குள் ஒரு வீர தீரக் காரியத்தைத் தனியாகச் செய்து முடிக்கப் போகும் புளுகத்தோடு “ஓமோம்” என்று தலையாட்டி விட்டுப் பள்ளிப் பையை முதுகில் இருத்தி விட்டு நடக்கத் தொடங்கினேன்.

மோகன் அண்ணாவுக்காகக் காத்திருந்த அந்தப் பத்து நிமிட நேரத்துக்குள்ளேயே பள்ளிக்கூடம் காலியாகி விட்டது போல. எப்படா மணி அடிக்கும் வீட்டுக்கு

ஓடுவோம் என்று இருந்திருக்கிறார்கள் போல.

எங்கிருந்தோ இருந்து வந்த பொம்மர் விமானம் ஒன்று வளையம் அடித்துக் காட்டியது. றோட்டில சனம் சாதியில்லை. போட்டது போட்டபடி

விட்டுட்டுச் சனம் ஓடி விட்டுது. நடக்கிறேனா இல்லை நிற்கிறேனா என்ற நிலை தெரியாமல் தடுமாறுகிறேன்.

திரும்பிப் பள்ளிக்கூடப் பக்கம் ஓடுவோமா என்றால் குளப்பிட்டிச் சந்தி கடந்தாச்சு. குச்சொழுங்கையும் இல்லாத நேர் கோடு றோட்டில் நான். திடீரென்று ஒரு எருமைக் கடா புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருமாற் போல மூசிக் கொண்டு வந்த பிளேன் குத்திப் போட்டுப் போகுது எதிரே ஒரு திசையில். கொஞ்சம் தொலைவென்றாலும் பூமி அதிருது.

அந்த அதிர்ச்சியில் நிலத்தில் வழுக்கி விழுந்தவன் தான். காலெல்லாம் சிராய்ப்பு, போட்ட வெள்ளைச் சட்டையெல்லாம் புழுதி அப்பிக் கிடக்க, பக்கமாக இருக்கும் ஒரு வீட்டுக்குள் ஓடுகிறேன்.

“இஞ்சை வா தம்பி பங்கருக்குள்ளை”

வீட்டு முகப்பில் இருந்த பதுங்கு குழிக்குள் இருந்து ஒரு உருவம் கூப்பிடுகிறது. நடுங்கிக் கொண்டே பயத்தில்

அழுகையும் வர எத்தனிக்காத ஒரு வித விறைத்த உணர்ச்சியோடு பதுங்கு குழிக்குள் அடைக்கலமானேன்.

“சம்பியன் லேன் பக்கமாகத் தான் குண்டைப் பொறிச்சுப் போட்டுப் போறாங்கள்” அந்த வீட்டுக்காரர்கள் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். இருட்டுப் பட்டு விட்டது. வீட்டுக்காரர்களும் தேடப் போகிறார்கள் என்ற கவலையும் சேரப் பலமாக அழுகிறேன்.

“என்ரை குஞ்சு அழாதை ராசா” என்று சொல்லித் தன் சேலைத்தலைப்பால் என் முகத்தைத் துடைத்து விடுகிறார் அந்த வீட்டின் மூத்த அம்மா.

விளையாட்டுக் காட்டிப் பலி எடுத்த பிளேன் பலாலிப்பக்கம் திரும்பிப் போகிறது.

“இஞ்சருங்கோ தம்பியின்ரை வீட்டை விசாரிச்சு ஒருக்கால் கொண்டு போய் விட்டுட்டு வாங்கோ”

அந்த வீட்டுக்காரரின் சைக்கிளில் ஏறிப் போகிறேன். வீட்டுப் படலைக்கு வெளியில் அயலட்டைச் சனம் சூழ அம்மா அழுது கொண்டிருக்கிறார் அதுவரை

என்னைக் காணாமல்.

Redfern ஸ்ரேசன் நெருங்குது, பயணிகளை இறங்கச் சொல்லி மீண்டும் ரயிலுக்குள் அறிவிப்பு வருகிறது.

அடிக்கடி காணும் முகம் என்ற சினேக பாவத்தோடு என்னை ஒருக்கால் பார்த்து விட்டு அந்தப் பையன் மெல்ல எழுந்து போய்க் கதவடியில் நிற்கிறான். கூட்டம் அம்மித் தள்ளுகிறது. முதலாவது ப்ளாட்போர்மிலிருந்து வெளியேற ஒரேயொரு படிக்கட்டுப் பகுதி தான் இருக்குது. இந்த நெரிசலுக்குள்ளும் இடித்து இடித்து முன்னேறுவோர் ஒரு பக்கம் இருக்க, அவதி அவதியாக வட்சாப் மெசேஜிலும் பேஸ்புக் ஸ்டேட்டசிலும் பிசியாகிக் கொண்டே தாமதித்து நடப்பவர்களைப் பார்க்க எரிச்சல் வந்தது.

எட்டரைக்குள் வேலைத்தளத்தில் நிற்க வேண்டும். முக்கியான ப்ரொஜெக்ட் பணிக்காக மெல்பர்னில் இருந்து பெரிய தலைகள் எல்லாம் வருகிறார்கள். என் மேலதிகாரியைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. காலை ஏழு மணிக்கு வந்தால் மாலை ஏழு தாண்டியும் அழுகிடையாகக் கொம்பியூட்டரைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு வேலை பார்க்கிற மனுசன்.

முதலாவது ப்ளாட்போர்மில் திரண்ட கூட்டத்தைத் தாண்டி மெல்ல மெல்ல நகருகிறேன். இந்த நெருக்கடியிலும் அந்தப் பையனைத் தேடுகிறேன். என் முன்னால் போனவனைக் காணவில்லை. பின்னுக்குத் திரும்பிப் பார்க்கிறேன். யாரிடமோ ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறான். பாவம் North Sydney க்குப் போகும் ரயில் எந்த ப்ளாட்போர்மில் இருக்கும் என்று விசாரிக்கிறான் போல. திரும்பிப் போய் அவனையும் கூட்டிக் கொண்டு போனால் என்ன என்று மனம் சொல்லியது. ஆனால் இருண்ட மனமோ இல்லையில்லை இனித் திரும்பிப் போய் அவனையும் கூட்டிக் கொண்டு வந்தால் இன்னும் நேரம் பிடித்து விடும். இந்தக் கூட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்று கால்களுக்குக் கட்டளை இட்டு முன்னிழுத்தது.

படிகளில் ஊர்ந்தூர்ந்து போய் மேல் தளத்தில் நின்று திரும்பவும் பார்க்கிறேன். இன்னமும் அந்தப் பையன் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறான்.

நானோ வேகமாக எதிர்த்திசை நோக்கி ஓடுகிறேன் நாலாவது ப்ளாட்போர்மில் வரவிருக்கும் North Sydney ரயிலைப் பிடிப்பதற்காக.

– கானா பிரபா –

06.02.18