நிறைவு ? (சிறுகதை)

மடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது….
கண் பூசலாடுவது போல இருக்கிறது, மேலதிகாரி தந்த
கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சொல்லியிருப்பது ஒன்று தானே?

“இன்றுடன் உங்கள் பணி இடை நிறுத்தப்படுகிறது.
இந்த முடிவு உங்களின் தனிப்பட்ட திறமையை முன் வைத்து எடுக்கப்பட்டதன்று. நிறுவனத்தின் நிர்வாக மாறுதலுக்கு ஏற்பவே நாம் பணிக்குறைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி.”

எட்டு வருடமாக வேலை பார்த்த நிறுவனம் இன்று ஒற்றை வார்த்தையோடு வழியனுப்புகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இழுத்திருந்தால் நீண்ட காலப் பணிக்கான படியளிப்பும் கிட்டிருக்கும். திடீரென்று இப்படியொரு கடிதத்தை எதிர்பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் கோபம் கோபமாக வந்தது.

“ கிரி! முக்கியமான ஒரு நிறுவனத்தோடு செய்ய வேண்டிய உடன்படிக்கைக்காக Slide Pack செய்ய வேண்டும் வார இறுதியில் செய்து முடிக்க வேண்டும் நீங்கள்”
வெள்ளிக்கிழமை பின்னேரம் தான் மேலதிகாரி வந்து சொல்கிறார். சனிக்கிழமை மகனின் நான்காவது பிறந்த நாளுக்குப் போட்ட திட்டமெல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டு PowerPoint slides உடன் மல்லுக் கட்டி வேலையை முடிச்ச திருப்தியோடு வந்தால் இப்படிக் கடைசி நேரத்திலும் வேலை வாங்கி விட்டுக் கழுத்தறுத்திட்டாங்களே என்ற ஆத்திரம் தான் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தது.
“திங்கட்கிழமை என் வேலை பறி போகும் என்று மேலதிகாரிக்கு வெள்ளியே தெரிந்திருக்குமே?
படு சுயநலவாதி இவன்” என்று திட்டிக் கொண்டிருந்தது மனம்.

கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று விட்டு உணவு அருந்தும் பகுதிக்கு வந்தால் வழி நெடுகக் கடக்கும் சக மனிதர்கள் அனுதாபப் பார்வையோடு கடக்கிறார்கள். சிலர் வலிந்த சிரிப்பை மட்டும் போட்டு விட்டு நகர்கிறார்கள்.
“ஹும் எனக்கு வேலை போனது என்னை விட எல்லோருக்குமே முதலிலேயே தெரிந்து விட்டது போல” இப்போது விரக்தியான சிரிப்புத் தான் வந்தது.

கை கழுவும் இடத்தின் ஓரத்தில் நீர்த்தாங்கி, சூழவும் கோப்பி மக்கிப் போன கோப்பைகள், அரைகுறைச் சாப்பாட்டுடன் அப்படியே போட்ட தட்டுகள் என்று நிறைந்திருந்தது. இம்மாதிரியான பொறுப்பற்ற வேலைகளைச் செய்பவர்களை எட்டு வருடமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். கையெட்டும் தூரத்தில் இருக்கும் கோப்பை கழுவும் இயந்திரத்தில் தாம் குடித்த, சாப்பிட்ட பாத்திரங்களைப் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனத்தை வைத்திருப்பவர்களா இந்தப் பெரிய நிறுவனத்தைப் பொறுப்போடு கட்டியெழுப்பப் போகிறார்கள்? என்று ஒவ்வொரு தடவையும் இவற்றைக் காணும் போது முணுமுணுத்தாலும் பின்னர் சேர்ட்டின் கையை முழங்கை வரை இழுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்து அந்தக் கோப்பை கழுவும் இயந்திரத்தின் வயிற்றில் செருகி விட்டு, சோப்புத் தூளைப் போட்டு இயங்க வைத்து விட்டுத்தான் நகர்வான். இன்றும் அப்படியே. இயந்திரத்தை இயக்கி விட்டுத் திரும்பினால் துப்பரவுப் பணியாளர் பின்னுக்கு நின்று நன்றிப் புன்னகையை உதிர்க்கிறார்.

தண்ணீர் குவளையில் இருந்து மடக்கு மடக்கென்று குடித்து விட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை பாடமாக்குமாற் போலப் படித்துக் கொண்டே கடைக் கண்ணால் தன் சக பணியாளர்களைப் பார்த்தால் தங்களுக்குள் குசுகுசுப்பது தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி மகிழும் இவர்களுக்கு இன்று நான் அந்நியன்.

“வார இறுதியில் நானே செய்தேன்
எப்பிடி இருக்கிறது?”
என்று பெருமைபடச் சொல்லிக் கொண்டு திங்கட்கிழமைகளில் கேக், இனிப்பு வகைகளை நீட்டும் நிக்கோலா இன்று இந்தப் பக்கமே வரவில்லை.

கிறிக்கெற், சினிமா என்று குட்டி அரட்டை போடும் மார்ட்டினும் தன் இருக்கைக்குள் ஒடுங்கிப் போய் விட்டான்.

“கோப்பி அருந்தப் போகலாமா?” என்று பத்து மணிக்கு மணியடிக்கும் மைக்கேலும் தனியாகப் போய் விட்டு வந்து விட்டான்.

என்னைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்றா?
அல்லது என்னுடன் பேசினால் தங்களின் வேலையும் பறி போய்விடும் என்ற சுயநலமா?

Messenger இல் கூட வந்து ஏன் எப்படி என்று சுகம் விசாரிக்கப் பயம் போல அவர்களுக்கு, எங்கே அதைக் கூட கொம்பனிக்காறன் கண்டு பிடித்து விசாரிப்பானோ இதென்ன கொலைக் குற்றமா செய்து விட்டேன்?

இன்றும் இன்னுமொரு காலை என்று நினைத்து வந்தவனுக்குக் காலையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டு விட்டது.

சாப்பிடப் போகவும் மனமில்லை. மின்னஞ்சல் பெட்டியில் அதுவரை தேங்கியிருந்த அஞ்சல்களில் ஏதும் முக்கியமான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தால்….
முன்னால் நிற்கிறார் மேலதிகாரி, பக்கத்தில் மனித வளப் பிரிவில் இருந்து குட்டைப் பாவாடைப் பெண்ணொருத்தி.

“நல்லது கிரி, நாங்கள் உங்களிடமிருக்கும் எங்கள் நிறுவனத்தின் உடமைகளைச் சரி பார்க்கப் போகிறோம்” என்று விட்டுக் கையில் இருந்த துண்டுச் சீட்டில் கணிணிப் பிரிவுக்காறர் எழுதிக் கொடுத்த சொத்து விபரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

கொழும்பிலிருந்து வட பகுதி போகும் போது ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து சூட்கேசில் ஆசையாக அடுக்கிக் கொண்டு போன உடு பிடவைகளைக் கலைத்து போட்டுச் சோதிப்பது போன்றதொரு நிலை.

“ஒரு ஐந்து நிமிடம் தருகிறீர்களா என்னுடைய குழந்தையின் படங்கள் நிறைய இந்த laptop இல் இருக்கு எடுத்து விட்டுத் தருகிறேன்?”

“மன்னிக்கவும் அதற்கு நீங்கள் IT Security இல் முன்னமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் இப்போது நேரம் கடந்து விட்டதே?” மனத வளப் பிரிவுப் பெண்மணியின் வாய் மட்டும் உணர்ச்சியில்லாமல் அசைகிறது.

“சரி நல்லது”

மேசையின் லாச்சிகளைத் திறந்து அவற்றில் தேங்கியிருந்த கற்றைக் காகிதங்களைக் குப்பைக் கூடைக்குள் திணித்து விட்டு மேலதிகாரிக்கும் கைலாகு கொடுத்து விட்டு வெறும் மடிக்கணனிப் பையுடன் வெளியேறுகிறேன்.

இந்த அலுவலகத்தில் எத்தனை பேருக்குச் சீரும் சிறப்புமாகப் பிரியாவிடை செய்திருக்கிறேன், எத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சொந்தக் காசைப் போட்டுக் கொண்டாடியிருக்கிறேன். இன்று ஏதோ அயல் நாட்டு உளவாளி போல ஒதுக்கப்பட்டுவிட்டேனே? மனம் இன்னும் வலித்தது.

அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் தேநீர்க் கடைக்குப் போவோம் என்று மனம் உந்தியது.
இனி எப்போது வேலை கிடைக்குமோ? கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ? என்ற குழப்பங்களை ஒதுக்கி விட்டு வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையில் கொஞ்சம் இளைப்பாறத் தோன்றியது. அந்தக் கடை உரிமையாளர் அப்பாஸ் அறுபதைக் கடந்த ஒரு லெபனான் நாட்டவர். அந்தப் பரபரப்பான காலை வேளையிலும் ஐந்து நிமிடமாதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் மறு வேலை என்ற அளவுக்குப் பழக்கம்.
தூரத்திலேயே கண்டு “கிரி” என்று ஆனந்தக் குரல் அது அப்பாஸ் தான்.

சனக் கூட்டம் அதிகமில்லை. ஓரமான இருக்கையில் அமர்ந்து விட்டு ஒரு கேக் துண்டுக்கும், கப்பச்சினோவுக்கும் Order கொடுத்து விட்டுத் திரும்பினால் அப்பாஸ் முன்னால். வழக்கம் போலக் குசலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விடை பெறும் போது வேலை போன கதையைச் சொல்லலாம் என்று மனம் ஆறுதல் படுத்தியது.

கேக் துண்டும் கப்பச்சினோவும் வந்து விட்டது. சரி இந்த எட்டு வருட காலப் பணி நிறைவை எனக்கு நானே பிரியாவிடை கொடுத்துக் கொண்டாடுவோம் உள்ளுக்குள் விரக்தியாகச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறேன்.

ஒரு விள்ளல் கேக் ஐக் கரண்டியால் கிள்ளி வாயில் போடும் போது
“ஆஹ்ஹ் ஊஊஊஊ” என்றொரு பெருங்குரல் கேட்டுத் திரும்பினால் என்னைப் போலவே வளர்ந்த வெள்ளையின வாலிபன் ஒருவன். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் பக்கத்தில் இருக்கும் ஒரு அழகான வெள்ளையினப் பெண்மணி.
பின்னர் சிறு துண்டு கேக் ஐ அவன் வாயில் ஊட்டி விட்டு வாயைத் துடைக்கிறாள். அவளைப் பார்த்து விநோதமாகச் சிரித்து விட்டு மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்துகிறான். மீண்டும் அவன் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்துகிறாள் அவள். அந்தச் செய்கையில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. தனக்காக order செய்த கோப்பியும், கேக்கும் காய்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு ஊட்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள்.

தன்னுடைய தோள்ப்பட்டையில் அவனைச் சாய்த்து உச்சிமோந்து விடுகிறாள். அவன் குலுங்கிக் குலுங்கிஒ குழந்தை மாதிரிச் சிரிக்கிறான். இப்படியான குழந்தை ஆகிப் போன மனிதர்களைக் காண்பது முதல் தடவையல்ல. பிறக்கும் போதே அப்படியே பிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ கால ஓட்டத்தில் நிகழும் வாழ்க்கை மாற்றங்களால் மனச் சிதைவுக்கு ஆளானவர்கள். அவர்கள் குடும்பம், குழந்தை குட்டி என்று ஆனதுக்குப் பின் தான் இவ்விதம் மாறிப் போனவர்கள். Parramatta ரயில் நிலையத்தில் நின்று
தானே ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பாவனை பிடித்து
ஒவ்வொரு ரயிலையும் வழியனுப்பும் ஒரு வாட்டசாட்டமான சிங்களவரைக் கண்டிருக்கிறார்.
இவளுடைய இளமைக்கும், அழகுக்கும் இவள் நினைத்திருந்தால் இன்னொருவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். காலாகாலமாக எங்களவர்கள் தான் குடும்ப நெறியைப் பின்பற்றுகிறார்கள் என்ற பிம்பம் உடைவது இந்த மாதிரியான செய்கைகளைப் பார்க்கும் போது தான்.
எவ்வளவு வேலைக்களைப்போடு வீடு திரும்பினாலும் “அப்பா அப்பா” என்று சிரித்துக் கொண்டு ஓடி வந்து விளையாட்டுக் காட்டும் மகனும், “போய் றெஸ்ட் எடுங்கோ” என்று நிலைமையை உணர்ந்து ஆறுதல்படுத்தும் மனைவியும் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை.
பாதி தின்ற கேக்கையும், கோப்பியையும் விட்டு விட்டு உடனேயே ஓடிப் போய் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று மனம் உந்துகிறது.
“அவர்களுக்கு என் கவலையைக் காட்டக் கூடாது, இந்த வேலை போனால் இன்னொரு வேலை” என்று சமாதானப்படுத்த வேண்டும் மனம் கங்கணம் கட்டிக் கொண்டது.
எழும்பி வந்து காசாளர் பக்கம் போனால்
“Hello Young man!”
அறுபது வயது அப்பாஸை அழைக்கிறது ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தால் எண்பதுகளின் விளிம்பில் நிற்கும் ஒரு பழுத்த மூதாட்டி, கூனிக்குறுகிய தன் உடலைப் புதைத்துக் கொண்டு சக்கர வண்டியில் இருந்து தானே உந்தித் தள்ளி இழுத்து இழுத்து வருகிறாள்.
அப்பாஸ் அவளை எதிர்பார்த்தது போல கன்னங்கள் உப்பி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வரவேற்கிறார்.

“I’m not ready to die”
“I’m not ready to die”
திரும்பத் திரும்ப மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே அந்தத் தேநீர்ச் சாலைக்குள் நுழைகிறாள் அந்த மூதாட்டி.
நெஞ்சத்தில் இருந்து ஏதோவொரு பந்து வெளியே கிளம்பிப் பாய்வது போல உணர்கிறேன் நான்.

கானா பிரபா
30.10.2018

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்

சற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.

ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.

எண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

பத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.

“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது

“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

வெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.

இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா! திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ?” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.

சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.

இவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.

உதயன் பத்திரிகைப் பகிர்வு

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.

இவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.

யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.

ஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்

சிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:சிதம்பர_திருச்செந்திநாதன்

கானா பிரபா

15.10.2018

பனைமரக்காடு ? திரைப்பார்வை

போருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”

ஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.

திடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன? ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.

பனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.

நம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.

இந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே? என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெடி குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.

பனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது? யாரை விலக்குவது?

மண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இருந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை யூல்ஸ் கொலின், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.

அதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.

உட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.

நமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் என்பது எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்கு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.

கானா பிரபா

14.10.2018

“பனைமரக்காடு” ?

“அப்போது கிளி நொச்சி மண் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் வீழ்ந்த பின் அந்த மண்ணில் இருந்து வெளிக்கிட்ட கடைசி வாகனம் எங்களுடைய “நிதர்சனம்” இனுடையது. நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன், தளபதி ஒருவர் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வட்டக்கச்சி வீதி வழியாக வெளியேறிக் கொண்டிருந்தோம்.

வட்டக்கச்சி அருகே வரும் போது

“விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடல் றேடியோவில் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே எல்லோரும் அழுது விட்டோம் தளபதி உட்பட.

அதில் வந்த “பனைமரக்காடே பறவைகள் கூடே” என்ற வரிகள் எனக்குச் சரியான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அதுவரை யாழ்ப்பாணத்தான் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பாடம் கற்பித்தது முள்ளைவாய்க்கால்.

மன்னர் முல்லைத்தீவு, கிளி நொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று எல்லோரும் முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் நின்று எந்தவித பாரபட்சம் பார்க்காது அந்த அந்த மக்கள் எல்லோருமே ஆளாளுக்கு உதவினார்கள்.

அதன் பின் இறுதிப் போர் வரை ஷெல்லடிகள், விமானத் தாக்குதல்கள் என்று சாவின் இறுதி வரை போய்த் தப்பிப் பிழைத்திருக்கிறேன். சாவதற்குச் சாத்தியமில்லாதவர்கள் கூட இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க, இத்தனை இடர்களைக் கடந்து இறைவனோ, இயற்கையோ இவ்வளவு தூரம் என்னைக் காப்பாற்றியது எதற்காக என்ற சிந்தனை எழுந்தது.

என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்று தான் உள்ளது அது தான் கலை”

இவ்வாறு இயக்குநர் மற்றும் அன்புச் சகோதரர் திரு ந.கேசவராஜன் அவர்கள் தன்னுடைய “பனைமரக்காடு” படம் பிறந்த கதையை என்னோடு நேற்றுப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பேட்டியின் முழு ஒலி வடிவம்

இதோ

அது ஒரு காலம் இருந்தது. எங்களுக்கான அடையாளம், எங்களுக்கான செய்திகள், எம் மக்களின் குரல்கள் இவற்றை முன்னுறுத்தியே எம் மக்களும், போராளிகளுமாகத் தாமே இசைத்துப், பாடி, இயக்கி, நடித்து, பேசி செய்தி ஒளிப் பகிர்வுகள், குறும்படங்கள்

“ஒளி வீச்சு” என்றும், பெருந்திரைப் படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழலில் தாயகத்திலும் சரி, புலம் பெயர் சூழலிலும் சரி ந.கேசவராஜன் என்ற படைப்பாளியோடு அணுக்கமான உறவை ஏற்படுத்தி வைத்திருந்தன அவர் யாத்த ஈழத்துத் திரை இலக்கியங்கள். திசைகள் வெளிக்கும், அம்மா நலமா, கடலோரக் காற்று போன்ற படைப்புகளோடு எண்ணற்ற திரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

தொண்ணூறுகளில் இந்திய சினிமாவுக்கு நிகராக யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டர், ஆரிய குளம் சந்தி எங்கும் பெரும் கட் அவுட் வைத்து அந்தப் படங்களைத் திரையிட்ட காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

நேர்மையாக எழுந்த ஈழத்துத் திரை முயற்சிகளை எங்கள் வரலாறு பேசும் ஆவணங்களாகவே கொள்வேன். இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கடந்து இந்தத் திரை இலக்கியங்களைப் பார்க்கும் போது எவ்வாறானதொரு போரியல் வாழ்வில் எம் மக்கள்

சாவுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கழித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக் கூடிய காலக் கண்ணாடிகள் அவை.

அதில் ந.கேசவராஜன் படைப்புகள் தனித்துவமானவை. ஈழத்துச் சினிமா இயக்கத்தில் அவரின் பெயரை விலத்தி எழுத முடியாத அளவுக்கு வரலாற்றில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறார்.

ஆனால் நடப்பது என்ன?

இறுதி யுத்தம் முடிந்த காலத்தில் அதே இராணுவ நெருக்கடிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையெல்லாம் சந்தித்து இன்று “பனைமரக்காடு” என்ற ஒரு படத்தை எடுத்து விட்டு எட்டு ஆண்டுகளாக அதைத் தலை மேல் சுமந்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தயாரிப்பாளர் அல்ல. ஒரு படைப்பாளியாகத் தன்னுள் கருவுற்ற் அந்தப் படைப்பெனும் குழந்தையைத் தம் மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள், சவால்கள், சங்கடங்களை வைத்தே இன்னொரு சினிமா எடுக்கலாம். அந்தக் காலத்தில் ஒளிவீச்சு படங்களையெல்லாம் புலம் பெயர் மக்களுக்காகப் பொது வெளியில் காட்சியிடும் ஆரோக்கியமான சூழல் இருந்தது. இன்று அந்தச் சூழலைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மீண்டும் எழுகிறது. எங்கள் படைப்பாளிகள் வழியாக ஈழத்தின் சொல்லப்படாத கதைகள் பேச வேண்டுமென்றால் அந்தப் படைப்புகளை வெளியிடும் பொருளாதார நெருக்கடிகளை அவர்களின் தலையில் ஏற்றக் கூடாது.

பனைமரக்காடு வழியாக இனியேனும் உலகத் தமிழருக்கான வலையமைப்பு பலமாக நிறுவப்பட்டு இம்மாதிரிப் படைப்புகள் அரங்கேற வேண்டும் என்ற ந.கேசவராஜன் அவர்களின் ஆதங்கத்தை மெய்ப்படுத்த நாம் எல்லோரும் இணைய வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை மெல்பர்னில் திரையிட்ட போது “33 வருடங்களுக்குப் பின் என் தாய் மண்ணைப் பார்க்கிறேன்” என்று ஒரு அன்பர் நெகிழ்ந்தார்.

இதோ இந்த வார இறுதியில் சம காலத்தில் ஈழத்திலும் அவுஸ்திரேலியாவிலும் திரையிடப்படும் பனைமரக்காடு திரைப்படக் காட்சிக்கு இங்குள்ளோரும், அங்குள்ளோரும் சென்று பார்த்து ஆதரவை நல்குவோம்.

சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.

சிட்னி திரையிடலுக்கான facebook அழைப்பு

https://www.facebook.com/events/295077637943237/

யாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி காலை 10.30, முற்பகல் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகளாகத் திரையிடப்படுகின்றது.

எங்களுக்கான சினிமாவை ஆதரிப்போம்.

உமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு ?


இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.
போர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கால வாழ்வு பற்றிப் பேசிய ஒரு முழுமையான நூலாக காக்கா கொத்திய காயம் பற்றியே சொல்லுவேன்.
உமாஜி என்ற இளைஞனை பேஸ்புக் வழியாகத் தான் அதிகம் அறிந்திருந்தேன். வலைப்பதிவு யுகம் பரவலாக இயங்கிய காலத்தில் கூட சக ஈழத்துப் பதிவராக அவர் எழுதியதாக நினைவிலில்லை. அந்த நேரத்தில் 4TamilMedia என்ற செய்தித் தளத்தில் உமா ஜி இன் வாழ்வியல் அனுபவங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தாலும் உண்மையில் ஒரு பதிவையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தவில்லை. இப்போது வெளிவந்திருக்கும் காக்கா கொத்திய காயம் என்ற அவருடைய வாழ்வியல் அனுபவப் பகிர்வுத் திரட்டு கூட இவ்விதம் 4TamilMedia இல் அவர் எழுதிய பதிவுகளின் திரட்டே. சகோதரன் மைந்தன் சிவாவின் திருமணப் பரிசாக அவர் எனக்களித்த போது படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்து உடனேயே அடுத்ததுக்கு என்னால் நகர முடியாத ஒரு உளவியல் தாக்கத்துக்கு ஆளானேன். உண்மையிலும் உண்மை இது. ஏனென்றால் இந்த எழுத்தாளன் காட்டுகின்ற அந்த வாழ்ந்து கழித்த உலகு அப்படியொன்றும் சொகுசானதில்லை. போரின் நொருக்குவாரத்தில், வாழ்வின் பல்வேறு சவால்களோடு வாழ்ந்து கழித்த பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும் இவர் சொல்லி முடித்ததும் உமா ஜி ஆகி அந்த மனிதர்களோடு பழகி விட்டுத் திரும்புமாற் போலவொரு உணர்வை அந்த எழுத்துகள் ஏற்படுத்தி விட்டன. இப்போது சொல்லுங்கள் இதையெல்லாம் வேக ஓட்டத்தொடு வாசித்து முடிக்கும் காரியமா?
இந்த நூல் குறித்த நயப்புக்குப் போவதற்கு முன்னர் இது குறித்த என் வெளிப்படையான இரண்டு விமர்சனத்தைச் சொல்லி விடுகிறேன்.
ஈழத்தின் இரு தசாப்தங்களை உள்ளடக்கிய இந்த வாழ்வியல் அனுபவப் பகிர்வை காக்கா கொத்திய காயம் என்று கவிதைத்தனமாகத் (!) தலைப்பிட்டதற்குப் பதில் இன்னமும் அணுக்கமான தலைப்பை இட்டிருக்கலாம்.
இன்னொன்று, இந்தப் புத்தகத்தில் மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கும் போரியல் வாழ்பனுபவங்கள் பிற் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன. உதாரணம் ஊரடங்கு வாழ்வு. ஒரே புத்தகத்தில் கனதியான பக்கங்களோடு வந்ததிலும் இதைத் தொகுதியாக வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக வேதநாயகம் தபேந்திரனின் நூல் போன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.
அடுத்த நிமிடம் வாழ்வோமா என்ற நிலையாமை குறித்த கேள்வி எழும் சூழலில், போர்க்கால வாழ்வியலில், அத்தகு துன்பகரமான சூழலில் தான் உயர்ந்த நகைச்சுவை பிறக்கிறது. Life is beautiful படத்தில் கண்டதை எல்லாம் நம் வாழ்வியலில் தரிசித்திருக்கிறோம். அப்படியான எழுத்தைக் காட்டுகிறார் உமாஜி.
பக்கத்துக்குப் பக்கம் எள்ளல், நகைச்சுவை என்று கனதியான சம்பவங்களிலும் இந்த எழுத்தைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால் இந்தப் புத்தகதை எடுத்துப் படித்துக் கொண்டு போகும் போது இசேலான பொறாமையும் எட்டிப் பார்த்தது. எவ்வளவு ஆழமான எழுத்து. யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையிலோ கொழும்பிலோ, வன்னியிலோ நிகழ்ந்ததைக் கொண்டு போய் ஒரு உலகத் தரமான Pianist படத்தோடோ The Last Emperor உடனோ அல்லது அறிஞர் ஒருவரின் கூற்றோடோ பொருதி எழுதும் நுட்பம் இவருக்குக் கச்சிதமாக வாய்த்திருக்கிறது.
ஈழத்துப் பிரதேசங்களில் தான் வாழ்ந்த காலத்தில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைப் பற்றி எழுதினாலும் பொதுவான தமிழையே கையாண்டிருக்கிறார். பிரதேச வழக்குச் சொற்கள் கூட அந்நியப்படாமல் விளங்கக் கூடிய வகையில் குறித்த அனுபவங்களோடே இருப்பதால் தமிழகத்து வாசகனுக்கும் நெருக்கமாக இருக்கக் கூடியது.
இரண்டு தசப்தங்களைக் கடந்த புலம் பெயர் வாழ்வில் இருந்து கொண்டு தாயகம் செல்லும் போதெல்லாம் என்னோடு வாழ்ந்து பழகியவர்களைத் தேடி அவர்களின் இருப்பை அறிந்து கொள்ளும் வேட்கையை உமாஜியின் இந்த நூலும் செய்கிறார். அவரும் தேடுகிறார் இந்திய இராணுவ காலத்தில் இருந்து இறுதி யுத்தம் கண்டு, பழகிய அண்ணனில் இருந்து, மாமா, பாட்டா முறை சொல்லி அழைத்தவர்கள் எல்லாம் எங்கே என்று தேடும் எழுத்துகளில் அந்தப் பழைய நினைவுகளைப் பதிப்பிக்கிறார். இவர்களை நானும் போய்ப் பார்த்தால் என்ன என்றவொரு ஏக்கத்தை எழுப்பி விட்டு அவர்களின் இன்றைய நிலையை நிறுத்துமிடத்தில் மனது கனதியாகிறது. உமாஜியோடு வாழ்ந்து பழகியவர்கள் இப்போது நமக்கும் அறிமுகமானவர்களாகிறார்கள்.
காலி முகத்திடலில் நின்று விடும் பட்டமும் போரியல் வாழ்வை நோக்கி இழுத்துப் போகிறது, தமிழ்த் திரையிசையை இளையராஜாவாகவும், ரஹ்மானாகவும், ஹாரிஸ் ஜெயராஜாகவும் ஏன் எங்களூர் எஸ்.ஜி.சாந்தனாகவும் ஆழ்ந்து நுகரும் போதும் அப்படியே கடக்கிறார். இதையே
யுத்தம் எமக்களித்த நாடோடி வாழ்க்கையில் நாம் கடந்து வந்த ஊர்களையும், வாழ்க்கையையும் பாடல்களே ஒரு காலப் பயணத்தினூடு, அடிக்கடி நிகழுலகுக்குக் கொண்டு வருகின்றன என்று சொல்கிறார். இசைவு என்ற பகிர்தலில் இசை வேட்கை கொண்ட ஒரு கலைஞனின் இன்றைய நிலையை எழுதும் போது இது ஒரு உதாரணம் தான் இவர் போல இன்னும் பலரின் உண்மையான முகத்துக்கு நமது யுத்த பூமி கரியைப் பூசி மறைத்திருக்கிறது என்ற கசப்பான நிஜமும் உறைக்கிறது. இதையே இன்னொரு வாழ்வியல் அனுபவத்தில்
வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப் போனதாகக் கருதப்படும் வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வாழ் நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்!” என்கிறார்.
பெருமூச்சு ஒன்றை எழ வைத்து விடுகிறது.
A9, ஊடரங்கு, மற்றும் விடைபெறல் ஆகிய பகிர்வுகளைப் படிக்கும் போதே அந்தக் காலகட்டத்து யுத்த நெருக்கடிகளும், அடுத்த நிமிடம் வாழ்தலுக்கான சவாலும் மீளவும் நிகழ் உலகில் அனுபவிப்பதைப் போன்ற உணர்வு, இங்கேயும் தன் வழக்கமான நகைப் பூச்சைப் போடுகிறார்.
எங்கள் வாழ்வியலில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் ஏன் இயக்கத்துக்குப் போகவும் கூட பக்கத்து வீட்டு அண்ணாவோ அக்காவோ முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அதிலும் இந்தப் பாட்டுக் கேட்டல் ஒரு குரு சீட மரபில் கடத்தப்படுவது. இங்கேயும் அதையே எழுத்தாளர் தன்னுடைய அனுபவ வெளிப்பாட்டில் பகிர்கிறார்.
ரணேஸ் வாத்தி போன்ற ஒரு ரியூஷன் மாஸ்டரையோ அல்லது சோதிலிங்கம் மாமா போல ஆமிக்காறனோட மல்லுக் கட்டிப் பாட்டுப் போடுற உறவையோ, கல்குலஸ் கணக்கைப் பாடமெடுக்கும் மன நிலை பிறழ்ந்த மனிதரையோ எப்படியோ நாம் வாழ்ந்த ஊரில் இருந்த இன்னொருவரோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.
வவுனியா, குருமன்காட்டில் நான் கல்வி நோக்கில் வாழ்ந்திருக்கிறேன். இனி ஒருமுறை போக வேண்டும் உமாஜி சொன்ன அந்த குருமன்காட்டுப் பிள்ளையாரடி ஐப் பார்க்க.
மாவிட்டபுரத்தில் பிறந்து பின் போர்க்கால இடப் பெயர்வால் மில்க்வைற் கனகராசா அவர்களின் பக்கத்தி வீடு போய் வன்னி, கொழும்பு எல்லாம் பயணித்த உமாஜியின் இடப்பெயர்வுகள் அந்தந்தக் களத்தில் நிகழ்ந்த நனவிடை தோய்தல்களாகப் பிரசவித்திருக்கின்றன.
என்னால் இந்தப் புத்தகத்தைத் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம், ஒவ்வொரு பகிர்வையும் படித்து முடித்த கணமே அதில் வாழ்ந்த மனிதரோடு ஐக்கியப்பட்டு விடுவேன். அதிலும் அந்த சோதிலிங்கம் மாமாவின் கதையைப் படித்து நான்கு வாரங்களாகியும் இன்னமும் அவர் நினைப்பிலேயே இருக்கிறேன். பகிர்வுகளின் முடிவில் உமாஜி முத்தாய்ப்பாய் முடித்து வைப்பார். அந்தக் கடைசிப் பந்தி தான் ஒவ்வொன்றுக்கும் அடி நாதம்.
கடந்த மூன்று தசப்தங்கள் தேங்கிய ஈழத்தின் வடபுலத்தோர் வாழ்வியலை ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் எப்படி அணுக முடியுமோ அதே போன்று இந்த காக்கா கொத்திய காயம் நூல் வழி திரட்டப்பட்டிருக்கும் அனுபவங்கள் அத்தகு பணியைச் செய்திருக்கிறது.
இந்த நூல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த போது இருந்த பரபரப்பு இப்போது இல்லை. அதாவது நூலைப் படித்து விட்டு நாலு வரியாவது எழுதியவரையும் காணோம். நூலாசிரியருக்கும் தன்னை விளம்பரப்படுத்தத் தெரியாது ?. ஆனால் அவ்வளவு தூரம் எளிதில் கடந்து விட முடியாத ஒரு படைப்பு இது என்பேன்.
கானா பிரபா
04.10.2018
இந்தப் புத்தகத்தைத் தமது திருமண நிகழ்வில் பரிசாக வழங்கிய சகோதரன் மைந்தன் சிவா & ஆர்த்தி தம்பதிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.