காலம் ஆகிவிட்ட எங்கள் பொருளியல் ஆசிரியர் வரதராஜன்

“வரதராஜன் மாஸ்டர் இறந்துவிட்டாராம்”
நேற்று இந்தச் செய்தியை நண்பர் சொன்னபோது நம்ப முடியவில்லை.
“எதாவது செய்தி ஊடகத்தில் வந்திருக்கா” என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டேன் அது உண்மையாக இருக்கக் கூடாது என்ற உள்ளுணர்வோடு. ஆனால் பின்னர் செய்தி ஊடகங்களும் உறுதிப்படுத்திய பின்னர் மனதில் பெருங்கவலையும், வெறுமையும்.
வரதராஜன் மாஸ்டர் அடிக்கடி சொல்லுவார் இப்படி 
“என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்”
“எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி”
ஒரு மாணவனது சுய சிந்தனைகளுக்கும் அவனது ஆற்றல்களுக்குமான களமாக அவனால் சுதந்திரமானமுறையில் தன் விருப்பான துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை வளர்ப்பதற்குப் பதில் வெறுமனே ஆண்டாண்டுகாலமாக விளைவித்த ஆராய்ச்சிகளின் பேப்பர் குவியல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளைப் பாடத்திட்டம் தான் நம் ஆசிய நாடுகளில் நிலவும் கல்வியமைப்பு.
முன்னர் படித்து வியந்த, சிவசங்கரி எழுதிய “அப்பா” என்ற நூலை மீளவும் பிரித்துப் பார்க்கின்றேன். அந்த நூல் 3 idiots படத்தில் வரும் ராஞ்சோ என்ற மாணவன் போல வாழ்ந்து காட்டிய ஒரு நிஜத்தின் கதை சொல்கின்றது. அவர் வேறுயாருமல்ல, கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு என்னும் பிறவி விஞ்ஞானி பற்றியது. கோயம்புத்தூரில் வாழ்ந்த ஜி.டி நாயுடு எப்படியெல்லாம் தன் சுய சிந்தனையை விசாலப்படுத்தி அனுபவபூர்வமான உண்மைகளோடு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை எல்லாம் உருவாக்கினார் என்பதை தமிழராகிய எம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? 1985 ஆம் வருஷம் “அப்பா” என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் “இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது?”
இந்த நூலை ஜி.டி.நாயுடுவோடு பழகவர்கள், சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருஷ முனைப்பில் எழுதிய சிவசங்கரி இப்படிச் சொல்கின்றார், “தொழிலதிபர், படிக்காத மேதை, உலகம் புகழும் விஞ்ஞானி என்று அவரைக் குறிப்பட்டவர்களில் பலரும் சின்னப் புன்னகையோடு eccentric மனிதர் என்றும் சொன்னது ஏன் என்று விடாமல் யோசனை பண்ணிய போது தவறு திரு.நாயுடு மேல் அல்ல: அவர் 30 வருஷங்கள் முன்னதாகப் பிறந்து விட்டது தான் குற்றம் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்த நிறைவோடு புத்தகத்தை முடிக்கின்றேன். “அப்பா” ஓவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளின் பூஜை அறையில் கூட இருக்க வேண்டிய நூல்.
“என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்”
“எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி”
1991 ஆம் ஆண்டுகளில் ஒரு பொருளியல் மாணவனாக, யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் இருந்த பொருளியல் கல்லூரியின் ஒரு கிடுகுக் கொட்டிலுக்குள் மாணவர்களோடு மாணவர்களாகக் குழுமி இருந்த இருந்த எனக்கும் சேர்த்து பொருளியல் கற்பித்த வரதராஜன் மாஸ்டர் முதல் நாள் வகுப்பில் சொன்னவை அவை. அந்த முதல் நாள் வகுப்பையே கடைசி நாளாகக் கணித்து வேறு பொருளியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டவர்களுக்கும், வரதராஜன் மாஸ்டரின் வகுப்புக்கும் போய் இன்னொரு பொருளியல் ஆசிரியரைப் பரீட்சை நோக்கத்துக்காத் தேடிகொண்டோருக்கும் அந்த முதல் நாள் வரதராஜன் சேர் சொன்னது தான் தூண்டுகோலாக இருந்ததென்றால் கடைசிவரை வரதராஜன் மாஸ்டரோடு மட்டும் பயணப்பட்டவர்களில் நானும் சேர்ந்து கொண்டேன். எங்கள் வகுப்பு மட்டுமல்ல அதற்கு முன்பும் பின்பும் ஏன் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிடுகுக் கொட்டிலில் பாடம் நடத்தும் வரதராஜன் சேர் இதைத் தான் சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தோடு பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பணியைத் தூக்கி எறிந்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அடைக்கலம் புகுந்தவர் இவர். தொண்ணூறுகளில் தமிழீழப் போராட்டத்துக்குத் தனது வெளிப்படையான நிலைப்பாட்டோடு இயங்கியவர். டியூஷன் வகுப்புகளில் இவரின் நிலைப்பாடு அடிக்கடி எதிரொலிக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் பொருளியல் ஆலோசகராகவும் செயற்பட்டார்.
பின்னாளில் தமிழ்த்தேசியத்துக்கான அரசியல் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தேர்தலில் போட்டியிட்டார் வழக்கம் போல அறிவார்ந்த சமூகத்தைப் புறக்கணிக்கும் தேர்தல் அரசியலால் வெல்லமுடியவில்லை.
வரதராஜன் மாஸ்டருக்கு நானும் ஒரு மாணவனாக அவரிடம் படித்தேன் என்பதை அந்த டியூஷன் கொட்டிலின்  நூற்றுக்கணக்கான மாணவர் குவியலில் இருந்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரின் சிந்தனைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்குமளவுக்கு என் வாழ்வில் மறக்கமுடியாத அங்கமாகிவிட்டு மறைந்து விட்டார்.
வரதராஜன் சேர்! பிரியாவிடை கொடுக்கிறேன். உங்கள் மீதான நேசமும், நினைவுகளும் நெஞ்சில் நீங்காது நிலைத்தபடி.

2 thoughts on “காலம் ஆகிவிட்ட எங்கள் பொருளியல் ஆசிரியர் வரதராஜன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *