ஈழ மண்ணில் இந்தியப் போர் – 30 ஆண்டுகள்

அது நடந்திருக்கக் கூடாது நடந்திருக்கவே கூடாது என்று இன்னமும் உள்ளுக்குள் மனம் ஓலமிடும்.
ஈழத்தில் இந்திய அமைதி காக்கும் படையாக வந்த இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் ஆரம்பித்து இன்றோடு 30 ஆண்டுகள். இந்த யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட “பொது சனங்களில்” நானும், என் குடும்பத்தினரும் அடக்கம்.
அதுவரை வானத்தில் வட்டமிட்டுப் பறந்து குண்டைப் பறிச்சுப் போடும் ஶ்ரீலங்கா அரசின் விமானக் கழுகுகளுக்கும், பலாலி விமானப் படைத்தளத்திலிருந்து ஒரு திசை வழியாகவும்,
யாழ்ப்பாணக் கோட்டை கடற்படைத் தளத்தில் இருந்து இன்னொரு திசை வழியாகவும் பாய்ந்து வந்து வெடிக்கும் ஷெல் அடிகளுக்கும் தேடி ஒளித்துப் போன காலம் கடந்து நேரடி யுத்த முனைக்குள் சிக்கிய முதல் அனுபவமது.
கண நேரத்திலேயே வீடிழந்து போக்கிடமறியாது கோயிலுக்கு ஓடவோ, பாடசாலைக்கு ஓடவோ இல்லை குண்டு துளைக்காத அடுக்குக் கட்டிடத்தின் தரையடுக்குத் தேடி இடம் பிடித்து குந்திக் கொண்டே நித்திரையும், கால் வயிறு சாப்பாடுமாக நாட் கணக்காக உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்த காலமது.
மயிரிழையில் உயிர் தப்புதல் என்பதற்கான அர்த்தங்களைப் பல சந்தர்ப்பங்களில், ஏன் ஒரே நாளிலேயே அனுபவித்திருக்கிறோம்.
குண்டுச் சத்தங்களின் பலத்த ஒலி கேட்கக் கேட்க ஒவ்வொரு இடமாகத் தப்பிக் கொண்டு போகும் போது
ஒரு ஐந்து பத்து நிமிட தூரத்தில் எமக்குப் பின்னால் வந்த குடும்பங்களையோ, தனி நபரையோ அதற்குள்
பலியெடுத்து விட்டிருக்கும்.
கொஞ்ச நேர அவகாசத்தில் கோயிலில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் வீடு பார்க்கப் போனவர் கக்கூசுக்குள் இறந்து கிடப்பார் திடீர் இராணுவச் சுற்றிவளைப்பில்.
ஆர்மிக்காறன் காணும் முன்னர் கே.கே.எஸ் றோட்டின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தத்தைக் கடக்க வேண்டும் என்று அவதிப்பட்டவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி அங்கேயே நாட்கணக்கில் நாய்களுக்கு உணவாகிப் போவார்.
தங்கியிருந்த கோயிலின் முகப்பு மண்டபத்தில் காயப்பட்டவரையோ, இறந்தவரையோ கிடத்தி விட்டுக் கொஞ்ச நேரம் அழுது விட்டு தூக்கிக் கொண்டு போய்ப் பக்கத்து மைதானத்தில் எரித்து விட்டு ஓடிப் போய் மண்டபத்தைக் கழுவி விட்டு அதே இடத்தில் உறக்கம் கொள்ள வேண்டும்.
கொள்ளைப் பசி, மாற்று உடை இல்லை, பொய்யான காட்டிக் கொடுப்பால் இந்திய இராணுவத்தின் என்
அண்ணனின் கைதால் நடைப் பிணமான பெற்றோர் இப்படி நான் சந்தித்த அந்த அனுபவங்களை என் சம வயது நண்பர்களும் சந்திக்க வில்லை என்றால் அது அதிசயம். மாதம் கடந்து வீடு திரும்பிய அண்ணன் கதை கதையாகச் சொல்லுவார் அந்தச் சித்திரவதை முகாம் அனுபவங்களை.
இந்த நாளில் இத்தனை புலிகள் இறந்தார்கள் என்ற
கணக்குக் காட்ட எம் கண் முன் குடும்பஸ்தர்களைச் சுட்டுப் போட்டு விட்டு ஆல் இந்தியா ரேடியோவின் இலங்கைக்கான சிறப்பு ஒலிபரப்பு “நேசக் கரங்கள்”, “அன்பு வழி” வழியே அவர்கள் புலிகளாக்கப்பட்டார்கள்.
ஒபரேஷன் பூமாலை என்று சாப்பாடு போட்ட விமானங்களில் வந்தவர்கள் வாய்க்கரிசியும், இறுதி யாத்திரைக்கான மலர் மாலையும் போட்டார்கள்.
போர் கொஞ்சம் ஓய்ந்து வீட்டுக்குத் திரும்பினால், திரும்பிய இடமெல்லாம் வாழைத் தோப்புக்குள் மத யானை புகுந்த மாதிரி எல்லா மனைகளும், பாடசாலைகளும் கிழித்துப் போடப் பட்டிருந்தன.
அப்போது பதின்மத்தில் இருந்த எனக்கு சில நாட்களுக்குள்ளேயே என்னைச் சுற்றி நடந்ததெல்லாம் அனுபவித்து, அகதி முகாமில் இருந்து வீடு திரும்பிய போது ஒரு அறைக்குள் இன்னொரு அறைக்குள் போகவே பயமாக இருக்கும். அம்மாவின் காதுக்குள் தான் போய்ப் பேசுவேன்.
பாடசாலை விளையாட்டு மைதான வளவுக்குள் பிரேதங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. திரும்பிய இடமெல்லாம் சவுக்குழி.
அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு தானே பள்ளிக்கூடம் போகும் வழியில் கண்ட இந்தியன் ஆர்மி மாமாக்களுக்கு டாட்டா காட்டிச் சிரித்து மகிழ்ந்தோம், இப்போது ஏன் அவர்களின் பாதுகாப்பு அரண்களைக் கண்டு குலை நடுங்கிக் கொண்டு மெல்லத் தரையைப் பார்த்துக் கொண்டே கடக்கிறோம்? எல்லாம் மாறி விட்டது.
கைதுகள், பாலியல் பலாத்காரங்கள், சித்திரவதைகள், படுகொலைகள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி நிகழ்த்திக் காட்டப்பட்டு விட்டது.
கொக்குவில் பிரம்படி லேனில் சனத்தை வீதியில் கிடத்தி விட்டு செயின் ப்ளொக்ஸ் எனும் கனரக வாகனம் நெரித்துக் கொண்டு போனது இன்னமும் நினைவில் வந்து அந்த வீதியைக் கடக்கும் போது உதறும்.
என்னுடைய அந்த நாள் அனுபவங்களை இட்டுக் கட்டி எழுதாமல் வாக்குமூலமாகப் பதிந்தாலேயே பக்கங்கள் கடக்கும். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கிறேன். அதே சிந்தனையோடு எனது ஈழத்து உறவுகளும், தமிழகத்துச் சகோதரர்களும் இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
அது என்னவெனில், எப்படி இந்திய இராணுவத்தால் பலியெடுப்புகளும், அழிப்புகளும் நிகழ்ந்தனவோ அது போலவே ஈழத்தமிழருக்காகத் தாய்த் தமிழகம் கொடுத்த விலை பெரிது. ஈழத்து அகதிகளை வாரியணைத்து ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்புப் பிச்சை போட்டது,
முத்துக்குமாருக்கு முன்பே பல்லாண்டுகளாக ஈழ உறவுகளுக்காகத் தம் இன்னுயிர் ஈய்ந்த தமிழகத்துச் சோதரர் போன்று தமிழகத்தில் இப்படியொரு இக்கட்டு வரும் போது தமிழகத்தவருக்காக உயிரைக் கொடுக்கும் எல்லை வரை ஈழத்தமிழன் இருக்க மாட்டான்.
இந்திய இராணுவத்தின் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போதே காயப்பட்ட புலிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததும் இந்தத் தமிழகம் தான்.
2009 இல் கையறு நிலையில் இருந்த கருணாநிதியை விமர்சிக்கும் தலைமுறைக்கு முந்திய தலைமுறை என்பதால் அவர் காலத்தில் ஈழ ஏதிலியருக்கும் கல்வி என்ற அவரின் செயல் திட்டம், ஏன் அதற்கு முந்திய நிகழ்வாக இன அழிப்பைச் செய்து விட்டு இந்திய அமைதிப் படை நாடு திரும்பிய போது வரவேற்காத வன்மத்தைக் காட்டி நெஞ்சை நிமிர்த்திய தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் கலைஞரையும் மறவோம். 2009 காலப்பகுதி தனியாக ஆனால் கண்ணியமாக விமர்சனம் செய்து பார்க்க வேண்டியது. காலம் வாய்க்கும் போது அதையும் சொல்வோம்.
சிங்கள மேலாதிக்க அரசின் சாணக்கியத்தில் விழுந்த இந்திய மத்திய அரசின் அந்த செயற்பாட்டை ஒருபோதும் அகண்ட பாரதத்தின் பிரசைகளின் நிலைப்பாடாக நாம் எடுக்க மாட்டோம். அந்தத் தெளிவு எமக்குண்டு. இதே தவறை 2009 இல் செய்த போதும் கூட.
இந்தியா ஏதாவது செய்யும் என்ற நிலையில் இருந்த காலம் போய் இந்தியா எங்களுக்கு ஒன்றும் செய்து விடக் கூடாதே என்ற அச்ச நிலையின் மையப் புள்ளி தொடங்கியது October 10, 1987 இலிருந்து தான்.
கானா பிரபா
10.11.2017
மேலதிக வாசிப்புக்கு
நன்றி : கனடாவில் இருந்து வெளிவரும் “தாய் வீடு” இதழில்
இந்திய அமைதிப் படை யுத்தத்தின் 30 ஆண்டு நினைவுகள், வரலாற்றுப் பகிர்வு, அனுபவங்களோடு இங்கே படிக்கக் கிடைக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் “முரசொலி” அலுவலகம் தகர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகள்
முரசொலி நாளிதழின் பிரதம அலுவலகம், ஈழ முரசு காரியாலயம், மற்றும் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி ஊடகமான “நிதர்சனம்” ஆகியவை இந்திய இராணுவத்தால் உடைத்தழிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்திருக்கிறது என்ற செய்தியை இன்றைய காலை சொல்லி வைத்தது. அந்தக் காலகட்டத்து நினைவுகளை மனம் ஒரு பக்கம் அசை போடத் தொடங்கியது.
எண்பதுகளில் இலங்கையின் தலைநகரப் பத்திரிகைகளாக வீரகேசரி, தினகரன், தினபதி போன்றவை இயங்கிய போது அவை பிராந்திய அலுவலகங்களை யாழ்ப்பாணம் போன்ற தமிழரின் தலைப் பட்டினத்தில் கிளை பரப்பிச் செயற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பத்திரிகைகள் என்ற தனித்துவ முத்திரையோடு இயங்கியவை ஈழ நாடு, ஈழ முரசு (ஞாயிறு இதழ் ஈழ நாதம் என்று நினைவு பின்னாளில் 90 களில் ஈழ நாதம் தினசரி வெள்ளி நாதம் வார இதழ்), உதயன் (வார இதழ் சஞ்சீவி, சிறுவர் இதழ் அருச்சுனா), முரசொலி ஆகியவை. இவற்றில் ஈழ நாடு தவிர மற்றவை எண்பதுகளில் முளைத்தவை.
முரசொலி நாளிதழின் ஆசிரியராக மூத்த ஊடகர் எஸ்.திருச்செல்வம் இயங்கினார். முரசொலி பத்திரிகையின் தலைப்புகள் அப்போது அதீத பரபரப்பைக் கொடுத்ததை அப்போது உணர்ந்திருக்கிறேன். வழமையான பத்திரிகை மரபில் இருந்த வாசகனுக்கு இது புதுமையாக இருந்திருக்கும்.
மற்றைய பத்திரிகைகளை விடத் தனித்துவமாகக் காட்டும் முயற்சியாகக் கூட அது இருந்திருக்கலாம்.
ஸ்ரான்லி றோட்டில் இருந்த முரசொலி காரியாலயத்தில் ஓவியர் லங்கா தான் ஆஸ்தான ஓவியர், பக்கத்திலேயே லங்கா ஆர்ட்ஸ் என்ற கடையையும் வைத்திருந்தார்.
அவர் இன்னமும் இருக்கிறாரா?
செங்கை ஆழியானின் களம் பல கண்ட கோட்டை போன்ற தொடர்கள் அப்போது முரசொலி வழியாகப் பிரபலம்.
தொண்ணூறின் ஆரம்பத்தில் வேலணையில் இருந்து வந்து என்னுடைய வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவியின் அக்காவின் திருமணம் நாச்சிமார் கோயிலடியில் நடந்த போது கோட்டையில் இருந்து ஶ்ரீலங்கா இராணுவத்தால்
ஏவப்பட்ட ஷெல் மணவறையில் விழுந்த போது அந்த இடத்திலேயே மணமகன் பலியானார். அந்த நிகழ்வை நினைத்து வருந்தி முரசொலிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை அப்போது பிரசுரித்திருந்தார்கள். ஈழ நாடு, உதயனின் சஞ்சீவி போன்ற இதழ்களுக்குச் சிறுவர் கதை எழுதிக் கொண்டிருந்த எனக்கு இதுவொரு புது அனுபவம். அப்போது காகிதத் தட்டுப்பாடு நிலவியதால் முதலில் ஒற்றை ரூல் பேப்பரிலும் பின்னர் சித்திர ஒட்டுவேலைக்குப் பயன்படும் தடித்த காகிதாதியில் இந்தப் பத்திரிகை தொண்ணூறுகளில் வந்தது.
எஸ்.திருச்செல்வம் அவர்கள் தன்னுடைய ஒரே மகன் அகிலனை அவலமாகப் பறிகொடுத்ததும் இந்த முரசொலி ஆசிரியர் பணியின் விளைவே. தங்களுக்குச் சாதகமில்லாத செய்தியை வெளியிட்டதால் திருச்செல்வத்தின் மகன் அகிலனை அப்போதைய இந்திய அமைதிப் படையின் ஒத்தோடித் தமிழர் குழுவான E.N.D.L.F வேட்டையாடியது.
பரியோவான் கல்லூரி மாணவன், க.பொ.த உயர்தரத்தில்
அதி திறமைச் சித்தி பெற்றவர், கிரிக்கெட் விளையாட்டில் தலை சிறந்த வீரன் அகிலனின் இழப்பு அப்போது பரவலான அனுதாப அலையைக் கிளப்பியது.
இவை குறித்த விரிவான வரலாற்றுப் பகிர்வுகளை இங்கே படிக்கலாம்.
புலம் பெயர்ந்த என் ஊடக வாழ்வில் முரசொலி எஸ்.திருச்செல்வம் அவர்களை வானொலியூடாகப் பல சந்தர்ப்பங்களில் தொடர்பு கொண்டு அரசியல், கலை, இலக்கியப் பகிர்வுகளைப் பெற்று வருகிறேன். அவரைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் முரசொலியின் அந்தப் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவதில்லை அது எனக்குள் தானாக நினைப்பூட்டும்.
எஸ்.திருச்செல்வம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து தமிழர் தகவல் என்ற இதழின் முதன்மை ஆசிரியராக இருக்கிறார்.
கடந்த வாரம் பிபிசி தமிழ் முப்பது ஆண்டுகளுக்குப் பின் இலங்கை சென்ற இந்திய இராணுவ அதிகாரியின் அனுபவங்களைப் பகிர்ந்தது. அதுவும் பார்க்க வேண்டியதொன்று
https://youtu.be/5G9KItToBog
பத்திரிகை முகப்பு உதவி நன்றி : நூலகம் தளம்

One thought on “ஈழ மண்ணில் இந்தியப் போர் – 30 ஆண்டுகள்”

  1. நெஞ்சம் கனல்கிறது!
    நீசர்தமை நீற்றுச்சாம்பலாக்கிடும்
    தாகம் தகிக்கிறது!! :'(

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *