சோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் ?

முகம் தெரியாது நம்மோடு கூடப் பழகியவர்களின் பிரிவு கூட வலிக்கும் என்பதைப் போதித்தது இணைய உலகம். அப்படியானதொரு வலியோடு தான் நேற்று இறப்பெய்திய “சோழியான்” என்று இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட ஆளுமை ராஜன் முருகவேள் அண்ணாவின் பிரிவை உணர்கிறேன். ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். அவரின் அரைவாசி வாழ்க்கையில் புலம் பெயர் மண்ணின் எழுத்தாளராகவே பல உள்ளங்களைச் சம்பாதித்திருக்கிறார். 56 வயசெல்லாம் வாழ் நாள் கடனைக் கழிப்பதற்கு ஒரு வயசா என்று தான் இந்தச் செய்தியை அறிந்த போது நொந்து என் மனசுக்குள் நான் பேசிக் கொண்டது.
சாவதற்கு முன் தன் தாயகத்துக்குப் போய்க் கொண்டாடி விட்டு வந்திருக்கிறார். அந்தப் பயணத்தில் அவர் மனசின் ஏதோவொரு மூலையில் இருந்து இந்தப் பொல்லாத சாவின் சமிக்ஞை கேட்டியிருக்குமோ என்று நான் ஐயப்படுகிறேன். அவரின் ஆத்மா நனவிடை தோய்தலோடு தன் இறுதித் தாயகப் பயணத்தோடு எப்போதோ ஆத்ம சாந்தியடைந்திருக்கக் கூடும். வாழ்வில் அபிலாசைகளைத் தின்று தீர்த்த பிறகு எஞ்சுவது வெற்றுடல் தானே?
இணையக் கருத்தாடலில் ஆரம்ப காலத்து நண்பர்களில் சோழியனும் ஒருவர். யாழ் இணையம் வழியாகவே அவரின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. இணைய வலைப்பதிவுகளில் முன்னோடி வலைப்பதிவராகவும் அவர் அறியப்படுகிறார்.
தமிழமுதம் என்ற இணைய சஞ்சிகையை அவர் நடத்திய போது ஏராளம் ஈழத்துப் பாடல்களின் ஒலிக்களஞ்சியத்தைத் திரட்டித் தந்த முன்னோடி.
அத்தோடு Blogger இல் “ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ” http://thodarkathai.blogspot.com.au என்ற தொடரை 13 வருடங்களுக்கு முன்னர் கொடுத்தவர். அந்தக் காலத்தில் இம்மாதிரி இணையத் தொடர்கள் முன்னோடி முயற்சிகள். கூடவே தமிழமுதம் என்ற வலைப்பதிவு http://tamilamutham-germany.blogspot.com.au/
சுழிபுரத்தில் பிறந்த அவரின் வாழ்வியல் குறிப்புகள் விக்கிப்பீடியா இணையத்தில் கிடைக்கின்றது.
https://ta.m.wikipedia.org/wiki/இராஜன்_முருகவேல்
சோழியான் அண்ணனோடு நேரடியாகப் பேசியது இல்லை. ஆரம்ப காலத்தில் chat இல் அடிக்கடி பேசினோம். என்னோடு வேடிக்கையாக chat பண்ணுவார், சிரிப்பு மூட்டுவார்.
இன்றைய ஃபேஸ்புக் யுகத்திலும் அவரின் கருத்துகளைப் படிப்பேன். முரண் நின்றதில்லை. இணைய உலகில் ஈழப் போராட்டத்தின் சரிவுக்குப் பிறகு நிறம் மாறிய பலரைப் பார்த்து வேதனையோடு கடந்திருக்கிறேன். ஆனால் இவர் தன் சுயத்தை இழக்காத, நிறம் மாறா மனிதர்.
“கறுப்பு யூலை 1983” கலவரத்தின் நேரடிச் சாட்சியமாக இவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை என் மடத்துவாசல் வலைப்பதிவில் அப்போது பகிர்ந்து கொண்டேன். என் எழுத்து சாராத இன்னொருவர் பகிர்வு என்று முதன் முறையாகப் பகிர்ந்த அந்த எழுத்தைச் சமகாலத்தில் தமிழ் நாதத்திலும் பகிர்ந்தோம். அப்போது அந்த அனுபவப் பகிர்வு பரவலான தாக்கத்தைக் கொண்டு வந்தது. இனப்படுகொலைகளின் நேரடிச் சாட்சியங்கள் வழியே நேர்மையான பகிர்வுகள் எழுதப்பட உந்துதல் ஆனது.
சோழியான் அண்ணாவின் மறைவில் அந்தப் பகிர்வை நினைத்துப் பார்க்கிறேன்.
http://www.madathuvaasal.com/2006/07/83.html
போய் வாருங்கள் சோழியான் அண்ணா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *