பாலுமகேந்திரா எனும் அழியாத கோலம்

“நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை 

என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை”
அழியாத கோலங்கள் திரைப்படம் சுமந்த கரு எத்தனை பேருக்குப் பொருந்திப் போகிறதோ தெரியவில்லை ஆனால் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒவ்வொருவர் வாழ்வின் ஒரு சில அத்தியாயங்களையாவது அது சுமந்து நிற்கும். 
இன்றைக்கும் புலம் பெயர் தேசத்தின் ஒரு மூலையில் இருந்து தன்னோடு கூடப்படித்தவன் எங்கிருக்கிறான், எப்படியிருக்கிறான், உயிரோடு இருக்கிறானா  என்று தேடும் வலி சுமந்த வாழ்வின் தேடலோடு இருக்கும் எனக்கும் அது பொருந்தும்.  
அந்த வகையில் தமிழில் அழியாத கோலங்கள் வாயிலாகத் தொடங்கிய 
பாலுமகேந்திரா மீது ஈழத்தில் பிறந்த படைப்பாளி என்ற பெருமிதத்தைத் தாண்டிய கெளரவத்தை மனசுக்குள் வைத்திருக்கிறேன். அதனாலோ என்னமோ அவரோடு வானொலிப் பேட்டி என்று வந்தபோது கூட ஒரு பயங்கலந்த மரியாதையோடு ஒதுங்கிக் கொண்டேன். 
இந்தியாவின் மிகச்சிறந்த சினிமாப்படைப்பாளி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது பாலுமகேந்திராவின் உழைப்பு. எங்கே பிறந்தேன் என்பதை விட என் விதை எங்கே விழுகின்றது என்பது தான் முக்கியம் என்று நிரூபித்துக் காட்டிய ஒளிப்பதிவாளர் சக இயக்குனர். இவருக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு முழு நேர ஒளிப்பதிவாளராகவோ அல்லது முழுமையான மசாலா சினிமாக்களுடனோ நின்றிருக்க முடியும். ஆனால் யாத்ரா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம் என்று இவரால் மிகச் சிறந்த கலைப்படங்களை ஆக்கியளிக்க முடிந்ததற்கு மிக முக்கிய காரணம் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் தன்னுள் தேங்கிய ஓர்மம் தான். 
அதிலும் குறிப்பாக மாமூல் ஈழ அரசியல் வியாபாரியாகவும் கூட அவர் தன்னை முன்னுறுத்தாதது இன்னும் ஒரு படி உயர்த்தி நிற்கின்றது. 
பாலுமகேந்திரா இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருந்தாலும் ஈழத்துக் கலைத்துறை மீதான அவருடைய கரிசனை மறைமுகமாக இயங்கியதை அறிவேன். பாலமனோகரன் எழுதிய ஈழத்தின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகப் போற்றப்படும் ” நிலக்கிளி” நாவலை ஈழ சினிமாவாக உருவக்க முனைந்த போது, அந்த நாவலின் மூலப்பாத்திரம் “பதஞ்சலி” க்கு நிகரான நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேட முடியாது என்று சொல்லி “வாடைக்காற்று” நாவலைச் சினிமா ஆக்குமாறு முன் மொழிந்தவர்.
நம் தலைமுறையின் அழியாத கோலங்கள்
பாலுமகேந்திராவின் படைப்புகள்.
பாலு மகேந்திராவின் “வீடு” குறிந்த என் இடுகை
வீடும் வீடுகளும்
பாலு மகேந்திராவின் குரல் பதிவு
கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது வானொலி நேயர்களோடு படைக்கும் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில்
50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.
“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். 
மகத்தான படைப்பாளி பாலுமகேந்திராவுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி

5 thoughts on “பாலுமகேந்திரா எனும் அழியாத கோலம்”

 1. அவரது படைப்புகள்,
  அழியாத கோலங்கள்.
  அந்த கோலங்கள் அழியாத காவியங்கள்.

  திரைப்பட ஆக்கதின் புதுமையை புகுத்தியவர்.
  பாடல் காட்சிகளில் 'montage' முறையில் நிகழ்வுகலை நகர்த்தி சொல்லும் உத்தியை
  விதைத்தவர்.

  ஆழகி
  ஆட்டோக்ராஃப் படம் பார்த்த்வர்களுக்கு
  தெரியும் அவற்றின்
  ஆரம்பம்
  அழியாத கோலங்களில் என்று.

  பால்யதையும்
  யவ்னதையும் கடந்த எனக்கு
  அவரின் படங்கள் பொக்கிசங்கள்

  அவரின் இழ்ப்பு ஈடு செய்ய முடியதது.

 2. சினிமாவில் மாற்றம் கொண்டுவர சிலரே பிறக்கின்றனர். அந்த சிலரில் சிலரே அதை மற்றவர்களுக்கும் தாராளமாகக் கற்றும் கொடுக்கின்றனர். அந்த வெகு சிலரில் ஒருவர் பாலு மகேந்திரா. நடுவில் கொஞ்ச வருடங்கள் வெளிச்சத்தில் இல்லாமல் இருந்தாலும் சமீப காலத்தில் நன்கு பாராட்டப்பட்டது ஒரு பெரிய ஆறுதல். அவரின் திரைப்படக் கல்லூரி பல நல்ல கலைஞகர்களை உருவாக்கி வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பவா செல்லத்துரை அவர்களின் ஆவணப் பட வெளியீட்டில் அவர் பேச்சைக் கேட்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.

  amas32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *