“காக்கைச் சிறகினிலே” கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து

இன்று மாலை வேலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குடையைக் கிழித்துக் கொண்டு புயல்காற்றும், மழையும். ஒரு கட்டத்தில் 
“அற நனைந்தவனுக்கு குளிர் என்ன கூதல் என்ன” என்று நினைத்துக் கொண்டே
குடையை
மடக்கிவிட்டு நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.  தபால்பெட்டியை மேய்ந்த
போது நாலு பக்கமும் நூல் கட்டால் பிணைத்தபடி  தபால் உறையில் அச்சிட்ட
“காக்கைச் சிறகினிலே” சஞ்சிகை. நல்லவேளை ஈரம் படாமல் இருக்கிறது என்று
நினைத்துக் கொண்டே அதை அணைத்துக் கொண்டேன்.
“காக்கைச்
சிறகினிலே” ஏப்ரல் இதழ் “கி.பி.அரவிந்தன் கலைந்த கனவு” என்ற நினைவுப்
பகிர்வாக, நமக்கெல்லாம் மீள நினைப்பூட்டும் பிரிவுச் சுமையாக
வந்திருக்கிறது. கி.பி.அரவிந்தன் அண்ணருக்கும் எனக்கும் இருந்த கடைசி
உறவுப் பாலம் அது ஒன்று தான். அவர் பிரிவின் பின்னால் வந்து கிட்டிய முதல்
இதழ் இது என்பதை நினைக்கும் போது எழும் வலிக்கு எழுத்து வடிவம் கொடுக்க
முடியாது.
ஓவியர் ட்ராஸ்கி மருது முகப்பு
அட்டையில் கி.பி.அரவிந்தன் அவர்களை வரைந்ததோடு “எனக்குக் கிடைத்த பெறுமதி”
என்ற கட்டுரையையும் எழுதியிருக்கிறார். 
அவரது இறுதி நிகழ்வில்
‘நமக்கென்றோர் நலியாக் கலை உடையோம்” என்ற வாசகத்தோடு நான் வரைந்த வள்ளுவர்
சித்திரமும் பொறித்த அந்தத் துணி போர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளம்
உடைந்தேன். ஒரு நொடி உணர்வை இழந்தேன் என்று தன் பகிர்வில் வலியோடு
முடிக்கிறார்.
“நெறியாளர் கி.பி.அரவிந்தன்” என்று
ஆசிரியத் தலையங்கம் இட்டு இந்த இதழுக்குப் பக்க பலமாக இருந்த அவரது
செயற்பாடுகளையும், ஒவ்வொரு சஞ்சிகையின் வடிவமைப்பிலும் அவர் கொடுத்த
சிரத்தையையும் பதிவாக்கியுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.
எஸ்.வி.ராஜதுரை
“ஓய்ந்தது வெடிச்சிரிப்பு” என்ற தலைப்பில் 1978 ஆம் ஆண்டிலிருந்து ஈழப்
போராட்டம் மீதான ஈடுபாடு, போராளி இயக்கங்களுடனான தொடர்பின் வழியாக ஈரோஸ்
இயக்கத்தில் இருந்த சுந்தர் என்ற கி.பி.அரவிந்தனைச் சந்தித்த அந்த
நாட்களைச் சம்பவக் கோர்வைகளோடு பகிர்கின்றார்.
“அரவிந்தன்
அமைதியானான்” என்று ஆரம்பிக்கும் கவிஞர் காசி ஆனந்தன் 70 களில் ஆரம்பித்த
மாணவர் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு வழியாக கி.பி. அரவிந்தன் அவர்களது
போராட்ட வாழ்வியலைப் பகிர்கின்றார்.
“மிச்சமென்ன
சொல்லுங்கப்பா” கி.பி.அரவிந்தனது கடைசி நூலின் தலைப்போடு முடிக்கும்
முகிலன் தனது அஞ்சலிக் கட்டுரையில் அரவிந்தன் அவர்கள் எழுதிய கவிதைகள்
குறித்து விரிவாகப் பகிர்கின்றார்.
அறச்சீற்றத்துடன் இவருக்கு
மிகவும் பிடித்த செயலூக்கச் சொல் – மெளனம் என்ற முகிலனின் வார்த்தைகளை
இவரோடு பழகிய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். 
தமிழகத்தில் இருந்த காலத்தில் கி.பி.அரவிந்தனோடு பங்கேற்ற புத்துருவாக்கக் கூத்து, நாடக மேடை அனுபவங்களை “யாரிடம் சொல்லி அழுவேன்” என்ற நினைவின் வழியாகக் கொடுக்கின்றார் எஸ்.ஏ.உதயன்.
ரூபன் சிவராஜா “தமிழ்ச் சூழலில் ஒரு வரலாற்று வகிபாகத்தையுடைய பேராளுமை” என்ற பகிர்வின் வழியாக கி.பி.அரவிந்தன் அவர்களது புதினப்பலகை செய்தி ஊடகச் செயற்பாட்டோடு அவரது கலை, இலக்கிய ஆர்வத்தையும் பதிவாக்குகின்றார். 
“வெளியே வந்து விட்டேன் நண்பா” இது முன்னாள் போராளி, “நஞ்சுண்ட காடு” படைப்பாளி குணா கவியழகனின் பதிவில்
“படிகளில் நான்
ஏறும் படியில் ஒரு தடவையும்
இறங்கும் படியில் ஒரு தடவையுமாய்
பதட்டத்துடன்…”
என்ற கி.பி.அரவிந்தனின் கவிதையையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
1987 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் போடப்படப் போகிறது என்ற போது  தோழர் கி.பி.அரவிந்தனைச் சந்தித்தபோது “இனி பேச என்ன இருக்கு’ என்று மனம் சோர்ந்த போராளி சுந்தரோடு பழகிய காலத்தை மீட்டிப் பார்க்கிறார் ச.மா.பன்னீர்ச்செல்வம்.
“எனது நினைவுகளில் கி.பி.அரவிந்தன்” என்று ஆவணப் படைப்பாளி அம்ஷன் குமார், “மாண்மை மாந்தர்”  என்று சி.அறிவுறுவோன் பகிர்ந்தவைகளோடு “முக நூலில் நினைவஞ்சலியாய் சில தெறிப்புகள்” என்று நான்கு பக்கங்களுக்கு மேல் பாமரன், திரு. மறவன்புலவு சச்சிதானந்தம்,  டக்ளஸ் தேவானந்தா, பல்வேறு அன்பர்களது இரங்கல் பகிர்வுகள் வரலாற்று அடிக்குறிப்புகளோடு பதிவாகியிருக்கின்றன.
“புலம்பெயர் ஊடக வழிகாட்டி” என்று  கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து நான் எழுதிப் பகிர்ந்த கட்டுரையும் வந்திருக்கிறது.
காக்கைச் சிறகினிலே வழியாக வந்த இந்த நினைவுச் சுரப்பினைப் படிக்கும் போது கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து தெரியாத பக்கங்கள் விரிகின்றன. 
“கிரிக்கெட் இரசிகர்கள் தத்தம் நாட்டுக் கொடிகளின் வண்ணங்களைத் தங்கள் முகத்தில் அப்பிக் கொள்வதைப் போல, தமது தமிழ்த் தேசிய உணர்வை முகத்திலோ, கைகளிலோ பூசிக் கொள்ளாதவர் கி.பி.அரவிந்தன்” என்று எஸ்.வி.ராஜதுரை அவர்கள் சொன்னதைத் தான் கி.பி.அரவிந்தன் அண்ணரோடு பழகியவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துச் சொல்ல விரும்புகிறோம் என்பதை மீளவும் பதிய வைத்திருகிறது இந்த நினைவு இதழ்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *