“கலைஞரான துணை வேந்தர்”
பேராசிரியர் என்.சண்முகலிங்கன் படைப்பாளுமை ஆய்வு 📖 நூல் நயப்பு

“கலைஞரான துணை வேந்தர்”பேராசிரியர் என்.சண்முகலிங்கன் படைப்பாளுமை ஆய்வு 📖 நூல் நயப்பு


“இதய ரஞ்சனி….இதய ரஞ்சனி….” என்று அந்தக் காலத்தில் ஒலித்த கூட்டுக் குரல்கள் நம் காதுக்குள் ஒலிப்பது போன்றதொரு பிரமை.நம் காதுக்குள்ளும் வாழ்வியல் நினைவுகளைச் சேகரித்து வைக்க முடியுமோ? என்பது போல அவ்வப்போது அசரீரி போல ஒலிக்கும் இந்த இசை எண்பதுகளில் காற்றலை வழியே நம் வீட்டின் வானொலிப் பெட்டி கொணர்ந்தது. அது தான் “இதய ரஞ்சனி” எனும் இலங்கை வானொலி படைத்திட்ட, பண்பாட்டுக் கோலங்கள் தழுவிய வானொலி இலக்கிய மஞ்சரி. அப்போதெல்லாம் இலங்கை வானொலி இலக்கியகர்த்தாக்களின் செழுமையான பங்களிப்போடு இயங்கி வந்தது.
ஒரு பக்கம் வானொலித்துறையில் கலை, இலக்கியம் சமைக்கலாம் என்று உள்ளிருந்து புறப்பட்ட வானொலியாளர் எஸ்.கே.பரா என்ற எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள், இன்னொரு பக்கம் கல்விப் புலமைத்துவத்தில் துறை போன பெருந்தகை பேராசிரியர் என்.சண்முகலிங்கன் என்று இரு பெரும் ஆளுமைகள் இணைந்து படைத்திட்ட “இதய ரஞ்சனி”.இதன் வழியாகவே பின்னாளில் இவ்விருவரின் கலை, இலக்கியச் செயற்பாடுகள், மெல்லிசை இயக்கத்தில் இவர்களின் பங்கு போன்ற நீட்சிகளை அறியக் கூடியதாக இருந்தது.
கல்விப் புலமைச் சமூகத்தில் இருந்து கொண்டே சம காலத்தில் கலை, இலக்கியத் துறையில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் மிக அரிது. இந்த அரிதானவர்களில் கவிஞராக, கதை சொல்லியாக, நாடகராக, பாடகராக என்று பன்முகம் கொண்ட படைப்பாளியாக இயங்கி வருபவர் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழக ஓய்வு நிலைத் துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள்.“கலைஞரான துணைவேந்தர்” என்ற ஆய்வு நூல் பேராசிரியர் என்.சண்முகலிங்கனின் இத்தகு பன்முக ஆற்றலை ஆவணப்படுத்தி நிற்கின்றது.
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களின் பன்முகப் படைப்பாளுமை பற்றிய மதிப்பீட்டு ஆய்வாக இந்நூல் அமைகிறது” என்று முன் சொன்னதையே வழி மொழிகிறார்“கலைஞரான துணைவேந்தர்” ஆய்வைச் செய்திட்ட திருமதி தாரணி ஆரூரன் அவர்கள்.இவர் தமிழியலில் முதுகலைப் பட்டப் படிப்பைச் செய்து அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆசிரியராக இயங்கி வருபவர்.இந்த நூலினை தமிழர் இன வரையியல் கழகம் வெளியிட்டிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு வவுனியாவில் நிகழ்ந்த சாகித்திய விழாவில் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு சேர்ந்திருப்பதும் இந்த ஆய்வின் பெறுமதிக்கு அணி சேர்க்கிறது.
“பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களை மக்கள் புலமையாளராக (public intellectual) இனங் காட்டியுள்ளார் இந்த நூலாசிரியரான திருமதி தாரணி ஆருரன். எந்தவொரு அறிஞருக்கும் மக்கள் புலமையாளராக அவதாரம் பெறுவதே இலக்காகும். பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் இந்தப் பூரணத்துவத்தை எய்துவதில் அவரது கலை, இலக்கியப் படைப்பு அனுபவங்கள் பெரிதும் பங்களித்துள்ளமையை இந்த ஆய்வு தெளிவுபடுத்தி நிற்கின்றது” என்று இந்த நூலை மிகக் கச்சிதமானதொரு பார்வை வழி அணிந்துரை செய்திருக்கிறார் பேராசிரியர் முனைவர் சீ.பக்தவத்சல பாரதி.
“ஆளுமைகள் கலைக் களஞ்சியங்களைத் தாண்டி “உயிர் மெய்மை” (hyper real) சார்ந்தவர்கள், “மெய்யானதை விட மெய்யானவர்கள்” மீவியல் சார்ந்தவர்கள் கூட. இந்த இனவரையியல் அணுகுமுறையை இந்நூல் பிரதிபலிக்கிறது” என்று தமிழர் இன வரையியல் கழகத்தார் இந்த நூலைத் தமது முதல் வெளியீடாக பதிப்புரை வழங்கியிருக்கிறார்கள்.
“கலைஞரான துணைவேந்தர்” பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களின் பன்முகப்பட்ட கலைத் திறனை, ஆக்ககர்த்தா என்ற நிலையில் இயங்கியதை அவற்றின் பரிமாணங்களோடே வகைப்படுத்தி இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
கலைத்துறையில் இயங்குபவருக்கோ அன்றி ஆக்க இலக்கியம் சமைப்பவருக்கோ இவர்களின் வாழும் சூழல், வாழ்வியல் பின்னணியே குறித்த இயக்கத்தினை ஆழமாகக் கொண்டு நடத்தக் கூடிய ஒரு பின்புலமாக இருக்கும். பேராசிரியரின் ஊரான தென் மயிலை, கட்டுவன் விவசாயக் கிராமப்புலத்தில் அந்த ஊரை அபிவிருத்தி செய்யவென முனைப்போடு எழுந்த இளைஞர் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட பொதுப்பணிகளால் எவ்விதம் இந்த ஊர் வளம் பெற்றது என்றும், அத்தோடு வீரபத்திரர் வசந்தன் நாடகங்களின் வழி கிராமியக் கலை வடிவங்களும் மலர்ச்சி பெற்றன என்று கூறும் ஆய்வாளர், இந்தப் பின்னணியே பேராசிரியர் என்.சண்முகலிங்கனின் கலை, இலக்கியப் பங்களிப்புகளில் நிகழ்த்திய தாக்கமாக நிறுவுகிறார். ஆக இந்த ஆய்வு நூலை வெறுமனே ஒரு தனி நபர் ஆளுமை குறித்த ஆய்வுத் தேடலன்றி, அவர் வாழ்ந்த சூழல் பற்றிய வரலாற்றுப் பதிப்பித்தலுமாக அமைகிறது. இத்தகு வாழ்வியலில் சமய மற்றும் சமுதாய விழாக்களில் பேராசியரின் இளமைப் பராயம் வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வெளிப்பாடு வழியாகத் தொடங்குவதை விளக்குகிறார்.
பேராசிரியரின் கல்விப் பின்னணி பற்றி விளக்கும் போது கூட தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி இவரின் கலை, இலக்கியப் பணிகளுக்குத் தீனி இட்டதையும் சம்பவ உதாரணங்களோடு காட்டுகிறார்.
தன்னுடைய பிறந்த சூழல், கல்விச் சாலை என்று தான் இயங்கும் ஒவ்வொரு களத்திலும் தன்னுடைய கலையார்த்தை வளர்த்துச் செல்லும் சண்முகலிங்கன் அவர்களின் அடுத்த பாய்ச்சலாக ஊடகத்துறையில் அவர் தடம் பதித்தது கூட அவரின் மேற்படிப்பின் நிமித்தம் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்குப் போனதன் வரவாக அமைகிறது.
இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெறும் சினிமாவின் பொதுசனத் தொடர்பாளராக மட்டுமன்றி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது ஒரு பொற்காலம். அப்பேர்ப்பட்டதொரு சாதனையின் பின்னால் அறிவுசால் கலைஞர்களும், தமிழை உளமார நேசித்த சர்வகலாசாலை வழியே வந்த கல்விமான்களது பங்களிப்பும் இருந்ததென்றால் மிகையாகாது. இந்தச் சாரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி உள்ளிட்ட ஆளுமைகளது வானொலிப் பங்களிப்பைத் தனியானதொரு ஆய்வாகக் கூடச் செய்ய முடியும்.இங்கே பேராசிரியர் சண்முகலிங்கனது வானொலி ஊடகப் பணி சிறுவர் நிகழ்ச்சி தொட்டுப் பரந்து விரிந்தது. அதில் மிக முக்கியமானது ஈழத்து மெல்லிசை இயக்கத்தில் இவரது செழுமையான பங்களிப்பு. ஈழத்துப் பாடல்களை எழுதியதோடு அவற்றைப் பாடியும் பதிப்பித்தார்.ஈழத்து மெல்லிசைப் பாடல்களின் மூலவர்களில் முதன்மையானவரான எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களோடு இணைந்து செய்திட்ட வானொலி ஊடகப் பணியில் இன்றுவரை மகத்தானதாகக் கொள்ளக் கூடிய ஒரு படைப்பு “இதய ரஞ்சனி” யின் பண்பாட்டுக் கோலங்கள்.இந்த வானொலிப் படைப்பு பேராசிரியரின் முதல் நூலாகவும் அச்சு வாகனமேறியது.
பேராசிரியரின் அடுக்கான வாழ்வியல் மாறுதல்கள் அவரின் கலை இலக்கியப் படைப்புகளில் எழுந்த பரிமாணங்களாகவே அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
தன் பிறந்தகத்தில் பிள்ளைப் பராயத்திலிருந்தே கலைக்கும் தனக்குமான பந்தத்தை ஒட்டியவர் பின் பள்ளிக்காலத்திலும், பல்கலைக்கழக வாழ்விலும் தொடர்ந்த தன் முயற்சிகளை யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியேற்ற போதும் கை விடவில்லை என்பதை அந்தந்தக் காலகட்டத்தில் பேராசிரியர் எடுத்துக் கொண்ட கலை, இலக்கிய முயற்சிகளை விபரிக்கிறது இந்த நூல். இதன் வழியாக பேராசிரியருக்கும் கலை, இலக்கிய முயற்சிகள் மீதான காதல், அதனைத் தொடர்ச்சித் தன்மையோடும் புதிய புதிய பரிமாணங்களோடும் வெளிப்படுத்தியதைக் காண முடிகிறது. அதே சமயம் தன்னுடைய கல்வி முயற்சிகளில் பல படிகளையும் கடக்கிறார். சமூகவியல் துறையின் தந்தையாக அடையாளப்படுகிறார். அதன் பின்னணி குறித்தும் விரிவாகப் பகிர்கிறது.யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளேயும், வெளியேயும் கல்விச் சமூகத்தில் பேராசிரியர் சண்முகலிங்கன் நிகழ்த்திய மாற்றங்கள், பணிகள் பதிவாகியிருக்கின்றன.
ஆக்க இலக்கியத்துறையில் கவிதை, புனைகதை, நாடகப் பிரதி ஆக்கங்கள், வாழ்க்கைச் சரித இலக்கியங்கள் என்று பரந்து விரியும் பேராசிரியரின் எழுத்துப் பணியையும் இந்த ஆய்வு முன்னெடுத்து விரிவாகப் பார்க்கின்றது.
“வீரபத்திரர் கோயில் வீதி;செம்பாட்டு மணல் பரப்பில்நாதஸ்வரக் கச்சேரிமேளச்சமா லயங்களில்நாம் கலந்த நாட்கள்உடன் வேண்டும்ஊமைக்குழல் ஊதி..ஊதிஐயோநெஞ்சு வெடிக்கும்இந்த அவலம் முடிக்கும்நேச இசை மீண்டும் வர வேண்டும்…..நம் பிறவிப் பயன் காண வேண்டும்.”
பேராசியர் சண்முகலிங்கன் அவர்களது கவி ஆற்றலைப் பற்றிய ஆய்வில் சமூகம் மீதான அவரின் பிரக்ஞையைத் தான் காண முடிகிறது. இயற்கையும், காதலையும் பாடி விட்டு வட்டம் போடும் சாதா கவிஞர் அன்றி, தன் மண் மீதான நேசமும், மொழி மீதான பாசமும் ஏக்க வரிகளாகக் கவிதைகளாக உருக் கொண்டிருக்கிறது இவரிடமிருந்து. ஈழத்தின் அரசியல், சமூகச் சிக்கல்களும் இவ்விதம் கவிதைகளாக வெளிப்பட்டிருக்கின்றன.மொழியாக்கக் கவிதை முயற்சிகளில் வரிக்கு வரி அச்சொட்டான தமிழாக்கல் அன்றி நாம் புழங்கும் சொல்லாடலிலேயே மாற்றியிருப்பதால் அங்கே அந்நியம் தொலைந்து நெருக்கமாகப் படைப்பை அணுக முடிவதோடு நம் வாழ்வியலிலும் பொருதிப் பார்க்க முடிகிறது. குழந்தைப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் ஆகிய இசையான கவிதைகள் என்று கவிதை உலகிலும் இவரது பரிமாணம் பரந்துபட்டிருப்பதை ஆய்வு விளக்கிச் செல்கிறது.
கவிதை இலக்கியம் போன்றே தன் சிறுகதைகளிலும் சமூக நீதிக்கான குரலாக ஒலிக்கிறார் என்று ஆய்வாளர் முன் வைக்கிறார். அது வர்க்க பேதங்களில் இருந்து போரியல் வாழ்வு, இன முரண்பாடு என்று பொது நீதிக்குள் அடக்கப்படுவதை “ஊழித் தாண்டவம்” என்ற சிறுகதைத் தொகுதி வழியாகக் காட்டுகிறார்.
நாவல் இலக்கியத்திலும் சான்றோர் எனக் கேட்ட தாய் என்ற சிறுவர் நாவல், வரம்புகளும் வாய்க்கால்களும் என்று படைக்கிறார்.என் அப்பாவின் கதை, என் அம்மாவின் கதை, என் அக்காவின் கதை என்று வாழ்க்கைச் சரித இலக்கியங்களின் வழியாக“கல்வெட்டு மரபில் நின்று விலகிய” படைப்புகளாகப் புதுமை செய்கிறார். சேமிக்கப்படாத சக மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை?
பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள்வெறுமனே புனைகதை இலக்கியத்தில் நின்று விடாது புலமை சார் படைப்புகளையும் கொணர்ந்திருக்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமூக பண்பாட்டியல் சார்ந்த அறிவைப் பரவலாக்கும் நோக்கில் மாணவருக்கும், சாதாரண மக்களுக்குமாக் இவர் எழுதிய நூல்கள், மானுடவியல் சார்ந்து இவர் மேற்கொண்ட ஆய்வான A New Face of Durga : Religious and Social change in Srilanka உள்ளிட்ட படைப்புகள் குறித்த பின்னணியோடு இவரின் புலமை சார் படைப்பிலக்கியம் குறித்துப் பதிவாகியிருக்கின்றது.
இந்த ஆய்வு நூல் பேராசியரின் கலை, இலக்கிய முயற்சிகளின் புகைப்பட ஆவணமாகவும் தேக்கியிருக்கின்றது.
ஒரு படைப்பாளி தான் வாழும் சூழல், அங்கே கிட்டும் வளங்களைக் கொண்டு புதிய புதிய முயற்சிகளோடு இயங்குவார். பேராசிரியர் குறித்த இந்த ஆய்வு நூலின் சாரமாக இதுவே வெளிப்படுகிறது. கல்வியாளர் தாரணி ஆரூரனால் ஆய்வு நோக்கில் எழுந்த இந்த நூல் வெறும் ஆய்வுக் கண்ணோட்டம் கடந்து நமது ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் நம்மிடையே வாழ்ந்து வரும் பல்துறை வித்தகரின் பரிமாணங்கள் என்ற வகையில் பொது நோக்கில் பரவலாகச் சென்று சேர வேண்டிய படைப்பிலக்கியமாகும்.
இந்தப் பகிர்வின் ஒலி வடிவம் Videospathy இல்
https://youtu.be/E2RHjuufNIY

கானா பிரபா29.01.2020