பாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்

“அவங்கள் கல்லைச் சாப்பிடுறாங்கள்

இடைக்கிடை இரத்தத்தைக் குடிக்கிறாங்கள்”

வெள்ளைக்காரர் இலங்கையின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றிய போது வேவு பார்த்த ஈழத்துச் சிப்பாய் ஒருவன் தன் அரசனிடம் வந்து இவ்வாறு சொன்னானாம். அவன் கல் என்று குறிப்பிட்டது பாணை, இரத்தம் என்றது மதுவை.

ஈழத்தில் பாண் என்ற சொல்லைக் காவி வந்தது இந்த நாட்டை முற்றுகையிட்ட ஒல்லாந்தர் தான். இதுவொரு திசைச்சொல். பாண் என்று ஈழத்தில் அழைக்கப்படுவது தமிழகத்தில் ரொட்டி என்றும் பிரெட் என்றும் புழங்குகிறது. பணிஸ் என்று நாம் அழைப்பது அங்கே பன்.

விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் பேக்கறி என்ற சொல் கழற்றப்பட்டு “வெதுப்பகம்” ஆனது.

நம்மூரில் தேசிய உணவாகப் பாண் ஐ அங்கீகரித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இடியப்பம், புட்டு போன்ற உணவுவகைகளைப் பலகாரம் என்போம்.

இவற்றைக் காலையில் ஆக்கிச் சாப்பிடுமளவுக்கு நேரம் கிட்டுவதில்லை. தோசை, அப்பம் போன்றவற்றை ஆக்க இன்னும் நேரம் பிடிக்கும்.

இவற்றைப் பலகாரம் என்னும் பொதுப் பெயரில் அழைப்போம். அதுவும் அப்பத்துக்கு மாவைப் புளிக்க வைக்க மாணிக்கனிடம் கள் வாங்கி வைத்துத் தயார்படுத்த வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால் வார இறுதிக்கோ, விடுமுறை நாட்களுக்கோ இல்லாவிட்டால் வெளியார் யாரும் விருந்தினராக வரும் நாட்களுக்கோ ஆன தின்பண்டம் ஆக்கி விட்டோம்.

காலை அரக்கப் பரக்க வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போறவை ஒரு பக்கம், வேலைக்குப் போறவை ஒரு பக்கம் என்றிருக்க, எண்பதுக்குப் பின்னான யாழ்ப்பாணக் கலாசாரமும் குடும்பத்தில் ஆணும், பெண்ணுமாக வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு மாறி விட்டது. இந்த நிலையில் ஆபத்பாந்தவனாகக் கைக் கொடுப்பது இந்தப் பாண் தான்.

இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தில் பாணின் விலை முக்கிய சக்தியாக இருப்பதை வைத்தே அதன் பயனீட்டுப் பெறுமதியை உய்த்துணரலாம். பாணின் விலை ஒரு ரூபா கூடினாலும் குய்யோ முறையோ என்பார்கள். சந்திரிகா ஆட்சிக்காலத்தில் பாணின் விலையை இரண்டு ரூபா ஆக்குவேன் என்றெல்லாம் அதிரடித் தேர்தல் வாக்குறுதி எல்லாம் கொடுத்தார்.

மீன் விற்பவரும் சரி, பாண் விற்பவரும் சரி சைக்கிளில் எடுத்துச் சென்று தான் கூவிக் கூவி விற்பார்கள். இங்கே கூவுவது சைக்கிள் பாரில் பொருத்தியிருக்கும் கறுத்த உருண்டைக் கோள ஹோர்ண் ஒன்று. இன்று சைக்கிள் வியாபாரிகளை அதிகம் பார்க்க முடியாது. அவர்கள் சிறு ரக மோட்டார் சைக்கிளுக்கு மாறி விட்டார்கள். பாண் வண்டி இப்போது அளவாகப் பெட்டி பொருத்தப்பட்ட ஓட்டோ வாகனமாக மாறி விட்டது.

காலை ஆறுமணிக்கே உள்ளூர் பெட்டிக்கடைகள் எல்லாம் திறந்து முதல் காரியமாகப் பாண் வியாபாரத்தில் இறங்கி விடுவார்கள். பால் விநியோகம் பெரும்பாலும் ஊரின் பெரிய கமக்காரர் யாரவது வீட்டில் வளரும் பசு மாட்டுக் கொட்டிலில் இருந்து தான் சுடச் சுட மடியில் இருந்து செம்பில் வரும்.

பாணுக்குத் தோதாக செத்தல் மிளகாய், தேங்காய்ப் பூ, வெங்காயம், கொஞ்சம் உப்புத் தண்ணி இவற்றையெல்லாம் கலந்து அம்மியில் அரைச்ச சம்பல் தான் பெரும்பாலும். பின்னாளில் தான் பட்டரும் மாஜரினும் வந்தது. பாண் துண்டுக்கு மாஜரின் தடவி கொஞ்சம் சீனியைத் தூவி விட்ட இன்று வரை உருசித்துச் சாப்பிடும் பழக்கம் எனக்கு. பாணுக்குள் வண்டு தட்டுப் படும். அதனால் றோஸ் பாண் சாப்பிடும் போது நன்றாகப் பிரித்துப் பிரித்து வண்டு இருக்கிறதா என்று பார்த்து விட்டுச் சாப்பிடச் சொல்லுவார் அம்மா.

‪பாணும், கதலி வாழைப்பழமும் சாப்பிட்டால் அது தனிச்சுவை.‬

ஒரு இறாத்தல் மொத்தப் பாண், சப்பட்டைப் பாண் (றோஸ் பாண்), சங்கிலி பணிஸ் என்று பேக்கரி இல்லையில்லை வெதுப்பகத்தில் விளையும் தின்பண்டங்கள். இவற்றில் சீனியால் தடவிய கொம்பு பணிஸ் பள்ளிக்கூட உணவு விற்பனைக்கூடத்திலும், தேநீர்ச் சாலைகளிலும் அதிகம் தென்படும்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரம் திரண்ட மாணவர் கூட்டத்தில் ஃபாதரின் கன்ரீனில்

கொம்பு பணிசுக்கு ஒருவன் காசை நீட்ட இன்னொருவன் பணிசோடு கம்பி நீட்டிய கதையெல்லாம் உண்டு.

மெட்ரிக் முறைமை வந்து நான்கு தசாப்தங்கள் ஆகியும் இன்னமும் ஈழத்தில் இறாத்தல் முறைமையில் இருக்கும் ஒரு பொருள் பாண். ஒரு முழுப்பாணை வாடிக்கையாளத் தேவைக்கேற்ப கால் றாத்தல், அரை றாத்தல் என்று வெட்டிக் கொடுப்பார்கள்.

கூலி வேலை செய்பவர்களைப் பணி நியமிப்பவர்கள்

இவர்களுக்குப் பணி நேரத்தில் கொடுத்தால்

பாணையும், சம்பலையும் கொடுத்தால் சமைக்கும் நேரம் மிச்சம் என்பர்.

அதுவரை கடைக்காரர்களிடமோ, இல்லைப் பாண் வண்டிக்காரர்களிடமோ பாணை வாங்கிச் சாப்பிட்ட எங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டியது.

அதுதான் மணி மாமா பேக்கரியின் வருகை.

மிக்கி மெளஸ் போன்ற டிஸ்னியின் கார்ட்டூன் உருவங்கள் பொறிக்கப்பட்ட மோட்டார் வண்டியில் பெரிய எழுத்தில் “மணி மாமா” என்று எழுதப்பட்டு பாண் விற்பனை ஊரின் சந்து பொந்தெல்லாம் கலக்கியது. தெற்கு இணுவிலின் சந்துக்குள்ளால் செல்லத்துரைச் சாத்திரியாரின் வீட்டுக்குப் போற வழியில் இருந்து வலது பக்கம் திரும்பினால் “மணி மாமா பேக்கரி” என்ற பெரிய எழுத்து விளம்பரத்தோடு சுவர் முழுக்கக் குழந்தைகளுக்கான பல வர்ண ஓவியங்களோடு அந்தக் கட்டடம் இருப்பது எங்களுக்கு அப்போது புதினமாக இருந்தது.

திருவெம்பாவைக் காலத்த்தில் விடிகாலை மூன்று மணிக்குக் குளித்து வெளிக்கிட்டு வீதியில் சங்கு சேமக்கலத்தோடு வந்தால் மணி மாமாவின் பேக்கறியில் அடுப்பெரியும் வெளிச்சம் தெரியும். அவர்களுக்கு வருஷம் முழுக்க ஒவ்வொரு நாளும் திருவெம்பா தான். அதிகாலை ஒன்று, இரண்டு மணிக்கே பாண் தயாரிப்பைத் தொடங்க வேண்டும்.

இணுவிலில் அண்ணா தொழிலகம், மல்ரி ஒயில் போல மணி மாமாவின் வெதுப்பகமும் பிரபலமான உள்ளூர் உற்பத்தி நிறுவனம் ஆனது.

இப்போது வெளி நாட்டில் நிறுவனங்கள் செய்யும் விற்பனை மேம்படுத்தல் முறைமையை அப்போது எங்கள் சிற்றூரிலேயே எமக்குப் பாடமெடுத்த மணி மாமா பேக்கறியை மறக்க முடியாது.

போர்க்காலத்தில் மா தட்டுப்பாடான நேரத்தில் மானி மாமாவின் பேக்கரியில் ஒரு நீண்ட வரிசை வீதியைத் தாண்டி நிற்கும். அப்போது காய்ச்சலுக்குச் சாப்பிடும் ரஸ்க் துண்டங்களும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போல இனிக்கும். போர்க்கால நெருக்கடி என்று இழுத்து மூடாமல் கையிருப்பையும் அங்கத்தையச் சனத்துக்குப் பகிர்ந்தளித்த தொழிலகங்களில் அப்போது அண்ணா கோப்பிக்காரரின் இனிப்பு வகைகள் (சீனிக்குப் பதிலாக), உணவு உற்பத்திகள் இவற்றோடு மணி மாமாவும் தன் பங்குக்கு உதவினார்.

மணி மாமா முந்த நாள் இறந்து விட்டாராம் சேதி வந்ததும் அவரின் மிக்கி மெளஸ் பேக்கறி தான் மின்னி மறைந்தது நினைவில்.

கானா பிரபா

அஞ்சலி ? கிரேசி மோகன் ?

எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அவர்களின் இறப்புச் செய்தி சற்று முன்னர் கிட்டியிருக்கிறது.

இந்த வாரம் அவர் சிட்னியில் முதல் தடவை நாடக மேடை நிகழ்த்த இருந்த அறிவிப்புக் கேட்டு உள்ளுரப் புழகாங்கிதம் கொண்டிருந்தேன். ஆனால் அவரின் உடல் நலக் குறைவால் வர முடியாது போனதும் சென்னை சென்று அவரைச் சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது இனிக் கைக் கூடாது.

கமலஹாசனுக்குப் பொருத்தமான ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்தார்கள்.

நாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் “பொய்க்கால் குதிரை” திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர் பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி, மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் – கிரேஸி மோகன் பந்தம் வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.

கமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் “ஆஹா” படம் தவிர்த்து கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். “கொல கொலயா முந்திரிக்கா” படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக் கொண்டுதான் பார்த்து ரசித்தேன்.

என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.

மெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் “காதலா காதலா” படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின் இரண்டு பக்கங்களில் “காதலா காதலா” படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.

அதுதான் கிரேஸி மோகன்.

இளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.

வெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு காட்சி “மைக்கேல் மதன காமராஜன்”ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

கிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அவற்றைப் பார்க்கும் அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.

வெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.

கிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.

பெருமதிப்புக்குரிய கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் அஞ்சலியைப் பகிர்கிறேன்.