நடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது

இரு வாரங்களுக்கு முன்னர் திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளுக்கான குரல் பதிவுக்குப் பொருத்தமானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனவரின் பட்டியலில் முதல் ஆளாக இருந்தவர் நடராஜசிவம் அவர்கள். எனக்குள் உள்ளூரப் பேராசை தொற்றிக் கொண்டது இந்த வழியிலாவது அவரோடு அறிமுகமாகலாம் என்று. ஆனால் அது இனி ஒரு போதும் நடக்காது என்ற வலியோடு இன்றைய காலையில் வந்த அவரின் இறப்புச் செய்தி சொல்லி வைத்தது.

வானொலி கேட்கும் பழக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் தன் நிகழ்ச்சி முடியும் போது நட ராஜ சிவம் என்று பெயரை உடைத்து அழகுற முத்தாய்ப்பாய் முடித்து வைக்கும் அவரின் பாணியே தனி.
ஈழத்து வானொலியாளர்கள் மிக அற்புதமான நாடக நடிகர்களாகவும் விளங்கியது எமது கலையுலகத்தில் கிட்டிய பேறு. இவர்களில் நாடகத்தில் இருந்து திரைத்துறை வரை கால் பதித்த மிகச்சிலரில் நடராஜ சிவம் அவர்களும் ஒருவர். சிங்களத் திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு தனியாக நோக்கப்பட வேண்டியது.

பெரும்பாலும் விளம்பரக் குரலுக்கு வாயசைக்கும் கவர்ச்சிகரமான உருவங்களைக் கண்டு தரிசிக்கும் உலகில் எமக்கெல்லாம் விளம்பரக் குரலே உருவமாக வெளிப்பட்ட இரட்டை ஆளுமைகளில் கமலினி செல்வராஜனும், நடராஜசிவமும் மிக முக்கியமானவர்கள்.
கோப்பி குடித்துக் கொண்டே நடிக்கும் அவரின் உருவம் கண்ணுக்குள் நிழலாடுகிறது.

பண்பலை வானொலி யுகத்தில் இன்றைய முன்னணி வானொலியான சூரியன் எஃப் எம் இன் நிகழ்ச்சி முகாமையாளராக நடராஜசிவம் அவர்கள் அந்த வானொலியைக் கட்டமைத்த ஆரம்ப காலங்கள் விரிவாக அந்தக் காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் பேசப்பட வேண்டியது.

அவரின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று

தினகரன் வாரமஞ்சரியில் ஏடாகூடமான கேள்விகளுக்கு அவரின் பதில்கள்

http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/21/?fn=f12102117

காற்றலையில் கலந்து விட்ட மீண்டும் சந்திக்காத வரை
நட
ராஜ
சிவம்
என்ற வானொலிப் படைப்பாளிக்கு எம் பிரியா விடை.

கானா பிரபா

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்
ஒலி வடிவில் : செ.பாஸ்கரன்
#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.

ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.

தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளராக அறியப்படுபவர், சமூகப் போராளியாகவும், சிந்தனாவாதியாகவும் இருந்தவர் மானுட குலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். இதன் வழி மெய்யியல் ஆய்வுகளையும் எழுதினார். ஈழத்தின் மிக முக்கியமானதொரு கவிஞர் மு.பொன்னம்பலம் (மு.பொ) இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிரப்படும் சிறுகதையின் ஒலி வடிவத்தை வழங்கியிருப்பவர், தளையசிங்கம் பிறந்த அதே புங்குடுதீவு மைந்தன் கவிஞர் செ.பாஸ்கரன். கவிஞராக, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகையின் ஆசிரியராகத் தடம் பதித்துத் தொடர்பவர்.
“புதுயுகம் பிறக்கிறது” கதை மெய்ஞானத்துக்கும், விஞ்ஞானத்துக்குமிடையிலான ஊடாடலை கணவன், மனைவி என்ற பாத்திரக் குறிகள் வழி நகர்த்துகின்றது.

கவிஞர் செ.பாஸ்கரன் அவர்கள் மு.தளையசிங்கத்தின் கதையை உயிரோட்டிய அனுபவத்தைக் கேட்போம் தொடர்ந்து.

மன்னிப்பு – சிறுகதை

மன்னிப்பு – சிறுகதை
எழுத்தாளர் : தேவகி கருணாகரன்
ஒலிவடிவம் : செ.பாஸ்கரன்

#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.
கவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.