செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு

செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்”

குரல் பகிர்வு : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

வீடியோஸ்பதி காணொளி வலைத் தளமூடாக ஒரு புதிய முயற்சியை முன்மெடுக்க வேண்டி, ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர்களில் இருந்து சம காலத்தவர் வரை அவர்களது சிறுகதைகளை ஒளி, ஒலி வடிவில் வெளிக் கொணரும் தொடரை ஆரம்பிக்க முனைந்தேன்.

ஆனால் இதை ஒரு கூட்டு முயற்சியாக, இலக்கிய வாசகர்களின் வழியாகவே பகிரும் நோக்கில் வரும் முதல் படைப்பு இது.ஈழத்தின் மிக முக்கியமானதொரு சிறுகதை, நாவல் படைப்பாளி, வரலாற்றாசிரியர் செங்கை ஆழியான் அவர்களது சிறுகதையான “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” என்ற சிறுகதையை டொமினிக் ஜீவா அவர்களது மல்லிகை தனது 200 வது இதழில் (ஜூலை, 1986) இல் பகிர்ந்தது. அப்போது நான் பள்ளி மாணவன். அந்தச் சிறு வயதிலேயே என்னுள் ஒரு பெரிய அதிர்வலையை உண்டு பண்ணிய சிறுகதை இது.

செங்கை ஆழியான் “மல்லிகைச் சிறுகதைகள்” தொகுப்பை டொமினிக் ஜீவா அவர்களது பவள விழாச் சிறப்பு நூலாக வெளியிட்ட போது மல்லிகை இதழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைளை, அவை ஏன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தொகுத்து வெளியிட்டிருந்தார். அதில் இந்தச் சிறுகதையையும் அவர் இனம் காட்டியதில் இருந்து இதன் கனம் புரியும்.ஈழத்தின் போர் தின்ற சனங்களின் ஒரு முகம் இந்தச் சிறுகதை.

ஈழத்து வானொலி ஊடகப் பரப்பில் நீண்ட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சகோதரி சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களிடம் வீடியோஸ்பதியின் தொடர் முயற்சியைக் குறிப்பிட்டு இந்தச் சிறுகதையை நேற்று முன் தினம் தான் பகிர்ந்திருந்தேன். முழு மூச்சில் படித்து விட்டு சிறுகதையை சிலாகித்து விட்டு உடன் குரல் பகிர்வைச் செய்து பகிர்ந்தார். இவரின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும் குரல் பகிர்வைக் கேட்டதும் திகைத்து விட்டேன். அப்படியே செங்கை ஆழியானுக்கு உருவம் கொடுத்தது போல அபாரமான உரையாடல் ஏற்ற இறக்கங்களுடன், ஒரு மிகச் சிறந்த குறும்படம் போல உருவாக்கி விட்டார்.

இந்தச் சிறுகதையை வெளியிட அனுமதி கோரிய போது பெரு மதிப்புக்குரிய செங்கை ஆழியான் (க.குணராசா)“அப்பாவின் எழுத்துக்கள் மூலமாக அவர் சிரஞ்சீவியாக வாழ்வது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்”என்று அவர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.
இன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். இந்த நாளில் இந்தப் புதிய முயற்சியை ஆரம்பிக்க உதவிய எம் செங்கை ஆழியான் குடும்பத்தினருக்கும், சங்கீதா தினேஷ் பாக்யராஜாவுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

YouTube இணைப்பு

கானா பிரபா

அப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்

இன்று விடிகாலை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்ததுமே அப்போலோ 13 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இன்றோடு (ஏப்ரல் 11) ஐம்பது ஆண்டுகள் என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. விண்ணுலகத்தை உரசிப் பார்த்த விண்வெளி ஆய்வுகளில் தோல்விகரமான முயற்சி இந்த அப்போலோ 13. விண்ணில் ஏவப்பட்ட இந்தக் கலம் ஆக்சிஜன் கலன் வெடித்ததால், நிலவில் மிதிக்காமல் மீண்டும் பூமிக்கே திரும்பி வந்தது. போனவர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள். 13 ஆம் இலக்கம் இங்கேயும் தன் ராசிக்கே உரிய துரதிர்ஷ்ட விளையாட்டைக் காட்டி விட்டதோ என்று எண்ணுவதுண்டு.

நிலவைக் காட்டிச் சோறுண்ட காலம் போய் எங்கள் காலத்தில் வானத்தில் தினம் தினம் நிலவோடு போட்டி போடும் ஒளிக் கொத்துகள் தோன்றுவதுண்டு. அவை போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் இரவிரவாக தாக்குதல் நிலைகளைக் கண்கணித்துக் குண்டு போடுகிறேன் பேர்வழி என்று வானத்தில் மேலே எறிந்து வெளிச்சம் பாய்ச்சும் வெளிச்சக் குண்டுகள். நிலவைப் பார்த்துக் கவிதை பாட முடியாது, எப்ப ஹெலிக்காரனும், பொம்மர் காரனும் வாறான் என்று மேலே பயந்து பயந்து பார்த்த காலங்கள். உலக விடயங்களையும் உள்ளூர் சமாச்சாரங்களோடு பொருத்தி நினைவில் வைக்கும் எனக்கு அப்போலோ என்றதும் நினைவுக்கு வந்தது அப்போலோ சுந்தா என்ற முத்திரைப் பெயரையும் பெற்ற எங்கள் சுந்தா அங்கிள். ஒலிபரப்பாளராகப் பல சாதனைகள் புரிந்த சுந்தா சுந்தரலிங்கம் என்ற அவருக்குக் கிட்டிய மணி மகுடம் அந்த வாய்ப்பு. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது. அப்படியானால் சந்திரனில் மனிதன் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

சுந்தா சுந்தரலிங்கம் அங்கிளின் மன ஓசை புத்தகத்தில் மனிதன் சந்திரனில் காலடி வைத்த கணங்களை ஒலிபரப்பிய தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்ற ஞாபகம் தப்பவில்லை. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். தொடர்ந்து சுந்தா அங்கிள் பேசுகிறார்.

அப்போலோ சுந்தா

என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும், புகழும் தேடித் தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.

அப்பொழுது நான் இலங்கை வானொலியில் இருந்து இலங்கைப் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அன்றைய இலங்கை வானொலி இயக்குநர் நாயகம் நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகிறான். வாய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக வர்ணனை செய்யவுள்ளது. தொடர்ச்சியாக என்றால் ஓரிரு நாட்கள் அல்ல, மூன்று நான்கு நாட்கள். வாய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாகத் தமிழிலும், சிங்களத்திலும் தர முடியுமா? என்று அவர் கேட்டார். என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.

பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது. இரண்டு பேருமே “நிச்சயம் முடியும்” என்று உறுதி கூறினோம். அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக்கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாகத் திரையிட வைத்தார்கள். திரையிடும் போது தான் உண்மையாகவே எப்படி இது நடக்கப் போகிறது, எப்படி அவர்கள் பேசப் போகிறார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழிலோ, சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று, ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும், ஆங்கிலத்தை அவர்கள் பேசினாலும், அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான் வெளிப் பிரயாணத்துக்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற் பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறு விதமாக இருந்தன. இதனைப் படங்கள் பார்த்த பின்னர் தான் நாம் அறிந்தோம். சாதாரணமாகப் பாராளுமன்றத்தில் பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும். அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, அவர்கள் பேசும் மொழி, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வான்வெளிக்களங்களில் என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கிறார்கள் என்ன மாதிரியாக அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அமெரிக்கன் தூதரகம் மிகவும் ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்பப்போ தேவையோ அப்பப்போ எல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இத்தனை உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்தவர்கள் இவர்கள் இந்த நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும், மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள். பேராசியர் குலரத்தினம், இவர் புவியியல் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். பேராசிரியர் ஏ டபிள்யூ மயில்வாகனம், இவர் பெளதீகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்றொரு இளைஞர். அவர் ஒரு விஞ்ஞானி. இவர்களை விட கோபாலபிள்ளை மகாதேவா என்னும் ஒரு விஞ்ஞானி, , பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு குமாரசாமி இப்படியாக ஐந்து பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். வொய்ஸ் ஒப் அமெரிக்கா தருகின்ற விடயங்களுக்கு இடையிடையே விளக்கம் கொடுப்பதற்கும், அதே வேளையிலே நாம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது, இன்னும் உதவியாளர்கள் தேவை என்பதற்காக இவர்கள் ஒழுங்கு செய்யப்பட்டனர். அவர்களது உதவியும் எமக்குத் தேவையாக இருந்தது.

எங்களுடைய ஒலிபரப்பு எவ்வளவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்குச் சான்றாகச் சில விடயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலிக்கு அதுவும் தமிழ்ப் பணிக்கு ஒரு தனிப்பட்ட வசதி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது நேயர்களைப் பொறுத்த மட்டிலே இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவில் உள்ளவர்களும் எமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கின்றது. அப்பொழுதும் இருந்தது. ஆக முக்கியமாக சந்திர மண்டலம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதனாலும், தமிழிலே அது தொடர்பான எந்தவித நிகழ்ச்சிகளும் இருக்கவில்லை என்பதனாலும் எமது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு அன்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் கூட எங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி லட்சம் பேர் என்று சொல்லலாம். அவ்வளவு கடிதங்கள் வந்தன. ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்துக்குப் போயிருந்த போது சுந்தரலிங்கம் வந்தால் இங்கே வரச் சொல்லுங்கள் என்று திரு நெவில் ஜெயவீர சொல்லி வைத்து இருந்தாராம். அவரின் அழைப்புக் கிடைத்ததும் அவரிடம் போனேன். அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தன் உதவியாளரைக் கூப்பிட்டு அந்த சாவியை எடுத்து வரச் சொன்னார். என்னையும் கூட்டிக் கொண்டு அவருடைய காரியாலயத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். சிறிய அறை அது. கதவைத் திறந்ததும் ஆயிரக் கணக்கான போஸ்ட் கார்ட் கடிதங்கள் குவிந்து வீழ்ந்தன. அதைப் பார்த்துக் கொண்டு அவர் என்னைக் கட்டித் தழுவி இவை தான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்று மிகவும் பெருமையுடன் சொன்னார். இவ்வளவு கடிதங்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவை என்பது தான் முக்கியம். அவ்வளவு கடிதங்களையும் அவர் பிரித்துப் படித்து, அவருக்குத் தமிழ் ஓரளவு தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லாவற்றையுமே அவர் பார்த்துக் கணக்கெடுத்து இவ்வளவு கடிதங்கள் எங்களுக்குத் தென்னிந்தியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்று சொன்ன போது பெருமையாகத் தான் இருந்தது. அவர் பின்னர் இலங்கையிலே உள்ள பத்திரிகைகளுக்கு எழுதி விஷயத்தை விளக்கி எங்களுக்கு இவ்வளவு நண்பர்கள் தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்று விளம்பரப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி அப்பொழுது இலங்கை வானொலி செய்த இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிறெட் பெரேரா என்ற நண்பருக்கும் எனக்கும் தனது கைப்படக் கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதி கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட “அப்போலோ சுந்தா” என்று அழைக்க ஆரம்பித்தார்கள் ! இது எனது வாழ்க்கையிலே கிடைத்த பெரும் அனுபவம். பெரும் பாராட்டென்று சொல்வேன்.
மூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது “மன ஓசை” நூல் வழியே எழுதியதை மேலே தட்டச்சும் போது கண்கள் பூத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்து வந்தும் விட்டது. எப்பேர்ப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்டி விட்டு மெளனமாகப் பயணித்து விட்டார்கள் நம் ஊடகத்துறை முன்னோர்கள்.

கானா பிரபா

11.04.2020

படம் நன்றி : ஈழத்து நூலகம்

கலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)

ஈழத்தவரால் மரபுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு, நிகழ்த்திக் காட்டிய தருணத்தில் வில்லிசைக் கலை என்பது பள்ளிக்கூடத்தில் இருந்து கோயில்கள், வாசிகசாலைகள் என்று கடைக்கோடி ரசிகர்கள் வரை கட்டியெழுப்பப்பட்ட மரபாக விளங்கியது.

அந்த வகையில் இந்த வில்லிசைக் கலைக்குப் பெருமை சேர்த்தவரில் நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களின் பங்கு புலம் பெயர் சூழல் வரை தடம் பதித்தது.

இன்று எங்களின் பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களது பிறந்த நாளில் அவர் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நிதிக்கான வில்லிசை நிகழ்வு நடத்த அவுஸ்திரேலியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் வருகை தந்தபோது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் நான் எடுத்த பேட்டியைப் பகிர்கிறேன்.

🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅

அன்புச் சகோதரர் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா