“சிவபூமி” என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்

இந்தமுறை தாயகம் சென்றபோது கொழும்பில் நின்ற சில நாட்களில் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. அங்கு சென்றுவிட்டு உடனேயே அந்தக் கும்மிருட்டில் வெள்ளவத்தையில் இருந்து ஓட்டோ ஒன்றைப் பிடிக்கின்றேன். வழக்கமாக நானாகப் பேச்சுக் கொடுக்கமாட்டேன் ஓட்டோக்காரர் பேசும் வரை. சிலவேளை யாராவது சிங்களவர் ஆட்டோக்காரராக வந்து வாய்த்து, அவர் தன் மொழிக்காரர் என்று நினைத்துச் சரளமாகச் சிங்களம் பேசி உரையாடும் போது இஞ்சி தின்ற மங்கியாக நானும் ஏதாவது சிரித்துச் சமாளித்து, கையில் இருக்கும் மொபைல் போனில் அவசரமாக அழைப்பு எடுப்பது போலப் பாவனை (பீலா) காட்டிய சந்தர்ப்பமும் உண்டு. ஆனால் இந்த அதிகாலை நேரம் ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் போது காலி வீதியில் எந்தவித வீதி நெரிசலும் இன்றி ஓட்டோ எறும் போது சாரதி தமிழில் பேச்சுக் கொடுக்கின்றார். பிரணவ மந்திரம் தெரியாத படைத்தல் தொழில் கடவுள் பிரமனுக்கும் தெரியாது, அழிக்கும் தொழிலைக் கொண்ட உருத்திரனுக்கும் புரியாது என்று பூடகமாக பிரணவமந்திரத்தை இனப்பிரச்சனையாகவும், பிரம்மா, உருத்திரன் கடவுளர்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஒப்பிட்டு அவர் பேசிக்கொண்டு வந்தது அவரின் கல்விப்புலமையின் உயர்வைக் காட்டியது. அதை மெய்ப்பிப்பது போல நான் இறங்கும் இடம் வந்ததும் அவர் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டதும் உண்மையில் என் மயிர்க்கால்கள் அந்த நேரம் குத்திட்டு நின்றன, இப்போது எழுதும் போதும் கூட.
“தம்பி! நான் ஒரு எலெக்ட்ரோனிக் இஞ்சினியர், என்ர அலுவலக நேரத்துக்கு முன்னமும், வேலை முடிஞ்ச பிறகும் ஆட்டோ ஓட்டுறன். அந்த ஓட்டோ ஓட்டுற காசை சண்டையிலை கைவிடப்பட்ட ஆதரவில்லாத பிள்ளையளுக்குக் கொடுக்கிறன்”
இதுதான் அவர் சொன்னது.
புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து ஒரு டொலரை ஆதரவற்ற இல்லங்களுக்குக் கொடுக்கக் கூட ஆயிரம் தடவை யோசிப்போம், ஆனால் தாயகத்தில் இருக்கும் இவரைப் போல எத்தனை உள்ளங்கள் தம் அடையாளம் தெரியாது உதவிக்கொண்டிருக்கிறார்கள். உதவுவதற்கு உள்ளம் மட்டும் இருந்தால் போதும் என்று மீண்டும் ஒருமுறை உணரப்பட்ட தருணம் அது.
“இந்தாங்கோ அண்ணை! என் பங்கும்” காற்சட்டைப் பையில் இருந்து மேலதிகமாகக் கொடுக்க
“இல்லைத்தம்பி இருக்கட்டுமே”
“இல்லையண்ணை, என் பங்குக்கும் போகட்டும்” என்று திணித்து விட்டு நகர்கின்றேன்.
அதிகாலையில் ஞான உபதேசம் தந்த முருகனாக அவர் தெரிந்தார்.

000000000000000000000

எங்கள் அயலூர் கோண்டாவிலில் சிவபூமி என்னும் சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இயங்குகின்றது. கடந்த முறை இங்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை இங்கு செல்லவேண்டும் என்று வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். என் சகோதரர் லண்டனில் இருந்து வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து முதல் தடவை இப்போது தான் தாயகத்தில் பெற்றோரோடு தன் பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றார். அவருக்கோ பிறந்த நாள் விருந்து என்பதை விட ஆதரவற்ற இல்லங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு பகற்பொழுதைக் கழிப்பது என்று தீர்மானித்து வந்திருந்தார். இந்த நேரம் என் சிவபூமி பாடசாலைக்கான பயணமும் ஒருசேர அமைய அங்கு அவரின் பிறந்த நாளைக் கழிக்க எண்ணினோம்.

ஜீலை மாதம் 2 ஆம் திகதி, 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார். அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஈழத்தமிழர் கழகம் உட்பட புலம்பெயர் சமூகத்தில் இருந்து தனி நபர்களும் ,அமைப்புக்களும் இந்த அறக்கட்டளையின் தேவை உணர்ந்து உதவியிருக்கின்றார்கள். ஆனால் இன்னும் இன்னும் தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எங்கள் சொந்தங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் செய்ய வேண்டிய முதற்பணி இப்படியான அற நிறுவனங்களுக்கு இயன்ற உதவிகளைக் கொடுக்கவேண்டியது.
இந்த சிவப்பூமி அறக்கட்டளையின் இணைய முகவரி http://sivapoomi.org/

மேலை நாடுகளில் உள வளர்ச்சி குறைந்த பிள்ளைகளையும், செவிப்புலன் இழந்த, வாய்பேச முடியாத, விழிப்புலன் அற்ற, இன்னபிற குறைகள் கொண்ட பிள்ளைகளையும் கவனிக்கும் பொருட்டு அரசாங்கமும் தொண்டு அமைப்புக்களும் பல்வேறு பாடசாலைகளையும், உதவி நலத்திட்டங்களையும் உருவாக்கி அவர்களைச் சமூகத்தின் ஒரு அங்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் எம்மூரில் நான் வளர்ந்த காலகட்டத்தில் இப்படியான பிள்ளைகளை நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு வைத்திருந்ததைக் கண்டிருக்கின்றேன். அப்படியானதொரு சமூக அமைப்பில் இந்த சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் பெரும் பங்கை உணர முடிந்தது. காலை வேளையில் ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டுக்கும் வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்து, காலையில் போசாக்கான காலைச்சிற்றுண்டி, பின்னர் ஆரோக்கியமான மதிய உணவும் கொடுக்கின்றார்க. ஒவ்வொரு பிள்ளையின் மனவிருத்தியின் எல்லைக்கேற்ப அவர்கள் தரம் பிரிக்கப்பட்டு கற்பித்தல் கொடுக்கப்படுகின்றது.

வீட்டுக்காரரோடு அண்ணனின் பிறந்தநாளில் சிவபூமி பாடசாலைக்குச் சொல்கிறோம். அங்கே அதிபரின் அறைக்குச் சென்றபோது நிர்வாகப் பொறுப்புக்களில் இருக்கும் ஒரு இளைஞன்
“நீங்க கானா பிரபா தானே”
“ஓம் எப்படித் தெரியும் தம்பி?”
“உங்கட வலைப்பதிவு வாசிக்கிறனான்”


பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. பிள்ளைகள் தமக்கான ஆசிரியர்களின் வகுப்பில் பிரிந்திருந்து சிரத்தையோடு கற்கின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையும் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆனால் கள்ளமில்லாத தெய்வக்குழந்தைகளாக எங்களைக் கண்டு சிரிக்கின்றார்கள். பக்கத்தில் இருக்கும் மூன்று மாடிக்கட்டடத்திலும் வகுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கும் செல்கின்றோம். அந்தக் கட்டிடம் கூட லண்டனிலும், அமெரிக்காவிலும் வாழும் நம்மவர்களின் பெருங்கொடையின் சாட்சியமாக வெள்ளித்தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எங்களைக் கண்ட பிள்ளைகள் சிலர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள். சிலர் கைகூப்புகின்றார்கள் அவர்களின் மொழி உடல் மொழி மாத்திரமே. அந்தப் பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் வகுப்பறைகளில் மாட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடசாலையின் வளர்ச்சியும் தேவையும் பன்மடங்காகப் பெருகிய நிலையில் பக்கத்தில் இருக்கும் காணி கூட வாங்கப்பட்டு இன்னொரு பாடசாலை அமைக்கப்பட இருக்கின்றது.
“வணக்கம் சேர்” தானாகவே வந்து அறிமுகப்படுத்திய இன்னொரு இளைஞரை யார் என்று விசாரித்தோம்.
“நானும் இன்னொரு ரீச்சரும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம், நாங்கள் இப்படியான மனவிருத்திப் பாடசாலையில் எதிர்காலத்தில் படிப்பிக்கப்போறம் அதற்கான பயிற்சிக்குத் தான் வந்திருக்கிறோம்”. அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மதிய உணவுக்கான நேரம் என்று மாடிப்படிகளில் தாவித்தாவி வரும் அந்த மாணவர்களைக் காணும் போது தெரிந்தது. ஒரு மாணவன் வழுக்கி விழப்போக, அவரை வாரியணைத்துத் தூக்கிக் கொண்டே போனார் அந்தப் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர். இப்படியான பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் இன்னும் அதிக பொறுமையும், பொறுப்பும் கொண்டிருக்கவேண்டிய தேவையும் உணரப்படுகின்றது.

“எதென்ஸ் இல் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்குப் போகப்போற மாணவன் எங்கே?” நானாக அங்கே பணியில் நின்ற இளைஞரைக் கேட்டேன். அகில இலங்கையில் இருந்து எதென்ஸ் இல் நடக்கும் விசேட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள சிவபூமி பாடசாலையில் இருந்து சிவராசா துஷ்யந்தன் தெரிவாகி இருந்ததும் அதன் தொடர்பில் திரு ஆறு.திருமுருகன் அவர்களை நான் எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் கடந்த பெப்ரவரியில் பேட்டி எடுத்தும் இருந்தேன்.
“இவர் தான் அவர்” என்று சிவராசா துஷ்யந்தனைக் காட்டினார்கள்.
வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் அற்ற அவர் தனது ஏழு வயதில் இருந்து இந்தப் பாடசாலையில் படித்து வருபவர். என்னைக் கண்டு கைகூப்பினார். நான் அவரின் கையை இறுகப்பற்றினேன்.
இன்று ஜூலை 3 ஆம் திகதி எனது மின்னஞ்சலுக்கு வந்த செய்தியில் இப்படி இருந்தது.
கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாண வனான இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதற் தடவையாக பங்கேற்று இருந்தார்.நேற்று இடம்பெற்ற 4–100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார் துஷ்யந்தன்.இன்று இடம்பெறும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் உயரம் பாய்தல் போட்டியிலும் துஷ்யந்தன் பங்கேற்க இருக்கிறார்.

ஜூலை 4, 2011 இன்று கிடைத்த செய்தி
கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மற்றும்போட்டியில் வெள்ளிபதக்கத்தை பெற்றுக்கொண்டர் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்ணன் தனது பிறந்த நாளைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்துத் தானும் அவர்களோடு கொஞ்ச நேரம் சப்பாணி கட்டி இருந்து மகிழ்கின்றார். அந்த நிறை உணவோடு வடை, பாயாசமும் பரிமாறப்படுகின்றது.
சாப்பாட்டு நேரம் முடிந்து எல்லாப்பிள்ளைகளும் ஒரே மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை ஆசிரியர் அறிவிக்க, அவர்கள் முன்னே வந்து பாடுகிறார்கள், அபிநயம் பிடித்துப் பேசுகிறார்கள்.தாம் கற்பித்தவை அரங்கேறிக்கொண்டிருப்பதைக் கண்டு தொண்டர் ஆசிரியர்கள் முகத்தில் பூரிப்பு.
எமது மனதிலோ சிவபூமி இன்னும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டது.

17 thoughts on ““சிவபூமி” என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்”

 1. வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த மாணவன் சிவராசா துஷ்யந்தன் இன்று இடம்பெறும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் உயரம் பாய்தல் போட்டியிலும் வெற்றிபெற எமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

  தகவலை அருமையாகத் தந்தமைக்கு நன்றிகள்!

  நீங்கள் குறிப்பிட்ட இவ்விரு சிவபூமி இல்லங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்.

 2. sivapoomi said…

  தங்கள் இடுகைக்கு மிக்கநன்றி///

  உங்கள் அறப்பணி பல்கிப் பெருக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்

 3. உங்கள் பதிவை நீர் நிறைந்த கண்களுடன் வாசித்தேன். உள் நாட்டில் இருந்து கொண்டும் இப்படியானதோரு அறிய சேவை செய்யும் இல்லத்தை அறியாமல் இருந்து விட்டேன். உங்கள் பதிவால் அறிந்து கொண்டேன். நன்றிகள் கானா பிரபா.ஆட்டோ சாரதி அவர்களையும் அடையாளம் காட்டியிருக்கலாம். கடவுள் கோவிலில் இல்லை இவர்களின் செயல்களில் காண்கின்றேன்.

 4. அருமையான பதிவு பிரபா…
  புலத்திலே ஆடம்பர விழாக்களில் எவ்வளவோ பணத்தை வீண் விரயம் செய்கின்றோம். எமது குழந்தைகளின் பிறந்த நாள் வாழாவன்று ஒவ்வொருவரும் நூறு டொலர்களை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பி வைத்தால்…..
  இல்லாதது பணமல்ல… மனம் தான்.

 5. வருகைக்கு மிக்க நன்றி தங்க முகுந்தன், விசாகன், தல கோபி

 6. நன்றிகள் கானா பிரபா.ஆட்டோ சாரதி அவர்களையும் அடையாளம் காட்டியிருக்கலாம்.//

  வணக்கம் நண்பரே,

  அவர் தன் பேரைச் சொல்லை அந்த நேரத்தில் நானும் கேட்க மறந்து விட்டேன்.

 7. மணிவாசகன், நிலவில் ஜனகன்

  மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

 8. சிவபூமி என்ற பெயரே ரொம்ப அழகாக உள்ளது. சேவை தேவைப்படும் இடங்களோ பல்லாயிரம். நம்மால் இயன்ற அளவு உதவி செய்வது என்பது நமது கடமை. அதை நாம் எதோ பெரும் செயலாக நினைக்கிறோம். We have to count our blessings and help as and when possible.
  amas32

 9. அன்பே சிவம்னு சொல்றோம். அப்படி அன்பான பூமிதான் சிவபூமி.

  எடுத்துக் கொடுக்க மனமில்லாம நிறைய பேர் இருக்கும் உலகில், உழைத்துக் கொடுக்கும் அந்த ஆட்டோ ஓட்டுனர் பெருமதிப்புக்குரியவர். எழுதிக் கொடுக்கும் உங்கள் பண்புக்கும் வணக்கங்கள். சிவபூமியை முன்னெடுத்து நடத்தும் நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்.

  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று வாலி எழுதிய எம்.எஸ்.வி பாட்டு உண்டு..

  பல நூல் படித்து நீ அறியும் கல்வி
  பொதுநலமறிந்து நீ வழங்கும் செல்வம்
  பிறர் உயர்வினிமே உனக்கிருக்கும் இன்பம்
  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

  அந்தச் சத்திய வார்த்தைகளுக்கு சாட்சிகள் உலகில் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

  சிவராசா துஷ்யந்தனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  என்றோ ஒருநாள் இலங்கை வந்து இதையெல்லாம் பார்க்க வேண்டும். பார்க்கலாம். முருகன் என்ன நினைத்திருக்கிறான் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *