"காக்கா முட்டை" கனவல்ல, நிஜம் பேசும் சினிமா


“டேய் இங்க இருந்து பக்கமாத் தாண்டா நம்ம சூப்பர் ஸ்டார் வீடு இருக்கு”

அந்தக் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன்.
மகாபலிபுரத்திற்கு
வாடகைக்காரில் வந்து இறங்கி முதலில் சுற்றும் முற்றும் வேடிக்கை
பார்க்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த எனக்குப்
பக்கத்தில் ஒரு பெரிய பஸ்ஸில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள். 
தமிழகத்தின்
ஏதோவொரு மூலையில் இருந்து வந்திருக்க வேண்டும். அந்தக் குரலுக்குச்
சொந்தக்காரப் பையனுக்கு அதுதான் தன்னுடைய ஊர் எல்லை தாண்டிய பயணமாக
இருந்திருக்க வேண்டும். மகாபலிபுரத்தை ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டுப் பக்கமாக இழுத்து வந்து வெள்ளாந்தியாகப் பேசிக் கொண்டிருந்த அவனிடம் கதை
கேட்டுக் கொண்டு அவனின் சகபாடிகள் பஸ்ஸுக்குள் ஜன்னலுக்கு வெளியே முகத்தைப்
பிதுக்கிக் கொண்டு.  அங்கு ரசித்துப் புதினம் பார்க்கும் அந்தச் சிறுசுகளுக்கும் எனக்கும் ஒரே மனநிலை தான்.
அதுதான் என் முதல் தமிழக விஜயம் அது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த
அந்தப் பயணத்தின் போது நானும் ஒரு சின்னப் பையன் போலத்தான் சென்னையில்
எனக்குப் பிடித்த ஒவ்வொரு இடங்களாகத் தேடித் தேடி ஆசை தீரப் பார்த்துத்
தாகம் தீர்த்துக் கொண்டேன்.
அதே மாதிரியான ஒரு உணர்வைச் சற்று முன்னர் “காக்கா முட்டை” திரைப்படம் கண்ட போது பெற்றுக் கொண்டேன்.
சிட்னியில்
ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் போது என்ன இந்தியப்
படங்கள் ஓடுகின்றன என்று நோட்டமிடுவேன். ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒன்று வந்து
போகும். இம்முறை மூன்று இந்தியப் படங்களில் “காக்கா முட்டை” என்ற
தமிழ்ப்படமும் காண்பிக்கப்படுகிறது என்று தெரிந்த போது கண்டிப்பாக இதைத்
தவற விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சிட்னி சர்வதேச திரைப்பட
விழாவில் நான்கு காட்சிகளாக இருந்த இந்தப் படத்தின் இரண்டு காட்சிகளுக்கான
இருக்கைகள் முழுமையாக விற்றுத் தீர்ந்த போது மூன்றாவதாக அமைந்த இறுதிக்
காட்சியில் என் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
முன்னூறு
பேர் கொண்ட அரங்கத்தில் எண்பது வீதமானோர் வெள்ளையர் உட்பட வேற்று
மொழிக்காரர். விரல் விட்டு எண்ணக்கூடிய எனக்குத் தெரிந்த தமிழ் ரசிகர் ஒரு
பத்துப் பேரைத் தாண்டியிராது.
“காக்கா
முட்டை” படத்தின் காட்சியமைப்புகளை விளம்பரங்களில் பார்க்கும் போது,
இந்தியாவின் ஏதோவொரு சேரிப்புறத்தின் குடிசைக்குள் ஓட்டை போட்டுக் காமெராவை
விட்டு அழுது வடிவதைக் காட்டிக் காசு பண்ணும் கலைப்படம் என்று
நினைப்பவருக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சினிமாவைத் தந்து பெரும் நிறைவைத்
தருவதற்கே முதலில் பூச்செண்டு கொடுக்கலாம்.
“காக்கா முட்டை” படம் பார்த்தது எந்தவிதமான மனச்சுமையையும் தந்திராத ஒரு அழகான சிறுவர் நாவலைப் படித்த அனுபவம் தான் ஏற்பட்டது.
இந்தப்
படத்தில் வரும் இரண்டு சகோதரச் சிறுவர்கள். இருவருக்குமான பட்டப்பெயர்
சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை. இந்தப் பட்டப்பெயருக்கான
காரணத்தோடு தான் படம் ஆரம்பிக்கிறது. 
சின்னக்
காக்கா முட்டையாக நடிக்கும் அந்தக் குட்டி வாண்டு தான் முதலில் எப்படி
இயல்பாக நடிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறான் என்று சொல்ல வேண்டும்.
அவனின் அண்ணனாக நடித்தவன் கூட எந்தவித ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பத் தந்து
இப்படியான படத்தின் மூல நாயகர்களான தமக்குத் தந்த பொறுப்பை வெகு சிறப்பாகக்
கையாண்டிருக்கிறார்கள்.  
தமிழில்
இப்போது இளம் நாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா இந்தச் சிறுவர்களுக்கான
ஏழைத்தாயாக நடிக்க ஏற்றுக் கொண்டதற்காக விசேட பாராட்டு.
சின்னக்
காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை அவர்கள் வாழும் சேரிப்புறம், இந்தச்
சிறுவர்களின் அந்த வயதுக்கேயான இலட்சியமொன்று, இவர்களைச் சுற்றி இயங்கும்
மனிதர்கள். இவர்கள் எல்லோரும் எப்படியாகக் கதையின் இறுதி முடிச்சு வரை
பயன்பட்டிருக்கிறார்கள் என்பது நேர்த்தியான கதை சொல்லியாக இயக்குநர்
மணிகண்டனின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
எல்லோரும் ரசித்துப் பார்த்துச் சிரிக்க வைக்கும் யதார்த்த சினிமாவுக்கான கருவும், களமும் நம்மிடமே இருக்கு என்பதைக் “காக்கா முட்டை” மீள நிறுவுகிறது.
என்னுடைய
பதின்ம வயதில் என் வாசிப்பின் அடுத்த தளத்துக்குத் தீனி போட்டது அழ
வள்ளியப்பாவின் “நீலா மாலா” போன்ற சிறுவர் நாவல்கள். ஆனால் இன்றுவரை தமிழ்
சினிமாவில் பதின்ம வயதினருக்கும் தீனி போடக்கூடிய களங்கமில்லாத சினிமாவைத்
தேடிய போது “காக்கா முட்டை” தான் இப்போது விடை சொல்லியிருக்கிறது.
பேபி
ஷாலினித்தனமான வயதுக்கு மீறிய தமிழ் சினிமாக் குழந்தைகளையும், தன் தாய்,
தகப்பனைக் கிண்டலடித்துப் பேர் வாங்கும் சன் டிவி குட்டி சுட்டீஸ்
பிள்ளைகள் இல்லாத நான் பதினைந்து வருடத்துக்கு முன்னர் மகாபலிபுரத்தில்
கண்ட அந்த ஏதோவொரு கிராமத்துக் குழந்தைகள் தான் இந்தப் படத்தில்
நடமாடுகிறார்கள்.
ஜி.வி,பிரகாஷ்குமாரின் இசை பல இடங்களில் அமைதி காத்தும், சில இடங்களில் மாமன் புயலாகவும் அடித்தும் உறுத்தாமல் பயணித்தது. நடிகர் சிம்பு வரும் ஆரம்பக் காட்சியில் இவர் யாரென்று பார்வையாளராக இருந்த வேற்று மொழிச் சமூகத்துக்குப் புரியாத சூழலில் இவர் நடிகர் என்ற குறியீட்டுக் காட்சியை அல்லது உப ஆங்கிலக் குறிப்பைக் காட்டியிருக்கலாம். அப்படித் தான் திடீரென்று அந்த வீட்டில் வந்திறங்கும் அரசுத் தொலைக்காட்சியும்.
நடிகர்
தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி தயாரித்த இந்தப் படம் மீதான பரவலான
ஈர்ப்பு தமிழ் சினிமாவுக்கு உண்மையிலேயே தற்போது தேவையானதொன்று. கோடி
கோடியாகக் கொட்டாமல், பகட்டில்லாத காட்சியமைப்பால் மிடுக்காக நிமிர்ந்து
கொள்ளும் இந்தக் கலைப்படைப்பு நல்ல தமிழ் சினிமாவுக்கான ஒரு எதிர்கால
நம்பிக்கை விதை. இப்படியான படைப்புக்கெல்லாம் Fox Star Studios வெளிநாட்டு
உரிமத்தை வாங்கி வெளியிடும் போது இப்படியான முயற்சிகளில் கை கொடுக்க வேண்டிய நம்மவர் எங்கே போகிறார்கள் என்று சொல்லித்
தெரிவதில்லை. 
“ஸ்லம்டோக் மில்லியனர்” போன்ற படங்கள் எல்லாம் “காக்கா முட்டை”யோடு ஒப்பிடும் போது பின்னதன் சிறப்பை இன்னும் மேலோங்க வைக்குமாற் போல முழுமையானதொரு யதார்த்த சினிமா இது.
 கடந்த இந்திய தேசிய விருதுகளில் சிறந்த குழந்தைகளுக்கான படம் என்ற விருதையும்,  சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக ரமேஷ்  மற்றும், ஜே.விக்னேஷ் ஆகிய சின்னக் காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை அண்ணன், தம்பிகள் வென்றிருப்பது விருதுகளுக்குப் பெருமை.
எண்பதுகளில்
ஒருநாள் நைஜீரியாவில் இருந்து வந்த எங்கள் சித்தி முறையானவர் யாழ்ப்பாணத்தில்
அவர்கள் வீட்டில் வைத்து பீட்சா செய்து காட்டிய போது இந்தப் படத்தில் வந்த
சின்னக் காக்காமுட்டை என்ற பையனின் வயசு தான் எனக்கு அப்போது. அந்த நேரம் அவர்கள் வீட்டில் நடந்த பீட்சா செய்முறைக் கூத்தை விடுப்புப் பார்த்ததெல்லாம் அப்படியே பின்னோக்கி இழுத்து விட்டது போல இருந்தது இந்தப் படத்தைப் பார்க்கும் போது. அதே காலகட்டத்தில் என் அண்ணன் இங்கிலாந்து போவதற்காக சாண்ட்விச் சாப்பிட்டு ஒத்திகை பார்க்கும் போதெல்லாம் 
“ஐயோ புட்டு, இடியப்பம் இல்லாமல் எப்பிடி உவன் காலம் தள்ளப்போறான” என்று அம்மா கவலைப்பட்டதும் ஞாபகத்துக்கு வந்தது.
இந்தப் படம் பார்க்கும் போது கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஒலியும், காட்சியமைப்பும் இணையாது முரண்டு பிடித்து ஒரு மணி நேரம் வீணாகி மீண்டும் அதே குழப்பத்தோடு போனது.  தாமதமான உரையாடல்களும் முன்னோக்கிப் பாயும் காட்சிகளுமாக, தமிழ் தெரிந்தவர்களுக்கு அது பெரிய சிக்கலை உண்டு பண்ணியிருக்கும் .
சிட்னி சர்வதேச திரைப்பட விழாவில் “காக்கா முட்டை” திரையரங்கில் பார்க்கும் போது காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டேன். இந்தப் படத்தில் அமைந்த காட்சியமைப்புகளுக்கு சுற்றும் முற்றும் பார்வையாளர் பக்கமிருந்து எவ்வளவு தூரம் பிரதிபலிப்புக் கிடைக்கின்றது என்று. உண்மையில் அந்த அனுபவம் வெகு சிறப்பாக அமைந்தது. குட்டிப்பையன்களின் குறும்புத் தனங்களையும்,
பீட்சா என்று தோசை காட்டும் பாட்டியம்மாவின் முயற்சியையும், இறுதிக் காட்சியில் பையன்கள் முன் வைக்கும் கருத்தில் தொனிக்கும் அங்கதத்தையும் காட்டும் வெகுவாக ரசித்ததை அரங்கத்தில் அந்தத்தக் காட்சிகளின் எதிரொலி போல அமைந்த மெல்லிய சிரிப்பலைகளைக் கேட்ட போது கதை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தைக் கவனித்துக் கொண்ட மணிகண்டன் நிலையில் நான்.

காக்கா முட்டை” படம் ஓடிய சிட்னிப் படவிழாத் திரையரங்கில் அந்தப் பார்வையாளர் கூட்டம் கைதட்டி நிறைவாக்கியபோது பெருமிதத்தோடு எழுந்தேன்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *