புதுமாத்தளனில் ஒரு குடும்பம் ? சிறுகதை

“ஐயா இஞ்சை பாரய்யா

கண்ணை முழிச்சுப் பாரய்யா

கொப்பா வந்து கேட்டா நான் என்னெண்டு சொல்லுவன் என்ர குஞ்செல்லே

இஞ்சை பார் அப்பு…அப்பூஊஊ”

வெடிதழுத வானதியின் குரல் அந்தப் புதுமாத்தளன் வைத்தியசாலையின் பிரித்துப் பார்க்க முடியாத மரண ஓலங்களோடு மேலெழும்பியது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

“வானதி! ஆமிக்காறங்கள் கடுமையா மூவ் பண்ணிக் கொண்டிருக்கிறாங்களாம். கனடா றேடியோக்குச் செய்தி குடுக்க வேணும். நான் ஒருக்கால் வெளியில போய் என்ன நிலவரம் எண்டு பார்த்துட்டு வாறன்”

“கொஞ்சம் பொறுங்கோ, உளுத்தம்மா கொஞ்சம் இருக்குது அதைச் சீனி, தேங்காய்ப்பூப் போட்டுக் கலந்து தாறன் பிள்ளைக்கும் குடுத்துச் சாப்பிட்டுட்டுப் போங்கோவன்”

“இல்லையில்லை விடியக்காத்தாலையில இருந்து வெளிநாட்டு வானொலிக்காறர் போன் எடுத்துக் கொண்டிருக்கினம். இங்கை என்ன நடக்குது எண்டு உடனுக்குடன் செய்தி கொடுத்தால் தான் அங்கை

இருக்கிற எங்கட சனமும் ஏதாவது செய்வினம். போன கிழமை கூட ஐ.நா சபை வரை போய் ஆர்ப்பாட்டம் செய்தவையாம்”

வானதியின் மறுமொழியைக் காது கொடுத்துக் கேட்காமல் சட்டையை மாட்டிக் கொண்டு வெளிவே வந்து விட்டான் சேந்தன். செய்தி குடுத்துட்டுக் கெதியா வரவேணும் பாவம் பிள்ளை அப்பாவைத் தேடுவான்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

“ம்..சாப்பிடுங்கோ” தாயின் மடியில் இருந்து கொண்டு சுடுதண்ணியில் குழைத்த உளுத்தம்மா உருண்டையின் இரண்டாவது திணிப்பை வாங்கிக் கொள்ள குழந்தை

ஆ காட்டிச் சிரித்தது.

“கொப்பாவும் சாப்பிட்டுட்டுப் போயிருக்கலாம் அந்த மனுசனுக்கு உளுத்தம்மா எண்டால் உசிர் ம்ஹ்ஹ்ம்”

வானதியின் பெரு மூச்சோடு வெளிப்பட்ட வார்த்தைகளைப் புரிந்ததும் புரியாததும் மாதிரியான முகக் குறியோடு பார்த்துக் கொண்டிருந்தது மூன்று வயசுக் குழந்தை எழிலன்.

“வானதி அக்கோய்…….வானதி அக்கோய்”

குழந்தையை மண் தரையில் இருத்தி விட்டு வெளியில் ஓடி வந்தால் பக்கத்து வீட்டு பூரணம் மாமியின் மகள் சாந்தி பதை பதைப்போடு.

“கெதியா வீட்டை விட்டு வாங்கோ

சனமெல்லாம் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு ஓடுது ஆமிக்காறங்கள் அந்தப் பகுதியில் தான் குண்டு போடாத பகுதியா அறிவிச்சிருக்கிறாங்கள்”

திரும்பவும் கொட்டில் வீட்டுக்குள் ஓடினால் குழந்தை உளுத்தம்மா உருண்டை ஒன்றை எட்டிப் பிடிக்கத் தாவிக் கொண்டிருந்தது.

“ஐயோ என்ரை பிள்ளை வடிவாச் சாப்பிடேல்லை”

அழுகையும் பதைபதைப்புமாக போட்டது போட்டபடி வெறும் மேலுடன் இருக்கும் பிள்ளையை அள்ளிக் கொண்டு வெளியே வந்தால் சனமெல்லாம் ஓடுது.

பிளேன் ஒரு பக்கம் வட்டமிட்டுக் குண்டுகளைப் பொறிச்சுத் தள்ளுது. இராணுவத்தின் ஷெல்லடி திக்குத் திசை பாராமல் எல்லா இடமும்.

றோட்டில் நடக்கும் போது போடும் குண்டுகளின் அதிர்வலைகளே ஒரு பூகம்பத்தின் பிரதிபலிப்போடு ஓடும் சனத்தின் பாதங்களை உலுப்புது.

ஒரு மனித உடலை நான்கு நாய்கள் பங்கு போட்டுப் பிய்த்துக் கொண்டிருந்தன.

வீதியென்று சொல்லப்பட்ட பாதையில் ஆங்காங்கே மனித உடலங்களும், மாடுகளும் இரத்தம் வழிந்தோட மூச்சை விட்டுக் கொண்டிருக்க அந்த இடத்தைக் கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் தம் உயிர் போவதற்கான விலை என்றறிந்து ஓடிக் கொண்டிருக்குது சனம்.

“வேலாயுதம் அம்மான் போல ஒரு உருவம் முதுகுப்புறமாச் செத்துக் கிடக்குது”

கறண்ட் அடிச்சது போலப் பயமெல்லாம் உடம்பு பூராகப் பரவ

“இதையெல்லாம் பார்த்தால் பயந்து போய் விடும் குட்டி”

பிள்ளையின் கண்ணை ஒரு கையால் பொத்திக் கொண்டு ஓடி ஓடி நடப்பது தான் எவ்வளவு கஷ்டம் அவளுக்கு.

“கை உழையுது கடவுளே இந்த மனுசன் எங்கை நிக்கிறாரே” வானதியின் ஓட்டமும் நடையும் புதுமாத்தளன் வைத்தியசாலை நோக்கி.

“என்னையும் கொல்லுங்கோடா

என்னையும் கொல்லுங்கோடா”

இரண்டு பிணங்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்து வானத்தை நோக்கித் தலையிலும் நெஞ்சிலும் அடிச்சுக் கொண்டு கூவிக் கூவிக் கத்துகிறான் ஒரு பதின்ம வயசுப் பெடியன்.

கத்திக் கத்தித் தொண்டைத் தண்ணி வத்திப் போய் ஈனஸ்வரமாக எழும் ஒலியை நின்று கேட்டு ஆறுதல்படுத்தக் கூட யாருமில்லை.

“பாவம் தாயையும் தகப்பனையும் பறி குடுத்துட்டுது போல” அந்த இடத்தை அனுதாபத்தோடு கடந்து கொண்டே பிள்ளையைப் பொத்திக் கொண்டு ஓடுகிறாள்.

“ஐயோ என்ர பிள்ளை…….” பின் பக்கமாக எங்கோ வெடித்த குண்டொன்றின் உலோகச் சிதிலமொன்று எழிலனின் வயிற்று பகுதியில் கிழிக்கத் தாய் வேறு பிள்ளை வேறாகப் பிரிந்து நிலத்தில் விழுகிறார்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

“அண்ணை இது செய்தி சேகரிப்பாளர் சேந்தனெல்லே”

“ஓமோம் உயிர் இன்னும் இருக்கு தூக்கு தூக்கு ஆளைப் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்”

வீதியோரத்தில் காயப்பட்டுக் கிடந்த சேந்தனைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.

சேந்தன், பத்து வருடமாக கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா எல்லாம் இருக்கும் தமிழ் வானொலிகளுக்கு அவன் தான் தாயகச் செய்தியாளர்.

ஒரு ஊடகவியலாளன் ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் அவனுக்கு இல்லை. தாயகத்து நிலமைகளைப் புலம் பெயர்ந்த தமிழருக்குச் சொல்ல வேணும். அவர்கள் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கொள்கை தான் அவனுக்கு. அதனால் தானோ என்னவோ சில வானொலிகள் அவனுடைய செய்திப் பகிர்வுக்கான பணத்தை மாதக் கணக்கில் நிலுவையாக வைத்திருந்தாலும் அதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் செய்தி கொடுத்துக் கொண்டே இருந்தான்.

இந்த ஏப்ரல் 2009 வரைக்கும் எத்தனை எத்தனை அழிவுகளுக்கு மேலிருந்து செய்தி கொடுத்திருப்பான்.

மயிரிழையில் உயிர் தப்பி வந்த மரண கண்டங்களை ஒரு புத்தகமாகவே போடலாம்.

கனடா வானொலிக்குச் சண்டைக் களத்தின் செய்தி சொல்லிக் கொண்டிருந்தவனை ஒரு துண்டு ஷெல் பாளம் பதம் பார்த்து விட்டது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

“அக்கா அக்கா வாணை நாங்கள் முள்ளிவாய்க்கால் பக்கம் போவம் இந்த ஆஸ்பத்திரிப் பக்கமும் அடி விழுமாம் சனம் கதைக்குது” சாந்தியின் கதையெல்லாம் மனசில் ஏறும் நிலையில் இல்லை.

“என்ரை பிள்ளையைத் திருப்பித் தாங்கோ

என்ரை பிள்ளையைத் திருப்பித் தாங்கோ”

கும்பிட்டுக் கும்பிட்டு அழுது கொண்டிருந்த வானதியைக் கொற இழுவையில் தவராசா அண்ணை இழுத்துக் கொண்டு போக,

புதுமாத்தளன் வைத்தியசாலை வளவில் உளுத்தம்மா ஒட்டிய வாயோடு எழிலன் நிரந்தமாக உறங்கிக் கொண்டிருந்தான்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

“என்ன காயப்பட்ட சனத்தைத் தவிர

ஆஸ்பத்திரியில் ஆரையும் காணேல்லை

சனம் வெளிக்கிட்டுடுது போல

இங்கை ஆளைக் கிடத்து”

அனத்திக் கொண்டிருந்த

சேந்தனைக் கிடத்தி விட்டு திரும்பி நிமிர்ந்தால்……

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

“நேற்று அதிகாலையில் இருந்து மதியம் 11 மணிவரை புதுமாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பரந்திருந்த மக்கள் மீதும் அங்கு இருந்த தற்காலிக மருத்துவமனை மீதும் குண்டு மழை பொழிந்தது. சிங்களப்படைகளின் விமானங்களும் பீரங்கி மோட்டார்களும் நடத்திய தாக்குதலில், சிறார்கள் உட்பட 985 அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள அரசின் 5 மணித்தியால பேயாட்டத்தில் பறிக்கப்பட்டன. 2300 பேர்வரை காயமடைந்தனர்”

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது கனேடிய வானொலியின் செய்தி அறிக்கை.

ஏப்ரல் 21,2009.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

(யாவும் உண்மைகளோடு பொருந்திய சிறுகதை)

கானா பிரபா

மே 18, 2018