செல்போன் கணக்கு

“டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மெல்பர்ன் மலர் போல் மெல்லிய மகளா”
பாடல் வந்த காலத்தில் நான் மெல்பர்னில் பல்கலைக்கழகப்படிப்பில் இருந்தேன்.
அப்போது தான் எனக்கும் ஒரு சொந்த செல்போன் வாய்த்தது. பல்கலைக்கழகத்தில்
என் சக நண்பன் ஆனந்த் விடாப்பிடியாக என்னை இழுத்துக் கொண்டு ஒரு செல்போன்
விற்பனை நிலையத்தில் என் பெயரில் ஒரு போனை வாங்க வைத்தான். அதுவரை எங்காவது
வீதியில் இருக்கும் பொதுத்தொலைபேசிக்கு
நாணயம் போட்டுப் பேசும் வழக்கம் தான் இருந்தது. எனக்கு முதலில் கிடைத்த
செல்போன் இன்று வைத்திருக்கும் iPhone 5S ஐ விட பல மடங்கு பாரமான
கிட்டத்தட்ட ஒரு கொள்ளிக்கட்டை அளவில் இருந்த நோக்கியா, கூடவே அதன் தலையில்
ஒரு நீட்டுக் கம்பி வேறு. அதையெல்லாம் நம்முடைய ஜீன்ஸில் வைத்தால் பிதுங்கி வெளியே தலையும், கொம்பும் தெரியும்.

90 களிலேயே செல்போன் வாங்கினாலும் அது ஒரு ஆடம்பரப் பொருளாகத் தான் காட்சிப்படுத்தப்படுத்த உதவியது. தீவிரமாகப்
பாவிக்கத் தொடங்கியதென்னவோ 2000 இன் இறுதியில் தான். ஒரு காலத்தில் போனில்
ஏன் காமெரா, இண்டர் நெட் இருக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்த
என்னையே மாற்றிவிட்டது தொழில் நுட்பம். இப்போதெல்லாம் தொலைபேசி அழைப்பை
நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டோ மூன்றோ எடுத்தாலே அதிகம். இயக்குனர் சேரன் தன் படப்பிடிப்பு முடியும் வரை யாரும் செல்போன் பாவிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டளை போடுவாராம்.
“நான் செல்போன் பாவிப்பதில்லை” என்ற சுயவிளக்கம் சார்ந்த மிஷ்கினின்
பேட்டியைப் படித்த போது அவர் போலவே செல்போனை தலையைச் சுத்தி மூன்று சுற்று
சுற்றிவிட்டு எறிந்தால் என்ன என்றும் தோன்றும்.

Karthik Calling Karthik என்றொரு அட்டகாசமான மர்மப்படம் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹிந்தியில் வந்திருந்தது. பர்ஹான் அக்தர் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார்.  அந்தப் படத்தில் மனச்சிதைவு ஏற்பட்ட நாயகனுக்கும் தொலைபேசிக்குமிடையில் உளவியல் சார்ந்த முடிச்சு அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கும்.பர்ஹான் அக்தர் நடிப்பில் பின்னியிருப்பார், படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பாகச் செதுக்கப்பட்டிருக்கும்.

கடந்த வாரம் நம்முடைய அலுவலகத்திலிருந்து நான்கு பேர் வேலைத்திட்டமொன்றுக்காகப் பயணித்தோம். சில மணி நேரங்கள் கழிந்த நிலையில், நேரத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொருவரும் செல்போனைத் தேடுகிறார்கள். என்னைத் தவிர யாருடைய கையிலும் கைக்கடிகாரம் இல்லை என்பதை அப்போது தான் கண்டேன். இன்று ஒரு செல்போனுக்குள் வானொலி, ஒளிப்பட, வீடியோ காமெரா என்று எல்லாவற்றையுமே நிரப்பிவிட்டது. போனின் அடிப்படை நோக்கத்திலிருந்து அதன் பயன்பாடும் மாறிவிட்டது.

இப்போது Viber போன்ற இணையத் தொடர்பு தொலைபேசி அழைப்புமுறை
வந்துவிட்டதால் போன் கம்பனிக்காரனுக்கு வீணாக கட்டும்
தொலைபேசிக்கட்டணத்தையும் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது தொழில் நுட்பம்.
15 வருடங்களுக்கு மேலாக Post paid என்னும் முறைமையின் கீழ் தொலைபேசி
நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் ஒப்பந்தந்தத்தை
நேற்றோடு தலை முழுகிவிட்டு Pre-Paid யுகத்துக்குள் வந்தாச்சு. அதிலும் ஒரு
வேடிக்கையான வேதனையை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது.

எனது செல்போன்
பாவனை இலக்கத்தை புதிய தொலைபேசி நிறுவனத்துக்கு மாற்றிய பின்னர் முதல்
வேலையாக இணைய வசதி இருக்கா என்று பார்த்தால் அவுட் என்று காட்டியது. அந்த
நிறுவனத்துக்கு அழைத்தால் அம்மணி ஒருத்தி தேனொழுகப் பேசினார். என்
பிரச்சனையைச் சொன்னால் “ஓ நம்ம கம்பனி இணைய வசதிக்கு முக்கியத்துவம்
கொடுக்காது உங்களது iPhone 5S வேறு எனவே பேசாம iOS 7 ஐ போடுங்க” என்று பதில்
வந்தது. கவுண்டர் குரலில் “பிச்சுப்புடுவேன் பிச்சு” என்று கத்தணும் போல
இருந்தது. அடக்கிக் கொண்டு அம்மிணி ஐயோயெஸ் எல்லாம் போட்டாச்சு இந்த போன்
வாங்கியே நாலு வாரம் என்றேன். அப்படியென்றால் சிம் கார்ட் ஐ கழற்றி விட்டு
மீண்டும் iOS 7 ஐ போடுங்கள்” என்றாள். இது ஆவுறதில்லை என்று நான் மீண்டும்
போராட அவளோ தனக்குத் தெரிந்த 64 கலைகளையும் செல்போன் செட்டிங்ஸ் இல்
பிரயோகிக்கச் சொன்னாள். அரைமணி நேரம் கடந்து பொறுமை டாட்டா காட்ட நானும்
நன்றி தாயி உன் சேவைக்கு என்று கட் பண்ணிவிட்டு மீண்டும் அழைத்தேன், வேறு
யாராவது புத்திசாலி அகப்படும் என்று. இப்படிப் பலமுறை பல காரியங்களுக்குச்
செய்து வெற்றியும் கண்டிருக்கிறேன் சில தடவை அதே கஷ்டமர் சேர்விஸ்காரரிடம்
அகப்படுவதுமுண்டு.
“அதான் சொன்னோம்ல” என்ற தோரணையில் மீண்டும் அதே குரல் வருவதுண்டு.

என் கஷ்ட காலம் மீண்டும் இன்னொரு அம்மிணி
மீண்டும் 64 கலை. பேசாமல் போனை கடாசிவிடுவோமா போனை என்று நினைத்தவாறே
setting சென்று mobile data என்று பச்சையாகச் சிரித்த பொத்தானை அழுத்தி
மீண்டும் அழுத்தினால் அட இணையத்தில் கூகுளான் சிரிக்கிறார் சிரிக்கிறார்
சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

Cisco networking முதல் வகுப்பில்
பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும்
Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம். 
“அதிருக்கட்டும் முதலில் ஸ்விட்ச் ஐ
போட்டீர்களா” என்று கேட்டார் ஆசிரியர்.

பிரச்சனையை பெரிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டோம் இப்போதெல்லாம்.

6 thoughts on “செல்போன் கணக்கு”

 1. வணக்கம்
  //அழுத்தினால் அட இணையத்தில் கூகுளான் சிரிக்கிறார் சிரிக்கிறார் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.//

  பதிவு அருமை வாழ்த்துக்கள் நண்பரே
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. நல்லா எழுதி இருக்கிறிங்கள்.. நானும் நேரம் பாக்க மொபைலத் தேடுற ஆள்தான் :))

 3. super..நானும் பல தடவை பிபிய ஏத்திக்கொண்டு, கடைசில மொக்கை ரீசனா இருக்கும். ரைட்டு விடுன்னுருவேன் ஏஜண்ட்கிட்ட :))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *