வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.

ஒலிவடிவில் கேட்க

அவுஸ்ரேலிய மண்ணில் இருந்து எமது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்ததற்காகவும் முதலில் ரசிகராகவும் இந்த வேளையிலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்துலகில் இருப்பவர். முதல் முறையாக ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. சூடிய பூ சூடற்க என்கின்ற சிறுகதைத் தொகுதிக்காக உங்களுக்கு இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது. அது வந்து சர்ச்சைக்கு உரியது என்பதை விட சவாலான ஓர் கதை. சமகால அரசியல் விமர்சனமாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான கதைக்கு ஓரு அரசினுடைய அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நான் வந்து நேர்மையற்ற விமர்சனங்கள் செய்றதில்லைங்க. அரசாங்கமானாலும் சரி நிறுவனங்களானாலும் சரி. ஓரு படைப்பிலக்கியவாதியின் மனோநிலையில் இருந்து சமூக நோக்கத்தோட நமக்கு சரி என்றுபடுவதை நான் விமர்சனம் செய்கிறேன். அந்த விமர்சனத்தை அவங்க எற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது நம்முடைய சிக்கல் இல்லை. ஆனா அப்படி ஒர் விமர்சனம் இருக்கிறதென்பதும் அவர்கள் அறியாதவர்கள் இல்லை. ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இந்த மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது

பொதுவாகவே தமிழ் சமூகத்து எழுத்தாளர்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் பொதுவாக இப்படி சாகித்திய அக்கடமியாகட்டும் அல்லது ஞான பீட விருதுகளாகட்டும் ஒர் புறக்கணிப்பு இருப்பதாகப்படுகின்றது,அதைப் பற்றி?

அதாவது இந்த விருது வாங்குதல் வழங்குதல் இதுக்குள்ளே இந்தச் சூழலிலே ஒரு அரசியல் இருக்குதைய்யா. அரசு அதிகாரங்களை செல்வாக்குகளை இலக்கிய கோட்பாடு செல்வாக்குகளை பயன்படுத்தி உரியவர்களை உரிய விதத்தில் அணுகி அப்படித் தான் பரிசில்களை பெரும்பாலும் பெற்றுக் கொள்கின்றனர் அது நம்ம மொழிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அவலம். என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தப் பரிசிலுக்காகவும் யாரையும் தேடியோ நாடியோ கோரிக்கைகள் எடுத்துக் கொண்டு போனது இல்லை. ஆனால் என்னுடைய எழுத்துக்கான ஒரு மரியாதை தெரிந்து வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது என்னுடைய நம்பிக்கை.

உங்கள் “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்த இந்த இன்னுமோர் சிறப்பு என்னவென்றால் கடந்த சென்னைப் புத்தக கண்காட்சியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. விற்பனை அளவிலும் சரி ஒரு நல்ல அங்கீகாரத்தை வாசகன் வழங்கியிருக்கின்றான். இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பொதுவாகவே என்னுடைய புத்தகங்கள் விற்பனையில் இதுவரைக்கும் பின்னாடி இருந்ததில்லை. பதிப்பாளர்களும் என்னுடைய புத்தகத்தை வெளியீடுவார்கள். என்னுடைய முதல் நாவலுக்கு மாத்திரம் தான் பதிப்பாளர்களை தேடி நடந்த சிரமம் இருந்தது. என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து ஓரளவிற்கு விற்கின்ற புத்தகங்கள் தான். அதனால் எந்த பதிப்பாளரும் எங்கிட்ட வந்து எனக்கும் ஒரு புத்தகம் அச்சுக்கு கொடுங்கள் பதிப்பிற்கு கொடுங்கள் என்று கேக்கிற நிலை தான் எனக்கு இருந்திருக்கு.
இப்ப இந்த விருது அறிவிக்கப்பட்ட பிறகும் என்னுடைய இணையத்தளம் தொடங்கப்பட்ட பிறகும் என்னுடைய புத்தகங்களிற்கான டிமாண்ட் அதிகமாய் இருக்குது. குறிப்பாக சூடியபூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்கு விருது வழங்கியவுடனே எனக்கு கிடைத்த media attention ஒரு வகையில் பெரிய உதவியாக இருந்தது. இதுவரைக்கும் எந்த தமிழ் எழுத்தாளனுக்கும் கிடைக்காத வகையில் இலக்கிய பத்திரிகைகளில் என்னுடைய நேர்காணல்கள் என்னுடைய கட்டுரைகளை திருப்பி எடுத்து போடுறது சிறுகதைகளை திருப்பி எடுத்திட்டுப் போறது இந்த மாதிரியான ஒரு ஊக்கம் தொடர்ந்து கடந்த இரு மாதங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே வாசகர் வந்து என்னுடைய புத்தகங்களை தேடி வருகின்றார்கள்.
அந்த நேரம் சரியாக இருந்ததினால் சென்னை புத்தக கண்காட்சியில் இந்த விருது அறிவிப்பும் கிட்டத்தட்ட சமகாலத்தில் இருந்த காரணத்தினால் இந்த புத்தகத்தை நிறையப் பேர் தேடி வந்து வாங்கியதை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு கண்காட்சியினுடைய பதினாறாவது நாள் கால அளவில் 2560 படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது. அதற்காக இந்த புத்தகத்திற்காக மாத்திரம் தனியாக ஒரு விழிப்புச் சுற்று வைத்திருந்தனர் என்னுடைய பதிப்பாளர்கள். குறிப்பாக இளைஞர்கள் நிறைப்பேர் இந்தப் புத்தகத்தை தேடி வந்து வாங்கிறாங்க. பரவலாக என்னுடைய புத்தகம் அந்த புத்தகம் மாத்திரமல்லாமல் ஏற்கனமே அச்சிடப்பட்ட மறுபதிப்பு கண்ட என்னுடைய நாவல்கள் கட்டுரைத் தொகுதிகள் சிறுகதைத் தொகுதிகள் எல்லாம் கணிசமான அளவிற்கு இந்த ஆண்டு விற்பனையாகியிருக்கு. எனக்கு அது மகிழ்சியான விடயமாக படுது.

கேள்வி– இளைய சமூதாயம் தீவிர வாசிப்பின் மீது எவ்வளவு தூரம் நாட்டம் கொண்டிருக்கின்றது ஒர் எழுத்தாளனாக இந்த தமிழ் சூழலை எடுத்துக் கொண்டால் எமது இளைய சமூதாயத்தினுடைய தீவிர வாசிப்புப் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

அதாவது எப்போதுமே தமிழ் வாசிப்புப் பழக்கம் என்கிறது பெரும் தொகையானவர்களுக்கு இல்லைங்க. நம்முடைய ஜனத்தொகை வளர்ந்த அளவிற்கு நம்முடைய வாசகன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல முடியாது. இணையத்தினுடைய ஒரு செல்வாக்கு மிகுந்திருப்பதன் காரணமாக தமிழ் நாட்டிற்கு வெளியே வேலை செய்யிறவர்கள் இந்தியாவிற்க்கு வெளியே வேலை செய்யிறவர்கள் தமிழ் மீது ஆர்வங் கொண்டவர்கள் தங்களுடைய கவனத்தை படைப்பிலக்கியங்கள் மீது தற்சமயம் செலுத்தியுள்ளார்கள். சற்று செலுத்தி வருகிறார்கள். அவர்களின் மூலமாக படித்த இளைஞர்கள் தமிழிலக்கியத்தின் பால் திரும்பியிருப்பது ஒரு வரவேற்க்கத்தக்க நிகழ்ச்சி. அவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கிறாங்க. அவர்களின் வழிகாட்டுதலிற்க்கும் நம்முடைய இலக்கியவாதிகள் பலர் தயாராக இருக்கிறாங்க. இளைய தலைமுறைகளிலே புத்தகம் வாங்குவதிலும் படிப்பதிலும் ஒரு துடிப்பை நான் கவனிக்கிறேன். கடந்த சில பத்தாண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்ப இருக்கிறது ஒர் உற்சாகமான சூழ்நிலை என சொல்லத் தோணுகிறது.

கேள்வி– ஆனந்த விகடன் போன்ற பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட வணிக சஞ்சிகைகள் உங்களைப் போன்ற செழுமையான எழுத்தாளர்களைப் பயன்படுத்துவதும் அதன் வாயிலாக உங்களுடைய சிந்தனைகளை அது வெறும் நாவலோ சிறுகதையொன்றோ ஒரு வட்டத்தில் இல்லாமல் பரந்து பட்ட சிந்தனைகளை உள்வாங்குவது ஒரு ஆரோக்கியமான விஷயமாகப்படுகின்றது அப்படித்தானே?

அது உண்மை தான். அதாவது வணிக இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் தொடக்க காலத்தில் எங்களுக்கு இருந்தது. எங்களை வழிப்படுத்திய ஆசான்கள் வந்து நான் சிறு பத்திரிகை வட்டத்தில் மாத்திரத்தில் இயங்க வேண்டும். வணிகப் பத்திரிகைகள் உரிய மரியாதை தராது. வணிக இதழ்களை எழுதுவதன் மூலம் நான் மரியாதையற்றுப் போகிறேன் என்கிற மாதிரியெல்லாம் எங்களுடைய மூத்த எழுத்தாளர்கள் நாம் தொடக்ககாலத்தில் எழுத வந்த போது எனக்கு கருத்துச் சொன்னார்கள். பின்னாடி பார்க்கும் போது எந்த இதழில் எழுதினாலும் என்னுடைய கட்டுரையை எழுதுகிறேன். எங்கு எழுதினாலும் என்னுடைய வாசகனை சென்றடைவது முக்கியம் என்பது மாதிரியான கருத்து வந்த பிறகு ஆனந்த விகடன் மாதிரியான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆனந்த விகடன் மாதிரிப் பத்திரிகைகளில் எழுதும் பொழுது அதனுடைய வீச்சு வாசகனை சென்றடையிற வேகம் வியப்பை ஊட்டுவதாக இருக்கிறது. சென்ற இதழில் ஆனந்த விகடனில் என்னுடைய ஆத்மா என்கிற சிறுகதை வெளிவந்திருந்தது. பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய பிறகு நோய்வாய்ப்பட்டு மனைவி இறந்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த 85 வயது மதிக்கத்தக்க கிழவன் இறந்து விடுகிறான். அவன் மரணமானது கூட பக்கத்து வீடுகளுக்கு தெரியாமல் போறதுக்கு வாய்ப்பிருக்கிறதான சூழல். இப்படியான கதைகளை ஆனந்த விகடன் வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது வந்து இப்ப இருக்கிற சூழலில் ஒரு பொதுவான பிரச்சினை. இந்தக் கதை வெளியானவுடன் இதுக்கு கிடைக்கிற வரவேற்பு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் மற்ற பதிப்பகங்களை விடவும் ஆனந்த விகடன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவதாக இருக்கிறது.

கேள்வி– தீதும் நன்றும் என்கின்ற தொடரை உங்களுடைய சிந்தனையை தொடராக விகடனிலே எழுதிய பொழுது கவனிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஒரு விஷயம், ஈழத்திலே நடந்த தமிழின அழிப்பு தமிழின படுகொலை குறித்து உங்களுடைய இயலாமையின் கூற்றாக ஓர் எழுத்தாளனாக நீங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதையொட்டிய ஒரு கேள்வி. அதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் சமூகம். ஒரு எழுத்தாளனைப் பொறுத்தவரையிலே மற்றைய சமூகத்து எழுத்தாளர்கள் அளவுக்கு அவனுடைய குரல் ஒரு சமூகத்து குரலாக அங்கீகரிக்கப்படுவதில்லை என நான் நினைக்கின்றேன். அதை நீங்கள் ஏற்பீர்களா?

மலையாளத்தோடு, கன்னடத்தோடு, தெலுங்கோடு, மராட்டிய மொழியோடு, ஹிந்தி மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது தமிழிலக்கியவாதியினுடைய குரல் இலக்கியவாதியினுடைய குரல் ஒரு அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட குரலாக ஒலிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் அத்தகைய சூழலுக்கு ஏற்றவாறு தமிழினத்தினுடைய ஓர் அழிவிற்கு அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் போதுமான அளவுக்கு தங்களுடைய குரலை உயர்த்திப் பேசினார்களா என்கின்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது. நான் தொடர்ந்தும் என்னுடைய கட்டுரைகளிலும் இதை எழுதியிருக்கிறேன். பொது மேடைகளிலும் இதைப் பற்றி நான் விவாதித்திருக்கிறேன்.
அதாவது எதிர்காலத்தில் ஈழத் தமிழனக்கு நடந்த கொடுமைகளை ஏனென்று கேட்காமல் வாய் மூடி மௌனியாகி மயங்கி கிடந்த தமிழ் எழுத்தாளன் வரலாற்றில் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக இருப்பான் என்கிற ஓர் எண்ணம் எனக்குண்டு. ஆனால் எங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்குது. ஒரு இந்தியக் குடிமகனாக இந்திய சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டுத் தான் செயல்பட வேண்டியிருக்குது. நம்முடைய வருத்தத்தை கோபத்தை அநியாயத்தைக் கேட்கிற ஒரு குரலாக ஒட்டுமொத்தமாக தமிழ் படைப்புலகத்தின் குரல் ஒலிக்கவில்லை என்கிற ஆதங்கம் எனக்குள்ளே இருக்குது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன் என நினைக்கிறேன். ஆனந்த விகடனில் நான் எழுதிய 42 வாரம் தொடரில் குறைந்தது ஆறு ஏழு கட்டுரைகளில் இது பற்றி பேசியிருக்கிறேன். இது பற்றி வேறு இலக்கியங்களிலும் எழுதினேன். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் என்னுடைய குறையை சொல்லாமல் போகவில்லை. சமீபத்தில் வெளியான பச்சை நாயகி என்கிற என்னுடைய கவிதைத் தொகுப்பில் எட்டுப் பத்து கவிதைகளிலாவது மறைமுகமாக ஆனால் வெளிப்படையாக பொருள் விளங்கும் வகையில் காத்திரமாக பேசியிருக்குது. என்னுடைய வருத்தத்தை என்னுடைய கோபத்தை என்னுடைய ஆத்திரத்தை என்னுடைய இயலாமையை வேறு எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியலீங்க. இந்தளவுக்கு படைப்புலகம் இயன்றளவு தன்னுடைய அதிருப்தியை வெளியிடவில்லை என்பது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம் தான்.

உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானதொரு எழுத்தாளர்களுடைய அணி அவர்களுடைய கூட்டான ஒரு செயற்பாடு என்பதும் ஒரு சவாலான சூழலாகத் தான் இருக்கிறது இல்லையா? அதாவது தமிழ் சூழலிலே ஒன்றுதிரண்டு ஒருமித்த கருத்தோடு இப்படி சமுதாயப் பிரச்சினைகளை வெளியிடுவது என்பதும் சாத்தியப்படாத ஓர் அம்சம் அப்படித் தானே?

பிற மொழிகளில் சாத்தியப்படுகிறது. தன்னுடைய மாநிலத்திற்கான பிரச்சினை என்று வரும் போது ஓர் மலையாளப் படைப்பாளிகள் அத்தனை பேரும் ஒரு குரலில் பேசுகிறார்கள். கன்னடப் படைப்பாளிகளும் ஒரு குரலில் பேசுகிறார்கள். மராத்தியப் படைப்பாளிகள் பேசுகிறார்கள். வங்காளிகள் பேசுகிறார்கள். தமிழனுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலமை? தனித்த ஒற்றைக் குரலாக பேச முடியவில்லை என்பது ஒரு வரலாற்று சோகமாகத் தான் எனக்குப்படுகிறது.

வட்டார மொழி வழக்கியல் குறிப்பாக நாஞ்சில் பின்ணணியிலே நீங்கள் வட்டார மொழி வழக்கியலை நவீன சிறுகதை இலக்கியத்திற்காகட்டும். படைப்புலகிற்காகட்டும் நீங்கள் பொதுவாக வழங்கியிருக்கிறீர்கள். தமிழுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பென்று கூட இதைச் சொல்லலாம். ஏராளமான வட்டார மொழி வழக்கியலை தனது இலக்கியத்திலே உள்வாங்கியிருக்கிறது தமிழ் இல்லையா?

அதாவது அந்த வட்டார வழக்கு என்கின்ற பகுப்பை வன்மையாக மறுக்கிறேன். இது வந்து கல்லூரிப் பேராசிரியர்களும் திறனாய்வாளர்களும் தம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு சொல் வழக்கு. நான் என்னுடைய மக்களை எழுதுகிறேன். என்னுடைய கிராமத்தை எழுதுகிறேன். என்னுடைய பிரதேசத்தை எழுதுகிறேன். ஆனால் என்னுடைய திருநெல்வேலிப் பிரதேசத்தையோ நாஞ்சில் நாட்டுப் பிரதேசத்தையோ மாத்திரம் எழுதுகிற போது அது வட்டார வழக்கு என்கிற அடைப்புக்குறிக்குள் பேசப்படுகிறது. இதைப் போன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தியே தஞ்சை வட்டார அல்லது சென்னை வட்டார பிற வட்டார எழுத்துக்களை வட்டரா வழக்கு என்று குறிப்பிடுவதில்லை. நான் என்னுடைய மொழியை என்னுடைய பிரதேச மக்கள் பேசிய மொழியை கையாள முயற்சி செய்தேன். சரி ஒரு வசதிக்காக அவர்கள் வைத்துக் கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட நான் என்னுடைய பிரதேசத்திற்குரிய மொழியை அது இறந்து போய் விடாமல் உயிரோடு இருப்பதற்கான முயற்சியைத் தான் படைப்பிலக்கியங்கள் மூலமாக நான் தொடர்ந்த செய்கிறேன். அதாவது சென்னைப் பொதுக் கூட்டத்தில் நான் பேசிய ஒரு விஷயம் என்னுடைய நாவலில் ஒரு வழக்கு மொழியை கையாளவதன் மூலம் அந்த சொல்லை ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை ஒரு பெரிய சேவை என்று நினைக்கிறேன்.

இப்படியான உங்களுடைய எழுத்துலக சூழலிலே இன்னுமொரு பரிமாணமாக அதாவது ஒரு எழுத்தாளனுக்கு பரந்துபட்ட ஒரு களத்தைக் கொடுக்கின்ற ஒரு ஊடகமாக சினிமா என்கின்ற ஊடகம் திகழ்கின்றது. ஊடங்களுக்கு முன்னால் இருக்கின்ற பல எழுத்தாளர்களுடைய படைப்பிலக்கியங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரையிலே படைப்பு அல்லது ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை காட்சி வடிவம் பெறும் பொழுது அதனுடைய அந்த உள்ளார்த்தம் திரிக்கப்படுகின்றது அல்லது சிதைவுறுகின்றது என்கிற விமர்சனம் எழுகின்றது. உங்களுடைய படைப்பு அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?

என்னுடைய “தலைகீழ் விகிதங்கள்” என்கிற நாவல் “சொல்ல மறந்த கதை” என்கிற பெயரில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படமாக வந்தது. தங்கர்பச்சன் இயக்கத்தில் சேரன் நடித்த முதல் படம் அது. நான் இதை வேறு விதத்திலே பார்க்கிறேன். நாவல் என்கிற தளம் வேறு சினிமா என்கிற தளம் வேறு. சினிமாவைப் பார்க்க போகக் கூடாது என்று நினைக்கிறவன் நான்.
நாவல் கையாளுகின்ற மொழி வேறு. இந்த குறிப்பிட்ட திரைப்படம் கையாளுகின்ற மொழி வேறு. நாவல் கையாண்ட தொழில் வேறு திரைப்படம் கையாண்ட தொழில் வேறு. இது வந்து என்னுடைய நாவல் சிதைக்கப்பட்டது என்கிற ஒரு எண்ணத்தில நான் சொல்லலை. என்னுடைய நாவலை எடுக்கிற போது அவருக்கு நாஞ்சில் வழக்கு மொழி புரியாத போது நெல்லை விவசாயம் பற்றி அறிவு இல்லாத போது எப்படி முடியும்? ஒரு இயக்குனர் அது இயக்குனருடைய மீடியம் அந்த இயக்குனர் அந்த தொழில் அந்த மொழியை எப்படிக் கையாள முடியும் என்கிற கேள்வி நம்மகிட்டே இருக்கு. ஒரு நாவலில் இருந்து அதாவது ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது என்பது அப்படியே திரைப்படமாக்குவது என்பது வரிக்கு வரி திரைப்படமாக்குவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல
அவர்களுக்குத் தேவையானது முக்கியமான 5 அல்லது 6 காட்சிகள். அதை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு இயக்குனருடைய பார்வையில் மூலம் அந்த நாவலை அவர்கள் திரைப்படம் என்ற இன்னொரு வடிவத்தில் வெளியே தருகிறார்கள். அது சிறந்த திரைப்படமா இல்லையா என்பதில் என்னுடைய விமர்சனங்கள் உண்டே தவிர என்னுடைய நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டது அதனுடைய மொழி சிதைக்கப்பட்டது, பிரதேசம் சிதைக்கப்பட்டது என்பதில் எனக்குப் பிரசனை இல்லை.

படித்துறை என்கிற திரைப்படத்தின் மூலம் திரையிசைக் கவிஞராக நீங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றீர்கள். அந்த வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

படித்துறை என்கிற படம் சுகா என்கிற இயக்குநரால் எடுக்கப்படுகிற படம். சுகா எனக்கு நெருக்கமான நண்பர். என்னுடைய அண்ணாச்சி நெல்லைக் கண்ணனுடைய பையன். என்னடைய மகன் என்கிற இடத்தில் இருப்பவர். அவருடைய படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. இசை மேதை அவர். அதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இளையராஜா வந்து தன்னுடைய காலகட்டத்திலே வாழ்கின்ற சிறந்த படைப்பாளிகளை திரைக்கான பாடலை எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. பேராசை என்று நான் சொல்லி விட முடியாது.
அதனால எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனுடன் என்னையும் அழைத்து இந்த படித்துறை படத்திற்கு பாடல் எழுதச் சொன்னார். ஜெயமோகனுடைய பாடல் சில காரணங்களினால் இந்தப் படத்தில் இடம்பெற முடியவில்லை. நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதிய பாடல் இடம்பெற்றிருக்கின்றது. அதன் மூலம் எனக்கு திரையிசைப் பாடல் என்றால் என்ன என்பது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. சினிமாப் பாடல் என்பது வேறு. நம்முடைய கவிதை என்பது வேறு. சினிமா வேறு வடிவத்திற்காக வேறு எழுத்திற்காக எழுதப்படுகிற ஒரு வடிவம். இது பற்றிய அறிவும் அனுபவமும் எனக்கு கிடைத்தது. இதை வந்து ஒரு சந்தோசமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.

நிறைவாக, கேட்டுக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு, நேயர்களுக்கு ஏதாவது கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நேர்காணலை கேட்டுக் கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழனுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய மொழி அளப்பரிய ஆற்றல் கொண்டது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட தொன்மை கொண்ட மிகச் சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கிய மொழி. இந்த மொழியில் எங்களாலான கூடுதலான நூல்களை இயற்ற முயன்று கொண்டிருக்கிறேன். இந்த மொழியை கற்பதன் மூலம் நலீன இலக்கியங்களை கற்பதன் மூலம் நம்மடைய மொழியினுடைய செழுமையை மேம்படுத்த முடியுமென்றும் இந்த மொழியினுடைய தொடர்ச்சியை வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல முடியும் என்றும் சொல்லி என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்.

6 thoughts on “வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் – நாஞ்சில் நாடன்”

  1. SiSulthan said…

    நன்றி தோழரே, உங்கள் பதிவு நாஞ்சில் நாடன் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.//

    நன்றி நண்பரே

    கவி மற்றும் அன்பின் ரத்னவேல் ஐயா

    மிக்க நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *