யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் ? நூல் நயப்பு

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர் பேராசிரியர் தஞ்சயராசசிங்கம் ( வாழ்ந்த காலம் 1933 – 1977) அவர்களின் எட்டு மொழியியல் கட்டுரைகளின் தொகுப்பே இவ்வாறு நூலுருப் பெற்றிருக்கிறது.

பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து முதல் வகுப்பில் சித்தியடைந்ததோடு பேராசிரியர் தொ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கீழ் “இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பிரகடனங்கள்” என்ற M.Litt ஆய்வுப் பட்டமும் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

இந்த நூலின் பதிப்பாசிரியர் முருகேசு கெளரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமாணி (தமிழ்) உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைச் செய்தவர்.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் என்ற தலைப்போடு ஒவ்வொரு கட்டுரைகளும் அதன் இலக்கிய வழக்கு, முறைப் பெயர் வழக்கு, தொழில் பெயர் வழக்கு, ககரத்தின் மாற்றொலிகள், சொல்லும் பொருளும், போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள் என்று எட்டு அத்தியாயங்களாக விரித்து நிற்கின்றது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து பத்து நிமிடத்துக்குள் வாசிக்கக் கூடிய கச்சிதம் கொண்டவை என்பதோடு நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போன்று இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.

பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை மயங்கும் நேரத்தை

“பொழுது பட்ட நேரம்” என்று யாழ்ப்பாணத்தார் வழங்குவதை குறுந்தொகை வழி ஆதாரம் காட்டுகிறார். மேலும் “கிடக்கை” என்ற தொழிற்பெயர் (ஐங்குறு நூறு வழி ஆதாரம்) “ஒரே கிடையாய்க் கிடக்கிறான்” , “விடுதல்” (கார் விடுதல்) , இடங்காணுதல் (இடங்கண்ட இடத்தில் மடம் கட்டி), “வடிவு”!(அழகு), “மிடறு” (தொண்டை) உள்ளிட்ட புழங்கு தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பாங்கைக் காட்டுகிறார். “நான்று கொண்டிருத்தல்”’அல்லது “நாண்டு கொண்டிருத்தல்” என்பதன் மூலமான “ஞான்று கொண்டிருத்தல்” (விடாப்பிடியாக ஒரு செயலைச் செய்ய முனைதல்) என்ற சொல்லாடலின் விளக்கமும் பகிரப்படுகிறது.

இந்த முதல் கட்டுரையை வைத்துக் கொண்டு ஒரு பயிற்சி போல இன்னும் பல சொற்களின் சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் அவற்றின் பயன்பாடு பற்றிய தேடலைச் செய்ய மாணவர் முனையலாம்.

யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உறவு முறைகள் கொய்யா, கொம்மா, கொப்பர், கொத்தான், கொக்கா, கொம்மான், கோச்சி என்று முறையே அப்பா, அம்மா, அத்தான், அக்கா, அம்மான் (மாமா), ஆச்சி (தாய்) என்று வழங்கப்படுவதை கன்னியாகுமரித் தமிழர் பேச்சு வழக்கோடு ஒப்பிட்டு நகரும் “முறைப் பெயர் வழக்கு” சார்ந்த கட்டுரையில் பெயர்க் கிழவிகள் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சுத் தமிழ் இயல்புகளுக்கு ஏற்றவாறு ஒலி மாற்றமடைவதை உதாரணங்களோடு விளக்குகிறார்.

யாழ்ப்பாணத் தமிழில் ஒலி மாறுதலுக்க்குட்பட்ட சொற்களை விரிவாக விளக்கிய வகையில் இந்தக் கட்டுரையைத் தனியே முறைப் பெயர்கள் என்ற எல்லை கடந்து நோக்கலாம். உதாரணம் அகப்பை – ஏப்பை ஆனது.

வினைச் சொற்களை முன்னுறுத்தி குடுக்கல் (கொடுக்கல்), துடக்கம் (தொடக்கம்), தாட்டல் (தாழ்த்தல்) போன்ற பல்வேறு உதாரண விளக்கங்களோடு நகரும் மூன்றாம் கட்டுரையான “தொழிற் பெயர் வழக்கு” மேலும் “வெளிக்கிடல்” என்ற சொல்லாடலுக்கு (ஆடையுடுத்தி வெளியே செல்லல்) போன்ற பொதுவான செயற்பாட்டில் விளங்கும் சொற்களையும் ஆராய்கின்றது.

ஈண்டு ககரம் கெட்டு யகரம் உடம்படுமெய்யாக வந்த சொற்களை மூலாதாரமாக வைத்து ஏழையள் (ஏழைகள்), பிள்ளையள் (பிள்ளைகள்) ஆகிய நடைமுறை உதாரணங்களுடன் ககரத்தின் மாற்றொலிகள் பற்றிய கட்டுரை வரையப்பட்டிருக்கிறது.

என்ன கலாதியாய் வந்திருக்கிறாய் என்று யாழ்ப்பாணத்தார் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இங்கே கலாதி திரிபடைந்த சொல்லாக அதன் மூலச் சொல்லாக வடமொழியில் “கலகம்” என்பது சிறப்பு, கவர்ச்சி என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது எனவும் மேலும் இந்த “சொல்லும் பொருளும்” கட்டுரையில் திரிபடைந்து வழக்கில் உள்ள பரியாரி (பரிகாரி), பிராக்கு (பராக்கு) போன்ற உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது. கடதாசி என்ற போர்த்துக்கேயச் சொல், “கூப்பன்” கடை ஆகிய காரணப் பெயர்களின் பின்னணி குறித்தும் பகிர்கிறார்.

ஈழத்துத் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் போர்த்துக் கீசச் சொற்கள், ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழில் கலந்த பாங்கைத் திசைச் சொற்களாகப் படித்த அந்த அனுபவத்தை மீள நினைப்பூட்டுகின்றன ஆறாம் ஏழாம் கட்டுரைகள். ஒரு காலத்தில் வழக்கில் இருந்து இன்று வழக்கொழிந்த போர்த்துக்கீசச் சொல் “சிஞ்ஞோர்” (என்ன பிடிக்கிறாய் சிஞ்ஞோரே) போன்ற சொற்களோடு விஸ்கோத்து, பாண், சப்பாத்தி, லேஞ்சி, துவாய், யன்னல், வாணீஸ் போன்ற நிறைய வழக்கில் உள்ள சொற்களையும் இனங்காட்டுகிறார்.

அவ்விதமே ஒல்லாந்து மொழிச் சொற்களில் லாச்சி, வக்கு, போச்சி போன்ற பல சொற்களையும் திரட்டித் தருகிறார். இதில் சுவாரஸ்யமான விடயமாக “சக்கடத்தார்” என்ற சொல் “Secretaris என்ற ஒல்லாந்து மொழியில் இருந்து பிறந்ததைக் காட்டுகிறார். உங்களில் எத்தனை பேருக்கு இதைப் படிக்கும் போது சக்கடத்தார் நகைச்சுவை நடிப்பு நினைவுக்கு வருகிறது?

மேலும் வேலைத் தளங்களில் பயன்படுத்தும் இன்ன பிற சொற்களின் மூலாதாரம் ஒல்லாந்து மொழியென்று ஆதாரங்களோடு விளக்குகிறார்.

இந்திய நண்பர்களோடு உறவாடும் போது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பற்றிய பேச்சு அடிக்கடி எழுவதுண்டு. சிலரின் கதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சார்ந்த உரையாடல்களைச் சரிபார்த்துத் திருத்தவும் என்னை அணுகியிருக்கிறார்கள். அந்த வகையில் “யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்” என்ற கையடக்கமான இந்த நூல் மிகச் சிறந்த அறிமுகமாக இருப்பதோடு எளிய தமிழில் அமைந்திருப்பதால் நெருடலின்றி வாசிக்கத் துணை புரிந்திருக்கிறது.

கானா பிரபா

28.03.2018

மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் ? நூல் நயப்பு

திருமதி சுகந்தி சுப்ரமணியம் அவர்களால் தமிழ்த்துறையின் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்கான ஆய்வுத் தேடலாக எழுதப்பட்டு நூலுருப் பெற்றிருக்கிறது. தமிழ் ஈழத்தின் தென் கோடியில் இருக்கும் மட்டக்களப்புப் பிரதேசம் மொழிப் பயன்பாடு, கலை வெளிப்பாடுகள் போன்றவற்றில் தனித்துவத்தோடு விளங்குகின்றது. இன்று வரை பழந்தமிழர் கலைகளின் ஊற்றுக்கண்ணாய் பக்தி மரபில் இருந்து வாழ்வியல், பொழுதுபோக்கு அம்சங்கள் என்று தடம் பதிக்கின்றது.

இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலை பெற்றிருக்கும் கலை வெளிப்பாடுகளோடு ஒப்பிடும் போது அவை குறித்து வரலாற்று ரீதியான மற்றும் ஆய்வு நோக்கிலான எழுத்துப் பகிர்வுகள் மிக அரிதே. இந்த நூலை வாங்கத் தூண்டியதே இந்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடு எனலாம். ஆனால் புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களைப் பிரிக்கும் போது மிகுந்த மனச்சுமை ஒட்டிக் கொள்கிறது…ஆம் இந்த நூலாசிரியர் தற்போது நம்மிடையே இல்லை. அதாவது திருமதி சுகந்தி சுப்ரமணியம் அமரராகிப் பத்து வருடங்கள் கழித்து 2006 ஆம் ஆண்டு அவரது ஆய்வுத் தேடல் அச்சு வாகனமேறியிருக்கிறது.

அயோத்தி நூலக சேவை அமைப்பினை உருவாக்கி அதனூடாக ஈழத்தமிழத் படைப்புகளை நூல் தேட்டம் என்ற நூல் விபரப் பட்டியலில் திரட்டும் திரு என்.செல்வராஜா அவர்கள் இந்த நூல் உருவாக்கத்தைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டதாக வெளியீட்டாளர் மாதினி சிறீக்கந்தராஜா (இங்கிலாந்து) தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டிருக்கிறார். இலண்டன் தமிழ் இந்து மாமன்றம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“அவள் தலையில் எனக்கொரு விருப்பம் தலைக்குள் இருக்கும் மூளையில் வந்த விருப்பம் அது. அம்மூளைக்குத் தான் எத்தனை சிந்தனை. நிறைந்த வாசிப்பு, நிறைந்த சிந்தனை, நிறைந்த அறிவு” என்று தன் மாணவி சுகந்தி குறித்து நெக்குருகிப் பேசும் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்களது வாழ்வியல் சடங்குகள் குறித்து சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய மேலுமொரு ஆய்வுப் பிரதியையும் தேடிப் பதிப்பித்தல் வேண்டுமென்கிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கிராமிய வழிபாட்டுச் சடங்குகளை மையப்படுத்திய தேடலாக இந்த ஆய்வு அமைவதால் அந்தப் புள்ளியை மையப்படுத்தியே புறச் சுற்று விளக்கங்களோடு ஓவ்வொரு அத்தியாயங்களும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டு நகர்கின்றன.

மட்டக்களப்பு மாவட்ட வரலாறும் சமூக அமைப்பும் என்ற அறிமுகப் பகுதி வழியாக இங்கு வாழும் இந்துக்களோடு முஸ்லீம் இன மக்கள் குறித்த அறிமுகம், மொழிப் பயன்பாட்டின் தனித்துவம் போன்றவை தொட்டுச் செல்லப்படுகின்றன.

உண்மையில் இந்த நூலை வாசிக்கும் வரைக்கும் எனக்கு மட்டக்களப்பின் நில அமைவை முன்னிலைப்படுத்தும் சாதியக் கட்டமைப்புகள் (படுவான்கரை, எழுவான்கரை) அவை தொடர்பான வழக்கிலுள்ள சமூகப் பார்வை பற்றிய புரிதல் இல்லாமலேயே இருந்தது. அந்தக் குறையைத் தன் முதல் இயலில் நல்லதொரு அறிமுகமாகப் பகிர்கிறார்.

மட்டக்களப்புத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையது என்ற கருத்தை ஒட்டியதான ஒப்பீட்டு நோக்கிலான பார்வையில் இதற்கு அடிப்படையாக வடமொழி சார்ந்த பிராமணர் செல்வாக்கு இப்பிரதேசத்தில் அதிகம் இருந்ததில்லை என்பதோடு மட்டக்களப்புச் சாசனங்களில் கிரந்த எழுத்துகள் அருகி வந்ததையும் உதாரணப்படுத்துகிறார்.

மட்டக்களப்பு மாவட்டம் பற்றிய வரலாற்று அறிமுகமாகவும் முதல் இயல் உதவுகிறது.

இந்த மாவட்டத்தில் நிலவும் தொழில் அமைப்பை அணுகும் போது மீன்பிடித் தொழிலை எடுத்துக் கொண்டால் அது குறித்த பிரிவினக்கு மட்டுமன்றி பொதுவானதொரு தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது என்னளவில் புதிய செய்தி.

தொடர்ந்து கிராமிய வழிபாட்டு இலக்கிய வடிவங்கள் இரண்டாவது இயலிலும், பெண் தெய்வ வழிபாடு மூன்றாவதிலும், ஆண் தெய்வ வழிபாடு நான்காவதிலும் எடுத்து நோக்கப்படுகின்றன.

ஐந்தாவது இயலில் இந்தப் பிரதேசத்தின் வழக்கிலுள்ள சடங்குகள் ஆராயப்படுகின்றன. மேலும் இறுதிப் பகுதிகளாக இந்த ஆய்வின் முதுகெலும்பாக அமையும் “கிராமிய வழிபாட்டுப் பாடல்கள் கூறும் மரபுகளும் நம்பிக்கைகளும்” மற்றும் “கிராமிய வழிபாட்டுடன் தொடர்புடைய கலைகள்” என்றும் ஆறாவது ஏழாவ்ச்து இயல்கள் விரித்துப் பேசுகின்றன.

ஈழத்து நாட்டார் இலக்கியங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தந்திருக்கும் செழுமையான இலக்கிய வடிவப் பேணலை அம்மானை, காவியம், ஊஞ்சல் போன்ற முக்கிய இலக்கியங்களினூடு ஆராய்கின்றார்.

அம்மானை, மகளிர் விளையாட்டுப் பாடலாக அமைந்து அம்மெட்டில் பிற பொருண்மையும் கலந்து விளையாட்டின்றியும் பாடல் அமையும் நிலை காணப்படுவதாகச் சொல்கிறார்.

மட்டக்களப்பில் விசேடமாக விஷ்ணு கோயில்களில் படிக்கப்படும் கஞ்சன் அம்மானை குறித்து விரிவாக எடுத்துச் சொல்கிறார்.

நாமவியல், சரித்திரவியல், சாதியியல், ஆலயவியல், ஒழிபியல் என ஐந்தாக வகுக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், ஊஞ்சல் பாடல்கள், காவியம் போன்றவற்றோடு நகரும் இரண்டாம் இயலில் கண்ணகி வழக்குரை முக்கியமானதொன்று. இது கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டு மட்டக்களப்பாரால் போற்றப்படுமொரு படைப்பு. மூலமான சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகி தெய்வமாகக் கொள்ளவில்லை என்று கூறி கண்ணகிக்கு ஈழத்தவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் பறை சாற்றுகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகம முறைப்படி எழுந்த ஆலயங்கள் மிகக் குறைவு. அத்தோடு சிவ வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து சக்தி வழிபாடே பெரிதும் கைக்கொள்ளப்படுகிறது.

கி.பி 113 – 135 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு மன்னனால் கண்ணகி வழிபாடு ஈழத்தில் பரவி நிலை பெற்றிருந்ததாகக் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பில் ஊர் தோறும் கண்ணகிக்குக் கோயில் உண்டு. உடுக்குச்சந்து அல்லது ஊர் சுற்றுக் காவியம், கூவாய் குயில் வசந்தன், பட்டிமேட்டு அம்மன் காவியம் போன்றவற்றை இந்தக் கூற்றுக்கு ஆதாரம் காட்டுகிறார்.

மேலும் திரெளபதி அம்மன், மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன், பத்திரகாளி, கடல் நாச்சியம்மன், சுடலைக்காளி போன்ற தெய்வங்கள் பெண் தெய்வ வழிபாட்டில் கலந்திருப்பதாகச் சொல்கிறார்.

ஆண் தெய்வ வழிபாட்டில் முருகனுக்கே முக்கிய இடம் வழங்கப்படுவதோடு வீரபத்திரர், வதனமார், பிள்ளையார், நாகதம்பிரான், வைரவர், காத்தவராயன் போன்ற ஆண் தெய்வ வழிபாட்டை ஆய்வில் பகிர்வதோடு “குமார தெய்வ” வழிபாடு குறித்த விசேட பகிர்வும் இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்துச் சடங்குகள் குறித்த பகுதி பல புதிய தகவல்களைப் பகிர்கிறது. கொம்பு விளையாட்டுச் சடங்கு, தீப்பள்ளயச் சடங்கு உள்ளிட்ட இம்மாவட்டத்துக்குரித்தேயான தனித்துவமான சடங்குகள் எந்தெந்தப் பகுதிகளில் விசேடமாகக் கைக்கொள்ளப்படுகின்றன என்பதை விளக்கிக் கூறுகிறது இந்த நூல்.

“தாய் வழிச் சமூகம்” என்ற கேரள மக்களின் வாழ்வியலுக்கு மிக அணுக்கமானது மட்டக்களப்பாரதும். இங்கே கேரளத்தவரின் பரம்பல் இருப்பதும் மொழி, கலைகளினூடு தொட்டு இயங்குகிறது. மட்டக்களப்பு மக்களது திருமணச் சடங்கு, சகுனம் பார்த்தல், தொழில் முறைகளில் நம்பிக்கை, மாந்திரீகம் போன்றவற்றை ஆறாம் இயல் வெளிப்படுத்துகின்றது.

பறை மேளக் கூத்து, மகிடிக் கூத்து, வசந்தன் கூத்து, வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள், குரவைக் கூத்து, காவடி, கரகம் போன்றவற்றை விலாவாரியாகவும், தெளிவாகவும் ஏழாம் இயல் பகிர்கின்றது.

இந்த ஆய்வுத் தேடலுக்கு சுகந்தி சுப்ரமணியம் அவர்கள் உசாத்துணையாக அமைத்துக் கொண்ட பெரும் நூற் பட்டியலைக் காணும் போது பெரும் வியப்பைத் தருகின்றது. காரணம் அவற்றில் பெரும்பாலானவை ஈழத்துக் கலை, இலக்கிய, தெய்வ நம்பிக்கை குறித்து பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட பொக்கிஷங்கள் என்பதை அந்தந்தத் தலைப்புகள் பறை சாற்றுகின்றன. அவற்றைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற உந்துதலும் எழுகின்றது. குறிப்பாக சதாசிவ ஐயர் எழுதிய “மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு”, பேராசிரியர்

சித்திரலேகா மெளனகுரு எழுதிய “நாட்டார் வழக்கியலும் கரணங்களும்”, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம், கலாநிதி சி.மெளனகுரு எழுதிய “மட்டக்களப்பு மரபு வழி நாடகம்”, பேராசிரியர் இ.பாலசுந்தரம் எழுதிய “ஈழத்து நாட்டார் பாடல்கள் – ஆய்வும் மதிப்பீடும்” இவற்றோடு நூலாசிரியர் தன் முதன்மை ஆய்வு ஆவணங்களாகக் குறிப்பிடும் “மகாமாரித் தேவி திவ்வியகரணி”, கண்ணகி வழக்குரை” ஆகிய நூல்கள் மற்றும் “திரெளபதி வழிபாடு”, “வதனமார் வழிபாடு” ஆகிய கட்டுரைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை தவிர இன்னும் நான்கு மடங்கு நூற்பட்டியல் இவ்வாய்வுக்குத் துணை புரிந்திருக்கிறது.

மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகள் குறித்த அருமையானதொரு அறிமுக நூலாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

கானா பிரபா

22.03.18