காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்


“சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ”
எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.
லண்டனில் இருந்து வந்த அண்ணனுடன், சின்னராசா அண்ணரின் ஆட்டோவில் காங்கேசன்துறை வீதியால் பயணிக்கிறோம். வழியில் வலப்பக்கம் நான் ஆரம்ப வகுப்புப் படித்த சீனிப்புளியடி இணுவில் அமெரிக்கன் மிஷன் (இப்ப இணுவில் மத்திய கல்லூரி) , ஆங்கிலேயர் கட்டி யாழ்ப்பாணத்துக்கே பெருமை தரும் இணுவில் மக்லியேட் மருத்துவமனை எல்லாத்தையும் கண்டு கொண்டு பயணிக்கிறோம். இணுவில் மக்லியேட் மருத்துவமனையின் பிரசவப்பிரிவு அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் எல்லாத்திசைகளில் இருந்தும் மக்கள் வந்து மகப்பேறு பார்த்த பெருமை மிகு மருத்துவமனை. இப்பவும் “தம்பி! எந்த ஊர்?” என்று என்னிடம் கேட்டால் “இணுவில்” என்றதும் உடனே “நான் இணுவில் ஹொஸ்பிற்றலில் தான் பிறந்தனான்” என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.

இணுவில் காலிங்கன் தியேட்டர் , லங்கா சீமெண்ட் இன் களஞ்சியமாகக் காட்சியளிக்கின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெருந்தியேட்டர்களில் ஓடி, இரண்டாவது சுற்றில் காண்பிக்கப்படும் படங்கள் காலிங்கன் தியேட்டருக்கு வருவதுண்டாம். அந்தத் தியேட்டர் எங்கள் ஊரில் இருந்தாலும் தனியே படம் பார்க்கும் வயசு வந்த காலத்தில் காலிங்கன் தியேட்டர் அகதி முகாமாகத் தான் மாறியிருந்தது. சின்ன வயசில் அமெரிக்கன் மிஷனில் நான் படிக்கும் போது காலிங்கன் தியேட்டர் பக்கமிருந்து வரும் என் கூட்டாளிமார் கை நிறைய படச்சுருளின் துண்டங்களைக் கொண்டு வருவதுண்டு. ஆசையாக எடுத்து அந்த ஒற்றை றீலைப் பார்த்தால் தீபம் படத்தில் சிவாசியும் சுயாதாவும் சிரிச்சுக் கொண்டு நிக்கிற கோலம் தெரியும்.

காங்கேசன் துறை வீதியை ஒட்டிய இருமருங்கும் செம்பாட்டு மண் பரவிய தோட்டக்காணிகள், அந்தக் காலம் என்றால் இரண்டு பக்கமும் வெங்காயச் செய்கையும் புகையிலைத் தோட்டமுமாக ஒரே கல்யாணக் களை இருக்கும். இப்போது அந்தச் செம்பாட்டுக் காணிகளுக்குள்ளும் சீமெந்துக் கட்டிடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
“இப்ப பயிர் செய்ய ஆர் இருக்கினம் தம்பி? வெளிநாட்டுக் காசில சனம் சொகுசா வாழ விரும்புது” சின்ராசா அண்ணர் என் மனக்கணக்குக்குப் பதில் சொன்னார்.
அது ஒருபக்க நியாயம் என்றாலும், போர்க்காலத்திலும் வீறாப்புடன் பயிர் விளைவித்ததும் உண்டு, அந்தத் தலைமுறை ஓய்விடுக்க, அந்தப் பணியைச் சிக்கெனப் பற்றித் தொடர அடுத்த தலைமுறை இல்லாத வெற்றிடம் தான் மிக முக்கிய காரணம். ஒன்றில் அவன் போராடச் சென்று தன்னை மாய்த்திருப்பான், இல்லையெனில் ஊராடித் தூரதேசம் சென்று தன்னைத் தொலைத்திருப்பான். இப்போது தாயகத்தில் இளம் தலைமுறை என்பது வெறுமையாக்கப்பட்ட பாலைவனமாக அங்கொன்றும் இங்கொன்றுமான கூட்டமாகத் தான் இருக்கின்றது.

சுண்ணாகம், மல்லாகம் தாண்டி வந்து விட்டோம். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் பக்கமாகப் போகாமல் ஒரு குச்சுப்பாதையால் ஆட்டோவை விட்டார் சின்னராசா அண்ணை. இரண்டு பக்கமும் பற்றைக் காடுகள், காடுகளுக்குள் வீடுகள் அல்லது வீடுகளுக்குள் காடுகள். மாவிட்டபுரப் பக்கமாக உள்ள பாதையை அளந்தது ஆட்டோ. இவையெல்லாம் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின்னர் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த ஆண்டின் ஆரம்பம் வரை, அதாவது 21 வருஷங்கள் முழுமையாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இலங்கை இராணுவம் மட்டுமே நிலை கொண்டிருந்த பகுதி. இப்போது தான் மெல்ல மெல்ல மிதிவெடிகள் அகற்றப்பட்டு மக்களின் மீள் குடியேற்றங்களுக்காகக் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்படுகின்றன. இன்னும் சில பகுதிகளில் நீண்ட சிவப்பு நாடாக்களில் “மிதிவெடி அபாயம்” தொங்கிக் கொண்டிருக்கின்றது. மிதிவெடி அகற்றும் குழு ஒன்று கொட்டகை அமைத்திருந்தது. இதையெல்லாம் கடந்து போனோம்.


ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரும் மாவிட்டபுரம் பகுதி, 1990 இல் இருந்தே தன் நிலபுலங்களைத் தொலைத்து விட்டு இணுவில் வாசியாக மாறிவிட்டவர்.
“தம்பி! அங்கை பாரும் அந்தக் புதருக்குள்ள தான் என்ர தங்கச்சி வீடு, பின்னால என்ர வீடு இருக்கு”
சின்னராசா அண்ணர் காட்டிய பக்கம் பார்த்தால் ஒரே பச்சைப் பசேலென்ற புதர் மண்டிய மரங்களின் நெருக்கம் தான் தெரிந்தது.
“ஓமானில நான் உழைச்சுக் கட்டின வீடு, அந்த நாளேலையே பெரிய இராணி வீடு மாதிரி இருக்கும், இப்ப எல்லாம் உருக்குலஞ்சு இருக்கு. காணியைத் திருத்தவே பல லட்சம் வேணும்” என்றார் சின்னராசா அண்ணை. இதையெல்லாம் வெட்டித் திருத்த ஏலாது, எல்லாத்தையும் மிதித்து, அள்ளிப் போட மிஷின் பொருத்திய பார ஊர்தி தான் உதவும் என்று நினைத்துக் கொண்டேன்.
“ஒரு பரப்புக் காணி திருத்த எட்டாயிரம் ரூவா கேக்குறாங்கள், அரசாங்கம் வீடு கட்டப் பாதிக் காசு குடுக்குது” சின்னராசா அண்ணர் தொடர்ந்தார்.
“அப்ப இந்தியாவும் ஏதோ கட்டிக்குடுக்கிறதா சொன்னதே?” அவரின் வாயைப் புடுங்கினேன்.

“சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதையும், உலகவங்கியின்ர காசு தான் இப்ப இதுக்கெல்லாம் உதவுது, இந்தியன் கவுன்மென்ற் பேப்பரிலை போடுறதுக்கு மட்டும் தான் வீடு கட்டிக் கொடுக்கிறதா அறிவிக்கும் அவ்வளவு தான்”.

இப்போது இந்தப் பகுதிகளில் மக்கள் மெல்ல மெல்லக் குடியேற ஆரம்பிக்கிறார்கள். 21 வருஷங்களாக இங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் மற்றைய பகுதிகளில் இயங்கிய பாடசாலைகள் மீளவும் தம் இருப்பை நோக்கி நகர்ந்திருக்கின்றன. மாதங்கள் பல கடந்த நிலையில் மக்களின் மீள் குடியேற்றம் என்பதும் மிகவும் மந்த கதியில் தான் இருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள். மீளவும் காணி, வீட்டைத் திருத்த எதிர் கொள்ளும் பெருஞ் செலவினம் என்று ஒதுங்கிக் கொள்வோர் ஒருபக்கம், குடும்பமாக வெளிநாடு சென்றோர் ஒருபக்கம் அல்லது குடும்பமாகப் பரலோகம் சென்றோர் ஒருபக்கம் என்ற நிலை. இப்படியான வெறுங்காணிகளை அப்படியே விட்டுவைத்தால் இவையும் ஸ்வாகா ஆகிவிடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

“அங்கை பாரும் கூத்தை” சின்னராசா அண்ணர் கைகாட்டிய தொலைவில் பாரிய அகழியாக சுண்ணாம்புக்கல் தோண்டப்பட்ட சுவடுகள் காங்கேசன் துறைப்பக்கம் தென்பட்டது. ஒருகாலத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை யாழ்ப்பாணத்தில் இயங்கிய போது இப்படிச் சுண்ணாம்புக்கல்லை அகழ்ந்தெடுக்கும் வேலைகள் இருந்தது. பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயங்காத நிலை வந்த போது தென்னிலங்கையின் அதிபுத்திசாலி அரசு இங்கிருந்து அகழப்படும் சுண்ணாம்புக்கற்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பி அங்கே உள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தியதாகச் சொல்வதுண்டு. இப்போது கேட்க நாதியில்லாத நிலையில் இந்தியாவால் இந்த மண் வளம் சுறண்டப்பட்டு நாடுகடத்தப்படுகிறதாம். இந்த விபரீதத்தின் விலை எதிர்காலத்தில் மிகப்பயங்கரமானது. காங்கேசன் துறைய அண்டிய கடல் நீர் மெல்ல மெல்ல உள்வாங்கப்பட்டு, பழிவாங்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்ந்த பிரதேசம் எல்லாம் நீராய் மாறும் நிலை உருவாகப்போகின்றது. யார் இதைக் கேட்பது? யாரிடம் இதைச் சொல்வது?

கீரிமலைக்கு வந்தாச்சு. மணி ஆறேமுக்காலைக் காட்டியது. நான், அண்ணன், சின்னராசா அண்ணை இவர்களைத் தவிர ஒரு குருவி இல்லை. முன்னால் ஒரு ஆமிக்காறன். எங்களை அவன் அளவெடுத்துப் பார்க்க, கீரிமலைக் கேணிப்பக்கமாக நடக்கின்றோம். இப்போது எங்களுக்குப் பின்னால் கண்காணிக்க இன்னொரு ஆமிக்காறன். கேணிக்குள் கொஞ்சப்பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருகாலத்தில் கீரிமலை பஸ் என்று இலங்கைப் போக்குவரத்துக் கழகத்தின் சிவப்பு பஸ் சனி, ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களில் இருந்து சனத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கீரிமலையில் வந்து கொட்டும். சனம் எல்லாம் குழந்தைகளாக மாறிக் கேணிப் பக்கம் ஓடுவதும் கடலில் பாய்வதுமாக ஒரே கொண்டாட்டம் தான். அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு இருந்த நீச்சல் குளியல்களில் ஒன்று கீரிமலை மற்றது கசூரினா கடற்கரை. கீரிமலையில் குளித்து விட்டு மண்டபத்தில் வறுத்த கச்சானைக் கொறித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். கூவில் பனங்கள்ளுத் தேடிப் போகும் இன்னொரு பகுதி.

“அந்தா அந்த பொந்துக்குள்ளை ஓடிப் போய் ஒளிச்சிடுவார் எங்கட அப்பா” அண்ணன் காட்டிய திசை கீரிமலைக் கேணிக்குள் இருக்கும் ஒரு பகுதி.
“இந்தக் கேணிக்குள்ள நல்ல நீர் ஊத்தும் இருக்கு” இது சின்னராசா அண்ணை”

“எங்கட அப்பா தன்ர இடுப்புப்பக்கமா முன்னுக்கு இருத்தி நீச்சல் பழக்கிக் காட்டுவார்” அண்ணன் பழைய நினைவில் மூழ்கிப்போனார்.

கீரிமலை, சுற்றுலாப்பயணிகளுக்கான ஸ்தலமாக மட்டுமன்றி இறந்தவர்களுக்குப் பிதிர்க்கடன் தீர்க்கும் பெரும் தலமாகவும் விளங்கிவருகின்றது. எங்கள் ஊரில் இறந்த ஒருவரின் பிதிர்க்கடன் தீர்க்கவெண்ணிக் கீரிமலை புறப்பட்டு சுனாமியால் ஐந்து பேர் காவு வாங்கப்பட்ட செய்தியும் உண்டு.

ஆமிக்குளியல்

சாவகாசமாக நாங்கள் கீரிமலைக் கேணியையும், கடற்கரையையும் படமெடுத்துக் கொண்டிருக்க எங்களுக்கு முன்னால் குளித்த ஈர உடம்புடன் ஒருத்தர் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார்.
“நான் 1990 ஆம் ஆண்டு இந்தப் பகுதிக்கு இராணுவப் படையுடன் வந்தவன், இடையில் சில வருஷங்கள் வேறு பகுதிகளுக்கும் போய் இருக்கின்றேன். ஆனால் இந்தப் பகுதியில் மட்டும் 14 வருஷங்கள் கடமையில் இருந்திருக்கின்றேன்” என்று சொன்ன அந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி இப்போது Lieutenant தரத்தில் இருப்பதாகச் சொல்லி, “உள்ளே நீச்சல் அடிப்பவர்கள் எல்லோருமே இராணுவத்தினர் தான்” என்றவாறே எங்களை விசாரித்து விட்டு அனுப்பினார்.

அங்கிருந்து நகர்ந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் செல்கிறோம்.

ஜமத்த முனிவர் தன் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்ய முடிவு செய்து அதைச் சிறப்பாக நடத்தித் தரும்படி தன் குருநாதர் பிருகு முனிவரிடம் கேட்டார். சிரார்த்த தினத்தன்று எதிர்பாராதவாறு வியாசமுனிவர் ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குப் போனார். ஆசாரியார்களில் முதன்மையான வியாசமுனிவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டுமே என்று ஜமத்த முனிவர் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார். சிரார்த்தம் தாமதமாகியது. சீடன் தன்னை அழைத்துச் செல்ல வராததைக் கண்ட பிருகு முனிவர் கீரி உருவம் எடுத்து ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குள் புகுந்தார். அங்கு தன்னிலும் உயர்ந்த வியாச முனிவர் இருப்பதைக் கண்டார். சிரார்த்தத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பதார்த்தங்கள் அனைத்தையும் கீரிமுகத்தில் இருந்த பிருகு முனிவர் எச்சில்படுத்திய பின் “இனி உனக்குக் கீரி முகம் உண்டாகட்டும்” என்று ஜமத்த முனிவரைச் சபித்தார். பின்னர் கோபம் தணிந்த நிலையில் கீரிமலையில் உள்ள வாவியில் மூழ்கித் தம்பேஸ்வரப் பெருமானை வழிபட்டால் உன் கீரிமுகம் நீங்கும்” என்று சாப விமோசனம் கொடுத்தார். பிதிர்க்கடனுக்கான உணவுப்பதார்த்தங்கள் எச்சில்படுத்தப்பட்ட நிலை கண்ட வியாசரும் ஜமத்த முனிவருக்கு “உனது குலம் இனி இல்லாமல் போகும்” என்று சாபமிட அவர் கீரி முகம் கொண்ட முனியாக அதாவது நகுல (கீரி) முனியாக மாறிப்போனார். (வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் நூலில் இருந்து)
ஈழத்தின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகக் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் போற்றப்படுகின்றது.
நாம் சென்றிருந்த வேளை கோயில் பூட்டப்பட்டிருந்ததால் ஆலயத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.

மேலே இருக்கும் படம் என்ன சொல்லுது என்று க்ளிக்கிப் பாருங்கள்

கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சூழவும் உள்ள ஆலயப்பகுதி இன்னும் இடிபாடுகளுடன் இருக்கின்றது. அமைதியான அந்தச் சூழலைக் கால் அளந்து விட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை நோக்கிப் பயணிக்கின்றோம்

6 thoughts on “காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்”

  1. நிறைய வருடங்கள் கழித்து ஊர் சென்றீர்களா? சுற்றுலா செல்ல தகுந்த காலம் எப்போ?

  2. நிறைய வருஷங்கள் கழித்து நம் ஊரில் வேறு பகுதிகளுக்கும் சென்றேன். தமிழகத்தின் காலநிலையோடு பொருத்திப் பார்க்கலாம், எனவே டிசெம்பர் மாதம் உகந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *