ஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்

இன்று ஆடிப்பிறப்பு தினமாகும்.

ஈழத்தவரின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பு மிக முக்கியமானதொரு பண்டிகை. இந்தத் தினத்தை நினைத்தால் “தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தமானந்தம் தோழர்களே” பாடலும், “ஆடிக் கூழும்” நினைவில் மிதக்கும்.

இந்த நிலையில் ஒரு புதுமையானதொரு பகிர்வோடு வந்திருக்கிறோம். இந்தப் பகிர்வில் தாயார் அனுராதா பாக்யராஜா அவர்கள் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை” பாடலைப் பாட, கானா பிரபாவின் “ஆடிப்பிறப்பு நனவிடை தோய்தலையும்”, “ஆடிக்கூழ்” செய்முறையையும் மகள் சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களும் பகிர்கிறார்கள்.

கலாபூஷணம் திருமதி அனுராதா பாக்யராஜா அவர்கள் சிறுகதை, நாடகம், ஆன்மிகக் கட்டுரைகள் என்று இலக்கிய உலகில் தடம் பதித்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிக் கலைஞர், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினர் நடத்திய “இலங்கை நாட்டுப் பாடல்” போட்டியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில் முதலிடத்தில் வந்த பெருமைக்குரியவர்.

சங்கீதா தினேஷ் பாக்யராஜா இலங்கையின் தனியார் வானொலி யுகத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக, நாடக நடிகையாகத் தனக்கென அடுத்த தலைமுறை வானொலி ரசிகர் வட்டத்தைச் சம்பாதித்தவர்.

ஒரு நாளைக்குள் தீர்மானித்து அணுகிய போது தாயும், மகளுமாக எவ்வளவு அழகாக இந்த ஆடிப்பிறப்புப் பகிர்வைக் கொடுத்திருக்கிறார்கள் என்றுணர்ந்து வியந்தேன், நீங்களும் அதை ரசியுங்கள்.

அ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”

சிறுகதை ஒலி வடிவம்

ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளை ஒலி ஆவணப்படுத்தும் தொடரில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான அ.செ.மு (அ.செ.முருகானந்தன்) அவர்களது “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற சிறுகதையின் ஒலிவடிவத்தைப் பகிர்கிறோம்.

இந்த சிறுகதையின் ஒலி வடிவத்தைச் சிறப்பாக ஆக்கித் தந்தவர் அவுஸ்திரேலியா நன்கறிந்த ஊடகர், தமிழ்க் கல்வி ஆசிரியர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.

எழுத்தாளர் அ.செ.மு குறித்து பேராசிரியர் சு,வித்தியானந்தன் “மனித மாடு” சிறுகதைத் தொகுதியில் இவ்விதம் குறிப்பிடுகிறார்,

ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை கால வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியில் இலங்கையர்கோன், சம்ந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோர் இத்துறையில் முதல் முயற்சிகளை மேற் கொண்டனர். இம்முதல் மூவரை அடுத்த இரண்டாவது தலைமுறையொன்று 1940 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திற் சிறுகதைத் துறையிற் கவனம் செலுத்தத் தொடங்கிய இவ்விரண்டாம் காலகட்ட எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் அ. செ. முருகானந்தம் அவர்கள்.

1921 ஆம் ஆண்டிலே மாவிட்டபுரத்தில் பிறந்த முருகானந்தம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிற் பயின்றவர். மஹாகவி, அ ந கந்தசாமி ஆகிய படைப்பாளிகளின் இலக்கியச் சூழலில் வாழ்ந்தவர். ஈழகேசரி, மறு மலர்ச்சி. சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு முதலிய பத்திரிகை களினூடாக இலக்கியப்பணி செய்தவர். எரிமலை என்ற பத்திரிகையைச் சில காலம் வெளியிட்டவர். இவரது படைப்புகளில் புகையில் தெரிந்த முகம் என்ற குறுநாவல் மட்டுமே இதுவரை நூல் வடிவம் பெற்றது.

யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையின் வழியாக “மனித மாடு” சிறுகதைத் தொகுதி வெளிவந்தும் அது பரவலான விற்பனைக்குச் செல்லாது முடங்கிய அவலத்தை செங்கை ஆழியான் அவர்கள் வருந்தி எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் முருகபூபதி அவர்களும் “அ.செ.மு” அவர்களின் வாழ்வியலை விரிவாக எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டியது.

தொடர்ந்து அ.செ.முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை” ஒலி வடிவைக் கேட்போம்.

ஆக்காண்டி….ஆக்காண்டி….

சண்முகம் சிவலிங்கம் ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியரான இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதி அவை நூலுருப் பெற்றும் உள்ளன, அவற்றுள் நீர்வளையங்கள் என்ற கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இலக்கியம் கடந்து தமிழ் இன உணர்வாளராக வாழ்ந்து மடிந்தவர். டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012)

“ஆக்காண்டி ஆக்காண்டி” என்ற இவரது நாட்டாரியல் சார்ந்த கவிதை ஈழத்துப் போர் வடுக்களை மறை பொருளாகக் கொண்டு வலியெழுப்பும் படைப்பாகும். இதற்குக் குரல் வடிவம் தந்து உணர்வு பூர்வமாகப் பகிர்கிறார் சங்கீதா தினேஷ் பாக்யராஜா.