யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்

“தம்பி! நீர் இன்னாற்ற மேன் தானே”
ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.

“பிரபு அண்ணை” இன்னொரு குரல் வரும் திசையைப் பார்க்கிறேன். என்னைக் கடந்து போகிறது எனது நண்பன் ஒருவனின் தம்பியின் குரல். சிரித்தவாறே கையைக் காட்டி விட்டு நடக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் பழமையைப் பேணும் அம்சங்களில் யாழ்ப்பாணத்து றோட்டுகளுக்கும் தனி இடம் உண்டு. எக்காலத்திலும் , எக்கேடு கெட்டாலும் பழைய தார்ச்சுவடு மாறாதவை. முன்னர் ‘சிரித்திரன்’ சஞ்சிகையில் வந்த கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகின்றது. கொழும்பில் இருந்து வந்த ஒருவர் பெருமையாக “கொழும்பு றோட்டில் எல்லாம் சோறு வைத்துச் சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம்”
பதிலுக்கு யாழ்ப்பாணத்தவர் “இது என்ன பெருமை, எங்கள் ஊர் றோட்டில் சோறு போட்டு , சொதியும் நிரப்பித் தின்னலாம்” என்பார். குண்டும் குழியுமான யாழ்ப்பாணத்து றோட்டுக்களைப் பற்றி அவர் சிலேடையாகச் சொன்னது அது.

றோட்டுப் போடுகிறேன் பேர்வழி என்று தார்ச்சாலைகளின் குழிகளை மட்டும் குறிவைத்து நிரப்பி மூடுகிறார்கள், அது அடுத்த மாரிமழையோடு வெள்ளத்தில் சங்கமமாகிவிடும். ஒருநாள் காரை நகர்வீதியால் பயணிக்கவேண்டி இருந்தது. திருஷ்டிக்கழிப்பாக நீண்ட கார்பெட் வீதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்துத் தெருக்களை இப்போது கன ரக வாகனங்களில் இருந்து ஓட்டோக்கள் வரை நிரப்பி வைத்திருக்கின்றன. முன்னரெல்லாம் லுமாலா சைக்கிளே போதும் என்றிருந்த பெண்களும் வெளிநாட்டுப்பணம் மகிமையில் சிறு ரக மோட்டார் சைக்கிளில் பவனி வருவது சர்வசாதாரணம். ஏ/எல் எடுத்துவிட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்குமா என்று ஏங்கும் மாணவ சமூகம் கூட இப்போது மோட்டார் சவாரியில் தான் பெரும்பாலும். இதே பருவத்தில் இருந்தபோது ஒரு சைக்கிள் வாங்க முன்னர் நான் போராடியதை நினைத்துப் பார்த்தேன். வாடகைக்கார் என்றால் இன்னமும் மொறிஸ் மைனரும், A40க்களும் தான் தனிக்காட்டு ராஜாக்கள்.

குண்டும் குழியுமான பாதைகளின் கரைப்பகுதியை அண்டி மினி பஸ்களும் வளைந்து நெளிந்து டிஸ்கோ ஆட்டம் காட்டி ஓடுகின்றன. யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந்துறைக்குமான அரச பஸ் சேவை இலக்கம் 769 மற்றைய சேவைகளை விட எப்போதும் இலாபம் தரக்கூடியதாக அன்றும் இன்றும் இருந்தாலும் அந்த றோட்டால் வந்தால் குடலை உருவி மாலையாகப் போட்டு விடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு தனியார் மினிபஸ் மூலம் ஒருமுறை பயணம் மேற்கொள்ளுவோம் என்றெண்ணி கோண்டாவிலில் பஸ் பிடிக்கிறேன். கிட்டதட்ட 18 வருஷங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் ஒரு பஸ் பயணம் என்ற த்ரில் வேறு.

“அண்ணை அங்க ஒரு இடைவெளி இருக்கு அதுக்குள்ளை போங்கோ” என்னை ஏற்கனவே நெரிசலில் அல்லாடிக்கொண்டிருக்கும் மினிபஸ் உள்ளே நெட்டித்தள்ளுகிறார் பஸ் நடத்துனர். உள்ளே ஒரே ஒரு காலை வைக்கக்கூடிய நிலையில் சலங்கை ஒலி கமலஹாசனாக மாறி தகிட ததிமி தகிட ததிமி தம்தானா நிலையில் நான், தாவடிச்சந்தியில் நான்கு பேர் ஏறுகிறார்கள்/அல்லது ஏற முனைகிறார்கள். “அண்ணை பொம்பிளை ஆட்கள் ஏறினம் ஒருக்கால் இறங்கி வழிவிடுங்கோவன்” என்னையும் பக்கத்தில் நின்றவரையும் குறிவைக்கிறார் நடத்துனர். உள்ளே எந்த வித ஆசுவாசமும் இன்றி எண்பதுகளில் வந்த இளையராஜாவை ரசித்துக் கொண்டிருக்கிறார் பஸ் ஓட்டுனர். நாலுபேர் இறங்கி நாலு பேரை ஏற்றி விட்டு இப்போது புட்போர்ட் இல் பயணிக்கிறோம். கொக்குவில் சந்தியில் மூன்றுபேரைக் கண்டதும் இன்னொரு புதையலைக் கண்ட ஆசையில் நடத்துனர் “அண்ணை கோல்ட் ஓன்” என்று நிறுத்த, பஸ்ஸுக்குக்கு காத்திருந்த கூட்டம் “இல்லைப் பறவாயில்லை அடுத்த பஸ்ஸில் வாறம்” என்று ஜாகா வாங்க தப்பினோம் என்று தாவுகிறோம். நடத்துனரை வழியில் விட்டுவிட்டு பஸ் பாய்கிறது. துரத்தி ஓடிவந்து புட்போர்ட் இல் ஒற்றைக்கால் பதித்து நடுவிரல்களில் இருக்கும் பண நோட்டுகளைச் சரி பண்ணியவாறே
உள்ளே தலை நீட்டிப் பயணிகளிடம் கறந்துகொண்டே,” அம்மா பின்னாலை போங்கோ, அக்கா அந்த ஓடைக்குள்ளை தள்ளி நில்லுங்கோவன்” என்கிறான், எனக்குத் தெரியும் இவன் பாவி நாச்சிமார் கோயிலடியில் இன்னொரு கூட்டத்தை ஏற்றத்தான் இப்பவே திட்டம் தீட்டுகிறான். “அண்ணை முன்னுக்காத் தள்ளுங்கோவன்” என் முதுகில் நெட்டித்தள்ளுகிறான்.எரிச்சலும் கோபமும் வர “அண்ணை இனி எங்க தள்ளுறது” என்றவாறே புறக்கணிப்பு அரசியலில் இறங்கினேன். பைசாக்கோபுரம் சாய்ந்தவாறே நகர்வது போல நிரம்பி வழிந்த பயணிகளால் அழுதுகொண்டே பயணிக்கிறது பஸ். இந்த பஸ்ஸை உருவாக்கிய ஜப்பான்காரன் கண்டால் பெருமையாக இருக்கும் 75 பேர் பயணிக்கும் பஸ்ஸில் 200 பேரை ஏற்றி பஸ்கம்பனிக்கே பெருமை கொடுக்கிறார்கள் இந்த மினிபஸ்காரர். இந்த நிலை மினிபஸ் யாழ்ப்பாணத்தில் வந்த கல் தோன்றி முன் தோன்றாக்காலத்தில் இருந்து இருக்கிறது. மூட்டுவலி, மசாஜ் போன்ற நோய் நொடிகளுக்கு இந்த பஸ் பயணம் அருமருந்தாக அமையும் வண்ணம் உடம்பை எல்லாப்ப்பாகத்தில் இருந்தும் நெருக்கும் சிலவேளை நொருக்கும். அடுத்தமுறை காய்ஞ்சோண்டி இலைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் இந்த நடத்துனரைப் பழிவாங்கலாமா என்று நினைத்தேன்

யாழ்ப்பாணத்தில் இருந்து அரச சேவை பஸ்கள் இப்போது கண்டி, ஹற்றன் உட்பட நாட்டின் மற்றைய பாகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. இடமாற்றம் கண்ட ஆசிரியர்கள் போன்ற அரச உத்தியோகத்ததுருக்கு இது பெரும் உதவியாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயிலைக் கொண்டுவருவதற்கான வேலைகள் இறக்கவிடப்பட்டிருக்கின்றன. இதுவரை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை பயணிக்கும் இந்த ரயில்சேவை 1990 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இயங்காமல் இருக்கின்றன. தண்டவாளக்கட்டைகள் பதுங்கு குழிகளுக்குப் போர்க்காலத்தில் பயன்பட, ரயில் நிலையங்கள் அகதிகளுக்கான புகலிடங்களாக மாறி விட்டன. இந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த ரயில்சேவை வரப்போகின்றது என்றால் அதற்குச் சவாலாக ஒரு செய்தி காதில் அடிபடுகின்றது. இந்த ரயில்ப்பாதைகளைக்கான உதவியை இந்தியாவும், சீனாவும் நான் முந்தி நீ முந்தி செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாம். “ஆகா உதவி செய்ய இப்படியும் போட்டியா” என்று ஆவென்று வாய் பிளக்காதீர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஆப்படிக்கும் சில திட்டங்களைக் கண்டேன் அதுபற்றிப் பின்னர் சொல்வேன்.

எனது ஊர்ச்சுற்றலுக்கு ஒரு சைக்கிள் தேவை என்று கருதி யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த மினிபஸ் இல் இருந்து வின்சர் தியேட்டர் பக்கம் இறங்கி, வெங்கடேஸவரா சைக்கிள் வாணிப நிலையம் செல்கிறேன். புது லுமாலா , கழுவி சேர்விஸ் பண்ணித்தர 12 ஆயிரம் ரூபாயாம். நாளை தரலாம் என்றார்கள். பணத்தைக் கட்டிவிட்டு வந்தேன்.

ஆயிரத்து ஐநூறு ரூபா மாதச்சம்பளத்தில் சேமிப்புக்கணக்கு, வீட்டுச் செலவுக்கணக்கு எல்லாம் போக மிச்சமிருக்கும் பணத்தில் ஆயிரம் கணக்குப் போட்டு வாழ்ந்த ஒரு வாத்தியார் வீட்டுப்பிள்ளை நான். அந்தக் காலத்தில் நான் ஏஷியா சைக்கிள் ஒன்றைப் புதுசாக வாங்கிவிடவேண்டும் என்பது பொல்லாதவன் படத்தில் தனுஷ் கண்ட மோட்டார் சைக்கிள் கனவை விடப்பெரியது. இதை வச்சு “ஒரு சைக்கிளின் கதை” என்றெல்லாம் அந்தக் காலத்தில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது என் சொந்த சம்பாத்தியத்தில் , தாயகத்தில் 21 வருஷம் கழித்து நிறைவேறியிருக்கின்றது இந்தக் காலம் கடந்த கனவு. இடைப்பட்ட காலத்தில் என் புலம்பெயர் வாழ்வில் இரண்டு புதுக்காரைக் கூட வாங்கி விட்டேன். அதில் கிடைக்காத திருப்தி இதில் கிடைத்தது மாதிரி.

சைக்கிள் கடையில் காத்துபோன சைக்கிள் ஒன்று

அடுத்த நாள் முதல் லுமாலாவில் சுற்றத்தொடங்கினேன். நீண்ட தூரப்பயணங்களுக்கு மட்டும் ஆட்டோப் பயணம். அப்படி ஒரு நீண்ட தூரப் பயணத்தை நான் சந்தித்தபோது…..

26 thoughts on “யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்”

 1. அருமையாய் உள்ளது தங்கள் அனுபவங்கள் மீண்டும் அடுத்த பதிவை எதிர்பார்த்து.// "கொழும்பு றோட்டில் எல்லாம் சோறு வைத்துச் சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம்"
  பதிலுக்கு யாழ்ப்பாணத்தவர் "இது என்ன பெருமை, எங்கள் ஊர் றோட்டில் சோறு போட்டு , சொதியும் நிரப்பித் தின்னலாம்" என்பார்.// ஆனா அந்த ரோட்டிலையும் பாடாசாலை முடிந்தும்,தனியார் வகுப்பு முடிந்து வரும்போதும் சேர்க்கஸ் காட்டி பரப்பம் இல்ல

 2. மினி பஸ் அதே அனுபவம் ஆனால் எனக்கென்னவோ மிதி பலகையில் பயணிப்பது இலகுவாக இருக்கும் ஆனா பாவி கொண்டக்டர் விடமாட்டான்.

 3. //உள்ளே ஒரே ஒரு காலை வைக்கக்கூடிய நிலையில் சலங்கை ஒலி கமலஹாசனாக மாறி தகிட ததிமி தகிட ததிமி தம்தானா நிலையில் நான்//

  ஓ…நீங்கள் கமலஹாசன் என்றால் உங்களோடு ஆடிய ஜெயப்ரதா யாரோ?:) ஆடுற பஸ்ஸூக்குள்ள இத்தனை கனவைப் பாரு பயபுள்ளைக்கு! 🙂

 4. இவ்வளவு உலாத்தல் செய்யும் நீங்கள் ஒரு DSLR கமெரா கையில் கொண்டு திரியாததை வன்மையாக கண்டிக்கிறேன் 🙂

 5. தூள் கிளப்புரிங்க தல ;))

  \நான் ஏஷியா சைக்கிள் ஒன்றைப் புதுசாக வாங்கிவிடவேண்டும் என்பது பொல்லாதவன் படத்தில் தனுஷ் கண்ட மோட்டார் சைக்கிள் கனவை விடப்பெரியது. \

  ம்ம்…இங்கையும் ஒன்னு தூங்குது தல !

 6. சூப்பர் அனுபவப்பதிவு..அநேக இடங்களில் சிரிக்கவும் வைக்கின்றீர்கள்..நகைச்சுவையோடு கஸ்டங்களை பகிரும் தங்கள் கலை கண்டு வியக்கின்றேன்..

  /////குண்டும் குழியுமான யாழ்ப்பாணத்து றோட்டுக்கள்///
  என்ன அண்ணா நீங்க…இதுதானே எங்க சொர்க்கம்..இந்த ரோட்டில ஒரு நாள்பயணிக்காட்டி துாக்கமே வராதே அண்ணா..#உடல் அசதி.

  //// யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந்துறைக்குமான அரச பஸ் சேவை இலக்கம் 69 ///
  மன்னிக்கவும் அண்ணா 769 தான் இலக்கம்

  பஸ் நெரிசலிலும் இவருக்கு கமல் நினைப்பு பாருங்கோவன்…

  எனக்கு அண்ணா புட்பொட் பயணம்தான் ரொம்ப பிடிக்கும்..அடிக்கடி இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்….

  நீண்ட துார பயணத்தின் நீண்ட பதிவை எதிர்பார்க்கின்றேன்..

 7. யாழ் புராணம் பகுதி பகுதியாக வருகின்றது. யாழ் பஸ்களில் பயணம் செய்தால் சந்திரனுக்கு இலகுவாக எந்த மூச்சுப் பயிற்சியும் இன்றிப் பயணிக்கலாம்.

  சீரியசான விடயத்தையும் நகைச்சுவையாக எழுதும் கலை உங்களுக்க்கு கை வந்த கலை லுமாலாவை மட்டும் கைவிடவில்லை. அண்ணே உங்கள் ஆட்டோகிராப் நண்பிகளைப் பார்த்தீர்களா?

 8. //ஆட்டோகிராப் நண்பிகளைப் பார்த்தீர்களா//
  முகத்தில களை வளியுரதை பார்த்தா பார்த்த மாதிரிதான் தான் உள்ளது

 9. வாங்கோ சண்முகன்,

  உங்கட காலத்திலும் நிறையச் செஞ்சிருக்கிறியள் 😉

  கே.ஆர்.எஸ்

  இது சோலோ டான்ஸ் 😉 ட்ரீட்டா? (கரகாட்டக்காரன் செந்தில் குரலில்) அதாண்ணே இது

  பகீ,

  கொண்டு போன கமரா லகேஜ் தொலைந்தததால் தாமதமாக கிட்டியது 🙁

 10. தல கோபி

  அதை சீக்கிரமா நிறைவேற்றிடுங்க 😉

  வருகைக்கு நன்றி சண் நல்லையா அவர்களே

  வாங்கோ ஜனகன்

  பஸ் நம்பர் திருத்தியாச்சு நன்றி 😉

  வந்தி

  நான் இன்னும் பாலகன், நோ ஆட்டோகிராப் 😉

 11. 769, 764, 782, 786 இந்த வழியை விட யாழ்ப்பாணத்திலிருந்து கச்சேரி மற்றும் தீவுப்பகுதிகளுக்குச் செல்லும் குட்டி மினி பஸ்களிலும் அச்சுவேலிப்பக்கம் ஓடும் தட்டி வான்களிலும் ஒரு தடவை பயணித்தால் அதையும் ஒரு அனுபவமாக எழுதலாம். உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகங்கள் வந்தன! அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! முடிந்தால் புதிதாகக் கட்டப்பட்ட கோபுரத்தை ஒரு படம் எடுத்து நல்லூரைப் பற்றியும் ஒரு பதிவைத் தரலாமே!

 12. அய்.. நம்ம ஊரு கதை… மண் மணம் வீசுது கூடவே. பஸ் புகை மணமும் வீசுது.. இந்த மினி பஸ் ஓட்டுரவங்களிண்ட சாகசத்த ஜப்பான் காரன் பாத்தா கொண்டே சர்கஸ்ல வச்சிருப்பான்.. ரோட்ல பஸ் போகும் போது சும்மா 45 டிகிரிக்கு மேல சாய்ஞ்சு கொண்டு போகும். ஆனா கவிழாது..

 13. வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்

  தங்கமுகுந்தன்

  அடுத்தமுறை அந்தப்பக்கமும் போகிறேன் 😉
  நல்லூர்ப்பதிவு வரும்

  வாங்கோ அஸ்வின்

  நான் கோண்டாவில் – இணுவில் எல்லை 😉

 14. வணக்கம் NVR

  A40, A30 உடன் அம்பாசிடர் காரும் உண்டு, எங்கள் ஊரில் கிருபா என்பவர் வாடகைக்கு வைத்திருக்கிறார்.

 15. கோகுலன்

  (நீண்ட இடைவெளிக்குப் பின்) வருகைக்கு நன்றி 😉

  இணுவிலான்

  மொறிஸ் ஒக்ஸ்போர்டை தான் அம்பாசிடர் என்று குழப்பிவிட்டேன் 😉 நன்றி திருத்தத்துக்கு.

  N.V.R

  பதிவில் திருத்தி விட்டேன் , நன்றி

 16. யாழ் பயணம் தெருக்கள்,பஸ்பயணம் எனத்……

  விரும்பிய லூமாலா தொடரட்டும் பயணம்.

 17. //மூட்டுவலி, மசாஜ் போன்ற நோய் நொடிகளுக்கு இந்த பஸ் பயணம் அருமருந்தாக அமையும் வண்ணம் உடம்பை எல்லாப்ப்பாகத்தில் இருந்தும் நெருக்கும் சிலவேளை நொருக்கும்.

  🙂 🙂
  அண்ணை மற்றது ஒண்டு நீங்கள் மறந்து போனியளோ தெரியாது, அந்த கொண்டக்ரர்மார் சொல்லுவினம்,"எல்லாரும் பஸ் ஓடிற பக்கமா டிரைவ்ரைப்பாத்துக் கொண்டு நில்லுன்கோ எண்டு, அதோடை எழும்பி நிக்கிறாக்க்கள் எல்லாரும் ஆம்பிளையாக்கள் ஒருபக்கமும் பொம்பிளையாக்கள் ஒரு பக்கமும் நில்லுங்கோ " எண்டும் சொல்லுவினம்.

  உங்களை மாதிரித்தான் நானும் கணக்குப் பாத்துப், பாத்து வளர்த்த ஒரு வாத்தியார் வீட்டுப் பிள்ளைதான் . உங்கடை சைக்கிள் கதையும் நல்லாயிருக்குது.நானும் உதை மாதிரி எழுதின சைக்கிள் பதிவு ஒண்டு வாசிச்சிங்கிங்களோ தெரியாது

  http://vadaliyooraan.blogspot.com/2011/04/blog-post.html

 18. வாங்கோ வடலியூரான் 😉

  உங்கட சைக்கிள் பகிர்வு தவறவிட்டேன் பகிர்ந்தமைக்கு நன்றி படிக்கிறேன்

Leave a Reply to வந்தியத்தேவன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *