ஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி

இப்போது கொரானா வைரஸின் தாக்கத்தை விட, Toilet Paper எங்கு கிடைக்கும் என்ற கவலை தான் சிட்னி மக்களை ஆட்டிப் படைக்கிறது. Toilet Paper syndrome என்ற புது வகை நோய்க்கூறு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வார இறுதியில் இலங்கை, இந்திய மளிகைக் கடைக்குப் போனேன், அங்கு ரசப் பொடிப் பெட்டிகள் எல்லாம் காலி. கொரானாவைத் தீர்க்கும் அரு மருந்து என்று அதையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. ஈழத்தில் எண்பதுகள், தொண்ணூறுகளைக் கழித்தவர்களுக்கு இந்தப் பொருட் தட்டுப்பாடு குறித்துப் பூரண அனுபவத்தைப் பெற்றிருப்பர்.

அந்தக் காலத்தில் ஈழ நாடு, ஈழ முரசு, உதயன் போன்ற நாளேடுகளில் தமிழர் பகுதிகளில் எடுத்து வரத் தடையாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சால் பட்டியலிட்ட பொருட்கள் தலைப்புச் செய்திகளாகவோ அல்லது இரண்டாம் பக்கச் செய்தியாகவோ இருக்கும். மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல், பற்றறி (Battery), கற்பூரம் என்று கிட்டத்தட்ட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டிருப்பார்கள்.
இவையெல்லாம் வெடி பொருட்களைப் பாவிக்க ஏதுவானவை என்று பாதுகாப்பு அமைச்சின் நம்பிக்கை. ஆனால் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வேறு வழியால் (கடலாலோ தரையாலோ) வந்து சேருவதால் அவர்களுக்கு இந்தத் தடையெல்லாம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

யாழ்ப்பாணம் போகும் வீதியின் இரு மருங்கும் புதிது புதிதாக மண்ணெண்ணைக் கடைகள் வந்து விட்டன. ஒரு லீட்டர், இரண்டு லீட்டர் சோடாப் போத்தல்களில் வெண் சிவப்புத் திராவகங்களாக மண்ணெணெய் நிரப்பப்பாட்டு விற்பனையாகும். மண்ணெணையில் ஓடும் மோட்டார் வாகனங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்களை ஜெனரேட்டராக மாற்றிப் பாவித்தல் என்று மக்களும் மாற்றீடுகளைத் தேடத் தொடங்கி விட்டார்கள். மண்ணென்ணைக் கடைப் பணக்காரர்கள் ஒரு புறம், இன்னொரு புறம் இந்த மண்ணெண்ணைக் கடைகளில் தீ பரவிக் காயப்பட்டோரும், இறந்தோரும் உண்டு.

சைக்கிள் டைனமோ வழியாகப் பாட்டுக் கேட்ட கதைகள் எல்லாம் தனியாக எழுத வேண்டியவை.

பொருளாதாரத் தடை ஒரு பக்கம், இன்னொரு பக்கம் கடும் போர்ச் சூழலால் தென்னிலங்கையில் இருந்து வடக்குப் பிரதேசம் நோக்கிப் பொருட்களை எடுத்து வர முடியாத சூழல் இன்னொரு புறம் என்று இரண்டு பக்கமும் வேல் பாய்ச்சியது.

சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.

சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.
பனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு.பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.

எரிபொருளுக்கு மட்டுமல்ல எரிக்கும் பொருட்களுக்கும் அப்போது தட்டுப்பாடு. விறகு தேடி ஊரூராய் அபைந்து, வெட்டிய விறகுகளைத் தம் சைக்கிள் கரியரில் கட்டிக் கொண்டு கூவிக் கூவி விற்பர். இந்தத் தொழிலில் விமானக் குண்டு வீச்சில் எரிந்து விறகோடு விறகாய்ப் போனவரும் உண்டு.

செங்கை ஆழியான் தனது “யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று” என்ற குறு நாவலில், தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்து வாழ்வியலில் வன்னிப் பக்கம், அது தடைப்பட தென்மராட்சி என்று விறகு தேடிச் சைக்கிளின் பின் கரியரில் ஒரு ஆள் நீளத்துக்குக் கட்டி எதிர்க்காற்றுக்கு முகம் கொடுத்து வலித்து வலித்து ஓடி, எதிர்ப்படும் போர் விமானங்களைக் கண்டு போட்டது போட்டபடி விட்டு விட்டு மறைவாக ஓடி, அல்லது அந்த விமானங்களின் குண்டுக்கு அந்த இடத்திலேயே இரையாகிப் போன மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மின்சாரம் இல்லாத அந்த ஐந்து ஆண்டு வாழ்க்கையை, குப்பி விளக்கில் படித்த காலத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

http://www.madathuvaasal.com/2013/01/blog-post_17.htmi

பேப்பருக்கும் தட்டுப்பாடு. அதனால் ஒற்றை றூல், இரட்டை றூல் கொப்பிலளின் தாள், அதுவும் தட்டுப்பாடாகி விட, தடித்த அட்டைகளில் தான் பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் அச்சிடப்பட்டன.

அண்ணா கோப்பி என்பது உள்ளூர் உற்பத்தியாகப் பிரபலமாக இருந்த காலத்தில் ஜீவாகாரம் என்ற சத்துணவு, இனிப்பு வகைகள் தயாரிப்பு என்று தம் தொழிலை விரிவுபடுத்தினர்.
அப்போது சீனி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவியபோது “அண்ணா இனிப்பு” தான் அப்போது இணுவிலைத் தாண்டி எல்லா மூலையில் இருந்து வந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிப் போகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது அண்ணா கோப்பி நிறுவனர் திரு நடராஜா நினைத்திருந்தார் அந்த உற்பத்திகளை முடக்கிக் கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இருப்புத் தீரும் வரை அது தேடி வந்தோருக்குப் போய்ச் சேர்ந்தது.

“பதுக்காதே பதுக்காதே
பொருட்களைப் பதுக்காதே”

என்று பதுக்கல் வியாபாரிகள் மீதும்,

“அரசே! உன் பொருளாதாரத் தடையை
அப்பாவி மக்கள் மீது விதிக்காதே”

என்று அரசாங்கத்தைச் சாடியும் ஊர்வலங்கள் போவோம். விடுதலைப்புலிகளின் தமிழீழக் காவல்துறையும் இந்தப் பதுக்கல் வியாபாரிகளைக் கண்காணித்துத் தண்டனை கொடுத்தது.

தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்காணிக்க வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்றும் போடப்பட்டிருக்கும். அந்த வழியால் கள்ளமாகப் பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு அந்தப் பொருட்களின் வீரியத்தைப் பொறுத்துத் தண்டனையும் கிடைக்கும். கற்பூரம் கடத்தினவரை அந்த இடத்தில் வைத்து முழுக் கற்பூரப் பெட்டிகளையும் சூடம் ஏற்றிக் கரைத்த ஆமிக்காறன் கதை எல்லாம் உண்டு.

அப்போது நடந்த உண்மைச் சம்பவத்தை நினைத்து இப்போதும் சிரிப்பேன்.
அந்தக் காலத்துச் சண்டியனாக இருந்தவர், மூப்படைந்து கிழப்பருவத்திலும் பற்றறி (Battery) கடத்திக் கொண்டு போனால் ஊரில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று தன் வேட்டிக்குள் வைத்துக் கடத்தினார். வவுனியா ஆமிக்காறனிடம் அகப்பட்டு விட்டார்.
முதியவர் என்றும் பாராமல் செமத்தியான அடி விழுந்தது. அடித்துப் போட்டு ஆமிக்காறன் ஓடு என்று கலைத்து விட்டான். அந்தக் கிழவர் விட்டரா?

“சரி அடிச்சுப் போட்டாய் தானே
இனி பற்றறியைத் (Battery) தா?

என்று கேட்டாரே பார்க்கலாம்.

கானா பிரபா
09.03.2020

ஈழ நாடு பத்திரிகைப் படம் நன்றி : ஈழத்து நூலகம்

பாலா மாஸ்டரின் தமிழ் வகுப்பும் நளவெண்பாக் காதலும் ❤️

பெடியள் எல்லாம் நிறை கொள்ளாக் காதலோடு

அமர்ந்திருப்போம் பாலா மாஸ்டரின் வகுப்பில். இல்லையா பின்ன, அந்தக் காலத்தில் இதயம் படத்தைப் பார்த்து விட்டு “பொட்டு வச்ச ஒரு வட்ட நிலா” பாடிக் கொண்டும், வைரமுத்துவின் கவிதைகளில் காதலை மட்டும் அன்னப் பட்சி போலப் பிரித்துப் பருகியும், மு.மேத்தாவின் நந்தவன நாட்கள், ஊர்வலம் போன்ற கவிதைத் தொகுதிகளையும் அலசிப் போட்டு அவற்றில் இருக்கும் காதல் கவிதை நறுக்குகளைச் சிலாகித்து எடுத்து வைத்து எப்படா அவளுக்குக் காயிதம் (காதல் கடிதம்) கொடுக்கலாம் என்று சமயம் பார்த்த கழுத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒன்று உருண்ட பள்ளிக்கூடக் காதல் காலகட்டம் அது.

“ஆயிரமாயிரம் சபைகளில் தேடுகிறேன்

அறிமுகமில்லாத உன் முகத்தை”

என்று நிரம்பி வழிந்த அந்த ரியூஷன் சென்ரரில் அவள் எங்கே இருக்கிறாள் என்பதைத் தேடவும் மு.மேத்தா தான் மனசுக்குள் முணுமுணுப்பார்.

“தேசங்களையெல்லாம்

சுற்றி வந்தாலும்

என் கால்கள்

உன் தெருவிற்கே

வந்து சேருகின்றன”

ரியூசன் முடிந்து திரும்பும் சைக்கிள் பாரிலும் மு.மேத்தா தான் குந்தியிருப்பது போல, கடந்து போகும் அவளின் சைக்கிள் திருமுகத்துக்காக மனப் பாடம் செய்த “கண்ணீர்ப் பூக்கள்” கவிதை தான் உசார்ப்படுத்தும்.

இப்படி வகுப்புக்கு வெளியே புதுக்கவிதைகளைத் தேடிப் பிடித்துக் காதலோடு பொருத்திய காலத்தில் வகுப்புக்குள்ளேயே காதல் பாடம் நடத்தினால் எப்படியிருக்கும்?

“என்ன பிரபு!

புகழேந்திப் புலவர் என்ன மாதிரிக் காதலைச் சொல்லியிருக்கிறார் பாரும்”

பாலா மாஸ்டர் நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே புகழேந்திப் புலவரின் “நளவெண்பா” பாடமெடுப்பார்.

தமிழ்ப் பாடமெடுத்த பாலா மாஸ்டரின் வகுப்பில் மட்டுமல்ல பாரபட்சமில்லாமல் கணிதம், விஞ்ஞானம் படிப்பிச்ச அருட்செல்வம் மாஸ்டர், வணிகக் கல்வி படிப்பிச்ச மகேஸ் மாஸ்டர் என்று எல்லா வகுப்பிலும் குழப்படிகாறப் பெடியன் என்றால் நான் தான். குழப்படி என்றால் அதிக பட்சம் ஆண், பெண் பாராமல் கலாய்ப்பது, கூச்சல் போடுவது அதுக்கு மேல் நாகரிகத்தின் எல்லையை நானும் தாண்டவில்லை. ஆனால் நளவெண்பா வந்ததில் இருந்து நானும் அமைதியாகி விட்டேன்.

நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சாம்

ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா – வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை யரசு.

தன் புருவத்தில் மை தீட்டி, கறுத்தப் பொட்டும், இரட்டைப் பின்னலுமாக நளாயினி நடந்து வரும் போது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குள் தமயந்தி வருவது போல ஒரு பிரமையில் திக்கித்து நிற்பேன். அந்த நேரம் நளாயினி மேல் ஒரு மானசீகமான காதல் வந்து சேர்ந்தது. அதற்கு நளவெண்பா தான் உடந்தை. மானசீகக் காதல் என்று நான் சொல்லக் காரணம் உலக அழகி ஐஸ்வர்யா என்னதான் கவர்ச்சிகரமாக உடுத்தினாலும் அவர் மேல் ஒரு காமப் பார்வை வந்ததில்லை. அது போலத் தான் நம் பள்ளிக்காலத்துக் காதலிகளும்.

“டேய் பிரபு! நளன் வாறாண்டா”

நளாயினியை நளன் ஆக்கி என்னைத் தமயந்தி ஆக்கி விட்டார்கள் அருட்செல்வம் மாஸ்டரின் வகுப்பில் படிக்க வரும் பெடியள். நமுட்டுச் சிரிப்போடு அவர்கள் சொல்ல, A5 அளவு தமிழ் இலக்கியப் புத்தகத்தைப் பாதி மறைத்துக் கொண்டே அவளைப் பார்ப்பேன்.

நளாயினி இந்த உலகத்தில் இருந்து நிரந்தரமாக விடை பெற்று விட்டார், ஆனாலும் நளவெண்பா என்ற சொல்லைக் கேட்டாலேயே அவர் தான் நினைப்புக்கு வருவார்.

அருட்செல்வம் மாஸ்டர் வீட்டின் அதிகாலை ஆறு மணி வகுப்பு ஒன்றில் அருட்செல்வம் மாஸ்டரின் வகுப்பாக இருக்கும், இல்லாவிட்டால் பாலா மாஸ்டரின் தமிழ் வகுப்பாக இருக்கும். பாலா மாஸ்டர் மானிப்பாயில் பிற்ஸ்மன் என்ற கல்வி நிறுவனத்தைத் தன் தம்பி பிரபாகரனோடு இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். இப்பவும் அது தொடர்கிறது என்றே நினைக்கிறேன். பாலா மாஸ்டரின் தம்பி பிரபாகரன் கணக்கியல் பாடமெடுப்பவர். அவர் கொஞ்ச நாள் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டிலும் வந்து படிப்பித்தவர்.

அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் ஒரு வாணி விழாவுக்காகப் பாட்டுக் கச்சேரி வைத்தோம். நான் தான் தொகுப்பாளர். அரவிந்தன், குபேரன் எல்லாம் பாடினார்கள். அதைப் பார்த்து விட்டுத் தங்கள் பிற்ஸ்மன் நிறுவன வாணி விழாவிலும் எங்களை அரங்கேற்றினார் பாலா மாஸ்டர். இசை மேடை அனுபவத்தை அப்பவே எனக்குத் தொடக்கி வைத்தது.

சுருள் முடி கேசமும், கொழுத்த முகமுமாக பாலா மாஸ்டரைப் பார்க்கும் போதே ஒரு பாகவதர் போலத் தோற்றம் கொண்டவர்.

அருட்செல்வம் மாஸ்டர் சோக்கட்டி பிடிப்பதே ஸ்டைலாக இருக்கும். டஸ்டரைக் கூடக் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் வைத்து இலாகவமாக எடுத்துத் துடைப்பார். ஆனால் பாலா மாஸ்டரின் கை முழுக்க சோக்கட்டித் தூள் படர்ந்து கை முழுக்க மெஹந்தி போட்டது போலப் படையாக இருக்கும். அவருக்கு சோக்கட்டித் தூள் அலர்ஜி வேறு. இடைக்கிடைத் தும்முவார்.

“பிள்ளையள்! போன கிழமை என்னத்திலை விட்டனான்?

“சேர்!

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்

மாமனைவாய் வாழும் மயிற்குலங்கட் – காமன்

படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத

நடைகற்பான் வந்தடைந்தே யாம்”

முந்திரிக் கொட்டையாக எழுந்து நின்று சொல்வேன்.

“பாத்தியளே பிரவுக்கு நளவெண்பா எண்டால் காணும்”

என்று குலுங்கிச் சிரித்து விட்டு நளவெண்பாவின் அடுத்த பாடலுக்குச் சொல் விளக்கம் கொடுப்பார்.

எங்களது உயர் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் புகழேந்திப் புலவர் எழுதிய “நளவெண்பா”, உமறுப் புலவர் எழுதிய “சீறாப் புராணம்”,

சுவாமி விபுலானந்தர் தன் நண்பர் கந்தசாமிப்பிள்ளையின் பிரிவால் வாடி எழுதிய “கங்கையில் விடுத்த ஓலை” , நாலடியார் என்று மூன்றுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்கள். ஆனால் அவற்றைச் சுவை பட விளக்கி, மனப் பாடமே செய்யாமல் மனதில் பதிய வைத்து, பொருளைக் கூடப் பாடமாக்காமல் இயல்பாகவே புரிந்து எழுத வைக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தது பாலா மாஸ்டரின் கற்பித்தல் முறைமை தான்.

ஈழத்தின் தலை சிறந்த தமிழ் இலக்கண ஆசிரியர் பண்டிதர் சு.வே (சு.வேலுப்பிள்ளை) யின் மாணவர் பாலா மாஸ்டர். அதனால் தமிழ் இலக்கண வகுப்பில் சு.வே எழுதிய இலக்கணப் பாட நூலைத் தான் கையில் வைத்திருப்பார். அத்தோடு அடிக்கடி தன் குருவின் பெருமையைப் பேசுவார் பாலா மாஸ்டர்.

தமிழ் வகுப்பில் ஆர்வத்தோடு (!) முன் வாங்கில்

இருந்து படித்த என் மீது பாலா மாஸ்டரின் பரிவும் நாளாக நாளாக அதிகரித்தது. அதுவரை நான் செய்த குழப்படி, கூச்சலைக் கடைசி வாங்கில் இருக்கும் பெடியள் யாராவது செய்தால்,

“பிரபு! உவங்களுக்குச் சபைப் பழக்கம் தெரியாது போல” என்று சினந்து குரல் கொடுப்பார். அந்த நேரம் பாட்ஷா ஒரு மாணிக்கமாக மாறிய மன நிலையில் இருப்பேன்.

“பிள்ளையள்! இஞ்சை பாருங்கோ” என்று மிகவும் அன்பொழுகப் பேசிக் கொண்டே அடுத்த பாடலை விபரிப்பார் பாலா மாஸ்டர்.

கூர்ந்து அவதானித்தால் ஒரு சுவையான பண்டத்தை ரசித்து உண்டு பொச்சடித்துக் கொண்டே பேசுவது போல இருக்கும்.

பாலா மாஸ்டரால் தான் நான் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் “இந்து நாகரிகம்” பாடத்தை எடுத்தேன் என்று இன்று அவருக்கு நான் சொல்லவில்லை. அவர் அந்த நேரம் என் மீது நிறைய நம்பிக்கை கொண்டிருந்தார். பெறுபேறுகள் வந்த போது

“பிரபுவுக்கு நல்ல றிசல்ட் வந்திருக்குமே” என்று ஆவலோடு கேட்டிருந்தார். கொக்குவில் இந்துவில் படித்த இரண்டு பேர் திறமைப் புள்ளிகளை எடுத்திருந்தார்கள். அதில் ஒருவன் நான்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு

கம்போடியாவின் இந்துக் கோயில்களையும், பாலித் தீவின் இந்துப் பண்பாட்டைத் தேடி மேய்ந்த போது கூடவே பாலா மாஸ்டர் நடந்து வருவது போல இருக்கும். அவர் படிப்பித்த சோழ, நாயக்கர், பல்லவர் காலத்துக் கட்டடக் கலை அசரீரியாக் கேட்பது போல இருந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த அந்தக் கட்டடக் காடுகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் நின்ற போது.

“சேர்!

நான் கம்போடியா போய் இந்துத் தொன்மங்களை ஆராய்ந்து ஒரு நூல்

எழுதினனான்” என் “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கிக் கொடுத்தேன், அப்போது 2010 இல் தாயகத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் அவர் படிப்பித்துக் கொண்டிருந்தார். ஆசையோடு வாங்கிக் கட்டியணைத்துக் கொண்டார்.

அடுத்த தாயகப் பயணத்தில் மீண்டும் அதே அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பாலா மாஸ்டரைச் சந்திதேன்.

“நான் படிப்பிச்ச பிள்ளை எழுதின புத்தகம்” என்று பெருமையோடு தன் மாணவர்களுக்கு என் புத்தகத்தைக் காட்டியதாகச் சொன்னார் பாலா மாஸ்டர்.

அந்த இடத்தில் அவருக்கு நான் குரு தட்சணை கொடுத்த மன நிறைவில் இருந்தேன்.

கானா பிரபா

04.03.2020