எனக்கு நினைவு தெரிந்த நாளில் என்பதை விட, மிகவும் சிறுவனாக இருந்த வேளை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையாரடி என்று சொல்லப்படுகின்ற இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து சொற்பொழிவாற்றியதும் 80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச்
சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள்,
எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு
வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன்
தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது
ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது. மேலே காணப்படும் படம் கூட எனது பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்தபோது எடுத்த படம் தான்.
எங்களூர் கோயில் என்பதை விட, பொதுவாகவே ஈழத்து ஆலயந்தோறும் திருவிழாக்கள் நடக்கும் போது ஒவ்வொரு நாள் உபயகாரர் தம் சக்திக்குட்பட்ட விதத்தில் தமது திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் போது கண்டிப்பாக ஏதாவது விசேஷ நிகழ்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரையில் கடற்கரை சார்ந்த இன்பச் சுற்றுலாவோ, சினிமாக் கொட்டகையில் படம் பார்ப்பதோ உள்ளிட்ட வேறு எந்தக் களியாட்டமோ அதிகம் கிட்டாத போர்ச்சூழலில் கூட ஆலயங்கள் தான் ஆன்மிகத்துக்கும், பொழுது போக்குக்கும் நிலைக்களன்களாக விளங்கியிருந்தன.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தின் இரவுத் திருவிழாவில் சுவாமி வலம் வந்து வசந்த மண்டபத்தில் ஐக்கியமாகிய பின்னர், வந்திருந்த அடியார்கள் தம் களைப்பை மறந்து கோயிலின் முற்றத்தில் குவிக்கப்பட்ட குருமணல் பரப்பில் அப்படியே இருந்து விடுவார்கள். சிலரின் கச்சான் கடலைச் சரையை வாங்கி வந்து மண்ணில் சம்மணம் இட்டிருந்து கடலையை உடைத்து அதன் கோதைப் பத்திரமாக வேஷ்டிக்குள் போட்டுக் கொண்டே வறுத்த கடலையை வாய்க்குள் போட்டுப் பதம் பார்த்துக் கொண்டே தம் உற்றார் உறவினரோடு பேச்சுக்கச்சேரியில் இறங்கிவிடுவர்.
திலக நாயகம் போல், பொன் சுந்தரலிங்கம், நயினாதீவு நமசிவாயம் போன்ற ஈழத்துச் சங்கீத மேதைகளின் சங்கீதக் கச்சேரி நடக்கும். தீர்த்தத் திருவிழா மற்றும் பூங்காவனம் அல்லது திருக்கல்யாணத் திருவிழாவில் அருணா கோஷ்டி உள்ளிட்ட உள்ளூர் மெல்லிசைக் குழுக்களின் சினிமாப் பாட்டுக் கச்சேரி நடக்கும். அத்தோடு சின்ன மணி அவர்களின் வில்லுப்பாட்டும், நல்லூர் ஶ்ரீதேவி வில்லிசைக் குழுவின் வில்லுப்பாட்டும் கூட விசேஷமாக இருக்கும். போர்ச்சூழலுக்கு முந்திய காலகட்டத்தில் தான் திருமுருக கிருபானந்த வாரியார், சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள் போன்ற தமிழகத்தின் ஆளுமைகள் ஈழத்துக்கு வந்த காலமாக இருந்தது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இன்னொரு புதிய எழுச்சி “அகில இலங்கைக் கம்பன் கழகம்” என்ற அமைப்பின் வழியாக எழுந்தது. அது நாள் வரை அறியப்படாத இளம் பேச்சாளர்களது வருகை கம்பன் கழகம் வழியாக இந்தச் சொற்பொழிவு இயக்கத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சியது.
அது நாள் வரை வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளில் ஒரு சில திருவிழாக்களில் மட்டுமே இடம்பெற்ற கலை நிகழ்வுகளின் அரங்கேற்றம் என்ற நிலை மாறி, முழுத் திருவிழா நிகழ்வுகளிலும் நிதமும் ஒரு சொற்பொழிவு என்ற நிலைக்கு மாறியது. கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களை ஏறக்குறைய யாழ்ப்பாணத்தின் எல்லா ஆலயங்களிலுமே தமது வருடாந்தத் திருவிழா நாட்களில் அழைத்து வந்து சொற்பொழிவு வழங்கச் செய்வர். ஊரிலுள்ள பெரிய கோயில்களில் இருந்து கிராமத்தின் சிறு தெய்வ வழிபாட்டின் அடையாளமாக இன்றும் விளங்கும் வைரவர் ஆலயங்களில் கூட சமயச் சொற்பொழிவுகளுக்கு அப்போது பெரும் முக்கியத்துவம் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டது. 93 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் வருடாந்தத் திருவிழாவின் பத்து நாட்களும் தொடர் சொற்பொழிவாக கம்பவாருதி ஜெயராஜ் அவர்களால் கம்ப இராமாயணச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. கம்பவாருதி ஜெயராஜ் அவர்களின் தனிச் சொற்பொழிவுகள் தவிர, இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் இயங்கிய பாத்திரங்களை ஒப்புவமை செய்து நிகழ்த்தும் வழக்காடு மன்றம், பட்டி மண்டபம் என்றெல்லாம் இந்தச் சொற்பொழிவு இயக்கத்தின் பரிமாணங்கள் விரிந்தன. ஈழத்துச் சிவானந்தன் என்ற முது பெரும் தமிழறிஞரையும், திரு நந்த குமார், ஆறு திருமுருகன், தமிழருவி சிவகுமாரன், குமாரவேலு, தணிகாசலம், ஶ்ரீபிரசாந்தன்
தொண்ணூறுகளிலே நல்லூர்த் திருவிழாக் காலங்களிலே கம்பன் கழகம் கொண்டு நடத்திய “கம்பன் விழா”க்கள் மறக்க முடியாதவை.
95 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களின் யுத்த இடப்பெயர்வும் அதன் பின்னான மாறுதல்களில் குறிப்ப்பாக சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு என்பவை இந்த சொற்பொழிவு இயக்கத்திற்கு முக்கிய சவாலாக அமைந்து விட்டது.
சென்ற வாரம் சிட்னியில் இரண்டு நாட்கள் “திருக்குறள் மாநாடு” என்ற நிகழ்வு நடந்த போது இந்த நிகழ்வுக்காக வருகை தந்த தமிழக, மலேசிய அறிஞர்களோடு, அந்தக் காலத்தில் கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக விளங்கிய தமிழருவி சிவகுமாரன் அவர்களும் வந்திருக்கிறார். அவரோடு கண்டிப்பாக ஈழத்தில் தொண்ணூறுகளில் இயங்கிய சொற்பொழிவு இயக்கம் குறித்துப் பேசவேண்டும் என்ற அவாவில் ஒரு வானொலிப் பேட்டியைச் செய்திருந்தேன். திரு.தமிழருவி சிவகுமாரன் அவர்களின் வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்துச் சமய சொற்பொழிவு மேடைகள் குறித்தும் பேசுகின்றார். அத்தோடு முந்திய பந்தியில் நான் சொன்ன அதே ஆதங்கத்தையும் பதிவாக்குகின்றார்.
ஒலிப்பேட்டியைக் கேட்க
திருவள்ளுவர் விழாவுக்கு வருகை தந்த தமிழகத்து அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
ஒலிப்பேட்டியைக் கேட்க
கல்வி மற்றும் இலக்கியப் பணியில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
தமிழ்நாடுஅரசுக்கல்வித்துறையில் துணைப்பேராசிரியர்,தேர்வுநிலை விரிவுரையாளர்,இணைப்பேராசிரியர் எனப் பல நிலைக்ளில் பணியாற்றிய இவர் 1997-98 கல்வியாண்டில் ஓராண்டுக் காலம் அமெரிக்காவின் நானூறாண்டுக் காலத் தொன்மை வாய்ந்த கலிபோர்னியாப் பல்கலைக்
கழக்த்தில் சிறப்புவருகைப் பேராசிரியராகப் புலமுதல்வர் (Dean) என்னும்
தகுநிலையில் பணியாற்றினார்.அப்பல்கலைக்கழக்த்தின் வேண்டுகோளுக்கிணங்க
ஓராண்டுக் காலமும் வார நிறைவு நாட்களில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று
தமிழ் இலக்கியம் குறித்த பொழிவுகளை ஆற்றினார். புலம்பெயர் தமிழர்களின்
பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவதன் தேவையை இப் பொழிவுகள் ஆழப் பதியவைத்ததன்
விளைவே இன்றைய அமெரிகத் தமிழ்க்கல்விக்கழகமும் பள்ளிகளில்
தமிழ்க்கல்வியின் வளர்ச்சியும் எனலாம்.
எழுதிய நூல்கள் பல்துறைசார் அணுகுமுறையின் முன்னோடி முயற்சிகளாகும்.
‘இலக்கியமும் சமூகவியலும்’ ’இலக்கியமும் உளவியலும்’
’இலக்கியமும் மார்க்சியமும்’ ‘திறனாய்வுச் சுடர்’ முதலான இவரது நூல்கள் தமிழாய்வைப் புதிய திசையில் திருப்பின.
இவரது”புதுக்கவிதையின் தேக்கநிலை” எனும் நூல் 1986-ஆம் ஆண்டு வெளிவந்தபோது
ஒரு கருத்துச் சூறாவளியையே ஏற்படுத்தியது எனலாம்.இந் நூல் பற்றி ‘தாய்’இதழ்
மூன்று மாதக் காலத்திற்கு ஒரு தொடர்விவாதம் வெளியிட்டது.
’இக்காலத்
தமிழில் சொல்லாக்கம்’என்னும் இவரது முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக
வெளிவந்துள்ளது.இதன் பின்னிணைப்பாக 37,000 சொற்கள் கொண்ட ‘ஆட்சித்துறைச்
சொற்கோவை’ ஒன்றும் தொகுத்தளித்துள்ளார்.
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் பற்றிய “வாழும்
தமிழ்க்கவிஞர்கள்” என்னும் தொடர்பொழிவைக் கட்ந்த் பத்தாண்டுகளாக
நிகழ்த்திவருகிறார்.இதுவரை 125 கவிஞ்ர்களைப் பற்றிப் பொழிவுகளை
நிகழ்த்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பில் நாட்டமும் இணையதளத்தில் ஈடுபாடும்
இவரது பொழுதுபோக்குகளாகவும் பணிநிறைவுக்குப் பின்னர் முழுநேரப்பணியாகவும்
அமைந்தன. பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில்
மொழியாக்கம் செய்து வலைப்பூக்களாக இணையதளத்தில் உலவவிட்டுள்ளார்.இதுவரை 43
நாற்பத்துமூன்று வலைப்பூக்களை உருவாக்கியுள்ளார்.
மின்புத்தக வெளியீட்டில் முனைந்து இதுவரை ஐம்பத்துமூன்று மின்புத்தகங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.
”விவேகானந்தரின் இளைஞர்க்கான சிந்தனைகள் “ என்னும் இவரது பொழிவும் இங்ஙனம் மின்புத்தகமாக வெளியிட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
மோரிசியசு காந்தி கல்வி நிறுவனம்,மலேயப் பல்கலைக்கழகம்,சிங்கப்பூர்த்
தேசியக் கல்விநிறுவனம்,நான்யாங் பல்கலைக்கழகம்,தோகியோ காக்குசின்
பல்கலைக்கழகம்,யூட்டா மாநிலத்தில் அமைந்துள்ள பிரிகாம்யுங் பல்கலைக்கழகம்
எனப் பல பல்கலைகழகங்களில் விருந்தியல் விரிவுரையாற்றும் வாய்ப்புப்
பெற்றார்.
இவரது வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க அறிஞர் சார்சு கார்ட்டு (George Hart)
தமிழின் செம்மொழித் தகுதிப்பேற்றினை உலகுக்குணர்த்தும் வகையில் வெளியிட்ட
அறிக்கை உலக மொழியறிஞர்களின் கவனத்தைத் தமிழின்பால் திருப்பியது.மேலும்
நடுவண் அரசுக்கு உண்மையை உணர்த்தும் அறிவிப்பாக விளங்கித் தமிழுக்குச்
செம்மொழித் தகுதிப்பேற்றை
அறிவித்தற்குத் தூண்டுகோலாக அமைந்தது.
இக்காலக் கவிதைகளைத் தொகுத்து
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இவர் வெளியிட்ட A Cluster of Stars
என்னும் நூலும்
தமிழன்பனின் தெரிவுசெய்யப்பெற்ற
கவிதைகளின் மொழிபெயர்ப்பாக அமைந்த Blood and Sweat in a Capsule என்னும்
நூலும் இங்குக் குறிப்பிடத் தக்கன.
அண்மையில் சிங்கப்பூர்த் தலைவர் லீ குவான் இயூ அவர்களின் 90-ஆவது
பிறந்தநாள்நிறைவை முன்னிட்டுச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
தொண்ணூறு கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டது.இக் கவிதைகளை
மூன்றே வாரத்திற்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துகொடுத்தார்.
சிங்கப்பூர்க் குடியரசின் ஆறாவது அதிபர் எசு.ஆர்.நாதன் அவர்கள் இந் நூலை
வெளியிட்டு மறைமலை இலக்குவனாரைப் பாராட்டினார்.
நூலாசிரியர்,திறனாய்வாளர்,மொழிபெயர்ப்பாளர்
என்னும் தகுதிகளுடன் ஆங்கிலக்கவிஞர் என்னும் முகமும் மறைமலை
இலக்குவனார்க்கு இருப்பதைப் பலர் உள்நாட்டுக்குள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.
Associated Content என்னும் வலைத்தளத்தில் இவர் இயற்றி வெளியிட்ட
ஆங்கிலக்கவிதைகளை எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர்.இந்தத்
தளம் கலைக்கப்பட்ட நிலையில் இக் கவிதைகளின் ஒரு பகுதியை From Love to
Divorce
எனவும் Tears are more powerful than Bombs எனவும் தலைப்பிட்டு மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.
இப்போது Poetry dot com என்னும் வலைத்தளத்தில் தமது ஆங்கிலக்
கவிதைகளை வெளியிட்டு Poet laureate என்னும் விருதினைப் பெற்றுள்ளார்.
பிரபா!
அன்றைய காலங்களில் கோவில்களில் கதாப்பிரசங்கம் எனும் இசையுடன் புராண இதிகாசக் கதைகூறும் முறையில் நல்லை திருஞானசம்பந்தராதீன குரு சிறீலசிறி ஞானசம்பந்த பராமாச்சரிய சுவாமிகள் எனும் மணி ஐயர் மிகப் பிரபலம், இதை நிகழ்த்த நல்ல இசைப் புலமையும் குரல் வளமும் இதிகாச புராண அறிவும் வேண்டும், மணிஐயர் யாவும் நிறையப் பெற்றவர். தமிழகத்தில் அப்பணியை செவ்வனே செய்தவர் திருமுருக கிருபானந்த வாரியார்.. இவர்களுக்குப் பின் இக் கலை இல்லாமல் போய்விட்டதெனக் கூறலாம். பின் நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு உந்துதலாக வழிகாட்டியவர் தங்கம்மா அப்பாக்குட்டி என்பதே என் கணிப்பு , குக்கிராமங்களில் கூட அவர் சொற்பொழிவுக்குக் குறையிருந்ததில்லை.
நீங்கள் குறிப்பிட்ட இளைஞர்களின் சொற்பொழிவுகள் நேரடியாகக் கேட்க அமையவில்லை. கம்பவாருதியின் சுவையான சொற்பொழிவுகள் ஒலிப்பதிவாகக் கேட்டுள்ளேன்.
வணக்கம் யோகன் அண்ணா
மணி ஐயரின் பேச்சை எனக்குக் கேட்கும் பாக்கியம் கிட்டவில்லை. இலங்கை வானொலியில் அவரின் ஒலிப்பதிவுகள் கிட்டலாம் என்று நினைக்கிறேன். சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மகத்தான பணி நினைவில் நிறுத்தத் தக்கது. நீங்கள் குறிப்பட்டது போல அடுத்த தலைமுறைக்கும் அவர் முன்னோடியாக விளங்கினார்.
இப்பொழுது பதிவின் தொடர்ச்சி கருதி மணி ஐயர், தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது சொற்பொழிவுப் பணியையும் சேர்த்துள்ளேன் நன்றி யோகன் அண்ணா
அருமையான பதிவு பிரபா, ஒலிப்பதிவான நேர்காணலுடன். இந்த மாதிரி சொற்பொழிவுகள் தான் மனதில் நன்கு பதியும். புராண இதிகாசக் கதைகளைப் படிக்க சோம்பல் படும் பலருக்கும் கேட்டு ஞானம் வளர இம்மாதிரி சொற்பொழிவாளர்களின் பணி மிகவும் தேவை.
கதைகள் மூலம் நற்செய்தி பரவுகிறது. தமிழகத்தில் சுகி சிவம் நன்றாக சமய சொற்பொழிவு ஆற்றுகிறார். வேளுக்குடி கிருஷ்ணன்னும் இச்சேவையை செவ்வனே செய்கிறார்.
amas32
மிக்க நன்றிம்மா சுகி.சிவம் பேச்சு கேட்டிருக்கிறேன் வேளுக்குடியாரின் பேச்சுக் கேட்க இன்னும் சமயம் வாய்க்கவில்லை